Skip to Content

02. பிரைடு அண்ட் பிரஜிடிஸ் நாவலைப் பற்றிய சில சிந்தனைகள்

பிரைடு அண்ட் பிரஜிடிஸ் நாவலைப் பற்றிய சில சிந்தனைகள்

N. அசோகன்

  1. எலிசபெத்தும், டார்சியும் தாம் விரும்பியதை அடையுமுன் படுகின்ற கஷ்டங்களை எல்லாம் பார்க்கும்பொழுது விழிப்புணர்வு இல்லாதவர்களுக்கு வாழ்க்கை அடிகொடுத்து அந்த விழிப்புணர்வு வந்தபின்னர்தான் அவர்கள் விரும்பும் அதிர்ஷ்டத்தையும், நல்லதையும் வழங்கும்என்று தெரிகிறது.
  2. டார்சியும், எலிசபெத்தும் தங்களுடைய தனித்தன்மையை, உணர்ச்சிகளை வெளிக்கொட்டுவதன்மூலம் வெளிப்படுத்து- கிறார்கள் என்றால், ஜேன் அதே சமயத்தில் வேண்டாத உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் மறைத்து, அவ்வகையில் தன் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறாள்.
  3. திருமதி. பென்னட், எலிசபெத், டார்சி, லிடியா, காலின்ஸ் மற்றும் லேடிகாதரின்என்று இவர்கள் எல்லோரும் வண்ணமயமான பர்சனாலிட்டி உள்ளவர்களாக இருப்பதால் கதையில் விறுவிறுப்பு ஊட்டுகிறார்கள். ஆனால் பர்சனாலிட்டி வண்ணமயமாக இருப்பது தனித்தன்மையைக் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
  4. ஆண் பெண்ணைத் தேடுவதுதான் பொதுவாக நாமறிந்தது. பெண்ணான லிடியா ஆண்களை அதிகமாக விரும்பித் தேடுவது வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. அவளுடைய தாயாருடைய உணர்ச்சிவசப்பட்ட சுபாவம்தான் இதற்கு மூல காரணமாகத் தெரிகிறது.
  5. திருமதி. பென்னட் தம்முடைய மூன்று மகள்களுக்குத் திருமணம் செய்துவைத்துப் பார்க்கிறார் என்பதைக் கருதும் பொழுது, ஆர்வம் காரியத்தை முடித்துக் கொடுக்கும்என்பது தெரிகிறது. அவர்கள் கடைப்பிடித்த அணுகுமுறை கேள்விக்குரியதுஎன்றாலும், அவர்களுடைய ஆர்வம் சாதித்தது என்பது மறுக்க முடியாதது ஆகும்.
  6. அவசரமும், பொறுமையின்மையும் வேலையைக் கெடுத்து, பலனைத் தாமதப்படுத்தும்என்பது திருமதி. பென்னட் முயற்சி எடுக்கும்பொழுதெல்லாம் என்ன நடக்கிறதுஎன்பதிலிருந்து தெரிகிறது.
  7. ஜேனுக்கு அதிர்ஷ்டம் வருவதற்கு முக்கியக் காரணங்கள் இரண்டு. ஒன்று, அவளுடைய தங்கை எலிசபெத்தின் அபார நல்லெண்ணம். இரண்டாவது, அவளுடைய சொந்த கட்டுப்பாடான செயல்பாடுகளுமாகும்.
  8. ஜேனும், எலிசபெத்தும், ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போகிறார்கள். ஆனால் லிடியாவும், கிட்டியும் போட்டிப் போடுகிறார்கள். இவர்களுக்கிடையே மேரி பட்டும்படாமல் இருக்கிறாள். ஒரே குடும்பத்தில் இப்படி இருவர் ஒத்துப் போவதும், மற்ற இருவர் சண்டைபோடுவதும் ஆச்சரியமாக உள்ளது.
  9. எலிசபெத்தும், டார்சியும் தம்முடைய பர்சனாலிட்டியில் சமநிலையையும், நிதானத்தையும் நிலைநாட்டும்பொழுதுதான் அவர்கள் தேடிப்போவதே அவர்களுக்கும் கிடைக்கிறது. அதுவரையிலும் அவர்கள் நாடுவது கைக்குக் கிடைக்காமல் எட்டவே போகிறது.
