Skip to Content

08. உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

உண்மையின் பல்வேறு பரிமாணங்கள்

என். அசோகன்

உண்மையென்றால் நாம் உள்ளதை உள்ளபடி பேசுவது என்று புரிந்து கொள்கிறோம். இது உண்மைக்கு மிகவும் குறுகிய defi nition கொடுப்பதாகும். உண்மைக்கு விரிந்து பரந்த defi nition கொடுக்க வேண்டும் என்றால் எல்லாவிதமான உயர்ந்த பாஸிட்டிவ் வெளிப்பாடுகளும் உண்மையின் வெளிப்பாடுகள் என்று நாம் சொல்லலாம். அப்படிப் பார்த்தால், சின்ஸியரிட்டி, பொறுப்புணர்வு, தைரியம், நேர்மை, சுமுகம், பணிவு என்றெல்லாமே உண்மையின் வெளிப்பாடுகளாக அமைகின்றன.

1. இவற்றில் முதலில் நாம் சின்ஸியரிட்டியை எடுத்துக் கொள்வோம். சின்ஸியரிட்டிக்கு சிறந்த உதாரணம் வேண்டும் என்றால், நாம் டார்ஸியைத்தான் காட்ட வேண்டும். பொதுவாக நம்மைவிட கீழ்நிலையில் உள்ளவர்கள் எவரும் நம்மிடம் குறைகண்டுபிடித்தால், அதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் கோபம்தான் வரும். ஆனால் டார்ஸியோ பிரபு வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும், அவனுக்குக் கீழ்நிலையிலிருந்த லிஸி சொன்னக் குறைகளை எல்லாம் ஏற்றுக் கொண்டான். “என்னுடைய குறைகளை எல்லாம் எனக்கு உணர்த்தி என்னை மனிதனாக்கிவிட்டாய். நீ என்னைத் திட்டியதுதான் சரி. அதற்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்” என்று கதையின் இறுதியில் மனதாரப் புகழ்கிறான். லிஸி மாறி வருகிறாள் என்றால், அதற்கு முக்கியக் காரணம் டார்ஸியின் சின்ஸியரான மனமாற்றம்தான். இந்த மனமாற்றம் எவ்வளவு சின்ஸியர் என்று கேட்டால், இந்த உதவிகளெல்லாம் அவன் தனக்காகச் செய்தான் என்று அவள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக தனக்கு இதில் பங்குண்டு என்பதே அவளுக்கு யாரும் தெரிவிக்கக் கூடாது என்று உறுதிமொழியும் வாங்கியிருக்கின்றான். ஆகவே இந்த சின்ஸியரிட்டி சாதாரண சின்ஸியரிட்டியே இல்லை. ஒரு தெய்வீக அடக்கம் இதில் கலந்துள்ளது என்றுதான் நாம் சொல்ல வேண்டும். நிஜ வாழ்க்கையில் சின்ஸியரிட்டிக்கு எடுத்துக்காட்டாக நாம் காந்தியடிகளைச் சொல்லலாம். நாட்டிற்கு விடுதலை வாங்கித் தருவதுதான் தன் நோக்கம் என்று சொன்னாரே தவிர அதில் மறைமுகமாக தனக்கென்ற எந்தவொரு ஆதாயத்தையும் தேடவே இல்லை. நாடு விடுதலையான பின்பு அவர் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ தலையெடுத்திருந்தால், மக்கள் அதை பெரிதும் வரவேற்றிருப்பார்கள். ஆனால் அவரோ அந்தப் பதவிகளுக்காக ஆசைப்பட்டதாகக்கூடத் தெரியவில்லை. எல்லோரும் வியக்கும் வண்ணம் அடிப்படை உறுப்பினர் பதவியைக்கூட இராஜினாமா செய்தார். வன்முறையைத் தவிர்த்து சத்தியாக்கிரக முறையிலேயே சுதந்திரம் வாங்க வேண்டும் என்ற இடத்தில் அவர் தீவிரமாக இருந்தார். எங்கேனும் வன்முறை வெடித்தது என்று தெரிந்தால், உடனே ஒத்துழையாமைப் போராட்டத்தை நிறுத்தினார். சின்ஸியரிட்டியின் மிகச்சிறந்த வெளிப்பாடாக அன்னை என்ன சொல்கிறார் என்றால், “தன்னிடமுள்ள குறைகளை தான் ஒத்துக் கொள்வதுதான் மிகச்சிறந்த சின்ஸியரிட்டி” என்று கூறுகிறார். அரசியல் பெருந்தலைவர்கள் சுலபமாகத் தன்னுடைய குறைகளையோ, தவறுகளையோ ஒத்துக் கொள்வதில்லை, சுதந்திரம் பெற்றபின் இந்து, முஸ்லீம் இனக்கலவரம் வந்த பொழுது, தன்னுடைய அஹிம்சைக் கொள்கை தோற்றுவிட்டது என்று காந்திஜி அவர்கள் பகிரங்கமாக ஒத்துக் கொண்டார். “மக்களின் வன்முறை உணர்வுகளை அளவுக்குமீறி அடக்கிவிட்டேன். ஆங்கிலேயருக்கு எதிராக வெளிப்பட வேண்டிய வன்முறை இப்பொழுது இந்து முஸ்லீம்களுக்கிடையே வெளிப்படுகின்றது, நான் தவறு செய்து விட்டேன்” என்று வருத்தப்பட்டுக் கொண்டார்.

