Skip to Content

12. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

("அன்னையின் தரிசனம்" என்ற நூலிலிருந்து)

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

6. விட்டுப் போன கடன்

பல சந்தர்ப்பங்களில் நாம் நண்பர்களுக்கு உதவுகின்றோம்; அது போலவே அவர்களும் நமக்கு உதவுகின்றார்கள். நாம் கடன் பெறுகின்றோம்; கொடுக்கின்றோம். சில சமயங்களில் கணிசமான அளவில் கடன் கொடுக்கின்றோம். அதே போலக் கணிசமான பாக்கியையும் வசூல் செய்து விடுகின்றோம். சொற்பத் தொகையாக இருக்குமேயானால், அது கொடுக்கப்பட வேண்டியதாக இருந்தாலும், அதனை மறந்துவிடுகின்றோம். சில சமயங்களில் தொகை கணிசமாக இருந்தால்கூட அதை அலட்சியப்போக்காலோ அல்லது வேண்டும் என்றோ வசூல் செய்யாமல் இருந்துவிடுகின்றோம்; அல்லது வாங்கியதைத் திருப்பிக் கொடுக்காமல் இருந்துவிடுகின்றோம்.

இந்த விஷயத்தில் அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்க வேண்டிய கடன் ஒரு ரூபாயாக இருந்தால்கூட அதை மறக்காது உரியவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அது போலவே வசூல் செய்ய வேண்டிய கடன் மிகச் சிறிய தொகையாக இருந்தாலும், அதைக் கவனமாக வசூல் செய்துவிட வேண்டும். பிறருக்குச் சேர வேண்டியதை நாம் வைத்து இருந்தாலும், நமக்குச் சேர வேண்டியதைப் பிறரிடம் விட்டு வைத்திருந்தாலும், அப்பொருள் நம் அலட்சியப் போக்கால் பாதிக்கப்படுகின்றது. அதனால் நம்மை நாடி வர வேண்டிய பொருட்செல்வம் தடைப்பட்டுப்போகும்.

ஓர் அன்பரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி இதற்கு உதாரணமாக அமைகின்றது.

அந்த அன்பர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபொழுது ஒரு வங்கியில் கடன் வாங்கி, கல்லூரிக்காகும் செலவைச் சமாளித்து வந்தார். வேலைக்குச் சென்ற பிறகு கடனையும், அதற்கான வட்டியையும் கட்டிவிடுவதாக அவருக்கும், வங்கிக்கும் ஒப்பந்தம். வேலைக்குப் போவதற்கு முன்பே வாங்கிய கடனில் பாதியை அடைத்துவிட்டார் அவர். அவருடைய கல்லூரிப் படிப்பு முடிந்தது. அவர் கையில் பட்டத்தைத் தூக்கிக்கொண்டு வேலை தேடி அலைந்தார். அப்படி ஐந்தாறு வருடங்கள் அலைந்த பிறகு, அவருக்குத் தற்காலிக ஆசிரியர் வேலை கிடைத்தது. மாதங்கள் ஓடின. ஏதோ சம்பளம் வந்தது. ஆனால் அவர் வங்கியில் வாங்கிய கடன் பாக்கியைக் கட்டவில்லை; கட்ட முடியவில்லை.

இந்த நிலையில் ஓராண்டு சென்றது. அவருக்குக் கிடைத்திருந்தது தற்காலிக ஆசிரியர் வேலைதான். ஆனாலும் அவர் அந்த வேலை தொடரும் என்று நினைத்தார். அவர் நினைவில் விழுந்தது ஓர் இடி. திடீரென்று அவரைப் பணியிலிருந்து விடுவித்துவிட்டதாக அரசு உத்தரவு பிறப்பித்துவிட்டது. அவர் அந்தப் பணியில் தொடர்ந்து இருப்பதற்கு வாய்ப்பிருந்தும்கூட, அரசு அந்த வாய்ப்பைத் தருவதற்கு முன்வரவில்லை. ஆனாலும், அவர் விடுவதாக இல்லை. மறுபடியும் தம்மைப் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கைக்கு மேல் கோரிக்கையாக அனுப்பிக் கொண்டிருந்தார். பதில் இல்லை; பணியும் இல்லை.

அவருக்குப் பைத்தியமே பிடித்திருக்க வேண்டும். ஆனால் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம், அன்னையிடம் அவர் கொண்டிருந்த பக்தி. "வேலை கிடைக்க வேண்டும்" என்று அன்னையை அனவரதமும் பிரார்த்தித்தார். ஆனால் வேலை கிடைத்தபாடாக இல்லை. இப்படித் துன்பமாகச் சென்ற மாதங்கள் இருபது. அவருக்குக் கணத்திற்குக் கணம் கவலை, குழப்பம்.

எனக்கு அவரைத் தெரியும்; அவருடைய நிலையும் தெரியும். ஒரு நாள் நான் அவரைச் சந்தித்தபோது, "நீங்கள் அன்னையிடம் வேண்டிக்கொண்ட பிறகும் வேலை இல்லையே! எங்கோ ஒரு தடை இருக்கின்றது. அதனால்தான் வேலை கிடைக்கவில்லை. அதை அறிந்து நீக்கிவிட்டால் வேலை உடனே கிடைக்கும்'' என்றேன்.

அப்பொழுது அவர் நினைவுகூர்ந்து, தம்முடைய வங்கிக் கடன் பற்றியும், அதில் பாதி செலுத்தப்பட்டிருப்பதையும், மற்றொரு பாதி செலுத்தப்படாமல் இருப்பதையும் கூறினார்.

"அந்தக் கடனை நீங்கள் அடைக்காமல் விட்டதால்தான் உங்களால் பணியில் தொடர்ந்து இருக்க முடியவில்லை; வருவாயும் தடைப்பட்டு நின்றுவிட்டது. வேலை கிடைத்த பிறகு அந்தக் கடனை அடைத்துக் கொள்ளலாம் என்று இருக்க வேண்டாம். உடனே ஏதாவது ஏற்பாடு செய்து, கடனைச் செலுத்திவிடுங்கள். உங்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும்'' என்றேன்.

அவர் உடனே செயல்பட்டார். எப்படியோ பணத்துக்கு ஏற்பாடு செய்தார். கடன் கொடுத்த வங்கியோடு தொடர்புகொண்டார். கடனை முழுதுமாகத் தீர்க்கத் தயாராக இருந்ததால், வட்டியைத் தள்ளிக் கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறினார் வங்கி அதிகாரி.

அந்த அன்பர், "வங்கிக்குச் சேர வேண்டிய வட்டியைத் தள்ளிக் கொடுக்க வேண்டாம்'' என்று கூறி, கடன் தொகையையும், வட்டியையும் ஒரு பைசாகூடப் பாக்கி வைக்காமல் செலுத்திவிட்டார்.

அதைச் செலுத்திய ஒன்றரை மாதத்தில் அவருடைய வேலை திரும்பவும் கிடைத்துவிட்டது. "வேலை கிடைத்த பிறகு கடனைச் செலுத்திக் கொள்ளலாம்" என்று அசிரத்தையாக இல்லாமல், எப்பாடு பட்டோ பணத்தைத் தேடி, வங்கிக் கடனை அடைக்கத் தூண்டியது அவர் மேற்கொண்ட முயற்சி. அவருக்கு வேலை கிடைத்ததற்கு அந்த முயற்சியும் ஒரு காரணமாகும்.

தொடரும்....

********



book | by Dr. Radut