Skip to Content

09. அன்னை இலக்கியம் - குறுக்கு வழி

அன்னை இலக்கியம்

குறுக்கு வழி

சமர்ப்பணன்

பொன்னுலகம் ஒன்றை கவிதை மூலம் படைக்கும் முயற்சியில் சிந்தனைக்கடலில் மூழ்கி, முத்துக்களை எடுத்து நான் சொல்லச் சொல்ல என் ஒரே ரசிகையான ஆனந்தி எழுதிக் கொண்டிருந்தபோது, வெங்கட்டிடமிருந்து போன் வந்தது.

சினிமாப் பாடல்களை வெங்கட் பாடுவதைக் கேட்டுவிட்டு, அவன் அம்மா, "நீ அற்புதமாகப் பாடுகிறாய்'' என்று சொல்லிவைக்க, அன்றிலிருந்து திரை இசை உலகத்திற்கும், அவன் நண்பர்களுக்கும் கேடு காலம் பிடித்துவிட்டது. யாரைப் பார்த்தாலும் நான்கைந்து பாடல்கள் பாடிக் காட்டாமல் விடமாட்டான். அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள "பிரமாதம், பிரமாதம்'' என்று எல்லோரும் புகழவும், சில நாட்களாக சினிமாவில் பாட வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தான்.

"சந்துரு, நான் கேள்விப்பட்டது உண்மைதானா?'' என்று பரபரப்பான குரலில் கேட்டான் வெங்கட். "நீ என்ன கேள்விப்பட்டாய் என்பதை முதலில் சொல்'' என்றேன்.

"கவி மன்னர் காவியதாசனை உனக்கு நன்றாகத் தெரியுமாமே? இதை நீ என்னிடம் முன்பே சொல்லி இருக்கக் கூடாதா? அவரும் இசையமைப்பாளர் மெல்லிசை அரசர் விஸ்வமூர்த்தியும் நெருங்கிய நண்பர்கள் ஆயிற்றே! காவியதாசன் மூலம் விஸ்வமூர்த்தியைப் பிடித்து, நான் சினிமாவில் பாடி இருப்பேனே'' என்றான் வெங்கட்.

"அது சுத்தப் புரளி. நான் காவியதாசனை ஒரு முறைகூட நேரில் பார்த்தது இல்லை. அவர் என் சிநேகிதி ஆனந்தியின் தூரத்து சொந்தக்காரர். அவ்வளவுதான் தெரியும்'' என்றேன்.

"அடப்பாவி, அது போதாதா நமக்கு? இதோ இப்போதே வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வருகிறேன். நாம் ஆனந்தியைப் போய் பார்க்கலாம்'' என்று கூறிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் வெங்கட் போனை வைத்துவிட்டான். எங்கே நான் மறுத்துப் பேசிவிடுவேனோ என்ற பயம்போலும்.

என் முகவாட்டத்தைக் கவனித்த ஆனந்தி, "போனில் யார் பேசினார்கள் சந்துரு? என்ன பிரச்சனை?'' என்று கேட்டாள்.

"விஸ்வமூர்த்தி இசையமைப்பில் சினிமாவில் பாட உன் மாமா காவியதாசனின் சிபாரிசு வெங்கட்டிற்கு வேண்டுமாம்'' என்றேன்.

"தாராளமாகச் செய்யலாமே'' என்றாள் ஆனந்தி.

"என்ன செய்யலாமே? இவனெல்லாம் பாடகனா? ஆசை இருந்தால் போதுமா? திறமை வேண்டாமா?'' என்று கேட்டேன்.

"திறமை யாரிடமிருந்தாலும் விஸ்வமூர்த்தி நிமிடத்தில் கண்டுபிடித்துவிடுவார்'' என்றாள் ஆனந்தி.

சிறிது நேர மௌனத்திற்குப் பின், "ஆனந்தி'' என்றேன்.

"அவளுக்கு என்னவாம்?'' என்று கேட்டாள் ஆனந்தி.

"என் மனதில் இருப்பதை சொல்லிவிடுகிறேன். காவியதாசனுக்கு இலக்கியம், அரசியல், சினிமா என்று எல்லா இடங்களிலும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. அவர் உதவியைக் கொண்டு பல விஷயங்களை எனக்காகச் செய்து கொள்ளலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறேன். அவரிடம் வெங்கட்டிற்கு சிபாரிசு வாங்கிவிட்டால், நாளை என் தேவைக்கு நான் என்ன செய்வது?'' என்று ஆனந்தியிடம் மனதில் உள்ளதை உள்ளபடி சொன்னேன்.