தொழிலதிபர்களிடம் எப்படிப்பட்ட சின்ஸியரிட்டி இருக்க வேண்டும் என்று இப்பொழுது பார்ப்போம். தொழிலதிபர்கள் பொதுவாக தன்னதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் எல்லாமே நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கம்பெனியின் வளர்ச்சியும், தன்னுடைய வளர்ச்சியும் சரிசமமாக இருக்க வேண்டும் என்றுதான் எதிர்பார்ப்பார்கள். தன்னுடைய செயல்பாடு கம்பெனியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது என்று தெரிந்தாலும், கம்பெனி வளர்ச்சிக்கேற்றபடி தன்னைத் திருத்திக் கொள்ள முன்வருகின்ற தொழிலதிபர்கள் குறைவு. முதலாளி ஒரு அறிவில்லாத order-ஐ போட்டுவிட்டார் என்றால், அதன்படி அக்கம்பெனி செயல்பட்டால், நஷ்டம் வரும் என்று தெரிந்தாலும்கூட தான் அறிவின்றி order-ஐ போட்டுவிட்டோம் என்பதை மறைப்பதற்காகத் தான் போட்ட அறிவில்லாத order-ஐ வலியுறுத்துகின்ற முதலாளிகளுமுண்டு. இதற்கு மாறாக கம்பெனி சிரமமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது பொறுப்பேற்க முன்வருகின்ற அதிகாரிகள் கம்பெனியின் தேவைகளை முன்வைத்துத் தன் தேவைகளைக் குறைத்து, கம்பெனிக்கு சின்ஸியராக உழைத்துமிருக்கிறார்கள். உதாரணமாக Lee Iacoca Chrysler கார் கம்பெனிக்குப் பொறுப்பேற்றபொழுது கம்பெனி மிகவும் சிரமமான சூழ்நிலையிலிருந்தது. அதைக் கருத்தில் கொண்டு கம்பெனி நிமிரும் வரையிலும் தான் சம்பளமே எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்றறிவித்தார். அவர் சொன்னபடி செய்தும் காட்டினார். இப்படி சின்ஸியராக அவர் செயல்பட்டதால்தான் இரண்டாயிரம் கோடி டாலருக்குமேல் நஷ்டத்தில் மூழ்கிய கம்பெனியை அந்த நஷ்டத்திலிருந்து மீட்டு அந்த இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக மேலும் இரண்டாயிரம் கோடி அவரால் சம்பாதிக்க முடிந்தது.

இப்பொழுது ஆன்மீக சின்ஸியரிட்டிக்கு வருவோம். ஆன்மீகத்தில் மறைமுகமாக அகந்தை ஒளிந்து கொள்ள இடம் தரக்கூடாது என்று அன்னை சொல்லியிருக்கிறார். சேவை செய்பவர்களும், பெரிய காணிக்கை வழங்குபவர்களும் அதன் வழியே பிரபலம் தேடக்கூடாது என்கிறார். இதில் தேறுபவர்களே குறைவு. ஆரோவில் நிறுவிய பொழுது அன்னைக்கு நோபல் பரிசு வழங்க முன்வந்தார்கள். அப்பொழுது அன்னை ‘பகவான் செய்த பணியைத்தான் நான் தொடர்ந்து செய்கிறேன். அப்பட்சத்தில் இவ்வுடம்பிற்கென்று தனிப்பட்ட மரியாதையோ, அங்கீகாரமோ தேவையில்லை’ என்றார். அவர் எடுத்துக் கொண்ட இறை சேவையில் எவ்வளவு சின்ஸியராக இருந்திருந்தால், இப்படி அவர் சொல்லியிருப்பார். இதுவரை சின்ஸியரிட்டி என்ற கருத்தைப்பற்றிப் பேசினேன்.

