Skip to Content

09.அன்பர் உரை

  நான்கு கட்டுப்பாடுகளும், நான்கு விடுதலைகளும்

(சென்னை -மாம்பலம் -தியான மையத்தில், 21-2-2001 அன்று, திரு.N.அசோகன் நிகழ்த்திய உரை)

       சத்திய ஜீவியத் திருவுருமாற்றத்திற்கு நான்கு கட்டுப்பாடுகள் அவசியம் என்று அன்னை நினைக்கிறார். இந்த நான்கு கட்டுப்பாடுகளின் பலனாக நான்கு விடுதலைகளை நாம் பெறுவோம், என்றும் சொல்கிறார்.

       ஆங்கிலத்தில் austerity என்ற ஒரு வார்த்தையுள்ளது. அதை நாம் விரதம், நோன்பு, கட்டுப்பாடு, கடுமையான பயிற்சி என்று நான்கு தமிழ் வார்த்தைகளைக் கொண்டு விளக்கலாம். முந்தைய காலத்தில் தவசிகள் உடலை ஒரு வேண்டாத விஷயமாக நினைத்து கடுமையாக வருத்திக் கொள்வார்கள். நெடுநாளாகப் பட்டினி கிடப்பது, ஒற்றைக் காலில் நிற்பது, கடுங்குளிரில் மற்றும் கடும் வெய்யிலில் நீண்ட நேரம் இருந்து உடம்பை பாதிப்புக்குள்ளாக்குவது போன்ற விஷயங்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆன்மீகத்தில் கட்டுப்பாடு, austerity என்றால் பெரும்பாலோர்க்கு இதுதான் நினைவுக்கு வருகிறது. உடலைப் புறக்கணித்து ஆன்மாவைப் போற்றி வளர்த்தால் விரைவில் மோட்சம் கிடைக்கும் என்ற அபிப்பிராயத்தின் பேரில் தவசிகள் அந்நாளில் அப்படிச் செய்தார்கள். அவர்களுடைய நோக்கம் மோட்சமாக இருக்கும்பொழுது பிறவி எடுத்தலையும், வாழ்க்கை வாழ்தலையும் அவர்கள் ஒரு தற்காலிகப் பிரயாணம் போன்றுதான் நினைத்தார்கள். எவ்வளவு சீக்கிரம் பிரயாணம் முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் அவர்கள் நோக்கம் பூர்த்தியாவதாக நினைத்தார்கள். உடலை வருத்துவது பிரயாணத்தை விரைவுபடுத்துவதாக அவர்களுக்குத் தோன்றியது.

       பூரண யோகத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நோக்கமே வேறு. பூவுலக வாழ்க்கை என்பது அவர்களுக்குத் தற்காலிக பிரயாணமில்லை. அதுவே முடிவான நோக்கமாகும். அதாவது பூவுலக வாழ்க்கையை சத்திய ஜீவியத்தின் உதவியைக் கொண்டு திருவுருமாற்றம் பெற்ற வாழ்க்கையாக மாற்றுவதுதான் அவர்களுடைய நோக்கம். அதற்கு சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. அன்னையின் கண்ணோட்டத்தின் பூரண யோகத்திற்குத் தேவையான கட்டுப்பாடுகள், மோட்சத்தை ஏற்றுக் கொண்ட தவசிகளின் கட்டுப்பாடுகளைவிட கடுமையானது. இந்தக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும்பொழுதுதான் சத்திய ஜீவியத்தை ஏற்றுத் திருவுருமாற்றம் பெற்று அதை வெளிப்படுத்தக் கூடிய தகுதியே நமக்கு வரும் என்கிறார்.

       பூரணயோகத்திற்குண்டான கட்டுப்பாடுகளைப் பற்றி விவரமாக பேசுவதற்கு முன்னர் தவசிகள் அந்நாட்களில் தம் உடலை வருத்திக் கொண்டது ஏன் ஆன்மீகத்திற்கு உதவாது என்பதற்கு அன்னை கொடுத்த விளக்கத்தைச் சொல்விட்டுப் பின்பு மற்ற விஷயங்களைப் பேச விரும்புகிறேன்.

