Skip to Content

02. வாழ்க்கையில் சாதிப்பது

வாழ்க்கையில் சாதிப்பது

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

நான் இதுவரையிலும் நாம் வெளியில் செய்கின்ற வேலைக்குத் தேவைப்படுகின்ற organisationனைப் பற்றி சொல்லிக் கொண்டு வந்தேன். ஆனால் அப்பா அவர்கள் நமக்குள்ளிருக்கும் பர்ஸனாலிட்டிக்கும் ஒரு organisation உண்டு என்கிறார். வெளி organisation எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு உள் பர்ஸனாலிட்டி organisation முக்கியம் என்கிறார். மேலும் வெளி organisationஉம் உள் organisationஉம் perfectஆக இருக்கும் பொழுதுதான் அதிகபட்சப் பலனும் கிடைக்கும் என்கிறார். சாதனைக்கு அவர் மூன்று விதிமுறைகளை வழங்கியிருக்கிறார். அது பின்வருமாறு:

  1. எடுக்கின்ற முடிவு எல்லா விவரங்களும் தெரிந்து வைத்துக் கொண்டு எடுக்கப்படுகிற முடிவாக இருக்க வேண்டும்.
  2. அந்த முடிவை அமல்படுத்துவதில் முழு உற்சாகம் இருக்க வேண்டும்.
  3. செய்கின்ற வேலையை நேர்த்தியாகச் செய்து முடிக்கக் கூடிய செயலாற்றும் திறன் இருக்க வேண்டும்.

ஸ்ரீ அப்பா அவர்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும் பொழுது சரியாக விவரங்களைத் தெரிந்து கொண்டு நாம் ஒரு முடிவை எடுக்கிறோம் என்றால், அந்த முடிவின் அடிப்படையில் நாம் ஆரம்பிக்கும் வேலையில் முழு உற்சாகம் இருக்கிறது என்றால், அந்த வேலையை நேர்த்தியாகச் செய்யக் கூடிய செயலாற்றும் திறன் இருக்கிறது என்றால், அந்த வேலை வெற்றிகரமாக நிறைவேறி நாம் விரும்பும் பலன் கிடைக்கும் என்றாகிறது. எவரேனும் ஒருவர் தாம் செய்த வேலை கூடிவரவில்லை, எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், மேற்கண்ட மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஓர் இடத்தில் அவர் குறை வைத்திருப்பார். அவர் என்ன வேலையை எடுத்துக் கொண்டு செய்தாரோ அதுபற்றி அவர் எடுத்த முடிவு ஒரு விவரம் தெரிந்த முடிவாக இருக்காது. மேலும் செய்த வேலையில் இருக்க வேண்டிய முழு உற்சாகம் இருந்திருக்காது. மேலும் நேர்த்தியாக அந்த வேலையைச் செய்து முடிக்கக் கூடிய செயலாற்றும் திறன் அவரிடம் இருந்திருக்காது. விவரம் தெரிந்த முடிவு என்றால் என்ன என்று நீங்கள் கேட்கலாம். விவரம் தெரிந்த முடிவு என்றால், தான் என்ன செய்யப் போகிறோம் என்று ஒருவருக்குத் தெரிய வேண்டும். அதற்குண்டான முறையான பயிற்சி மற்றும் திறமையை அவர் வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் அவர் செயல்பட விரும்பும் துறையில் என்னென்ன risk மற்றும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும்.

