Skip to Content

03.லைப் டிவைன்

 “ஸ்ரீ அரவிந்தம்” - லைப் டிவைன் 

                                                                               -  கர்மயோகி

9. சத் புருஷன்

       அசைபோடும் மனம், அலைபாயும் எண்ணம் ஆகியவை நம் வாழ்வு. மனிதன் தன்னை ரசிக்கிறான். தன்னையும், தன் வாழ்வையும், விருப்பு வெறுப்புகளையும் அளவு கடந்து, இடையறாது ருசித்து ரசித்து வாழ்கிறான். இது அகந்தைக்குரிய வாழ்வு. இவை சிறிய வாழ்வின் குறுகிய வண்ணங்கள். கவிஞன், கலைஞன், சிந்தனையாளன், எழுத்தாளன் போன்றவர் இச்சிறுமையிலிருந்து விடுபட்டு உலகை உள்ளுணர்வால் காணும் நேரமுண்டு. மனம் விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டதால் சத்தியத்தை நாடுகிறது. அப்படிப்பட்டவர் கண்ணுக்கு வேத ரிஷிகள் கண்ட ஹிருதய சமுத்திரம் காட்சியளிக்கும். உலகம் சக்தியின் சமுத்திரம், அக்னிப்பிழம்பு, அளவு கடந்த சக்தி அலைபாயும் அரங்கம், முடிவில்லாத அலைகள், முனைந்து மனதினை சூழ்வதே சூழ்நிலை எனத் தோன்றும். காலத்தைக் கடந்து, பிரபஞ்சம் (உலகம்) முழுவதையும் தழுவி ஹிருதய சமுத்திரம் பரவி நிற்பதைக் காணலாம். அகங்காரமும், அகந்தையும் அங்கு ஒதுங்கி நிற்கும். சமூகமும் விலகி நிற்கும். இதுவே அகந்தையற்ற பார்வைக்கு உலகம் தரும் காட்சி. பல்லாயிரம் ஆண்டுகளாக உலகம் படைத்த அனைத்தும், அதன் முன் தூசியாகும். அர்த்தமற்ற அல்பமாகத் தோன்றும். அது அளவு கடந்த சலனம், அனந்தனின் சயனம். அபரிமிதமான சக்தியின் பிரவாகம். புவியின் அலங்காரங்களும், புத்தியின் சாதனைகளும், வரலாறு படைத்த வல்லரசுகளும், வெளிவரும் வேகத்திற்கு வெற்றிடமாகக் காட்சியளிக்கும். மனிதன் அறிவால் செயல்படுவதில்லை. உணர்வால் மட்டுமே உயிர் வாழ்கிறான். இப்பிரபஞ்ச பிரவாகத்தைக் கண்ணுற்றவன் தன் வாழ்வை அதன்படி அமைத்துக் கொள்கிறான். அதைத் தனக்காக ஏற்பட்டதாகக் கொள்கிறான். தன்னையே உலகத்தின் மையமாக நினைக்கிறான். தன் ஆசை, அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய உலகம் ஏற்பட்டது என்பது அவன் கொள்கை. தான் கண்ட பிரவாகமும் அதையே செய்யும் என்று கனவு காண்கிறான். நிதானமாக நினைத்துப் பார்த்தால் சமுத்திரமான சக்திக்கு அது வேலையில்லை, அது தானே எழுந்து தானே செயல்படுவது. அதன் இலட்சியங்கள் வேறு, பிரம்மாண்டமானவை. கற்பனையைக் கடந்த அதன் உருவகங்கள் கடல்போல் பரவியுள்ளன. நம்மையும், நம் சிறுபிள்ளைத்தனத்தையும் கண்டு அச்சமுத்திரம் கேலியாக புன்னகைப்பதை நாம் காண முடியும். இது புரிந்ததும் நம் மனம் எதிர் முனைக்கும் போகும். அதன் முன் நாம் ஒரு பொருட்டன்று எனத் தோன்றும். அதவும் உண்மையன்று. பிரபஞ்சம், உலகம் எவ்வளவு பெரியது, எவ்வளவு சிறியதையும் எப்படி அது கவனிக்கிறது என்ற உண்மை நம் கண்ணிலோ, மனதிலோ படுவதில்லை.

