Skip to Content

அன்பர் உரை

அன்னை நமக்களிக்கும் வாழ்க்கை வசந்தமானது, பசுமையானது, தென்றல் போன்றது

நாம் காணும் வறட்சியும், வீசும் புயலும் - நமக்கேயுண்டானது

 

(சென்னை-பெரம்பூர் ரிஷி இல்லத் தியான மையத்தில் திருமதி உஷா ராம்தாஸ் ஏப்ரல் 30, 2000 அன்று நிகழ்த்திய உரை)

ஸ்ரீ அரவிந்தர் "நான் புதுவை வந்தபொழுது நகரம் மயானம் போன்றிருந்தது'' என்றார். இன்று பாண்டியில் உள்ள அமைதி, சந்தோஷம், அலங்காரம், வளம் பொதுவாகப் பாண்டி போன்ற நகரங்களில் இல்லாதது. நேருவும், டாட்டாவும் அவற்றைக் கண்டுகொண்டனர். புதுவை மக்கள் அன்று ஸ்ரீ அரவிந்தரையோ, அன்னையையோ உளமார ஏற்கவில்லை. வெறுத்து ஒதுக்கினார்கள். இந்நிலையில் ஏற்பட்ட மாறுதல் புதுவைக்கு சிறப்பானது.

கிராமத்திலிருந்து கல்லூரிக்குப் போய் ஹாஸ்டலில் தங்கிய மாணவன், வேலையில்லாமலிருந்தவன் நல்ல வேலை பெறுதல், US வேலை கிடைத்துப்போவது, சந்தோஷமாகத் திருமணமான பெண் திருமணத்திற்கு முன்னும், பின்னும் கண்ட மாறுதல், கிராமிய வாழ்வைவிட்டு நகரத்தில் வந்து தங்கிய குடும்பங்களில் காணும் மாறுதல் போன்ற மாறுதல் அன்பர்கள் அன்னையை ஏற்றுக்கொண்டவுடன் ஏற்படுகிறது. குருடனுக்கும் தெரியும் வகையில் ஏற்படுபவை அவை. வருஷம் ஒரு பஸ் ரூட் ஒரு குடும்பம் அதுபோல் வாங்கியது நான் அடிக்கடிக் குறிப்பிடுவது.

 • வாழ்வில் உள்ளதை எப்படிக் காப்பாற்றுவது என்பது பிரச்சினை. அன்னை வாழ்வில் எப்படி அடுத்த கட்டத்திற்கு முன்னேறலாம் என்பது பிரச்சினை. 
 • நம்மை எப்படிக் காப்பாற்றிக் கொள்ளலாம் என நினைக்கும் மனிதன் அன்னையிடம் வந்தபின் எந்தவிதமாக நான் அடுத்தவர்க்குச் சேவை செய்யலாம் என்ற நிலைக்கு வருகிறான். 
 • எந்தத் தொழில் செய்தாலும், எப்படி என் தொழிலில் நான் திறமையடையலாம் என்பவர் அன்பரானபின், எப்படி இத்தொழிலை முன்னேற்ற நான் கருவியாக இருக்கலாம் என்று மாறுகிறார்.
 • நாமறிந்த மனநிலையை எப்படி வெளிப்படுத்துவது என்பது நம் கொள்கை. நம் மனநிலையை எப்படி உயர்ந்த மனநிலையாக்குவது என்பது அன்னைச் சூழல்.
 • நம்மிடம் வேலை செய்பவரை எப்படி நிர்வாகம் செய்வது என்பது அனைவருக்கும் உள்ளது. இன்று வீட்டு வேலை, கம்பனி வேலை செய்பவரை எப்படி நம்போல் உயர்த்துவது என்பது அன்பருடைய வாய்ப்பு. அன்பர்களுடைய வீடு, ஸ்தாபனத்தில் உள்ளவர் அதுபோன்ற மாறுதலை இயல்பாகப் பெறுவதை நாம் அறிவோம்.
 • ஒவ்வொரு நிமிஷமும் நாம் அன்னையை நோக்கி ஒரு படி நெருங்கி வருதல் என இம்மனநிலையை அன்னை விவரிக்கின்றார்.
 • ஒரு பாக்டரி ஏற்பட்டால் சுற்றுவட்டாரம் அதனால் செழிப்படைவதைப்போல் ஓர் அன்பரின் சூழலில் உள்ளவர் அனைவரும் வளம் பெறுகிறார்கள்.