பிஸினஸில் ஈடுபட ஒருவர் விரும்புவதாக வைத்துக் கொள்வோம். இம்முடிவை வெற்றிகரமாகச் செயல்படுத்த அவர் விரும்பினார் என்றால் என்ன பிஸினஸ் துறையில் அவர் செயல்பட விரும்புகிறார் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். தான் ஈடுபட விரும்புகின்ற துறையில் அவருக்கு முறையான ஒரு பயிற்சி இருக்க வேண்டும். அடுத்தபடியாக அவர் விற்க விரும்பும் பொருளுக்கோ அல்லது அவர் வழங்க விரும்பும் சர்வீஸிற்கோ மார்கெட்டில் என்ன demand உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இறுதியாக, இந்த பிஸினஸிற்குத் தேவையான முதலீடு மற்றும் டெக்னாலஜி மற்றும் ஊழியர் சப்போர்ட் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்து கொள்ள அவரால் முடியுமா என்று அவருக்குத் தெரிய வேண்டும். எந்தத் துறையில் பிஸினஸ் செய்வது என்பதே அவரால் முடிவு செய்ய முடியவில்லை என்றால் அவரால் முதலடியே எடுத்து வைக்க முடியாது. முதலீடு இருபத்தைந்து இலட்சம் அளவிற்குத் தேவைப்படுகின்ற பொழுது இவருடைய சேமிப்பு மற்றும் இவருக்குக் கிடைக்கக்கூடிய கடன்கள் எல்லாம் சேர்ந்து பத்து இலட்சம்தான் வருகிறதென்றால், இந்த 10 இலட்சத்தை வைத்துக் கொண்டு அவரால் பிஸினஸ் ஒழுங்காகச் செய்ய முடியாது. அடுத்ததாக இந்தத் துறையில் raw materials கிடைப்பதே சிரமம் என்றிருந்தால், அது தெரியாமல் இவர் இந்த பிஸினஸில் இறங்கிவிட்டார் என்றால், பின்னர் கஸ்டமர்களுக்கு ரெகுலராக சப்ளை செய்ய முடியவில்லை என்ற பிரச்சனை வரும். அதன் விளைவாக பிஸினஸ் முடங்க நேரிடும். பிஸினஸில் இவருக்குப் போதுமான பயிற்சி இல்லை என்றால், டெக்னிக்கல் நுணுக்கங்கள் இவருக்குப் புரியாமல் போய்விடும். அப்பட்சத்தில் எல்லாவற்றிற்கும் டெக்னிக்கல் staffஐ நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அவர்கள் சொல்வதைத்தான் இவர் கேட்டுக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவருக்குக் கம்பெனியில் முழு கண்ட்ரோல் இருக்காது. ஆகவே இத்தகைய குறைபாடுகள் அவருடைய முடிவில் இருந்தது என்றால், பிஸினஸ் செய்ய வேண்டும் என்று அவர் எடுக்கின்ற முடிவு விவரம் தெரிந்து எடுத்த முடிவாக இருக்காது. இப்படி ஒரு முடிவை எடுத்து அமல்படுத்தினாலும் அந்த பிஸினஸ் நெடுநாள் நீடிக்கவும் செய்யாது. அரசியல் அதிகாரத்திற்கு ஆசைப்படுகின்ற பல பேர் தேர்தலில் நின்றால் எவ்வளவு செலவாகும், எத்தகைய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும், எவ்வளவு ஆள் பலம் தேவைப்படும் என்று விவரம் தெரியாமலேயே அரசியலில் இறங்கிவிடுகிறார்கள். பின்னர் அவர்கள் போட்ட பட்ஜெட்டைத் தாண்டித் தேர்தல் செலவு போகும் பொழுது ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்வதற்குப் போதுமான ஆள்பலம் கிடைக்காமல் மீட்டிங்கைச் சரிவர நடத்த முடியாமல் போகும்பொழுதும் இவர்களுக்கு மிகவும் அதிர்ச்சி வருகிறது. அதன் விளைவாக அரசியல் எங்களை ஏமாற்றிவிட்டது என்று புலம்புகிறார்கள்.

