Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

என் வாழ்வில் ஸ்ரீ அன்னை

பதினான்கு வருடங்களுக்கு முன்பு ஒரு நாள், ஒரு பிரபல பெண்கள் மாதாந்திர பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தேன். அப்பொழுது அதில் வந்திருந்த ஸ்ரீ அன்னையின் படத்தையும், அவரைப் பற்றிய கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. ஆனால் அச்சமயத்தில் ஸ்ரீ அன்னையின் மகிமை எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை.

அவ்வருடம் நான் என் இரண்டாவது மகனை கருவுற்றிருந்தேன். 10 வருடங்கள் கழித்து இரண்டாவது பிரசவம் என்பதாலும், வயதாகிவிட்டபடியாலும் பிரசவம் கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். டாக்டர்கள் சந்தேகத்தின்பேரில் 'ஸோனோகிராபி' எடுத்து பார்க்கவேண்டும் என்று சொல்லவே 'ஸோனோகிராபி' எடுத்தோம். அதில் இடிபோன்ற அந்தச் செய்தி தெரியவந்தது. வயிற்றில் கருவுடன் பெரிய ட்யூமரும் வளர்ந்து வருவதால் பின்னால் இது தாய், சேய் இருவரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என டாக்டர்கள் நினைத்ததால் அபார்ஷன் செய்துவிடுவதே நல்லது என நினைத்தனர். நாங்கள் வேறொரு டாக்டரிடம் ஆலோசனைக்குச் சென்றோம். அந்த டாக்டர், கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம். கட்டி தொடர்ந்து வளர்ந்தால் அபார்ஷன் செய்துவிடுவோம். இல்லையானால் தொடர்ந்து கரு வளரட்டும் என்றார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியாத குழப்பத்திலிருந்தேன். அப்பொழுதுதான் திடீரென ஸ்ரீ அன்னையின் ஞாபகம் வந்தது. மனமுருகி ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தனை செய்தேன்.

வாராவாரம் 'ஸோனோகிராபி' எடுத்துப் பார்த்து கட்டியின் வளர்ச்சியைக் கவனித்தனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு மூன்றாவது வாரம் எடுத்த 'ஸோனோகிராபி'யில் கட்டி இருந்ததற்கான அடையாளம் துளிகூட இல்லாதது டாக்டருக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இது ஒரு தெய்வ அதிசயம் என டாக்டரே வியந்து கூறினார். அது மட்டுமில்லாமல் டெலிவரியும் நார்மல் டெலிவரியாக அமைந்து ஆண் குழந்தையும் 7 பவுண்ட் எடையுடன் நல்ல நிலைமையில் பிறந்தது. இது அன்னையின் கருணையே அன்றி வேறெதுவும் இல்லை.

மற்றொரு சமயம், என் கணவருக்கு நாங்கள் வசித்து வரும் மும்பையிலிருந்து, மகாராஷ்ட்ராவின் உட்பகுதியான துலே என்னுமிடத்திற்கு மாற்றல் உத்தரவு வந்தது. அவ்விடத்தில் குடிநீர் மூன்று, நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் வரும். மிக வறட்சியான பகுதி. நாங்கள் மும்பையிலும், என் கணவர் துலேயிலுமாக 4 வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். அங்கிருந்து திரும்ப மும்பைக்கே மாற்றல் கிடைக்காது என்ற நிலையில் என் தாய், தந்தை இருக்குமிடமான சென்னையிலாவது கிடைத்தால் சௌகரியமாக இருக்கும் என நினைத்தேன். அப்படி, சென்னைக்கு மாற்றினாலும் ஒரு கிராமத்தில்தான் போடுவார்கள் என்று என் கணவர் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் நான் ஸ்ரீ அன்னை என்னைக் கைவிடமாட்டார் என்று கூறி தீவிரமாகப் பிரார்த்தனை செய்தேன். என்ன ஆச்சரியம்! நான் பிரார்த்தனை செய்த இரண்டு வாரங்களுக்குள் என் கணவருக்கு என் தாய், தந்தை வசிக்குமிடத்திற்கு அருகிலேயே ட்ரான்ஸ்பர் கிடைத்தது.

சமீபத்தில்கூட சென்ற வருடம் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்த எனக்கு உயிர்பிச்சையளித்து, என்னை இக்கட்டுரையை எழுத வைத்து, அதன்மூலம் கோடானுகோடி துன்பப்படும் மக்களுக்கு தன்னை அறிமுகப்படுத்தச் சொல்லி அம்மக்களுக்குத் தன் அருளை வாரிவழங்க காத்திருக்கும் என் இனிய பாண்டிச்சேரி ஸ்ரீ அன்னைக்கும், ஸ்ரீ அரவிந்தரின் பொற்பாத கமலங்களுக்கும் என் பணிவான நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

யாரோ ஒரு வழிப்போக்கரின் உருவில் வந்து ஸ்ரீ அன்னை எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியதை என்னால் மறக்கவே முடியாது. இப்படி ஸ்ரீ அன்னையின் அருள் மழையைப் பற்றி கூறுவதானால் எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம். உலகிலுள்ள கஷ்டப்படும் மக்கள் எல்லோரும் ஸ்ரீ அன்னையின் பாதங்களில் சரணடைந்து, அவரது கருணையால் கஷ்டங்கள் தீர்ந்து, இப்புவியில் நிறைவாழ்வு வாழ ஸ்ரீ அன்னையைப் பிரார்த்திக்கிறேன்.


 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

சாதாரண பலனுக்கென்றாலும், மனத்தின் முடிவு முழுமை பெறும் இடத்தில் அன்னைச் சூழல் அதை உண்மையான ஆர்வமாக மாற்றும்.

முடிவு முழுமையானால் சூழல் ஆர்வமாகும்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனதை அன்னை மீது நிறுத்தி, முயற்சி முழுவதையும் முறைப்படுத்தினால், அன்பின் எழுச்சியைப் பூர்த்தி செய்யும்.

அன்னை அன்பால் நிரப்பும் வகை.


 


 


 



book | by Dr. Radut