"இதுதான் பிரச்சனையா?'' என்று கேட்டு புன்னகைத்த ஆனந்தி, "காவியதாசன் மிகவும் நல்லவர். எத்தனை முறை கேட்டாலும் உதவுவார்'' என்றாள்.

"அதற்காக நாம் எத்தனை முறை அவரிடம் வெட்கமில்லாமல் போய் நிற்பது? தனக்கு மிஞ்சிதான் தான, தர்மம் என்பது உனக்குத் தெரியாதா?'' என்று கேட்டேன்.

"நாம் கொஞ்சம் வித்தியாசமாக யோசிக்கலாமே, பிறருக்கு மிஞ்சியதுதான் நமக்கு வரவேண்டும் என்று நினைத்தால் என்னவாம்?'' என்று கேட்டாள் ஆனந்தி.

"எனக்கு இருக்கும் ஒரே நல்ல வாய்ப்பை அவனுக்குத் தந்துவிட்டால் நான் என்ன செய்வது?'' என்றேன்.

"கவிஞரின் உறவு மட்டும்தானா நமக்கு வாய்ப்பு? வாழ்வும், உலகமும் எவ்வளவு பெரியவை! அவற்றில் நமக்கு எத்தனையோ வாய்ப்புகள் உண்டு'' என்றாள் ஆனந்தி.

"பார்வைக்குத் தெரியாத பலாக்காயைவிட கையில் இருக்கும் களாக்காய் மேலானது'' என்றேன்.

"சந்துரு, கொடுப்பதில் இருக்கும் இன்பம் பெறுவதில் இருக்கும் இன்பத்தைவிட பல மடங்கு அதிகமானது. நாம் பொதுவாக யாருக்கும் எதையும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாகவோ, அல்லது அதன் மூலம் நமக்கு ஒரு இலாபம் வரும் என்ற கணக்கின் காரணமாகவோதான் கொடுக்கிறோம். அதனால்தான் நமக்குக் கொடுப்பதில் இருக்கும் இன்பத்தைப் பற்றி தெரியவில்லை'' என்றாள் ஆனந்தி.

"நீ பணக்காரி. மற்றவருக்கு எவ்வளவு கொடுத்தாலும் உன்னிடம் கோடிகோடியாக மீதமிருக்கும். அதனால் தைரியமாகத் தத்துவம் பேசலாம். என்னைப் போன்ற அன்னக்காவடிகள் இருப்பதைப் பத்திரப்படுத்திக் கொள்வதுதான் பிழைக்கும் வழி. கல்யாண விருந்தில் முதல் பந்தியில் சாப்பிடுவதுதான் புத்திசாலித்தனம். மற்றவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னால் நான் சாப்பிடுகிறேன் என்றால், நீர்மோரும், ஊறுகாயும்தான் மிஞ்சும். அதுகூட சந்தேகம்தான்'' என்றேன்.

"இப்படி எல்லாவற்றிலும் கணக்கு பார்ப்பதாலும், தவறு நடக்கும் என்று நம்புவதாலும்தான் எல்லாமே குறையாக இருக்கிறது'' என்று அலுத்துக் கொண்டாள் ஆனந்தி.

"அடுத்தவருக்கு நாமாகப் போய் உதவினால் உபத்திரவம் தான் வரும்'' என்றேன்.

"நல்ல மனதோடு, வாய்விட்டு உதவி கேட்டவர்களுக்கு நம்மால் முடிந்தவரை உதவி செய்வதில் தவறில்லையே? உதவுகிறோமோ இல்லையோ, குறைந்தபட்சம் எல்லோருக்கும் நன்மை கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தையாவது வளர்த்துக் கொள்ளலாமே!'' என்றாள் ஆனந்தி.

"பிறருக்கு நல்லெண்ணத்தைத் தருவதா? அது எப்பேர்பட்ட கஷ்டமான காரியம் என்று உனக்குத் தெரியாது. மற்றவர்கள் நம்மை மிஞ்சிவிட்டால் என்ன செய்வது?'' என்று சொல்லிவிட்டு சிறிது நேரம் யோசித்தேன். "எனக்கு என்ன புரிந்தது என்று சொல்கிறேன். நீ இது எனக்கு ஏற்கனவே சொன்னதுதான். "அடுத்தவர்களுக்கு முதலில் நன்மை வரட்டும், எனக்கு கடைசியாக வரட்டும்" என்று உண்மையாக இருந்தால், பொறுமை வளரும். தான் என்ற பகுதியிலிருந்து நம் உலகம் என்ற முழுமைக்கு மாறுவோம். சுமுகம் வளரும். சுயநலம் குறைந்து, பரநலம் விரும்புவதால், நம் ஜீவியம் விரிந்து வளரும். ஜீவியம் வளர்ந்தால் வாழ்க்கை தவறாமல் பலன் தந்துவிடும், சரிதானே?'' என்று கேட்டேன்.

