Skip to Content

11.எது நியாயம்

 அன்னை இலக்கியம்”

 எது நியாயம்               

இல. சுந்தரி     

        இரவு 8 மணி தாண்டிவிட்டது. வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளியம்மை. யாரை? என்கிறீர்களா? அவள் மகன் குமரனை. தினமும் இதுவே வேலையாகிவிட்டது. ஒரு நாளேனும் வேலை முடிந்தது, வீடு வந்தோம் என்றுண்டா? வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்கிறேன் என்று பெண்ணைப் பெற்றவர்கள்தாம் கூறுவது வழக்கம். ஆனால் இங்கென்னவோ தலைகீழ்ப்பாடம். காலையில் சிற்றுண்டி உண்டு கையில் மதியத்திற்குச் சோறு எடுத்துப் போவான். வேலை முடிந்து எப்போது வருவானோ என்பதுதான் தினசரி தியானமாகிவிட்டது. அலுவலகம் என்னவோ ஐந்து மணியுடன் இவனை விட்டுவிடும். அப்படி என்னதான் செய்கிறான்? பார்க்கின்ற, கேட்கின்ற அநியாயங்களை எதிர்த்துப் போராடுகிறான். யாருக்கு எங்கு அநீதி என்றாலும் உதவிக்கு அழைப்பது வாடிக்கையாயிற்று. தட்டிக் கேட்கும் இவன் துணிவு ஆதரவற்றவர்களுக்கு பக்க பலமாயிற்று. இவன் முன் யாரும் அநியாயம் செய்யவே அஞ்சும் வண்ணம் எதிர்த்து நின்றான். தவறு செய்பவர்களின் தலைவலியாய், தவறிழைக்கப்பட்டவர்களின் தவப்பயனாய் விளங்கினான். நேரடியாக எதிர்க்க இயலாத குற்றவாளிகள் இவனை மறைமுகமாகத் தாக்குவது வழக்கமாயிற்று. ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வழக்கைத் தீர்த்து வருவது இவன் வாடிக்கையாயிற்று. இவன் தாய் வாசல் திண்ணையிலமர்ந்து தன் பிள்ளையைத் தீயோரிடமிருந்து காக்கும்படிக் கடவுளை வேண்டித் தவமிருப்பாள்.

       ஒன்பது மணியும் ஆகிவிட்டது. என்ன வள்ளிம்மா? வரலயா இன்னும் உன் திருப்பூர்க் குமரன்? என்று வேடிக்கையாய்க் கேட்டுக் கொண்டு வந்தாள் அடுத்த வீட்டு தனம்.

       நீ வேறு தனம். திருப்பூர்க் குமரனும் கட்டபொம்மனும் உயிரோடிருந்தார்களா? அல்பாயுசில் போனார்கள். அதுபோல என் மகனும் போவதில் எனக்கு விருப்பமில்லை. அவன் நல்லா வாழணும். நெறைய நாள் வாழணும் என்று கண் பனித்தாள்.

       நல்லா சொல்லுவியே. புலியை முறத்தாலே தொறத்தின நாட்டில பொறந்து வீரப்புள்ளய பெத்துகிட்டு இப்பிடியா இருப்பே? என்றாள் தனம்.

       எல்லாம் பேச்சுக்கும், எழுத்துக்கும் நல்லாயிருக்கும். நடைமுறைக்குச் சரிப்படாது. கண்ணுக்கு நேரா புள்ள சந்தோஷமா வாழறதைத்தான் பெத்தவ ஆசைப்படுவா. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமான்னு சொல்லுவாங்க. நாளொரு சண்டையும், பொழுதொரு அடியுமா எம்புள்ள வீட்டுக்கு வரான். போதாக்குறைக்கு இவன் வெளியில போன பிறகு எவனாவது வந்து என்னை மெரட்டிட்டுப் போறான் என்றாள்.

       கவலப்படாத வள்ளி. கடவுள் நமக்குத் தொணை வருவார். ஒம்புள்ளக்கி நல்ல மனசு. மத்தவங்க துன்பப்பட்டா பொறுக்கல. அவன் யார்கிட்டேயும் போய் மோதல. ஒதவின்னு கேக்கறவங்களுக்கு ஒதவுறான். அவங்க மனசெல்லாம் அவனை வாழ்த்தும். நீ கவலப்படாதே. கர்ணன் கவச குண்டலத்தோட பொறந்த மாதிரி ஒம்புள்ள சத்தியத்தோட பொறந்துட்டான். பெருமைப்படாம பயப்படறியே? என்றாள் தனம்.

       உள்ளூரப் பெருமையாகத்தானிருந்தது. இருந்தாலும் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் இப்படி ஊருக்காக மட்டும் எத்தனை நாள் வாழ முடியும்?

       தனம் எழுந்து சென்றுவிட்டாள்.

       அவசர அவசரமாய்த் தன்னைத் தாண்டிக் கொண்டு உள்ளே செல்லும் மகனைப் பார்த்ததும், எதிர்பார்த்த ஆவலை அடக்கிக் கோபம் எழுந்தது.

       “டேய் நில்லுடா” என்றாள்.

       “ஏம்மா?” என்றான் அலுப்பாக.

       ஆமாண்டா. காலையில போயி ஊரெல்லாம் பரிபாலனம் பண்ணி களைச்சுப் போய் வரயில்ல. அலுப்பாதானிருக்கும் என்றாள் ஆற்றாமையுடன்.