       நாம் இப்பெரு வெள்ளத்தின் முன் நிற்கிறோம். அதன் முன் நாம் கடுகு என்பது சொல்லாமல் விளங்கும். உண்மை வேறு. பிரபஞ்சத்தின் பிரவாகத்திற்குக் கடுகு போன்ற மனிதனும் முக்கியம். எந்த அளவு சிறு விஷயத்திலும் உலகம் அளவு கடந்த முக்கியத்துவம் காண்பிக்கிறது என்பதை நாம் விஞ்ஞானத்தால் அறிகிறோம். விஷயம் எவ்வளவு சிறியதாக இருக்கிறதோ அவ்வளவு முக்கியம் வாய்ந்தது என்பதை (cell, gene, DNA, micronutrients,atom) செல், ஜீன், DNA, பூமியில் சாரம், அணு இவற்றுள் நாம் அறிகிறோம். பெரியதான பிரம்மத்திற்குக் கடுகளவுள்ள மனிதன் சிறியவனல்லன், சிறியதாகக் காணும் பிரம்மம். பிரம்மம் நம்மைப் பிரம்மமாகவே காண்கிறது. அதனால் சிறிய வேலைக்கும் பிரம்மம் முழுத் தீவிரத்துடன் தன்னை முழுவதுமாகத் தருகிறது. சமம் பிரம்மம் என கீதை அதைக் கூறுகிறது. பிரம்மம் தன் சமமான பகுதிகளை அனைவருக்கும் சமமாகத் தருகிறது என்பது சரியன்று. ஒவ்வொரு பொருளுக்கும், மனிதனுக்கும் அனந்தமான பிரம்மம் தன்னை முழுவதுமாகத் தருகிறது என்பதே உண்மை. அதுவே அனந்தத்தின் தன்மை. எத்தனை முறை தன்னை முழுமையாகக் கொடுத்தாலும், அனந்தத்தின் முழுமை குறையாது என்பது பிரம்மத்தின் உண்மை. பெரியதையும், சிறியதையும் வேறு வேறாகப் பிரம்மம் நடத்தினால், பிரம்மம் பெரியதாக -அனந்தம் - இருக்காது, நம்மைப்போல் சிறியதாகிவிடும். அளவு மாறினால் பெரியது, சிறியது ஏற்படுகிறது. அளவு உண்மையில்லை, மாயை. ஒரு மூட்டைப் பருத்தி அளவில் பெரியது. ஒரு துண்டு தங்கம் அளவில் சிறியது. விலையில் இரண்டும் சமம். எறும்பு சூரிய மண்டலத்தின் முன் துரும்பு, மண்டலம் பெரியது, எறும்பு சிறியது. அளவால், அளவு கடந்து மாறுபடுபவை, அவற்றின் பின்னாலுள்ள பிரம்மம் இரண்டிலும் சமம். உயிருள்ளது என்பதால் எறும்பு, சூரிய மண்டலத்தை விட உயர்ந்தது. அதே கணக்குப்படி மனிதன் உலகிலுள்ள அனைத்தையும் விட உயர்ந்தவன். இங்கு மாறுவது குணம். குணம் மாறினாலும், குணத்திற்குப் பின்னாலுள்ள பிரம்மம் சமம். அளவு மாயை. குணம் மாயை. தோற்றம் மாயை, அவற்றின் பின்னாலுள்ள பிரம்மமே உண்மை. பிரம்மம் முழுமையானது. சிறியதிலும், பெரியதிலும் பிரம்மம் எங்கும், எங்ஙனமும், எந்நேரமும், பிரம்மம் சமமானது, முழுமையானது. அளவால் பெரியதாக முடியாது எனில், ரூபத்தால் பெரியதாக முடியுமா? குணத்தால் பெரியதாக முடியுமோ? பிரம்மத்தைத் துண்டாட முடியாது. பிரம்மம் கண்டமாகாத அகண்டமன்று, கண்டமாக்க முடியாத அகண்டம். அளவும், குணமும் அவற்றின் பின்னாலுள்ள சக்தியின் தீவிரத்தைப் பிறப்பிக்கின்றன. பிரம்மத்தோடு ஜீவனுள்ளது, சக்தியுள்ளது, பொருள்களில் பிரம்மத்தின் சக்தி சமமாகப் பரவியுள்ளதைக் காண்கிறோம். பொருள்களில் பிரம்மத்தின் ஜீவன் சமமாகப் பின்னணியிலிருப்பதைக் காணலாம். இதுவும் மாயை, அளவால் மாயை(illusion of quantity). நாம் பார்வையை மாற்றிப் பேசுவோம். நமக்கு ஜீவியம் இருப்பதைப்போல், சமுத்திரச் சக்திக்கும் ஜீவியம் உண்டு. இது மனதின் ஜீவியமன்று. அது வேறு. இதைப் பகுக்க முடியாது. துண்டாட முடியாது. தன்னை முழுமையாக அனைத்துக்கும் தரவல்லது. தன் முழுமையையும் ஒரே சமயத்தில் எதற்கும் தரவல்ல ஜீவியம் இது. பிரம்மத்திற்கு முழுமை, பகுதி என்பதில்லை. அனைத்தும் அதுவே, பிரம்மத்தினின்று பெறுபவர் முழுமையாகப் பெறுகிறார்கள். அளவும், குணமும் மாறலாம், ஆனால் அவற்றின் பின்னாலுள்ள புருஷனோ, பிரம்மமோ மாறுவதில்லை. உருவம் மாறும். தன்மை மாறும், முறை மாறும். சக்தியின் தீவிரமும் மாறும். ஆனால் ஆதியான சக்தி என்றால் உள்ளது, அளவிறந்தது, அடிப்படையானது. பலசாலியை உற்பத்தி செய்ய பலம் தேவை. பலத்தை வெளிப்படுத்தி பலவான் உருவாகுகிறான். பலஹீனனை உற்பத்தி செய்ய சக்தி தேவை. சக்தியை மறைத்து பலஹீனன் உற்பத்தியாகிறான். பலசாலி, பலஹீனன் இருவரிலும் சக்தி ஒன்றே, ஒன்றில் சக்தி வெளிப்படுகிறது. அடுத்ததில் சக்தி மறைக்கப்படுகிறது. மௌனத்திற்கும், சப்தத்திற்கும் அதுவே சட்டம். உண்டு என்பதற்கும், இல்லை என்பதற்கும் அதைப்போலவே சட்டங்கள் ஒன்றே.

