Skip to Content

அன்பர் அனுபவம்

என்னை மலரவைத்த மகாசக்தி

ஜெயஸ்ரீ, கும்பகோணம்

ஸ்ரீ அன்னையின் அறிமுகம்:-

மனிதனை நாடிவந்து அருள்புரியும் ஈடு இணையற்ற இனிய தெய்வமாம் ஸ்ரீ அன்னை, இந்த அடியேனையும் தேர்ந்தெடுத்ததற்கு என்றன் நன்றி கலந்த வணக்கத்தினை முதற்கண் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் மூன்றாம் வகுப்பு படிக்கையில், விளையாட்டாக ஒருவருக்கொருவர் பொருட்களை மாற்றிக் கொள்கையில் ஒரு தோழியிடம் ஸ்ரீ அன்னை படம் பெற்றேன். ஆனால் அவர் அன்னை என்று தெரியாது.அந்தப் புகைப்படம் ஒரு வாரம்தான் என்னிடம் இருந்தது.கிறிஸ்துவக் கடவுள் அவர் என தவறாக நினைத்து வேறு ஒரு தோழியிடம் கொடுத்துவிட்டேன். அந்த ஒரு வாரமும் இனிய கனவு வந்தது.மிகப் பிரம்மாண்டமான பல அறைகள் கொண்ட, பல்வேறு தரப்பட்ட மக்கள் அமைதியாய் வாழ்ந்துவந்த அந்தக் கட்டிடத்தினை ஓர் அம்மையார் நிர்வகித்து வந்தார்.புதியதாய் வரும் குறைகள்கொண்ட மக்களை அந்த அம்மையாரிடம் அழைத்துச் செல்வது என் பணியாய் இருந்தது. இதுவே அந்தக் கனவின் கதை.பிறகு நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில், அறிவியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற அன்னையிடம் சென்றேன்.அப்பொழுதும் அவர் அன்னை என்று தெரியாது.அறிமுகப்படுத்திய தோழி அவரைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.சிறு வயதில் சந்தித்த அதே தெய்வம்தான் இவர் என்று அன்றும் உணரவில்லை.பத்தாம் வகுப்பு படிக்கையில் விடுமுறைக்கு எங்கள் கிராமம் விஷ்ணுபுரம் சென்றபொழுது அருகில் இருந்த வீட்டில் அன்னையின் காலண்டரைப் பார்த்து இவர் உங்கள் பாட்டியா?என வினவியதற்கு அவர்கள், "இவர்கள் அன்னை, பாண்டிச்சேரி'' என்று மட்டுமே கூறினார்கள்.மேற்கொண்டு விபரங்களை நான் தெரிந்துகொள்ள விரும்பினாலும் அவர்களால் கூறமுடியவில்லை.பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் நாளிதழ் ஒன்றில் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் புகைப்படத்துடன் வெளிவந்த கட்டுரையினைப் படித்தேன்.ஆசார, அனுஷ்டானங்களைப் பின்பற்றி வந்த எங்கள் குடும்பத்தாரிடம் பாண்டிச்சேரி சென்று வர அனுமதி கேட்பதில் தயக்கமாய் இருந்தது.பி.காம் முதலாமாண்டு படிக்கையில் ஸ்ரீ அன்னையிடம் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆம்!1992-ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில்தான் நான் அன்னையிடம் அருள் பெறும் பக்குவம் பெற்றேன்.

ஸ்ரீ அன்னை செய்த முதல் அற்புதம்:

