Skip to Content

06.சத்திய ஜீவன்

"அன்பர் உரை"

சத்திய ஜீவன்

                                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)

(ராணிப்பேட்டை தியான மையத்தில் 21.2.2002 அன்று திருமதி. வசந்தா  லக்ஷ்மிநாராயணன் நிகழ்த்திய உரை).

சத்திய ஜீவன் ஓர் ஆன்மீகப்புருஷன். ஒவ்வொரு மனிதனிலும் உருவம் பெற்ற பகுதியும், உருவம் பெறாத பகுதியும் உண்டு. உருவம் பெற்ற மனிதனின் பின் சுபாவம் ஒளிந்திருக்கும். சத்திய ஜீவன் என்பது ஒரு ஜோதி, பிரவாகமான சக்தி, அது அளவிற்கு உட்பட்டதன்று. இருப்பினும் அவன் ஒரு ஜீவன், அவனே புருஷன்.

சத்திய ஜீவன் அனந்தமான பிரபஞ்ச ஜீவன். அவனுக்கேயுரிய ரூபத்தின்மூலம் அவனுள் ஒளிந்திருக்கும் காலத்தைக் கடந்த புருஷன் எட்டிப் பார்ப்பான். தனி மனிதன் என்பது ஓர் அடையாளம். நெற்றியிலிட்ட குங்குமம், விபூதி, நாமம் போன்றது. அதுவே முழு மனிதனன்று. சத்தியஜீவிய மனிதனின் ஜீவியம் அனந்தமான ஜீவியம். அவனுள் சத்தியம் புதைந்துள்ளது, சத்தியமே அவனுக்குச் சுபாவம்.

சத்திய ஜீவன் சத்தியத்தின் அடிப்படையில் சத்தியத்தை வெளிப்படுத்துவான். அவனுக்கு நன்மை, தீமை என்பது கிடையாது. அவன் சட்டத்திற்குட்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆன்மீகச் சுபாவம் ஆற்றொழுக்காக அவன்மூலம் வெளிப்படும்.

மனித வாழ்விற்கும், ஆன்மீக வாழ்விற்கும் அடிப்படையான வித்தியாசம் ஒன்று உண்டு. மனித வாழ்வு சட்டத்திற்குட்பட்டது. சட்டம் பல வகையானது. சமூகத்திற்குரிய சட்டம், குடும்பத்திற்குரிய கட்டுப்பாடு, மனசாட்சிக்கு அடங்கும் பாங்கு, தர்ம நியாயத்தை ஏற்கும் தன்மை ஆகியவை எந்த நேரமும் வாழ்வை ஆட்சி செய்யும். ஆன்மீக வாழ்விற்கு அடிப்படைச் சுதந்திரம் சட்டம் அன்று. சமூகத்தில் வாழ்ந்தாலும் பக்தனுடைய வாழ்விற்கு சமூகம் கட்டுப்பட்டது, சமூகத்திற்கு பக்தன் கட்டுப்பட்டவன் அல்லன். சமூகத்தைப் பொருத்தவரையில் அவனுக்கு சுதந்திரம் உண்டு. குடும்பத்தின் ஒழுங்கு ஆன்மீக நிர்ணயத்திற்கு உட்பட்டது என்பதால் அவனுக்குக் குடும்பத்தைப் பொருத்தும் சுதந்திரம் உண்டு. (ஆன்மீக வாழ்வின் தர்மம் யுகதர்மம்). அது தர்ம நியாயங்களைக் கடந்தது. அதனால் அங்கும் அவனுக்குச் சுதந்திரம் உண்டு. சுதந்திரம் என்பது ஆன்மாவின் சட்டம். சமூகம், குடும்பம், மனசாட்சியைப் பொருத்தவரையில் எந்தச் சட்டமும் ஆன்மீக வாழ்வைக் கட்டுப்படுத்தும்.

