Skip to Content

02. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்

ஸ்ரீ அரவிந்தம்

லைப் டிவைன்

கர்மயோகி

23. மனிதனுள் உள்ள இரட்டை ஆத்மா

பிரபஞ்சம் மனிதனை உருவாக்க முயல்கிறது. அது வித்தாகும். வித்து இருளில் புதைந்து உருவம் பெறாது இருக்கிறது. மனித வித்தான இது ஜோதியோ, ஞானமோ இல்லை. இது உறுதி. இது சுதந்திரமான உறுதியல்ல. பிரபஞ்ச இயக்கம் இதைத் தன் பிடியுள் பெற்றுள்ளது. இவ்வுறுதி ஜட வாழ்வில் அணு ரூபமாக இருக்கிறது. உள் சென்று கலந்து நிலவும் சக்தியான உறுதியிது. அது ஊமையான ஜடம், வேகமாக உந்தும் சக்தி. இது வாழ்வின் முதல் நிலை. அவ்வுறுதி அதற்கு அத்தாட்சி. இரண்டாம் நிலையின் வேர் ஆசை. அது மற்றதை ஆக்ரமிக்க ஆவலுடையதாயிருக்கிறது. அதன் திறமை அளவுக்குட்பட்டது. மூன்றாம் நிலையின் மொக்கு அன்பு. அன்பு மற்றதை ஆட்கொள்ள விரும்பும்பொழுது தன்னையும் பிறரால் ஆட்கொள்ளப் பிரியப்படுகிறது. பெறவும், தரவும் முயலும் செயலிது. அப்படியானால் 4ஆம் நிலை எது? சத்திய ஜீவிய வாழ்வு ஆத்மாக்களின் ஒற்றுமையின் அடிப்படையில் உள்ளது. மூல சக்தி இருளாகவும் உருவமற்றதாகவுமுள்ளது. தூய்மையாக, முழுமையாக வெளிவர வேண்டும். திட்பமான சக்தியின் ஆசை ஒளிமயமாகி பூர்த்தியாக வேண்டும். அன்பு பிறரை ஆட்கொள்ள முயன்று அவருடைய அன்புப்பிடியுள் நுழைகிறது. அதற்கு ஆழ்ந்துயர்ந்த திருப்தி வேண்டும். அது அன்பை அறிவால் பரிமாறுவதால் எழும்.

இதுவே 4ஆம் நிலையின் சிறந்த மலர். அதன் சிறப்பை இங்ஙனம் வெளிப்படுத்தும். மனிதன் ஆனந்தம் தேடுகிறான். பிரபஞ்சமும் பொருள்களில் ஆனந்தம் தேடுகிறது. இதனுள் அவற்றில் தேடுதலின் ரூபங்களும், கட்டங்களும் தெரியும். பொருளில் ஆனந்தம் ஜடத்தின் ஊமை உணர்வு. அது எதிரெதிரானதாக எழும். அதன் ஏற்றத்தாழ்வில் செயல்பட வேண்டும். இங்கு அது ஜோதிமயமான ஆத்ம பூரணம். வாழ்வின் ஏற்றம் தெய்வீக ஆனந்தம் பொருளில் நாடும் உயர்வு.

இவ்வுலகம் நாமறிவது போல் இருப்பதால், இது வேறு வகையாக இருக்க முடியாது. உலகம் சச்சிதானந்தம், முகமூடி தரித்துள்ளது. இது சச்சிதானந்த இயற்கைக்குரியது. எனவே இறைவனுடைய சக்தி உலகில் ஆனந்தம் பெறும். எங்கும் நிறை சுயஆனந்தம் பெறும். வாழ்வு சித் சக்தியினின்று எழும் சக்தி. எனவே அதன் எல்லா அசைவுகளின் இரகஸ்யம் மறைந்துள்ள ஆனந்தமாகும். ஆனந்தம் எல்லாவற்றிலும் ஆரம்பத்திலேயே இருப்பதாகும். எல்லா செயல்கட்கும் ஆனந்தமே காரணம், நோக்கம், இலக்கு. அகந்தையால் பிரிக்கப்படுவதால் ஆனந்தம் தவறுகிறது. திரை மறைவில் அது உள்ளது. தனக்கு எதிரானதாக அது தோன்றுகிறது. ஜீவன் மரணத்தால் மூடப்பட்டுள்ளது. ஜீவியம் உணர்வற்றதாக உள்ளது. சக்தியை நாம் திறனற்றதாகக் காண்கிறோம். உயிருள்ள பொருள்கட்கு இது திருப்தி தாராது. அவை சலனமற்றிருக்க முடியாது. பிரபஞ்ச ஆனந்தத்தைப் பெற்று தன்னைப் பூர்த்தி செய்து கொள்ளும். அது இரகஸ்ய முழுமையான ஆனந்தம். அதுவே மூலமான சச்சிதானந்தத்திற்குரிய ஆனந்தமுமாகும். சச்சிதானந்தம் கடந்ததும் உள்ளுறைவதுமாகும். இவ்வானந்தம் அனைத்தையும் தழுவியது. அனைத்தையும் தாங்கிப் பிடிப்பது, அனைத்தையும் அறிவது, ஆனந்தத்தை நாடுவதே வாழ்வின் அடிப்படையான உந்துதல். அதைக் கண்டு சொந்தமாக்கிப் பூரணம் பெறுவதே வாழ்வின் முழு நோக்கம்.

ஆனந்தம் என்ற தத்துவம் நம்மிடம் எங்குள்ளது? நம்முள் எந்தக் கரணத்தின் மூலம் அது வெளிப்படுகிறது? பிரபஞ்ச செயலில் அது வெளிப்படும் வகையென்ன? சித்-சக்தி வாழ்வாக வெளிப்படுகிறது என நாம் அறிவோம். வாழ்வைப் பிரபஞ்ச கரணமாக அது பயன்படுத்துகிறது என நாம் அறிவோம். சத்திய ஜீவியம் என்ற தத்துவம் மனத்தைக் கருவியாகப் பயன்படுத்துகிறது என நாம் அறிவோம். பிரபஞ்ச சிருஷ்டியில் 4 அம்சங்களைக் கொண்ட புருஷ தத்துவம் உண்டு என நாமறிவோம். அவை வாழ்வு, சித்-சக்தி, ஆனந்தம், சத்திய ஜீவியமாகும். சத்திய ஜீவியம் ஜடமான பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ளது. ஆனால் அது திரைக்குப் பின்னால் உள்ளது. நடக்கும் நிகழ்ச்சிகளின் பின்னால் சத்திய ஜீவியம் செயல்படுகிறது. கண்ணில் படாமல் அங்கு அது தன்னை வெளிப்படுத்துகிறது. மனம் சத்திய ஜீவியத்தின் உபகருவி. அதை சத்திய ஜீவியம் பயன்படுத்துகிறது. அதன் மூலம் சத்திய ஜீவியம் தன் செயலைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அதே போல் தெய்வீக சித்-சக்தி ஜடமான பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ளது. ஆனால் மறைந்துள்ளது. செயலின் தோற்றத்தின் பின் சத்திய ஜீவியம் இரகஸ்யமாகச் செயல்படுகிறது. அதுவும் அதன் உபகருவியான வாழ்வு மூலம் வெளிப்படுகிறது. ஜடம் என்ற தத்துவத்தை நாம் இதுவரை தனியாக ஆராயவில்லை. இங்கும் அது போன்ற தோற்றமிருப்பதை நாம் அறியலாம். தெய்வீக முழு வாழ்வு ஜடப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ளது. ஆனால் மறைந்துள்ளது. பொருள்களின் தோற்றத்திற்குப் பின்னால் அது மறைந்துள்ளது. ஆரம்பத்தில் அதன் உபகருவி வழி வெளிப்படுகிறது. பொருள், ஜீவனின் ரூபம். இது இங்கு உபகருவி. அப்படியானால், ஆனந்தமும் பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்க வேண்டும். அதுவும் மறைந்து செயல்படும். உள்ளபடி பொருள்களின் தோற்றத்தின் பின் அது தன்னைத்தான் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும். அது தன் உபகருவி மூலம் வெளிப்படும். மறைந்துள்ள ஆனந்தத்தை நாம் காண்போம். பிரபஞ்சத்தில் ஆனந்தம் அது போல் செயல்படும்.

