Skip to Content

12. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

அன்னை இலக்கியம்

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

அந்த ஆச்சரியக்குறியை நம் மனதிலிருந்து விடுவிக்க வேண்டும். நம் வேண்டுதலை, ஒருமுகமாக, எந்த சஞ்சலமுமின்றி, அன்னை என்ற தெய்வத்திடம் கூறிவிட்டு, வேண்டி, அதன்பின் அதைப் பற்றிய மன உளைச்சலை நம்மிடமிருந்து விலக்கியேவிட வேண்டும். அன்னையிடம் நாம் குழந்தையாகத்தான் மாற வேண்டும். ஆனால், பிடிவாதக் குழந்தையாக அன்று. அன்னையை நம்பும், சரணாகதியாக சரணடையும் பெரிய குழந்தையாக, மனதளவில் உருகும் குழந்தையாக, தாய் மடியை அடைக்கலமாகக் கொண்டு, மடியில் முகம் புதைத்து, கண்கள் மல்க, நம் ஆதங்கத்தை வெளியிடும் குழந்தையாகத்தான் நாமிருக்க வேண்டும். நம் மனதின் உணர்வுபூர்வமான இந்த சரணாகதிதான் நாம் அன்னையிடம் நெருங்கச் செய்யும் வழியாகும். இந்த வழியை நாம் கைவிடாமல், உணர்ந்து செயல்பட்டோமானால், நம் வாழ்க்கையில் ஒரு சுமுகம், ஓர் ஆனந்தம், ஒரு மகிழ்ச்சி, ஓர் ஏற்றம், ஒரு நிம்மதி, அத்தனையுமே நமக்கு புதையல்போல் கிடைக்கும் என்பதை, நம்மால் உணர்வுபூர்வமாக உணர முடியும்என்பது உறுதி.

இதெல்லாம் படித்தவர்களுக்கு, ஓர் ஆதாரம் கிடைத்தால், அதை அப்படியே அலசி, ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் என்றால், பாமரர்களுக்கு, யார், எது சொன்னாலும் உடனடியாக ஏற்று, அதன்படிச் செய்வார்கள், அவர்களின் சக்திக்கேற்ப. அது போலத்தான் அன்னம்மாளின், அவள் மருமகளின் அன்னையிடம் இருந்த நம்பிக்கையும், பிரார்த்தனையும் மகனை எழுந்து உட்கார வைத்தது. அவன் மனதைத் திருந்தவும் வைத்தது. அவர்களின் குடும்பம் இனியதாக, குறையில்லாததாக, சந்தோஷத்துடன் ஆரம்பித்தது. இனி அந்த சந்தோஷமான ஆரம்பத்திற்கு முடிவேது! இனி அவர்கள் குடும்பம் அன்பும், பாசமும், நேர்மையும், நேசமுமாக துளிர்த்து, வளர்ந்து, கிளைவிட்டு, பரந்து வளரும் மரமாக அல்லவா மாறப்போகிறது!

அன்னை என்கிற மூன்றெழுத்து மந்திரம், அவர்களின் சிறிய வீட்டில் இனி பிரகாசமான விளக்காக அல்லவா, "நந்தா” விளக்காக வெளிச்சம் என்னும் ப்ரும்மாண்டத்தைத் தரப்போகிறது.

கேட்கும்போதே நம் மனம் பரவசப்படுகிறதுதானே. நம் மனமும், நாமும் அதுபோல், அந்த தாரக மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்கிற எண்ணமும், ஆசையும் முட்டி மோதிக்கொண்டு, நம் இதயத்துக்குள் குதியாட்டம் போடுகிறதுதானே. அதை அப்படியே, எப்போதும்போல் அந்த குதூகலமான மகிழ்ச்சியோடு அன்னையை நம் மனதார ஏற்றுக்கொள்வோம்.