விவசாயம் வந்த பொழுது நாடோடியாய் அலைந்த மனிதன் ஊர், உறவினர் என மாறி, ஊரும், தெருவும், குடும்பமும், கோவிலும், வளமும், உத்சவமும் பெற்றான். மனிதகுலம் செழிப்பு என்ற அரங்கத்தில் அடி எடுத்து வைத்தது. வியாபாரம் என்று ஏற்பட்டபின் நகரம் ஏற்பட்டு, அதன் சிறப்பும் செழிப்பும் பரவியது. தொழில் (industry) அதன் பிறகு வந்தது. அவை நகரங்களைப் பெருநகரமாக்கின.

நாட்டில் செல்வத்தை அளவு கடந்து பெருக்க முயன்று வெற்றி பெற்றன. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களும், மதவழிபாடும், technology தொழில்சிறப்புகளும் மலிந்து 20ஆம் நூற்றாண்டை உலகெங்கும் உருவாக்கின.

உலகில் பல நாடுகளில் வறுமை அழிந்தது. நோய் பெரும்பாலும் மறைந்தது. அறியாமை அறவே அகன்றது. ஆசியாவில் அதுபோன்ற பெருமாறுதல் ஏற்படவில்லை. ஆனால் மனத்தைப் பொருத்தவரை உலகம் குறுகியதாகவே இன்றுவரை உள்ளது.

அன்னை வந்தார். ஸ்ரீ அரவிந்தர் அவதரித்தார். மனத்தின் சிறுமைக்கு முடிவு காலம் எழுந்தது. அவர்கள் யோகம் பலித்து சத்தியஜீவியம் உலகுக்கு வந்துள்ளது.

 • உலகில் மரணம் அழியவேண்டும் என்று எவரும் இதுவரை நினைக்கமுடியவில்லை. மரணம் அழியும் என்ற இலட்சியத்தை ஏற்றால், அதை நிறைவேற்றும் சக்தி புவியில் இன்று உண்டு.
 • நோயழிய செய்த பெருமுயற்சிகள் பெரும் வெற்றியை அளித்துள்ளன. நோயின் மூலத்தை அழிக்கும் ஞானத்தை அன்னை நமக்களித்துள்ளார்.
 • துன்பம் அழியப் பாடுபடாதவரில்லை. மிகப் பெரிய அளவில் துன்பம் குறைந்துள்ளது. மேலும் கொடுமையின் உருவம் மாறியுள்ளது. கொடுமைக்கு ஆளானவர் விடுதலையடைந்து வருகிறார்கள். ஆனால் கொடுமையழியவில்லை. அன்று கொடுமைக்கு உட்பட்டவர் இன்று கொடுமை செய்கின்றனர்.
 • அறியாமை உலகில் பாதியளவில் இல்லை. மற்ற இடங்களில் அறியாமை அழியும் வழியை மக்கள் அறிந்துள்ளனர். உலகம் 100 ஆண்டில் அழிக்கும் அறியாமையைச் சில ஆண்டுகளில் அழிக்க அன்னை முன் வந்துள்ளார். 
 • 50 நாடுகளில் வறுமை அழிந்து, செல்வம் அபரிமிதமாகப் பெருகியுள்ளது. மற்ற நாடுகளில் 50 ஆண்டுகளில் பெருக்கும் செல்வத்தை 5 ஆண்டுகளில் பெருக்கும் சக்தி அன்னையினுடையது.
 • சிறுமை எல்லா நாடுகளிலும் உள்ளது. செல்வமும், அறிவும், ஆரோக்கியமும் பெருகிய அளவில் சிறுமை குறைந்துள்ளது. சிறுமை பெருமையாகும் ஆன்மீகச் சக்தியை திருவுருமாற்றக் கருவியாக அன்னை நமக்களிக்கிறார்.
 • செல்வமும், கல்வியும், ஆரோக்கியமும் உலகில் சந்தோஷத்தைப் பெருக்கியுள்ளன, அவற்றிற்கு அப்பாற்பட்ட சந்தோஷத்தை அன்னை நமக்கு வழங்குகிறார்.