"சரிதான். அடுத்தவர்களுக்கு அதிர்ஷ்டம் வரவேண்டும் என்று மனமார வேண்டினால் நமக்கு அதிர்ஷ்டம் வந்துவிடும். அதிர்ஷ்டத்தை அடைய அதுதான் குறுக்கு வழி'' என்றாள் அருமை ஆனந்தி.

"குறுக்கு வழி எனக்கு மிகவும் பிடிக்கும். நீ எப்போதும் நல்லதுதான் சொல்வாய். உன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அதனால், "போனால் போகிறது, இந்த உருப்படாத வெங்கட்டிற்கு அதிர்ஷ்டம் வரட்டும்" என்று நினைத்துக் கொண்டு, அவனுக்கு உதவ சம்மதிக்கிறேன்'' என்றேன்.

"அப்படி வாருங்கள் வழிக்கு. நாம் பிறருக்கு உதவும் போது, அவரிடம் நாம் உதவி பெறுவது போல பணிவாக நடந்து கொள்ள வேண்டும்'' என்ற ஆனந்தி, உடனே காவியதாசனுக்குப் போன் செய்தாள்.

காவியதாசன் நல்வாக்கு தந்தார். விஸ்வமூர்த்தி ராகினி ஸ்டுடியோவில் அன்று முழுவதும் இருப்பார் என்றும், உடனே நேரில் சென்று அவரைப் பார்க்கும்படியும், தாம் அவரிடம் விஷயத்தை சொல்லிவிடுவதாகவும் கூறினார்.

சற்று நேரத்தில் என் அலுவலகத்திற்கு வந்த வெங்கட்டிற்கு அப்போதே தான் எல்லா பிரபலமான பாடகர்களையும் புறங்கண்டுவிட்டது போலவும், இந்தியத் திரை இசை உலகமே தன் நுனிநாக்கு அசைவதற்குக் காத்திருப்பது போலவும் நினைப்பு வந்துவிட்டது.

"ஆனந்தி மட்டும் இல்லை என்றால் இந்த இசையமைப்பாளரைப் பார்ப்பதற்கு நாம் மாதக்கணக்கில் ஸ்டுடியோ வாசலில் தவம் இருந்திருக்க வேண்டும். அவளுக்கு ஒரு வார்த்தை நன்றி சொன்னாயா?'' காரில் ஸ்டுடியோவிற்கு நானும், வெங்கட்டும் போய்க் கொண்டிருந்தபோது அவனிடம் கேட்டேன். "நீ ஏனப்பா இப்படி கோபித்துக் கொள்கிறாய்? ஆனந்தியே ஒன்றும் சொல்லவில்லை. எனக்கு விஸ்வமூர்த்தியைப் பார்க்கப்போவதை நினைத்தால் ஒரே படபடப்பாக இருக்கிறது'' என்றான் வெங்கட்.

அவன் படபடப்பு விஸ்வமூர்த்தியின் எளிமையும், உற்சாகமும் நிறைந்த வரவேற்பில் அடங்கிவிட்டது. விஸ்வமூர்த்தி வெள்ளை வெளேர் என்ற சட்டை, வேட்டி அணிந்து, விபூதி, சந்தன, குங்குமப் பொட்டுகள் துலங்க கம்பீரமான குரலில் பேசினார்.

"நீங்கள் இரண்டு பேரும் காவியதாசனின் அபிமானிகளோ? உங்களைப் பற்றி ஒரேயடியாகப் புகழ்ந்து தள்ளிவிட்டாரே!'' என்றார் விஸ்வமூர்த்தி.

"அவருக்கு மிகவும் பெரிய மனம் சார், எங்கள் இருவரையும் அவர் பார்த்ததுகூட இல்லை!'' என்றேன்.

உரக்க சிரித்த விஸ்வமூர்த்தி, "அவர் அப்படித்தான். சரி, உங்களில் யார் பாடப்போவது?'' என்று கேட்டபடி ஆர்மோனியப் பெட்டியில் கை வைத்தார்.

"நான்தான் சார்'' என்றான் வெங்கட்.

"என் முன்னால் இப்படி உட்காருங்கள். என்ன பாட்டு பாடப்போகிறீர்கள்?'' என்று கேட்டார் விஸ்வமூர்த்தி.