2. அடுத்ததாக பொறுப்புணர்வு என்ற குண விசேஷத்திற்கு வருகிறேன். பொறுப்புணர்வு என்பது தான் எடுத்துக் கொண்ட வேலையைத் திறம்படச் செய்து முடிப்பதாகும். பண்டைக் காலத்திலிருந்த கூட்டுக் குடும்பங்கள் இந்தப் பொறுப்புணர்விற்கு சிறந்த நிரூபணமாக விளங்கின. அதாவது குடும்பத்திலுள்ள அனைவரின் நலனுக்கும் கூட்டுக் குடும்பம் பொறுப்பேற்கிறது. அப்படிப் பார்க்கும் பொழுது சம்பாதிப்பவன், சம்பாதிக்காதவன், ஆரோக்கியமானவன், ஆரோக்கியமில்லாதவன் என்று எல்லோரையும் கூட்டுக் குடும்பம் சரிசமமாகப் பார்த்துக் கொள்ள முன்வருகிறது. ஊனமுற்றவர்கள், சம்பாதிக்கத் தெரியாதவர்கள் என்றிவர்களை எல்லாம் சமூகம் கைவிட்டது, சமூகத்தின் நாகரீகமற்ற நிலை. கூட்டுக்குடும்பம் எல்லோருக்கும் சரிசமமாகப் பொறுப்பேற்பது தான் நாகரீகமான நிலை. பண்டைய காலத்தில் கப்பலில் செல்வதே அபாயகரமான ஒரு வேலையாக இருந்தது. கப்பல் புயலில் சிக்கி மூழ்கிப்போனால், ஷிப்பிங் கம்பெனியின் முதலாளி பெருநஷ்டமடைவார். இதனால், ஷிப்பிங் பிஸினஸில் இறங்கவே பயந்து கொண்டிருந்தார்கள். நிலைமை விபரீதமாக இருப்பதை உணர்ந்து எல்லா ஷிப்பிங் கம்பெனிகளும் ஒன்று சேர்ந்து, இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தன. இப்படி நஷ்டத்திற்கு இன்சூரன்ஸ் கம்பெனி பொறுப்பேற்ற பிறகுதான் ஷிப்பிங் கம்பெனிகளே வளர்ச்சியடையத் தொடங்கின. விவசாயம் இத்தனை நூற்றாண்டுகளாக ஒரு முறையான தொழிலாக நடந்து வருவதற்குக் காரணமே விவசாயம் நடக்கின்ற கிராமங்களில் கிராம சபாக்கள் ஊரில் விவசாயம் நல்லபடியாக நடப்பதற்குப் பொறுப்பேற்பதுதான். அதாவது யாரும் யார் நிலத்திலும் திருடக் கூடாது. ஊரில் விவசாய வேலை நடக்கும் பொழுது வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால், ஊர் மக்கள் வேலைக்குப் போக வேண்டும். கால்வாயில் வரும் தண்ணீரை ஊரில் விவசாயம் செய்பவர்கள் சுமுகமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்றிப்படி எல்லாம் கிராம சபாக்கள் தீர்மானங்களை நிறைவேற்றி அமுல்படுத்துகின்றன. இப்படி ஊர் பொறுப்பேற்காமல்போனால் எந்த விவசாயியுமே ஒருநாள்கூட நிம்மதியாக இருக்க முடியாது. ஓர் இரவுகூட நிம்மதியாகத் தூங்க முடியாது. திருடுபோய்விடுமோ, வேலைக்கு ஆள் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து நிம்மதி இழக்க வேண்டியிருக்கும். இத்தகைய ஏற்பாடுகள் இன்றுவரை கிராமங்களில் நிறைவேற்றப்படுகின்றன என்பது கிராமிய அளவில் collective responsibility சிறப்பாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.