இப்படி விவரம் தெரியாமல் முடிவு எடுப்பதைப்போல எடுத்துக் கொள்கின்ற வேலைக்குத் தேவையான ஈடுபாடும், உற்சாகமும் இருக்கிறதா என்று தெரியாமல்கூட சிலர் முடிவு எடுக்கிறார்கள். ஸ்ரீ அப்பா அவர்களைப் பொறுத்தவரையிலும் நாம் எந்தவொரு வேலையை அனுபவித்துச் செய்கிறோமோ அந்த வேலை கூடிவரும். மற்றும் எதைச் சாதிக்கிறோமோ அதை நம்மால் அனுபவிக்க முடியும் என்று சொல்வார்கள். அதாவது அனுபவிப்பதே சாதனை. சாதனையே அனுபவிப்பது என்றாகிறது. இப்படிப் பார்க்கும் பொழுது தாங்கள் செய்கின்ற வேலையை அனுபவித்துச் செய்கின்ற எல்லோருமே அந்த வேலையில் வெற்றி பெறுவார்கள் என்றாகிறது. ஒரு பிஸினஸ்மேனோ, டாக்டரோ, வழக்கறிஞரோ, ஆசிரியரோ, விவசாயியோ தாங்கள் செய்கின்ற வேலையை அனுபவித்துச் செய்வதாகச் சொன்னார்கள் என்றால் அவ்வேலையை அவர்கள் வெற்றிகரமாகவே செய்து கொண்டிருப்பார்கள். சாதனையும், அனுபவிப்பதும் பரஸ்பரம் ஒன்றோடொன்று தொடர்புடையவை எனும்பொழுது ஆங்கிலத்தில் இவற்றை complementary இரட்டைகள் என்று சொல்வார்கள். இந்த இரட்டைகளில் ஒன்று இருக்கும் பொழுது அவசியம் இன்னொன்றும் இருக்கும். சாதனையும், அனுபவிப்பதும் எங்கே தவறுகிறது என்றால் எடுக்கின்ற முடிவில் பல பேர் உறுதியாக நிற்பதில்லை. அந்த இடத்தில்தான் தவறு வருகிறது. சுயமாகத் தொழில் செய்வதில் பல பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். சம்பளத்திற்கு வேலை செய்வதைவிட சுயமாக தொழில் செய்யும் பொழுது அதிக வருமானம் கிடைக்கிறது என்பதால் பல பேருக்குச் சுய தொழிலில் ஆர்வம் வருகிறது. இது ஒரு பக்கம் உண்மை என்றாலும் இன்னொரு பக்கத்தில் சுய தொழிலில் நிறைய ரிஸ்க் இருக்கிறது என்பதும் உண்மையாகும். ஆகவே விவரம் தெரியாமல் சுய தொழிலில் இறங்குபவர்களுக்குத் தொடக்கத்திலேயே சிரமங்கள் தலையெடுத்து அவர்கள் மனதில் வைத்திருக்கின்ற பெரிய வருமானத்தை உடனடியாக பார்க்க முடியாமல் போனால் அவர்களுக்கு ஆரம்பத்தில் வந்த உற்சாகம் அப்படியே குறைந்து போய் விடாமுயற்சி இல்லாமல் தொடங்கிய பிஸினஸை விட்டுவிடுகிறார்கள். இதனால்தான் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கினாலும் ஆரம்பத்தில் இருக்கின்ற உற்சாகம் கடைசிவரை நீடிக்க வேண்டும். மற்றும் இடையில் வரும் சிரமங்களைக் கண்டு பின்வாங்காத அளவிற்கு மனோதிடமும், விடாமுயற்சியும் நமக்கு வேண்டும். உலக சரித்திரத்தில் பெரிதாக சாதித்தவர்கள் எவரை எடுத்துக் கொண்டாலும், "வெற்றி என்பது சுலபமாகக் கிடைக்கவில்லை, இடையில் பல சிரமங்கள் வந்தன. இருந்தாலும், உற்சாகம் கெடாமல் விடாமுயற்சியுடன் இறுதிவரை போராடித்தான் வெற்றி கண்டோம்'' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.