அன்னையின் இலட்சியம் சத்திய ஜீவன், அவரது சக்தி சத்திய ஜீவிய சக்தி. இன்றுவரை - அன்னை வரும்வரை - அது உலகில் இல்லாதது. அதுவரை நாம் பெற்றிருந்தது, உடலுழைப்பால் வரும் சக்தி, உணர்வாலும், அறிவாலும், ஆன்ம விழிப்பாலும், எழும் சக்தி. அவற்றை நாம் ஜனநாயகத்தின் மூலமும், டெக்னாலஜி மூலமும், விஞ்ஞான மூலமும், கல்வி மூலமும், வளரும் நாகரீகம் மூலமும் இன்று வாழ்க்கை வசதிகளாகப் பெற்றுள்ளோம்.

உடல் கடைசி நிலையிலுள்ளது. உணர்வு அதற்கடுத்தது. அறிவு மூன்றாம் நிலைக்குரியது. ஆன்மா அடுத்தது. மௌனத்தாலும், திருஷ்டியாலும், ஞானத்தாலும், தெய்வத்தாலும் ஆன்மீகச் சக்தியை இதுவரை உலகம் பெற்றது. இவற்றிற்கு அடுத்த நிலையிலுள்ளது சத்தியஜீவியம். அன்னை சத்திய ஜீவியத்திற்கு அடுத்த நிலை. அவரைக்கடந்த நிலை ஈஸ்வரன். அதற்கு மேலுள்ள சத், பிரம்மம் என்ற நிலைகளை நாம் அறியலாம், அன்னை தம் சக்தியை அவருக்குக் கீழுள்ள நிலைகள் எதன் மூலமும் அளிக்க முன்வருகிறார். படிக்கும் மாணவன் அன்னையை அழைத்தால் அறிவு மூலம் அன்னை சத்தியஜீவியத்திற்கு அடுத்த நிலையிலுள்ள தம் சக்தியை அவனுக்களிக்கிறார். அன்னை சக்தி மனத்தின் மூலம் செயல்படும்பொழுது உச்சகட்டப் பலனைத் தந்து மாணவனுக்கு முதல் மார்க் தரும் காரணம் அன்னை சக்தி 4 நிலைகளிலுள்ள ஆன்மீகச் சக்திகளையும், அவற்றைக் கடந்த சத்திய ஜீவிய சக்தியையும் கடந்தது என்பதால்தான்.

உடலால் உழைப்பவன் அன்னையை அழைத்தால், பல சமயங்களில் அறிவால் உழைப்பவனுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகக் கிடைப்பது இந்த அமைப்பால். ஏன் அன்னை சக்தி வசந்தமானது, பசுமையானது, தென்றல் போன்றது எனில் அது எல்லாச் சக்திகளையும் கடந்தது என்பது மட்டுமில்லாமல், நாம் எந்த நிலையிலிருந்தாலும், அது நம்மை நோக்கி வரும் தன்மையுடையது.

உச்சக்கட்டத்திலிருந்து வந்தாலும், நாம் பெறும்பலன் நம் நிலையைப் பொருத்ததேயாகும். 5ஆம் வகுப்பு மாணவனுக்கு Ph.d. படித்தவர் பாடம் போதிக்க முன்வந்தாலும், ஐன்ஸ்டீன் போன்ற மேதையே அக்கடமையை ஏற்றாலும், மாணவன் பெறும்பலன் அவன் வயதிற்கும், அவன் பாடபுத்தகத்திற்கும் உரியதாகும். அதுபோல் அன்னை நம்மை நோக்கி வந்தாலும் நாம் பெறுவது நம்மைப் பொருத்ததே. 5ஆம் வகுப்பு மாணவன் ஆசிரியர் genius மேதை என்பதை அறிந்து அவரால் அதிகபட்சப் பலனடைய விரும்பினால், அவன் ஒவ்வொரு வருஷமாகப் பள்ளியில் படிக்கத் தேவையில்லை. அவனுடைய ஞானம் அவனைக் குறுகிய காலத்தில் அடைய அவன் அவரை ஏற்க வேண்டும், அவர் மேதாவிலாசத்தை அறிந்து ஏற்கவேண்டும். அப்படி ஏற்றால் அவன் பள்ளியை விட்டு விலக வேண்டிவரும். நேரடியாக ஞானம் பெறமுடியும்.

**********book | by Dr. Radut