Skip to Content

08. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

II/50) முரண்பாடு இருளை இழந்து உடன்பாடாகும்பொழுது ஜோதி உற்பத்தியாகும் சிந்தனை காட்சியாகிறது - ரிஷி.

  • சிந்தனை காட்சியாக முனிவர் ரிஷியாக வேண்டும்.
  • ஒரு கருத்து உடைந்து எதிராகவோ, பிணக்காகவோ ஆனால் எழுவது இருள்.
  • ஜோதி ஒரு செயலின் ஆன்மீக விரிவு.
  • ஒரு செயல் தன் போக்கை ஆன்மாவை நோக்கித் திருப்பும் பொழுது எழுவது ஒளி.
  • அதே செயல் பிரிந்து, உடைந்து, வழி மாறி, எதிரானால், அதன் போக்கு ஆன்மாவுக்கு எதிராகும்.
  • பிணக்கொழிந்தது சத்தியம்.
  • மலிந்த பிணக்கு இருள் மலிந்த பொய்.
  • சத்தியம் ஆன்மாவின் புறம்.
  • சத் அகமும் புறமுமாகப் பிரியும் பொழுது அகம் ஆன்மாவாகவும், புறம் சத்தியமாகவுமாகும்.
  • ஆன்மாவினின்று எழுந்த சத்தியத்தில் பிணக்கில்லாதது ஆச்சரியப்படுவதற்கல்ல.
  • எண்ணம் பிணக்காவது முரண்பாடு.
  • பிணக்கொழிந்தால் எண்ணம் சிந்தனையாகும்.
  • சிந்தனை ஒருமையையும், ஒற்றுமையையும் நாடும்.
  • ஒருமையை நாடும் சிந்தனை தர்க்கரீதியாக இருக்கும்.
  • அறிவுக்கும், தர்க்கத்திற்கும் பொருந்தும் எண்ணம் பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்தை நாடவல்லது.
  • இது ஒளி வளரும் பாதை.
  • எதிரானது இருள் வளரும் பாதை.
  • இருள் வளர்ந்தால் அறிவு, வாழ்வாகும்.
  • இருள் மலிந்தால் வாழ்வு ஜடமாகும்.
  • ஜடம் பிணக்கும், இருளும் மலிந்த லோகமாகும்.
  • அறிவுள்ள ஒருவர் படித்தவர் பலரிடையே அறிவு விளக்கம் பெறும்படிப் பேசினால் கேட்பவர் மனம் மலரும், அறிவு தெளிவுறும், முகம் பிரகாசமாகும்.
  • அறிவற்ற ஒருவன் அவன் அறிந்தவற்றை ஆர்வமாக அடித்துப் பேசினால் கேட்பவர் அறிவு குறைந்தவர்களானால், எதையும் ஏற்க முடியாமல், எதுவும் புரியாமல், விளங்காமல், விளக்கம் கேட்கவும் முடியாமல் திணறி, திக்குமுக்காடி மனத்தில் பிணக்கெழுந்து இருளை உற்பத்தி செய்பவர் முகம் இருளடையும்.
  • இருள் அறியாமை.
  • பிணக்கு இருள்.
  • வலியுறுத்துவது வன்முறை.
  • இருளையும் பிணக்கையும் வற்புறுத்தும் வன்முறை அறியாமையை அறிவாகக் கொள்ளுதல்.
  • ஞானத்திற்குச் சிந்தனையே இருள்.
  • சிந்தனை இருளை இழந்தால் அது ஜோதியாகி உருவம் பெறும்.
  • அப்படி எழும் உருவம் திருஷ்டி.
  • அதைக் காண்பவர் ரிஷி.
  • ரிஷி என்ற சொல்லுக்குத் திருஷ்டியுடையவர் எனப் பொருள்.
  • அத்திருஷ்டி வெளியிலும், சுவரிலும், ஆகாயத்திலும், மனத்திலும் எழும்.

*****

II/51) ஜோதியும் தடை. நேரடி ஞானம் வந்தால் ஜோதி மறையும் - யோகி.