******

தியானமையத்திற்கு, கட்டிடத்திற்கும், கிரானைட்டிற்கும் செலவழித்த அந்த மனிதரின் பெயர் பார்க்கவன்.

அன்று தியானமையத்தின் ஆண்டு விழாவை விமரிசையாக, அதே சமயம் அமரிக்கையாகக் கொண்டாடினார்கள். பக்தர்களின் கூட்டம், அதிகமாகயிருந்தாலும், அவரவர் அன்னையிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, அமைதியாக கையில் (ஸ்வீட்) பிரசாதத்துடன் சென்றனர்.

பார்க்கவன் காலையில் வந்தவர், இரவு பத்து மணிவரை இருந்து, அவரும் சாதகர்களுடன் சேர்ந்து, கூடமாட அவ்வளவு வேலையையும் செய்தார். களைப்புஎன்பதே அவரிடமில்லை. ஓர் உற்சாகம், துள்ளலாக அவரிடம் இருந்தது. அடிக்கடி அவர் பார்வை அன்னை, ஸ்ரீ அரவிந்தரை கனிவுடன் நோக்கும்போதெல்லாம் கண்கள் கசிந்தது புரிந்தது.

சத்தியனும், மாமாவும், பார்க்கவனை, அவர் மனதிலிருக்கும் விஷயத்தைப்பற்றி இதுவரை அவர்கள் கேட்கவில்லை. கேட்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை. எல்லாமே அன்னையிடம் ஒப்படைத்துவிட்டு, அவர் நிச்சலனமாகயிருக்கும்போது, நாம் ஏன் அதைக் கேட்டு சலனத்தை ஏற்படுத்த வேண்டும்? சொல்ல வேண்டியது அன்னையிடம். அதை அன்னை அல்லவா எதைச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்வார்என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அதை நாம் இடையில் தடையிட்டுப் பேசுவது கூடாதல்லவா? மௌனமாகவேயிருந்தனர்.

நாட்கள் வாரத்தைக் கடந்து மாதங்களாயின. அப்போதுதான் பார்க்கவன் கை நிறைய மட்டுமல்ல, ஒரு பெரிய மூட்டைபோல், ஆளை வைத்து தூக்கிக்கொண்டு வந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன்பு வைத்து, கண்கள் நிரம்ப, சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கினார். அவர் முதுகு குலுங்குவதிலிருந்து, அன்னையிடம் அவர் மனம் கசிந்து கண்ணீர் பெருக்குவது புரிந்தது. மாமாவும், சத்தியனும், அவருக்காக அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வேண்டினரே தவிர, அவரைத் தொந்திரவு செய்யாமல் அமர்ந்தனர்.

சில நிமிடங்களில் தெளிந்து எழுந்தவர், தான் கொண்டு வந்ததை ஆபீஸ் ரூமில் வைத்தார்.

"அன்னை எனக்கு நல்ல வழி காட்டிவிட்டார். அதனால்தான்... அதனால்தான்...'' மேலே வார்த்தைகள் வாராமல் கண்ணீர் வழிய, இரு கரம் கூப்பி, அந்த மூட்டையைக் காண்பித்தார்.

"பார்க்கவன்... சந்தோஷம். ஆனால் ஒன்று... இதை நீங்கள் வாசலிலிருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து, உங்கள் கைப்படவே கொடுத்துவிடுங்கள். இந்த தியானமையத்திற்குள் வேண்டாமே. இங்கு இருக்கும் சாதகர்கள் பூப்பிரசாதம் கொடுக்கிறார்கள் இல்லையா, அதுவும் வருபவர்கள் திரும்பப் போகும்போது கொடுக்கிறார்களே... அப்போதே... உங்கள் கையாலேயே கொடுத்து விடுங்கள்'' என்று நாசூக்காகத் தெரிவித்ததில், அவரும் புரிந்து கொண்டு, அதன்படியே செய்தார்.