வாழ்விலுள்ள நல்லது, கெட்டது என்ற பிணக்கு அவனுக்கு இல்லை. நல்லதை நிர்ணயிக்கும் சட்டம் வாழ்வில் கெட்டதைக் கட்டுப்படுத்த வேண்டும். அது ஆன்மீக வாழ்வில் இல்லை. சத்தியஜீவிய வாழ்வின் சுபாவம் பரிபூரணச் சுதந்திரம் உடையது, சுயமான ஒழுங்கு உடையது, தானே பலன் தரத்தக்க அளவில் செயல்படக் கூடியது. தனக்கு வேண்டியதைத் தானே சிருஷ்டித்துக்கொள்ளக் கூடியது. நம்மைப்போல் சந்தர்ப்பத்தை எதிர்பார்க்கக் கூடியதன்று.

சத்திய ஜீவன் உலகத்தோடு சுமுகமாக இருப்பான். மற்ற சத்திய ஜீவன்களுடன் சுமுகமாக இருப்பான். ஈஸ்வரனுடைய சத்தியத்துடன் சுமுகமாக இருப்பான். அவனுடைய செயல்கள் அனைத்தும் ஒன்று என்ற இடத்திலிருந்து புறப்படும். பிரிந்து நிற்கும் அகந்தையில் இருந்து உற்பத்தியாவதில்லை.

மனம் குறுகி இறுகியது. அதனுடைய பாதுகாப்பிற்கு அது தேவை. சத்திய ஜீவன் பரந்து விரிந்த அனந்தமான சுதந்திரம் உடையது. அதற்குக் குறுகவும், இறுகவும் முடியாது.

அனந்தமான ஜீவியத்தில் பிரபஞ்சத்திற்கும், பரமாத்மாவிற்கும் முரண்பாடு இல்லை. சத்திய ஜீவன் தன் வெளிப்பாட்டைத் தானே சுயமாக நிர்ணயித்துக் கொள்ளும். அவன் பிரபஞ்சம் முழுவதும் பரவி இருப்பான். சுற்றியுள்ள அறியாமையை அறிவான், அதனால் பாதிக்கப்படமாட்டான்.

அவனுடைய புருஷனும் பிரகிருதியும் ஒன்றாக இருப்பார்கள். இயற்கைக்கும், ஆத்மாவிற்கும் உள்ள முரண்பாடு, புருஷப் பிரகிருதிக்குள்ள முரண்பாடு அங்கு இருக்காது. ஈஸ்வரனுடைய சத்தியஜீவிய சக்தி தெய்வீகச் சுபாவமாக புருஷனின் வெளிப்பாடாக தன்னிச்சையாக வெளிப்படும்.

சத்திய ஜீவனில் ஞானம் அவனுடைய ஜீவியத்தில் சுயமாக எழுந்து வெளிப்படும். சத்தியஜீவிய சுபாவத்தில் அனந்தனுடைய செயல் தன்னைத்தானே நிர்ணயித்துக் கொள்ளும். இயற்கையிலுள்ள அனிச்சைச் செயலுக்குப் பதிலாக இது செயல்படும். மனம் ஒரு சட்டத்தால் செயல்படுகிறது. தன்னை அறியும் சத்தியம் சட்டத்தை மீறி தானே எழுந்து செயல்படுகிறது. அதன் செயலில் ஒவ்வோர் அசைவும் அணுவும் இதை வெளிப்படுத்தும்.

வாழ்வில் எண்ணமும், செயலும் பிரிந்துள்ளன; இங்கு அவை சேர்ந்து இருக்கும். சுதந்திரமும் ஒழுங்கும் பிரிந்துள்ளன, பிரிந்தவை பிணக்கு எழுப்பும்; இங்கு இணைந்து இருக்கும் பிணக்கு இருக்காது. சத்திய ஜீவனின் சுதந்திரம் ஒளியின் சுதந்திரம், இருளின் சுதந்திரம் அன்று. கைதிகள் விடுதலைக்குமுன் ஜெயிலுள் ஓரளவு சுதந்திரம் அளிக்கப்படுவார்கள், இது சிறையின் சுதந்திரம். இருளின் சுதந்திரம் அதுபோன்றது. ஒளியின் சுதந்திரம் நாட்டில் நமக்குள்ள சுதந்திரம் போன்றது. நாம் தவறு செய்து உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவசியம் உண்டு. சத்திய ஜீவனுக்கு அந்த அவசியமில்லை, தவறே இல்லாமல் உண்மையை நேரடியாக அவனால் அறிய முடியும்.