        நாம் நம் கணக்கை சரியாகப் போட வேண்டும். சமுத்திரமான சக்தியை நாமறிவோம். இது சத் சக்தியானது. உலகமே இதுதான். நாமும் இதுவேயாகும், நம் இன்றையக் கணக்குப் பொய். சமுத்திரம் நம்மை முக்கியமாகக் கருதுகிறது. ஆனால் நமக்கு இச்சமுத்திரம் முக்கியமன்று. நமக்கு நாமே முக்கியம். இது நமக்கு அறியாமை, ஆதியின் அறியாமை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். இதுவே அகந்தையின் வேர். தானே எல்லாம் என அகந்தை நினைக்கிறது. தன்னையே உலகத்தின் மையமாக, பிரபஞ்சத்தின் மையமாக நினைப்பது அகந்தை. அகந்தைக்கு உலகம் உண்மையில்லை, தன் மனத்திற்குப் பிடித்ததை அகந்தை வெளியிலிருந்து ஏற்கும். புற நிகழ்ச்சிகளின் நிர்ப்பந்தம் ஓரளவு சிலவற்றை ஏற்கச் சொல்லும். சில சமயங்களில் அகந்தை தத்துவம் பேசும். ‘உலகில் எல்லாம் என்னில் உள்ளது. என்னால் உலகம் இயங்குகிறது’ என்பது அகந்தையின் தத்துவம். அகந்தை தன்னை அறியும், தன்னை மட்டுமே அறியும். தன் மனத்தால் அகந்தை பல அளவுகோல்களை - standards - ஏற்படுத்தி தரத்தை நிர்ணயிக்கின்றது. அவை அகந்தைக்கு உண்மை. அதன் எல்லையைக் கடந்துள்ளவை அகந்தையைப் பொறுத்தவரை பொய். அவையிருப்பதாக அகந்தை ஏற்பதில்லை. மனம் தன்னை அறிந்து ஏற்று, திருப்திபடும் முறை இது. இதுவே தப்புக் கணக்கு. வாழ்வின் கணக்குப் பெரியது. வாழ்வின் பெரிய பண்புகளை நாமறியோம். நம் தப்புக் கணக்கு வாழ்வின் பெரிய கணக்கை அறிவதைத் தடுக்கிறது. இதுவே அகந்தையின் சத்தியம். அகந்தை என்பது மனித மனத்தின் பாசாங்கு, நடிப்பு. அதன் உண்மையை மனம் அறியவில்லை. மனம் தன் அறியாமையை உணர்ந்தால், மனத்தின் உண்மை விளங்கும். உண்மை விளங்கினால் அகந்தை பிரம்மத்திற்குப் பணிய வேண்டும். அது நடந்தால் அகந்தை தனித்திருக்க முடியாது. தோற்றத்தையும், பலனையும் நாம் என நாமறிகிறோம். அது நாமன்று. சமுத்திரச் சக்தியின் பகுதியது. நாம் பிரம்மத்தை அறிய வேண்டும். ஏற்க வேண்டும். நடைமுறையில் பூர்த்தி செய்யவேண்டும். உலகின் உண்மையான வாழ்வின் ஆரம்பம் இது. பெரியதின் பகுதி என நாம் நம்மையறிய வேண்டும் என்பதற்குப் பதிலாக, நாமே பெரியது, பெரியதும், நாமும் ஒன்று என உணரவேண்டும். இதுவே கணக்கின் மறுபுறம். உணர்ந்ததை வெளிப்படுத்த வேண்டும். புது வாழ்வு அப்படி ஆரம்பித்து, இப்படி முடிகிறது

        இந்த அளவில் தப்புக் கணக்குச் சரியாகாது. கணக்குச் சரியாக நாம் அறிய வேண்டியது ஒன்றுண்டு. சமுத்திரமான சக்தி, எல்லாம் வல்லது, அனந்தமானது, இது என்ன என நாம் அறியவேண்டும். சமுத்திரமான சக்தியே முடிவானதில்லை என நாம் காண்கிறோம். அதைக் கடந்ததும் உண்டு எனப்படுகிறது. வேதாந்தம் அப்படிக் கருதுகிறது. பகுத்தறிவும் அதையே கூறுகிறது. சமுத்திரமான இச்சக்தியே முடிவானதும், நிலையானதுமான வேறொன்றுக்கு உட்பட்டது என அவை கூறுகின்றன. அதை ஸ்தாணு என்றழைக்கின்றனர். காலத்தைக் கடந்த அந்த அசைவற்ற நிலை மலை போன்றது. இடத்தையும் கடந்து நிற்கிறது. மேலும் அது சலனமற்றது, முடிவற்றது, தீர்க்கமுடியாதது எனவும் கூறுகின்றனர். எல்லாச் செயல்களையும் தன்னுட்கொண்ட அந்த ஸ்தாணு தான் செயல்படுவதில்லை. அது சக்தியில்லை, சக்திக்கு முன் நிலையான சத் எனவும் கூறுகின்றனர். சக்தியை மட்டும் காண்பவருண்டு அவர்களுக்கு நிலையானது, ஸ்தாணு என்பதில்லை. நிலையானது, அசைவற்றது என்றொன்றில்லை என அவர்கள் விரைந்து கூறுவர். ஸ்தாணு அவர்களுக்குக் கற்பனை, மாயை, புனைந்த புதிர். ஸ்தாணு என்று இல்லாத ஒன்றை அறிவால் புனைந்து பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். எனவே அக்கருத்து பொய்யானது. மனிதன் செயல்படும் வழி இது. அவனுடைய வெற்றிக்கு இது போன்ற உபாயம் அவசியம். அனைத்தும் சலனம், ஸ்தாணு என்பது மனத்தின் பிரமை. இதை எளிதில் நிரூபிக்கலாம். நிலையாகத் தோன்றுபவை சிலவற்றை ஆராய்ந்து பார்த்தால் அங்கு நிலை என்பதில்லை. சலனம் தடைப்பட்டபொழுது ஸ்தாணுவாகத் தோன்றும் தோற்றம் என அறிகிறோம். தொடர்ந்த அசைவு, தோற்றத்தில் நிலையாகக் காண்பதாகும்ரயிலில் போகும்பொழுது ஓடுவது ரயில், அருகில் உள்ள தந்திக் கம்பங்கள் அசைவதில்லை. தோற்றம் வேறு. தந்திக்கம்பங்கள் ஓடுவதாகவும், ரயில் அசையாமல் இருப்பதுவாகவும் உள்ளது தோற்றம். உண்மை எது? சலனத்தின் அடிப்படையில் உள்ளது என்ன? அது அசைவற்றதா? நகருமா? நகராதா? சத் என்பது சக்தியா? இல்லை சக்தி சத்திலிருந்து எழுகிறதா?