என் தாயாருக்கு நீண்ட நாட்களாகக் கையில் வெடிப்பு இருந்தது. அவ்வப்பொழுது இரத்தம் வந்து எந்த வேலையும் செய்யமுடியாமல் கஷ்டப்பட்டார்.இதனால் அடுத்த வீட்டில் குடியிருந்த ஒரு பெண்மணியைத் தமக்கு உதவிக்கு வைத்துக் கொண்டார்.அவர் எங்களிடம் ஸ்ரீ அன்னைக்கு உங்கள் கவலையை எழுதி காணிக்கை அனுப்புங்கள் என்றார்.ஆஸிரம முகவரியையோ, அன்னை பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளையோ அவர்களால் கூறமுடியவில்லை. அன்னை என்பவர் அயல்நாட்டவர், அற்புதம் செய்பவர் என்று மட்டும் கூறினார்.கடவுள் நம்பிக்கையிலும், மருத்துவத்திலும் நம்பிக்கையிழந்த நான் அந்த மாமி கூறியதைத் தேவ வாக்காகக் கொண்டு, அன்னை பெயருக்குக் கடிதமும், காணிக்கையும் pincode தெரியாத நிலையிலும் அனுப்பினேன்.பல்வேறு கால கட்டத்தில் சிறு வயது முதலே அவர் எங்களைத் தேடி வந்திருந்தும் அவரை ஏற்றுக் கொள்ளாமலே இருந்துவிட்டோம் என்பதனை அன்றுதான் உணர்ந்தேன்.காணிக்கை அனுப்பிய அன்றே எனக்குப் பகுதி நேர வேலை கிடைத்தது.நான் வேலைக்கு என விண்ணப்பிக்காமலே வேறு ஒரு தோழி வேலையில் அமர துணைக்குச் செல்கையில் என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.அந்த வேலை எனது கல்லூரிப் படிப்புக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருந்ததுடன் எங்கள் பொருளாதாரப் பிரச்சினையும் தீர உதவியது.இரண்டு நாட்களில் அருகில் உள்ள வீட்டில் சித்த வைத்தியர் ஒருவர் வந்துள்ளார் எனவும் என் தாயாருக்குச் சிகிச்சை அளிக்க விரும்புவதாயும் கூறி ஒரு மாமி என் தாயாரை அவரிடம் அழைத்துச் சென்றார்கள்.அவர் சிவந்த மேனியுடன், மேல் சட்டை அணியாதவராய், நல்ல உடல்நலத்துடன், வெள்ளைத் தாடியுடன் பார்ப்போரைக் கவரும் தீட்சண்யப் பார்வையைக் கொண்டவராய் மிகவும் வயதானவராய் இருந்தார்.அவர் யார் என அந்த மாமியிடம் கேட்டதற்கு "அவரைப் பற்றி எங்களுக்கும் ஒன்றும் தெரியாது.என் கணவர் கம்பவுண்டராக இருப்பதால், அவரைத் தேடி இந்த மனிதர் வந்தார்.தாம் ஒரு சித்த வைத்தியர் என அறிமுகம் செய்து கொண்டபொழுது, இவரும் சில சந்தேகங்களை அவரிடம் கிளியர் செய்யும்பொழுது உனது தாயாரின் கையில் உள்ள வெடிப்புப் பற்றி இவர் கேட்டார்.உடனே உன் தாயாரை இங்கு அழைத்து வரச் சொன்னார்கள்.என் கணவருக்கும் இவரை முன் பின் தெரியாது'' என விபரம் அளித்தார்.அவர் என் தாயாருக்குக் கையில் களிம்புபோல் ஒன்றை தடவினார்.பிறகு அவரிடம் விடைபெற்று வந்தோம்.காணிக்கை அனுப்பிய ஒரு வாரத்தில் ஸ்ரீ அன்னையிடமிருந்து பிரசாத பாக்கெட் கிடைத்ததுடன் அந்தப் பெரியவரின் கை என் தாயாரின் கைமேல் பட்டதும் மென்மையாகிவிட்டது.பத்தாண்டு காலமாகப் படாதபாடுபட்ட அவர் ஸ்ரீ அன்னையின் மகிமையால் ஒரு வாரத்தில் குணமடைந்து விட்டார். தொடர்ந்து நாங்கள் காணிக்கை அனுப்புகையில் ஸ்ரீ அரவிந்தர் படம் முதல் முறை வந்தபொழுது நான் முழுவதும் அதிர்ச்சியடைந்தேன்.என் தாயாரின் கையைக் குணப்படுத்திய அந்தப் பெரியவரும் இதே தோற்றத்தில்தான் வந்தார் என்பதுதான் காரணம்.

ஆஸிரமத் தரிசனம்:

ஸ்ரீ அரவிந்தரையும், ஸ்ரீ அன்னையையும் தரிசிக்க புதுச்சேரி செல்லவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது.என் தந்தைக்கு மற்ற தெய்வங்களை வணங்க விருப்பம் இல்லை என அறிந்து மனதிற்குள் நானே ஒரு கோயில் எழுப்பி மலர்களைச் சமர்ப்பித்து வணங்கி வந்தேன்.அடுத்த வீட்டிற்கு வந்திருந்த விருந்தாளி ஸ்ரீ அரவிந்த அன்னை மாத மலரினை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லி

