Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னை அரவிந்தர் துணை

ஓம் நமோ பகவதே

வணக்கம் பல. சில வருடங்களாக ஸ்ரீ அப்பா அவர்களின் ஆசீர்வாதத்தாலும் மற்றும் அன்னை அன்பர்களின் அன்பினாலும் ஸ்ரீ அன்னை அரவிந்தரை நாங்கள் தெரிந்துகொண்டோம். இத்தனை வருடங்களில் அன்னையின் அருளில் ஏற்பட்ட அனுபவங்கள், கருணை காட்டிய சம்பவங்கள், நெகிழ வைத்த பல நிகழ்ச்சிகள், சொல்லிக்கொண்டே போகலாம். அன்பர்கள் எல்லோரும் அனுபவித்த விஷயங்கள் தாம்.

நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சுமார் பத்து நாட்கள் முன்பு என் தோழி லக்ஷ்மி (எதிர் flatல் குடியிருப்பவள்) என்னைச் சந்திக்க வந்திருந்தாள். அவள் பேசியபொழுது கவலையுடன் என்னிடம் ஒரு விஷயம் சொன்னாள். தன் கணவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், குடும்பத்தைச் சரியாக நிர்வகிக்க முடியவில்லை, கஷ்டமாக இருக்கிறது என்று. நான் உடனே ஸ்ரீ அன்னையை வணங்கும்படியும், வணங்க வேண்டிய முறைகளைப் பற்றியும் எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன்.

அவளும் சந்தோஷமாக, "அன்னையம்மாவைப் பற்றி எனக்கு தெரியும் மாமி. அந்த அம்மாவின் அருளும் எனக்குக் கிடைத்து இருக்கிறது" என்று சொன்னாள். "அப்படியா!" என்று நான் ஆச்சர்யமாகக் கேட்டவுடன், சொல்ல ஆரம்பித்தாள். கடந்த மே மாதம் கோடை லீவு சமயம் flatல் இருக்கும் குழந்தைகள், தாங்கள் இருக்கும் flatஇன் மொட்டைமாடியில் function நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டு, விமரிசையாகக் கொண்டாடினார்களாம். அப்பொழுது என் தோழி லக்ஷ்மியின் குழந்தைகள் (இரண்டு பெண்கள்) தங்களுடைய அம்மாவின் புதுப்புடவைகளை (2) எடுத்துப்போய் ஸ்க்ரீனாக உபயோகப்படுத்தினார்களாம். விழா இனிதே முடிந்து, ஆடி, பாடி, கண்டு, களித்து, திருப்தியுடன் வந்திருக்கிறார்கள்.

ஆரவாரம் முடிந்து ஒரு வாரம் ஓடிவிட்டது. ஜூன் மாதம் வந்துவிட்டது. ஸ்கூல் திறப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தொடங்கியவுடன், தோழி லக்ஷ்மி தான் புடவைகள் மத்தியில் வைத்து இருந்த 500 ரூபாயை தேடியிருக்கிறாள். பணத்தை காணாமல் போகவே, பயந்துபோய்விட்டாள். தேட, தேட கிடைக்கவேயில்லை. திடீரென்று, புடவைகள் ஸ்க்ரீனாக மாறியது நினைவுக்கு வர, ஓடிப்போய் மாடியில் பார்த்திருக்கிறாள். கீழே விழுந்த 500 ரூபாய் ஒரு வாரம் கழித்து எப்படி இருக்கும்என்று நினைத்து, வருத்தமாகக் கீழே வந்தாள். வந்ததும் வாசலில் ஆட்டோவில் அந்த flatலேயே இருக்கும் சௌ.க்ருபா (இவளும் என் தோழிதான்) குடும்பத்தினருடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தாள். அவர்கள் பாண்டிச்சேரிக்கு ஸ்ரீ அன்னை தரிசனத்துக்காகப் போகிறார்கள் என்பது லக்ஷ்மிக்குச் சட்டென்று நினைவுக்கு வர, உள்ளே ஓடிச் சென்று பத்து ரூபாயை கொண்டு வந்து சௌ.க்ருபாவினிடம் கொடுத்து, ஸ்ரீ அன்னையிடம் சேர்க்கும்படிச் சொல்லியிருக்கிறாள். வாசலிலிருந்து திரும்ப வந்ததும் லக்ஷ்மிக்கு துக்கம் தொண்டை அடைக்க, அழுகை வரும் தருணத்தில், அந்த flatலேயே குடியிருக்கும் அன்பர் "என்ன விஷயம்?" என்று கேட்க, வருத்தத்தோடு எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறாள். அந்த அன்பர் உடனே தன் வீட்டிற்குச் சென்று 500 ரூபாயை கொடுத்துவிட்டு, "function நடந்த இரவு, நான் எதேச்சையாக மொட்டைமாடிக்குப் போனபொழுது இந்த ரூபாய் கிடந்தது. விசாரிப்பவரிடம் கொடுக்கலாம் என்றிருந்தேன்" என்று சொன்னாராம். லக்ஷ்மிக்கு அளவிலாத சந்தோஷம். "அன்னையைப் பார்க்கச் சென்றவர்கள் சென்னையைக்கூடத் தாண்டியிருக்கமாட்டார்கள். அன்னையம்மாவின் அருளை நான் புரிந்துகொண்டேன் மாமி. அம்மாவினிடம் நம்பிக்கை வந்துவிட்டது" என்று கண்ணீர் மல்க கூறினாள்.

இவ்வளவு நம்பிக்கையும், பக்தியும் வைத்தவள் என்னிடம் எவ்வளவு தன்னடக்கத்துடன் கூறினாள். "அவளுக்கு ஒன்றுமே தெரியாது, எனக்குத்தான் எல்லாம் தெரியும்" என்று எவ்வளவு கர்வத்தோடு ஸ்ரீ அன்னையைப் பற்றிச் சொன்னேன். என்னை நான் உணர்ந்ததும் நெகிழ்ந்துபோய்விட்டேன். லக்ஷ்மி வீட்டிற்குச் சென்றதும் ஸ்ரீ அன்னையின் படத்தின் முன் நின்று, "பொல்லாத அந்த கர்வத்தை என் மனத்தைவிட்டு நீக்கிவிட்டாய். என்னை மன்னித்துவிடம்மா" என்று நமஸ்கரித்தேன். லக்ஷ்மியின் எளிமையான பக்திக்கு முன் என் வறட்டுப் பெருமை வெட்கித் தலைகுனிந்தது. அன்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.

-- லலிதா சேதுராமன், சென்னை

 

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
வெளி சக்திகள் புண்படும்படி நம்மைத் தீண்டுகின்றன. இது புற சக்திகளின் செயல் அன்று. அகவுணர்வு தன்னைக் காண புற சக்திகளின் உதவியை நாடுவதால், புற சக்திகள் நம்மை நோக்கி வருகின்றன. அவற்றின் ஸ்பர்சம் நம்மைப் புண்ணாக்குகின்றது.
 
அகம் புறத்தால் விழிப்பது மனத்தைப் புண்படுத்தும்.

 
*****
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
கல்யாணம் என்பது சமூகம் ஏற்படுத்தியது. ஏகபத்னி விரதம் அதன் சிறப்பான நிலை. அதில் ஆன்மீகமில்லை. அவதாரப் புருஷனுக்கு அடுத்த அவதாரத்தில் அது பயன்படவில்லை.
 
கல்யாணத்தின் சிறப்பு சமூகத்துடன் முடிவடைகிறது.
 
*****

 



book | by Dr. Radut