  10. பெரும்பாலான கணவன்மார்கள் மனைவியர் மீதுள்ள பிரியத்தினால் தாமே மனைவியரிடம் சரணடைந்துவிடுவார்கள். ஆனால் திரு. பென்னட் இப்படி சரணமடைந்ததாகத் தெரியவில்லை. திருமதி. பென்னட் அதிகாரம்செய்து, அவரை அடிபணிய வைத்ததாகத் தெரிகிறது.
  11. மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது எலிசபெத் டார்சியை வெறுப்பதாகத் தெரிகிறது. ஆனால் இருவரும் எதிர்பாராத விதமாக இங்கும், அங்கும் சந்திப்பதை வைத்துப் பார்க்கும் பொழுது, அவன்மேல் அவளுக்கு ஆழத்தில் நாட்டமிருப்பதாகத் தெரிகிறது. நம்முடைய ஆழ்மனது மேல்மனதிற்கு எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும்.
  12. டார்சி முதலில் எலிசபெத்தை பொறுத்துக்கொள்ளலாம்என்று சொல்லிவிட்டு, ஒரே மாதத்தில் அவளுடைய வசீகரமான கண்களைப்பற்றிப் புகழ்ந்து பேசினான். இதிலிருந்து முதலில் ஏற்படுகின்ற அபிப்பிராயம் எவ்வளவு குறையுடையதுஎன்று தெரிகிறது.
  13. ஜேனும், மற்றும் அவளது குடும்பத்தாரும் பிங்கிலியிடம் ஒன்பது மாதமாகக் காரணம் சொல்லாமல் மாயமானதுபற்றி விளக்கமே கேட்காமல்விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. பிங்கிலியும் தானாக முன்வந்தும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. திரைப்படத்தில் ஜேனுடைய காதில் பிங்கிலி இரகசியமாகச் சில வார்த்தைகள் சொல்வதைத்தான் நாம் பார்க்கிறோம். ஒரு நல்ல வரன் கிடைப்பதற்குப் பெண்கள் எவ்வளவு உதாசீனம், மற்றும் ஏமாற்றத்தைப் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணமாகிறது.
  14. எப்பொழுதும் குடித்துக்கொண்டும், உறங்கிக்கொண்டும் இருக்கின்ற பிங்கிலியின் சகோதரியின் கணவரான திரு. ஹர்ட்ஸ் என்பவர் பிரபு வம்சத்தினுடைய சீரழிதலுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார். தான் சந்திக்கின்ற எல்லோரையும் அதிகாரம் செய்கின்ற கேத்ரின் டீ பர்க் என்ற கோமகள் பிரஞ்சுப் புரட்சியின் விளைவுகள் என்னவென்று தெரியாமலேயே நடந்துகொள்வதாகத் தெரிகிறது.
  15. சார்லெட் தனக்கு ஒரு சாதாரணமான, பாதுகாப்பான வாழ்க்கை கிடைத்தால் போதும்என்று முடிவு செய்திருக்காவிட்டால் அவளுக்கு இருந்த நல்லெண்ணத்திற்கு அதற்கு ஈடான உயர்ந்த அதிர்ஷ்டத்தை வாழ்க்கை வழங்கியிருக்கும்.
  16. காலின்ஸ் தனக்கு ஏற்றவரில்லை என்று முடிவு செய்து, அவரை உதறியதால் எலிசபெத் தனக்கு லாங்க்பர்ன் எஸ்டேட் மேலிருந்த பிடியை இழக்கிறாள். ஆனால் அவள் வெளிப்படுத்திய தைரியத்தைப் பாராட்டி, வாழ்க்கை அவளுக்கு பெம்பர்லி எஸ்டேட்டையும், அவளுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ற வரனாக டார்சியையும் வழங்கியது.
