Skip to Content

05. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/4. உள்ளதே உலகம் என உணரும் அறிவு அறியாமை.

  • கண்டதே காட்சி கொண்டதே கொள்கை என்பது ஒரு வகை வாழ்வு.
  • கோடீஸ்வரன் என்ற பெயரிருப்பதால் அவனைக் கோடீஸ்வரனாகக் கொள்வது பொருத்தமற்றது. அவன் வசதியற்றவனாகவுமிருப்பான்.
  • தோற்றத்தின் பின்னேயுள்ளதே அறிவு.
  • அறிவைத் தேடுவது அறிவுடைமை.
  • ஒரு பிரெஞ்சு கவர்னர் மக்கள் விநாயகரை வணங்குவது மூட நம்பிக்கை என நினைத்தார். அது கல் என நினைத்தார்.
    கல் விக்ரஹமாகும் என்ற பண்பை அறியாதவர். பிள்ளையாரை நடுக்கடலில் போட உத்தரவிட்டார். மறுநாள் கல் கல்லல்ல, உயிருள்ள தெய்வம் என கோயிலிலிருந்தது! கோவில் – மணக்குள விநாயகர் கோயில் – பிரபலமாயிற்று.
  • திரௌபதி அம்மன் திருவிழாவில் தீ மிதிப்பதுண்டு. இதைக் கண்ட மேல் நாட்டினர் விவரம் விசாரித்தனர், ஆராய்ந்தனர். நெருப்புப் புண்ணாகச் சுடாததற்குக் காரணம் மனவுறுதி எனக் கண்டனர். சொந்த ஊரில் தீமிதி விழா நடத்தி இது தெய்வ சக்தியல்ல, மனோபலம் என அறிவித்தனர்.
    பக்தர்கள் விரதத்தால் பெறும் திறனை, மனோதிடத்தால் பெற பல சூத்திரங்களை எழுதிப் பயின்றனர்.
    கொஞ்ச நாள் கழித்து தீ மிதித்தவர் நெருப்பில் விழுந்தனர்.
    அத்துடன் அவை நின்றன.
  • தீ மிதிப்பது மனோதிடம் என்பது உண்மை. அது ஒரு அம்சமே. எளிய மனிதனும் விரதத்தால், பக்தியால் பெறுவதைப் படித்தவர் பெற்றனர். நம் நாட்டில் அது பரம்பரையான பழக்கம். நாடு முழுவதும் ஏற்ற நெடுநாள் கொள்கை.
    மேல் நாட்டில் அது புதியது, பாரம்பரியமில்லை, ஏதோ சிலர் ஏற்றது. பலிக்க சிரமம், நெடுநாள் நீடிக்காது.
  • கண்ணால் கண்டதைக் கண்டதாக நம்புவது அறியாமை.
  • விஞ்ஞானம், சாஸ்திரம், சடங்கு, சங்கீதம், விளையாட்டு ஆகியவை எந்தத் துறையிலும் கண்டதை நம்புவது தவறு எழ வழி செய்யும்.
  • திருமணத்தில் சீதனம் கேட்காதது இலட்சியம் என்பது நாம் காண்பது.
    சீதனம் கேட்காத வரனுக்கு எவரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை.
    இலட்சியத்தை நாடுபவர் அதனுள் உள்ள சூட்சுமத்தை அறிவதில்லை.
    வரனுக்குக் குறையிருப்பதால் சீதனம் கேட்கவில்லை எனக் கருதுகிறார்கள்.
  • மேல் நாட்டில் ஆண் பெண்ணை நாடி திருமணம் பேசுவான்.
    எந்தப் பெண்ணும் முதல்முறை ஏற்க மாட்டாள். பலமுறை கேட்டபின் ஏற்பது வழக்கம்.
    டால்ஸ்டாய் கதையிலும், டிராலப் கதையிலும் கேட்டவுடன் ஏற்ற பெண்ணை வரன் வெறுக்க ஆரம்பித்து விட்டான்.
    கிராக்கி பெண்ணுக்கு மரியாதைத் தருகிறது.
  • ஒரு காலத்தில், ‘கடல் முடிகிறது, அதைக் கடந்தால் கப்பல் பாதாளத்தில் விழும்’ என நினைத்தனர்.
    சரளமாகப் பேசுபவனை இன்றும் அறிவாளி என உலகம் நினைக்கும். உயர்ந்த உடை மனிதனை உயர்ந்தவனாக நினைக்கத் தோன்றும்.
    தோற்றமும், விஷயமும் மாறுபடும்.

*******

ஜீவிய மணி
 
அறியாமையை ஆயுள் முழுவதும் விலக்கலாம்.
ஞானத்தை க்ஷணத்தில் பெறலாம். அறியாமை ஆயுள்
வரம். ஞானம் க்ஷணச்சித்தம்.
 

*******



book | by Dr. Radut