Skip to Content

05.நாம் என்ன செய்ய வேண்டும்? ஏதாவது செய்வது அவசியமா?

"அன்பர் உரை"

நாம் என்ன செய்ய வேண்டும்?

ஏதாவது செய்வது அவசியமா?

(சென்னை மாம்பலம் தியான மையத்தில் 20.5.2001 அன்று திருமதி உஷா ராமதாஸ் நிகழ்த்திய உரை)

       பதிலாக இரண்டைக் கூறலாம்.

1) செய்வதற்கு ஏராளமாக இருக்கிறது.

2) நாம் செய்ய வேண்டும் என்பது ஒன்றும் இல்லை.

       நம்மை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். நல்லவர் எனப் பெயரெடுக்க வேண்டுமானால், கெட்டதை விலக்கி, நல்லதைச் செய்ய வேண்டும். ஆன்மீக முன்னேற்றம் வேண்டினால் அன்னைக்குரியதை ஏற்று, மற்றதை விலக்க வேண்டும். அப்படி ஒவ்வொரு நிலைக்கும் யார் என்ன செய்ய வேண்டும் என நாம் அறிவோம். அதுபோல் செயல்பட வேண்டுமானால், செய்வதற்கு ஏராளமாக உள்ளன.

       நான் எதையும் செய்யப் பிரியப்படவில்லை. அன்னையை மட்டும் நம்பி வாழப் பிரியப்படுகிறேன் என்றால், நாம் செய்ய வேண்டிய சிறிய, பெரிய காரியங்களை அன்னையே நிறைவேற்றுவதை நாம் தினமும் காண்கிறோம்.

எந்தக் கடமையானாலும் நாம் அன்னையிடம் அதை

ஒப்படைத்தவுடன் அது தானே நிறைவேறுகிறது.

அன்னை அதை நிறைவேற்றுகிறார்கள்.

       இதுவே உண்மையானால், அன்னையை எப்படி நாம் அறிந்து கொள்வது? நம்மை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? கடமை சிறியதா, பெரியதா என்பதே விசேஷமில்லை, நாமே அதைச் செய்யப் பிரியப்படுகிறோமா? அன்னையிடம் ஒப்படைக்கப் பிரியப்படுகிறோமா? என்பதே கேள்வி. நாமே செய்யப் பிரியப்பட்டால், காரியத்தைச் சமர்ப்பணம் செய்து பிறகு காரியத்தைச் செய்கிறோம், காரியம் சிறப்பாக முடிகிறது. நாம் செய்வது அவசியமில்லை. காரியம் நடக்கவேண்டும் என்பதும் முக்கியமில்லை.

. இக்காரியத்தில் நான் அன்னையுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.

. எனக்கு என்ற பொறுப்பு இங்கு வரக்கூடாது. அந்த எண்ணமும் வரக்கூடாது.

. என் திறமை, பொறுப்பு ஆகிய இரண்டையும் நான் சரணடைய விரும்புகிறேன்.

. நான் மீண்டும் அன்னையைச் சரணடைய இக்காரியம் ஓர் சந்தர்ப்பம் என்பது மனநிலை என்றால், சரணாகதி பூர்த்தியாகும்.

       7 நாள் மோட்டார் இறைத்துப் பாய வேண்டிய நிலங்கள் 3 மணி நேரம் பெய்த மழையின் நீரால் நிறையும். நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது சிறிய காரியம். பெரிய இலட்சியங்கள் இப்படி முடியுமா? என்று கேள்வி எழுகிறது. உலகில் ஆயுதத் தளவாடங்கள் குவிகின்றன. இவை ஆபத்து என அன்னை கூறியுள்ளார். தளவாடங்கள் குவிவதால் அவை தங்களை உபயோகப்படுத்த நிர்ப்பந்தம் செய்யும் என்றும் அன்னை கூறியுள்ளார். இதற்கு ஏதாவது ஒரு வழி வேண்டும் என்று முனைந்த பக்தர், செயலை சமர்ப்பணம் செய்து முனைப்பைச் சரணாகதி செய்து அதைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்த வேலைக்கான முதற் கூட்டத்திற்கு 7 நாள் முன்பு வல்லரசுகள் கூடி அதே முடிவை எடுத்துவிட்டனர். மனம் வேலையிலிருக்கிறதா? அன்னையிடமிருக்கிறதா என்பதே கேள்வி. வேலையிலிருந்தால் சிறப்பாக முடியும். அன்னையிலிருந்தால் தானே பூர்த்தியாகும்.

       அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும் இக்கருத்தைப் பற்றி ஏராளமாகக் கூறியுள்ளனர்.

. எவரொருவர் தம்மை இறைவனுக்குப் பூரணமாக அர்ப்பணிக்கின்றாரோ, அவருக்கு இறைவன் தன்னைப் பூரணமாக அர்ப்பணிக்கிறான்.

. அருள் செயல்படும்பொழுது மண்டியிட்டு அதன்முன் அமைதியாக அருளைச் செயல்பட அனுமதித்தால் அருள் பேரருளாகும்.

. தன் ஆன்மாவைக் கண்டு, பிறரும் அதைக் காண உதவுவது இலட்சியம்.

. வேலை செய்யாமலிருந்தால் உள்ளே பெருகும் ஆனந்தம் வெளிப்பட முடியாததால், வலியாக மாறுகிறது.

. வேலை என ஒன்றிருந்தால் அது மனித சுபாவத்தைத் தெய்வச் சுபாவமாக மாற்றுவதாகும்.

. நாமாக ஒரு வேலை செய்வதைவிட, இறைவன் திருவுள்ளத்தை நாம் பூர்த்தி செய்ய வேண்டும்.

. நாம் இடையூறாக இல்லாவிட்டால், திருவுள்ளம் தன்னைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும்.

. அன்பர்கட்குச் செய்யும் சேவையே, அன்னைக்குச் செய்யும் சேவை.

. யோகம் என்பதன் பெரும் பாகம் "அன்னையை அழைப்பது''.

. சிந்தனையைக் கைவிடவேண்டும்.

. ஒரு காரியத்தைச் செய்யும்முன் தீர்க்கமாகத் திட்டமிட வேண்டும்.

. ஒரு காரியத்தைச் செய்யும்முன் அதைப்பற்றி நினைக்கக்கூடாது.

. எவரிடமும் reaction எரிச்சல் படாமலிருப்பதே யோகத்திற்குரிய முதல் நிபந்தனை.

. எதுவும் செய்யத் தேவையில்லை, சத்தியம் மேலிருந்து வருகிறது, பெற்றுக்கொள்ளும் விழிப்பும், பாங்கும் இருந்தால் போதும்.

. ஒவ்வொரு நிமிஷமும் human choice நாம் சரியான முடிவு எடுக்கவேண்டும்.

. விழிப்பு, ஏற்புத்திறன், உண்மை அவசியம்.

. நன்றியறிதல் இவற்றை தன்னுட்கொள்ளும்.

. அகந்தையை அழிக்கவேண்டும்.

. சைத்தியப் புருஷனை அடையவேண்டும்.

. மோட்சத் தகுதி பெற வேண்டும், மோட்சத்தை ஏற்கக் கூடாது.

. அமைதியும், மௌனமும் இறைவன். அவற்றைப் பெற வேண்டும்.

. அகந்தைக்காக வாழாமல், அன்னைக்காக வாழ வேண்டும்.

. எந்த நேரமும் மனம் கலகலப்பாக, குதூகலமாக இருக்க வேண்டும்.

       நம் மன வளர்ச்சிக்கேற்ப, பக்குவத்திற்கேற்ப, இவற்றுள் எதைச் செய்யும் நிலையிலும் நாமிருக்கலாம். உதாரணமாக ஒரு வேலை தேடிப் பெறும் நிலையிலிருக்கலாம். அல்லது அகந்தையை அழிக்கக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கலாம். வேலை தேடினால், விண்ணப்பம் எழுதுவதிலிருந்து, இன்டர்வியூக்குப் போகும்வரை உள்ள எல்லாக் கட்டங்களையும் சமர்ப்பணம் செய்தால், விண்ணப்பம் ஏற்கப்படும், இன்டர்வியூ கிடைக்கும், நல்ல பதில் சொல்வோம், வேலை கிடைக்கும், நல்ல சம்பளம் கிடைக்கும், மேலதிகாரி நல்லவராக இருப்பார், கம்பனி நல்ல கம்பனியாக அமையும், எல்லாம் மன நிறைவுடன் நடக்கும். இது நம் செயல். நாம் செயலைச் சமர்ப்பணம் செய்ததால் நடந்தவை.

