Skip to Content

07. Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 2)

Infinityயினுடைய ஆற்றல் (பாகம் 2)

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

 

  1. Finite செயல்பாடுகள் காலத்திற்குட்பட்டுப் பலனை மெதுவாகத்தான் வழங்கும். Infinite உடைய செயல்பாடுகள் காலத்தை முறியடித்து பலனை உடனே வழங்கும்.

    மனிதனுடைய அகந்தை என்பது finiteஆன ஒரு விஷயமாகும். தன்னுடைய அகந்தையை நம்பி செயல்படுபவன் தன்னுடைய சொந்த அறிவு பலம், பண பலம், பதவி பலம், ஆள் பலம் என்று இவற்றை நம்பித்தான் செயல்படுகிறான். இதற்குண்டான பலன் என்பது மெதுவாகத்தான் வரும். இப்படிப்பட்டவர்கள் ஒரு கம்பெனி என்று ஆரம்பித்தால் சிறிய அளவில் ஆரம்பித்து அதைப் பெரிதாக்குவதற்குப் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் எடுத்துக் கொள்வார்கள். அரசாங்க அலுவலகத்தில் கிளார்க் வேலையில் சேர்ந்தால் சொந்தத் திறமையை நம்பி பணியாற்றுவதால் இவர்கள் ஆபீசராக ஆவதற்குள் சர்வீஸே முடிந்துவிடும். அகந்தையின் finite பலத்திற்கு இப்படித்தான் பலன் மெதுவாகத்தான் கிடைக்கும்.

    அகந்தையினுடைய finite பலத்திற்கு நேர் எதிரானது ஆன்மாவினுடைய infinite பலம். தன்னுடைய Higher Selfஐ வெளிக்கொண்டு வந்து தன் வாழ்க்கைக்கான பொறுப்பை அதன் கைகளில் ஒப்படைத்து, அதன் சொல்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றவர் தன் வாழ்க்கையில் முன்னேற்றம் அதிவேகத்தில் வருவதைக் காண்பார். அன்னையிடம் வரும்பொழுது வெறும் ரூ.10,000/- மாத வருமானத்துடன் ஒருவர் வந்துள்ளார் என்றாலும் அவருடைய ஆன்மா அன்னையின் ஸ்பர்சத்தால் விழித்துக் கொண்டது என்றால் அந்த ரூ.10,000/- மாத வருமானம் ஓராண்டு முடிவதற்குள்ளேயே இலட்ச ரூபாயாக உயர்வதை அவர் பார்க்கலாம். அகந்தையால் செயல்படுபவன் அதே 10,000 ரூபாய் வருமானத்தை இலட்ச ரூபாயாக உயர்த்துவதற்கு 20, 30 வருடங்கள் எடுத்துக் கொள்வான். 20 வருட முயற்சியை ஆன்ம பலத்தை வைத்துக் கொண்டு செயல்படுகின்றவர் ஒரு வருடமாகச் சுருக்கும் பொழுது அவரைப் பொறுத்தவரை பலன் கைமேல் உடனடியாக வந்துவிட்டதைப் போலத்தான் தெரியும். நம் வாழ்க்கையிலும் அகந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு ஆன்மாவை முன் வைத்து எந்த ஒரு பெரிய வேலையைச் செய்தாலும் நாம் எதிர்பார்ப்பதைவிட வேகமாக அந்த வேலை நிறைவு பெறுவதைப் பார்க்கலாம்.

  2. Finite செயல்படும்பொழுது சிறியது, பெரியது, எண்ணிக்கை, தரம், உயர்வு, தாழ்வு என்ற வித்தியாசங்களுடன் தான் செயல்படுகிறது. ஆனால் Infinityக்குச் சிறியது, பெரியது, உயர்வு, தாழ்வு என்ற வித்தியாசங்களில்லை.