அந்த மாமியிடம் கொடுத்தனுப்பியிருந்தார்கள்.நான் கல்லூரிக்குச் சென்றிருந்ததால் என் தந்தை அந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக் கொண்டதுடன், அதனைப் படித்தும் இருக்கிறார்."SSC (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) தேர்வு எழுத பாண்டிச்சேரி செல்லட்டுமா?'' என தந்தையிடம் கேட்டபொழுது, ஆஸிரமம் சென்று வருவதற்கும் சம்மதம் கிடைத்தது.சமாதி தரிசனம் செய்யவேண்டும் என்பதற்காக அந்தத் தேர்வினை, காரணங்காட்டி புதுச்சேரி சென்றேன். என்னுடன் என் தம்பியும் வந்தான்.நான் தேர்வு எழுதிக் கொண்டிருந்த நேரம் அவன் ஆஸிரமம் எங்கு உள்ளது என்பதனை விசாரித்து வந்துவிட்டான்.மதியம் இருவரும் சமாதி தரிசனம் செய்கையில், எனக்கு மறுபடியும் ஓர் அதிர்ச்சி.மனதில் ஏற்படுத்திய அதே சூழலையும் அலங்காரத்தையும் அங்கும் பார்த்ததுதான் அதற்குக் காரணம்.அதற்குப் பிறகு நான் ஆஸிரமம் செல்லவேண்டும் என்று நினைக்கும்பொழுதெல்லாம் என் தந்தையின் சம்மதம் கிடைத்ததுடன் அவரே துணைக்கும் வந்தார்.

பட்ட மேற்படிப்பும், சரணாகதியும்

ஸ்ரீ அன்னையின் அருளினால் எங்களுக்கு ஏற்பட்ட நல்ல முன்னேற்றங்களை உற்று நோக்கிய நான் இனிமேல் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் கோட்பாடுகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து இனி அவர்களுக்காக வாழவேண்டும் எனத் திட்டமிட்டேன்.ஆகஸ்ட் மாதம் 1994-ஆம் வருடம் 10-ஆம் தேதி என்னையுமறியாமல் அடிக்கடி உணர்ச்சிகள் மெய்சிலிர்ப்பதனை உணர்ந்தேன்.எனக்கு

C.A. படிக்கவாவது அல்லது முதுநிலை படிக்காவாவது உத்தரவுடன் அருள் தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டே அவர்களை நினைத்து உறங்கி விட்டேன்.கல்லூரியிலும், தொலைதூரக் கல்வி இயக்கத்திலும் அட்மிஷன் முடிந்துவிட்ட சமயம், இனி முயன்று பலனில்லை என்ற நிலை இருந்தது, எங்கள் கல்லூரி அலுவலர் ஒருவரிடம் எங்களது தமிழ்த் தட்டெழுத்துப் பொறியினை வாடகைக்குக் கொடுத்திருந்தோம்.வாடகைப் பணம் செலுத்த வந்திருந்த அவர், நான் மேற்கொண்டு படிப்பினைத் தொடராதது குறித்து அறிந்து என்னை உறக்கத்திலிருந்து எழுப்பச் சொன்னார். "உனக்கு விருப்பம் இருந்தால் மேற்கொண்டு நம் கல்லூரியிலேயே M.Com.படியேன், எனக்கு ஒரு சீட் உண்டு.அந்தக் கோட்டாவில் சேர்த்துவிடுகிறேன்.இதோ அட்மிஷன் புக்கையும் அலுவல் விஷயமாகக் கையோடு கொண்டு வந்துள்ளேன்'' என்றார்.