       ஒவ்வொன்றையும் சமர்ப்பணம் செய்வதற்குப் பதிலாக என்னையே சரணாகதியாக அன்னைக்குக் கொடுத்தால் என் மனம் நிறையும் என்ற பக்தர் ஒருவர். 1986 அல்லது 1987 என நினைக்கிறேன். 800 ரூபாய் வேலை போய் 1000 ரூபாய் வேலையில் சேர்ந்து கம்பனி மூடியபின் அன்னையை அறிந்து வேலை தேடி வந்தவர், மன நிறைவுடன் நிலைமையைச் சமர்ப்பணம் செய்ததுடன் தம்மையே சரணாகதியாக ஒப்படைக்க முனைந்தார். அண்ணன் ஹாங்காங் பாங்கில் ஏஜெண்ட். அவரைச் சந்தித்து 20 வருஷமாகிறது. அவர் வீட்டிற்கு வந்தார். எங்கே வேலை செய்கிறாய்? என்று கேட்டவர் விபரமறிந்து நான் வேலை வாங்கித் தரட்டுமா என்றார். "நீ 800 ரூபாய், 1000 ரூபாய் வேலை வாங்கித் தந்தால் நான் போகமாட்டேன். 1500க்குக் குறைந்த சம்பளம் எனக்குக் கட்டாது'' என்றார். இரண்டு நாள் கழித்து அண்ணன் "நான் ஒரு முதலாளியிடம் சொல்லியிருக்கிறேன், நீ போய்ப் பார்'' என்றார். முதலாளி என்ன சம்பளம் வேண்டும் என்றார், உடனே ரூ.2500/- கேட்கத் தோன்றியது. அதை மறுத்து "நீங்கள் கொடுப்பதை ஏற்கிறேன் என்றார்''. ரூ.3000/- சம்பளம் என்றார் முதலாளி.

       இவையெல்லாம் வேலை, ரூபாய். ஆன்மீகமாகப் பேசுவோம் என்றால் அகந்தையை அழிக்க முனையும் பக்தர் அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எழுதியவற்றை எல்லாம் படித்து என்ன என்ன செய்யவேண்டும் என அறிந்து அதன்படி செயல்பட ஆரம்பித்து ஆத்மீகப் பலனைக் கண்டு ஆச்சரியப்படும் நேரம், ஏன் நான் இவற்றை எல்லாம் செய்ய வேண்டும், என் முயற்சிகள் அகந்தையின் உருவங்களல்லவா? என்னையே ஏன் அன்னையிடம் ஒப்படைக்கக்கூடாது என்று நினைத்தார். நான் வெறும் பக்தனல்லவா? இவையெல்லாம் பெரிய ஆத்மாக்களுக்கு உரியனவல்லவா? எனத் தோன்றியது. ஆனாலும் செய்ய விருப்பப்பட்டார். தன்னை மறந்தார், உள்ளே சென்றார், உட்சோதியிற் கலந்தார். ஜோதியைக் கடந்தார். மௌனத்தைக் கண்டார். மௌனம் கரைந்து அமைதி எழுந்தது. அமைதி பேரமைதியாயிற்று, தன் வயமில்லை. பரவசம் இருப்பதாகத் தெரியவில்லை, பேச்சில்லை, எண்ணமில்லை. எவ்வளவு நாழிகை அப்படியிருந்தோம் எனத் தெரியவில்லை. வெளிவந்து, சுயநினைவு வந்தபின், அன்னைக்கு இந்த அனுபவத்தை எழுதியனுப்பப் பேனாவை எடுத்தார். அன்னை உள்ளே எழுந்து தரிசனம் தந்தார். பேசினார்.

       "உன் மனத்தின் உண்மையை ஏற்று நான் செயல்பட்டு உன் எண்ணத்தைப் பூர்த்தி செய்ததைப் பூர்த்தியான பிறகும் நம்ப முடியவில்லையா?''

****


 book | by Dr. Radut