Skip to Content

மனித சுபாவம் III

கர்மயோகி

உன் தொழிலின் அடிப்படையே புரியாதவரில் நீ ஒருவனாக இருந்தால், நீ அதை உடனே கற்றுக் கொள்ள வேண்டும். அக்குறை உனக்கில்லை எனில் உன் தொழிலின் அம்சங்களை அடிப்படை விஷயங்களுடன் அடிக்கடி ஒத்துப் பார்.

*********

சமூகத்துடன் உனது ஆழ்ந்த தொடர்பு எங்குள்ளது எனப் பார்த்து, உன் செயல்களை அதன் கண்ணோட்டத்தில் செய்ய வேண்டும்.

*********

சமூகத்தையும் மீறலாம். எல்லாச் சந்தப்பங்களிலும் மீற முடியாது. சாதாரண வாழ்வில் சமூகத்தை மீறும் நேரம் வருவதில்லை. முக்கியமான நேரத்தில் வரும். அதுபோன்ற முக்கியமான நேரத்தில் நாம் சமூகத்தை மீற முடியாமல் தடுத்தது எது என்று கண்டால், நமக்கும் சமூகத்திற்கும் உள்ள ஆழ்ந்த தொடர்பு தெரியும். வேலைக்காரி மகனைக் கெட்டிக்காரன் என்பதால் கல்லூரியில் சேர்க்க ஏற்பாடு செய்யும்பொழுது, வேலைக்காரியின் புருஷன் வேலை செய்யும் கம்பனி மானேஜர் அதைத் தடுக்கிறார். அவரை மீறி நாம் அவனைச் சேர்க்க முயன்றால், நாம் குடியிருக்கும் வீட்டுக்காரர் மூலம் மானேஜர் வந்து தடுக்கிறார். இல்லை என்றால் காலி செய்யச் சொல்கிறார், எனில் நம் சமூக அந்தஸ்து யாருக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கிறது. அதைக் கொண்டு நாம் செயல்களை நிர்ணயிக்க வேண்டும் என்பது சாதாரண மனிதன் நிலை.

வந்த வாய்ப்பு, வருவதும் போவதுமாக இருக்கிறது எனில், அதன் பின்னர் பெரியதொரு வாய்ப்புக் காத்திருக்கிறது என்று பொருள்.

*********

பெரிய வாய்ப்பு பின்னணியில் இல்லாவிட்டால் வந்தது போன பின் திரும்பாது. பின்னணி பெரியதாக இருப்பதால்தான் வந்தது போக முடியாமல் தவிக்கிறது.

எப்பொழுதாவது ஆதி மனிதனைவிடத் தாழ்வாக நீ நடந்து கொண்டிருக்கிறாயா? அது கவனிக்க வேண்டிய இடம்.

***********

நம்முள் ஆதி மனிதன் முழுமையாக ஒளிந்து கொண்டிருக்கிறான் என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நாகரீகமானவர்களிடையே அவன் வெளிவருவதில்லை. வெளிவந்தால் மீண்டும் மீண்டும் வரச் சந்தர்ப்பமுண்டு.

வெட்கப்படக்கூடிய பேராசை, பசி, தாகம், இனவுணர்வைக் கட்டுப்படுத்த முடியாத செயல்கள், எதிரியை அழிக்கக் கொலையும் செய்யும் எண்ணம் மேலெழுவது போன்றவை பலர் வாழ்வில் தலை எடுக்கலாம். அப்படியிருந்தால் அதை ஆராய்ந்து இனி வெளி வர முடியாதபடிச் செய்தால் இன்றைய நிலையிலிருந்து எந்த உயரத்தையும் எட்டலாம்.

உன் இலாபத்தை இரு மடங்காக்கும் முயற்சி, 5 அல்லது 10 அல்லது 50 மடங்கு பலித்தால், மனம் இடம் கொடுக்கும் இடத்தைச் சோதனை செய்து அதை எதிர்மாறாக மாற்றினால், பெரிய பலஹீனத்தைச் சிறப்பான வலிமையாக மாற்றினால், குழப்பத்தைத் தெளிவாக மாற்றினால், நீ எதையும் சாதிக்கலாம்.

**********

இலாபத்தை இருமடங்காக்க முடியும் என நம்பமாட்டார்கள். முயன்றால் வெற்றி பெறுபவர்களுக்கு இருமடங்கு கிடைக்கும். ஏதோ ஒருவருக்கு 5, 10, 50 மடங்கு கிடைக்கும். அப்படி எனில், அவரிடம் புதைந்துள்ள திறமைகள் ஏராளம் என்று பொருள். இதைக் கண்டபின், குழப்பம், பலஹீனம், மாற வேண்டிய இடம் ஆகியவற்றைத் தெளிவு, வலிமை, மாறவேண்டியது என மாற்றுவது திருவுரு மாற்றத்திற்குரிய உபாயங்கள். ஜீவனின் அபாரத் திறமை புதைந்துள்ளபொழுது, ஓரிடத்தில் குழப்பம் இருப்பதால் அத்தனையும் பலன் தருவதில்லை. குழப்பத்தைத் தெளிவாக மாற்றினால் எதையும் சாதிக்கலாம். பலஹீனத்தை ஏற்பவர் குறைவு. மாற்றுபவர் அரிது. செய்தால் அளவு கடந்த பலன் உண்டு.