  17. எலிசபெத்திற்கு ஜேன்மேல் எவ்வளவு நல்லெண்ணம் இருக்கிறதோ அதே அளவுக்கு கரோலினுக்கு அவளுடைய சகோதரன் பிங்கிலியின்மேல் இருக்கிறது. எலிசபெத் பிரியப்பட்டது ஜேன் வாழ்க்கையில் நடக்கிறதுஎன்றாலும், பிங்கிலி விஷயத்தில் கரோலின் பிரியப்பட்டது நடக்காமல் போகிறது. டார்சி விஷயத்தில் கரோலின் எலிசபெத்தோடு போட்டி மனப்பான்மையுடன் நடந்து கொண்டதால், கரோலினுடைய கவனம் ஒருமுகமாக இல்லாமல் சிதறிப்போனது. எலிசபெத் ஒருமுகமாகச் செயல்பட்டு ஒரு பலனைமட்டும் தேடி வெற்றி பெறுகிறாள். ஆனால் கரோலினோ டார்சி தனக்கு கணவனாக வர வேண்டும், அதே சமயத்தில் ஜார்ஜியானா பிங்கிலிக்கு மனைவியாகவும் அமைய வேண்டும் என்று இரண்டு பலன்களுக்கு ஒரே சமயத்தில் ஆசைப்பட்டு, அதற்குரிய பர்சனாலிட்டிவலிமை இல்லாமல் தோற்றுப் போகிறாள்.
  18. திருமண விஷயமாக எலிசபெத்தை டார்சி அணுகியபொழுது அவனுக்குள் ஒரு தடுமாற்றம் இருந்ததால் அவன் முயற்சி தோல்வியில் முடிகிறது. ஆனால் காலின்ஸிற்கு அப்படி ஒரு தடுமாற்றம் எதுவுமில்லை. முழுத்தீர்மானத்துடன்தான் எலிசபெத்தை அணுகுகிறான். இருந்தாலும், அவனும் தோற்றுப் போகிறான். ஆகவே திருமண விஷயத்தில் ஒருவருடைய விருப்பம்மட்டும் முடிவானதில்லை. சம்பந்தப்பட்ட அடுத்தவருடைய மனநிலையையும் நாம் கருத வேண்டும்.
  19. விக்காமுடைய குணத்தை வைத்துப் பார்க்கும்பொழுது, அவனுடன் ஓடிப்போன லிடியா அனாதையாக கைவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கை டார்சியின் ரூபத்தில் உதவியை அனுப்புகிறது. லிடியாவிற்கு உதவுவதை, தன்னைத் திருத்திக்கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்புஎன்று எடுத்துக் கொள்கிறான். லிடியாவினுடைய குடும்பத்தினருடைய நல்லெண்ணம் அவளைச் சுற்றி ஒரு நல்ல பாதுகாப்பான சூழலாக அமைந்து, நெருக்கடியைச் சமாளிப்பதற்கு ஏற்ற சரியான நபராக டார்சியை, சரியான நேரத்தில் எலிசபெத்தின் முன் நிறுத்துகிறது.
  20. இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியதை வெளிப்படுத்துவது தவறாகக் கருதப்படுகிறது. ஆனால் லிடியா மறதியாக அந்த ரகசியத்தை வெளியிட்டதால்தான் டார்சிக்கு அதிர்ஷ்டமே வருகிறது. வெட்கப்பட வேண்டிய விஷயங்களை மறைத்து வைத்திருக்கும்பொழுது, அது ஒருவருடைய கௌரவத்தைக் காப்பாற்ற உதவுகிறது. ஆனால் நல்ல காரியங்களை மறைக்க முயன்று, அது முடியாமல், அவை வெளிப்பட்டாலும் இறுதியில் நல்லதே விளைகிறது.
  21. வதந்திகளை நம்பிச் செயல்படுவது தவறு என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு வதந்தியை முறியடிக்க லேடி காதரின் முயன்றபொழுதுதான் அதன் மூலமாக எலிசபெத் தனக்குக் கிடைக்க மீண்டும் வாய்ப்புள்ளது என்பதே டார்சிக்குத் தெரிகிறது.
  22. இதமான வெளிச் செயல்பாடு கொண்ட கெட்ட நபராக விக்காம் விளங்கினான். ஆனால் டார்சியோ பண்பாடற்ற வெளிச் செயல்பாடும், நல்ல உள்ளமும் கொண்ட நல்ல மனிதனாக விளங்கினான். அவனுடைய நல்ல உள்ளத்திற்கு ஏற்றபடி நல்லவிதமாக மற்றவர்களுடன் பழகியிருந்தால், முதல் சந்திப்பிலேயே எலிசபெத்தைக் கவர்ந்திருப்பான். தன்னுடைய கெட்ட சுபாவத்தை நல்ல பழக்கவழக்கத்தால் மூடி மறைக்கும் திறன் பெற்றிருந்த விக்காமிற்கு வாழ்க்கை அதற்குக் கொடுக்கும் பரிசாக அவன் கடன்களையும் தீர்த்து, டார்சியையும் சகலராக வழங்கியது.