  • காட்சியைக் கடந்த யோகி.
  • பிற பொருளை அறிவது அறிவு, ஞானம் எனப்படும்.
  • மனிதன் தன் புலன்களால் - கண், காது, மூக்கு, வாய், கை - பிற பொருளை அறிகிறான்.
  • அது மனம் அறிவதில்லை.
  • மனத்தின் கருவியான புலன்கள் அறிவது.
  • ஒரு வகுப்பு (attendance register) மாணவர் வருகைப் பதிவில் எல்லா மாணவர் பெயரும் இருக்கும். பெயர் மாணவராகாது.
  • புலன்கள் அறிவது மாணவர் பட்டியலை அறிவது போலாகும்.
  • மனம் அறிய புலன்கள் கூறியவை அகல வேண்டும்.
  • மாணவர் பட்டியலை எட்ட வைத்து வகுப்புக்குள் நுழைந்து மாணவர்களைக் காண்பது மனம் நேரடியாக அறிவதாகும்.
  • மனிதன் இதுவரை மனத்தால் அறிந்தவனிலன், புலன்களாலேயே உலகை அறிகிறான்.
  • மனம் புலன்களை விலக்கி நேரடியாக அறிய சிந்தனை வேண்டும்.
  • மனம் சிந்தனையால் அறிகிறது.
  • சிந்தனை என்றால் என்ன?
  • சிந்திக்க முதற்கட்டம் புலன் உணர்வை விட்டகல வேண்டும்.

    கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பது புலனை விலக்கி அறிவை சிந்தனையால் நாடு என்பதாகும்.

  • மனிதன் அறிவால், சிந்தனையால் உலகை மறைமுகமாகக் கண்ணாடியில் காண்பது போல் காண்கிறான்.
  • முனிவர் மனித மனம் போலவே உலகை அறிகிறார்.
  • அவர் சிந்தனையால் மனிதன் போல் அறிவதில்லை. மௌனத்தால் அறிகிறார்.
  • ரிஷி காட்சியால் ஞான திருஷ்டியால் அறிகிறார்.
  • யோகிக்குச் சிந்தனை, மௌனம், ஜோதி தேவையில்லை.
    அவர் உலகை நேரடியாக அறிகிறார். அதை (intuition) நேரடி ஞானம் என்பது ஆன்மீக பாஷை.
  • அன்பர்கள் தியானத்தில் மௌனம் பெறுகிறார்கள்.
  • சிந்தனையால் நெடுநாட்களில் விளங்குவது மௌனத்தால் உடனே விளங்கும்.
  • மௌனம் முதிர்ச்சியடைந்தால் விலகும் திருஷ்டி ஏற்படும்.
  • எந்த (course) கோர்ஸில் சேர்வது எனத் தெளிவில்லாத பொழுது தியானம் மௌனத்தாலோ திருஷ்டியாலோ தெரிவிக்கும்.
    தியானத்தில் ஒரு கட்டடம் தெரியும்.
    அன்றே வரும் தபாலில் அது மெடிகல் காலேஜ் கட்டடம் என படம் அறிவிக்கும்.
    பையனை மெடிக்கல் காலேஜில் சேர்க்கலாம்.
  • தியானமே இல்லாமல் அன்பர்கள் விழிப்பில் கண்ட காட்சிகள் அநேகம்.
  • மனத்தில் சத்தியம் வலுவானால் - சத்தியம் ஆன்மாவின் புறம் - கற்பனையில் ஒரு எண்ணம் பலித்தால், கற்பனை ஜீவன் கொடுத்ததாலேயே நடைமுறையில் அது நடக்கும்.
  • மெடிகல் காலேஜில் சேரும் வசதியில்லாதவனுக்குக் கற்பனையில் மெடிக்கல் காலேஜ் பலித்தால் மெடிக்கல் காலேஜில் சேரும் வாய்ப்பு எழுந்து பலிக்கும்.
  • மகான்கள், அவதார புருஷர்கள் கண்ட கனவுகள் நனவாகின.
  • வள்ளலார் வடலூரைக் கனவில் கடலூராகக் கண்டார்.
  • 100 ஆண்டுகட்குப்பின் அது நிதர்சனமாயிற்று.