சத்தியஜீவியம் சிறியதைப் பெரியதாக்கும் சக்தி. அது பிரபஞ்சத்தினுடைய ஞானத்தைத் தனிப்பட்டவர்களுடைய வாழ்வில் விவரமாகச் செயல்படுத்தும் சக்தி. சத்தியம் அதன் பிறப்புரிமை. நம் மனம்போல் அது சத்தியத்தைத் தேடவேண்டிய அவசியம் இல்லை.சத்தியஜீவியம் செயல்படும்போது அதன் அங்கங்களுக்குள் பிணக்கு இருக்காது.

அகந்தைக்கும், வலிமையான அகந்தைக்கும் பிணக்கும், சச்சரவும் வாழ்வின் நிகழ்ச்சிகள். அது சத்திய ஜீவனுக்கில்லை, அவன் செயல் ஈஸ்வரனின் செயல். இங்கு ஜீவன் என்பது புருஷனுடைய ஜீவன். அதனால் சொந்த முயற்சிக்கும், இறைவனின் ஆணைக்குமிடையே எந்த நேரமும் பெரும் போராட்டம் இருக்கும். அது சத்திய ஜீவனுக்கு இல்லை.

சத்தியஜீவியத்தின் சுபாவம் மூலமாக தெய்வீக ஞானமும், சக்தியும் செயல்படும். அப்படிச் செயல்படும்பொழுது சுதந்திரத்தின் அடிப்படையில் செயல்படும். அந்தச் சுதந்திரத்தோடு உள்ள தொடர்பை அவன் எப்பொழுதுமே இழக்கமாட்டான். இந்தத் தொடர்பு அவனுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும். சட்டத்திலிருந்து சுதந்திரம், தர்மத்திலிருந்து சுதந்திரம் ஆகியவை இந்தத் தொடர்பிலிருந்து வருபவை. மனத்தின் அபிப்பிராயங்களுக்கு வேலையில்லை.

1. தன்னுள் உலகம் இருப்பதால் சுயநலம் என்பது இல்லை.

2. செயல் என்பது பிரபஞ்சத்தின் அன்பும், ஐக்கியமும் வெளிப்படுவதாகும்.

3. ரூபங்களிலும், சுபாவங்களிலும் உள்ள சத்தியத்தை வெளிப்படுத்தும் தெய்வீகக் கருணை சுமுகமான செயலுக்கு நோக்கமாகும்.

சத்தியஜீவிய வாழ்வின் ஒரு முக்கியமான அம்சம் கருவிக்கும் ஞானம் ஏற்படும். "கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்'' என்று சொல்வதுபோல், ஒரு மஹான் பயன்படுத்திய பொருளுக்குச் சக்தி இருக்கும் என்று சொல்வதுபோல், குரு பத்தினி குருவில் பாதி என்று சொல்வதுபோல் சத்தியஜீவியம் பயன்படுத்தும் கருவிகளுக்கும் சத்தியஜீவியம் உண்டு. சத்தியஜீவிய வாழ்வு அதனுடைய வெவ்வேறு நிலைகள் ஒளி பெற்று ஆனந்தம் அடைந்து அதன் ஜீவன் பூர்த்தியாகும். நமக்கு ஒரு கவலை இருக்கும்போது ஒரு சந்தோஷம் வந்தால், கவலையை மீறி சந்தோஷத்தை அனுபவிக்கிறோம். கவலை சந்தோஷத்தால் மாறி சந்தோஷமாவது இல்லை. சந்தோஷம் அடங்கியபிறகு கவலை மீண்டும் வரும். சத்திய ஜீவனுள் எழும் ஒளி ஜீவனின் பல நிலைகளையும் சென்று அடைந்து அனைத்தையும் ஒளிமயமாக்கும்.

சத்தியஜீவியத்தின் தன்மை இரண்டு,

  1. பிறப்பிலேயே தன்னை முழுமையாக அறியும்.
  2. உலகம் தன்னை அறிவதுபோல் சத்திய ஜீவன் தன்னை அறிவான்.

