Skip to Content

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

விவேகாநந்தர் சிக்காகோவில் பேசும்பொழுது "இங்கு வந்தபின் என் மனத்தைப் பறிகொடுத்தேன்'' என்றார். யார் அந்த அதிர்ஷ்டக்காரப் பெண் எனக் கேட்பவர் வியந்த நிலையில் சுவாமி மேலும் பேசினார் "உங்கள் நாட்டில் organisation வாழ்க்கைச் செயல்முறை அற்புதமாக அமைந்துள்ளது. நான் அதனிடம் என் மனதைப் பறிகொடுத்தேன்'' என்றார். அமெரிக்காவைப்பற்றி அன்னை அதையே கூறியுள்ளார். Practical Organisation இல் அமெரிக்கர் நிபுணர் என்கிறார் அன்னை. இந்தக் கோணத்தில் அன்னையை நாம் அறிய முயல்வது பெரும்பலன் தரும். இது உயர்ந்த தத்துவம். இதை விளக்கினால், விளக்கம் சிறப்பாக இருக்கும். புரிந்தால் உன்னதமாக இருக்கும். 1920இல் ஸ்ரீ அரவிந்தர் சத்திய ஜீவன் பிறப்பான், மரணம் அழியும், உலகம் ஆண்டவனில் புனர்ஜென்மமெடுக்கும் என்று கூறியபொழுது அவருடன் இருந்த சாதகர்கள் அதை "Advent'' வைகறை என்றனர், Kingdom of God on Earth புவியில் தெய்வீக வாழ்வு என்றனர், Life Divine என்றனர். அது ஆத்மவிளக்கம். அறிவுக்குக் கலங்கரை விளக்கம். அதுபோல் organisation of consciousness ஜீவியத்தின் சிறப்பு மனத்திற்கு இதமாக இருக்கும். இதைவிட என்ன வேண்டும் என்று தோன்றும். எல்லாம் புரிவதுடன் சரி. நடைமுறையில் எதுவுமிருக்காது.

தம்பி - நடைமுறைக்கு வழியில்லை?

அண்ணன் - நடைமுறைக்குண்டான வழியைப் பிறரிடம் தேடுவதை விட்டுவிட வேண்டும். அதை நம்மிடம் தேடவேண்டும். தேடினால் வழி பிறக்கும். கீழ்க்கண்ட நம் அனுபவத்தைக் கூர்ந்து யோசனை செய்வது நல்லது.

1) "மனிதன் தன்னை மையமாகக் கொண்டு செயல்படுகிறான். இறைவன் தனக்கு ஒரு கருவி என

நினைக்கிறான். அதில்லை என்றால் அந்த இறைவன் எனக்கு வேண்டாம் என்கிறான்'' என்று அன்னை கூறுகிறார்.

2) நமது உலகில் பிறர் வாழ மனம் பொறுக்காது. தான் சம்பாதிப்பதைவிட பிறர் சம்பாதிப்பதை தடுப்பதையே லட்சியமாக்க கொண்டது உலகம். நாம் பிறர் வாழ முயல்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மை அழிக்க முயல்கிறார்கள்.

3) இருளடைந்தவன், ஏழை, ஒதுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன், ஊனமுற்றவனை உலகம் ஒதுக்குகிறது. அழிக்க முயல்கிறது. அன்னை அவர்களே மற்றவர்களையும்விட, சிறந்தவர்களையும்விடச் சிறந்தவர்கள் என்கிறார். அவர்கள் திருவுருமாற விரும்பினால் சிறந்தவர்க்கு நிகராகவும், மிச்சமாகவும் உயர்வார்கள் என்கிறார்.

4) மனிதர்களில் பெரும்பாலோர் கேட்பது என்ன? அவர்கள் வாழும் உலகம் எது? நாம் என்ன கூறுகிறோம்?