*****

II/52) அறியாமையால் பாதிக்கப்படாமல் - ஞானத்தைச் சேர்த்துச் செயல்படும் திறனை மனம் பெற்று - சத்தியம் மனத்தைக் கரைத்து, தானிழந்த சத்தியஜீவிய தொடர்பைப் பெற முடிகிறது - தெய்வம்.

  • அறியாமை தெய்வத்தை அசைக்காது.
  • சிவன், விஷ்ணு, பிரம்மா, இந்திரன், லக்ஷ்மி, காளி, போன்ற தெய்வங்கள் உறையும் லோகம் தெய்வீக மனம்.
  • தெய்வீக மனம் ஞானமுடையது. அது ஞானத்தைத் தேட வேண்டாம்.

    ஞானத்துடன் அங்கு அஞ்ஞானமும் உண்டு.
    அஞ்ஞானத்தை விலக்கி,
    ஞானம் பலன் தரும் வகையில் தெய்வீக மனம்
    செயல்படும்.

  • தெய்வீக மனம் கிருஷ்ணாவதாரம் பிறந்த லோகம்.
  • தெய்வீக மனம் பிரபஞ்சம் முழுவதும் பரவுவது.
  • தெய்வீக மனம் எல்லா மதங்களையும் ஏற்கும், விலக்காது.
  • அடிப்படையான ஐக்கியத்தை செயல்படுத்தாவிட்டாலும், தெய்வீக மனம் அதை அறியும்.
  • அது சத்தியஜீவியத்தின் பிரதிநிதி.
  • சத்தியஜீவியத்தினின்று வேறுபட்டு, அதன் பிரதிநிதியானது தெய்வீக மனம்.
  • Pride and Prejudiceஇல் சத்தியஜீவிய சக்தியின் சாயல் தெரிகிறது.
  • பிரெஞ்சுப் புரட்சி இமயமலையில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் முற்பிறவியில் எழுப்பியது.
  • அது ஆத்மீகப் புரட்சியில்லை, அறிவுடைப் புரட்சி என்கிறார்.
  • வரும் வாய்ப்பை ஏற்க மறுத்தால் உள்ளதும் போகும் என்பது அன்னை வாக்கு.
  • B.A. பட்டம் பெற்றவன் ங.ஆ. பட்டம் பெறும் வாய்ப்பை மறுத்தால் M.A.யும் போகும் என்பதை மனம் ஏற்காது.
  • B.A. படித்தவனுக்கு வரும் வாய்ப்பு சமூக வாய்ப்பு.
  • செல்வாக்குள்ள நாட்டாண்மைக்காரருக்கு பஞ்சாயத்து தலைமை வருவது எலக்ஷன் வாய்ப்பு. அது M.L.A., M.P. ஆக உதவும். தொடர்ந்து வளரும் வாய்ப்பு.
  • நாட்டாண்மைக்காரர் வாய்ப்பை மறுத்தால் வேறொருவன் அதைப் பெற்று மீண்டும் M.L.A. ஆனால் அதன்பின் மரியாதை புதியவருக்குப் போகும். ஏற்கனவே நாட்டாண்மைக்காரர் செய்த வேலைகளை, மத்தியஸ்தம் போன்றவை, ஊர் விவகாரங்கள் இனி M.L.A.க்கும் புதிய பஞ்சாயத்து தலைவருக்கும் போகும்.
    உள்ளதும் போகும்.
  • ஜீவனற்ற வாழ்வில் வாய்ப்பை இழக்கலாம்.
    வளரும் வாழ்வில் வருவதை ஏற்காவிட்டால் உள்ளதும் போகும்.
  • தெய்வீக மனம் கிருஷ்ண பரமாத்மாவுக்குரியது. அவர் நடத்திய பாரதப் போர் உலகப் பிரசித்தியானது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் தெய்வீக மனத்தைக் கூறியவற்றை மனதில் கொண்டு பாரதத்தைப் படித்தால் அதன் உண்மை விளங்கும். பாரதத்தைப் படித்தால் வீட்டில் கலகம் வரும் என்பதால் பெரியவர்கள் அதைப் படிக்க அனுமதிப்பதில்லை.

*****

II/53) மனம் தன் ஆதியை அடைகிறது - சத்தியஜீவியம்.