       உடலை வருத்தி அடக்கி ஒடுக்கினால் தவசிகள் விரும்பிய ஆன்மீக முன்னேற்றத்திற்கு அவர்களுடைய உடல் தடையாக இருக்காது என்று அவர்கள் நினைத்தார்கள். அடுத்தவர்களை துன்புறுத்தினாலும் சரி அல்லது நம் உடம்பையே நாம் துன்புறுத்திக் கொண்டாலும் சரி இரண்டுமே கொடுமையின் வெளிப்பாடுகள்தாம் என்று அன்னை சொல்கிறார். பொதுவாக unconscious-ஆக இருப்பவர்கள்தான் கொடுமையை நாடுவார்கள். கொடுமை செய்யும் பொழுதுதான் அவர்களுக்கு strong sensation கிடைக்கிறது. அப்படி அவர்களுக்கு strong sensation கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை அவர்களைக் கொடுமைக்கு ஆட்படுத்தும்பொழுது தேவையில்லாமல் unconscious level-க்குப் போய்விடுகிறார்கள். ஆன்மீகம் என்பது நம்முடைய consciousness அதாவது ஜீவிய நிலையை உயர்த்துவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சி. ஆனால் அம்முயற்சியில் ஈடுபட்டு அறிவில்லாமல் உடம்பை வருத்தி பழங்காலத்து தவசிகள் unconscious நிலைக்கு போனதைப் பார்த்துவிட்டுத்தான் அன்னை வருத்தும் கட்டுப்பாடுகளுக்கும், ஆன்மீகத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லியிருக்கிறார்.

       இரண்டாவதாக உடம்பினால் வரக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக உடம்பை அந்நாட்களில் தவசிகள் அடக்கி ஒடுக்க முயன்றார்கள். ஆனால் இந்த விஷயத்தில் அன்னையின் கண்ணோட்டம் வேறுபட்டிருக்கிறது. உடம்பின் எதிர்ப்பை நாம் ஏன் தவிர்க்க முயல வேண்டும், ஏன் தைரியமாகச் சந்தித்து முறியடிக்கக் கூடாது என்று கேட்கிறார். வாழ்க்கையில் வருகின்ற சிரமங்களை challenge-ஆக ஏற்றுக் கொண்டு தைரியமாகப் போராடி வெற்றி பெறும் பொழுதுதான் நம்முடைய personality வளர்கிறது. நம்முடைய will powerஅதிகரிக்கிறது. உடலைப் பொறுத்தவரை நாம் மூன்றுவிதமாக அதை அணுகலாம். உடம்பின் ஆசைகளுக்கெல்லாம் அடிமையாகி சிற்றின்ப போக வாழ்க்கை வாழ்ந்து அதன் விளைவாக வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வது. இரண்டாவதாகத் தவசிகள் போல உடம்பை கடுமைக்கு ஆளாக்கி அதைப் புறக்கணித்து அவ்வகையில் அதை வீணாக்குவது. மூன்றாவதாக இந்த இரண்டு எதிர்முனைகளுக்கும் போகாமல் நம் மன உறுதியின் கட்டுப்பாட்டின் கீழ் உடம்பைக் கொண்டு வந்து அளவான, மிதமான, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொண்டு அந்த வகையில் உடம்பை நமக்கு ஒத்துழைக்கும் கருவியாக வைத்துக் கொள்வது. ஆக இந்த மூன்று வழிகளில் மூன்றாவதாகச் சொன்ன அளவான, மிதமான, பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் அணுகுமுறைதான் மிகவும் கடினமானது என்று அன்னை சொல்கிறார். ஆக இந்த அணுகுமுறையை ஒரு ஸ்challenge-ஆக எடுத்துக்கொண்டு அதில் வெற்றி கண்டு நம் உடலை control-க்குக் கொண்டு வரும்பொழுது நம் personality சிறக்கிறது.

இப்பொழுது அன்னை சொல்லிய நான்கு கட்டுப்பாடுகளுக்கு நாம் நேரிடையாக வருவோம்.

1. அன்புக் கட்டுப்பாடு (Tapasya of Love)

2. அறிவுக் கட்டுப்பாடு (Tapasya of knowledge)

3. வலிமைக் கட்டுப்பாடு (Tapasya of Power)

4. அழகுக் கட்டுப்பாடு (Tapasya of Beauty)

       அன்னை இப்படி வரிசைப்படுத்தியிருந்தாலும் இந்த வரிசை இவற்றின் முக்கியத்துவத்தையோ, உயர்வையோ, சிரமத்தையோ பிரதிபலிப்பதாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவரவர்களுடைய சுபாவத்திற்கு ஏற்றபடி எது சுலபமாக இருக்கும், எது கடினமாக இருக்கும் என்பது வேறுபடலாம். இங்கே அன்னை ஒரு பொதுப்படையான மாதிரியைத்தான் கொடுக்கிறார்.