  23. இக்கதையில் நிறைய நடன நிகழ்ச்சிகள் அவ்வப்பொழுது வருகின்றன. நடன நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியின் அறிகுறிகளாகும். எனவே, இக்கதை ஒரு மகிழ்ச்சிகரமான முடிவோடு நிறைவடைவதில் ஆச்சரியமில்லை.
  24. தான் இழந்த அதிகாரத்தைத் தம் மனைவியிடமிருந்து திரும்ப மீட்டு, இராணுவ அதிகாரிகள் யாரும் தம் வீட்டிற்கு வரக் கூடாதுஎன்று திரு. பென்னட் அவர்கள் கட்டளை இட்ட பிறகுதான் கதையில் ஒரு நல்ல திருப்பமே வரத் தொடங்கியது.
  25. தம்முடைய உறவினர் திரு. கார்டினர் லிடியாவின் திருமணத்திற்காகச் செய்த செலவுகளைத் திரும்பக் கொடுத்து விடுவதாகப் பொறுப்புணர்வுடன் அவர் முடிவு எடுக்கும்பொழுது கதையில் வந்த நல்ல திருப்பம் மேலும் நிறைவு பெறுகிறது.
  26. கதையில் நடக்கும் நல்ல விஷயங்களோடு தொடர்பில்லாத காரணத்தால் லேடி காதரின் மற்றும் லேடி அன், கரோலின், திரு. மற்றும் திருமதி. ஹர்ட்ஸ் என்றிவர்கள் எல்லோரும் ஏமாற்றமும், மனக்கசப்பும் அடைகிறார்கள்.
  27. தம்முடைய மகள்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை திருமதி. பென்னட் அவர்களைப் பொறுமை இழந்து செயல்பட வைக்கிறது. அவருடைய ஆர்வத்திற்கு வாழ்க்கை நல்ல பதில் வழங்குகிறதுஎன்றாலும், அவருடைய அவசரத்திற்குண்டான தண்டனையும் கிடைக்கிறது.
  28. டார்சியின் முதல் திருமண விருப்பம் கூடிவாராமல் போனதற்கு ஒரு முக்கியக் காரணம், அந்த விருப்பத்தை ஹன்ஸ்போர்ட் காட்டேஜில் அவன் வெளியிடுகிறான். ஹன்ஸ்போர்ட் காட்டேஜ் அவனுடைய அத்தை காதரின் டீ பர்க்குக்குச் சொந்தமாக இருப்பதால், அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் அவர்கள் விரும்பாத திருமணத்தைப்பற்றிய இவனுடைய விருப்பம் நிறைவேறாமல் போகிறது.
  29. பிட்ஸ்வில்லியம் எலிசபெத்தோடு பழகுவது டார்சியை அவசரப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது. அவசரமான செயல்பாட்டிலிருந்து எந்த நல்லதும் விளையாது. இவ்வுண்மை, தான் மணக்க விரும்பும் பெண்ணையே மனம் நோகும்படி டார்சி பேசி, திருமணத்தைக் கெடுத்துக்கொண்டதிலிருந்து தெரிகிறது.
  30. டார்சி எலிசபெத்தை எந்த அளவிற்கு விரும்புகிறான்என்பது திருமதி. பென்னட்டை மாமியாராகவும், லிடியாவை மைத்துனியாகவும், விக்காமை சகலையாகவும், காலின்ஸை உறவினராகவும் ஏற்றுக்கொள்வதிலிருந்து தெரிகிறது. ஒருவருக்காக அடுத்தவர்கள் எவ்வளவு பொறுத்துக்கொள்ள முன்வருகிறார்கள்என்பதுதான் அவர்களுடைய முக்கியத்து- வத்தினுடைய அளவுகோலாக அமைகிறது.