அது போன்ற ஒன்று நம்முள் உள்ளது. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட நோக்கில் நாம் அதை ஆத்மா என்கிறோம். அது மனம்; வாழ்வு ஆகியவற்றைக் கடந்த சைத்தியத் தத்துவம். அது உடல் இல்லை. ஆனால் அது தன்னுள் இவற்றின் - மனம், வாழ்வு, உடல் - சாரத்தைப் பெற்றுள்ளது. சாரம் மலரும் வாயில் அது. அது பிரம்மம், ஜோதி, அன்பு, சந்தோஷம் ஆகியவை குறிப்பாக ஆனந்தம் பெறும்படி மலர்கிறது. அது அழகைத் தேடுகிறது. ஜீவனின் உன்னத தூய்மையை நாடுகிறது. நம்முள் பிரபஞ்ச தத்துவங்கள் ஒவ்வொன்றும் இரண்டு நிலைகளில் உள்ளன. அதே போல் இதற்கும் இரு நிலைகள் உள்ளன. அவை இரு ஆத்மா, சைத்திய புருஷன். நமக்கு இரண்டு மனம் உண்டு. ஒன்று மேல் மனம். அது நம் பரிணாம அகந்தைக்குரியது. அது ஆழமற்ற மேலெழுந்த மனப்பான்மை. ஜடத்திலிருந்து நாம் பரிணாமத்தால் வெளி வருவதால் அது எழுந்தது. அடுத்தது அடி மனம். மேல் மனத்தின் வரையறையால் அது பாதிக்கப்படுவதில்லை. அது ஒளிமயமான, சக்திவாய்ந்த பெரியது. நம் மனத்தின் பர்சனாலிட்டிக்குப் பின்னால் உள்ள உண்மையான மனத்தின் ஜீவன் அது. அதை நாம் தவறுதலாக நாம் எனக் கொள்கிறோம். நமக்கு இரு வாழ்வுண்டு. ஒன்று உடலுள் செயல்படும் புற வாழ்வு, கடந்த காலத்தில் ஜடத்தின் பரிணாமத்தால் அது கட்டுண்டது. நம் பூத உடல் நாம் வாழும் உடல். அது பிறந்தது, இனி மரணமடையும். அடுத்தது அடிமன வாழ்வின் சக்தி. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே சிறைப்பட்ட வாழ்வில்லை அது. அது உண்மையான பிராணனின் ஜீவன், அது வாழ்வின் ரூபத்தின் பின்னாலுள்ளது. தவறுதலாக அறியாமையால் நாம் அதை நம் உண்மையான வாழ்வாகக் கொள்கிறோம். ஜடத்தின் ஜீவனிலும் இரு நிலைகள் உள்ளன. உடலுக்குப் பின்னால் சூட்சுமமான ஜடப் பொருளுண்டு. அது நம் பொருளை உற்பத்தி செய்யும் வாழ்வு. அது ஜடத்தின் பொருள் மட்டுமல்ல, வாழ்வின் பொருளாகும், மனத்தின் பொருளுமாகும். அதுவே நம் உண்மையான பொருளாகும். அது உடலுருவத்தை ஆதரிக்கிறது. நாம் தவறுதலாக அதை நம் ஆத்மா எனவும் முழு உடல் எனவும் கொள்கிறோம். அதே போல் நமக்கு இரு சைத்திய நிலைகள் உள்ளன. ஒன்று மேல் மன ஆசையின் ஆத்மா. அது நம் ஆசைகள், உணர்ச்சிகள், அழகுணர்ச்சி ஆகியவற்றில் வேலை செய்கிறது. அது மனசக்தியை நாடுகிறது. சந்தோஷம், ஞானம், ஜோதியின் தூய்மையான சக்தி அது. அடிமனத்திற்குரிய சைத்திய புருஷனுண்டு. அது சந்தோஷம், ஜோதி, அன்பிற்குரிய தூய்மையான சக்தி. ஜீவனின் உன்னதமான சாரத்தை நாடுகிறது. புற சைத்திய வாழ்வின் பின்னாலுள்ள உண்மையான ஆத்மா அது. அது ஒருவனுக்கிருந்தால் அவனுக்கு ஆத்மாவுண்டு என்கிறோம். அது புற ஆத்மீக வாழ்வில் பல சமயங்களில் காணப்படுவதில்லை. அப்படிப்பட்டவர்க்கு ஆத்மா இல்லை என்கிறோம்.

நம் வாழ்வுக்கு ரூபங்களுண்டு. அவை ஜீவனின் ரூபங்கள். அவை புறத்திற்குரியன. பெரிய, உண்மையான, தனித்தன்மைக்குரியவை அடிமனத்தைச் சேர்ந்தவை. சிறிய அகந்தையின் ரூபங்கள் சாஸ்வதமானவை. மறைந்துள்ள ஜீவனின் பகுதிகள் மனிதனின் தனித்தன்மையைப் பெற்றுள்ளன. அது பிரபஞ்சத்திற்கு அருகாமையிலுள்ளது. அது பிரபஞ்சத்தைத் தொடுகிறது. மேலும் அது பிரபஞ்சத்துடன் நெருங்கிய தொடர்பும் உறவும் கொண்டது. பிரபஞ்ச மனத்திற்குப் பிரபஞ்ச ஞானமுண்டு. நம்முள் உள்ள அடி மனம் அதை அறியும். பிரபஞ்ச வாழ்வில் உள்ள பிரபஞ்ச சக்தியை அடி மனம் அறியும். பிரபஞ்ச சக்தி பிரபஞ்ச ஜடத்தில் ரூபம் பெறுவது அடி மன உடலுணர்வுக்குண்டு. அது மேல் மனத்தை அடி மனத்திலிருந்து பிரிக்கும் தடித்த சுவர். அது மனம், வாழ்வு, உடலில் உள்ளது. இயற்கை இச்சுவர்களை ஊடுருவும் கடமை பெற்றது. குறையாகவே ஊடுருவ முடியும். ஊடுருவும் திறமை பெரியது. ஆனால் சுவர்களின் பருமன் அதிகம் என்பதால் ஊடுருவும் முயற்சி தெளிவற்ற குழப்பமானதாக இருக்கிறது. பகவான் அதைத் தெளிவான குழப்பமான கருவி என்கிறார். இது செய்தியை அறிவிக்கும் லோகம். பிரிவினைக்குட்பட்ட நுட்பமான லோகம். இரண்டு தொழில்களும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. பிரபஞ்ச ஆத்மா தன் வாழ்வில் ஆனந்தப்படுகிறது. மற்ற ஆத்மாக்கள் வாழ்விலும் அது ஆனந்தத்தை உணர்கிறது. இப்பல ஆத்மாக்கள் பிரபஞ்ச ஆத்மாவாகும். அடி மன ஆத்மா பிரபஞ்ச ஆனந்தத்தை உணரவல்லது. மனம், வாழ்வு, உடல் வளர இயற்கை உழைக்கிறது. எங்கும் போல் ஆத்மாக்கள் ஜீவனின் பகுதிகளைப் பிரதிபலிக்கின்றன. மேல் மன ஆத்மா பிரபஞ்ச ஆனந்தத்தை அறிவதினின்று அகந்தையால் தடுக்கப்படுகிறது. அவை தடித்த சுவர்கள். அவை ஊடுருவும் சுவர்களின் வாயில். இச்சுவர்கள் பெரிதும் ஊடுருவ உதவுகின்றன. சுவர் வழியாகப் போனால் பெரும் பிரபஞ்ச ஆனந்தத்தைச் சுருக்கும் தன்மை அவற்றிற்குண்டு. ஆனந்தம் சிதறி முகமூடியணிந்து எதிரானதாகிறது.