       முதலாவதாக அன்னை எடுத்துக் கொள்வது உடல் கட்டுப்பாடு. Tapasya of beauty என்று அவர் சொல்வது இதைத்தான். இந்தக் கட்டுப்பாட்டிற்குக் கிடைக்கும் இறுதிப்பலன் என்னவென்றால் நம் செயல்பாட்டில் ஒரு சுதந்திரம் கிடைக்கிறது. இக்கட்டுப்பாட்டை அமுல்படுத்தும்பொழுது நம்முடைய உடம்பிற்கு ஒரு beautiful form கிடைக்கும் என்கிறார். மேலும் நம்முடைய உடம்பின் இயக்கத்தில் ஒரு agility அதாவது ஒரு லாவண்யம் வருமென்கிறார். அடுத்தபடியாக நம் உடம்பிற்கு ஒரு தெம்பு கிடைக்கும். ஆரோக்கியமும் கிடைக்கும் என்கிறார். இந்த உடல் கட்டுப்பாட்டை வெற்றிகரமாக கடைப்பிடிப்பதற்கு ரெகுலாரிட்டி அவசியமாகிறது. ஏனென்றால் ஒரு regular routine basis இல் செயல்படும்பொழுது உடம்பு சிறப்பாகச் செயல்படுகிறது. Habits மேற்கொள்வதன் மூலம் அந்த ரெகுலாரிட்டியைக் கொண்டு வரலாம். ரெகுலாரிட்டிக்கு habits உதவினாலும் அதே சமயத்தில் பழக்கவழக்கங்களுக்கும் நாம் அடிமையாகக் கூடாது என்றும் அன்னை எச்சரிக்கிறார். ஆகவே எந்நேரமும் தேவைப்பட்டால் நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். காலையில் இட்லி, தோசைதான் breakfast என்ற பழக்கம் இருந்தாலும் தேவைப்பட்டால் bread toastற்கு மாறுவதற்கும் முன்வர வேண்டும். வெந்நீரில் குளிப்பது பழக்கமிருந்தாலும்,தேவைப்பட்டால் வெந்நீர் கிடைக்காத நேரங்களிலும், இடங்களிலும் குளிர்ந்த நீரில் குளிக்கவும் தயாராக இருக்கவேண்டும். ஆக பழக்கம் வேண்டுமென்கிறார். பழக்கத்திலிருந்து விடுபடவும் தெரிய வேண்டும் என்று அன்னை சொல்கிறார்.

       அடுத்த கட்டமாக என்ன சொல்கிறார் என்றால் சிரமமான வேலைகளைச் செய்யும் அளவிற்கு நம் உடல் தசைகளைப் பலப்படுத்த வேண்டுமென்கிறார். நாம் செய்வது desk type clerical job-ஆகக் கூட இருக்கலாம். இருந்தாலும் அவசரத்திற்கு ஒரு பீரோவை மாடிக்குக் கொண்டு செல்வதற்குக் கை கொடுக்கவும் தெரியவேண்டும். பீரோவைத் தூக்கிச் செல்லும் வேலையில் ஈடுபட்டதால் அடுத்த 2 மணி நேரத்திற்குத் தெம்பே இல்லாமல் உடம்பு களைத்து விட்ட நிலையில் நம் உடம்பை வைத்திருக்கக் கூடாது. சென்னையிலிருந்து இரவு முழுவதும் பஸ்ஸில் பயணம் செய்து திருநெல்வேலிக்கு அதிகாலை சென்று அந்நாள் முழுவதும் அங்கே வேலை செய்துவிட்டு மீண்டும் இரவு பஸ் பிடித்து அதிகாலை சென்னை வந்து இங்கேயும் ஆபீஸிற்கு அன்றைக்குப் போக வேண்டுமென்றால் இதற்கு நம் உடம்பு ஒத்துழைக்கிறது என்றால் நாம் அதை நல்ல கண்டிஷனில் வைத்திருக்கிறோம் என்று அர்த்தமாகிறது. இப்படியில்லாமல் திருநெல்வேலி சென்று அன்று முழுவதும் ரெஸ்ட் தேவைப்படுகிறது என்றால் அன்னை விரும்பும் fitness நம் உடம்பில் இல்லை என்றாகிறது. சிரமத்திற்கு நம் உடம்பைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென்று அன்னை சொல்லும்பொழுது கூட ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வகையில் ஓவராக strain பண்ணவும் கூடாது என்று அதையும் சொல்கிறார். இரண்டு பேர் செய்யும் வேலையை ஒருவரே செய்ய முயல்வது, தூக்கத்தைக் கெடுக்கக் கூடிய night shift வேலையை தினந்தோறும் செய்வது, சரியான டிரெயினிங் இல்லாமல் கடுமையான விளையாட்டுகளில் திடீரென்று இறங்குவது போன்ற அறிவில்லாத வேலைகளையும் செய்யாமல் இருக்கவேண்டுமென்கிறார்.