அன்னை “consciousness responsibility” என்று ஒன்றை சொல்கிறார். அது என்னவென்றால் தான் செய்யும் வேலைக்கு மட்டும் பொறுப்பேற்காமல் தான் சம்மந்தப்பட்ட இடங்களில் நடக்கும் தவறுகளுக்கும் பொறுப்பேற்பதாகும். உதாரணமாக ஏராளமான கடன் வாங்கி வைத்துவிட்டு தகப்பனார் இறந்து போனால், மகன் அக்கடன்களுக்கெல்லாம் தார்மீகப் பொறுப்பேற்பதைப் பார்க்கிறோம். ஒரு கம்பெனியிலுள்ள டிப்பார்ட்மெண்டில் பணிபுரிகின்ற ஊழியர் ஒருவர் செய்கின்ற தவற்றுக்கு துறைத் தலைவர் பொறுப்பேற்பதைப் பார்க்கிறோம். “என்னைக் கலந்து இவர் செய்யவே இல்லை. நான் எப்படி இவருடைய தவறுகளுக்குப் பொறுப்பேற்பது” என்று துறைத்தலைவர் கை விடுவதுமுண்டு. நான் பொறுப்பேற்கும் துறையில் ஒரு தவறு நடந்திருக்கிறது என்றால், அது எனக்குத் தெரிந்து நடக்கிறதோ, தெரியாமல் நடக்கிறதோ அதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்று சொல்கின்ற துறைத் தலைவர்களும் உண்டு. ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி பயங்கரமாகப் போரிட்டுக் கொண்ட பொழுது, அன்னையும், பகவானும் உலகை அந்தப் போரிலிருந்துக் காப்பாற்ற தார்மீகப் பொறுப்பேற்றார்கள். அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று யாரும் அவர்களைக் கேட்கவில்லை. அப்படி அவர்கள் பொறுப்பேற்க முன்வராமல் போனாலும் யாரும் அவர்களைக் குறை சொல்வதற்கும் இடமில்லை. ஆனால் அமைதியாக யார் கண்களிலும் படாதவண்ணம் அவர்கள் பொறுப்பேற்று உலகைக் காப்பாற்றினார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். அதேசமயத்தில் இப்பொழுதுள்ள அரசியல்வாதிகள் இரயில் விபத்து நடந்தாலோ, விமான விபத்து நடந்தாலோ நாங்கள் பொறுப்பேற்பதற்கில்லை. இராஜினாமாவும் செய்ய முடியாது என்று அறிக்கை விடுவதைப் பார்க்கிறோம்.

இந்த இடத்தில் திரு. பென்னட் அவர்களின் பொறுப்புணர்வை நாம் அவசியம் கருத வேண்டும். லிடியா ஓடிப்போன பொழுது லிடியாவை தாயார்தான் கெடுத்தார். அவளை சரியாக வளர்க்கவில்லை, அவளுடைய ஆசைகளை எல்லாம் தூண்டி விட்டார், அதைச் செய்தார், இதைச் செய்தார் என்று பழியை திருமதி. பென்னட்மேல் போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுவரையிலும் குடும்ப விவகாரங்களில் ஒதுங்கியிருந்தவர் திடீரென்று ஆவேசம் வந்து, நடந்தது எல்லாவற்றிற்கும் நானே பொறுப்பேற்கிறேன். இதுவரையிலும் என் பெண்களைக் கண்டிக்காமல் விட்டது என் தவறு. இனிமேலாவது ஆபீஸர்கள் எவரும் என் வீட்டிற்கு வரக்கூடாது. என் பெண்களும் இஷ்டத்திற்கு நடனத்திற்கெல்லாம் போகக் கூடாது என்றும் திருமதி. பென்னட்டைக் குறையே கூறாமல், நடந்த தவறுகளுக்கெல்லாம் தாமே பொறுப்பேற்றுக் கொண்டார்.

லிடியாவின் திருமணத்திற்குத் திரு. கார்டினர் ஆறாயிரம் பவுண்ட் செலவு செய்துள்ளார் என்று தெரிய வரும் பொழுது அது தன்னால் திருப்பித் தர முடியாத தொகை என்று அவருக்கு நன்றாகத் தெரிகிறது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அத்தொகையை தான் திருப்பித்தரவே விரும்புகிறேன் என்று அவர் தீர்மானம் எடுத்தார். இப்படி ஒரு சிறந்த பொறுப்புணர்வை அவர் வெளிப்படுத்துவதால்தான் டார்சி தானே முன்வந்து அந்தப் பணத்தை யாரும் திருப்பித் தரவேண்டியதில்லை என்று முன்கூட்டியே அறிவித்துவிடுகிறான். திரு. பென்னட்டிற்கு இப்படியொரு சிறந்த பொறுப்புணர்வு இருப்பது வாழ்க்கைக்குத் தெரிந்திருப்பதால்தான் அது முன்கூட்டியே டார்சியின் வாயால் அப்படியொரு வார்த்தையை வரவழைக்கிறது.

