Skip to Content

09.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....)

அண்ணன் - அந்த initiative எடுக்காதபொழுது திருமணம் முடிகிறது.

தம்பி - அருள் காரியத்தை முடிக்க விரும்பும்பொழுது, மனிதன் iniatitive எடுப்பதை அருளே தடுக்கிறது போலிருக்கிறதே. இந்தக் கதையைக் கொண்டு ACT செயலின் தன்மை, தத்துவம், முறை, பலன், சூட்சுமம் ஆகியவற்றை விளக்க முடியுமா?

அண்ணன் - செய்யலாம். பேரளவுக்குச் சொல்லலாம். முழுத் திருப்தி ஏற்பட வழியில்லை.
1) எந்தச் செயலும் பிரபஞ்சத்தைத் தன்னுட்கொண்டது
2) மனிதனுக்கும், சமூகத்திற்கும், சுபாவம், தன்மை இருப்பதைப்போல் செயலுக்கும் உண்டு. எந்த மனிதன் செயலைச் செய்கிறானோ, அவனுடைய சுபாவம் அவன் செயலுக்குண்டு. எந்தச் சமூகத்தில் ஒரு செயல் எழுகிறதோ அதன் தன்மையும் அச்செயலுக்குண்டு
3) சிருஷ்டி, சாதனை: ஒரு செயல் சாதிப்பது சிருஷ்டி சாதிப்பதைப் போன்றது. சிருஷ்டியும் செயலும் ஒன்றே, ஒரே தன்மையுடையவையே
4) செயலின் ஜீவியம், மனிதனுக்குள்ள உரிமை: செயலுக்குத் தன்மையும், சுபாவமும் இருப்பதைப் போல் ஜீவியமும் (consciousness) உண்டு. செயலின் பலனை நிர்ணயிப்பது மனிதனே, அவனது பிரியமேயாகும்.

5) வாழ்வின் எதிரொலிக்குச் செயலே கருவி.

. டார்சி எலிசபெத்தை விரும்பி, மணக்கும்படிக் கேட்டு, அவள் கோபமாக மறுத்து, அவனும்,அவளும் பிறகு மனம் மாறி, லிடியாவால் நிலைமை முழுவதும் மாறி, திருமணம் முடிகிறது.பிரபஞ்சம் என்பது உலகம். உலகம் பரிணாமத்தால் ஞானம் பெறுகிறது. ஞானம் அஞ்ஞானத்திலிருந்து எழுகிறது. இதுவே ஸ்ரீ அரவிந்தம். டார்சிக்கும், எலிசபெத்திற்கும் அவர்கள் வாழ்வே உலகம். கோபம், எரிச்சல், தப்பபிப்பிராயம் ஆகியவற்றுடன் அவர்கள் தொடர்பு ஆரம்பிக்கிறது. பிறகு பிரியம், பாசம், நல்லெண்ணமாக மாறுகின்றன. இது வாழ்வில் பரிணாமம். உலகில் நடப்பதே நம் வாழ்வில் நடப்பதால், நம் செயலினுள் பிரபஞ்சமாகிறது.

. பொய்யான மனிதன் சொல்வது பொய். விக்காம் சொல்பவை அனைத்தும் பொய். பொய் சொல்பவன் செயல் பொய்யில் முடிகிறது.

. டார்சி லிடியாவை மீண்டும் வாழ்வுக்குக் கொணர்வது சிருஷ்டிக்குச் சமமான செயல். ஆண்டவன் எப்படி உலகைச் சிருஷ்டிக்கின்றானோ, அதேபோல் டார்சி லிடியாவின் வாழ்வைச் சிருஷ்டிக்கின்றான்.

. டார்சியை வெறுக்கும் எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு வெறுப்பை விருப்பாக மாற்றுகிறாள். மாறிய அதே நேரம் எவர்மீது விருப்பம் ஏற்பட்டதோ அவர் எதிரே வருகிறார். இதுவே எதிரொலி Life response என்பது.

தம்பி - ஆன்மா வாழ்வை நிர்ணயிக்கிறது என்பதைக் கூறுங்கள்.

அண்ணன் - அருளை நாம் எப்படி ஏற்கிறோம்? நன்றியறிதல்,பொய்யிலிருந்து மெய் எழுவது மூலம் இவற்றை விளக்கலாம்.

எலிசபெத்திற்கு டார்சி மீதுள்ள கோபம் போய், தன்னைக் காதலிப்பதற்காக நன்றியறிதல் எழுந்த பிறகுதான் நிலைமை மாறுகிறது.