    நம்முடைய செயல்பாடுகள் finiteஆக இருக்கும்பொழுது சிறிய பலனுக்குச் சிறிய முயற்சியும், பெரிய பலனுக்குப் பெரிய முயற்சியும் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கின்ற ஒருவர் தன்னுடைய வருமானத்தை இலட்ச ரூபாய்க்கு உயர்த்த விரும்பினால் தன்னுடைய உழைப்பையும், திறமையையும் பத்து மடங்கு உயர்த்த வேண்டும் என்று புரிந்து கொள்கிறார். அப்படி உயர்த்தாவிட்டால் தன் வருமானம் அந்த அளவுக்கு உயராது என்று நம்புகிறார். நம் மனநிலை finiteஆக இருக்கும்பொழுது இப்படி நினைக்கத் தோன்றுவது இயல்பு. இம்மாதிரியே மனிதனுக்குச் சில வேலைகள் கடினமானதாகவும், சில வேலைகள் சுலபமானதாகவும் தெரிகிறது. ஒரு வங்கியில் ஒரு கிளார்க்கைப் பார்த்து ஒரு விவரம் கேட்க வேண்டுமானால், சுலபமாக பார்த்துக் கேட்டு விடலாம். அதே வங்கியில் Regional Managerஐப் பார்த்து ஒரு கடன் விஷயமாகப் பேச வேண்டுமென்றால், appointment வாங்குவதே கடினம். கிளார்க்கைப் பார்ப்பது சுலபம். Officerஐப் பார்ப்பது கடினம் என்று நம் அனுபவம் சொல்கிறது. நம்முடைய finite மனநிலைக்கு இப்படிப்பட்ட வித்தியாசங்கள் உண்மையாகத் தெரியலாம்.