ஒருவருக்கு சிறந்த பொறுப்புணர்வு இருப்பதற்கு அடையாளமே சூழ்நிலை திடீரென்று மாறினாலும், தான் கொடுத்த வாக்கை மீறாமல் இருப்பதுதான். உதாரணமாக ஒரு விவசாய எஸ்டேட்டிற்கு மேனேஜர் பொறுப்பை ஒருவர் ஏற்க வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்த எஸ்டேட்டை நான் லாபகரமாக நடத்திக் காட்டுகிறேன் அது என் பொறுப்பு என்று சொல்கின்ற பட்சத்தில் அதன்பிறகு எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலை வந்தாலும், தான் கொடுத்த வாக்கை மீறாமல் சமாளிப்பதுதான் அவருக்கு அழகு. பொறுப்பேற்ற இரண்டு வருடங்கள் கழித்து, மின்வெட்டு, ஆட்கள் பற்றாக்குறை, பூச்சிகள் தொல்லை, புயல் பாதிப்பு என்றெல்லாம் பிரச்சனைகள் வந்து எஸ்டேட் நஷ்டத்தில் மூழ்கும் பொழுது மேனேஜர் மனம்மாறி இப்படிப்பட்ட சிரமங்களை எல்லாம் நான் எதிர்பார்க்கவே இல்லை. மின்வெட்டால் பம்பு செட்டை இயக்க முடியவில்லை. அதனால் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. புயலால் மரங்கள் எல்லாம் விழுந்து விட்டதால், உற்பத்திக் குறைந்து விட்டது இவையெல்லாம் என் கையை மீறிய விஷயங்கள். என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன் என்பது பொறுப்புணர்வுக்கு அழகில்லை. இதற்கு மாறாக மின்வெட்டு வந்தாலும் பரவாயில்லை. டீசல் ஜெனரேட்டர் வாங்கிக் கொடுத்தீர்கள் என்றால், அதை வைத்துக் கொண்டு தண்ணீர் பாய்ச்சுகிறேன். புயலால் மரங்கள் வீழ்ந்துவிட்டால் என்ன புதிய கன்றுகளை நான் மீண்டும் நடுகிறேன். இரண்டு வருடம் கால அவகாசம் தாருங்கள். எஸ்டேட்டை பழைய நிலைமைக்குக் கொண்டுவந்து காட்டுகிறேன் என்று சொல்பவர்தான் பொறுப்புணர்வு மிகுந்தவர். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வாழ்க்கை சிறந்த ரெஸ்பான்ஸை வழங்கும். இரண்டாம் உலகப்போரின் சமயம் பகவான் தன் ஆன்மீக பலத்தை சர்ச்சில் அவர்களின் மூலம் பயன்படுத்தினார். அப்பொழுது சீடர்கள் இந்தியாவின் எதிரியான சர்ச்சிலை ஏன் பயன்படுத்துகிறீர்கள். ஏதேனும் ஒரு பிரென்சுத் தலைவரை தேர்ந்தெடுத்திருக்கக் கூடாதா என்று கேட்டார்கள். அதற்கவர் “strong character” இல்லாதவர்களால் எனக்குப் பிரயோஜனமில்லை என்று பதிலளித்தார்.