அருளாக வரும் டார்சியை எலிசபெத் புயலாக வரவேற்கிறாள். நம் வாழ்வை நினைவுபடுத்திப் பார்த்தால், நாம் அருள் வரும்பொழுதெல்லாம் கோபமாக,பராமுகமாக, எரிச்சலாக வரவேற்றது தெரியும். ஆன்மா நம் வாழ்வை நிர்ணயிக்க நாம் அருளை விலக்கும் குணங்கள், வரவேற்கும் குணங்களாக மாறும்வரை காத்திருக்கிறது. மாறும்படிப் புற நிகழ்ச்சிகளை உருவாக்குகிறது.

தம்பி - குறுக்கிடுதல், initiative, தவற்றை விரும்பிச் செய்வது போன்றவற்றிற்குப் பலன் என்ன?

அண்ணன் - டார்சிக்கு ஜார்ஜியானா, பிங்லியை மணக்க விருப்பம். அதனால் பிங்லியை ஜேனை விட்டுப் பிரிக்கவேண்டி, ஜேன் இலண்டனுக்கு வந்ததை பிங்லியிடம் கூறவில்லை.

தம்பி - ஜார்ஜினாவுக்கு £30,000 சீதனம் உண்டு. பிங்லியை விட உயர்ந்தவர்கள் கிடைக்க வாய்ப்புண்டு. பிங்லி ஜேனை மணந்தால் £1000தான் கிடைக்கும். அதிலிருந்து வருஷம் £50 வரும். ஜேனை விரும்புவது பிங்லிக்குதான் நஷ்டம். இது எப்படிக் குறுக்கீடு ஆகும்?

அண்ணன் - டார்சி தனக்குப் பிங்லி  brother-in-law ஆக வேண்டும் என்று ஜார்ஜியானாவை மணக்க விரும்பினான். வாழ்வு ஜேனை மணப்பதால் brother-in-law ஆக்கியது. பிங்லி ஜேனை ஆர்வமாகக் காதலித்தது டார்சிக்குத் தெரியும். ஆர்வம், பிரியம், காதல் என்பவை சக்தி வாய்ந்தவை. அவற்றுள் தலையிடுவது சரியில்லை. தலையிட்டதால் என்ன ஆயிற்று?

. செய்ததை மாற்றி பிங்லியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டியதாயிற்று.

. பிங்லியையும் ஜேனையும் பிரித்ததை வாழ்வு அனுமதிக்கவில்லை. அதை ஈடு செய்ய வாழ்வு டார்சியை, "லிடியாவையும், விக்காமுவையும்'' சேர்த்துவை எனப் பணித்தது.

மேலும் ஒரு காரணமுண்டு. எந்தக் குடும்பத்தில் பிங்லி மணக்கக் கூடாது என டார்சி கருதினானோ, அதே குடும்பத்தில் தான் மணக்க விரும்பினான். இது double standards. தனக்கு ஒரு நியாயம், எதிரிக்கு வேறு நியாயம். வாழ்வு இதை அனுமதிக்காது.

தன் நியாயப்படி பிறர் நடக்கவேண்டும் என டார்சி நினைப்பது அறிவுக்குப் பொருத்தமன்று.

தம்பி - லிடியா ஓடிப்போனதில் ஏதாவது விசேஷமுண்டா?

அண்ணன் - சமூகத்தில் லிடியா ஓடிப்போனவள், வெட்கம் கெட்டவள். இது புரட்சிகரமான நேரம். அளவுகடந்த தைரியசாலிகள் அற்புதமான பரிசு பெறும் நேரம். எதுவும் இரு வகைகளாக இருக்கும் என்பதால் பரிசு சேவை மூலமும் வரும், கொள்ளை அடிப்பது மூலமும் வரும். தைரியம், தெம்பு, துணிச்சல் ஆகிய லிடியாவின் குணங்கள் பெரியவை. அவை செயல்பட்டு ஓடிவிடுகிறாள். விக்காம் லிடியாவை இழுத்துக்கொண்டு போய்விட்டான் என்பதைவிட லிடியா விக்காமை இழுத்துக்கொண்டு ஓடினாள் என்பதே பொருந்தும். இதன் விளைவுகளையும், அவற்றின் காரணங்களையும் நாமறிய வேண்டும்.

1) லிடியா ஓடிப்போனதால் ஜேனும், எலிசபெத்தும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
 

2) லிடியா செய்த காரியம் அவளைப் பொருத்தவரை வெற்றியாக முடிகிறது.

3) திருமணத்தை நினைக்காத விக்காம், திருமணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது.
 

4) விக்காம் சிறுவயது கனவான – டார்சிக்கு brother-in -lawஆக வேண்டும் என்பது லிடியாவால் விக்காமுக்குப் பூர்த்தியாகிறது.