தியானமையத்தின் சாதகர்களுக்கும் கொடுத்து, பின் ஆபீஸ் அறையில் சத்தியனுடனும், மாமாவுடனும் நெகிழ்ந்து பேசினார்.

"அன்னையோட அருளால என்னோட மகன் மீண்டு வந்து விட்டான். எங்கேயிருந்துன்னு உங்ககிட்ட சொன்னா, அதிர்ந்து போயிடுவீங்க. வழி, வகை தெரியாம, அலைபாயற மனசோடத்தான் வந்தேன். ஆனா... நான் பண்ணின ஒரே தவறு, சம்பாதிக்கிற பணத்தை இன்னும், இன்னும்னு அவலாதியோட பிஸினஸ் பண்ணியவன், என் வாரிசான ஒரே மகனை, கவனிக்கத் தவறியதிலே... கீழ்த்தரமான போதை மருந்து சாப்பிடறதிலேயும், குடிக்கிறதிலேயும் மூழ்கியேபோனான். அதுலேருந்து மீண்டு வர அவன் என்கிட்ட வந்து, என்னைக் கட்டிப்பிடிச்சுண்டு, "அப்பா... என்னை இந்தப் படுகுழியிலேருந்து வெளியே கொண்டு வாங்கப்பா... அப்பா... ப்ளீஸ்பா... என்னால முடியலே... அப்பா... வீட்டை விட்டு வெளியே போக பயமாயிருக்குப்பா... நான் வெளியே போனா அவா என்னைப் பிடிச்சுப்பாளே... விடமாட்டா... பணம் கொண்டு வரச் சொல்லி... என்னை அடிப்பா... மருந்தைக் குடுத்து... குடுத்து, என்னை அடிக்கிறாப்பா... இதோ பாரு... இங்கே பாரேன்... முதுகுல பாரு... காலுல பாரு... பார்த்தியா... முடியலே... எனக்கு வெளியே போக பயமாயிருக்கு... அப்பா... என் உடம்பு பூராவும் நடுங்கறது. முடியலே... ஆனா... இனிமே அதை எடுத்துக்கக்கூடாதுன்னுதான் நினைக்கறேன்... ஆனா... ஒடம்பெல்லாம் நடுங்கி, உதற ஆரம்பிச்சுடறதே... அப்பா... என்னைக் காப்பாத்துப்பா... காப்பாத்துப்பா... அப்பா... அப்பா... அ...ப்...பா...''

தட்டுத் தடுமாறி அவன் பேசிய பேச்சுக்களும், நடுங்கும் உடலும், எதையோ பற்றிக்கொள்ளத் துடிக்கும் துடிப்பும்... தாங்க முடியலே... என் மனைவி மயக்கம் போட்டு விழுந்தேவிட்டா. ஆனா... நான்... தவிக்கிற, பரிதாபமான பார்வையில நடுக்கத்தோட கெஞ்சும் என் மகனை கட்டியணைத்தவன், மனைவியையும் தடவிக்கொடுத்து... நான் வாய்விட்டு கதறிய கதறல் இந்த அன்னைக்கு எப்டி எட்டித்துன்னு எனக்குத் தெரியவுமில்லே... புரியவுமில்லே...