3. அடுத்ததாக தைரியத்திற்கு வருவோம். பகவான் தன்னுடைய ஆன்மீக சிந்தனைகளில் எது மனிதனிடம் இல்லை என்றாலும் தைரியமும், அன்பும் இருந்தால்மட்டும் போதும் மனிதனைக் காப்பாற்றி விடலாம் என்று சொல்லியிருக்கின்றார். வாழ்க்கை பல ஆபத்துகளும், நெருக்கடிகளும் நிறைந்த ஒன்றாகும். இவற்றை எல்லாம் சமாளிக்க முக்கியமாக மனிதனுக்கு தைரியம் வேண்டும். வியாதி வந்தால், பிழைக்க முடியும் என்று தைரியமாக நம்ப வேண்டும். பிஸினஸில் நஷ்டம் வந்தால் அதிலிருந்து மீள முடியும் என்று நம்பிக்கையுடன் நினைக்க வேண்டும். உறவுகள் முறிந்து போனால் அவற்றை மீண்டும் சரிசெய்ய முடியும் என்று நம்ப வேண்டும். இதற்கெல்லாம் நிச்சயமாக தைரியம் மிகவும் தேவைப்படுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில் ஒரு தொழில் நடத்த முன்வருவதே ஒரு தைரியமான செயல்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் எத்தனையோ பேர் தொழில் ஆரம்பித்துவிட்டு ஏனிந்தத் தொழிலை ஆரம்பித்தோம் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தொழிலை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால், பின்வருகின்ற விஷயங்களெல்லாம் சரியாக அமைய வேண்டும். அவையெல்லாம் அப்படி சரியாக அமையும் என்று நம்புவதே ஒரு தைரியமான செயல்பாடுதான். உதாரணமாக ஒரு தொழிலை ஒழுங்காக நடத்த வேண்டுமென்றால், முதலில் வேலைக்கு ஆட்கள் ஒழுங்காக வர வேண்டும். ஆடரை நிறைவேற்றத் தேவைப்படும் மூலப்பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும். ஆட்கள் ஒழுங்காக வேலைக்கு வந்தாலும், அவர்கள் வேலை செய்வதற்குத் தடையில்லாமல் மின்சப்ளை வர வேண்டும். வேலைக்கு ஆட்கள் கிடைத்தால் மட்டும் போதாது. வேலையைத் தரமானதாக செய்யத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சொன்ன தேதியில் ஆடரைதயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். சொன்ன தேதியில் தயார் செய்ய முடியாமல் டெலிவரி நாளைக் கடத்தினால் அந்த ஆடர் கேன்சலாவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் கடன் வாங்கியிருந்தால், கடனுக்குரிய வட்டியை நேரத்தில் கட்ட வேண்டும். உற்பத்தி செய்கின்ற பொருளுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும். கச்சாப் பொருட்களின் விலையெல்லாம் மார்க்கெட்டில் உயராமல் இருக்க வேண்டும் என்றிப்படி எத்தனையோ அம்சங்கள் வியாபாரத்திலிருக்கின்றன. எதுவும் தனிமனிதனின் கட்டுப்பாட்டிலில்லை என்று பார்க்கும் பொழுது, ஒரு தொழிலதிபராகத் தலையெடுக்கிறார் என்றால் அவர் மிகவும் தைரியசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.

இன்றைய சமுதாயத்தில் மக்கள் தைரியமாக செயல்படக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய இருக்கின்றன. பல நடுத்தர குடும்பங்களுக்கு இந்த பிள்ளைகளுடைய கல்லூரிப் படிப்பு சிம்ம சொப்பனமாகத் தெரிகிறது. பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பேமண்ட் சீட் வாங்க வேண்டும் என்றால், பல லட்சங்கள் செலவாகும் என்று சொல்லுகிறார்கள். Ortho Dontics course -இல் Post Graduate level-இல் ஒரு மாணவனுக்கு சீட் கிடைத்துப் படிக்க விரும்பினால், குறைந்தபட்சம் ஒரு கோடிகூட செலவாகும் என்கிறார்கள். இவ்வளவு பெரிய தொகையைக் கட்டுவதற்கு நடுத்தர குடும்பத்துப் பெற்றோர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கிறார்கள். அந்தத் தொகையை எப்படியாவது புரட்டி விடுகிறார்கள் என்பது அவர்களுடைய மனோ தைரியத்தைக் காட்டுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய செலவைச் செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை, ஆகையால் மருத்துவப் படிப்பை எல்லாம் மறந்து விடு என்று பின்வாங்காமல், இதுதான் பிள்ளைக்கு வேண்டும் என்றால் எப்படியாவது சாதித்துக் காட்டுவோம் என்று பெற்றோர் செயல்படுவது அவருடைய தைரியத்தைக் காட்டுகிறது.