       சத் என்பது ஒன்றுண்டு. அப்படி ஒன்றிருந்தால் அது சக்தி. சக்தி அபரிமிதமானது - அனந்தம் - என்பதால், சத் என்பதும் அனந்தமானது. சிறியது finite என்பதற்கு முடிவு, ஆரம்பம் உண்டு. ஆரம்பம் எனில் அதற்கு முன் ஒன்றுண்டு என்றாகும். முடிவு எனில் அதன் பின் ஒன்றுண்டு என்றாகும். பகுத்தறிவு “முடிவு என்றொன்றில்லை” எனக் கூறுகிறது. ஆரம்பமும், முடிவுமில்லாதது அனந்தம். அது சிறியதாக இருக்க முடியாது. அது பெரியதேயாகும் (infinite). பகுத்தறிவு போதிப்பதை அனுபவமும், ஞானமும் ஆமோதிக்கின்றன. பூரண முடிவு என்றோ பூரண ஆரம்பம் என்றோ ஒன்றில்லை. அது முரணானது. மாயை, கருத்துக்கு ஒவ்வாதது. அனந்தம் தானே தன் இச்சையாக இருப்பது. சிறியது அதன் தோற்றம். அனந்தம் சிறியதைத் தன்னை ஏற்கும்படி வலியுறுத்துவதால், பெரியது சிறியதாகத் தோன்றுகிறது
 

தோற்றம் சிறியது.

உண்மை பெரியது.

பெரியதைச் சிறியதாகத் தோற்றுவிப்பது சிருஷ்டி.

 

        நாம் இதுவரை கருதியது அனந்தம். அனந்தம் என்பது முடிவற்றது. பொதுவாக நாம் பிரம்மத்தைப் பற்றிய அனந்தம் என்பதைக் குறிப்பிடுகிறோம். ஆனால் ஜடம் முதல் சத், பிரம்மம் வரை எல்லா நிலைகளுக்கும் அனந்தம் உரியது. இதுவரை நாம் பேசிய அனந்தம் காலத்திற்குரியது; காலம், இடம் ஆகிய இரு அனந்தங்களைப் பற்றியது. சத்தியம், உண்மை என்பவற்றைக் கடந்த அனந்தமான பிரம்மம் எழும் நேரம் காலமும், இடமும் மறைகின்றன. நாம் மனத்தால் விளக்கம் தருகிறோம். அதற்குப் பேச்சைக் கருவியாக்குகிறோம். பிரம்மம் பேச்சையும், மனத்தையும் கடந்தது. நாம் காணும் எதிர்ப்பு, முரண்பாடு மனத்தில் எழுவது, அது பிரம்மத்திலில்லை. பிரம்மத்தில் ஐக்கியம் மட்டுமேயுண்டு. பகுத்தறிவு காலம், இடத்தைக் கடந்து செயல்படும் தன்மையுடையது. பகுத்தறிவுக்கு ஊடுருவும் தன்மையுண்டு. பகுத்தறிவின் மூலம் காணும்பொழுது, காலமும், இடமும் வேறு வகையாகக் காண்கின்றன. நிகழ்ச்சிகளை நாம் உணரும் இருதரப்பட்ட அமைப்பாகக் காலமும், இடமும் காணப்படும். நேரடியாக நாம் சத் புருஷனைக் காண முயன்றால், காலமும், இடமும் கரைந்து, ஐக்கியம் மட்டுமே தெரிகிறது. அதாவது மனம் இடம் என்பதைக் கற்பனை செய்கிறது. காலம் என்றொன்றில்லை. அதுவும் மனம் உணரும் கற்பனையே. காலமும், இடமும், ஜீவியத்தின் விரிவு இல்லை. விரிவு என்பதைக் காணோம். விரிவு என்பவை உண்மையில் சின்னமேயாகும். எதை விளக்கமுடியவில்லையோ அதைச் சின்னமாகக் குறிக்கின்றன காலமும், இடமும். அவை குறிக்க முயல்வது காலத்தை, இடத்தைக் கடந்த நிலை (eternity). அந்நிலை சொற்களைக் கடந்த நிலை. அறிவின் சொற்களுக்கு, கருத்துக்கு அகப்படாதது அது. கடந்த அந்நிலை, அத்தனையும் தன்னுட் கொண்ட நிலை. எந்தக் கணமும் தன்னைப் புதுப்பிக்கும் தன்மையுடையது. கடந்தது எனினும் அனைத்தையும் ஊடுருவும் தன்மையுடையது. அது ஒரு புள்ளி. உலகத்தைத் தன்னுட்கொண்ட புள்ளி. இச்சொற்கள் முரண்பட்டு காணப்படுகின்றன. அது தீவிர முரண்பாடு. நாம் காண்பதைத் தெளிவாகத் தெரியப்படுத்தும் முரண்பாடு. நாம் சொற்களைக் கடந்தோம் என்பதை இது காட்டுகிறது. மனத்தையும் கடந்தோம் என அறிகிறோம். மனம் முரண்பாடுகள் மூலம் செயல்படுகிறது. அது மனத்திற்கு அவசியம். மனத்தைக் கடந்த இந்நிலைக்குமுரண்பாடு தேவையில்லை. நாம் காண்பனவெல்லாம் சொற்களால் கூற முடியாத ஐக்கியமாகும்.