 • இன்றைய உலகம் - வீடு, நட்பு உட்பட - உன் முன்னேற்றத்தை விழையவில்லை.
 • உன் முன்னேற்றத்திற்கு உனக்கு வழி தெரியவில்லை. தெரிந்தால் பிரமோஷன் பெறத் தெரியும். உன் உலகம் அதற்குத் தடை. ஓரளவு முதலில் ஆதரவு தரும். அடுத்தாற்போல் எதிர்க்கும். அழிக்கும்.
 • கிளார்க்கு, ஆபீசராக முடியாத உலகத்தில் அன்னை IAS ஆபீசராக வழிகாட்டுகிறார். கிளார்க் IAS வேலை உள்ளூரிலேயே வேண்டும், டிரான்ஸ்பர் கூடாது என்று நினைக்கிறார்.
 • வீடும், நட்பும் உட்பட எவரும் உன் பெரு முன்னேற்றத்தை எதிர்க்கும் இவ்வுலகில் உச்சகட்ட முன்னேற்றத்திற்கு அன்னை வழிசொல்லி, உறுதுணையாக இருக்கிறார். மனிதன் தன் பங்கைச் செய்ய மறுக்கிறான். சாப்பாட்டிற்கு வழியில்லாதவனுக்குப் பெரிய விருந்திற்கு ஒருவர் பணம் கொடுத்தால், "நீங்களே சமைத்துப் போடுங்கள்'' என்பதுபோல் மனிதன் பேசுகிறான். அதையும் செய்தவரை அந்த விருந்தில் அவமானப்படுத்த ஆர்வமுடையவன் மனிதன்.
 • நாம் - பொதுவாக மனிதர்கள் - இவற்றை அறிவதில்லை, அறிந்தால் பொருட்படுத்துவதில்லை. உடன்பிறந்தவர், கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள் இம்மனநிலையிலிருப்பவரை அறிவதில்லை. அவர்கட்கு அன்னை மூலம் நல்லது வேண்டும் என நினைக்கிறோம், அது நடக்காது.
 • அன்னை மூலம் நல்லது நடக்க வேண்டுமானால், அது நமக்கு நடக்கும், நமக்குமட்டும் நடக்கும், பிறர் - கெட்ட எண்ணமுள்ள பிறர் - பெறவேண்டுமென நாம் நினைக்கும்வரை அதுவும் நடக்காது. அந்த எண்ணம் தவறு. அது பலிக்காது. பலித்தால் பிறர் கெட்ட எண்ணம் வலுப்படும். அங்கு அன்னை தொடர்ந்து செயல்பட மாட்டார்.
 • அவர்களைப்பற்றிய நம் எண்ணத்தை நாம் சமர்ப்பணம் செய்வது மட்டுமே முடியும். நாமாக அவர்கட்கு அன்னையை அளிக்க முடியாது. ஸ்ரீ அரவிந்தர் இதைப் பரோபகாரம் என்கிறார். பரோபகாரம் நம் அகந்தையின் வெளிப்பாடு என்கிறார்.

தம்பி - நீங்கள் சொல்வதை எல்லாம் நானும் அறிவேன். அவர்கள் விஷயத்தில் நாம் என்ன செய்ய?

அண்ணன் - அவர்களாக வந்து உதவி - அன்னை முறையை அறிய உதவி - கேட்டால் கொடுக்கலாம்.

தம்பி - அவர்களாக வரப்போவதில்லை.

அண்ணன் - நாம் உதவ வேண்டும் என்ற கருத்தைச் சமர்ப்பணம் செய்வது மட்டுமே நமக்கு உரிமை.

தம்பி - அது சமர்ப்பணமாவதில்லை.

அண்ணன் - சமர்ப்பணமாகவில்லை எனில், அன்னை ஏற்கவில்லை எனப் பொருள். அன்னை ஏற்காததை நாம் செய்ய முற்படுவது தவறு. சமர்ப்பணமானபின் நடப்பது, அன்னையின் திருவுள்ளம். அத்துடன், பிறருக்கு உதவ முனையும்பொழுது அதன் மூலம் அவன் நம்மை அழிக்க உதவுகிறது. நம் அனுபவம் முழுவதும் அதுபோன்றது.

தம்பி - இதன் தத்துவம் என்ன?

அண்ணன் - பொதுவாக (வீட்டிற்கு வெளியில்) ego மட்டுமே முக்கியமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தம் egoவைப் பாராட்டுகின்றனர். இன்று நாம் நண்பர்களாகப் பழகும் பொழுது பிறர் சொந்தவிஷயத்தில் தலையிடுவதில்லை. நட்பு தொடர்கிறது. நண்பர் முன்னேற வேண்டும் என்று நாம் சொல்வதை அவர் "என் ego வளர வேண்டும்'' என்று கொள்கிறார். அதை வேறெங்கும் செயல்படுத்த முடியாது என்பதால் நம்மிடம் செயல்படுத்துகிறார். நம்மை அழிக்க முயல்கிறார். நம் நல்லெண்ணம் அவருக்குத் தேவையில்லை. அவர் ego அவருக்கு முக்கியம். நாம் எத்தனைப் பேருக்கு உதவிக்குப் போயிருக்கிறோம். கிடைத்தது என்ன? தொந்தரவே.