இன்றும் காதல் திருமணத்தில் இறங்கும் பெண்களைத் தவறாகப் பேசுபவர் உண்டு. ஆனால், காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களை நான் தைரியசாலி என்றுதான் சொல்லுவேன். பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வேறு ஜாதியில் உள்ள ஆண்மகனைக் கைப்பிடிக்க ஒரு நல்ல துணிவு வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களுக்கு ஒரு நல்ல பெயர் முக்கியம். அந்த நல்ல பெயர் கெட்டு விட்டால் அதை சரிசெய்வது மிகவும் கடினம். ஆண்களைப் பொதுவாக நம்ப முடியாது. சிற்றின்பத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் பழக முன்வருவார்களே தவிர கல்யாணப் பேச்சினை எடுத்தாலே தட்டிக்கழிக்கின்ற ஆண்கள்தாம் அதிகம். இப்படிப்பட்ட நிலையில் ஒரு ஆண்மகனுடன் நெருங்கிப் பழகினால், அது கண்டிப்பாக திருமணத்தில் போய் முடியுமென்று ஒரு பெண் எப்படி தைரியமாக நம்புவது? இரண்டு வருடம் பழகியபின் திருமணப் பேச்சை எடுத்தால், அவன் பேசாமல் ஒதுங்கிக் கொண்டால் அதன்பின் இவளின் நிலை என்னாவது? இவ்வளவு ஆபத்திருந்தும் பல பெண்கள் காதலில் தைரியமாக இறங்கி அதைத் திருமணம் வரையில் கொண்டு செல்கிறார்கள் என்றால், இப்படிப்பட்ட பெண்களை தைரியசாலிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது தைரியம் என்றால் என்னவென்று பார்க்கலாம். உணர்வு மையத்தில் எனர்ஜி அதிகமாக இருந்தால், அது தைரியமாக வெளிப்படுகிறது. அதேசமயத்தில் உணர்வு மையத்தில் எனர்ஜி குறைவாக இருந்தால், அது தைரியமற்ற பயந்த சுபாவமாகக் காட்டுகிறது. தைரியத்திற்கும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் தலைகீழ் தொடர்புண்டு. அதாவது தைரியசாலிக்கு மற்றவர்களை மிரட்டும் பிரச்சனைகள் சிறு பிரச்சனைகளாகவே தெரியும். தைரியம் குறைந்தவர்களுக்கு அதேப்பிரச்சனைகள் சமாளிக்க முடியாத பெரிய பிரச்சனையாகத் தெரியும். ஏழையின் கையில் பணம் குறைவாக இருப்பதால், அவனுக்கு வருகின்ற செலவுகளெல்லாம் பெரிய செலவாகத் தெரிகின்றன. இருபதாயிரம் செலவு செய்து A/c வாங்குவது ஏழைக்குப் பெரிய செலவாகத் தெரிகிறது. ஆனால் அதே இருபதாயிரம் ரூபாய் பணக்காரனுக்குச் செலவேயில்லை. அம்மாதிரிதான் டீணிஞ டிணtஞுணூதிடிஞுதீ என்றாலே பயந்தவர்கள் நடுங்கிப் போவார்கள். ஆனால் தைரியசாலி அதே interview-க்கு எந்தவித நடுக்கமும் இல்லாமல் வழக்கமாக வேலைக்குச் செல்வதுபோல சென்றுவிட்டு வருகிறான். தைரியத்தின் வெளிப்பாடு என்ன என்று நாம் கேட்கலாம். எந்தவித பிரச்சனையாக இருந்தாலும், அதை தன்னால் சமாளிக்க முடியும் என்பது தைரியத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம். அதாவது மற்றவர்களால் முடியாது என்பதைத் தன்னால் செய்ய முடியும் என்ற மனநிலையில் ஒருவர் இருந்தால், அது அவரை தைரியசாலியாகக் காட்டுகிறது. மேலும் பிரச்சனை என்று வரும் பொழுது இதைத் தீர்க்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு வழியும் தெரியாது. ஆனால் பிரச்சனை பெரியதாகத் தெரிந்தாலும் இதற்கும் தீர்வுண்டு என்று தைரியமாக நினைப்பவர்களுக்கு மற்றவர்களுக்குத் தெரியாத வழி இவர்களுக்கும் தெரியும். உதாரணமாக ஆங்கில ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, அதற்குண்டான வழியே தெரியவில்லை. ஆனால் காந்திஜி அவர்களுக்கோ நாட்டை அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க முடியும் என்ற தைரியம் இருந்தது. இந்த தைரியம் இருந்ததால்தான் ஒத்துழையாமைக் கொள்கையைக் கடைபிடித்தால், நாட்டிற்கு விடுதலை வாங்கித் தரலாம் என்ற வழியும் அவருக்குத் தெரிந்தது.

(தொடரும்…)

*******book | by Dr. Radut