 

       இது உண்மையா? வேறெதாவது உண்மையா? மனமும் பேச்சும் உண்மையில்லை என்றோம். சத் என்பதே இல்லை போலும். அது மனம் புனைந்ததாக இருக்குமா? அது சூன்யமாக இருக்கலாம். அது சொல்லால் உருவானதாக இருக்கலாம், அல்லது நாம் ஏதாவது தத்துவம் உற்பத்தி செய்கிறோமா? அதன் உண்மையா இது? அப்படியானால் அது மறைவது இயல்பு. நாம் அதன் வேர்வரை ஆராய்ச்சியைத் தொடர்வோம். இங்கு சத் புருஷனை நினைக்கிறோம். நினைவுக்குப் பின்னால் ஒன்றுள்ளது. அது உண்மை. அது அனந்தம், சொல்லுக்கு அகப்படாது. எந்த நிகழ்ச்சியும் முழுவதும் உண்மையில்லை. எல்லா நிகழ்ச்சிகளின் தொகுப்பும் உண்மையில்லை. நிகழ்ச்சி என்பது நிகழ்ச்சியே. எல்லா நிகழ்ச்சிகளையும் சுருக்கிச் சாரத்தைக் காணலாம். அது அடிப்படையானதாகவும், பொதுவாகவுமிருக்கும். அதுவும் சலனத்தின் நிகழ்ச்சியாக இருக்கும், சக்தியாகும். அப்படிச் சுருக்க முடியாது. அப்படிச் சுருக்கினால் சாரமே மற்றொரு நிகழ்ச்சியாகும். மீண்டும் அது சொல்லைக் கடந்ததாகும். மேலும் ஆராய்வோம். நாம் சலனத்தைப் பற்றிப் பேசுகிறோம். தர்க்கம், சலனம் என்றவுடன் அதன் எதிரான சலனமற்ற நிலையை -அமைதி -எழுப்பும். ஒளி என்றவுடன் இருட்டு வருகிறது. இருட்டில்லாமல் ஒளியில்லை. சலனம், சலனமற்ற நிலை என்றால் மேலும் கேள்வி எழும். ஏற்கனவே இதை சக்தி என்றோம். இப்பொழுது சலனமற்ற நிலை என்றால், சலனமற்ற நிலையிலுள்ள சக்தியை என்ன என்று கூறுவது? இது சக்திக்கு முந்தைய நிலை. சக்திக்கு முந்தைய நிலை சத் ஆகும். நம் விளக்கம் இரு விஷயங்களில் முடிகிறது. அவை,

  1. விவரிக்க முடியாத சுத்த சத் புருஷன்.

  2. விவரிக்க முடியாத சலனத்தில் வெளிப்படும் சக்தி.

      இரண்டாவது மட்டும் உண்மை எனக் கூறலாமா? அதுவே உண்மையானால், செயலால் சக்தி எழுகிறது எனப் பொருள். சக்தி என்பது நிகழ்ச்சி, பலன் என்று கொள்ளவேண்டும். சலனமே உண்மை. அதுவே முடிவு என்றாகும். சத் இருக்காது. புத்தர்கள் கூறும் சூன்யத்தில் நம் வாதம் முடியும். சத் என்பது சக்தியைப் பொருத்ததாக மாறும். செயல், சலனம், கர்மம் என்பவை உற்பத்தி செய்வது சத் என்று பொருள்படும். இவையனைத்தும் நிரந்தரமான நிகழ்ச்சிகள். இப்படிப் பேசினால் பகுத்தறிவு விழித்துக் கொள்கிறது. இம்முடிவு பகுத்தறிவுக்கு ஏற்பதாக இல்லை. அடிப்படையில் முரணானது, நிதர்சனமானதாக இல்லை என பகுத்தறிவு கூறுகிறது. அதனால் மறுக்கிறது. ஏற்க முடியாத நிலையை நாம் ஏற்படுத்திவிட்டோம். ஏறிய படிக்கட்டு அந்தரத்தில் தொங்குகிறது.

