Skip to Content

08.அஜெண்டா

Agenda

Don't try to know, it is not yet time – SriAurobindo's smile to Mother.

"தெரிந்துகொள்ள முயலாதே, நேரம் வரவில்லை'' என பகவான்

ஸ்ரீ அரவிந்தரின் புன்னகை அன்னைக்குக் கூறியது

காரியம் என்று வந்தபொழுது, முடிவை நினைக்காமல் வேலையைச் செய்தால் அது முடியும் என்பது அன்னை வாக்கு. இதன் உண்மையை அறியவேண்டுமானால் இதுவரை நல்லபடியாக முடிந்த பல காரியங்களை நினைத்துப் பார்த்தால் இதற்குப் பொருத்தமான உதாரணம் கிடைக்கும். அது இல்லையெனில் இனி இதுபோல் ஒரு காரியம் செய்ய முடியுமானால், அது இதன் உண்மையை விளக்கும்.

ஒரு ஸ்தாபனத்தில் கடைசி நிலையில் எதையும் தெரிந்து கொள்ள முடியாதவன், உண்மையோடு உழைத்தால் அவன் நிலை உயருவது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தோட்டத்துக் காவல்காரன் முனிசிபல் மெம்பராகப் போட்டியிடும் நிலைக்கு இதுபோல் உயர்ந்தான்.

ஸ்தாபனத் தலைமைப் பதவியிலுள்ளவர் தம் எண்ணத்திற்கு எட்டாத இலட்சியத்தை ஏதோ காரணத்திற்காக ஏற்றால் ஒன்று ஆயிரமாகும். பாங்க் தலைவர் ஒரு கிராமத்தில் செய்த சேவை உடனே எல்லாக் கிராமங்களுக்கும் இதுபோல் பரவியது.தெரிந்து, புரிந்து, விழிப்புடன் இலட்சியத்தை ஏற்று, முடிவைக் கருதாமல், எதிர்பார்க்காமல், நினைக்காமல் செயல்பட்டால் பிரபஞ்சம் திருவுருமாறும் என்ற அனுபவத்தை அன்னை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், ஸ்ரீ அரவிந்தரிடம் அன்னை,

. எப்பொழுது திருவுள்ளம் பூர்த்தியாகும்?

. நான் 100 ஆண்டுகள் இருப்பேனா?

என்பதுபோன்ற கேள்விகளை எழுப்பியபொழுது பகவான் கூறிய பதில் ஆரம்பத்தில் எழுதியது. நாமே முயன்று பெறுவது தோல்வி அல்லது வெற்றியுடையது. அது நம் கிராமத்தை முயற்சியால் டெல்லியாக்குவது. முயலாமல் பெறுவது சரணாகதி. தெரிந்து கொள்ளவும் முயலாவிட்டால் அங்கு,
 

 . தோல்வியில்லை, வெற்றி மட்டும் உண்டு.

. நம்மை டெல்லியில் இருக்கச் செய்வதுபோன்ற பலன் உண்டு.

மனம் அடங்கியதுபோல் செயலும் அடங்கினால், ஆத்மாவும் அடங்கினால் நமது கிராமம் தானே டெல்லியாவது போன்ற மாற்றம் வரும். முதல் நிலை முயற்சி, இரண்டாம் நிலை கண்மூடிய சரணாகதி, மூன்றாம் நிலை ஆத்ம விழிப்புடன் செய்யும் சரணாகதி.

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஞானம், சக்தி, பலன், ஒரு செயலில் நிதானமாகக் கலந்திருந்தால் நிறைவு ஏற்படும்.

நிதானம் நிறைவு தரும்.


 


 


 



book | by Dr. Radut