  • அறியாமையை அறிவாக்கும் ஆதி சத்தியஜீவியம்.
  • சிருஷ்டியை வேதம் விளக்கப் பயன்படுத்தியது - ஞானம், அஞ்ஞானம்.
  • வேதம் அதை சித்தி, அசித்தி என்றது.
  • உபநிஷதம் சிருஷ்டியை விளக்கப் பயன்படுத்தியது - ஞானம், அஞ்ஞானம்.
  • உபநிஷதம் அதை வித்யா, அவித்யா என்றது.
  • பகவான் ஸ்ரீ அரவிந்தர் சிருஷ்டியை விளக்கப் பயன்படுத்தியதும் அதுவே.

    பகவான் அதை ஞானம், அஞ்ஞானம் என்றார்.

  • எவரும் சிருஷ்டியை சத்தியம், பொய்; வலிமை, எளிமை; அன்பு, வெறுப்பு; அழகு, விகாரம்; ஆனந்தம், நிரானந்தம் என்பதன் மூலம் விளக்கவில்லை.
  • ஏன் அப்படி அனைவரும் செய்தனர்?
  • பகவான் மனம் சிருஷ்டியின் முடிவு என்கிறார்.
  • வாழ்வும், ஜடமும் மனம் சிருஷ்டித்தவையே, மூலமான சிருஷ்டியின் பகுதிகளில்லை என்கிறார்.
  • மனம் மேல் உலகையும், கீழ் உலகையும் இணைப்பது.
  • மனமே இவ்விளக்கங்கட்கு மையமானது.
  • மனம் தத்துவங்களின் மையமாக இருப்பதால் சிருஷ்டியை வேதம், உபநிஷதம், பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஞானம், அஞ்ஞானம் மூலம் கூறுகின்றனர்.
  • மனிதன் மனத்திலிருந்து சத்தியஜீவியத்திற்கு எழுவதற்கு முனிவர், ரிஷி, யோகி, அவதாரம் மூலம் உயர்கிறான்.
  • மனம் சத்தியஜீவியத்தினின்று எழுந்தது.
  • சத்தியஜீவியம் இரண்டாகப் பிரிவதால் அவற்றிடையே மனம் எழுந்தது.
  • உபநிஷதம் அவற்றை பிரக்ஞா, ஹிரண்ய கர்ப்பம் என்கிறது.
  • பகவான் கூறுவதும் அவற்றையே என்றாலும், அவர் அப்பெயர்களைப் பயன்படுத்தவில்லை.
  • பகவான் அவற்றைக் காலத்தைக் கடந்த சத்தியஜீவியம், காலத்துள் சத்தியஜீவியம் என்கிறார்.
  • ஜீவாத்மாவை பகவான் individual divine மனித பிரம்மம் என்பது எதனால் என்றால் மரபில் ஜீவாத்மா அழியக் கூடியது.

    பகவானுக்கு ஜீவாத்மா பிரபஞ்சத்தையும், பிரம்மத்தையும் உட்கொண்டது.

  • மனம் உற்பத்தியானபொழுது அது தெய்வீக மனம் divine mindஆக இருக்கிறது. சத்தியஜீவிய முழுப் பார்வை இரண்டாகப் பிரிந்துள்ளது.
  • அதில் அஞ்ஞானம் இல்லை. மனம் விரும்பி அஞ்ஞானத்தை ஏற்படுத்துகிறது.
  • மனம், வாழ்வு, ஜடத்திலும் ஆரம்பத்தில் அஞ்ஞானமில்லை.
  • மனம் சத்தியஜீவியத்தை அடைவதும், அறியாமை ஞானத்தையடைவதும், மனம் தன் ஆதியை அடைவதாகும்.

தொடரும்....

*****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
போக வேண்டியது உள்ளே.
இருக்க வேண்டியது உள்ளே.
சாதிக்க வேண்டியது உள்ளே.
உன் உலகம் உள்ளே இருக்கிறது.
உள்ளே சாதிக்காதது உலகத்தில் சாதிக்கப் போவதில்லை.
உனக்குரியது உள்ளேயிருக்கிறது.
 
 
 
******
 
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளே மாற ஒரு க்ஷணம்.
வெளியே மாற ஒரு யுகம்.
 
 
 
******



book | by Dr. Radut