  31. டார்சி தன்னுடைய ஆணவத்தை விட்டுவிட்டு உண்மையான ஜென்டில்மேனாக நடந்துகொள்ள முன்வரும்பொழுது தான் மணக்க விரும்பும் கடைசி ஆள் இவனாகத்தான் இருக்கும் என்று சொல்லிய எலிசபெத் மனம் மாறி, தனக்குத் தெரிந்ததிலேயே சிறந்த மனிதர் டார்சிதான்என்று சொல்கிறாள்.
  32. பணக்காரர்களைத் துதிபாடுவது பலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் காலின்ஸ் காதரின் டீ பர்க் அவர்களை துதிப்பாடுவதில் முழுதிருப்தி அடைகிறார். நம் மனம் ஒரு விஷயத்தில் முழுவதும் லயித்துவிட்டால், அவ்விஷயத்தோடு நமக்குப் பூரண அலைன்மெண்ட் வந்துவிடுகிறது. துதிபாடு- வதில் இப்படி ஓர் அலைன்மெண்ட் காலின்ஸிற்கு வந்துவிட்டதால், காதரின் டீ பர்க் எதிர்பார்த்ததுபோலவே திருமணம் செய்துகொண்டு, ஒரு நல்ல மனைவியோடு ஊர் திரும்பி, அவர்களை மேலும் மகிழ்விக்க காலின்ஸால் முடிகிறது.
  33. நாம் யாரோடு பழகுகின்றோமோ அவர்களுக்கும் நம் மன நிலையும், வாழ்க்கைச் சூழ்நிலையும் பரவும்என்பது ஓர் உண்மை. டார்சியின் வாழ்க்கைச் சூழலில் அவளுடைய தங்கை ஓடிப்போக முயன்ற சம்பவம் இருக்கிறது. பென்னட் குடும்பத்துடன் டார்சி பழக ஆரம்பித்த பிறகு அவர்கள் வீட்டுப் பெண் ஓடிப்போகிற சம்பவம் நடக்கிறது.
  34. டார்சி எலிசபெத்தை தீவிரமாகத் தேடியபொழுது அவள் மேலும், மேலும் அவனை விட்டு விலகித்தான் போகிறாள். இப்படி அவளைத் தேடுவதை நிறுத்தி, அமைதியாகத் தனக்குள் மனமாற்றத்தைக் கொண்டு வந்தபொழுது அவள் மனம் மாறி, அவன் மீண்டும் திருமண விருப்பத்தைத் தெரிவித்தால் தான் ஏற்றுக்கொள்வேன்என்கிறாள். மௌன சக்தியை நாம் தெரிந்தோ, தெரியாமலோ, எப்படிப் பயன்படுத்தினாலும் நல்ல பலன் கொடுக்கிறது.
  35. ஜேன் ஆஸ்டின் இந்தக் கதையை நோபல் பரிசு துவக்கப்பட்ட- தற்குபின் எழுதியிருந்தால், கதை வெளியான ஒரு சில வருடங்களிலேயே இலக்கியத்திற்கான அப்பரிசை நிச்சயம் வென்றிருப்பார்.
  36. லிடியா ஓடிப்போன சமயம் அதிர்ஷ்டம் ஆபத்தின் ரூபத்தில் வருகிறதுஎன்று அவளுடைய குடும்பத்தாரால் எப்படித் தெரிந்து கொண்டிருக்க முடியும்? நம்முடைய மேல்மனமும், ஆழ்மனமும் எதிரான செயல்பாடுகளைக் கொண்டிருப்பதால் இப்படி அதிர்ஷ்டம் ஆபத்துஎன்று தலைகீழாக வருகிறது.
  37. கதையில் வரும் கதாபாத்திரங்கள் தம்மைத் தாம் புரிந்து கொள்வதைவிட நாம் அவர்களை நன்றாகப் புரிந்து கொள்கிறோம். காலின்ஸ் துதிபாடுகிறான், திருமதி. பென்னட் அவசரப்படுகிறாள், லிடியா உணர்ச்சிவசப்பட்டுச் செயல்- படுகிறாள், பிங்கிலி மனஉறுதி இல்லாமல் இருக்கிறான், மற்றும் ஜேன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தெரியாமல் இருக்கிறாள்என்பவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோம். ஆனால், தாம் இப்படி இருக்கிறோம்என்று இவர்களுக்கெல்லாம் தெரியவில்லை. இதுவே நமக்கும் உண்மையாகும். நம்மோடு உறவாடுகின்ற மற்றவர்கள் நம்முடைய குறைகளைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால் அதே அளவிற்கு நாம் நம் குறைகளை உணர்வதில்லை. நாம் நம்மோடு ஐக்கியமாகிவிடுவதால் நம்மை நாமே முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம். அதனால் நம் குறைகள் நமக்கே தெரிவதில்லை.