உன் இளவயதை நினைத்துப் பார்த்து நீ பெருமைப்பட்ட இலட்சியங்களை ஆராய்ந்து பார். குடும்பம், கோயில், பள்ளி, கட்சி, கல்லூரி ஆகியவற்றில் கற்றுக்கொண்ட இலட்சியங்களை இன்று நீ முழுமையாகப் பின்பற்றவில்லை என்றால், இப்பொழுது பின்பற்றுவது பலன் தரும்.

***********

அன்றைவிட இன்று தெளிவு அதிகமாக இருப்பதால், அன்று முடியாதது இன்று அபரிமிதமாக முடியும். கல்லூரியில் Russel ரஸ்ஸல் புத்தகம் படிக்க வாங்கியதை முடிக்கவில்லை என்றால், இன்று சிரமமில்லாமல் முடிக்கலாம். அதேபோல்தான் இலட்சியம், பண்பு, கொள்கைகள், கடமைகள், ஆசைகளும் ஆகும்.

நல்ல மனம் இருந்ததால் அன்று இலட்சியத்தை நாடினோம். பின்பற்ற முடியவில்லை. இன்று தெளிவும், திறனும் வந்துவிட்டதால் முடியும். பலன் அபரிமிதமாக இருக்கும்.

ஆபீஸ் வேலையைப் புறக்கணித்துவிட்டு, சொந்த வேலையைச் செய்யும் பழக்கமிருந்தால், அதை நிறுத்த வேண்டும். ஏனெனில் அதே பழக்கம் உன் காரியத்திலும் வரும். உனக்கு முக்கியமான வேலையை மறந்து, முக்கியமில்லாத வேலையை ஆசைக்காகச் செய்ய நேரும். அது வாழ்வை அழிக்கும்.

************

தவறு என்பதைச் செய்யக்கூடாது, நல்லதைச் செய்ய வேண்டும் என்பவருக்குக் குறை வாராது. இன்றைய சௌகரியம், கேட்க மாட் டார்கள் என்பதால் ஆதாயம், யாருக்கும் தெரியாது செய்யலாம், இவை யெல்லாம் பெரிய தப்பா என்றெல்லாம் தவற்றை நாடிப் போனால், அதற்குரியது பிறகு வரும் பொழுது அவஸ்தை பெரியதாக இருக்கும்.

பார்ட்னர் வருமானத்தை மாற்றிக் குறைத்து எழுத கணக்குப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்தால், அவன் உன் வருமானத் தையும் அதே போல் செய்வான். பொய்க் கணக்கு, வரியை மறைப்பது, போன்றவற்றை வட நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கொள்கையாகப் பின்பற்றினர். இவர்களில் சிலர் பிர்லா கம்பனிகளுக்கும் நிகராக வந்தனர். இவர்கள் புதிய மானேஜர், அக்கௌண்டண்ட் நியமித்தால், அவனைத் திருட அனுமதிப்பார்கள். அவன் திருடாவிட்டால் வேலையிலிருந்து எடுத்துவிடுவார்கள். அவர்கள் சொல்வது, "திருடத் தெரியாதவனை நான் என்ன செய்வது, எனக்கு எப்படித் திருடித் தருவான்?' இக்கம்பனிகள் அனைத்தும் கொஞ்ச நாளில் தாமே மூடிக்கொண்டன. தவறு நீடிக்காது, நீடிக்க முடியாது.

கெட்ட எண்ணத்தை நல்லெண்ணமாக மாற்ற முயல்வது அளவுகடந்த திறனைத் தரும்.

************

பூரண யோகத்தின் அடிப்படை திருவுருமாற்றம். இருள் ஒளியை விட அடர்ந்த ஒளியைத் தன்னுள் கொண்டது போன்ற

தத்துவங்களையுடையது பூரண யோகம். கெட்ட எண்ணத்தை விடுவது நல்லது. அன்னையைப் பின்பற்றுபவர் கெட்ட எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்ற முயன்றால், அதன் விளைவாக அதனுள் மறைந்திருக்கும் அபரிமிதமான சக்தி வெளிவரும்.