"நீ இன்டர்வியூ அட்டண்ட் பண்ண அவசியமில்லை.இதுவரை நடந்த பாடங்களையெல்லாம் விரிவுரையாளர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்'' என்று கூறிக்கொண்டே அட்மிஷன் அப்ளிகேஷனை பூர்த்தி செய்தார்.ஸ்ரீ அன்னையின் முன்னாலேயே எங்களது இல்லத்திலேயே நான் எம்காம் சேர்ந்தேன்.கல்லூரிக் கட்டணம் ரூ.2000 கட்டவேண்டும்.கல்லூரிக்கு நீ வரும்பொழுது கட்டினால் போதும்.இரண்டு நாட்கள் சென்றபிறகு நீ வகுப்புக்கு வந்துவிடு என்றார்.மறுநாள் சிட்டி யூனியன் வங்கியில் கல்விக்குக் கடன் கேட்டு விண்ணப்பித்தோம்.அதற்கு மறுநாளே லோன் sanction ஆகி பணமும் கிடைத்தது.ஸ்ரீ அன்னையின் பூரண அருளினால் அதற்கு மறுநாள் கல்லூரி சென்றேன்.அடுத்த செமஸ்டரிலிருந்து கல்லூரிக் கட்டணம் செலுத்துவதில் "உனக்கு 40 சதவிதம் அளவிற்கு விலக்கு அளிக்கிறோம்'' எனச் செய்தி கிடைத்தது. மேற்படிப்புக்கு ஸ்ரீ அன்னை அருள் புரிந்ததுடன், பகுதி நேர வேலையும் ஒரு சாக்பீஸ் கம்பெனியில் வாங்கி தந்தார்.ஒவ்வொரு நாளும் ஸ்ரீ அன்னையிடம் என்னையும், என் பணியையும், என் படிப்பையும் ஒப்படைத்துச் சென்றேன்.ஆகவே அவர் அன்றாடம் அருளிய அருள் ஏராளம்.அதிலிருந்து ஒரு சில அற்புதங்களை இங்குக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டுக் கல்லூரிகள் அனைத்திற்கும் மாநில அளவில் நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள என்னையும், பி.லிட் மாணவர் ஒருவரையும் எங்கள் கல்லூரிச் சார்பாகச் சென்னைக்கு அனுப்பினார்கள்.அது அரசியல் சம்பந்தப்பட்ட போட்டியாக இருந்ததனால் பரிசு பெறுவதில் போட்டி நிறையவே இருந்தது.நிச்சயம் பரிசினைப் பெற்றிடுவேன் என்ற நம்பிக்கையில் என்னை அனுப்பிய முதல்வருக்கும், ஏனைய ஆசிரியருக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினர்க்கும் நான் நல்ல பெயர் எடுத்துத் தரவேண்டும் என்று ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்து அப்போட்டியில் கலந்து கொண்டேன்.ஆனால் பரிசு கிடைக்கவில்லை. மனதில் எந்தக் கவலையும் இல்லாமல் திரும்பவும் ஸ்ரீ அன்னைக்கு தோல்வியினைச் சமர்ப்பித்தேன்.ஒரு வாரம் கழித்தபின்பு அதே தலைப்பில் போட்டிகளை மாவட்ட அளவில் நடத்தித் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களை மாநில அளவிற்கு எடுத்துக்கொள்வார்கள் என்ற தகவல் வந்தது.மறுமுறையும் என்னைக் கல்லூரி அலுவலர் அழைத்து "நீ இதில் கலந்துகொள்வதாயின் நாங்கள் அடையாளக் கடிதம் தருகிறோம்.செல்கிறாயா?'' எனக் கேட்டனர்.அவர்கள் கூறிய இடம், நாள், நேரம் போன்ற தகவல்களை அரைகுறையாக காதில் வாங்கிக் கொண்டே, நான் இந்த முறை கலந்து கொள்ளவில்லை என கூறிவிட்டேன்.சொந்த வேலை ஒன்று அன்றையதினம் நான் செய்ய வேண்டி இருந்ததால் அவ்வாறு கூறினேன்.ஸ்ரீ அன்னையின் அருளினால் அந்த வேலை முதல்நாளே முடிந்துவிட்டது.மறுநாள் காலை ஸ்ரீ அன்னையை வணங்கும்பொழுது நீயும் போட்டியில் கலந்துகொள் என்று அவர்கள் கூறுவதுபோல் இருந்தது.அறிமுகக் கடிதமும் இல்லாமல், சரியான இடமும் தெரியாமல் ஸ்ரீ அன்னையை மட்டுமே துணையாகக் கொண்டு, போட்டி நடக்கும் ஊருக்கு சென்றேன்.பஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தபால் அலுவலகத்தில் எனக்கு தெரிந்த அந்த முகவரியினை சரியான விளக்கம் கேட்டுக்கொண்டு அவ்விடத்திற்கு சென்றேன்.அறிமுக கடிதம் என்னிடம் இல்லை என்பதனை விழாக் குழுவினர்களிடம் கூறி கல்லூரி அடையாள அட்டையை மட்டுமே காண்பித்தேன். போட்டியில் நானும் கலந்து கொள்ள அவர்கள் சம்மதித்தார்கள். புதிய தெம்புடன் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டேன்.மூன்று நாட்கள் கழித்து நாளிதழ் ஒன்றில் அப்போட்டி பற்றிய செய்தியினையும் வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும் வெளியிட்டியிருந்தார்கள்.ஸ்ரீ அன்னையின் அருளினால் கட்டுரைப்போட்டியில் நான் முதல் பரிசினை வென்றேன்.இதனை அறிந்த கல்லூரி ஆசிரியர்களும் ஆச்சரியப்பட்டார்கள்.நான் அப்போட்டியில் கலந்துகொண்டதை அவர்கள் அறியாததே அதற்குக் காரணம்.ஸ்ரீ அன்னையிடம் செய்யும் பிரார்த்தனை பலிக்காமல் போனதில்லை என்பதற்கேற்ப நிகழ்ந்தது இந்நிகழ்ச்சி.