  38. விக்காமுடைய இதமான நடத்தை எலிசபெத்தை மகிழ்விக்கிறது. அதே சமயத்தில் டார்சியினுடைய பண்பாடற்ற நடத்தை அவள் மனதைப் புண்படுத்துகிறது. விக்காமுடைய இனிமையான நடத்தை அவனுடைய குறைகளை அவள் கண்ணிற்குத் தெரியாமல் மறைக்கிறது. அதே சமயத்தில் டார்சியினுடைய உதாசீனம் அவனுடைய நல்ல சுபாவத்தை இவள் உணர முடியாமல் செய்கிறது. வெளிநடத்தை என்பது மேலோட்டமான ஒன்றுஎன்றாலும், அவை இந்த அளவுக்கு நல்ல அபிப்பிராயம் மற்றும் கெட்ட அபிப்பிராயங்களை உண்டுபண்ணக்கூடியது.
  39. Life-Response நியதிகளின்படி பார்த்தால் ஒரு வாய்ப்பை நாம் மறுக்கும்பொழுது நம் வாழ்க்கை அந்த அளவிற்குச் சுருங்க வேண்டும். ஆனால் டார்சி திருமண வாய்ப்பை வழங்கிய பொழுது எலிசபெத் அதை மறுக்கிறாள். இருந்தாலும், அதே வாய்ப்பு திரும்ப வருகிறது. அதை ஏற்றுக்கொள்ளும் பொழுது எலிசபெத்தின் வாழ்க்கை முன்னைவிடச் சிறப்பாக மலர்கிறது.
  40. டார்சி தன்னை அவமானப்படுத்தியதை எலிசபெத் பெரிதாக எடுத்துக்கொண்டு, மனம் வருந்தி, புழுங்கிக்கொண்டிருக்காமல், அதைப்பற்றி நகைத்துப் பேசுகிறாள். இப்படிப் புழுங்குவதற்குப் பதிலாக நகைத்துப் பேசுவது ஒரு மன வலிமையைக் காட்டுகிறது. வாழ்க்கை அந்த மன வலிமையைப் பாராட்டி, அவமானப்படுத்திய அதே டார்சியை அவளைப் புகழ்ந்து இறுதியில் பேசும்படிச் செய்கிறது.
  41. விக்காம் தன் இதமான பழக்கவழக்கங்களால் வெற்றி பெறுகிறான். காலின்ஸ் தன்னுடைய எஜமானியை சந்தோஷப்படுத்த வேண்டும்என்ற முடிவில் இருக்கும் பலத்தால் வெற்றி பெறுகிறான். ஜேன் மௌன சக்தியால் வெற்றி பெறுகிறாள். டார்சியும், எலிசபெத்தும் மனமாற்றத்தாலும், திருமதி. பென்னட்டும், லிடியாவும் அறிவில்லாமல் செயல்பட்டாலும், ஆர்வத்தின் வேகத்தாலும், பிங்கிலி டார்சியின் ஆசீர்வாதத்தாலும் வெற்றி பெறுகிறார்கள்.
  42. லிடியா ஓடிவிட்ட அந்த நெருக்கடியான நேரத்தில் அவளுடைய குடும்பத்தினர் எல்லோரும் நிதானமிழந்துவிடுகிறார்கள். ஆனால் டார்சி வெளிமனிதனாக இருப்பதால் நிதானம் இழக்காமல் செயல்படுகிறான். அந்த நிதானத்தின் பலத்தால் தான் அவனால் ஓடிப்போனவர்களைக் கண்டுபிடித்து, பிரச்சினையைத் தீர்க்க முடிகிறது.
  43. பென்னட் குடும்பத்தில் நடந்த மூன்று திருமணங்கள், எலிசபெத் மறுத்தபிறகு காலின்ஸின் கவனத்தை திருமதி. பென்னட் மேரியின் பக்கம் திருப்பியிருந்தால் நான்காக மாறியிருக்கும்.