கெட்ட எண்ணம் உள்ளவனுக்குச் சாதாரண மனிதனைவிடத் தீவிரம் ஏராளம். இவன் மனதை மாற்றிக் கொண்டு நல்ல எண்ணத்தை ஏற்றால் அதே தீவிரம் இருக்கும். எனவே தீவிர நல்லெண்ணம் உற்பத்தியாகும்.

உனக்குச் சம்பந்தமில்லாத இடத்தில் திறமையிருந்தால், அதைப் பயன்படுத்தத் தயங்காதே.

************

கம்பாசிட்டருக்கு எழுத்துத் திறமை, காவல்காரனுக்கு மெக்கானிக் திறமை, இருக்கும்பொழுது அதை வெளியில் சொல்ல வெட்கப்படுவார்கள். கம்பாசிட்டர் உலகை எட்டிப் பார்த்து, உயர்ந்த எழுத்தாளரானார். காவல்காரன், இன்ஜீனியர் திறமையுடையவன் என்பதைப் பயன்படுத்த வழியில்லாமலிருந்தபொழுது, சந்தர்ப்பம் அவனை மெஷின் உள்ள முதலாளியிடம் சேர்த்தது. காவலில் இவன் மாதம் ரூ. 100 சம்பாதித்த நாளில் முதலாளிக்குத் தினமும் 1000 ரூபாய் சம்பாதித்துக் கொடுத்தான். இவனுக்கு தினமும் 100 ரூபாய் வந்தது. நிலைமையைக் கருதாது, திறமையைக் கருதினால் அது என்றும் பலன் தரும்.

உன் சமூக அந்தஸ்தில் பெருமையடைபவரானால், அதை விட்டுவிட்டால் பெரும் பலன் காத்திருக்கிறது.

**********

மிகப் பெரிய நிலச்சுவான்தார் மகன். தன் அந்தஸ்தை உலகம் போற்றும்பொழுது இவர் எப்படி அதைக் கருதாமலிருப்பார்?

கருதியதன் பலன் இவரது 60ஆம் வயதில் ஊரில் எவருக்கும் இவரைத் தெரியாது. பழைய தலைமுறையினரே அறிவர். அவர்களும் கருதுவதில்லை என்ற நிலை ஏற்பட்டது. அவர் மகன் அதற்கும் இலாயக்கில்லாமல் வீட்டிலிருக்கிறான்.

இவர் தம் பெருமையைக் கருதாமல், திறமையைக் கருதியிருந்தால், ஜில்லாவில் முதன்மையாக வந்திருக்கலாம். அதைப் போல் திறமையைக் கருதியவர்கள் மாநிலத்தில் முதன்மையாக வந்தனர்.

குமாஸ்தாவாக ஒரு பட்டதாரியும், கெஜட் பதவி ஆபீசராக மற்றொரு பட்டதாரியும், வாழ்க்கையை ஆரம்பித்தால் அது மலையும், மடுவும் ஆகும். ஆனால் அவை நெருங்கியும் வர முடியும்.

*********

குமாஸ்தாவாக இருக்கும் இடத்தைப் பொருத்து, திறமையையும் பொருத்து இரு நண்பர்கள் இதுபோல் ஆரம்பித்தவர்கள் ஒரே பதவியில் ஓய்வு பெற்றனர். பொதுவாக இவ்விதி உண்மையானாலும் திறமைக்கு விலக்குண்டு. இடத்தின் சிறப்புக்கு விதி விலகும்.

சிறு வயதிலிருந்து பிறரிடம் உனக்குப் பிடிக்காதவற்றை எல்லாம் எழுதிப் பார். அத்தனையும் உன்னிடமிருக்கும். அவற்றை விலக்கினால் நல்லது.

*********

இது உளநூல் உண்மை. இதையறிந்தவர்கள் பிறரைக் குறை சொல்வதில்லை. பிறரைச் சொல்லும் குறை எல்லாம் நம்முடையது என அறிந்த பின் எப்படிக் குறை கூறுவது?

உன் வாழ்வு, தொழிலுக்குரிய (facts) விவரங்களை ஆராய்ந்தால், 40 வருஷ அனுபவமுள்ளவர் பெற்ற விவரம் உன்னிடமிருக்கும். ஆராய்ச்சிக்கு அந்தப் பலன் உண்டு.

 

*********

 

இனிமையான பழக்கம், நல்ல பழக்கம், வெற்றிகரமான பழக்கங்களை நீ விரும்பிப் போற்றியிருந்தால், அவற்றை உன்னால் பெற முடியும் எனப் பொருள்.

 

***********

 

பிறருடைய பெரிய திறமைகளை நீ பாராட்டியிருந்தால் உன்னால் அவற்றைப் பெற முடியும்.

**********

முற்றும்.

ஜீவிய மணி

சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரமும் பெற்றவன் இறைவன்.book | by Dr. Radut