Skip to Content

10.புலன்களுக்குப் புலப்படாதது

"அன்னை இலக்கியம்''

  புலன்களுக்குப் புலப்படாதது

  (சென்ற இதழின் தொடர்ச்சி.....)

இல. சுந்தரி

       அதன்பின் இந்தியா வந்து சென்னை மாநகரில் இராமையாவின் இருப்பிடம் விசாரித்துத் தேடிவந்து குழந்தையைக் கண்டாள். அக்குழந்தை மூலம் அன்னையே தன்னில்லம் வருவார் என அவள் நினைக்கவில்லை.

       இனி கதையைத் தொடர்வோம்.

      அமிர்தாவின் பாட்டியாருடன் மருத்துவமனையில் இவள் இருக்கும் புகைப்படம் இவர்களுக்குக் கிடைக்காததால், தன்னைப் பற்றிய ஆதாரங்களையும் தன்னிடம் உள்ள அமிர்தாவின் பாட்டியார் கையொப்பமிட்ட உரிமைப் பத்திரங்களையும் காட்டினாள். ஒருவாறு குழந்தையை அவளிடம் ஒப்படைத்தனர். தாத்தாவும் உடன் வரவேண்டும் எனச் சிறுமி விரும்பியதால் மீரா, தன்னுடன் அமிர்தாவையும் இராமையாவையும் அழைத்துக் கொண்டு தன் ஆரோவில் குடியிருப்புக்குச் சென்றாள்.

       அழகிய அந்த இயற்கையோடு ஒட்டிய சூழல் இனிய அமைப்பில் வீடு அமைந்திருந்தது. ஆடம்பரமில்லை. தேவைகள் நிறைவேற்றம் பெற்ற வீடு. சிறிய ஹாலில் பெரிய ஸ்ரீ அன்னையின் திருவுருவப் படமும் அதன்முன் ஒரு டேபிளும், சேரும் இருந்தன. கனிவு ததும்பும் அன்னையின் பார்வை கள்ளமில்லாதவருடன் பேசுமல்லவா?

       சிறுமி வீட்டில் நுழைந்து ஹாலுக்குச் சென்றவுடன் தன் பாட்டியாரின் (ஸ்ரீஅன்னையின்) பெரிய திருவுருவப் படத்தைத்தான் பார்த்தாள். பாட்டீ என்று ஓடிவந்து முத்தமிட்டாள். ஒரே மகிழ்ச்சி.

       ஆண்ட்டி இனிமேல் நான் என் பாட்டியின் முன்னால் அமர்ந்துதான் சாப்பிடுவேன், படிப்பேன் என்றாள்.

       அப்படியே செய் கண்ணே! என்றாள் மீரா.

       இராமையா வீட்டுத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டு அவர்களுக்கு உதவியாக இருந்தார்.

       குழந்தையைப் பள்ளியில் சேர்த்துவிட்டாள். தினமும் அவளைப் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு தன் பணிக்குப் போவாள் மீரா. அவளால் முடியாதபோது இராமையாவே கொண்டு விட்டு அழைத்து வருவார்.

       பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தையை அவள் போக்கில் விட்டுவிட்டு, மீராவும், இராமையாவும் தத்தம் பணிகளைக் கவனிப்பர்.

       குழந்தை அமிர்தாவுக்கு இப்போதெல்லாம் பாட்டியைப் பற்றிய ஏக்கமில்லை. மற்றவர்களுக்குப் படமாகத் தெரியும் அன்னை அவளுக்குப் பிரத்தியட்சமாய், சாந்நித்யமாய்த் தெரிந்தார். அன்னைமுன் போடப்பட்ட டேபிளின் சேரில் உட்கார்ந்துகொண்டு தன் பாட்டியுடன் (ஸ்ரீ அன்னையுடன்) பேசிக் கொள்வாள். அவரைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுவாள். அவள் டேபிளின் முன் குனிந்தும், பாட்டியை நோக்கி நிமிர்ந்தும், பேசியும், சிரித்தும், படித்தும், எழுதியும் மகிழ்வாள். அன்னை அவளுடன் பேசுவதும், சிரிப்பதும் நம் கண்களுக்குப் புலப்படாது. புரியாதவர்கள் சிறுமிக்குப் பைத்தியம் பிடித்ததாகத்தான் நினைப்பர். இறைவன் மீது அன்பு கொண்ட பக்தனும், பக்தன் மீது அன்பு கொண்ட இறைவனும் பித்தர்கள்தாமே.

       அன்று அப்படித்தான் பொது அறிவு வகுப்பில் இவள் மிஸ், வீட்டுப் பாடம் என்று சில கேள்விகளைக் கொடுத்து வீட்டில் விடையெழுதி வரச் சொல்லியிருந்தார். மீரா சுயநலமில்லாத வாழ்வை மேற்கொண்டுள்ளதால் அலைந்து திரிந்து பணிகளை முடித்து வீட்டிற்கு வருவாள். அதற்கெனவே தனக்கென ஒரு வாழ்வு அமைத்துக் கொள்ளாதிருந்தாள். எனவே, இவள் வீடு திரும்ப நேரமாகும் போதெல்லாம் இராமையாவே இவளுக்கு உடை மாற்றி, சிற்றுண்டி கொடுத்து விளையாடவும், படிக்கவும் செய்வார். இவள் பாட்டி முன்னமர்ந்து பாடம் எழுதும்போது அவர் வெளியே உட்கார்ந்திருப்பார்..

தொடரும்.....

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

உலகை அற்புதமாகக் காணும் முன் உலகில் செயல்படுபவன் இறைவன், மனிதனல்லன் என அறிய வேண்டும். எண்ணமாகவும், கருத்தாகவும் இதை நாம் அறிவோம். உணர்வாகவும், உண்மையாகவும் நாம் இதையறிய வேண்டும். உலகில் செயல்படுபவன் இறைவன் என்ற உணர்வு அற்புதக் காட்சியைத் தரும்.

 

 



book | by Dr. Radut