    ஆனால் அன்னையின் அருளை எடுத்துக் கொள்ளுங்கள். அது infinite ஆனது. அதற்குச் சிறியது, பெரியது, உயர்ந்தது, தாழ்ந்தது, மற்றும் quality, quantity என்ற வித்தியாசங்கள் கிடையாது. சிறிய விஷயங்களை எவ்வளவு சுலபமாக முடித்துத் தருகின்றதோ, அதே அளவுக்குச் சுலபமாகத்தான் பெரிய விஷயங்களை முடித்துத் தருகின்றது. ஒரு சிறுவனோ, சிறுமியோ தன்னுடைய பேனாவையோ, பென்சிலையோ தொலைத்து விட்டதாக வைத்துக் கொள்வோம். தொலைந்த பேனாவையோ, பென்சிலையோ அவர்கள் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று அன்னையிடம் வேண்டினால் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் அவர்களுக்குப் பேனா மற்றும் பென்சில் இருக்கும் இடத்தை அருள் காட்டிவிடுகிறது. இப்பொழுது ஓரன்பர் தன் வேலை பறிபோய்விட்டதாகவும், மீண்டும் தனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் என்றும் அவர் அன்னையிடம் வேண்டுவதாக வைத்துக் கொள்வோம். நம்முடைய சிற்றறிவிற்கு என்ன தோன்றுகிறது? தொலைந்த பென்சிலைக் கண்டுபிடித்துத் தருவது சுலபம். ஆனால் இழந்த நல்ல வேலைக்குப் பதிலாக மீண்டும் ஒரு புதிய நல்ல வேலையைப் பெற்றுக் கொள்வது சிரமம் என்று தோன்றுகிறது. ஆனால் அருளுக்கு இந்த வித்தியாசங்களெல்லாம் இல்லை. எவ்வளவு சுலபமாகத் தொலைந்த பென்சிலைக் கண்டுபிடித்துத் தருகிறதோ, அவ்வளவு சுலபமாக இழந்த ஒரு நல்ல வேலைக்குப் பதிலாக இன்னொரு நல்ல வேலையையும் அருளால் அன்பருக்கு வாங்கித் தர முடியும். நமக்குத்தான் பென்சில் சிறிய விஷயம், வேலை பெரிய விஷயம். ஆனால் அருளுக்கு இவை இரண்டுமே ஒன்றுதான். நமக்குத் தலைவலி என்றால் சிறிய விஷயம். ஆனால் கேன்ஸர் என்றால் பெரிய விஷயம். இரண்டு ஆஸ்பிரின் சாப்பிட்டால் தலைவலி விட்டுவிடும். ஆனால் கேன்ஸர் வந்து விட்டால் ஆறு மாதத்திற்கு treatment எடுக்க வேண்டும், பெரிய ஆப்பரேஷன் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் எனது தகப்பனார் ஸ்ரீ கர்மயோகி அவர்களைக் கேட்டால் தலைவலியை எப்படி அருள் விரைவாக குணப்படுத்துகிறதோ, அவ்வளவு விரைவாகவே கேன்ஸர், அல்சர் மற்றும் டி.பி., சர்க்கரை வியாதி போன்ற பெரிய வியாதிகளையும் அருளால் குணப்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார். நமக்கு நம்பிக்கை இவ்வளவு திடமாக இருப்பதில்லை என்பதால் இதற்கான நிரூபணங்களை நம் வாழ்க்கையில் நம்மால் பார்க்க முடியாமல் போகின்றது. நமக்குப் பார்க்கத் தெரியவில்லை என்பதால் அருளுக்கு இந்த ஆற்றல் இல்லை என்று அர்த்தமாகாது. எனது தகப்பனார் எதிர்பார்க்கும் அளவுக்கு ஒருவருக்குத் திடமான நம்பிக்கை இருந்தால் காலையில் ஒரு டாக்டர் அவருக்குக் கேன்ஸர் வந்துவிட்டது என்று சொன்னால், இவர் அன்னையிடம் சமர்ப்பணம் செய்துவிட்டு மாலையில் வேறு ஒரு டாக்டரிடம் second opinion வாங்கச் சென்றால், இரண்டாவது டாக்டர் இவருக்குக் கேன்ஸர் இருப்பதற்கான அறிகுறியே இல்லை என்று சொல்வார். காலை பத்து மணிக்கு ஆரம்பித்த தலைவஅ ன்னைக்குப் பிரார்த்தனை செய்த பிறகு பத்தரை மணிக்கு விட்டுவிட்டால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் காலையில் இருப்பதாகச் சொன்ன கேன்ஸர் மாலையில் மறைந்துவிட்டது என்று சொன்னால் அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது நம்முடைய finite மனப்பான்மையின் நம்பிக்கைக் குறைவைத் தான் காட்டுகிறதேயொழிய அருளின் ஆற்றல் குறைவு என்று காட்டாது. இம்மாதிரியே எவ்வளவு பெரிய ஆபீஸரை நாம் பார்க்க வேண்டி இருந்தாலும் அன்னையிடம் பிரார்த்தனை செய்துவிட்டு நாம் appointment கேட்டால் அதையும் அருளால் சுலபமாக நமக்கு வாங்கித் தர முடியும். நம்முடைய finite மனப்பான்மைதான் நாள்கணக்காக நாம் காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் appointment முதல் தடவை கேட்கும்போதே அது கிடைக்கும் என்ற பதிலை வாங்கித் தரக்கூடிய ஆற்றல் infinite levelலில் செயல்படக்கூடிய அருளுக்கு உண்டு.