காமர்ஸ் அசோசியேஷன் (Commerce Association) நிகழ்த்திய ஒரு கருத்தரங்கில் (seminar) நானும், என் தோழியும் பங்கெடுக்கும் வாய்ப்பு கிட்டியது.தணிக்கையியல் (auditing) பற்றிய அந்தக் கருத்தரங்கிற்கு நிறைய தகவல்களை நாங்கள் சேகரிக்க வேண்டியிருந்தது.விரிவுரையாளர்கள் பலரும் அதில் கலந்து கொள்வதால் நாங்கள் சிறப்பாக prepare செய்ய நினைத்தோம். ஆகவே பல ஆடிட்டர்களைக் கும்பகோணத்தில் சந்திக்கச் சென்றோம்.அவருள் சில பேர் ஊரில் இல்லை எனவும், சில பேர் இப்பொழுது எங்களுக்கு நேரமில்லை எனவும் கூறிவிட்டார்கள். விரக்தியடைந்த என் தோழியிடம் ஸ்ரீ அன்னை நமக்கு உதவுவார் என நம்பிக்கையுடன் கூறினேன்.நாம் இந்தக் கருத்தரங்கில் பரிசு பெற வாய்ப்பு கிடைத்தால் நீ கூறும் அன்னையை நான் வணங்குகிறேன் என்றாள் அவள்.பிறகு இருவரும் கலந்து ஆலோசித்து, நமக்குத் தெரிந்த விஷயங்களையும், ஏற்கனவே கற்ற முறைகளையும் கொண்டு இந்த topic-ஐத் தயார் செய்வோம் என முடிவெடுத்தோம்.ஒரு நாள் ஹாஸ்டலில் தங்க என் பெற்றோரிடம் அனுமதி பெற்று இரவு முழுவதும் தயார் செய்தோம்.கருத்தரங்குத் தினத்தன்று சொந்த அலுவல் காரணமாக நான் வெளியூர் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.அந்தத் தோழியும் வேறு ஒரு தோழியும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர், பிறகு அன்னையின் பூரண அருளினால் எங்களுக்கே பரிசு கிடைத்தது.என் வகுப்பு தோழியர் அனைவரும் அன்றே ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்டனர்.

குறிப்பாக என் வகுப்புத் தோழிகள் அனைவரும் ஸ்ரீ அன்னையை வழிபட்டு அவர்கள் கொள்கையினைப் பின்பற்றி வர ஆரம்பித்தோம்.இதனால் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு வெற்றியும் பாராட்டும் சந்தோஷமும் கிடைத்துக் கொண்டிருந்தன.கடைசிச் செமஸ்டரில் கம்ப்யூட்டர் பேப்பர் ஒன்று நாங்கள் எழுத வேண்டி இருந்தது.அதற்காக பயிற்சியினை நாங்கள் முழுமையாகப் பெறுவதற்குள் "internal'' தேர்வு அறிவித்துவிட்டார்கள்.போதிய பயிற்சி பெறாத சில தோழர்கள் மிகவும் கவலைப்பட்டனர்.நான் ஏற்கனவே தனியார் பயிற்சி மையம் ஒன்றில் கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்திருந்ததால், தேர்வுபற்றி பயம் இல்லாமல் இருந்தேன்.இருந்தாலும் சக தோழர்களுக்காக ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்தேன். பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் இன்ஜீனியரை எங்கள் கல்லூரிக்கு அனுப்பக் கோரி நிர்வாகத்தினர் விண்ணப்பித்துக் கொண்டேயிருந்தனர்.நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் அவர்கள் வரவில்லை.எங்கள் தேர்வு அன்று காலைதான் அவர்கள் வந்தார்கள் எனக் கூறிய ஆசிரியர் உங்களுக்கு oral ஆகவே தேர்வு நடத்துகிறோம் என்கிறார்.அன்றையத் தேர்வில் அனைவரும் அதிக மதிப்பெண், எடுத்தது ஸ்ரீ அன்னையின் அருளினால் மட்டுமே.