சாதனைக்குண்டான மூன்றாவது நிபந்தனை, நேர்த்தியாக செயல்படும் திறன். நிறைய பேருக்கு அவர்கள் எந்தத் துறையில் வேலை செய்ய விரும்புகின்றார்களோ அதற்குண்டான தியரிட்டிக்கல் knowledge நிறையவே இருக்கும். ஆனால் practical work என்று வந்தால் கற்றுக் கொண்டதை நேர்த்தியாக பிஸிக்கல் லெவலில் செய்து முடிக்கக்கூடிய செயலாற்றும் திறன் பல பேருக்கு இருப்பதில்லை. ஆங்கிலத்தில் இதை executive capacity என்கிறார்கள். தமிழில் நான் இதை செயலாற்றும் திறன் என்கிறேன். பல ஆண்களும், பெண்களும் மருத்துவம், சட்டம், பிஸினஸ் மேனேஜ்மெண்ட், மற்றும் ஆடிட்டிங் எல்லாம் சிறப்பாகவே கல்லூரிகளிலும், இன்ஸ்டிட்யூட்களிலும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் எல்லாருமே கைதேர்ந்த டாக்டராகவோ, வழக்கறிஞராகவோ, ஆடிட்டராகவோ, பெரிய பிஸினஸ்மேனாகவோ தலையெடுப்பதில்லை. ஒரு மருத்துவ கிளினிக்கை நிறுவி, வருகின்ற நோயாளிகளுடைய நம்பிக்கையைப் பெற்று, அவர்களுக்கு திருப்தி வரும் வகையில் அவர்களுடைய நோயைக் குணப்படுத்தி ஒரு நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு practical organising ability வேண்டும். அந்தத் திறமை இல்லாதவர்களால் எவ்வளவு தியரிட்டிக்கல் knowledge இருந்தாலும் வெற்றிகரமாக டாக்டராகப் பணியாற்றி நிறைய சம்பாதிக்க முடிவதில்லை. சட்டக் கல்லூரியில் சட்ட நுணுக்கங்களைத் தெளிவாக புரிந்து கொண்டு ஒருவர் பட்டம் பெற்று வெளியில் வரலாம். ஆனால் நீதிமன்றத்தில் வழக்காட வேண்டும் என்றால் நல்ல பேச்சாற்றல் வேண்டும். மேலும் எதிர்கட்சி வழக்கறிஞரை வாதத்தில் வெல்லக்கூடிய திறமை வேண்டும். இந்தத் திறமைகள் இல்லாதவர்களால் ஒரு நல்ல சாமர்த்தியமான வழக்கறிஞர் என்ற பெயர் வாங்க முடிவதில்லை. அறிவு தெளிவாக இருப்பதால் இவர்கள் பேசாமல் நீதிபதிகளாக மாறிவிடுவார்கள். நீதிபதிகளுக்குப் பேச்சாற்றல் அவசியம் இல்லை. அழகாகத் தீர்ப்பு எழுதத் தெரிந்தால் போதும். இம்மாதிரியே பிஸினஸ் மேனேஜ்மெண்ட் நுணுக்கங்கள் பிஸினஸ் மேனேஜ்மெண்ட் கோர்ஸில் சேர்ந்து lecture மூலமும், text புத்தகங்கள் மூலமும் கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. வெளிவுலகில் வெற்றிகரமாக பிஸினஸ் மேனாக செயல்பட விரும்பினால் வெளி மார்க்கெட் சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு பிஸினஸ் leader என்று பெயர் வாங்க விரும்புகின்றவருக்கு அவருக்குக் கீழ் வேலை செய்பவரிடம் வேலை வாங்கத் தெரிய வேண்டும். அதாவது இவருடைய அதிகாரத்திற்கு அவர்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டும். மேலும் உற்பத்தி, விற்பனை, மார்க்கெட் டிமாண்ட், பணத் தேவை மற்றும் manpower தேவைகள் இவற்றையெல்லாம் முறையாக ஒருங்கிணைத்துச் செயல்படத் தெரிய வேண்டும். இவையெல்லாம் அவருடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்ததென்றால், அவருடைய பிஸினஸ் முறையாகவும், சீராகவும், ஒழுங்காகவும் நடக்கும். ஆனால், மார்க்கெட் தேவைக்கேற்றபடி சப்ளை செய்ய முடியவில்லை என்றாலோ, உற்பத்தி செலவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றாலோ, மற்றும் ஊழியர்கள் கேட்கும் அதிக சம்பளத்தைக் கொடுக்க முடியவில்லை என்றாலோ, பிஸினஸை நெடுநாள் இலாபகரமாக அவரால் நடத்த முடியாது. இக்காரணங்களால் தான் எவ்வளவு தெளிவான தியரிட்டிகல் knowledge ஒருவருக்கு இருந்தாலும் அதை மட்டும் வைத்துக் கொண்டு பிஸிக்கல் லெவலில் வெற்றிகரமாக ஒரு காரியத்தைச் சாதிக்க முடியாது. ஆகவே தியரிட்டிகல் knowledge உடன் practical organising ability உள்ளவர்களுக்குதான் வேலைக் கூடிவரும்.