  3. Finite செலவு பண்ண விரும்புவதில்லை, சேமிக்கத்தான் விரும்புகிறது. ஆனால் Infinite செலவு செய்யும் பொழுது வளருகிறது.

    நம் கையில் பணம் குறைவாக இருக்கும்பொழுது நமக்கு ஏதாவது ஒரு முக்கியச் செலவு வந்தாலும் அந்தச் செலவை நாம் செய்யத் தயங்கக்கூடாது. தைரியமாக நாம் அந்தச் செலவைச் செய்தால் நம் கையில் உள்ள பணம் தீரும்பொழுது கூடுதலாக நமக்குத் தேவைப்படுகின்ற பணம் புதிய வருமானமாக எந்த ரூபத்திலாவது வரும் என்று என் தகப்பனார் ஸ்ரீ கர்மயோகி அவர்கள் பணத்தைப் பற்றி கருத்து வெளியிட்டிருப்பது அன்னை அன்பர்களிடையே நன்றாகத் தெரிந்த விஷயமாக இப்போது இருக்கிறது. நம்முடைய குடும்பம் என்ற சிறிய அளவில் நாம் அதைப் பார்க்கிறோம். பெரிய அளவிலும் இதுவே உண்மை என்பதைத் தேசிய அளவிலும் நம் நாட்டு அரசாங்கமே பார்க்கலாம். நம் நாட்டில் ஏராளமான முன்னேற்றப் பணிகள் முதலீட்டிற்குப் பணம் போதவில்லை என்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கங்கையையும், காவிரியையும் இணைக்கின்ற நதி இணைப்புத் திட்டம் இப்படித்தான் பல வருடங்களாக வெறும் பேச்சளவில் இருந்து கொண்டு செயல் வடிவம் பெறாமல் இருக்கின்றது. இதற்கு இலட்சம் கோடி ரூபாய் செலவாகும். அந்த அளவிற்குப் பணமில்லை என்பதால் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளோம் என்று அரசாங்கம் கூறினால் இந்திய அரசாங்கத்திற்கு அப்பா திரு. கர்மயோகி அவர்கள் பின்வருமாறு சொல்வார்கள். "இத்திட்டத்திற்கு 30,000 கோடி தான் இருக்கிறதென்றால் அந்தப் பணத்தைப் போட்டு வேலையை ஆரம்பியுங்கள். அரசாங்கப் பணம் தீருகின்ற கட்டத்தில் உலக வங்கியிலிருந்து கடனாகவோ, சர்வதேச AID Agenciesகளிடமிருந்து நன்கொடையாகவோ அல்லது உள்நாட்டிலிருந்தே இத்தகைய தேசிய முன்னேற்றப் பணிகளுக்கு உதவ விருப்பம் உள்ள பெரிய கார்ப்பரேஷன்கள் மற்றும் public sector நிறுவனங்களிலிருந்தும் நிதி உதவியும் பொருளுதவியும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வேலையை ஆரம்பியுங்கள். பின்னர் என்ன நடக்கிறது என்று பாருங்கள்' என்று சொல்வார். அரசாங்கமும் இதை நம்பி வேலையை ஆரம்பித்தால் கையிலுள்ள பணம் தீரும் கட்டத்தில் கர்மயோகி அவர்கள் சொல்வது போலவே உலக வங்கியும், AID Agencyகளும் அவர்களே இந்திய அரசாங்கத்தை அணுகி, "இது அருமையான திட்டம். செலவுக்குப் பணமில்லை என்று நிறுத்தாதீர்கள். மேற்கொண்டு ஆகும் செலவை நாங்களே கொடுக்கிறோம். அவசியம் வேலையைத் தொடருங்கள்' என்று சொல்வதை நாம் பார்க்கலாம். ஆக தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசாங்கம் உழைக்க முன் வருகிறது எனும்போது அங்கே Self-giving வருகிறது. அந்த Self-giving finiteஆன நிதித் தொகையை Infiniteஆக மாற்றுகிறது. கடைசிக் கோடி வரை செலவாகும் போது அதில் ஒரு perfection வருகிறது. அந்த perfectionம் finiteஐ Infiniteஆக மாற்றுகிறது.