தம்பி - இது சுயநலம் உயர்ந்தது என்றாகிறதே.

அண்ணன் - அப்படியில்லை. நம்மால் முடியாததைச் செய்து வம்பில் மாட்டிக்கொள்வது தவறு என்று கூறுகிறேன்.

தம்பி -பிறருக்கு உதவ நம்மால் முடியாது என்று கூறுகிறீர்களா?

அண்ணன் - நாமே போய் பிறருக்கு உதவமுடியாது என்கிறேன்.

தம்பி - அவர்களாக நம்மை வந்து அன்னையைப்பற்றிக் கேட்கப் போவதில்லை.

அண்ணன் - அவர்களாகக் கேட்காதவரை நாமே அந்த உதவியைச் செய்ய முயல்வது என்பது கூடாது. அது ego என்கிறார் பகவான்.

தம்பி - அந்தச் சமயத்தில் நாம் செய்யக் கூடியதென்ன?

அண்ணன் - சமர்ப்பணம்.

தம்பி - அது முடியவில்லையே.

அண்ணன் - சமர்ப்பணம் இங்கு முடியவில்லை என்றால் நம் ego முனைப்பாக இருக்கிறது என்று பொருள். அப்படியானால் அந்தக் காரியத்தைச் செய்யக்கூடாது.

தம்பி -எந்தக் காரியத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியவில்லையோ, அதைச் செய்வது egoவை வெளிப்படுத்துவதாகும் என்கிறீர்களா?

அண்ணன் - உலகை ego ஆள்கிறது. அது தன்னை வலுப்படுத்த முயல்கிறது. அது என் ego, உன் ego என்பதில்லை. அது ego. நாம் அன்னை உயர்ந்தவர்கள். அவர்களை உலகுக்கு அளிக்க வேண்டும் எனப் பிறரிடம் முயன்றால், பிறருக்குத் தெரிவதெல்லாம் ஒன்றுதான் தனக்கு - தம் egoவுக்கு - ஒரு வாய்ப்பு வந்துள்ளது என்று கொள்கிறார்கள். இதுவே பஸ்மாசூரன் கதை. நம் வாழ்வில் அதற்கு விதிவிலக்கைக் காணவில்லை.

தம்பி - சற்று யோசனை செய்து பார்த்தால் கடந்த பல வருஷங்களாக வந்த அத்தனை ஆபத்துகளும் நமக்கு இப்படி வந்ததாகத் தெரிகிறது.

அண்ணன் - நாம் அன்னை வேறு, மனிதர்கள் வேறு, ஸ்தாபனம் வேறு என்பதை மறந்து எல்லாம் ஒன்றே என்று நடப்பது அறிவீனம். அன்னை அன்பரானாலும், அன்னை பேரில் ஸ்தாபனம் நடத்துபவரானாலும், அன்னையோடு வாழ்ந்தவரானாலும், அன்னையை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லும் பக்தர், சாதகரானாலும், அவர்கள் நடைமுறையை மட்டும் நாம் கவனித்தால் தவறு வாராது. நாம் அவர்கள் சொல்வதை முடிவாக ஏற்றுக் கொள்வது தவறு. அதனடிப்படையில் நடந்தால், அவர்கள் நம்மை அழிக்க நாமே கருவியானதாக முடிகிறது. இது ஆபத்து.

தம்பி - இப்படிப் பார்த்தால் நமக்கு வந்த அத்தனை ஆபத்திற்கும் நாமே காரணம் என்று புரிகிறது.

அண்ணன் - இது தவிர நமக்கு வாழ்வில் பிரச்சினைகள் ஏதாவது உண்டா?

 • அன்னையிடம் வந்தபின், வாழ்வில் பிரச்சினைகளே எழவில்லை, நாமே நம் அறியாமையால் எழுப்பியது தவிர வேறு பிரச்சினைகள் இல்லை என்று எனக்குத் தெளிவு.

தொடரும்.

இந்திய சுதந்திரத்திற்கான புரட்சி

1918இல் ஒரு குஜராத் இளைஞர் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்தார். 11 ஆண்டு முயன்று புரட்சிக்குழு ஒன்றை நிர்மாணித்ததாகக் கூறினார். சுதந்திரம் பெற இந்தியா ஆயுதம் தாங்கிய புரட்சியை மேற்கொள்ள வேண்டுமல்லவா? என்று ஸ்ரீ அரவிந்தரைக் கேட்டார்.