       ரெகுலாரிட்டி என்று ஏற்றுக்கொண்ட பிறகு அது சாப்பாடு, தூக்கம், வேலை மற்றும் உடற்பயிற்சி என்று எல்லா இடங்களிலும் வெளிப்படவேண்டும். அவரவருடைய உடம்பின் தேவைகளை நன்கு புரிந்து கொண்டு எதைச் சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது, எத்தனை மணி நேரம் தூங்குவது, என்ன வேலையை எத்தனை மணி நேரம் செய்வது, எந்த விதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பவற்றை எல்லாம் ஒரு daily programme மாதிரி போட்டுக்கொண்டு கூடுமான வரையிலும் இதை அனுசரித்து தினந்தோறும் நடந்தோமென்றால் நம் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ரெகுலாரிட்டி நம் வாழ்க்கையில் செட் ஆகும். இந்த ரெகுலாரிட்டியை அர்த்தமில்லாத காரணங்களுக்காகவும், ஆசையின் உந்துதலின் பேரிலும் நாம் டிஸ்டர்ப் பண்ணினோமென்றால் ஓரிரு முறைகள் நாம் அனுமதித்தது நாளாவட்டத்தில் ரெகுலர் disturbance ஆகிவிடும். 10.00 மணிக்குப் படுக்கப்போவது என்ற ஒரு ரெகுலர் habit -ஐ உருவாக்கிவிட்ட பிறகு அதை கெடுக்கும் வகையில் T.V.லேட் night film பார்ப்பது மற்றும் லேட் நைட் பார்ட்டிக்குப் போவது என்று temptationக்கே இடம் கொடுக்கக் கூடாது. ஓரிரு தடவை இடம் கொடுத்தாலும் இதுவே வளரும் என்று அன்னை சொல்கிறார். காலையில் ஒரு டீ அல்லது காப்பி, மாலையில் ஒரு டீ அல்லது காப்பி என்ற பழக்கத்தை கொண்டு வந்தால் இதை நாம் காப்பாற்ற வேண்டும். இடையில் நான்கு இடங்களுக்கு வேலை விஷயமாகப் போகிறோம். போகிற இடங்களில் எல்லாம் கொடுக்கிற டீ, காப்பி எல்லாம் வாங்கிச் சாப்பிடுகிறோம் என்றால் நாம் இவ்விஷயத்தில் எந்த ரெகுலாரிட்டியையும் காப்பாற்ற முடியாது. ரெகுலாரிட்டி உடைந்த பிறகு ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கும் போகாமருந்தாலும் வீட்டிலேயே 5,6 முறை காப்பி, டீ குடிக்கத்தான் தோன்றும். இருக்கின்ற எனர்ஜியை சேகரம் செய்து அபிவிருத்தி செய்வதுதான் நோக்கம் என்றால் உடல் நலத்தை கெடுக்கின்ற புகைப்பிடித்தல், குடிப்பழக்கம் கண்டிப்பாகக் கூடாது என்றாகிறது. தூக்கத்திற்கும் நம்முடைய சாப்பாட்டிற்கும் தொடர்பு உண்டு என்று அன்னை சொல்கிறார்.

       அதாவது அளவோடு சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகும்போது நம்முடைய தூக்கமும் அளவோடு இருக்கும். இப்படியில்லாமல் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனால் தூக்கம் அந்த அளவிற்கு நீடிக்கும் என்கிறார். நீடிப்பதோடு மட்டுமில்லாமல் நம்மை refresh பண்ணுவதற்குப் பதிலாக unconscious நிலைக்கு நம்மை தள்ளிவிடும் என்று எச்சரிக்கிறார். ஆகவே அன்பர்கள் இரவு சாப்பாட்டு அளவை கவனிக்க வேண்டும் என்றாகிறது. சாப்பாட்டைவிட இன்னும் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் அன்னை என்றால் அது தூங்குவதற்கு முன் நமக்கு இருக்கும் மனநிலையாகும். விறுவிறுப்பான எண்ண ஓட்டத்துடன் தூங்கப் போவது நல்லதில்லை என்கிறார். ஆகவே படுப்பதற்குமுன் ஓர் ஐந்து நிமிடம் எடுத்துக் கொண்டு எண்ண ஓட்டத்தை நிறுத்தி மனதில் அமைதியைக் கொண்டு வந்து அதன்பின் தூங்குவது நல்லது என்கிறார்.