  4. Finite தனக்குத் தெரிந்ததும் மற்றும் வழக்கமானதும் மற்றும் சமூகத்தில் நடைமுறையில் இருக்கின்ற வழிகளிலும்தான் செயல்பட விரும்பும். ஆனால் infinite இப்படிச் செயல்படுவதில்லை. நமக்குத் தெரியாததும், இதுவரை நாம் பார்த்திராத புதிய வழிகளிலும் அதனால் செயல்பட முடியும். நமக்குப் புரிந்த வழிகளில்தான் செயல்பட வேண்டும் என்று Infiniteக்கு அவசியமில்லை. நம்முடைய finite மனப்பான்மைக்கு இதுவரை யாரும் செய்யாத வேலையை நம்மாலும் செய்ய முடியாது என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் Infinite அம்சம் கொண்டவர்கள் இப்படி நினைப்பதில்லை. மற்றவர்களால் செய்ய முடியாவிட்டால் என்ன, நம்மால் செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். அப்படியே செய்தும் காட்டுகிறார்கள். மனிதனால் பறவையைப் போல் பறக்க முடியாது என்று மானிட சமூகம் பரவலாக நினைத்தபொழுது பறக்கும் மெஷினை உருவாக்க முடியும் என்று அமெரிக்க கண்டுபிடிப்பாளர்களான ரைட் சகோதரர்கள் நம்பினார்கள். அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார்கள். காந்திஜீ அரசியலுக்கு வரும்வரையிலும் உலகச் சரித்திரத்தில் ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு அடிமை ஆகியிருந்தது என்றால் வன்முறையிலும், போரிலும் இறங்கித்தான் தன்னுடைய சுதந்திரத்தை மீண்டும் பெற்றுள்ளது. ஆனால் ஆயுதம் எடுக்காமல், வன்முறையில் இறங்காமல் வெறும் அஹிம்சை மற்றும் சத்தியாகிரகத்தைப் பயன்படுத்தியே சுதந்திரத்தைப் பெறலாம் என்று காந்திஜீ அவர்களுக்குத்தான் தோன்றியது. இதுவரை உலகம் கண்டிராத ஒரு புதிய அணுகுமுறையாகும் இது. இது பலிக்காது, கூடி வராது என்று எல்லோரும் சொன்னார்கள். அவர் நம்மைப் போல finite மனப்பான்மை கொண்டவராக இருந்திருந்தால், பின்வாங்கியிருப்பார். ஆனால் அவர் Infinite மனப்பான்மை கொண்டவர். அதனால் பின்வாங்கவில்லை. Non-violence பலிக்கும் என்று அவர் நம்பினார். ஆகவே முயற்சியைத் தொடர்ந்தார். வெற்றியும் கண்டார். புதுமையான செயல்பாட்டுக்குப் பகவான் மற்றும் அன்னையிடமே நமக்குச் சிறந்த உதாரணங்கள் இருக்கின்றன. 2000 வருடங்களாக இந்திய ஆன்மீக வரலாற்றில் பிறப்பு எடுப்பதிலிருந்து விடுபட்டு அதன் பலனாக உலகத்தில் உள்ள துன்பம், அறியாமை, பொய்மை என்று எல்லாவற்றிலும் இருந்து நிரந்தர விடுதலை பெற்று மோட்சத்தை நாடிப் போக வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு கண்ணோட்டமாக இருந்து வந்துள்ளது. இது finite மனப்பான்மைக்கு உண்டான மனோபாவம். அன்னையும் பகவானும் மட்டும்தான் வேறு புதிய கண்ணோட்டத்திலிருந்து படைப்பைப் பார்த்தார்கள். ஏன் படைப்பிலிருந்து தப்பிக்க முயற்சி செய்ய வேண்டும்? மாறாக அதை ஏன் திருவுருமாற்றம் செய்ய முயற்சி செய்யக்கூடாது என்று அவர்கள் இருவருக்கும் மட்டும்தான் தோன்றியது. இறைவனின் முழுமையையும், படைப்பின் முழுமையையும் உணர்ந்ததால்தான் பகவானும் அன்னையும் இப்படி நினைத்தார்கள். இந்த முழுப்பார்வை மற்றும் இந்தப் புதிய முயற்சி அவர்களுடைய Infinite தன்மையைக் காட்டுகிறது. முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை என்று பழைய ஆன்மீகத்தை ஆதரிப்பவர்கள் பேசலாம். ஆனால் பகவானுக்கும் அன்னைக்கும் அது ஒரு பொருட்டில்லை. திருவுருமாற்றம் பெற்ற சத்தியஜீவிய உடம்போடு மீண்டும் வருவோம் என்று அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்கள். நமக்கு வேண்டியது அவர்களுடைய புதுமையான கண்ணோட்டமும், புதுமையான முயற்சியும்தானே தவிர திருவுருமாறிய உடம்போடு நம்முன் காட்சி அளித்தார்களா, இல்லையா என்பதில்லை. நாம் செய்கின்ற வேலைக்குண்டான பலனை அடுத்த நிமிடமே வரவழைக்க வேண்டும் என்ற அளவிற்கு நமக்குச் சிறப்பாக வேலை செய்யத் தெரிய வேண்டும். இருந்தாலும் அதே சமயத்தில் செய்கின்ற வேலைக்குண்டான பலனைப் பார்ப்பதற்குக் காலம் பூராவும் காத்திருக்க வேண்டுமென்றாலும், காத்திருக்கக்கூடிய Infinite பொறுமையும் வேண்டும் என்று பகவான் சொல்லியிருக்கிறார். அந்தப் பொறுமை அவரிடமே இருந்தது. நாமும் நம்முடைய செயல்பாடுகளில் இத்தகைய மனோபாவத்தை வெளிப்படுத்தினால் Infiniteனுடைய ஒரு அம்சமாவது நம்மைத் தொட்டதாக அமையும்.
  5. Finite பிரிவினையின் மூலம் செயல்படுகிறது. மாறாக Infinite முழுமையின் மூலம் செயல்படுகிறது.