சத்தியஜீவியப் பரிணாமம் பல்வேறு நிலைகளில் உண்டு. ஆனால் எல்லா நிலைகளுக்கும் பொதுவான சுமுகம் உண்டு. ஒரு சர்க்காரில் ஒரே இலாக்காவின் பல ஆபீஸ்கள் சிறியது, பெரியது என்று இருந்தாலும், எல்லா ஆபீஸ்களுக்கும் பொதுவான சுமுகமுண்டு. வெவ்வேறு இலாக்காக்களில் ஒரே நிலையிலுள்ள ஆபீஸ்களுக்கு பொதுவாக எதுவும் இருக்காது, சுமுகத்திற்கு வழியில்லை.

தனி மனிதனுக்குள்ள சட்டமே, சமூகத்திற்குள்ள சட்டம். சத்தியஜீவிய சமூகம் என்று ஒன்று இருந்தால், தனி மனிதனைப் போலவே அதற்கும் அடிப்படையான நிலைமை சுமுகம்.

சத்தியஜீவிய சுபாவத்தில் வேறுபாடுகளை வாழ்வின் உண்மைக்குரிய வெவ்வேறு பகுதிகளாகக் கருதுவதால் அவை அபரிமிதமான பலனைக் கொடுக்கின்றன. மக்கள் தொகை அதிகமாவது நாட்டில் உணவுப் பஞ்சம், தண்ணீர்ப் பஞ்சம் போன்ற எல்லாப் பஞ்சங்களுக்கும் அடிப்படை என்பதால் தொகையின் பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றனர். பஞ்சமான நாட்டில் பெருகும் ஜனத்தொகை பஞ்சத்தைப் பெருக்கும் என்பது உண்மை. நாடு வளமானது என்றால் படித்தவர்கள், வல்லுனர்கள், விஞ்ஞானிகள், நிபுணர்கள், தொழில்நுணுக்கம் தெரிந்தவர்கள் ஏராளமாக இருப்பார்கள். இதுபோன்ற நாடுகளில் நாட்டின் மதிப்பை நிபுணர்களின் எண்ணிக்கையைக் கொண்டு மதிப்பிடுகிறார்கள். அந்த நாட்டிற்கு ஜனத்தொகை பெருகினால் நாட்டில் திறமையுள்ளவர் எண்ணிக்கை பெருகும். பஞ்சமான நாட்டில் பெருகும் ஜனத்தொகை பஞ்சத்தைப் பெருக்குவதுபோல் திறமைசாலிகள் வாழ்ந்த வளமான நாட்டில் பெருகும் ஜனத்தொகை திறமைசாலிகளைப் பெருக்கும். நாட்டின் நிலை உயரும். அதேபோல் மனித வாழ்வில் வேறுபாடு சண்டை சச்சரவை அதிகப்படுத்தும். சத்தியஜீவிய வாழ்வில் சுமுகம் மிகுந்து இருப்பதால் வேறுபாடு வளர்ந்தால் அது சுமுகத்தை அதிகப்படுத்தி, உள்ள செழிப்பை அபரிமிதமான செழிப்பாக மாற்றும். பூரணமும் சிறப்பும் பூர்த்தி பெறுவதற்கு இந்த அம்சம் மிகவும் முக்கியம். மனம் உள்ளவரை வேறுபாடு அபரிமிதத்தைக் கொடுப்பது அரிது. ஆனால் சத்தியஜீவியத்திற்கு இது இயல்பானது.

சத்தியஜீவியம் மனித குலத்தில் மாறாத பகுதியோடு வாழவேண்டிய அவசியம் உண்டு. மிக உயர்ந்த பகுதி மிகத் தாழ்ந்த பகுதியுடன் சுமுகமாக இருக்கும். மேற்பகுதி சச்சிதானந்தத்தை எட்ட முடியும்.

ஜடமான அறியாமையில் ஆரம்பித்த பரிணாமம் அத்துடன் முடியுமா? என்பது கேள்வி. தொடர்ந்த பரிணாமம் பிணக்கின்றி சுமுகமாக இருக்கும் என்று நாம் முக்கியமாகக் கூறலாம்.

முற்றும்


 


 


 



book | by Dr. Radut