       நம்முடைய பகல் நேர நடவடிக்கைகளில் வேலைக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்திற்கு ஈடாக உடற்பயிற்சியையும் கருத வேண்டும் என்கிறார். அன்னை அன்பர்கள் உடற்பயிற்சி செய்கிறார்களோ இல்லையோ ஆசிரமவாசிகள் எல்லோருக்கும் கட்டாய உடற்பயிற்சி உண்டு. உடற்பயிற்சி நிபுணர் ஒருவரை அணுகி நம் உடம்பிற்குத் தேவையான உடற்பயிற்சிகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு அவருடைய மேற்பார்வையில் உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம் என்கிறார். சுலபமான பயிற்சிகளைத் தேர்ந்தெடுப்பது என்று போகாமல் நம் உடம்பிற்கு எது தேவையோ அதைக் கற்றுக் கொண்டு செய்ய வேண்டும் என்கிறார். மேலும் நிபுணரின் அனுமதி இல்லாமல் நம்மிஷ்டத்திற்கு மாற்றவும் கூடாது என்கிறார். அன்பர்கள் உடற்பயிற்சியைச் சீரியஸாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் உடற்பயிற்சிக்கு அன்னை கொடுக்கும் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்வது நல்லது. நீண்ட நாளாக தியானம் செய்யும் பல அன்பர்கள் தம் உடம்பிற்குள் அன்னையின் சக்தி இறங்குவதில்லையே என்று வருத்தப்படுதவதுண்டு. இப்படி அன்னையின் சக்தி உடம்பில் இறங்காமல் இருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இவர்கள் தம் உடம்பை நல்ல கண்டிஷனில் வைத்திருப்பதில்லை என்பதாகும். Unfitஆன உடம்பில் தன்னுடைய force இறங்கினால், அதன் பாரம் தாங்காமல் அன்பர்களின் உடம்பு பாதிக்கப்பட்டுவிடும் என்று அன்னைக்குத் தெரிவதால் அவர் அந்த forceஐ இறக்குவதேயில்லை. இப்படி ஆன்மீக அனுபவங்களுக்கும், physical fitnessக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இனிமேலாவது நாம் உடற்பயிற்சிக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.

       அடுத்ததாக நாம் செய்ய வேண்டிய வேலைகளை எடுத்துக் கொள்ளுவோம். ஆன்மீக முன்னேற்றத்தை நாடுபவர்கள் எல்லா வேலைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்கிறார். சின்ன வேலை, பெரிய வேலை, கௌரவமான வேலை, அகௌரவமான வேலை என்ற பாகுபாடுகளெல்லாம் பார்க்கக்கூடாது என்கிறார். ஆசிரமத்தில் புதிதாகச் சேர்கின்ற பல பேருக்கு முதலில் கொடுக்கப்படும் வேலை டைனிங் ரூமில் டிஷ் வாஷிங் தான். மனம் கசங்காமல் சந்தோஷமாக அவைகளைச் செய்தவர்கள் இருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்து பின்வாங்கியவர்கள் அன்னையின் கவனத்தை இழந்தும் இருக்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது யாருக்கு எந்த வேலையில் ஈடுபாடு அதிகமாக உள்ளதோ அந்த வேலையைத்தான் அவர்கள் சிறப்பாக செய்கிறார்கள். ஆனால் அன்னையின் கண்ணோட்டம் எப்படி இருக்கிறதென்றால் self perfection வேண்டும் என்பவர்கள் என்ன வேலை கொடுக்கப்படுகிறதோ அதில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார். Cleaning வேலை, சமையல் வேலை, தோட்ட வேலை என்று சாதாரண physical work ஆக இருந்தால் கூட தொடர்ந்து improvementஐக் காட்டிக் கொண்டே இருக்கவேண்டும் என்கிறார். சாதாரண வேலையிலேயே தொடர்ந்து improvementஐ எதிர்பார்க்கிறார் என்றால் higher level executive work மற்றும் ஆசிரியர், டாக்டர்,chartered accountant மற்றும் இன்ஜினியர் போன்ற professional work செய்பவர்களிடம் இன்னும் எவ்வளவு improvementஐ எதிர்பார்ப்பார் என்று நாம் கருதவேண்டும்.