    தனிமனிதனும் சரி, தனிக் குடும்பமும் சரி, தனி ஸ்தாபனமும் சரி, தங்களுடைய தேவைகள், தங்களுடைய சௌகரியங்கள் என்று இவற்றை மட்டுமே கருதி மற்றவர்களுடைய தேவைகள் என்ன? அவை நம்முடைய தேவைகளோடு ஒத்துப் போகிறதா என்பதையே கருதாமல் முழுமை எங்கிருக்கிறது என்பதையே உணராமல் செயல்பட்டு வருகிறார்கள். தனி மனிதர்கள், குடும்பங்கள், ஸ்தாபனங்கள் என்று மட்டும் இல்லை, மாநிலங்கள், தேசங்கள்கூட இப்படித்தான் இருக்கிறார்கள். இது Finite மனப்பான்மையினுடைய வெளிப்பாடு ஆகும். இதை நாம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தால் பிரச்சினைகள் வளரத்தான் செய்யுமே ஒழிய தீர்வோ, முன்னேற்றமோ கிடைக்காது. மாமியார் தன் சௌகரியத்தையும், மருமகள் தன் சௌகர்யத்தையும் மட்டும் வலியுறுத்தி வரும்பொழுது குடும்பத்தில் சுமுகம் போய்விடுகிறது. அம்மா மகனை "என்கூட இரு' என்கிறார். மனைவியோ கணவனைப் "பிரிந்து வாருங்கள்' என்கிறார். தாயாரை மகிழ்வித்தால் மனைவிக்கு அதிருப்தி, மனைவியை மகிழ்வித்தால் தாயாருக்கு அதிருப்தி. இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொண்ட ஓர் ஆண்மகன் தாயார் என்றோ, மனைவி என்றோ பார்க்காமல் ஒட்டுமொத்தக் குடும்பத்திற்கு எது நல்லதோ அந்தக் கோணத்திலிருந்து பார்த்துத் தாயாருக்குச் சில வரையறைகளையும், மனைவிக்குச் சில வரையறைகளையும் விதித்து அவற்றை அவர்கள் தாண்டி வராமல் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்து பொறுப்பாக நடந்து கொண்டார் என்றால் குடும்பம் என்ற முழுமை உயிர்பெற்று வரம்பில்லாத வளர்ச்சியைக் காணும். தனி மனிதனும் குடும்பங்களும் தான் இப்படி finite மனப்பான்மையோடு இருக்கின்றன என்று இல்லை. இந்தியா என்ற முழுமைக்கு உட்பட்டிருக்கின்ற மாநிலங்கள்கூட அந்த முழுமையையே உணராமல் நதி நீர் பங்கீட்டு விஷயத்தில் தகராறு செய்து கொள்வதைப் பார்க்கிறோம். காவிரி கர்நாடகத்திற்கும், மற்றும் தமிழகத்திற்கும் என்று இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு நதியாகும். ஆனால், இந்த நதி நீரைச் சுமுகமாகப் பிரித்துக் கொள்வதில் எவ்வளவு