Skip to Content

08. அன்பர் அனுபவம்

அன்பர் அனுபவம்

வித்யகீதா, கும்பகோணம்

அன்னைக்கும் பகவானுக்கும் பல கோடி நன்றிகள்!

நம் விருப்பங்களை அன்னையின் அருள் அற்புதமாக நிறைவேற்றும் பாங்கினை அனுபவித்த அன்னையின் குழந்தை நான். நான் பிறந்ததும் என் அண்ணன் எனது அப்பாவின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதால், பள்ளி சேர்க்கும் வயது வந்தும், என்னை பள்ளியில் சேர்க்காமல் எனது பெற்றோர் காக்க வைத்தனர்.

எனக்குப் படிப்பதில் ஆர்வமுண்டு. ஆனால், என் குடும்ப சூழல், எனது அப்பாவின் வேலை நிலையற்றதாக இருந்ததால், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும் எங்கள் கல்வி தடைபட்டது. ஐந்தாம் வகுப்பில் ஒரு முறையும், பத்தாம் வகுப்பில் ஒரு முறையும் எங்கள் படிப்பு தடைபட்டது.

என்னை கல்லூரியில் சேர்க்கவே என் அப்பா தயக்கம் காட்டினார். பிறகு என் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரின் வற்புறுத்தலுக்கு இணங்கி, எங்கள் ஊரான மயிலாடுதுறையில் கல்லூரி இருந்தும், என்னை திருச்சியில் உள்ள பெண்கள் கல்லூரியில் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்தார். நான் BSc., Chemistry மூன்றாம் வருடம் படித்துக் கொண்டிருக்கும்பொழுது அன்னையை நெருங்கினேன். அன்னையை நெருங்கியதன் முதல் பலன் என் அப்பா என்னை M.Sc., Chemistry course-இல் சேர்த்தது. என்னைத் தொடர்ந்த அன்னையின் அருள், என் அப்பா என்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் B.Ed., படிக்க வைத்தது. அங்கு படித்த பொழுது, என் பேராசிரியர் ஒருவர் என்னைப் பார்த்து, ‘இந்த வருடத்தில் சேர்ந்துள்ள 1360 மாணவர்களில் முதலாவதாக வரும் தகுதி உனக்குள்ளது. அதற்கான உழைப்பை நீ செய்தால் போதும்’ என்றார்.

அதன்பின் என் வாழ்வில் பல திருப்பங்கள் வந்து போனபோதும், என் படிப்பு அன்னை வசம் இருந்ததால், பின்னாளில் Ph.D (Education) சேர்ந்து, அதையும் அன்னை தன் கருணையால் நிறைவேற்றி வைத்தார்.

ஒவ்வொரு ஐந்து வருடத்திலும் தடை ஏற்படுத்திய என் குடும்பச் சூழலை அன்னை தன் அளவற்ற அருளால் நிறைத்து, என் படிப்பைத் தொடரச் செய்தார்.

“எதற்கு பிரார்த்தனை செய்வது, எப்படிச் செய்வது என அறியாதவருக்கு அவர்கள் நாடும் சிறியதை மறுத்து, அவர்களுக்குரிய பெரியதைத் தருவது அன்னையின் வழக்கம்” - என்ற குருநாதர் அப்பாவின் சொல் என் படிப்பில் பலித்தது. உள்ளூர் காலேஜில் இருந்த அதே டிகிரியை வெளியூர் சென்று படிக்கிறேனே என்று புலம்புவேன். M.Sc.-க்கும் என் அப்பா என்னை உள்ளூரில் சேர்க்கவில்லை என்று வருந்தினேன். அன்னை என் ஏக்கத்தை நீக்குமாறு என்னை உள்ளூரில் உள்ள காலேஜிலேயே M.Phil Chemistry சேர்த்து, அதில் முதலாவதாகவும் தேர்ச்சி பெறச் செய்தார். என்னைப் பரவசப்படுத்திய என் இனிய அன்னைக்கு கோடானுகோடி நன்றிகள்!

**********

ஜீவிய மணி
 
சரணாகதி நோக்கமானால் எண்ணம் மௌனத்தின் வாயில். அதுவே ஜீவனின் இலட்சியமாவது உடலும் ஜீவனும் புளகாங்கிதம் தரும். அன்னை ஜீவியம் நம் ஜீவியமாவது சரணாகதியின் பூரணம். ஆன்மாவும் சுபாவமும் சரணாகதியை ஏற்றால் சரணாகதிக்கு வேலையில்லை. 



book | by Dr. Radut