மேல் மனத்தில் உண்மையான வாழ்வில்லை. ஆத்மீக வாழ்வு உண்மையான வாழ்வு. உண்மை சிதறி சைத்திய புருஷனானது நாம் பெற்றது. பொருளின் ஸ்பர்சம் அவற்றிற்கு எதிரானதாக வருகிறது. மனிதனால் தன் உண்மையான ஆத்மாவைக் காண முடியாது. அது துர்அதிர்ஷ்டம், இருளின் குறை. உண்மையான ஆத்மாவில் மனிதன் உள்ளுணர்வில் வாழ்கிறான். புறத்தில் உலகை அவன் ஏற்றுத் தழுவும் பொழுது ஆத்ம ஸ்பர்சத்தின் உண்மை தவறுகிறது. இதுவே அவன் தரித்திரத்தின் அடிப்படை. சத்தியத்தின் மூலத்தை நாடும் மனிதன் மேலெழுந்து ஸ்பர்சத்தையும் தோற்றத்தையும் பெறுகிறான். அவை சுபாவத்தின் முரண்பாடானவை. ஜீவனின் மூலம், ஜீவியத்தின் மூலம், பவரின் மூலம், ஆனந்த சாரம் ஆகியவை மூலம் மனிதன் தேடுவது ஒரு பிரபஞ்ச ஜீவன், பவர், தெளிந்த வாழ்வு, ஆனந்தமுண்டு. அதைக் காண மனிதன் அவற்றின் மூலத்தை அறிய வேண்டும். கோடிக்கணக்கான தோற்றமும், ஸ்பர்சமும் உண்டு. அவற்றிற்கு ஐக்கியமும், சத்திய சுமுகமும் உண்டு. அவ்வைக்கியத்தில் இம்முரண்பாடுகள் அனைத்தும் சுமுகமாகும். உலகத்தின் ஆத்மாவான பிரம்மமும், மனிதனுடைய ஆத்மாவான பிரம்மமும் ஒன்றே. இந்த பிரம்மத்தின் பிரதிநிதியே அவனுடைய நிஜமான ஆத்மா. தன் உண்மையான பிரம்ம ஆத்மாவை தன் ஆத்மா மூலம் அவன் காணலாம். ஐக்கியமும், சுமுகமும் வந்தபின் அவை சத்தியத்தின் அம்சங்களாதலால் இது நடக்கும். அவனது அகந்தையின் அறியாமை, மனம், எண்ணம், உணர்ச்சி, உடலுணர்வு தடையாக உள்ளன. உலகம் தழுவிய பொழுது மனப்பூர்வமாக தைரியமாக அவை தழுவலை ஏற்றுக் கொள்வதில்லை, எச்சரிக்கையாக, ஸ்பர்சத்தினின்று விலகி சுருங்குகின்றன. ஆர்வமாக வருவதும், அதிருப்தியாக சுளிப்பதும் உண்டு. பயமும் கோபமும் அவற்றினுடைய பதில். விருப்பமற்ற தீண்டுதலினின்று விலகி சுருங்குகின்றன. சந்தோஷமான தழுவலால் திருப்தியடைகின்றன. சௌகரியம் அல்லது எச்சரிக்கை, திருப்தி அல்லது அதிருப்தி அவற்றின் பதில். சந்தோஷம், வலி, பாராமுகம் உண்டு. ஆசையின் மூன்று அறிவு நிலைகள் அவை. வாழ்வைத் தவறாகப் புரிந்து கொள்வது ரஸத்தின் விளக்கம். அது பொருள்களில் காணும் ஆனந்தத்தைத் தவறாகப் புரிந்து கொள்வது. தூய்மையான மூலமான ஜீவன், அதன் சந்தோஷம் அகந்தை வாழ்வில் அப்படி மாறுகின்றன.

இதற்கு முன் ஜீவனுடைய ஆனந்தத்தை உலகுடன் இணைத்துப் பார்த்தோம். வலி, சந்தோஷம் என்ற வரைமுறைகள் உண்டு எனக் கண்டோம். நாம் கண்ட வரைமுறைகள் செல்லாதவை. இந்த வரைமுறைகட்கு செல்லும் உரிமையில்லை. இவை மனத்தைப் பொருத்தவரை முறை. மனம் என்பது உணரும் ஜீவியம். அது மட்டும் நிர்ணயிக்கிறது. நம் உணர்ச்சியின் தீவிரம் நம் இஷ்டப்படி மாறும் என அறிந்தோம். அவற்றை உயர்த்தலாம், தாழ்த்தலாம், அழிக்கலாம். வலி சந்தோஷத்திற்குரிய பெரிய இரகஸ்யம். அவை ஆதியில் ஒன்றே. ஒன்று அடுத்ததாக மாறும். வலியா, சந்தோஷமா என நிர்ணயிப்பது நம் உணர்ச்சி. நம் இதய உணர்வும் அதைச் செய்யும். மேல் மனத்து ஆசை கவனிக்காவிட்டால் அது பாராமுகமாகும். மேல் மனம் என்பது மனம், உணர்ச்சி, ஆசையாலானது. அவை ரஸத்திற்காக ஆர்வமாக இருக்கின்றன. பெற முடியாது, பதிலிறுக்க முடியாது என்பதனாலிருக்கலாம். அல்லது பதிலிறுக்க மறுக்கலாம். மனம் நடுநிலை வகிக்கக் கட்டாயப்படுத்தலாம். மேல் மனம் ஏற்க மறுத்தால் பதில் நடுநிலைமையாகும். இவற்றிற்கெல்லாம் ஏதாவது நடந்தபடியிருக்கிறது. சில சமயங்களில் அது தீர்க்கமான மறுப்பாகும். அல்லது வேண்டாம் என தயாராகக் கூறும் மன நிலை அல்லது இயலாமை. அடி மனத்தில் செயல்படாததை மேல் மனம் ஏற்காது.

இப்பொழுது நாம் மனத்தால் கவனிக்க முடியும். சில சோதனைகள் உண்டு. அவை அடி மன உண்மையை வலியுறுத்தும். மேல் மனம் சில விஷயங்களைக் காணும், மற்றதைப் புறக்கணிக்கும். ஆனால் அடி மனம் ஒன்று விடாமல் கவனிக்கும். இது அடி மன உண்மை. அடி மனத்திற்கு ஆத்மா உண்டு. அது ரஸத்தை அறியும். இந்த ஸ்பர்சங்களில் ரஸத்தை அறிவது முக்கியம். மேல் மன ஆசையின் ஆத்மா பிடிக்கவில்லையென பலவற்றைப் புறக்கணிக்கும். அது மறுக்கும், விலக்கும், உதாசீனப்படுத்தும். எதை உதாசீனப்படுத்துகிறதோ அதை நடுநிலையில் ஏற்கும். மேல் மனத்தின் பின் செல்லாமல் ஆத்ம ஞானம் பெற முடியாது. மேல் மனம் அதற்கு வேண்டியதை மட்டும் ஏற்கும். அது புற அனுபவம். மேல் மனம் குறையுடைய சோதனைக் களம். அவசரப்பட்டு, திறமையற்ற துண்டாகச் சிறியதைத் தனக்கேற்றபடி புரிந்து கொள்ளும். உண்மையில் நான் சிறிதல்ல, பெரிது, மிகப் பெரியது. நாம் மேல் மனத்தின் பின்னால் போக வேண்டும். பாதாளத்தைத் தொட வேண்டும், பரமாத்மாவை அடைய வேண்டும். அவற்றிற்கு மேல் மனத்தின் தொடர்பு என்ன என அறிய வேண்டும். நம் வாழ்வு இந்த மூன்றிடையே வாசம் செய்யும். வாழ்வின் முழுமை இம்மூன்றில் அடங்கியுள்ளது. நம்முள் ஆத்மா உள்ளது, அதன் ஆதியான பிரம்மமுள்ளது. பரமாத்மா என நாம் கூறுவது இவ்விரண்டுடன் ஒன்றியது. நம் மேல் மன நிகழ்ச்சிகள் பரமாத்மாவைக் கட்டுப்படுத்தாது. மேல் மனத் தோற்றத்தின் பல வண்ணங்களாலானது. இவற்றின் சத்தியம் பரமாத்மாவில் உள்ளது. இவற்றின் ஆனந்தமும் அங்குள்ளது. அங்கு அவை அளவு கடந்த அபரிமிதமானவை. பாதாளம் உண்டு. நாம் அதை அடி மனத்தின் முடியாக அறிகிறோம். அது ஜோதியின் பொலிவுடையது. பாதாளம் பரமாத்மாவாகாது. அனுபவம் பெறும் திறனுடைய கருவி அங்கில்லை.

