Skip to Content

2. வைத்திய செலவு

வைத்திய செலவு

நெடுநாள் இந்தியாவில் தங்கியிருந்த அமெரிக்க அன்பர் அமெரிக்கா திரும்பினார். வயிற்றுப்போக்கு வந்தால் இங்கு 2 அல்லது 3 மாத்திரை டாக்டர் கொடுப்பார். ரூ.200/-க்குள் முடியும். அங்கு போனபொழுது வயிற்றுப்போக்கு வந்தது. டாக்டரிடம் போனார். டெஸ்ட் பல செய்தனர். $ 500 பீஸ். மாத்திரை $ 100. வீட்டுக்கு வந்தபின் மேலும் ஒரு பில் $ 1500க்கு வந்தது. மொத்த செலவு ரூபாய் 25,000+5,000+37,500 = 67,500 ரூபாய். இது கற்பனைக்கும் எட்டாதது.

மஞ்சள்காமாலை வந்தால் ஆயுர்வேத டாக்டர் மூன்று வேளை கீழாநெல்லி சூரணம் தருவார். அன்று அதன் விலை ஒன்றரை ரூபாய். வேலைக்குப் போகலாம். லீவு போட வேண்டாம். மூன்று நாளில் குணமாகும். ஆஸ்பத்திரிக்குப் போனால் பல மருந்து தருவார்கள். ரெஸ்ட் முக்கியம் என்பார்கள். ஒரு மாதமாகும். குணமாவது நிலையில்லை. ஒரு அரசியல் தலைவரும், ஒரு MLAவும் மஞ்சள் காமாலையால் ஆஸ்பத்திரியில் இறந்தனர்.

டாக்டர்கட்கு டெஸ்ட் செய்வது முக்கியமாகிவிட்டது. எல்லா டெஸ்டும் செய்தபின்னரே வைத்தியம். ஒரு பெண்ணுக்குச் சளி விடவில்லை. இதயம், நுரையீரல், எக்ஸ்ரே, ஸ்கேன் செய்து கொடுத்த மாத்திரைகள் ஒரு மாதம் குணப்படுத்தவில்லை. வேறு டாக்டரிடம் போனார். "உங்களுக்கு அஜீரணம்' என்று கூறி மாத்திரை கொடுத்தார். ஒரு வாரம் சாப்பிட்டதில் குணம் தெரிந்தது. ஒரு மாதத்தில் குணமாயிற்று.

முறைகள் முக்கியம். டெஸ்ட் முக்கியம். ஆனால் டெஸ்ட்டை முக்கியமாக நம்பினால் ஒரு புது அம்சம் எழும். முறைகட்காக நாம் வாழ்வதாக முடியும். அந்த வழியில் அமெரிக்க டாக்டர் வயிற்றுப் போக்குக்கு 67,000/- ரூபாய் செலவு வைத்தார். இது பண விரயம். இம்முறையை மேலும் பின்பற்றினால் அடுத்த புதிய விஷயம் உற்பத்தியாகும். எந்த முறைக்கும் கட்டுப்படாத நிலைக்கு நோய் வந்து சேரும்.

டாக்டர் நோயாளியை அறிதல் அவசியம். நோயை அறிவதும் மருந்து புரிவதும் இரண்டாம்பட்சம். தோள்பட்டை வலிக்கு 70,000 ரூபாய் அப்பலோவில் செலவு செய்தவர் குணமாகவில்லையென உள்ளூர் டாக்டரிடம் அழைத்துச் சென்றார். இரண்டு வைட்டமின் மாத்திரை கொடுத்தார். ஜுரம் இறங்கியது.

  • டாக்டர் நோயாளியை அறிய வேண்டும்.
  • நோயை அறிவதாலும், மருந்தை அறிவதாலும் முறைகளின் முக்கியத்துவம் வளரும்.
  • நோய் குணமாகாது.

முறை முக்கியமானால் மனிதன் மூலையில் போய் உட்கார வேண்டும்.
அறிவு தெளிவு பெறுவது அவசியம்.

******



book | by Dr. Radut