Skip to Content

13.பிரபலமான காவல்காரன்

பிரபலமான காவல்காரன்

நெடுநாள் திருடி ஒரு முறையும் அகப்பட்டுக்கொள்ளாத திருடன், இனி திருடுவதில்லை என முடிவு செய்தான். வேறு ஊருக்குப் போய் வேலை தேடினான். காவல்காரனாகச் சேர்ந்தான். இவன் வேலையில் சேர்ந்ததிலிருந்து ஒரு பொருளும் திருடு போவதில்லை. மகசூல் பெருகுகிறது. முதலாளிக்குப் புது நிலம் வருகிறது. சிறிய இடம் பெரிய இடமாயிற்று. அங்கு வருபவர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள். அதை விட்டுப் போனவர்களும் நன்றாக இருக்கிறார்கள். காவல்காரன் போதுமான சம்பளம் பெறுகிறான். தன் திறமைக்கு இருமடங்கு சம்பளம் பெறலாம் என நினைக்கிறான். உடன் உள்ளவர் வாழ்வில் அவன் எண்ணம் பலிக்கிறது. எனக்கு வரவில்லையே என்கிறான்.

திருடுவதை நிறுத்திவிட்டான். திருடு மனத்தில் இருக்கிறது. "நான் மட்டும் பழையபடி இருந்தால், எப்படியெல்லாம் இங்குத் திருட முடியும்'' என கற்பனை செய்கிறான். கற்பனை மனத்தைப் பூரிக்கச் செய்கிறது. தன் மனம் கடுமையான திருடனின் கொடுமைக்குரியது என அவன் அறிவான். திருடுவதை நிறுத்திவிட்டானே தவிர, திருடனின் முரட்டுத்தனத்தைக் காட்டத் தவறுவதில்லை. எந்த அளவு மாற முயன்றாலும், அந்த அளவு அவன் மனம் கடுமையாகிறது. அவனிடம் பழகியவர், "இவனைச் சந்தித்தால் உடனே நமக்கு ஆபத்தும், நஷ்டமும் வருகிறது'' என்று கண்டு ஒதுங்கியதை அவன் அறியான். அவனும் அன்னை பக்தனானான். அவன் கடுமையை முயன்று வளர்த்தான். அவன் வாழ்விலும் ஒளி வீசியது. உடனே அதை பிறரை அதிகாரம் செய்யப் பயன்படுத்தினான். அத்தனையும் நின்றுவிட்டன. இவன் ஆபத்தின் உறைவிடம் என அறிந்துகொள்ளாமல், பரிசை எதிர்பார்க்கிறான்.

*பலன் செயலுக்கன்று, மனநிலைக்கு.

*மனம் உண்மையாக மாறினால், மலை போன்ற மாற்றம் வாழ்வில் உதயமாகும்.

****



book | by Dr. Radut