       இப்படிச் சின்ன வேலை, பெரிய வேலை, கௌரவமான வேலை, அகௌரவமான வேலை என்று பாகுபாடுகள் இல்லாமல் கிடைக்கின்ற வேலையை ஆர்வமாகச் செய்கின்ற மனோபாவம் என்பது வேலையைப் பொறுத்தவரை ஒரு பெரிய சுதந்திரத்தை அளிக்கிறது. நாம் செய்கின்ற வேலையைப் பொருத்து society நமக்கு ஒரு statusஐக் கொடுக்கிறது. அந்த status வேண்டும் என்பவர் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்தால்தான் அந்த statusஐப் பெற முடியும் என்ற நிலையில் அவருடைய choice of work என்பது ஒரு குறுகிய வட்டத்திற்குள் வந்துவிடுகிறது. ஆனால் social status முக்கியமில்லை, self perfection தான் முக்கியம் என்று ஒரு அன்பரின் மனோபாவம் மாறும்பொழுது எந்த வேலையும் செய்யக்கூடிய ஒரு சுதந்திரம் அவருக்குக் கிடைக்கிறது.

       இந்தச் சுதந்திரத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் மற்ற இடங்களில் நாம் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றே ஆக வேண்டும். அதாவது எந்த ரூபத்திலும் சிற்றின்பங்களை நாடக்கூடாது என்கிறார். சிற்றின்பங்கள் என்று சொன்னால் அதில் உடல் உறவும் வருகிறது. உடலுறவில் ஈடுபடுகிறவர்களுடைய எனர்ஜி லெவல் குறைகிறது என்பதால், உடல் உறவு ஆயுள் பலத்தையே குறைக்கிறது என்று சொல்கிறார். எனர்ஜி-லெவல் குறைகிறது என்பதோடு மட்டுமின்றி consciousness level-உம் இறங்குகின்றது என்கிறார். பூரணயோகப் பாதையில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு இப்படிப்பட்ட சரிவு சரியில்லை என்பதால் உடலுறவை அறவே நிறுத்த வேண்டும் என்கிறார். உடலளவில் உடலுறவை நிறுத்துவதோடு அல்லாமல் நம்முடைய சிந்தனை மற்றும் உணர்வுகளிலிருந்தும் உடலுறவை எடுக்கவேண்டும் என்கிறார். இப்படி எடுத்தால்தான் இத்திசையில் இதுவரை செலவாகிக் கொண்டிருந்த எனர்ஜி எல்லாம் redirection பெற்று உயர்ந்த விஷயங்களை நாடிப் போகும். குடும்ப வாழ்க்கை வாழும் அன்பர்களுக்காக அன்னை இதைச் சொல்லவில்லை. ஆன்மீக முன்னேற்றத்தில் தீவிரமாக இருக்கின்றவர்களுக்குத்தான் இதை எழுதியிருக்கிறார்.

       இப்பொழுது வலிமை கட்டுப்பாடு என்ற இரண்டாவது கட்டுப்பாட்டிற்கு வருவோம். நம்முடைய உணர்வு மையத்தை ஆங்கிலத்தில் அன்னை vital centre என்கிறார். நம்முடைய ஆசைகள் மற்றும் அன்பு, கோபம், ஆர்வம், பயம், வருத்தம், மகிழ்ச்சி என்ற எல்லா உணர்வுகளுக்கும் நம்முடைய vital centreதான் இருப்பிடமாக இருக்கிறது. நம்முடைய உணர்வு மையத்தில் இருக்கின்ற vital energy தான் நம்முடைய எண்ணங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான acting powerஐ அளிக்கிறது என்பதால் நம்முடைய உணர்வு மையத்தை power centre என்கிறார் அன்னை. Vital energy கட்டுக்கடங்காமல் போகும்பொழுதும், காமம், கோபம், பொறாமை போன்ற negative உணர்வுகள் அதிகமாகும் பொழுதும் நம் உணர்வு மையத்திற்கு ஒரு negative direction setஆகி விட்டால் நம்முடைய ஆன்மீக ஆர்வத்தை நம் உணர்வு மையமே எதிர்க்கக் கூடிய ஆபத்து வருகிறது. இந்த ஆபத்தைத் தடுப்பதற்காக அந்நாட்களில் தவசிகள் இந்த உணர்வு மையத்தின் energy levelஐக் குறைத்து அதை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். இப்படி energy levelஐக் குறைப்பதற்கு அவர்கள் கையாண்ட வழி உணர்வு மையத்திற்கு வழக்கமாக கிடைக்கக்கூடிய எல்லா sensory stimulation ஐயும் நிறுத்துவதுதான்.