அது ஆத்மாவுடனோ, பிரம்மத்துடனோ இணைந்ததில்லை. உலக அனுபவத்தின் மூலம் பாதாளம் உலக ஆத்மாவை அடைகிறது. பாதாளத்திற்கு ஆத்மா உண்டு. அது உள்ளே ரஸத்தைத் தெளிவாக அறியும். எல்லா ஸ்பர்சமும் அதற்கு ஒன்று போல் ருசிக்கும்.

அடி மனமும், மேல் மனம் ஏற்கும் தரங்களையும் பண்புகளையும் ஏற்கும். அடி மனம் அதற்குரிய ஸ்பர்சத்தை ஏற்கும். அவை சந்தோஷம், வலி, பாராமுகம். அடி மனம் அவற்றிலிருந்து ஒரே உணர்வைப் பெறும். மேல் மனத்தில் சில ஸ்பர்சத்தை விரும்புகிறோம். மற்றதை விலக்குகிறோம். நம் உண்மையான ஆத்மா அடியிலிருந்து எல்லா ஸ்பர்சத்தையும் சந்தோஷமாக அனுபவிக்கின்றது. எல்லா அனுபவமும் சந்தோஷம் தரும். அவற்றால் வலிமை பெறும். ஞானமும் சந்தோஷமும் பெறும். அவற்றால் அது சேகரம் செய்த இனிய அனுபவம் உபரியாகிறது. அதுவே நம் உண்மையான ஆத்மா. மேல் மன ஆசையின் ஆத்மா வலியிலிருந்து விலகிச் சுருங்கலாம். ஆனால் உண்மையான ஆத்மா மேல் மனத்தை வலியை நாட வற்புறுத்தும். மேல் மனம் ஒரு அனுபவத்தை விரும்பி நாடலாம். உண்மையான ஆத்மா அதை மறுக்கும்படி மேல் மனத்தை வற்புறுத்தும். உண்மையான ஆத்மாவுக்கு மேல் மன நாட்டத்தை மாற்றவும், தலைகீழே திருப்பும் திறனும் உண்டு. பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவற்றை "பாராமுகமாக சமன் செய்தல்' என்கிறார். அல்லது "பாராமுகமான சந்தோஷம்' எனலாம். அதற்கு வாழ்வின் பல்வேறு இன்பங்கள் எனப் பெயர். பிரபஞ்ச உணர்ச்சியே இதற்குக் காரணம். எல்லா அனுபவங்களாலும் வளரும் முறையிது. இது இயற்கையின் வழி. தாவரமும், கல்லும் அசைவதில்லை. அவற்றின் வாழ்வு வழக்கமானது. அவற்றின் வாழ்வு மேலே தம்மை அறியாதது. இரகஸ்யமான ஆத்மாவுக்கு அவற்றின் மேல் மனத்தில் வழக்கமான உணர்வை கடக்கும் கருவியில்லை. குறுகிய, இறுகிய, மாறாத பள்ளமான பாதையில் பிறந்தவை அவை. மேல் மனத்தில் மட்டும் வாழ்ந்தால் நாம் கல்லைப் போல், மரம் போலிருப்போம். தன்னிஷ்டத்திற்கு விட்டுவிட்டால் ஆசையின் ஆத்மா சென்ற வழியிலேயே மீண்டும் மீண்டும் செல்லும். முடிவு வரையும் செல்லும். அடி மனம் ஜீவனற்ற வழக்கத்தை மாற்றும்.

பழைய தத்துவங்களில் வலியும் சந்தோஷமும் இணைபிரியாதவை. அதே போல் பொய்யும் அறிவின் உண்மைகளும் இணைபிரியாதவை. பவரும் பலஹீனமும்; பிறப்பும் இறப்பும் அது போன்ற இரட்டைகள். அதனால் வலியிலிருந்து தப்ப ஒரே வழியுண்டு. வலி, சந்தோஷம் இரண்டையும் முழுவதும் விலக்குவதே வழி. மனிதனை உலகத்தின் ஆத்மாவான பிரம்மம் தூண்டுகிறது. மனிதன் அதை வெற்று பாராமுகத்தால் வரவேற்க வேண்டும். ஆனால் சூட்சுமமான மனோதத்துவ ஞானம் பெறலாம். பாராமுகம் மேலெழுந்து ஞானம் கூறுவது என அது உணர்த்தும். இப்பிரச்சினையைச் சந்திக்க உள்ள சந்தர்ப்பங்கள் ஏராளம். இக்கண்ணோட்டம் - பாராமுகம் - குறுகியது. உண்மையான ஆத்மாவை மேல் மனத்திற்குக் கொண்டு வரலாம். வலியும், சந்தோஷமும் அகந்தை ஏற்படுத்திய வரையறையான அம்சங்கள். உண்மையான ஆத்மா அகந்தையை விலக்கிச் செயல்படலாம். அது ஆனந்த உணர்வை உட்கொண்ட எல்லா உணர்வுகளையும் தன்னுட்கொண்டது. அதன் ஆனந்தம் குறிப்பானதும் பொதுவானதுமாகும். அதாவது வலி எழுந்தவுடன் உண்மையான ஆத்மாவால் அதனின்று பொதுவான ஆனந்தத்தைக் காணமுடியும். இயற்கை எழிலைக் காண்பவனால் இதைச் செய்ய முடியும். நமக்கு மட்டமான பயங்கரமான வெறுக்கத்தக்க காட்டுமிராண்டியான தாழ்ந்த காட்சிகளுண்டு. இயற்கை எழிலை காண்பவனுக்கு அதில் சந்தோஷம், அன்பு, அழகு தெரிகிறது. அவன் எதையும் மறுப்பதில்லை, விலக்குவதில்லை. எல்லா உணர்வையும் ஏற்று அவற்றுள் சந்தோஷம் காண்கிறான். கவிஞனும், கலைஞனும் அதைக் காண முடிகிறது. பிரபஞ்ச ரூபத்தின் ரஸத்தை அவர்களால் காண முடிகிறது. அவர்கட்கு அது அழகுணர்ச்சி. கலைஞனுக்கு அழகு ரூபத்தின் எல்லைக் கோடாகத் தெரிகிறது. அது உள்ளுணர்வில் எழுவது. அது பவர். எளிய மனிதன் அதனின்று விலகிப் போகிறான். சந்தோஷம் மட்டும் அவனறிவது. ஞானியும் அதைச் செய்கிறான். அழகை அனுபவிப்பவனும் அதை அறிய முடிகிறது. இறைவனை அன்பால் அறிபவன் எங்குப் பார்த்தாலும் அழகைக் காண்கிறான். ஆன்மீகவாதி, அறிஞன், உணர்ச்சியுள்ளவன், அழகை உணர்பவன் அனைவரும் இவற்றைக் காண்கின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் செய்கின்றனர். அழகு, அன்பு, சந்தோஷம் அவர்கட்குக் குறி என்பதால் அவர்கள் இறைவனைத் தேடுவதாக நாம் அறிவோம். அகந்தையும் ஆசையை நாடும் ஆத்மாவும் அனைத்தையும் மாற்றி விடுகின்றன. அகந்தையின் வலிமை, ஆசையின் ஆத்மாவின் பலஹீனம், இவற்றை எதிராக மாற்றுகின்றன. எதிரான அனுபவம் எழுகிறது. அது உடலைச் சந்தோஷப்படுத்தி, உணர்வுக்குச் சந்தோஷம் கொடுத்து, எதிரான துன்பத்தை அழைக்கிறது. அதனால் வலியும் சந்தோஷமும் எழும். அவை எழுந்தபின் இறைவனுக்குரிய முழு தத்துவம் எடுபடாது. அது முடியாது. அசுரத்தனமானது, வெறுக்கத்தக்கது. பொதுவான உணர்வைக் கலையும் விஞ்ஞானமும் அறியும். அகந்தை அதை அறியாது. விஞ்ஞானம் மட்டும் பொதுவான உணர்வை அறியவில்லை. சில அரைகுறையான ஆன்மீகவாதிகளும் அதை அறிவர். சில சமயங்களில் நம் புற உணர்வு சில ஆசைகள், பண்புகளில் அதிக ஆர்வம் காட்டும். பொதுவான உணர்வு தொந்தரவு செய்யாவிட்டால், நாம் அதை அனுமதிப்போம். இது உயர்ந்த சுதந்திரமான நேரம். அதற்கென தேவைப்படும் அளவோடுள்ள சமத்துவம் தேவை. மற்ற இடங்களில் அகந்தையின் அடிப்படை தொடரும். முன்னேற்றம் ஒரு குறிப்பிட்ட ஜீவியத்திற்குரியது. தாழ்ந்த இடங்களில் நம் அடிப்படை முழுவதுமாக மாற வேண்டும். அகந்தைக்கு அது முடியாது. ஆசையின் ஆத்மா பொது உணர்வை அனுமதிப்பதில்லை.