       நாம் சத் புருஷனைக் காண்கிறோம். சொல்லைக் கடந்தும், காலம், இடத்தைக் கடந்ததுமான சத், அப்படியானால் அது என்ன? தனித்த தூய்மையானதா? தூய்மையையும் கடந்ததா? அதன் தனித்தன்மை தூய்மை வாய்ந்ததா? எந்த வகையிலும் சத் புருஷனை விளக்க முடியாது. எந்தக் குணத்தாலும் சொல்ல முடியாது. எந்த ரூபத்தாலும் விவரிக்க முடியாது. சத் புருஷனுக்கு குணம், ரூபம் இல்லை. ரூபம், அளவு, குணம் மறைவதாகக் கொள்வோம். அவையெல்லாம் அழிந்த பின் சத் புருஷன் அழியாது. அவற்றால் ஏற்பட்டதில்லையல்லவா? ரூபம், அளவு குணமின்றி சத் புருஷன் உண்டு என்று நினைக்க முடியும். அது மட்டுமன்று. அப்படித்தான் சத் புருஷனை நினைக்க முடியும். நிகழ்ச்சிகட்குப் பின்னணியிலுள்ள சத் புருஷன் அது போன்றது. ரூபம், அளவு, குணம் ஆகியவை சத் புருஷனுக்கில்லை என்று நாம் கூறுவது, சத் புருஷன் அவற்றைக் கடந்தவன் என்று பொருள். மேலும் ரூபம், அளவு, குணம், சத் புருஷனில் புகுந்து மறைகின்றன எனவும் பொருள். மீண்டும், சத் புருஷனிலிருந்து வெளிவர முயன்றால் அவை வெளிவரும். பல ரூபங்கள் மறைந்து ஒரு ரூபமாயிற்று. பல குணங்கள் ஒரு குணமாக மாறின என்று நாம் கருதுவது தவறு. அப்படியும் இல்லை. அப்படி ஒரு விஷயமில்லை. ரூபம், அளவு, குணம் என்பவை இவற்றால் விவரிக்க முடியாத ஒன்றினுள் சென்று மறைகின்றன. நாம் நிபந்தனைகளையும் தோற்றத்தையும் நினைக்கிறோம். இவை அதனுள்ளிருந்து உற்பத்தியானவை. மீண்டும் அதனுள் சென்று மறைகின்றன. சலனத்தில் அவற்றை ரூபம், அளவு, குணம் என்கிறோம். சலனத்திற்கு அவை பொருத்தமான பெயர்கள். மீண்டும் ஆதியுள் சென்றடைந்தபின் அப்பெயர்கள் பொருந்தா. எனவே சத் புருஷனை நாம் (absolute) தனித்தன்மையின் தூய்மை என்கிறோம். எண்ணத்தால் அதை அறிய முடியாது. ஐக்கியத்தால் அதனுள் இரண்டறக் கலக்கலாம். ஐக்கியத்தின் உச்ச கட்டம் அது. நாமறிந்த ஞானத்தின் பல நிலைகளைக் கடந்தது. சலனம் சத் புருஷனுக்கு எதிரானது. சலனம் சிருஷ்டிக்குரியது, சிருஷ்டி சத் புருஷனுள் பிரம்மத்தினுள் உறைகிறது. சலனத்தின் அம்சங்கள் அனைத்தும் சிருஷ்டிக்குரியவை. அவை அனைத்தும் சத் புருஷனுள் உள்ளவை. அவை அனைத்தும் சத் புருஷனேயாகும் பிரம்மமேயாகும். ஆகாயத்தை உதாரணமாகக் கூறி வேதாந்தம் பிரம்மத்திற்கும் சிருஷ்டிக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. சிருஷ்டியிலுள்ளவை இயற்கையின் இன்றைய “தோற்றம்.” இவற்றிற்கெல்லாம் அடிப்படையாகவுள்ளது, ஆகாயம், வெளி எனப்படுவது. வெளி நிகழ்ச்சியினுள் உள்ளது. நிகழ்ச்சிகள் வெளியாலானவை. வெளியினுள் உள்ளவை நிகழ்ச்சிகள். நிகழ்ச்சிகள் வெளியினுள் நுழைந்தவுடன் மறைகின்றன. தங்கள் சொந்த ரூபத்தையும், அளவையும், குணத்தையும் இழக்கின்றன. மாறிய நிலையிலும் உள்ள ஐக்கியம் என தத்துவம் இதை விவரிக்கும். பிரம்மமும் சிருஷ்டியும் அவ்வாறு தொடர்பு கொண்டுள்ளன.

       ரூபம் பிரம்மத்தினுள் நுழைந்து மறைவது என்பது மனிதன் பேசும் பாஷை. காலத்தின் கதியை ஏற்கும் மொழி அது. மனித நிலையைக் கடந்ததை, மனித மொழியால் விளக்க முயன்றால் பலன் விபரீதமாகவோ, அர்த்தமற்றதாகவோ இருக்கும். அதன் விளைவாக எழுவது மாயை. நாம் மாயையை விட்டகல வேண்டும். சலனமற்றதிலிருந்து சலனம் உற்பத்தியாவது என்றும் உள்ள நிகழ்ச்சி. நம் எண்ணத்திற்கு அது எட்டாது. ஆதியும், அந்தமுமில்லாத எந்நேரமும் புதுமையாக உள்ள நிலை அது. காலத்தைக் கடந்த அனந்தமான நிலையிது. மனமும், மனநிலையும் முடிவற்ற காலத்தைச் சிந்திக்க முடியும், முடிவற்ற காலம் கடந்ததைச் சிந்திக்க முடியாது. காலத்தினுள் உள்ள முடிவற்ற நிலை என்பது, ஒன்றன்பின் ஒன்றாக எழும் தொடர் நிகழ்ச்சிகளாகும். அதைத் தொடர்காலம் எனலாம். ஆரம்பம், மையம், முடிவு என்பவை காலத்திற்குரிய கருத்துகள். மனிதன் இதையறிவான். இம்மனநிலையிலிருந்து காலத்தைக் கடந்த நிலையை விவரிப்பது மனிதச் செயல், காலத்துள் நிகழ்பவை மீண்டும் மீண்டும் எழுபவை.

       இதுவே பகுத்தறிவின் இலக்கணம் எனக் கூறுவோம். பகுத்தறிவை நாம் ஏற்றால் அது எழுப்பும் குழப்பங்களை நாம் காண முடியும். பகுத்தறிவை ஏற்க வேண்டும் என்ற அவசியம் நமக்கில்லை. பகுத்தறிவால் சத் புருஷனை அறிய முடியும். ஆனால் அதுவே நிர்ப்பந்தமில்லை. இது மட்டுமே வழி என்பதில்லை. மனத்தையோ, பகுத்தறிவையோ நாடாமல் நாம் சத் புருஷனை நெருங்க முடியும். நமக்கு ஊடுருவும் பார்வையுண்டு. தூய்மையான, சுதந்திரமான பார்வையை நாம் பயன்படுத்த முடியும். சத் புருஷன் என்பது சலனம், சலனம் தவிர வேறெதுவுமில்லை என்று அப்பார்வை நமக்கு அறிவுறுத்துகிறது. உள்ளவை இரண்டு, ஒன்று காலத்தின் கதி. அடுத்த இடத்தில் ஏற்படும் அசைவு. ஒன்று அகவுணர்வு, அடுத்தது புற நிகழ்ச்சி. விரிவின் அசைவு உள்ளது. மனம் விரிந்து காலம் எழுவது அடுத்தது. காலமும், இடமும் உண்மை. இவற்றுள் இடத்தை ஒருவாறு சமாளிக்கலாம். காலம் கட்டுப்படாது. இடம் புறத்தினுள்ளதால் கட்டுப்படும். காலம் அகவுணர்வால் செயல்படுவதால் கட்டுப்படாது. இடத்தைக் கடந்து அதன்பின் போக மனத்தால் முடியும். பின்னால் நாம் காண்பது என்ன? முழுமை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதைக் காண்கிறோம். இடம் என்பது எண்ணத்தாலானது என்பதால் அதைப் பகுதிகளாக்க முடியும். காலம் அப்படியில்லை. நாமே காலம். அது அகவுணர்வால் ஆனது. நாம் நம்மையே கடந்து போக முடியாததல்லவா? அதனால் இடத்தைக் கடந்ததுபோல், காலத்தைக் கடக்க முடியாது. நாம் என்பது நம் வாழ்வு. அது சலனம். தொடர்ந்த சலனம். முன்னேறும் சலனம். உலகமும் அத்தகையதாகும். கடந்ததால், கடந்த நிகழ்ச்சிகளால் இவை வளர்கின்றன. கடந்ததை நாம் ஆரம்பம் என்கிறோம். அதை எதிர்காலத்தின் ஆரம்பம் எனத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். அது ஓர் ஆரம்பம். பிறப்பதற்கு முன் அழியும் ஆரம்பம். அது ஆரம்பமில்லை என்பதால் அழிகிறது. உள்ளது, அழியாதது, பிரம்மம். முழுமையான ஜீவியத்தின் சலனத்தைத் தாங்கிச் செல்லும் முழுமையான காலத்தின் தொடர் சங்கிலி போன்ற நிகழ்ச்சிகள். அதுவும் முன்னேற்றத்திற்குரியது. தொடர்ந்த நிகழ்ச்சிகள் காலம் மாறுவதைக் குறிப்பவை. அதுவே காலம். அது தனித் தன்மையுடையது. அதுவே சிருஷ்டி. சிருஷ்டியே பிரம்மம்.