"இந்தியச் சுதந்திரத்திற்குப் புரட்சி தேவைப்படாது என்று நினைக்கிறேன்'' என்றார் ஸ்ரீ அரவிந்தர். 1947இல் அவர் கூறியது உண்மையாயிற்று.

ஸ்ரீ அரவிந்தர் இந்தியா முன் 5 லட்சியங்களை அப்பொழுது வைத்தார்.

1) இந்திய விடுதலை 2) ஆசிய விடுதலை 3) சத்திய ஜீவியம் புவிக்கு வருவது 4) இந்தியா உலகத்தின் குரு 5) சத்தியஜீவன் பிறப்பது.

முதல் மூன்று இலட்சியங்கள் 1947லும், 1947 முதல் ''57 வரையும், 1956லும் நிறைவேறின.

இந்தியா உலகத்தின் குருவாக இந்தியர் தம் நாட்டின் ஆன்மீகச் சிறப்பை அறியவேண்டும். ஆயுர்வேத மருந்தானாலும், Transcendental Meditation ஆனாலும் நம் நாட்டு உயர்வை மறிய அது முதலில் அமெரிக்கரால் ஏற்கப்பட வேண்டும் என்பதே இன்றைய மனநிலை. அது மாற வேண்டும். தானே மாறாது. இன்றைய இளைஞர்கள் இந்திய ஆன்மீக உயர்வை அறிய முன்வருதல் அவசியம்.

அதைப் பல வகைகளில் சாதிக்கலாம். ஸ்ரீ அரவிந்தர் 1918இல் கூறியது 1947இல் உண்மையானது அரசியல் தீர்க்க தரிசனமன்று, ஆன்மீக உள்ளுணர்வு என்று அறியும் திறன் இந்திய ஆன்மீகப் பரம்பரையை அறிய உதவும்.

எதற்காகப் பிரார்த்திப்பது?

அன்னையை அறிந்தவுடன் பிரார்த்தனையெல்லாம் ஒருவருக்குப் பலி த்தது. நினைத்தனவெல்லாம் பலித்தன. மனம் விரும்பிய சிறு விஷயங்கள், பெரிய விஷயங்கள் அத்தனையும் கேட்டார். அன்னை தவறாமல் அளித்துவிட்டார். இனி ஒரு டிரான்ஸ்பர், வீட்டருகில் கேட்கலாம் எனத் தோன்றியது. எது கேட்டாலும் அன்னை கொடுக்கிறாரே, இன்னும் கேட்கலாம் என நினைத்தார். வீட்டிற்கும் தியானமையத்திற்கும் அருகில் உள்ள இடத்திற்கு டிரான்ஸ்பர் கேட்க நினைத்தார். மனம் நிலைப்படவில்லை. அடுத்தவரைக் கலந்தார்.

"கேட்காமலிருக்கத் தோன்றவில்லையா உங்களுக்கு?'' என்று வந்த பதில் புதியதாக இருந்தது. மனதைத் தேற்றிக்கொண்டு, "டிரான்ஸ்பர் கேட்போம், எங்கு, எப்படி அன்னை முடிவு செய்கிறாரோ, அதுவே எனக்குகந்தது என நான் கொள்கிறேன்'' என்று முடிவு செய்தார். டிரான்ஸ்பர் வந்தது.

 1. கேட்கக்கூடிய பல இடங்களில் நல்ல இடம் அமைந்தது.
 2. தன் உத்தியோகத்திற்கும் அடுத்த இருநிலையிலுள்ள ஆபீசருக்குள்ள வசதி வேறு காரணமாக அமைந்தது. தனி cabin, A/Cயுடனும் இடம் தந்தனர்.
 3. நண்பரொருவர் டிரான்ஸ்பரைப்பற்றிக் கேள்விப்பட்டு "பஸ்ஸில்தானே போக வேண்டும்? என் scooter சும்மாயிருக்கிறது. உபயோகப்படுத்துங்கள்'' என்றார். அன்னையின் முடிவு நாம் கேட்பதைவிடச் சிறந்தது என்பது நல்ல மனநிலை. அதுவும் ஓர் எதிர்பார்ப்பு என்பதும் ஒரு மனநிலை.

எதற்கும் பிரார்த்திக்காமலிருப்பதும் அதைவிட உயர்ந்த மனநிலை.

கடமையைச் செய்வதும், அன்னையை ஆர்வமாக நினைப்பதுவுமே அம்மனநிலை. .

எதையும் கேட்பது உரிமையோடுள்ள பக்தி; எதையும் கேட்காதது கேட்க முடியாத மனநிலை.book | by Dr. Radut