நம் உண்மையான ஆத்மா நம்முள் இரகஸ்யமாகவுள்ளது. நாம் அதை அடி மனம் என்கிறோம். அது கருத்தைத் தவறாகப் புரிந்து கொள்ள உதவாது. அடி மனம் என்றால் மேல் மனத்திற்கு அடியில் எனப் பொருளாகும். ஆத்மா அங்கில்லை. மனம், வாழ்வு, உடல் அஞ்ஞானத்தாலானவை. அவற்றின் பின் தடித்த திரையொன்றுள்ளது. ஆழ்ந்த இதயக் கோவில் அத்திரையின் பின் அமைந்துள்ளது. உண்மையான ஆத்மா அங்குள்ளது, மனத்தில் அடியிலில்லை. உண்மையில் ஆத்மா அடி மனத்திற்குரியதல்ல. இத்திரைக்குப் பின் அமைந்துள்ளது. இதுவே திரையிடப்பட்ட சைத்திய புருஷன். இது இறைவனுடைய தழல். நம்முள் என்றும் எரிவது. இதை அணைக்க முடியாது. நம்முள் பிரம்மமான ஆத்மா தன்னையறியாதது, இருண்டுள்ளது. அது நம் மேல் மன இயற்கையை இருளாக்குகிறது. இந்த இருளும், குருட்டுத்தனமும் சைத்தியத் தழலை உள்ளே அணைக்க முடியாது. சைத்தியம் இறைவனில் பிறந்தது. அறியாமையுள் ஜோதியாய் உறைவது. அறியாமையுள் தழல் ஞானமாகும் வரை வளரும். மறைந்துள்ள சாட்சி, மறைந்துள்ள வழிகாட்டி, நம்மைக் கட்டுப்படுத்துபவன் அவன், அதுவே சாக்ரடீஸ் கூறிய கடவுள். உள்ளுறை ஜோதி. அசரீரி, இரகஸ்யமான ரிஷி. பிறவியிலிருந்து அடுத்த பிறவி வரை வருவது அது. அழியாதது. மரணத்தாலும் அழிவாலும் ஊழலாலும் தீண்டப்படாதது. இறைவனின் பொறி தன்னை இழக்க முடியாதது. ஆத்மன் எனவும் சிருஷ்டியில் பிறக்காத பிரம்மம் எனவும் நாம் கூறுவதில்லை இது. நாம் கூறும் பிரம்மம் மனித வாழ்வின் தலைவன். பிரபஞ்சத்தையும், அதைக் கடந்த பிரம்மத்தையும் நம்முள் அறியும் பிரம்மம் அது. இருப்பினும் அது இயற்கையில் பிரம்மத்தின் பிரதிநிதி. அதுவே மனித ஆத்மா சைத்திய புருஷன் என்பது. அது மனம், வாழ்வு, உடலை ஆதரிக்கிறது. மனம், வாழ்வு சூட்சும உடலின் பின்னாலுள்ளது. அது கவனிக்கும். வளர்ச்சியையும், அனுபவத்தையும் கவனித்து அதன் பலன் பெறும். அவை மனிதனுடைய தனி சக்தி. அது ஜீவனுடைய ஜீவன். அதன் உண்மை அம்சம் திரையிடப்பட்டுள்ளது. அதன் மேலெழுந்த அம்சங்கள் இணைந்து ஒரு அந்தஸ்து தருகிறது. தற்காலிகமான அம்சங்களை வெளியிடுகின்றது. அவை நம் புற மனித அம்சம். நாம் அதை நாம் என அறிவோம். இது ஆழ்ந்து உள்ளேயுள்ளது. இதுவே நம்முள் சைத்திய புருஷனாக உருவாகிறது. அது சைத்திய புருஷனாக வெளிப்படுத்தப்படுகிறது. அது பிறவிகளில் தொடர்ந்து மாறி, வளர்ந்து, பிறவிக்குப் பிறவி வளர்கிறது. ஒரு பிறவியினின்று அடுத்த பிறவிக்குச் செல்லும் யாத்ரீகன் இவன். நம் இயற்கையின் அம்சங்கள் அது புறத்தில் அணிந்த ஆடை. அது பல்வேறாக உள்ளது, மாறுவது. சைத்திய புருஷன் மனம், வாழ்வு, உடல் வழி மறைமுகமான, பகுதியான, மறைந்துள்ள செல்வாக்கே பெற்றது. இப்பகுதிகளைச் சைத்திய புருஷன் தன்னை வெளிப்படுத்தும் கருவியாக வளர்க்க முயல்கிறது. அவற்றின் பரிணாமத்தால் அது நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளது. அறியாமையான மனிதனை தெய்வீக ஜீவியத்தின் ஜோதியை நோக்கி வழி நடத்தும் இலட்சியம் சைத்திய புருஷனுடையது. அறியாமையில் பெறும் எல்லா அனுபவ சாரங்களையும் அது சேகரம் செய்கிறது. அவற்றிலிருந்து இயற்கையின் ஆத்மா வளரும் கருவை உருவாக்குகிறது. மீதியை கருவிகளின் எதிர்கால வளர்ச்சிக்காக விட்டு விடுகிறது. ஜோதிமயமான இறைவனாவதே இலக்கு. அதுவரை சைத்திய புருஷன் இக்கருவிகளைப் பயன்படுத்துகிறான். இதுவே நம்முள் உள்ள இரகஸ்ய சைத்திய புருஷன். மனசாட்சி என நாம் அறிவதைக் கடந்து ஆழத்தில் உள்ள உண்மையான மனசாட்சி இதுவே. நாம் மனசாட்சி என்பது நியாயவாதி ஊரையொட்டி மனசாட்சி என உருவாக்கியது. சுமுகம், அன்பு, அழகு, சத்தியம், நியாயத்தை இது நாடுகிறது. இவை இயற்கையில் இறைவன் வெளிப்படும் வகை. அடிப்படையான விஷயங்கள் நம்முள் உறுதிப்படும் வரை இம்மனசாட்சி தொடரும். சாது, சாமியார், மகான், ரிஷி என நம்முள் எழுவது இதுவே. இது முழு வளர்ச்சியடைந்தவுடன் பிரம்மத்தையும் இறைவனையும் நாடும். நம்மை உயர்ந்த ஆனந்தம், அன்பு, அழகு, நல்லது, சத்தியத்திடம் அழைத்துச் செல்கிறது. இவை இறைவன் எட்டும் அகன்று உயர்ந்த சிகரங்கள். நம்முள் பிரபஞ்ச ஒருமை, ஆன்மீக அனுதாபத்தை இவை ஸ்பர்சிக்க உதவும். மாறாகச் சைத்திய புருஷன் திறனிலும், சுபாவத்திலும் வலுவற்றவனாக இருக்கலாம். மனம் வேகமாக ஒளிமயமானதாக இருக்கலாம். இதயமும், நரம்பு உணர்ச்சியும் கடினமாக, வலுவாக ஆட்சி செய்யலாம். வாழ்வின் சக்தி ஆட்சி செய்து வெற்றிகரமாகச் செயல்படலாம். அல்லது உடல் வாழ்வு அதிர்ஷ்டமாகச் செறிந்து பார்வைக்கு வெற்றி பெறும் தலைவனாக இருக்கலாம். புறத்தில் ஆசையின் ஆன்மா வேஷதாரியான சைத்திய புருஷன். மேற்கண்ட வழிகளில் இது ஆள்கிறது. நாம் இதைத் தவறாக உண்மையான ஆத்மாவுக்கு அம்சமாகக் கொள்கிறோம். நமக்கு இது ஆன்மீக அனுபவம் என்ற பொக்கிஷம். இதன் சொல்லையும், ஆர்வத்தையும் நம் உண்மையான ஆத்மாவின் ஆர்வம் என நாம் தவறாகக் கொள்கிறோம். அதே போல் அதன் கருத்து, இலட்சியம், ஆசை, ஆர்வம் ஆகியவற்றை நாம் தவறாக அறிகிறோம். ஆன்மீக அனுபவத்தை நோக்கி உயர்வது நம் இலட்சியம். நம் வாழ்வு உண்மையான ஆத்மாவின் பிம்பமாக வடிக்கப்பட நாம் விரும்புகிறோம். ஆத்மாவின் பிரதிபிம்பம் சரியான, முறையான, அழகானவை. இவ்வகையில் முடிவில் முழு இயற்கையும் வாழ்வின் உண்மை இலட்சியத்தை நாடும். இதற்கு இரகஸ்யமான சைத்திய புருஷன் வெளிவர வேண்டும். அது ஆசையை விலக்கி அதனிடத்தில் அமர வேண்டும். முழுமையாக நேராக ஆட்சி செலுத்த வேண்டும். பகுதியாக மனம், வாழ்வு, உடலின் பின்னின்று புற வாழ்வை நடத்துவது போதாது. அதுவே உச்சகட்ட வெற்றி.