தகராறு வருகிறது என்பதை நாம் பார்க்கிறோம். படிப்பறிவில்லாத இரண்டு கிராமவாசிகள்கூட ரூபாய் 100 பெறுமானமுள்ள ஒரு பொருளை ஒருவர் விற்கவும் அடுத்தவர் வாங்கவும் முயன்றால் முதல் 10 நிமிடம் பேரம் பேசுவார்கள். அரை டஜன் மாம்பழத்தை விற்கின்ற விவசாயி ரூபாய் 150ல் ஆரம்பிப்பான். வாங்குகின்ற எதிர் பார்ட்டி ரூ.75/-ல் ஆரம்பிப்பான். பத்து நிமிடம் பேசி பேரம் படியாமல் இருக்கின்றதை கவனிக்கின்ற மூன்றாம் நபர், "பத்து நிமிடம் பேசியும் எந்த முடிவுக்கும் வரவில்லை. நீயும் பிழைக்க வேண்டும், அவனும் பிழைக்க வேண்டும். ஆகவே 150/-லும் இருக்க வேண்டாம், ரூ.75/-லும் இருக்க வேண்டாம். ரூ.100/-க்கு செட்டில் ஆகி விடுங்கள்' என்பார். அவர் பேச்சைக் கேட்டுக் கொண்டு ரூ.100/-க்கு பேரம் படிந்து விற்பனையை முடித்துக் கொள்வார்கள். ஆகவே இந்த ரூ.100/- விற்பனையில் முழுமை என்ன? விற்பவனும் பிழைக்க வேண்டும், வாங்குபவனும் பிழைக்க வேண்டும். அந்த முழுமையை 10 நிமிடத்தில் உணர்ந்து படிப்பறிவில்லாத விவசாயிகள்கூட தங்கள் வேலைகளை முடித்துக் கொள்வார்கள். ஆனால் காவிரி நீர் விஷயமாக தமிழகமும் கர்நாடகமும் ஒரு முடிவுக்கு வராமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். கர்நாடகமும் பிழைக்க வேண்டும், தமிழகமும் பிழைக்க வேண்டும் என்றால் அந்தந்த வருடமும் காவிரி நீர் தேக்கத்திலுள்ள கொள்ளளவைப் பொருத்து அந்தந்த வருடம் எப்படி இருக்கின்ற தண்ணீரைப் பிரித்துக் கொண்டால் எல்லோரும் பயனடைவார்கள் என்று இரு மாநிலங்களும் செயல்பட்டால் இருவர் கண்ணோட்டத்திலும் ஒரு முழுமை வெளிப்படும். அந்த முழுமையில்தான் Infinite இருக்கிறதே ஒழிய "உங்கள் தேவை எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. முக்கால்வாசித் தண்ணீர் எங்களுக்கு வேண்டும், மீதிக் கால்வாசிதான் உங்களுக்கு, பேசாமல் கொடுத்து விடுங்கள்' என்று கர்நாடகம் பேசினாலும் சரி, தமிழகம் பேசினாலும் சரி, அதில் finite மனப்பான்மை தான் வெளிப்படுகிறதே ஒழிய, அதில் முழுமையோ Infinityயோ இல்லவே இல்லை.

