Skip to Content

சாவித்திரி

P.8. Yet only has outward self suffered and above

 

மேல் மனம் மட்டுமே வாடி வதங்கியது

ஸ்ரீ அரவிந்தர் துன்பத்தைப் புதிய கோணத்தில் விளக்குகிறார். துன்பம் என நாமறிவது இன்பமே. ஆழ்மனம் விரும்பி நாடும் இன்பத்தை மேல் மனம் துன்பம் என்கிறது என்பது பகவான் விளக்கம்.

  • உடலை நோயினின்று குணப்படுத்த நாமே விரும்பி மருந்துண்டாலும் அது கசக்கிறது
  • பல நூறு மைல் கடந்து வந்து மலை ஏறினாலும் கால் அளவுகடந்து வலிக்கிறது.
  • வசதியற்ற பெற்றோர் பெரிய படிப்பில் மக்குப் பையனை விரும்பி, சிரமப்பட்டுச் சேர்த்து விட்டபின் படிக்க அவன் படும்பாடு பெரியது, பணமனுப்ப அவர் படும் பாடு அதனினும் பெரியது.

இது போன்ற நிகழ்ச்சிகளை நாமறிவோம். இவை நம் அனுபவத்திற்குட்பட்டவை. போன ஜென்மத்தில் அரசனாய் பிறந்தவன், அடுத்த ஜென்மத்தில் ஆண்டியாகப் பிறக்க ஆசைப்பட்டு பிறந்திருக்கிறான் எனில் அது ஆண்டிக்கும் புரிவதில்லை, அவனைக் காணும் நமக்கும் புரிவதில்லை.

3 வருஷமாகத் தோற்பதே வழக்கம், தோற்று இழந்த செல்வம் அதிகம் என்பவர் மீண்டும் சீட்டாட ஆசையாக வருகிறார் என்பதை நாம் கண்ணால் பார்க்கிறோம், நம்பமுடியவில்லை. அவர் தோற்க ஆசைப்படுகிறார், தோற்பதில் இன்பம் காண்கிறார் என்ற ஆன்மீக விளக்கம் அறிவுக்குப் புலப்படுவதில்லை.

ஸ்ரீ அரவிந்தம் என நாமறியும் தத்துவத்தின் முக்கிய அடிப்படைகளில் இது ஒன்று. இக்கருத்தை "சாவித்ரி'' வாயிலாக நாம் இங்குப் பல கோணங்களிலும் காண்கிறோம். 

சத்தியவானைப்பற்றிய உண்மையை சாவித்திரி அறிவாள். அறிந்தும் அவள் நிலை குலையவில்லை. அவள் மனநிலையை விளக்கும் பகுதிகள் இவை.

  • ஜீவனின் துள்ளலிலிருந்து ஒதுங்கிய சாவித்திரி
  • அன்பிற்குரியவரிடமிருந்தே மறைந்து நிற்கும் மாது
  • தெய்வத்தை உயர்த்தும் மனித கர்மம்
  • அனைவருக்கும் மகுடம் அவளே
  • தம் விதியையும் அறியாதவரின் பாரத்தை சுமப்பவள்
  • எதிரியின் வலிமைக்கு தம் இதயத்தால் ஜீவனளிப்பவள்
  • உதவியை நாடி அவளுள்ளிருந்து அழைப்பு எழவில்லை
  • வாய் திறக்கவில்லை, அழுகை வரவில்லை
  • எவருமறியாதது அவள் இரகஸ்யம்
  • தைரியமளித்த அமைதி பொலியும் முகம்
  • தனித்து நின்று உலகை உட்கொண்டவள்

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெய்வத்தின் கருவியாக இறைவன் மனிதனைச் சிருஷ்டித்தான், ஆனால் அகந்தை அவனை அவனுடைய கருவியாக்கிற்று. மனிதனை மீண்டும் இறைவனின் கருவியாக்க, யோகம் சமர்ப்பணத்தை நாடுகிறது.



book | by Dr. Radut