"பாலமுரளி கிருஷ்ணா பாடிய "ஒரு நாள் போதுமா...” பாட்டைப் பாடப்போகிறேன் சார்'' என்றான் வெங்கட். அவனது முன்யோசனையற்ற செயலை என்னவென்று சொல்வது! அது விஸ்வமூர்த்தியின் போட்டியாளர் இசை அமைத்திருந்த பாடல்.

"பிரமாதமான பாட்டு, ஆனால் பாடுவது மிகவும் சிரமம். உங்களுக்கு குரு யார்?'' என்று கேட்டார் விஸ்வமூர்த்தி.

"எனக்கு குரு என்று யாருமில்லை. ரேடியோவில் பாட்டு கேட்டு நானாகவே பழகிக்கொண்டேன் சார்'' குரலில் பெருமை பொங்கி வழிய பதில் சொன்னான் வெங்கட்.

"சுயம்புவா? பலே, பலே. சரி, இந்தப் பாட்டை எந்தக் கட்டையில் பாடப்போகிறீர்கள்?'' ஆர்மோனியத்தை மெல்ல வாசித்துக்கொண்டே கேட்டார் விஸ்வமூர்த்தி.

"கட்டையா? அப்படி என்றால் என்ன? ராகம், பாவம், சுருதி பற்றி பலர் பேசிக்கொள்வதைக் கேட்டிருக்கிறேன். அதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு இல்லை'' என்று சொன்னான் வெங்கட். நான் திடுக்கிட்டுப்போனேன்.

"சரி, நீங்கள் பாடுங்கள்'' என்றார் விஸ்வமூர்த்தி. அவர் கண்ஜாடை காட்டியதும் ஒருவர் தபேலா வாசிக்க ஆரம்பித்தார்.

வெங்கட் பாடிய அந்த நான்கு நிமிடங்கள் நானும், விஸ்வமூர்த்தியும் நரகத்தில் வாழ்ந்தோம். பல இடங்களில் தாளம் தப்பியது, மெட்டு தவறியது, குரல் கோணலாகி பிசிறு தட்டியது, நாக்கு தடுமாறியது, சுருதி விலகியது, வார்த்தைகள் மாறின, மூச்சு வாங்கியது. இசையைப் பற்றி ஒன்றும் தெரியாத எனக்கே அவன் மோசமாகப் பாடினான் என்பது புரிந்தது.

"நல்ல முயற்சி. தம்பி, நன்றாகப் பாடினீர்கள். கஷ்டமான பாட்டு என்பதால் அங்கிங்கே இலேசாக சின்னச் சின்னப் பிரச்சனைகள் இருந்தாலும் நன்றாகவே பாடினீர்கள்'' என்றார் விஸ்வமூர்த்தி. அவரது பெருந்தன்மை எனக்கு நெகிழ்ச்சியைத் தந்தது. "நன்றி சார். பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டை அப்படியே பாட வேண்டாம் என்று நினைத்து, பல மாறுதல்கள் செய்து பாடினேன். அதனால்தான் உங்களுக்கு வேறு மாதிரி தோன்றி இருக்கிறது. இன்னொரு பாட்டு பாடட்டுமா சார்?'' என்று வெங்கட் ஆர்வத்துடன் கேட்டான்.

கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்ட விஸ்வமூர்த்தி, "ஏற்கனவே வெளிவந்துவிட்ட பாடல்களைத் திரும்பப் பாடுவது சுலபம். சினிமா பாடகனுக்கு இசையமைப்பாளர் சொல்லிக் கொடுக்கும் இதுவரை வெளிவராத புதுப் பாட்டை தனக்குள் வாங்கிக்கொண்டு, அவர் எதிர்பார்க்கும்படி பாடும் திறமை வேண்டும். சினிமா பாட்டு என்றால் காதல் பாட்டுதான் என்றாகிவிட்டது. நான் ஒரு இனிய மெட்டு சொல்கிறேன். அதை அழகாகப் பாடிக்காட்டுங்கள்'' என்று கூறினார். பின் சிறிது நேரம் கண்களை மூடி யோசித்துவிட்டு, ஒரு புது மெட்டை தத்தகாரத்தில், "தான தான தான'' என்று தன் கம்பீரமான குரலில் சொன்னார். கூடவே ஆர்மோனியம் கொஞ்சியது.

"எனக்குப் புரியவில்லையே சார். தான தானா என்றால் எப்படி சார் பாடுவது? எனக்கு வார்த்தைகளோடு பாடித்தான் பழக்கம்'' என்றான் வெங்கட். "என்னப்பா இது?" என்பதுபோல என்னை ஒரு பார்வை பார்த்தார் விஸ்வமூர்த்தி.