ஸ்ரீ அன்னையால் கிடைத்த படிப்பினை அவர்களுக்கு நன்றி கூறும் வகையில் அவர்களின் கொள்கைகளைக் கொண்டே எம்.காம் project செய்யவேண்டும் என நினைத்தேன்.தலைப்பையும் ஸ்ரீ அன்னையே தேர்ந்தெடுத்துத் தரவேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் இடத்தில்.100 தலைப்புகளை எழுதி வைத்து, குலுக்கல் முறையில் எந்தத் தலைப்புக் கிடைக்கிறதோ அதையே அன்னை கொடுத்த தலைப்பாக ஏற்பது என்று முடிவு செய்தேன்.அப்படிச் செய்தபொழுது 72-ஆம் நம்பரில் "The problems of women employees in Kumbhakonam" என்ற தலைப்பு, கிடைத்தது.இது எனது subjectக்குத் தொடர்பில்லை என்றாலும் சமூகக் கண்ணோட்டத்துடன் இதனை மேற்கொள்வதுடன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் கொள்கைகளை வலியுறுத்தி எழுதவேண்டும் என முடிவு செய்தேன்.மற்ற தோழர்கள் அவர்களின் project work- ஐ எளிய முறையில் முடித்தனர்.வேலைக்குச் செல்லும் பெண்களில் பலதரப்பட்டவர்களிலிருந்து 100 பேரிடம் schedule method-இல் தகவல் சேகரம் செய்ய வேண்டியிருந்தது.தலைப்புக்குத் தகுந்த தகவல்களைத் திரட்ட சில சமூக அமைப்புகளையும் அணுக வேண்டியிருந்தது.குறித்த காலத்திற்குள் எனது project-ஐ முடிக்க சூழ்நிலை சரியில்லாமல் இருந்தது.சக தோழர்கள் அவர்களின் project-இன் final stage-க்கு வந்தாலும் என்னால் முதல் chapter-ஐக் கூட டைப் செய்ய இயலவில்லை.ஸ்ரீ அன்னையிடம் பூரணமாக project-ஐ ஒப்படைத்தேன்.Submit செய்யMarch-18 கடைசி தேதி என தெரிவித்துவிட்டனர்.March 14-ஆந் தேதியுடன் எங்கள் class முடிவடைந்தது.என் guide நான் குறிப்பு எடுத்திருந்த இரண்டு chapter-களின் rough காப்பியை verify செய்து தந்துவிட்டு இதனை print-out எடுத்துவிடுங்கள், மீதமுள்ள chapter-களை நீங்களே தயார்செய்து final-ஆக thesis-ஐ 18-ஆந்தேதி submit செய்துவிடுங்கள் என்றார்.மீதமுள்ள நான்கு நாட்களுக்குள், மீதி chapter-களை எழுதுவதுடன், அதனை print-out எடுத்து பைண்டும் செய்யவேண்டியிருந்தது.இது சாத்தியமாகுமா?எனக் கேள்வி எழுந்தாலும், நிச்சயம் அன்னை உதவுவார் என்ற பதிலும் மனதிற்குள் இருந்தது.கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வருகையில், ஒரு கம்ப்யூட்டர் சென்டர் கண்ணில்பட்டது.பலமுறை அந்த நகருக்கு நான் சென்றிருக்கிறேன்.அந்த சென்டர் கண்ணில் பட்டதேயில்லை. இதுவும் ஸ்ரீ அன்னையின் அருளே என ஏற்று உரிமையாளரை அணுகினேன்.2 நாட்களுக்குள் project முழுவதும் print-out எடுக்க இயலாது என்பதனை, நான் அறிந்திருந்தாலும் அவசியம் முடித்தாகவேண்டும் என்ற சூழ்நிலையால் மற்ற சென்டர்களை நான் அணுகவில்லை.Computer work செய்ய ஆள் இல்லை என்ற பதிலே அவர்களிடமிருந்து வந்தது.நானே வேலையைச் செய்துகொள்ள அனுமதி அளிப்பீர்களா?என அவர்களிடம் வினவும்பொழுதே அந்த உரிமையாளரின் பெற்றோர் அங்கு வந்தனர்.மிக்க ஆச்சரியமாக இருந்தது.ப்ரைமரி ஸ்கூலில் எனக்கு அவர்கள் வகுப்பு நடத்திய ஆசிரியர்.ஆகவே அவர்கள் சம்மதத்துடன் இரவு பகலாய் இரண்டு நாட்களில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டேன்.Project-இன் கடைசி அத்தியாயத்தில் தீர்வு அளிக்கையில் spiritual solution to all problems என்ற தலைப்பில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன்.16-ஆந்தேதி இரவு binding