அப்பா அவர்களைப் பொறுத்தவரையில் ஒரு காரியம் கூடி வரவேண்டுமென்றால் காரிய பூர்த்திக்கான வெளி அம்சமும், உள்ளம்சமுமான இவ்விரண்டுமே நிறைவாக இருக்க வேண்டும். காரியப் பூர்த்தியை அவர் நான்கு கட்டங்களாகப் பிரித்துள்ளார். காரியப் பூர்த்திக்கான உள்ளம்சங்களும் மற்றும் வெளியம்சங்களும் நான்கு வெவ்வேறு விதமாக இணைகின்றன என்பதால் இப்படி நான்கு கட்டங்களை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். முதல் கட்டத்தில் உள் பர்சனாலிட்டியும், வெளி சூழ்நிலைகளும் இரண்டுமே பாஸிட்டிவாக இருப்பதால் முதல் கட்டத்தில் இருப்பவர்கள் எந்த வேலை செய்தாலும் அது கூடிவரும் என்றாகிறது. Graphஆக போட்டால் முதல் கட்டத்தை பாஸிட்டிவ், பாஸிட்டிவ் ++ என்று போடலாம். முதல் கட்டத்தில் இருப்பவர்கள் காரியப் பூர்த்திக்கு மிகவும் உகந்த பர்ஸனாலிட்டி அம்சங்களை வைத்துக் கொண்டிருப்பார்கள். அதாவது கடினமாக உழைக்கும் திறன், வேலையில் முழு ஈடுபாடு, நன்றாக organise செய்யக்கூடிய திறன், வேலையை சிறப்பாகச் செய்யக்கூடிய working skills மற்றும் காரிய பூர்த்திக்கு உதவக்கூடிய quality, harmony, punctuality, சுத்தம் போன்ற பண்புகளைக் கடைபிடிப்பதில் ஆர்வம் என்றிவையெல்லாம் அவரிடம் காணப்படும். அதே சமயத்தில் வெளி பக்கத்தில் காரிய பூர்த்திக்கு உதவக்கூடிய விஷயங்களான நிறைய முதலீடு, தகுந்த டெக்னாலஜி மற்றும் manpower support மற்றும் வெளி மார்க்கெட் demand என்றிவை எல்லாம் இப்படிப்பட்டவருக்குச் சுலபமாகவும் கிடைக்கின்ற சூழ்நிலையில் அவர் இருப்பார். இப்படி உள்ளேயும் மற்றும் வெளியேயும் இரண்டு பக்கமும் விஷயம் பாஸிட்டிவாக இருப்பதால் இப்படிப்பட்டவர்கள் அவர்களுக்குத் தெரிந்த எந்த வேலையைச் செய்தாலும் கூடிவரும் அளவிற்கு அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இரண்டாவது கட்டத்தில் உள் பர்சனாலிட்டி பாஸிட்டிவாகவும், காரிய பூர்த்திக்கு ஏற்றதாகவும் இருக்கும். ஆனால் வெளி சூழ்நிலைகள் காரிய பூர்த்திக்கு சாதகமாக இருக்காது. வேறு வகையாகச் சொன்னால் இந்தக் கட்டத்தில் இருக்கின்ற நபர் கடின உழைப்பாளியாகவும், திறமைசாலியாகவும், உற்சாகம் நிறைந்தவராகவும், காரிய பூர்த்திக்கு ஏற்ற valuesகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருப்பார். இருந்தாலும், வெளி சூழலில் போதுமான முதலீடு, மற்றும் manpower, support, market demand போன்ற வெளி சப்போர்ட் அவருக்கு இல்லாமல் இருக்கும். ஆகவே இந்தக் கட்டத்தில் இருப்பவருக்கு உள்ளே பாஸிட்டிவாகவும், வெளியே நெகட்டிவாகவும் இருக்கிறது. இரண்டாம் கட்டத்தை அப்பா பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அதாவது ப்ளஸ், மைனஸ் என்று குறிப்பிடுகிறார். இக்கட்டத்தில் இருப்பவர்கள் வேலையை ஆரம்பித்தார்கள் என்றால், பணப்பற்றாக்குறை மற்றும் ஆள் பற்றாக்குறை மற்றும் மார்க்கெட்டில் டிமாண்ட் இல்லாதிருத்தல், இவை போன்ற காரணங்களால் ஆரம்பத்தில் இவர்களுக்குப் பலவிதமான சிரமங்களும், தடைகளும் வரத்தான் செய்யும். இருந்தாலும் உள் பர்சனாலிட்டி பாஸிட்டிவாக இருப்பதால், இந்தச் சிரமங்கள் மற்றும் இடர்ப்பாடுகளை எல்லாம் முறியடித்து முடிவில் இந்த நபர் வெற்றிகரமாகத், தான் எடுத்துக் கொண்ட வேலையைச் செய்து முடிப்பார். மூன்றாவது கட்டத்தில் உள் பர்சனாலிட்டி வேலை மற்றும் காரியப் பூர்த்திக்கு எதிரானதாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில் வெளி சூழ்நிலைகள் காரியப் பூர்த்திக்கு சாதகமாக இருக்கும். காரியப் பூர்த்திக்கு எதிரான பர்ஸனாலிட்டி என்றால் இக்கட்டத்தில் இருக்கின்ற நபர் சோம்பேறியாகவும், திறமை குறைந்தவராகவும், வேலையில் ஈடுபாடு இல்லாதவராகவும், work values எதையும் ஏற்றுக் கொள்ளாதவராகவும் இருப்பர். பர்ஸனாலிட்டி இப்படி இருந்தாலும், பணக்காரத் தகப்பனார் அமைந்திருந்தால், இவர் புதிதாக ஏதேனும் ஒரு பிஸினஸ் தொடங்க விரும்பினால், அதற்குத் தேவைப்படுகிற முதலீடு, டெக்னாலஜி, manpower support என்றிவை எல்லாமே அவருடைய தந்தையார் மூலம் அவருக்கு உடனடியாகக் கிடைக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறைய முதலீடு மற்றும் ஆள் பலம் இருப்பதால் ஆரம்பத்தில் வேலை நன்றாகவே நடக்கும். இருந்தாலும் நாளடைவில் பர்ஸனாலிட்டி காரிய பூர்த்திக்கு எதிராக இருப்பதால் ஆரம்ப அனுகூலங்களையும் மீறி பர்ஸனாலிட்டியின் நெகட்டிவ் அம்சங்கள் வெளிப்பட்டு, வேலை கெட்டு, இறுதியில் தோல்வியைச் சந்திக்க நேரிடும். இந்த மூன்றாவது கட்டத்தை நெகட்டிவ் மற்றும் பாஸிட்டிவ் என்றும், மைனஸ், ப்ளஸ் என்றும் அப்பா குறிப்பிடுகிறார். நான்காவது கட்டத்திற்கு வந்தால், உள் பர்சனாலிட்டியும் சரி, வெளி சூழ்நிலையும் சரி, இவை இரண்டுமே காரிய பூர்த்திக்கு எதிரானவைகளாக இருக்கும். உள்ளேயும் எந்த சிறப்பும் இருக்காது. வெளியேயும் எந்தச் சிறப்பும் இருக்காது. இப்படிப்பட்ட கட்டத்தில் இருப்பவரால் எந்த ஒரு வேலையையும் தொடங்கவே முடியாது. ஆகவே இருப்பதிலேயே மோசமான கட்டம் இதுதான். இந்தக் கட்டத்தை அப்பா அவர்கள் நெகட்டிவ் மற்றும் நெகட்டிவ், அதாவது மைனஸ் மற்றும் மைனஸ் என்று குறிப்பிடுகிறார்.