       நம் பார்வை பிரம்மத்தை ஊடுருவுகிறது. பகுத்தறிவின் கற்பனைக் கட்டுரைகள் மாயையாய் நம் முன் வந்து நிற்கின்றன. ஊடுருவும் திருஷ்டியும், கற்பனைக் கட்டுரைகளும் எதிரானவை. இம்முரண்பாட்டில் உண்மையில்லை. அடிப்படையான திருஷ்டியைவிட கற்பனை உருவகங்கள் நம் மனத்திற்கு இதம் தருகின்றன. திருஷ்டியும், பகுத்தறிவும் எதிராகவோ, முரணாகவோ இருந்தால் நம் மனம் இப்படிக் கற்பனையை நாடாது. இரண்டும் ஒன்றே. ஒன்றாயிருப்பதால்தான் நம் மனம் இரண்டையும் நாடுகின்றது. ஞானதிருஷ்டியை நாம் நாடுகிறோம். ஆனால் முழுமையாக நாடவில்லை. ஆரம்பத்தில் அது சரி. திருஷ்டியாக ஆரம்பிக்கும் ஞானம், முழுமையான அனுபவத்தில் முடியவேண்டும். நடுவில் நிறுத்திவிட்டால் தவறு எழும். ஞானம் சலனமான திருஷ்டியை முடிவாக ஏற்பதால் காலம் நிறுத்திவிட்டால் தவறு எழும். ஞானம் சலனமான திருஷ்டியை முடிவாக ஏற்பதால் காலம் ஏற்படுகிறது. அதனால் நம் ஜீவியம் சலனமான காலத்தை ஏற்கிறது. நாமே ஓடும் நதி, வீசும் தழல் என பௌத்தர்கள் கூறுவது போலிருக்கின்றது. முடிவான அனுபவம் இதையும் கடந்தது. அது முடிவான ஞானம். மேல் மனத்தை இந்த ஞானத்தால் கடக்கலாம். கடந்தால் நம் பார்வை மாறும். பார்வை மாறிய பின் மாறுதல் மாறுதலில்லை எனத் தெரியும். நம் ஜீவனின் பாவம் - bhavam, not pavam -அது என விளங்கும். அந்த ஜீவன் நம் சலனமான சிருஷ்டியில் கலந்து வருவதில்லை எனக் காணலாம். அந்த ஜீவன் சலனமற்றது, அனந்தமானது. நம் ஞான திருஷ்டியால் அந்த ஜீவனைக் காணலாம். நிகழ்ச்சிகள் என்ற திரையின் பின்னால் அந்த ஜீவன் சலனமற்று காலத்தைக் கடந்து வீற்றிருப்பதை ஆத்மானுபவமாக ஞானத்தால் காணலாம். யோகத்தால் நாம் அங்குச் சென்று நிரந்தரமாகத் தங்கவும் முடியும். அதனால் நம் வாழ்வு, பாங்கு, நோக்கம்,செயல் ஆகியவை மாறுவதைக் காண முடியும். பகுத்தறிவு ஏற்கனவே இச்சலனமற்ற நிலையை நமக்குணர்த்தியது. அதையடைய முன்பே தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது சத் புருஷன், பிரம்மம், காலத்தைக் கடந்த அனந்தம், சொல்லைக் கடந்தது. காலத்தால் அது பாதிக்கப்படாது. இடத்தில் அது கலந்து வாராது. ரூபம், அளவு, குணத்தைக் கடந்தது. அது புருஷன், புருஷனேயாகும். அதுவே பிரம்மம்.