       மனிதர்களோடு பழகாமல் வனாந்திரத்தில் தனியாக அமர்ந்து அமைதியாகத் தியானம் செய்யும்பொழுது தவசிகளுடைய உணர்வு மையத்திற்கு அதை ஊக்கி வைக்கக் கூடிய எந்த ஒரு stimulation-னும் கிடைப்பதில்லை. ருசியான சாப்பாடு, இன்பமான இசை, பெண்களின் தொடர்பு, இதமான படுக்கை என்ற எந்த புலன் இன்பமும் இல்லாத வறண்ட எளிமையான வாழ்க்கையைத் தவசிகள் வாழ்ந்தபொழுது எனர்ஜி input என்ற எதுவுமே அவர்களுடைய உணர்வு மையத்திற்கு கிடைக்காமல் போய் அவர்களுடைய vital centre அடங்கி ஒடுங்கி ஜீவனில்லாமல் போய்விட்டது. அவர்களுடைய கண்ணோட்டம் குறுகியது என்பதால் இப்படி உணர்வு மையத்தை அடக்கி ஒடுக்கியது அவர்களுக்கு சரி. ஆனால் திருவுருமாற்றத்தை நாடுகின்ற நமக்கு இப்படி sensationகளைக் குறைப்பதோ அவ்வகையில் உணர்வு மையத்தை அடக்கி ஒடுக்குவதோ சரி வாராது.

       நம்முடைய புலன்களையும், அவற்றால் கிடைக்கக்கூடிய புலன் அறிவையும் நம்முடைய ஆன்மீகப் பக்குவத்திற்கு நாம் நிறையவே பயன்படுத்தலாம். நம்முடைய ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், நம் வீட்டுச் சுத்தத்தை அதிகரித்துக் கொள்வதற்கும், நாம் சந்திப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதிப்பிடுவதற்கும், நமக்கு வேண்டியது எது, வேண்டாதது எது என்று பாகுபாடு பார்ப்பதற்கும், நம் புலன் அறிவு நிச்சயம் உதவும். பழம், காய்கறிகள் வாங்கும்பொழுது கையால் தொட்டுப் பார்த்து மூக்கால் முகர்ந்து பார்த்து பழம், காய்கறிகளின் தரத்தை உணர்ந்து நம்மால் வாங்க முடியும். ஒரு வீட்டில் குடிக்க தண்ணீர் கேட்கிறோம். நமக்கு கொடுக்கின்ற டம்ளர் அழுக்காக இருக்கிறதா இல்லையா என்பதை கண்களால் பார்த்து பின்பு தண்ணீர் குடிக்கலாம். ஒரு ஹோட்டலுக்குள் நுழைகிறோம். சுத்தமாக இருக்கிறதா என்று பார்வையிட்டு விட்டு பின்பு அமர்ந்து சாப்பிட்டால் அது நம் உடல் நலத்திற்கு நல்லது. புது ஏரியாவிற்கு குடிபோகும்பொழுது அந்த ஏரியாவுடைய சுத்தத்தை நாம் பார்வையிட்டுவிட்டுப் பின்னர் குடிபோகும்பொழுது அது நமக்கு நல்லது செய்கிறது. சுத்தத்தையும் பார்க்காமல், traffic noise-யும் பார்க்காமல் கண்ணையும், காதையும் மூடிக்கொண்டு புது ஏரியாவிற்குக் குடி போனேன் என்று சொல்பவர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் இருப்பார்கள்.