       என்னம்மா நீ? என் நெலம புரியாம என்றான். என்னடா ஒன் நெலம? என்னைப் பத்தி நெனச்சுப் பாத்தியா? காலமெ வேலைக்குப் போனா எப்ப வருவியோ? எப்பிடி வருவியோன்னு கலங்கிப்போய் ஒக்காந்திருக்கேன். ஒன் வேலையென்ன? நீ வர நேரமென்ன?

       “ஆமா. பெரிய வேலை. ஏதோ ஒழைச்சுப் பொழைக்கணுமேன்னு போறேன். யாராவது வந்து ஏதாவது ஒதவி கேட்டா செய்யாம என்ன செய்ய?” என்றான்.

       “உதவினதெல்லாம் போதும். ஒனக்குக் கல்யாணம் செய்ய ஏற்பாடு பண்ணிட்டேன். இனிமே நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு பழகிக்கோ” என்றாள்.

       “எனக்கு யாரம்மா பொண்ணு தர்றாங்க?” என்று சிரித்தான்.

       “ஏண்டா? உனக்கென்ன கொற? ராசாவாட்டம் வாட்டசாட்டமா இருக்க. வேலைக்கும் போற. சம்பளம் வாங்கலியா என்ன? பீடி, வெற்றிலை பாக்கு அது இதுன்னு ஒரு கெட்ட பழக்கமுமில்ல. ஒனக்கு ஏன் பொண்ணு தரமாட்டாங்க?” என்றாள்.

       “அதில்லம்மா. நா வீட்டுக்கு நேரத்தோட வரமாட்டேன்னு ஒரு கொற இருக்கேம்மா” என்றான்.

       “கல்யாணம் கட்டினா தானா வரே. ஊர் விவகாரம் நமக்கு வேணாண்டா ராசா” என்றாள்.

       “ஆகட்டும்மா. நானா தேடியா போறேன். யாராவது வந்து ஏதாவது ஒதவின்னா பேசாம வர முடியலம்மா” என்றான்.

       “உதவி செஞ்சா பரவாயில்லடா. விவகாரம் தீக்கயில்ல கூப்பிடறாங்க” என்றாள்
        “ஆமாம்மா. யாராவது யாரையாவது ஏமாத்தினா பொய் சொன்னா எனக்குத் தாங்க முடியலம்மா” என்றான்.

       நீ நெனக்கறது என்னமோ நல்ல எண்ணந்தான். ஆனா.. சரி சரி எப்படியாவது போ என்றாள்.

       இதுவரை மற்றவர் நன்மைக்காகப் போராடியதும் அடிபட்டதும் துன்பம் தரவில்லை. அதைச் சலிப்பாக மாற்றிய தாயின் புலம்பல் துன்பம் தந்தது.

       விரைவிலேயே கண்ணம்மா என்ற கற்புக்கரசியைத் திருமணம் முடித்து வைத்தாள். பொன்னும், பொருளுமாக வரவில்லை என்றாலும் அன்பும், அனுசரணையுமாய் வந்தாள். காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கை கொடுப்போம் என்ற பெண்கள் குலப் பிரதிநிதியாய் வந்தாள். உலகோர் சொல்வது உண்மை தான். மனைவி என்றொருத்தி இவன் பொருட்டே தன்னை அர்ப்பணிக்க வந்தவுடன் இவன் பலம் கூடியது. ஆறு மணிக்கெல்லாம் வீடு திரும்பினான். வள்ளியம்மைக்கு மகன் பொழுதோடு வருவது ஒரு புறம் மகிழ்வளித்தாலும் இதற்காகத் தான் புலம்பியபோதெல்லாம் மகன் உணரவில்லையே என்ற ஆதங்கமும் மனதிலிருந்தது. உண்மையைச் சொல்லப் போனால் அந்த நாட்களில் அவனிடம் வழக்குகள் ஏதும் வராததே காரணம். புன்னகையும், மென் மொழியுமாக இளம் பெண்ணின் அன்பு, வலிய ஆண்மகனுக்குத் தேவை தான். இவையே அவனுக்குப் பலம் சேர்க்கிறது என்று கூடச் சொல்லலாம்

        கண்ணம்மா! நெசமா ஒனக்கு என்னப் புடிச்சிருக்கா? என்றான்.

       ஏன் இப்படிக் கேக்கறீங்க? என்றாள் மனைவி.

       நான் கொஞ்சம் வெளி விவகாரம் நிறைஞ்ச மனுஷன். யாராவது தமக்கு அநீதி இழைக்கப்படுவதா சொன்னா என்னால சும்மாயிருக்க முடியாது. கெடைக்கறது வெற்றியோ, தோல்வியோ என் பங்கைச் செய்திடுவேன். மத்தவங்களைப்போல என்னால வேடிக்கைப் பார்க்க முடியாது என்றான் வெள்ளை மனதாய்.

       உண்மையாகவா? என்றாள்.

       உண்மையாகத்தான். ஆனா எங்க அம்மா எப்பவும் புலம்பும் எனக்கு ஏதாவது கெடுதல் வரும்னு பயப்படும் என்றான்.

       அன்பினால அவங்க அப்படி பேசுறாங்க என்றாள்.

 

தொடரும்...

 

 

 

 

 book | by Dr. Radut