 செய்யக் கொடுத்தேன்.ஸ்ரீ அன்னையின் அருளால் 17-ஆந்தேதி காலை ஒரு காப்பியினைக் கொடுத்துவிட்டார்கள்.மீதி 4 காப்பிகளை மறுநாள் தருவதாகக் கூறினார்கள்.17-ஆந்தேதி காலையே ஆஸிரமம் வந்து ஸ்ரீ அன்னைக்கு நன்றிகூறி அந்த project book-ஐயும் சமாதியில் வைத்து ஆசி வாங்கினேன்.மறுநாள் அனைத்து copy-களையும் laminate செய்து குறித்த நேரத்திற்குள் கல்லூரியில் submit செய்துவிட்டேன்.இரண்டு மாதத்தில் முடிக்க வேண்டிய வேலையை இரண்டே நாட்களில் முடித்ததால் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.ஏப்ரல் 24-ஆந்தேதி external என அறிவித்தார் கள்.அன்றைய தினம் தரிசன தினமாக அமைந்ததால் ஆசிரமம் செல்ல இயலாதோ எனக் கவலைப்பட்டேன்.ஸ்ரீ அன்னை அருளினால் 22-ஆந்தேதியே external தேர்வு நடந்தது.வித்தியாசமான தலைப்பினைத் தேர்ந்தெடுத்தது குறித்து அவர்கள் பாராட்டினார்கள்.

எங்கள் வீட்டு மாடியில் குடியிருப்பவர்களைக் காண வந்தார்கள். மறுநாள் அவர்கள் பாண்டிச்சேரி செல்ல வேண்டும் என தெரிய வந்தது.அவர்கள் ஸ்ரீ அன்னை அன்பர்கள் எனவும், ஆஸிரமம் செல்வதற்காகவே வந்துள்ளனர் எனவும் கொஞ்சநேரத்தில் தெரிய வந்தது.உடனே எங்கள் இல்லத்திற்கு வந்து ஸ்ரீ அன்னையைத் தரிசித்துவிட்டு எங்களுடனே தங்கிவிட்டார்கள்.மறுநாள் அவர்கள் என்னையும், என் அக்கா மகனையும் ஆஸிரமத்திற்கு அழைத்துச் சென்றதுடன் ஸ்ரீ அன்னையின் பெரிய திருவுருவப் படமும் வாங்கித் தந்தார்கள்.project-இலும் அதிக மதிப்பெண் பெற முடிந்தது.ஸ்ரீ அன்னையின் பூரண அருளினால் மட்டுமே.

கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வில் முதல் இடத்தில் பாஸ் செய்ததுடன் பாஸ் செய்த அனைவருமே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோம்.

ஸ்ரீ அன்னையின் அருளும், சகோதரரின் கல்வியும்:

எனக்கு ஓர் இளைய சகோதரன் உண்டு.மேல்நிலை வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றான்.அவனை இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்க ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்தோம்.தம் அன்பர்களுக்கு அருளை வாரி வழங்கும் ஸ்ரீ அன்னை எங்களுடைய பிரார்த்தனைக்கும் பேரருள் அளித்துள்ளார்கள்.இந்த வருடத்துடன் தனது படிப்பை முடிக்கும் அவனுக்கு ஸ்ரீ அன்னை வேலை வாங்கித் தருவதுடன் என்றும் பாதுகாப்பாய் இருப்பார் என மனமார நம்புகிறோம்.

ஸ்ரீ அன்னையின் 4 அம்ச படம் வருகை:

சென்ற ஆண்டு தரிசனத் தினங்களுக்குச் செல்கையில், ஸ்ரீ அன்னையின் 4-அம்ச படங்கள் கொண்ட தியான ஹாலில் அவர்களின் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தேன். அன்பர்களுடன் கலந்து நாம ஜெபம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