வெளிவரும் சைத்திய புருஷனே எல்லாம். அதனால் பூவுலகில் வானுலக வாழ்வை ஏற்படுத்தலாம் என நாம் நினைக்கலாம். நாம் சைத்திய புருஷனை முன்னுக்குக் கொண்டு வருவதுடன் அவன் நம் வாழ்வை ஆளும் உரிமை தர வேண்டும். நாம் எதிர்பார்க்கும் எல்லா நிறைவுகளும் கிடைக்காமற் போகலாம். இதெல்லாம் நடப்பதால் சத்திய ஜீவியமே தேவையில்லையெனக் கருதலாம். தெய்வீக அந்தஸ்தும் தெய்வீகச் சிறப்பும் நம் இலக்கு. இதைச் சாதிக்க சத்திய ஜீவிய சூழல் தேவையென நாம் அறிவோம். அது குறிக்கிட்டுச் செயல்பட்டால் மட்டுமே இது நடக்கும். அத்துடன் சத்திய ஜீவியத் தத்துவம் இந்த இலட்சியத்தைப் பூர்த்தி செய்ய அவசியம் எனவும் நாம் அறிவோம். ஆனால் சைத்திய புருஷனே அனைத்தையும் சாதிக்க முடியும் எனத் தோன்றுகிறது. நம் முழு வாழ்வு திருவுருமாறத் தேவைப்பட்ட திருவுருமாற்றங்களில் சைத்திய புருஷ திருவுருமாற்றம் அவசியம் என அறிகிறோம். சைத்தியத் திருவுருமாற்றம் மட்டும் போதாது. முதலாவதாக சைத்திய புருஷன் இயற்கையின் ஆத்மா. அது நம் தெய்வீக ஜீவனின் கட்டங்களை நமக்குத் திறந்து காட்டும். தெய்வீக ஜீவனின் ஜோதியையும், பவரையும் பெற்றுப் பிரதிபலிக்கும் திறனுடையது சைத்திய புருஷன். ஆனால் நம் முழு திருவுருமாற்றம் நடைபெற நாம் பிரபஞ்சம் முழுவதும் பரவ வேண்டும். மேலும் அதைக் கடந்து அடுத்த கட்டத்தையும் - பிரம்மத்தையும் - அடைய வேண்டும். எனவே மேலும் ஆன்மீகத் திருவுருமாற்றமும் தேவை. ஆனால் சைத்திய புருஷன் சத்தியம் உருவாகும் நிலையை ஏற்படுத்த வல்லது. அத்துடன் அது திருப்திபடலாம். அது அழகு, நல்லதாக இருக்கலாம். சைத்திய புருஷன் அங்கேயே தங்கிவிட முடிவு செய்யலாம். அடுத்த கட்டமும் போகலாம். அங்கு அது உலகத்தின் ஆத்மாவுக்கு உட்படலாம். இது செயலற்ற அடிமைத்தனம். இவ்வழி சைத்திய புருஷன் பிரபஞ்ச வாழ்வைப் பிரதிபலிக்கும். மேலும் அது பிரபஞ்ச ஜோதி, பவர், ஜீவியம், ஆனந்தத்தைப் பிரதிபலிக்கும். இதனால் பிரதிபலிப்பதை முழுவதுமாகப் பெற்றதாகாது. சைத்திய புருஷன் பிரபஞ்ச ஜீவியத்துடன் இணையக்கூடியது. அது புல்லரிப்பது. புல்லரிக்கும் நேரம் ஐக்கியம் பூர்த்தியாகியிருக்கும். ஞானத்திலும் உணர்விலும் ஐக்கியம் ஏற்படுகிறது. உடலில் உணர்வு ரசிக்கும் நிலையும் ஏற்படும். இருந்தாலும் இவ்வளவும் செயலற்ற நிலையில் பெறுவதாகவே அமையும். உலகில் செயல்பட முழு அதிகாரம் தராது இது. பிரபஞ்சத்தின் பின்னாலுள்ள அசையாத ஆத்மாவுடன் அது இணையலாம். இங்கும் அது உலக சலனத்தினின்று பிரிந்து நிற்கலாம். அப்படியானால் அது தன் தனித்தன்மையை ஆதியிலேயே இழந்துவிடும். அந்த ஆதிக்குத் திரும்பலாம். அதனுள் முடிவான இலட்சியம் இயற்கையைத் தெய்வீக சித்தி பெறச் செய்வதேயாகும். இறைவன் பிரம்மமானதிலிருந்து சைத்திய புருஷன் பிறந்தான். அது இயற்கையை விட்டு மீண்டும் மௌனமான இறைவனையே அடையலாம். மௌனமான பிரம்மத்தை அடையலாம். அது உச்சகட்ட ஆன்மீகச் சலனமற்ற நிலை. சைத்திய புருஷன் இறைவனின் சாஸ்வதமான பகுதி. இது இறைவனின் அம்சம். இறைவனது சட்டம் அனந்தமான சட்டம். அதன்படி பகுதியை முழுமையிலிருந்து பிரிக்க முடியாது எனக் கூறும். உண்மையில் பகுதியே முழுமை. புறத்தோற்றத்தில் பகுதி முழுமையில்லை. புறத்தோற்றத்தில் பிரிந்த நிலையில் அது பெறும் சுய அனுபவம். அது உண்மையை அறிந்து அதனுள் மூழ்கலாம். தன் தனித்தன்மையை இழந்து அது கரைந்ததாகத் தெரியலாம். அஞ்ஞானப் பெருவெள்ள இயற்கையில் சைத்திய புருஷன் சிறு கரு. உபநிஷதம் அது கட்டை விரல் பரிமாணம் என்று கூறுகிறது. ஆன்மீக அனுபவத்தால் அது பெருகும். முழு உலகையும் அதன் மனம், நெஞ்சத்தையும் அது தழுவலாம், தழுவி ஒருமையை உணரலாம். அல்லது காலத்திற்கு உடனுறைபவனை அறியலாம். அவன் முன்னிலையில் நிரந்தரமாக வாழ முடிவு செய்யலாம். அது அழியாத ஐக்கியமான ஒருமையாகலாம். காந்தனும் காதலுமான சாஸ்வதமான உறவு அது. எல்லா ஆன்மீக அனுபவங்களிலும் இதுவே அழகு நிறைந்து ஆத்ம நிறைவு தருவது. இவையெல்லாம் ஆன்மீக சுய அனுபவத்தின் அற்புத முடிவுகளாகும். ஆனால் இதுவே முடிவல்ல, மேலும் பெருக முடியாத முடிந்த கட்டம் இதுவல்ல. மேலும் சாதிக்க முடியும்.