       சத் பிரம்மம் என்பது உண்மை. வெறும் தத்துவமன்று. அதுவே அஸ்திவாரம், அடிப்படையானது. அதை ஏற்கும்பொழுது, சிருஷ்டி பிரகிருதி, இயற்கை, உலகம், சலனம் - உண்மை என்று உடனே கூறவேண்டும். சக்தியும், சலனமும் சத்தியம். உச்சகட்ட ஞானம் அதைக் கடந்தும் செல்லும். சலனத்தைக் கண்ட திருஷ்டியை இது மாற்றும். கடந்து செல்லும், விலக்கவும் செய்யும். கடப்பதாலோ, விலக்குவதாலோ, சலனம் அழிவதில்லை, மறைவதில்லை. அதனால் இரு உண்மைகள் எழுகின்றன. சத் புருஷன், உலகம் என்ற இரண்டு அவை. அவற்றை பிரம்மம், சிருஷ்டி என்கிறோம். ஒன்றிலோ, அடுத்ததிலோ இல்லை என்பது எளிது. மாறாக ஜீவியத்தின் உண்மைகளைக் காண வேண்டும். கண்டு அவற்றிடையேயுள்ள தொடர்பை அறிய வேண்டும். அதுவே விவேகம், ஆன்மீக விவேகம்.

       மனம் நேரடியாகப் பிரம்மத்தை அறிய முடியாது. அதிகபட்சம் பிரம்மத்தின் பிரதிபலிப்பை மனதில் காணலாம். ஸ்தாணு, சலனம்; ஐக்கியம், சிருஷ்டி ஆகியவை அப்படிப்பட்ட பிரதிபலிப்புகள். பிரம்மம் இவை எதற்கும் கட்டுப்பட்டதன்று, உட்பட்டதன்று. ஸ்தாணுவோ, ஐக்கியமோ பிரம்மத்தைத் தங்கள் கோணத்தில் விவரிக்க முடியாது. ஸ்தாணு, சலனம், ஐக்கியம், சிருஷ்டி ஆகியவற்றைக் கடந்துள்ளதால் அதை நாம் பிரம்மம் என்பதால், இவற்றால் பிரம்மத்தை விவரிக்க இயலாது என்பது இயல்புதானே? பிரம்மம் தன்னை ஸ்தாணுவில் நிலை நிறுத்துகிறது. மேலும், ஸ்தாணுவைச் சுற்றி நடனமாடுகிறது. முடிவில்லாமல், எண்ணத்தைக் கடந்து, நிலையாக நர்த்தனம் செய்கிறது. நடனமாடி சிருஷ்டியில் தன்னை வெளிப்படுத்துகிறது. இதைச் சிவனுடைய ஆனந்தத் தாண்டவம் என்கிறோம். நடனம் கடவுளின் உடலை ஆயிரம் கோடி உடல்களாக மாற்றுகிறது. மையமானது வெண்மையானது, வெண்மையான சத் புருஷன். நடனம் அதைப் பாதிப்பதில்லை. எங்கிருந்ததோ, எப்படியிருந்ததோ அப்படியே அதைவிட்டு வைக்கிறது. என்றும் அது உள்ளது.எதிர்காலத்திலும் அது அப்படியேயிருக்கும். அதன் ஒரே குறிக்கோள் நடனம் தரும் ஆனந்தம்.

       நம்மால் பிரம்மத்தை நினைக்க முடியாது. அது சலனத்தையும், ஸ்தாணுவையும் கடந்தது. ஐக்கியத்தையும், சிருஷ்டியையும் கடந்தது. அவற்றை விளக்குவதும் நம் கடமையன்று. சிவனையும், காளியையும் இருவேறு கூறாக ஏற்பதவசியம். அவற்றிடையேயுள்ள தொடர்பை அறிவதவசியம். சிவனுக்கும் காளிக்கும் ஒரு தொடர்புண்டு. காலத்தின் சலனம், காலத்தைக் கடந்ததின் சலனமாகும் அவை. நாம் தேடும் தொடர்பு அவற்றிடையேயுள்ள தொடர்பு. அது அளவற்ற சலனமாகும். காலத்தைக் கடந்த தூய சத் புருஷன் எங்ஙனம் இச்சலனத்தில் செயல்படுகின்றான் என்று நாமறிய வேண்டும். சத் புருஷன் நிலையானது, ஐக்கியத்தாலானது. நம் கணக்குப்படி சத் புருஷனை அறிய முடியாது. அளவைக் கடந்த சட்டத்தையும் சத் புருஷனிடம் பயன்படுத்த முடியாது. பகுத்தறிவு, அனுபவம், ஞானம் ஆகியவை சத் புருஷனைப் பற்றி என்ன கூறுகிறது என்று கண்டோம். அடுத்தாற்போல் அவை சக்தி, சலனத்தைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று காண வேண்டும்.

       முதலாவதாக ஒரு கேள்விக்குப் பதில் தேவை. சக்தி என்பது வெறும் சக்தியா என்பதே அக்கேள்வி. சக்தி என்பது சலனத்தால் ஏற்படும் அர்த்தமற்ற சக்தியா? அல்லது சக்தி ஜீவியத்தின் பரிணாம சக்தியா? சக்தியிலிருந்து ஜீவியம் எழுவதாகத் தோன்றுவதால் இக்கேள்வி எழுகிறது. ஜடமான நம் உலகத்தில் அது நாம் கண்ட அனுபவம். வேறு வகையாகவும் கூறலாம். ஜீவியம் செயல்படுவதால் இயல்பாக சக்தி எழுகிறதா? அல்லது சக்தி என்பது ஜீவியத்தின் இரகஸ்யமா? அதன் உள்ளுறை பரிணாம சக்தியா? வேதாந்தம் பிரகிருதி வெறும் சக்தி என்று கூறுகிறது. செயலால் சலனம் உற்பத்தி செய்வது சக்தி என்று கூறுகிறது. இது அது செயல்படும் வகை. பிரகிருதி சித்தினுடைய சக்தியா என்பதே நம்முன் உள்ள கேள்வி. இக்கேள்விக்குத் தரும் பதிலைப் பொருத்தது எதிர்காலம். பிரகிருதி தன்னையறியும் சித்தினுடைய சிருஷ்டிக்குரிய சக்தியா என்பது கேள்வி.

 

****

 

 

 

 

 

 

 book | by Dr. Radut