       புது மனிதரைச் சந்திக்கும்பொழுது அவருடைய dress, அவருடைய பேச்சு, அவருடைய முகப்பொலிவு, அவருடைய நிறம், அவருடைய உருவம், எடை என்ற எல்லாவற்றையுமே நாம் நோட்டம் பார்க்கத்தான் செய்கிறோம். இப்படி நோட்டம் பார்க்கும்பொழுது வசதியானவரா, இல்லையா, படித்தவரா, படிக்காதவரா, உள்ளூரா, வெளியூரா, என்ன வயதிருக்கும், என்ன community-ஐச் சேர்ந்தவராக இருப்பார் என்று ஓரளவிற்கு நம்மால் அனுமானிக்க முடிகிறது. இப்படித் தோற்றத்தை வைத்து எடை போடுவதற்கு உதவுவது நம்முடைய புலனறிவு. பளிச்சென்று டிரஸ் செய்திருந்தார். அதனால் வசதியானவர் என்று புரிந்து கொண்டேன். அமைதியாக, soft ஆகப் பேசினார். அதனால் cultured person என்று புரிந்து கொண்டேன். வேகமாக நடந்தார். அதனால் energetic person என்று புரிந்து கொண்டேன். சிந்தாமல், சிதறாமல் சாப்பிட்டார். அதனால் அவர் neat person என்று புரிந்து கொண்டேன் என்றெல்லாம் சொல்கிறோம். அவர் உள்ளே வந்தவுடன் இதுவரை இல்லாத கரண்ட் உடனே வந்தது. கரண்ட் வருகிறது என்பதை நம் கண் கவனிக்கும்பொழுது கரண்ட் வருகைக்கும், அவர் வருகைக்கும் ஒரு தொடர்பைப் பார்த்து வந்திருப்பவர் நல்லவர் என்று புரிந்து கொள்கிறோம். இல்லை அவர் வருகின்ற நேரம் சமையலறையில் பாத்திரம் கீழே விழுந்து சமையல் பண்டம் கீழே விழுகிறது. அந்த சத்தம் நம் காதில் விழுகிறது என்றால் இரண்டையும் சம்பந்தப்படுத்தி வந்தவரிடம் ஏதோ ஒரு negative அம்சம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்கிறோம். இப்படியெல்லாம் நம் புலன் அறிவை நல்ல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

       ஆகவே பார்க்க வேண்டியதைப் பார்த்து, கேட்க வேண்டியதைக் கேட்டு, நமக்குப் பொருத்தமான உணவை மட்டும் உண்டு, ஐம்புலன்களை நாம் சரியான வழிகளில் பயன்படுத்தினோம் என்றால் நம் புலன்கள் நம் உணர்வு மையத்தை தூய்மைப்படுத்துவதற்கு நிறையவே உதவும். T.V.channel-on பண்ணுகிறோம். ஒரு sexy-யான scene கண்ணில்படுகிறது. Channel-ஐ உடனே மாற்றினால் நாம் உடனே தப்பித்துக் கொள்கிறோம். தெருவில் நடந்து போய்க்கொண்டிருக்கிறோம். அங்கு ஒரு ரகளை நடக்கிறது. அங்கே நின்று அது என்ன ரகளை என்று பார்க்கவோ, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் திட்டுகளைக் கேட்கவோ அவசியமில்லை. நிற்காமல் போய்க் கொண்டிருந்தால் நமக்குப் புலன் கட்டுப்பாடு இருக்கிறது என்றர்த்தம். மாறாக நின்று அதை வேடிக்கைப் பார்த்து அந்தத் திட்டுக்களை எல்லாம் நம் காதில் விழ அனுமதித்தால் நம் பரிசுத்தம் கெடுகிறது. நம்முடைய conscious level-உம் இறங்குகிறது. ஆக புலன்களை முறையாகக் கட்டுப்படுத்தி நல்ல விதமாகப் பயன்படுத்திக் கொள்வதுதான் நம் உணர்வு மையத்தை பலப்படுத்துவதற்கான வழி. புலன்களைத் தவறாகப் பயன்படுத்தினால் அவை நம் உணர்வு மையத்திற்கு negative direction-ஐ அமைத்துக் கொடுக்கும். இதுவும் நமக்கு நஷ்டம்தான். இப்படி இல்லாமல் sensory stimulation-ஐக் குறைத்துப் புலன்களை அடக்கி ஒடுக்கி நமது உணர்வு மையத்தை நசுக்கினோம் என்றாலும் இதுவும் நமக்கு நஷ்டம்தான். இந்த இரண்டு விதமான நஷ்டமும் நமக்குத் தேவையில்லை. நம்முடைய உணர்வு மையத்திற்கு proper training and education -ஐ வழங்கினோமென்றால் சிற்றின்ப ஆசைகளில் இருக்கும் பிடிப்பை தானே விட்டுவிட்டு நம்முடைய பேரின்ப ஆர்வத்திற்கு நம் உணர்வு மையமே ஒரு பலத்த ஆதரவை வழங்கும். இதை நாம் சாதித்துக் காட்டலாம். இது ஒன்றும் முடியாத காரியமில்லை.

 

****

 

_____________________________________________________________________________________________________

ஸ்ரீ அரவிந்த சுடர்

தான் பெற்ற முழு அறிவை அறியாமை என்றுணர்பவன் ஞானி.

தன் அறியாமையை அறிவாகக் கொண்டவன் மனிதன்.

ஞானியின் அறியாமை; மனித அறிவு.

__________________________________________________________________________________________________

 

 book | by Dr. Radut