Skip to Content

11.சுபாவத்தின் சிறப்புகள்

சுபாவத்தின் சிறப்புகள்

       நாம் மனிதர்களை நல்லவர், கெட்டவர் எனப் பிரித்து, நல்லவரை முழு நல்லவராகவும், கெட்டவரை முழு கெட்டவராகவும் கருதுகிறோம். உயர்ந்த நல்லதும், பெரிய கெட்டதும் சேர்ந்திருப்பது மனித சுபாவம்.

       ஒரு பக்தர் தம் நண்பரைப் பற்றிக் கூறுகிறார். "என்னுடன் பல ஆண்டுகள் இவர் தங்கியிருந்தார். என் பேச்சைத் தட்டியதேயில்லை. ஸ்ரீ அரவிந்தர், அன்னை எழுதியவற்றைப் பல ஆண்டுகளாகப் படித்தாலும் எனது ஆபீஸ் நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ அவற்றைப் பேசாதிருந்த சமயம் என்னிடம் வந்த நண்பர் அவற்றை ஆர்வமாகக் கேட்டார். யோக விஷயங்கள் சூட்சுமமமானது என்பதால் யோக அனுபவமோ, தீட்சண்யமோ இருந்தால்தான் அவை புரியும். இவர் சூட்சுமமானவர் என்பதால் அன்னையைப் பற்றி நான் கூறும் கருத்துக்கள் இவருக்குக் காட்சியாக எழுந்து மனதின் ஆழத்தில் மறுப்பில்லாமல் பதியும். இவர் உயிருக்கு ஆபத்து வந்தபொழுது என்னை மட்டும் நம்பி இவர் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். நான் பழகிய பல ஆண்டுகளில் தவறு என்பதை இவரிடம் நான் கண்டதில்லை!!

       இது ஒரு அரிய நட்பு. எவர்க்கும் அமையாது. நட்பில் பணம், குடும்பம், அந்தரங்கமான விஷயங்கள் ஆயிரம் எழும், அனைத்திலும் தேறுவது இல்லை. அப்படிப்பட்டவரை நாம் உயர்ந்தவர் என்றே கருதுவோம். அப்படிக் கருதுவது தவறில்லை. ஆனால் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. இதே நண்பரைப் பற்றி அந்த அன்பர் கூறும் மற்றொரு செய்தி.

       "எனக்கு short breath மூச்சடைக்கிறது ஒரு நாள். நண்பர் என்றும் பேசாதவர், அன்று ஆர்வமாய் பேசுகிறார். இவர் பேசுவதால்தான் எனக்கு மூச்சடைக்கிறது என்பதை எவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். அது சூட்சுமமானது (subtle fact). அவர் ஆர்வம் குறையக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாத அளவுக்குத் திணறுகிறது. எழுந்தேன், நகர்ந்தேன். நண்பர் “உயிரே போகிறது என்றாலும் அது என் உயிரில்லையே, உங்கள் உயிர்தானே என்றார்”.

அப்படிப்பட்ட உயர்ந்த நண்பர் வாயில் இந்தச் சொல்லும் வரும் என்பதே மனித சுபாவத்தின் சூட்சுமச் சிறப்பு!

****
 



book | by Dr. Radut