  44. தன்னுடைய தங்கை ஜார்ஜியானா அவளுடைய பொறுப்- பாளரின் பாதுகாப்பில் பத்திரமாக இருக்கிறாள் என்று டார்சி நினைத்திருந்தான். அதுவே அவனுடைய அஜாக்கிரதைக்குக் காரணமாகி, விக்காமின் ரூபத்தில் ஜார்ஜியானாவிற்கு ஆபத்தாக வந்துவிட்டது.
  45. நெருக்கடிகள்தாம் முன்னேற்றத்திற்கு மிகவும் விரைவான வழி என்பது அன்னையின் கூற்று. லிடியா வீட்டைவிட்டு ஓடிப்போனது பென்னட் குடும்பத்திற்கு அதிர்ஷ்டமாக மாறியதிலிருந்து இந்த உண்மை நிரூபணமாகிறது.
  46. காலின்ஸை, திருமணம் செய்துகொள்வதற்குப் பதிலாக, டார்சியைத் திருமணம் செய்துகொள்வதால் ஆதாயத்தைத் தேடாமல், அன்பிற்காகத் திருமணம் செய்துகொள்வதாக எலிசபெத் நம்புகிறாள். ஆனால் அன்பிற்காகத் திருமணம் செய்துகொள்வது எலிசபெத்தைவிட டார்சிக்குத்தான் பொருந்தும். ஏனென்றால், பெம்பெர்லி மாளிகையைப் பார்த்த பின்புதான் டார்சியைத் திருமணம் செய்துகொள்ளலாம்என்ற எண்ணமே அவளுக்குத் தோன்றியது.
  47. விக்காமுடைய சுயரூபத்தை மேரி கிங்கும், அவளுடைய தகப்பனாரும் வெகுவிரைவில் புரிந்துகொள்கிறார்கள். ஆனால் அவனுடைய இதமான நடத்தையால் மகிழ்ந்துபோன எலிசபெத்தும், அவருடைய குடும்பத்தினரும்தான் வெகு நாட்களாக அவனைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.
  48. வழக்கறிஞரின் மகளான திருமதி. பென்னட்டை மணந்து கொள்ள திரு. பென்னட் தம் நிலையிலிருந்து கீழிறங்கி வந்தார். ஆனால் அவ்வாறு இறங்கி வருவது அவருடன் நின்று விடுகிறது. அவருடைய முதல் இரு பெண்களும், அவர்களுடைய நிலையிலிருந்து உயர்ந்த நிலையில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். இதை வைத்துப் பார்க்கும்பொழுது, இடையில் அவர்களுடைய குடும்பத்தினுடைய அந்தஸ்து உயர்ந்து உள்ளதாகத் தெரிகிறது. எது இந்தக் குடும்பத்தின் அந்தஸ்தை உயர்த்தியதுஎன்பதை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
  49. மனோபாவங்களை மாற்றிக்கொள்ளும்பொழுது இழந்த வாய்ப்பு மீண்டும் வரும்என்பது டார்சி உண்மையான gentlemanஆக மாறும்பொழுது எலிசபெத் மீண்டும் அவன் வாழ்க்கைக்குள் வருவதிலிருந்து தெரிகிறது.
  50. காமெடி நாவல்களைவிட சோகமயமான நாவல்கள்தாம் வாழ்க்கையின் ஆழ்ந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. ஆனால் ஜேன் ஆஸ்டினுடைய அற்புதமான மற்றும் ஆழ்ந்த பார்வையின் காரணமாக மனித சுபாவத்தின் சிறப்புகளை எடுத்துக்காட்டுவதில் இந்த Pride and Prejudice நாவலானது மற்ற சோகமயமான நாவல்களைவிட, சிறந்து நிற்கிறது.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு கட்சி தன் பரம வைரியைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பது, அன்னையின் சக்தி செயல்படுவதாகும். அது போன்ற செயல்கள் அன்னையின் ஆட்சியில் ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் அறிகுறியாகும்.
 
ஆன்மீக உண்மையைச் சுட்டிக்காட்டும் அன்னையின் அறிகுறி.

*****



book | by Dr. Radut