    இப்படி நீயா, நானா என்று போட்டியிடாமல் நாம் எல்லோரும் இந்தியர்கள், ஆகவே விட்டுக்கொடுத்து அட்ஜஸ்ட் பண்ணிப் பழக வேண்டும் என்பதால் யாருக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அவர்கள் அதிகமாக எடுத்துக் கொள்ளட்டும் என்று பரந்த மனப்பான்மையுடன் செயல்பட்டால் நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினை நிரந்தரமாக மறைந்துவிடும். இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே ஒற்றுமை எவ்வளவு அவசியமோ அதே அளவிற்குச் சர்வதேச அளவிலும் தேசங்களுக்கிடையே ஒற்றுமை வர வேண்டும் என்பது மிகவும் அவசியமாகிவிட்டது. தேசங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும், போட்டி மனப்பான்மையை வளர்த்துக் கொண்டும் செயல்பட்ட காலம் என்றோ முடிந்துவிட்டது. இப்பொழுதுள்ள தொலைத் தொடர்பு வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் மற்றும் பொருளாதாரத் தொடர்புகள் என்று இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது 1990க்கு மேல் உலகம் ஒன்றாகிவிட்டது. Physicalஆகவும் economicஆகவும் ஒன்றாகிவிட்டாலும் மக்களுடைய மனதிலோ அரசாங்கங்களின் இடையிலோ ஒற்றுமை உணர்வு இன்னும் முழுமையாக வரவில்லை. ஒன்றுபட்ட இந்த உலகத்தில் தனி இராணுவம் தேவையில்லை, தனித்தனி தேசிய currency தேவையில்லை. தனித்தனி employment policyயோ, economic policyயோ தேவையில்லை. மாறாக உலகம் முழுவதற்குமே ஒரு இராணுவம், ஒரு கரன்சி, ஒரு economic policy இருந்தாலே போதும் என்று என் தகப்பனார் திரு. கர்மயோகி அவர்கள் உலகப் பொருளாதார மாநாடுகளில் மதர் சர்வீஸ் சொஸைட்டியைச் சேர்ந்த திரு. Garry Jacobs போன்ற நிபுணர்களைப் பேசச் சொல்கிறார். இப்படிப்பட்ட ஒன்றுபட்ட செயல்பாடு உலக அளவில் உண்மை ஆகியது என்றால் பொருளாதார பிரச்சினைகள், அரசியல் பகையால் வெடிக்கின்ற போர் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் சீர்குலைந்து வருவதால் உண்டாகும் பிரச்சினைகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சினைகள் என்று இவையெல்லாம் முடிவுக்கு வரும் என்று அவர் திடமாக நம்புகிறார். அவர் எதிர்பார்க்கும் இந்த ஒற்றுமை உலகில் நிலைபெற்றது என்றால் Power of Infinity பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சுற்றுச்சூழலிலும், மக்களுடைய மனநிலையிலும் என்று எல்லா இடங்களிலும் வெளிப்படும். உலகத்தின் பொருட்செல்வம் அபாரமாகப் பெருகி எந்த நாட்டிலும் வறுமையின் சுவடே தெரியவில்லை என்று வரும். இராணுவத்திற்கே வேலையில்லை என்ற அளவிற்கு உலகத்தில் அமைதி நிலவும். வருமானத்தைத் தேடிக் கொள்வதற்காக முழு நேரத்தையும் செலவழிக்கும் அவசியம் இல்லாமல் வேலை செய்யும் நேரம் குறையும். ஆனால் வருமானம் அதிகரிக்கும். மீதி இருக்கின்ற leisure hoursஐ மக்கள் உயர்ந்த நோக்கங்களுக்காகச் செலவு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். ஒன்றுபட்டால் Infiniteடே நம் வாழ்க்கையில் உதயமாகும்பொழுது மனித சமுதாயம் ஏன் அந்த முயற்சியை எடுக்கக் கூடாது என்பதுதான் பகவானும், அன்னையும், என் தகப்பனார் திரு. கர்மயோகி அவர்களும் எழுப்புகின்ற கேள்வியாகும்.

தொடரும்....

********

ஜீவிய மணி
 
பிறர் வெற்றிக்காக உழைக்க மனமில்லாவிட்டாலும்,
பிறர் வெற்றி நம் மனத்தை பூரிக்கச் செய்தால்,
அங்கு அன்னை வருவார்.
பிறர் வெற்றியை நம் வெற்றியாக கருதும் மனம்
அன்னையேயாகும்.
 
 

*******



book | by Dr. Radut