5) டார்சி வீட்டு கர்மம் - ஓடிப்போவது - லிடியாவால் பென்னட் வீட்டிற்கு வருகிறது. நினைத்ததை எப்படியோ சாதிக்கும் திறமை, இராசி லிடியாவுக்கு உள்ளது.

6) சமூகப் புரட்சிக் காலத்தில் சமூகத்தை அலட்சியப் படுத்தும் லிடியாவின் எண்ணம் பூர்த்தியாகிறது. நேரம் லிடியாவுக்கு நல்லதாக இருக்கிறது.
 

7) ஒருவகையில் பென்னட் குடும்பத்திற்கு லிடியாவே "அதிர்ஷ்டம்'' கொண்டு வருகிறாள்.

தம்பி - இதேபோல் எலிசபெத், டார்சியைப் பற்றி சொல்லுங்கள்.

அண்ணன்-1) முதலில் டார்சி கர்வமாக, அலட்சியமாக இருக்கிறான். அது அவனுக்கே திரும்ப எலிசபெத் மூலம் வசவாக வருகிறது. விக்காமுடைய பொய்க் கதை எலிசபெத் மேலும் எரிச்சல்பட உதவுகிறது. டார்சி கர்வமாக இல்லாவிட்டால் விக்காம் பொய்யால் டார்சி பாதிக்கப்பட்டிருக்கமாட்டான்.
 

2) டார்சி தன்னுடன் டான்ஸ் ஆட மறுத்ததால் எலிசபெத் கோபப்படுகிறாள். செல்வன் அலட்சியப் படுத்துவான் என்பதை எலிசபெத் ஏற்றுக் கொண்டிருந்தால், டார்சிக்கு எலிசபெத் மீது அபிப்பிராயம் ஏற்பட்டிருக்காது. செல்வத்தைப் புறக்கணிக்கும் மனப்பான்மை உயர்ந்தது என்பதால், உயர்ந்தவன் மனம் மாறி உயர்ந்த குணங்களுடன் மீண்டும் அவளை நாடி வருகிறான். உண்மைக்குப் பரிசு; தோற்றத்திற்கன்று
 

3) இது ஒரு பக்கமிருந்தாலும், டார்சியை எலிசபெத்தால் நினைத்தும் பார்க்க முடியவில்லை. சார்லேட் டார்சியின் போக்கைக் காட்டியபொழுதும், proposal வந்த பிறகும், எலிசபெத்தால் டார்சியைக் கணவனாக கற்பனையும் செய்ய முடியவில்லை.

. டார்சியே தன்னை நாடி வந்தும், அதை சார்லேட், காலின்ஸ், கார்டினர் கண்டுகொண்டு சொல்லியபின்னும், எலிசபெத்தால் அது நடக்கும் என நினைக்க முடியவில்லை.

.அன்னை நம்மை நாடி வந்தும், அருளைக் கேட்காமல் கொடுத்தபொழுதும் நாம் அன்னைக்குத் தேவை என நம்மால் கருத முடியவில்லை.

. எலிசபெத்திற்கு டார்சியைத் தெரியவில்லை. பெம்பர்லியைத் தெரிகிறது!

.பெரும்பலனைச் சொன்னால் தெரியாது. கண்ணால் பார்த்தால் தெரியலாம், கையால் தொட்டு உணர்ந்தால் தெரியும்.

4) எலிசபெத்தும், ஜேனும் தெளிவானவர்கள் (persons of character). அதனால் அவர்களால் முன்னுக்கு வர முடிகிறது. மற்ற பெண்களுக்கு மனம் வளரவில்லை. அதனால் முன்னுக்கு வர நினைக்க முடியவில்லை.

5) எலிசபெத்தால் டார்சியைக் கணவனாக மனதில் வரிக்க முடியவில்லை. அதேபோல் டார்சியால் எலிசபெத் தன்னை மறுப்பாள் எனக் கருத முடியவில்லை. மனம் மாறி, கர்வமிழந்து, தன்னை ஏற்க மாட்டாளா என ஏங்கும்வரை நிலைமை மாறவில்லை.
 

6) டார்சியும், எலிசபெத்தும் ஒருவரையொருவர் கவருகின்றனர். ஒருவர் குறையை நீக்க அடுத்தவர் வல்லவர் என்பதால் இக்கவர்ச்சி எழுகிறது. முடிவாக அக்குறைகள் அடுத்தவரால் விலக்கப்படுகின்றன.

தம்பி - இந்தக் கதையின் பல அம்சங்களைக் கண்டோம். ஸ்ரீ அரவிந்தருடைய கருத்துப்படியும், தத்துவப்படியும், நாம் முக்கியமாக அறியக்கூடியன இக்கதையில் என்ன என்று மீண்டும் ஒரு முறை சொல்லும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

தொடரும்.....


 

****


 


 



book | by Dr. Radut