ஆமாம்... நான் கதறிக் கதறி ரெண்டு பேரையும் என்னோடச் சேர்த்துண்டு, நான் ஒரு ஆண், குடும்பத்தோட தலைவன், நான்தான் அவர்களை ஆதரவோடு நடத்தணும்கறதெல்லாம் மறந்து, "அம்மா! அம்மா! அம்மா!...''ன்னு வேறெதையும் சொல்லத் தெரியாம கதறிக் கதறித் தளர்ந்து, மயக்கமாயிட்டேன். அந்த மயக்கத்துலேயே என் கண்ணுக்குத் தெரிந்தது ஒரு உருவம். அதுவரை நான் பார்த்தே அறியாத உருவம். ஆனா, எங்கேயோ, எப்போதோ பார்த்த மாதிரியும், அந்த கண்களின் கருணை, அன்பு, தீர்க்கம், எல்லாமே என்னோட சரீரத்துக்குள்ளே புகுந்து என்னமோ செஞ்சது. ஆனா, அது மட்டுமல்ல, என் வாயிலிருந்து "அம்மா! அம்மா!'' என்கிற வார்த்தையைத் தவிர வேறெதுவும் வராதது ஏன் என்பது அப்போ புரியலே... தெரியவுமில்லே. ஆனா... அந்த மயக்கத்துலயும் என் கண்களுக்குத் தெரிந்தது... இன்னும் ஞாபகமிருக்கு. வயதான மூதாட்டி... கருணை நிரம்பிய கண்களால் என்னைப் பார்த்து புன்னகைத்தது... என்னால் மறக்கவே முடியாது. அந்தக் கனிவும், பாசம் நிரம்பிய பார்வையும், அந்த க்ஷணமே அவர் கால்களில் வீழ்ந்து கதற வேண்டும், அந்தப் பாதங்களைப் பற்றிக்கொண்டு சரணாகதியாக வேண்டும்... "விடமாட்டேன்... அந்த பாதங்களை விடமாட்டேன். நீ யாரென்று தெரியாது. எங்கிருக்கிறாய், தெரியாது. ஆனால் என் மனதில் நீ பதிந்துவிட்டாய். நீதான் என் தெய்வம். நீதான் என்னைப் பற்றிக்கொண்டு, என் குடும்பத்தை நல்வழியில், நல்ல இதமான, கசடுகளற்ற பாதையில் எங்கள் கரம் பிடித்து, அழைத்துச் செல்ல வேண்டும். அம்மா! நீ எங்கிருக்கிறாய்? எங்கே இருக்கிறாய்? நீ இருக்கும் இடத்தை எனக்குத் தெரியப்படுத்து. அம்மா... உன் பாதமே சரணம்'' என நான் வீழ்ந்து வேண்டுகிறேன். எல்லாமே என் மனதினுள்தான் இந்தச் சரணத்தைச் செய்கிறேன். "நீ எங்கு இருக்கிறாய்... சொல்லம்மா... காட்டம்மா... அம்மா... அம்மா... அம்மா... நீ எங்கிருந்தாலும் அலைந்து திரிந்தாவது கண்டுபிடிப்பேன். அதற்கான வழியை மட்டும் சொல்லம்மா... அம்மா... அம்மா... வழிகாட்டு... வழிகாட்டு... அம்மா...''

நானும் மயங்கித்தான்போனேன். ஆனால், என் வாயில் மட்டும் "அம்மா, அம்மா'' என்கிற வார்த்தைகள் தவிர வேறெதுவுமில்லை. சிறிது நேரத்திலேயே எனக்கு மயக்கம் தெளிந்தது. ஆனால் தாயும், பிள்ளையும் அப்படியே கிடந்தனர். சரி, சமையற்காரம்மாவைக் கூப்பிட்டு ஏதாவது கஞ்சியோ, பாலோ... எதையாவது தரச் சொல்லி, நானும் குடித்து, அவர்களுக்கும் தரலாம் என்று போனால்...''

மேலே வார்த்தைகள் வராமல் தேம்பினார் பார்க்கவன்.

"பரவாயில்லே... போறும். கஷ்டப்பட வேண்டாம். அன்னை அருளாலே எல்லாம் சுமுகமாத்தான் ஆயிடுத்தே. போறும் பார்க்கவன்...'' சத்தியன் கூற, அவர்... மறுத்தார்.

"இல்லே... நான் சொல்லியே ஆகணும். சமையற்காரம்மாவைப் பார்க்கப் போனால், ஒரு சின்ன படத்தின் முன் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாங்க. இத்தனை நாளும் நான் சமையலறைப் பக்கம் போனதேயில்லை. அந்த அவசியமுமில்லே. எனக்கு சட்டுனு, அவங்க மேலே ஒரு கோவம்தான் வந்தது. வீட்டுல இத்தனை அமளி நடக்கறப்ப இதென்ன இத்துனுண்டு படத்தை வச்சுண்டு உக்காந்திருக்காங்கன்னு தான் தோணித்து.