அன்னை அன்பர்களுக்கு இன்னர் பர்சனாலிட்டி பாஸிட்டிவ் ஆகவும், காரிய பூர்த்திக்கு உகந்ததாகவும் இருந்தால் அது ஒன்றே போதும். வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் மற்றும் அதிகபட்சமாக தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்ற உண்மையான ஆர்வம் இருந்தால் அன்பர்களுக்கு அதுவே போதும். அவர்களுக்குச் சாதகமான வெளிச் சூழ்நிலைகளை அன்னை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்து, எப்போதுமே அன்பர்கள் பிளஸ் மற்றும் பிளஸ் என்று சொல்லப்படுகின்ற முதல் கட்டத்திலேயே இருக்கும்படியும் செய்வார். அன்னையின் அருள் எந்நேரமும் backgroundஇல் இருக்கும் என்பதால் அன்பருடைய முயற்சிகளுக்குண்டான பலனை அருள் பல மடங்கு பெரிதாக்கி, ஒன்றுக்கு ஆயிரமாக அன்பர்களுக்குப் பலன் கிடைக்கும்படியும் அருளால் செய்ய முடியும். ஆகவே அன்னைக்கு உகந்த வகையில் இருப்பதும், செயலாற்றுவதும் தான் நம் வேலை. வாழ்க்கை எப்படிப்பட்ட பலனை நமக்குக் கொடுக்கிறது என்பது அன்னையினுடைய வேலை என்று நம்பி நாம் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம்.

********

 
மனத்தை அறிவது மனிதனை அறிவது.
 

*******



book | by Dr. Radut