மனத்திற்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடையேயுள்ள நிலைகளை பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஆன்மீக மனநிலை என அழைக்கிறார். மேற்சொன்ன அனுபவம் அந்த ஆன்மீக மனநிலைக்குரியது. மனம் தன் எல்லையைக் கடந்தால் அது எழுப்பும் அலைகள் சலனமாக செயல்படும். மனத்தைக் கடந்தால் மகிழ்ச்சி பொங்கும். ஆன்மீக மனநிலைகள் அவை எனினும், அவை அடிப்படையில் மனமேயாகும். அவை ஆன்மாவின் அற்புதங்கள். ஆனால் சத்திய ஜீவியமில்லை. மனத்தின் சுபாவம் பிரிவினை. நாம் நம் மனத்தை அறிவோம். அதன் உச்சகட்டம் தெய்வீக மனம். அங்கும் மனம் பிரிவினையில் ஈடுபடுகிறது. அனந்த ஜீவனின் அம்சங்களை அது எடுத்துக் கொள்கிறது. அதன் ஒவ்வொரு அம்சத்தையும் தனியான முழுமையாகக் கருதுகிறது. ஒரு அம்சத்தில் மனம் முழுமையை உணர்கிறது. அனந்தனின் இரு அம்சங்களை எடுத்து அவற்றை எதிரெதிரானதாக்குகிறது. அது மட்டுமல்ல. அது போன்ற பல நிலைகளை அது தொடராக ஏற்படுத்துகிறது. மனம் இறைவனின் மௌனத்தை அவன் செயலுக்கு எதிரானதாகச் செய்கிறது. அசையாத பிரம்மத்தை எடுத்துச் செயல்படும் பிரம்மத்திற்கு எதிரானதாகக் கருதுகிறது. குணங்களற்ற அசையாத பிரம்மத்தை மனம் பிரித்து குணங்களாலான செயல்படும் பிரம்மத்திற்கு எதிராக அமைக்கின்றது.