ஒரு வினாடி நேரத்துல நான் அவங்க அருகில போய், திட்ட போனபோது, என்னையறியாமலேயே என் கண்கள் அந்தச் சின்ன படத்தின் மேலே போச்சு. அவ்வளவே... சரீரமே சூடாகி வியர்த்துக் கொட்டி, நடுங்கித்து. என் உணர்வில்லாமல், தானாகவே என் கைகளிரண்டும் கூப்பின. அப்படியே "அம்மா... அம்மா''ன்னு சரணாகதியா அவங்க காலுல வீழ்ந்தேன், கதறினேன். அது சந்தோஷமா, சங்கடமான்னு எனக்குத் தெரியலே, புரியவுமில்லே.

சமையற்காரம்மா விதிர்விதிர்த்துத் தன் தியானத்துலேருந்து எழுந்துட்டாங்க. நான் விழுந்து கதறினதைப் பார்த்தும், அவங்க மௌனமாய், தானும் வேண்டிகிட்டாங்க. ஒருவழியாய் என் மனதும், சரீரமும் அடங்கி, எழுந்தேன். அந்த சமையற்காரம்மாவையும் இரு கரம் கூப்பி வணங்கினேன். அந்தப் படத்துலே இருக்கிறது யாருன்னு கேட்டேன். அன்னைன்னு சொன்னாங்க. ஸ்ரீ அரவிந்தர் பத்தியும், அன்னையைப் பத்தியும் சொன்னாங்க. என் மகனுக்காக அவங்க தினமும் அன்னைகிட்ட வேண்டிக்கிட்டதையும் சொன்னாங்க. அப்படியே அவங்க கால்கள்ளயும் விழுந்து குலுங்கிக் குலுங்கி அழுதேன்.

"இல்லே... அன்னையிருக்கிறப்ப, இனி அழக்கூடாது. அவங்க எல்லாத்தையும் சரி செய்வாங்க. அதோட ஆரம்பம்தான் இன்னிக்கு உங்களுக்கு ஏற்பட்டது. இனிமே உங்க மகனுடைய எதிர்காலத்தை அன்னையிடமே ஒப்படைச்சுடுங்க. மாம்பலத்துல தியானமையம் இருக்கு. உங்க குடும்பத்தோட போய்ட்டு வாங்க. உங்களால முடிஞ்ச காணிக்கையைப் போடுங்க''ன்னு சொன்னாங்க. ஆனா, என்னைத் தவிர அவங்க ரெண்டு பேரும் வர்ற மனநிலையிலயில்லே. அதுக்காக, அவங்களைக் கண்டிப்பும் செய்யலே, தொந்திரவும் தரலே. நான் மட்டும் வந்துண்டிருந்தேன். என் கனவுல வந்தவங்க அன்னைதான். அதுவும் என் வீட்டிலேயே இருந்திருக்கிறதைத் தெரிஞ்சுக்காத மூடனாயிருந்துருக்கேனேன்னு மனசு கிடந்து தவிச்சுது. அங்கே தியானமையத்துக்குத் தினமும் போய்ட்டு வந்தேன். அப்பத்தான் ஒரு நாள் இந்தப் பக்கமா வந்தபோது, இங்கிருக்கிற தியான மையத்தைப் பார்த்தேன். அங்கே, என்னோட அன்னைக்குன்னு ஏதாவது செய்யணும்னு தோணித்து. அதான்... இப்ப என் மகன் நல்லாயிட்டான். வீடும் சந்தோஷத்தோடயிருக்கு. அன்னை, ஸ்ரீ அரவிந்தரோட படங்களை வச்சு தினமும் எல்லாருமா தியானம் செய்யறோம். எங்கத் தோட்டத்துலயிருக்கிற பூக்களை அன்னைக்காகன்னே பறிக்கிறோம். அதுவும், என் மகனே பறித்து, தட்டில் அடுக்கி, தியானம் செய்யிறான். அந்த சந்தோஷம்தான் இன்னிக்கு... இன்னிக்கு'' மேலே பேச்சு வராமல் அழுகை தடுத்தது. "அவனை இங்கே அழைச்சுண்டு வரணும்னுதான் ஆசை. அன்னையின் உத்திரவுக்காகக் காத்திருக்கேன். அதுவும் கண்டிப்பா நடக்கும்கறது தெரியும். அன்னையின் இச்சைப்படி நிச்சயமா நடக்கும். அந்த நம்பிக்கை எங்க எல்லாருக்குமே பூரணமா இருக்கு. ஆமாம், இருக்கு...''