இன்னும் அதிகரிக்கச் செய்தது.பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதிதான் எங்கள் இல்லத்திலும் தியானக்கூடல், புஷ்பாஞ்சலி ஆரம்பித்தோம், அப்பொழுது மிகச் சிறிய படங்கள்தான் வைத்திருந்தோம்.அந்த மாதம் இன்னொரு அன்னை அன்பர் இல்லத்தில் நடந்த தியானக்கூடலில் ஒரு டாக்டர் அன்பரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் மையத்திற்கு வருகையில் தனது பர்ஸினை பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்ததனை அறியவில்லை.பிறகு மையத்திற்கு வந்து அறிந்து அந்த பர்ஸ் கிடைக்க ஸ்ரீ அன்னையிடம் பிரார்த்தித்தார்கள். அந்த பர்ஸில் வேறோர் அன்பரின் பணம் ஜீவனுள்ள மலர்கள் புத்தகம் வாங்குவதற்காக வைத்திருந்தார்கள்.அத்துடன் இவர்கள் பணம் ரூ.500க்கு மேல் சில்லறையும் இருந்துள்ளது.அந்த பர்ஸ் கிடைத்தால் அதில் உள்ள இவரின் பணம் முழுவதும் ஸ்ரீ அன்னைக்கே செலவு செய்வதாக வேண்டிக்கொண்டார்கள்.

நிறைந்த மனதுடன் ஸ்ரீ அன்னை புஷ்பப் பிரசாதத்துடன் இவர் திரும்பிச் செல்கையில், அதே பஸ் - பேருந்து நிலையத்தில் இருந்திருக்கிறது.யாரோ இவர் பர்ஸை எடுத்துக் கண்டக்டரிடம் ஒப்படைத்திருக்கிறார்.கண்டக்டரிடம் பர்ஸ் குறித்து இவர் கேட்கையில் உடனே அவர் கொடுத்துவிட்டார்.அதில் இருந்த அத்தனைப் பொருட்களுடன் பணமும் இருந்துள்ளது.அந்த வாரத்தில்

 ஸ்ரீ அன்னை பிறந்த நாளிற்கு ஆஸிரமத் தரிசனம் செய்ய இவர் சென்றிருக்கிறார்.அங்கு, சிதம்பரத்திலுள்ள ஓர் அன்னை அன்பரைச் சந்தித்து, இந்நிகழ்ச்சியைக் கூறி அந்தப் பணத்தை என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்டிருக்கிறார்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் என் பெயரை குறிப்பிட்டு அவர் வீட்டுத் தியான மையத்திற்கு ஸ்ரீ அன்னை படம் ஒன்று வாங்கித் தாருங்கள் என அவர் கூறியுள்ளார்.அவர்களும், அந்தப் பணத்திற்கு படம் ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு எனக்காகக் காத்திருந்தார்கள்.நான் ஆஸிரமம் செல்கையில் முதலில் அந்தப் படத்தினை என்னிடம் ஒப்படைத்தார்கள்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.பர்ஸ் கிடைத்த விபரத்தைக் கூறிய டாக்டர், தாம் வேண்டிக் கொண்டவாறே அன்னை அன்பரின் ஆலோசனை பேரில் எங்கள் இல்லத்திற்கு இந்தப் படத்தினை வாங்கிக் கொடுத்துள்ளார்கள் என்றார்.இன்ப அதிர்ச்சியுடன் நான், அப்படத்தை சிறிதுநேரம் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.சமாதி தரிசனம் செய்துவிட்டு, ஸ்ரீ அன்னைக்கு நன்றி கூறிவிட்டு இப்படத்தைப் பெற்றுக் கொள்கிறேன், என்று கூறிவிட்டு அவ்வாறே செய்தேன்.படத்தைப் பிரித்து பார்க்கையில் மேலும் சந்தோஷம்.ஆம், அந்த படம் ஸ்ரீ அன்னையின் 4 அம்சங்கள் கொண்ட லேமினேஷன் செய்துள்ள படம்.இதற்கு முன்பு மூன்று தரிசன தினங்களிலும் ஸ்ரீ நாமஜெபம் செய்ததற்கு இது நான் அளிக்கும் பரிசு என்று ஸ்ரீ அன்னை கூறுவதுபோல் இருந்தது.தியானக்கூடல் ஆரம்பித்த அந்த மாதமே 4 அம்சம் கொண்ட ஸ்ரீ அன்னை எங்கள் இல்லத்திற்கு வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து ஸ்ரீ அன்னையே ஒவ்வோர் அதிசயத்தையும் நிகழ்த்தி, தாமே பெரிய போட்டோக்களில் வந்தார்கள்.அவர்களின் நினைவாலே வாழும் எனக்கும், என் குடும்பத்தாருக்கும், சுற்றம், சூழலுக்கும் அவர் தம் அருளை வாரி வழங்கி பக்கபலமாய் பாதுகாக்கும் பரமனாய் இருந்துவருகிறார். அவர்கள் அருளும் செயல்களும் ஏராளம், தாராளம்.book | by Dr. Radut