வாழ்வின் ஈஸ்வரன் ஜீவன், ஜீவியம் என்பது அதே போன்ற எதிரெதிரான இரட்டைகள். இறைவன் என்ற மனிதனைப் பொதுவான தூய்மையான வாழ்வுக்கு எதிராக நிறுத்துகிறது. மனம் ஒன்றிலிருந்து வெட்டிப் பார்த்து மற்றதில் ஆழ்ந்து கலக்கவல்லது. அது போன்ற ஒவ்வொரு அம்சமும் மனத்திற்கு வாழ்வின் முழுமையான ஒரே அம்சமாகும். மனிதனைத் தனியாகவும் அவன் பொதுத்தன்மையைத் தனியாக வேறாகவும் பிரித்துக் காட்டவல்லது மனம். காந்தனை அன்பின் ஒரே வெளிப்பாடாகவும் அன்பை காந்தனின் ஒரே வெளிப்பாடாகவும் மனம் காட்டவல்லது. ஜீவன்களை மனம் பொதுவான வாழ்வின் குறிப்பான சக்திகளாகக் காணவல்லது. அல்லது பொதுவான வாழ்வு நிலையை அனந்தனின், ஒரே ஜீவனின் ஒரே அம்சமாகக் காட்டக்கூடியது மனம். ஆன்மீக இலட்சியத்தில் உயர்ந்த இலட்சியத்தை நோக்கிச் செல்லும் பாதை இது போன்ற பிரிந்த நிலைகளைப் பின்பற்றும். ஆன்மீக மன நிலைகளின் செயல்கட்குப் பின் உயர்ந்த அனுபவமான சத்திய ஜீவிய அனுபவம் உண்டு. அங்கு இந்த எதிர்ப்புகள் மறையும். பகுதிகளான அம்சங்களை விட்டு ஒழித்த நிலையது. சாஸ்வதமான அனந்தமான ஜீவன் உயர்ந்த நிலையில் செறிந்த முழுமையுடையது. அது அனைத்தும் இணைந்த சித்தி. இதை நாம் நம் இலட்சியமாகக் கொண்டோம். சத்திய ஜீவியத்திற்கு உயர்ந்து அது நம் சுபாவத்துள் வந்து நம் வாழ்வு பெறும் முழுமை அது. சத்திய ஜீவிய திருவுருமாற்றம் ஆன்மீக மாற்றத்துள் நுழைந்து தன்னைப் பூர்த்தி செய்து கொள்கிறது. சத்திய ஜீவிய திருவுருமாற்றத்தால் அது இணைக்கப்பட்டு, உயர்த்தப்பட்டு, தான் உள்ள நிலையைக் கடக்க வேண்டும். நாம் உயரும் முயற்சியின் சிகரத்தை அது எட்டும். சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனுக்குப் பிரிந்த எதிரெதிரான மற்ற அம்சங்களுண்டு. இவ்விரு எதிரான அம்சங்களிடையே சிறப்பான சுமுகத்தை நிலைநாட்ட சத்திய ஜீவிய சக்தியால் முடியும். நம் அறியாமையால் இந்த அம்சங்கள் எதிரானதாகத் தோன்றுகின்றன. மனிதன் உலகில் ஏற்ற வாழ்வில் இவ்விரு அம்சங்களும் ஆன்மீக அம்சம். உலகின் நடைமுறைக்குரிய அம்சம். இயற்கை நம் அறியாமையில் செயல்படுகிறது. மனநிலைகட்குரிய செயல்களை நடத்த இயற்கை நம் அகந்தையின் மையத்தை நாடுகிறது. ஆன்மீக மையம் இரகஸ்யமானது. இயற்கை அதை நாடவில்லை. அகந்தை ஆன்மாவின் பிரதிநிதி. அகந்தையை மையமாகக் கொண்டு செயல்படுவதே நம் வாழ்வு. சிக்கலான, முரண்பாடான, இரட்டையான, தொடர்பற்ற நிகழ்ச்சிகளிடையே நாம் வாழ்கிறோம். இவை உலகின் இன்றைய நிலை. நம் அனுபவங்களையும் உலக சக்திகளுடன் உள்ள தொடர்புகளையும் நாம் அகந்தையைச் சுற்றி அமைக்கிறோம். அகந்தை மையம் மலை போல் நம் வாழ்வைப் பாதுகாக்கிறது. அனந்தத்திடமிருந்தும், பிரபஞ்சத்திடமிருந்தும் அகந்தை நம்மைக் காப்பாற்றுகிறது. ஆன்மீக மாற்றம் எழும்பொழுது இந்தப் பாதுகாப்பை நாம் கைவிட வேண்டும். அகந்தை மறைய வேண்டும். மனிதன் பொதுவான பரந்த மனநிலையில் கரைகிறான். இப்பரந்த பொதுவான மனநிலையில் செயலுக்குரிய முறையான செயல்படும் சட்டமில்லை. அதன் இரகஸ்யத்தை நாமறியோம். பொதுவாக மனிதன் இரண்டாகப் பிரிகிறான். ஒன்று உள்ளேயுள்ள ஆன்மீகப் பகுதி. அடுத்தது வெளியில் உள்ள இயற்கையான பகுதி. உள்ளே தெய்வீக சித்தி பூரண சுதந்திரமாக வீற்றுள்ளது. இயற்கையின் பகுதிகள் பழைய சுபாவத்தின் செயலைத் தொடர்ந்து செய்கின்றன. கடந்த கால சக்திகள் அதன் செயலை இவற்றிற்குக் கொடுத்துள்ளது. இயற்கையும் சுபாவமும் அதைத் தொடர்கின்றன. உள்ளே அனைத்தும் பிரம்மத்தால் ஜோதிமயமாக இருக்கும். அளவுக்குட்பட்ட மனிதன் முழுவதுமாகக் கரைவான். அத்துடன் பழைய அகந்தை மையமும் கரையும். இருந்தாலும் வெளியில் சுபாவம் தெளிவற்ற முரண்பாடுடையதாக இருக்கும். நாம் நம் செயலில் - புறத்தில் - ஜடமாக செயலற்று போய்விடுகிறோம். சந்தர்ப்பத்தாலோ, சக்தியாலோ நாம் செயல்படுகிறோம். அது சுயமான ஆத்ம சலனமாகாது. உள்ளே ஜீவியம் ஒளி பெறலாம். உள்ளே நாம் உலகையறியும் குழந்தையாகலாம். இக்குழந்தைக்கு ஆத்ம ஞானமுண்டு. ஆழ்ந்த அமைதியும் தெளிவும் உள்ளே செயல்படும்பொழுது வெளியில் எண்ணமும் செயலும் முன்னுக்குப்பின் முரணானதாக இருக்கும். தூய்மையும் நிதானமும் உள்ளே நிறைந்துள்ள பொழுது வெளியில் கட்டுக்கடங்காத ஒழுங்கீனமிருக்கும், அல்லது புறச் செயலில் ஒழுங்கான செயல்படும் முறையிருக்கலாம். அது மேலெழுந்த சாட்சியான அகந்தையின் செயலாக இருக்கலாம். அதை உள்ளேயுள்ள ஜீவன் ஏற்காது. அல்லது மனம் பெற்ற செயலின் சக்தியாக அது அமையலாம். அதனால் உள்ளே பெற்ற ஆன்மீக சித்தியைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியாமற் போகலாம். ஆன்மீக நிலைக்கும் மனத்தின் செயலுக்கும் இடையே இருக்க வேண்டிய நிதானமிருப்பதில்லை. அதிகபட்சம் உள்ளிருந்து ஞானம் வழிகாட்டும். அது ஒளியாலானது. இருந்தாலும் அவனது புறச்செயல்கள் மனம் வாழ்வின் குறையுடையதாக அமையும். திறமையற்ற மந்திரிகளையுடைய அரசன் நிலை போன்றது அது. அல்லது ஞானத்தை வெளியிடும் அறியாமையாகத் தோன்றும். அக வாழ்வில் உள்ள சுமுகம் புற வாழ்வின் செயல்களில் வெளிப்பட வேண்டும். சத்திய ஜீவியம் நம் வாழ்வில் வருவதால் அது நடக்கும். ஞானத்தின் சத்தியமும், மன உறுதியின் சத்தியமும் சிறப்பாக இணைவதால் இது சாத்தியமாகிறது. அறியாமையின் பண்புகளை சத்திய ஜீவியத்தால் அறிவின் பண்பாக்க முடியும் என்பதால் இது நடைபெறுகிறது.

நம் ஜீவனின் பகுதிகள் பூரணமடைய வேண்டும். அது சைத்திய புருஷனின் பூரணம். தெய்வீக மூலத்துடன் தொடர்பு கொள்வதால் அதைச் செய்யலாம். உயர்ந்த சத்தியத்தின் உண்மையை நாம் அங்குக் காணலாம். நமக்குரியது அது. இம்மாற்றத்திற்கு அது தவிர்க்க முடியாதது. ஏற்கனவே கண்டது போல், பூரண முழுமையை இங்குக் காண சத்திய ஜீவியத்தால் மட்டும் முடியும். இங்குள்ள நெருக்கம் சட்டபூர்வமான ஐக்கியம். வாழ்வின் ஒருமையுடன் தாழ்ந்த மனித வாழ்வை இணைப்பது சத்திய ஜீவியம். சத்திய ஜீவியத்தில் பூரணமாக இணையும் ஜோதியுண்டு. பூரணப்படுத்தும் சக்தி அங்குள்ளது. ஆனந்தலோகத்துள் அனந்தமாக நுழையும் உரிமையது. சைத்திய புருஷன் ஆதியான ஆனந்தமய புருஷனிலிருந்து வந்தவன். ஜோதியும் சக்தியும் அதை மீண்டும் ஆதிக்கு உயர்த்தும். இன்ப, துன்பங்களினின்று அது அவ்வழி விடுபடும். மனம், உயிர், உடலின் சுருக்கும் பயத்தினின்று அது மனிதனை விடுவிக்கும். உலக வாழ்வின் அம்சங்களைத் தெய்வீக ஆனந்த அம்சங்களாக்கவல்லது அது.

பாராவின் தலைப்பு:

  1. வாழ்வு உயர்ந்து ஆனந்தத்தை நாடுகிறது.
  2. ஆனந்தத்தைக் கண்டு அதை ஆட்கொள்வது வாழ்வின் பூரண நோக்கம்.
  3. ஆனந்தம் எந்த உப தத்துவம் மூலம் வெளிப்படுகிறது என்பதை காண்போம்.
  4. சைத்திய புருஷன் உண்மையான ஆத்மா. அது இருப்பவனை ஆத்மா என்கிறோம்.
  5. ஆனந்தம் மேல் மனத்தில் சிதைந்து எதிராகிறது.
  6. மனம் ஆனந்தத்தை 3ஆகப் பிரிக்கிறது.
  7. அடி மனம் மேல் மனத்தை நிர்ணயிக்கும்.
  8. ஆழ் மன ஆத்மா ரஸத்தை அறியும்.
  9. ஆசை தன் நிலையிலேயே உழலும்.
  10. ஆசைக்குப் பொதுவான உணர்ச்சியில்லை.
  11. சைத்திய புருஷன் வெளிவருவது உச்சகட்ட வெற்றி.
  12. சைத்திய புருஷனைக் கடந்த அற்புதமும் உண்டு.
  13. சத்திய ஜீவிய திருவுருமாற்றம் முடிவு.
  14. சத்திய ஜீவியம் அறியாமையை அறிவாக மாற்றவல்லது.
  15. சைத்திய புருஷன் ஆனந்தத்தில் உற்பத்தியானவன் மீண்டும் அதை அடைவது உலகம் தெய்வீகமயமாவது.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
பகவான் யோக வாழ்வின் காவியம் சாவித்ரி.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளே போய் உலகை அறிவது ஞானம்.
 
 
 
******

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அகம் அவசரமறியாதது.
 
 
******

 



book | by Dr. Radut