*****

கண்கள் தளும்ப, இரு கரம் கூப்பி நின்றார் பார்க்கவன்.

ஜனவரி முதல் தேதி. தியானமையம் புத்தம் புதியது போல் தோற்றமளித்தது. வந்தவர்களும் புதிய ஆடை அணிந்து, எந்தவிதமான பேச்சுமின்றி, அன்னையை ஸ்மரணம் செய்தபடி, வரிசையில் நின்று, எந்த தள்ளல், போட்டியின்றி, அமைதியாக, வரிசையாக நகர்ந்து, அன்னையின் தரிசனத்தை ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு, மனதில் ஒரு நிம்மதி எனும் ஊற்றை சுமந்தபடி வெளியே வந்தனர். பூ பிரசாதமும், சாக்லெட்டும் வாங்கியபடி அமைதியாக வெளியேறினர்.

*****

பிப்ரவரி 21ந் தேதி. அன்னையின் பிறந்த நாள். தியானமையம் கோலாகலமாய் தோற்றமளித்தாலும், அமைதியின் உச்சம் வெகு நன்றாகவேயிருந்தது.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே வருகிறவர்களின் வருகை ஆரம்பித்தது. சரியாக ஆறு மணிக்கு தியானம் ஆரம்பிக்கும்போது, அந்த அமைதியின் கனம், கனக்காமல், ஒரு பவித்திரமான சந்தோஷத்தையும், அமைதிமிக்க சூழ்நிலையையும், நிரம்பிய மனதின் மகிழ்ச்சியையும், சுகந்தமான ஊதுபத்திகளின் நறுமணத்தையும் அங்கிருந்த அனைவர் மனதிலும் நிரம்பச்செய்தது.

இத்தனையிலும் மிக மிக ஆச்சர்யம், தியான நேரமான அந்த அரை மணி நேரத்தில், அந்த வீதியில் எந்த வாகனங்களின் சத்தமோ, இரைச்சலோ இல்லவேயில்லை.

"ஆத்மசோதனை”யில் "வழிபாடு” என்ற கட்டுரையில் 10 வழிகளினைப் படித்தாலே பரவசமான பக்தி வரும். எப்படி என்பது மிகத் தெளிவாக உள்ளது. அன்று, அந்த நிலையில்தான் தியானமையத்தின் சூழ்நிலை அமைந்திருந்தது. இல்லையெனில் காகத்தின் கரைசல்கூட இல்லையே, அது எப்படி? சூழல் என்பது பக்திக்கு ஏற்ப அமைதி இருக்கும் என்பதின் அடையாளம் அது.

அமர்ந்திருந்தவர்களிடம், எவரிடமும் எந்த அசைவுமேயில்லை. சுற்றுச்சூழல் வெகு ரம்யமாக, இதமான காற்றின் தழுவலில், அந்த தியானமையத்தில் தியானத்தில் அமர்ந்திருந்தவர்களின் சரீரம் பூராவுமாக அன்னையின் சரணம் மட்டுமே சுழன்றுகொண்டிருந்ததில், பக்தியின் பரவசம் அனைவரையும் தழுவியிருந்தது.