"வெங்கட் தம்பி, கோவிந்தராசன் என்பவரின் விலாசத்தை உங்களுக்குத் தருகிறேன். அந்த வாத்தியாரை பார்த்து, நான் அனுப்பினேன் என்று சொல்லுங்கள். சினிமாவில் பாட என்னவெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் உங்களுக்குச் சொல்லித் தருவார். நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று அவர் சொன்னதும் என்னை வந்து பாருங்கள். அப்போது உங்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமோ அப்படிப் பயன்படுத்திக் கொள்கிறேன்'' என்றார் விஸ்வமூர்த்தி.

"மிகவும் நன்றி சார்'' என்று சந்தோஷமாகச் சொன்னான் வெங்கட். கோவிந்தராசன் வாத்தியாரை பார்த்து பயிற்சி எடுக்கிறானோ இல்லையோ, தன் வாழ்நாள் இறுதிவரை விஸ்வமூர்த்தியை சந்தித்த அனுபவத்தை ஊரெல்லாம் சொல்லிக் கொண்டு திரியப்போகிறான் என்பது உறுதி.

எனக்குச் சங்கடமாக இருந்தது. அதே சமயம் அவர் சொன்ன சந்தத்திற்கு என்னுள் வார்த்தைகள் உருவாயின.

"சார், இந்த மெட்டுக்கு வார்த்தைகள் சொல்கிறேன், வெங்கட் பாடட்டுமா?'' என்று விஸ்வமூர்த்தியிடம் பணிவாக சொல்லிவிட்டு, இரண்டு வரிகளை அதே மெட்டில் பாடினேன்.

இரண்டு வரிகளையும் பாடிப் பார்த்தார் விஸ்வமூர்த்தி. "அடே, பிரமாதம், பிரமாதம்! ஒரு இடத்தில்கூட தாளம் தட்டவில்லை. உங்களுக்குப் பாட்டு எழுத வருமா?'' என்று வியப்புடன் கேட்டார். "கதை, கவிதைகளில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம் அதிகமுண்டு சார்'' என்றேன்.

"மீதி மெட்டையும் சொல்கிறேன், உங்களால் எழுத முடிகிறதா என்று பாருங்கள்'' என்ற விஸ்வமூர்த்தி கண்களை மூடியவண்ணம் கடகடவென்று மெட்டைச் சொன்னார். அடுத்த ஒரு மணி நேரத்தில் விஸ்வமூர்த்தி முழு திருப்தி அடையும்படி ஒரு புதிய பாடல் உருவாகிவிட்டது.

"சந்துரு, பாட்டு அருமையாக அமைந்துவிட்டது. வேண்டாம் என்று அபசகுனமாகச் சொல்லாமல் முதல் பாட்டிற்கான சன்மானத்தைப் பிடியுங்கள்'' என்ற விஸ்வமூர்த்தி நூறு ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்றை என் கைகளில் திணித்தார். அவரை வணங்கி, பணிவுடன் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டேன். "இதுபோல ஆயிரம் மடங்கு நீங்கள் சம்பாதிக்க வேண்டும். பெரிய புகழ் பெற வேண்டும். உங்களுக்கு நான் பாட்டெழுத வாய்ப்புத் தருகிறேன். உங்களிடம் சினிமாவிற்கு ஏற்ற மாதிரி கதைகள் இருந்தால் கொண்டு வாருங்கள். எனக்குத் தெரிந்த தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்திவிடுகிறேன்'' என்று ஆசி கூறி, வழி அனுப்பி வைத்தார் விஸ்வமூர்த்தி.

நானும், வெங்கட்டும் உற்சாகமாக ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தோம். எதிர்காலத்தைப் பற்றி பல திட்டங்கள் போட்டுக் கொண்டு பேசியபடி வந்தோம். திடீரென்று, "ஏனப்பா, இனிமேல் உனக்கு இலட்சக்கணக்கான இரசிகர்கள் கிடைத்துவிடுவார்கள். ஆனந்தி இல்லை என்றால் உனக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்குமா? உடனே ஒரு போன் பண்ணி நன்றி சொல்லத் தோன்றியதா உனக்கு?'' என்று என்னைப் பார்த்து வெங்கட் பழிவாங்குவது போலக் கேட்டான்.

நியாயமான கேள்விதான்.

முற்றும்.

*******

ஜீவிய மணி
 
பிறருக்கு அளிப்பது,
நாம் அதிகமாகப் பெறுவது.
 

*******book | by Dr. Radut