பார்க்கவன் அன்று தன் மனைவியையும், மகனையும், சமையல் செய்யும் மாமியையும் அழைத்து வந்திருந்தார். தியானம் சம்பிரமமாக முடிந்தது. அனைவரின் விழிகளிலும் ஆனந்தபாஷ்பம். அவரின் மகன் பெயர் சாத்வீக்.

பெயருக்கு ஏற்றமாதிரியிருந்த பையன், மாறுபட்டு, கேடுகெட்டு, பரிதவித்து, அலங்கோலமாக வந்து பெற்றவர்களின் அணைப்பில் தன் பயத்தை அணைத்து, "அன்னையே சரணம்' என சரணாகதியாக வீழ்ந்து கதறிய கதறலில் அவனிடமிருந்த அத்தனை கேடுகெட்டவைகளும் கரைந்தேபோக, புதிய பிறவியாக பிறப்பெடுத்து, பெற்றவர்களின், சமையற்கார மாமியின் ஆதரவான, அனுசரணையான பேச்சிலும், நல்ல ஆகாரத்திலும், இது அத்தனையையும் மீறி, மூலாதாரமான அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் கடாட்சமும், கடைக்கண்ணும் அவன் மீது படர, சாத்வீக் அருமையான பிறவியை மீண்டும் எடுத்தான் என்பதே சரியானதாகும்.

ஒரே மகனைப் பெற்று, அவனை வளர்த்து, அந்த மகன் வழி தவறி, பாதை மாறிப்போனதில், மனநிம்மதிக்காக அலைந்து, திரிந்து, அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் காலடிகளைப் பற்றிக்கொண்டு, மனம் முழுவதும் அன்னையும், ஸ்ரீ அரவிந்தருமே சஞ்சாரம் செய்ய, மகனின் மீட்பு, அவர்களை சரீரம் பூராவுமே அன்னையை மட்டுமே சுழல வைத்தது என்றால் மிகையேயில்லை.

*****

ஒரு வாரம் சென்றது. இன்னும் அந்த முதல் தேதியின் சந்தோஷம் அனைவரின் மனதிலும் நிரம்பித் தளும்பியதில், அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையுமே எந்த நேரத்திலும் நினைக்கும்படியாக சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும், பேச்சுக்களும், திடீர்என அனைவருமே வீட்டில் தியானத்திற்கு அமர்வதுமாக, வாய் பேச்சுகள் குறைந்து, எல்லா வேலைகளும் சத்தமின்றி, அனாவசியமானவைகள் அண்டாமல், ஓர் அதீதமான மௌனமே கோலோச்சியதுஎன்றால் மிகையாகாது.

இரண்டு நாட்கள் கடந்திருக்குமா? என்றும்போல் அன்றும் சுறுசுறுப்பாக வேலை நடந்துகொண்டிருந்தது. அன்று ஒரு தலைவரின் இறப்பால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகவிருந்ததால், ராமுவும், சீனுவும் தியானமையத்தின் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு வந்தனர்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம்.

சட்டென எழுந்த ராமு, யாரென்று பார்த்தான். புரிந்தும், புரியாமலும், ஒரே ஒரு கணத்திற்கும் குறைவான நேரத்தில் யோசித்து, சட்டெனக் கதவைத் திறந்தான். மனம் அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் சரணடைந்து, ஸ்திரமாக உட்கார வைத்தது. மௌனமாகவே சென்றான். சட்டெனத் திரும்பினான். வந்தவர் அப்படியே நின்றிருக்க, "உள்ளே வாங்கோ'' கூறியவன் மனதில் அன்னையை ஏந்தியபடி உள்ளே சென்றான்.

தொடரும்...

******



book | by Dr. Radut