Skip to Content

07. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

உயர்திரு. கர்மயோகி அவர்களுக்கு, கோடானுகோடி நன்றியுடன் எழுதிக் கொள்கிறேன்.

என் பெயர் சரவணன். நீண்ட காலமாக மாம்பலம் தியான மையத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகி, மனைவியும் அன்னையை ஏற்றுக்கொண்டாள். எங்களுக்கு ஆறுவருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

எல்லாம் நடக்கிறது, இது மட்டும் ஏன் நடக்கவில்லை என மனைவி கேட்பாள். அன்னை அருள்வார்கள் என்று மட்டும் கூறிவிட்டு அமைதியாக இருப்பதுபோல் காட்டிக்கொள்வேன்.

ஆனால், இப்பொழுது எல்லாம் உங்களுடைய புத்தகங்களை படிப்பதாலும், தியான மைய சொற்பொழிவுகளை அதிகம் கேட்பதாலும் விஷயம் நடக்கவில்லை என்றால் ஏன் நடக்கவில்லை என்பதைவிட, நடக்காததற்கு காரணமான தடை நமக்குள் எங்குள்ளது என்ற மிகப் பெரிய கேள்விதான் எழுகிறது.

அப்படிக் குழந்தை பிறப்பதற்கு எனக்குள் தடையாக இருக்கும் விஷயம் என்ன? எனத் தேடிய போது என்னால் தெளிவுக்கு வரமுடியவில்லை. சரி, இதை அன்னையிடமே பிரார்த்தனையாக வைப்பது என முடிவு செய்து, மதர் எனக்குள் தடையாக இருக்கும் விஷயம் என்ன என்பது தெரியவில்லை.

நீங்கள்தான் காட்டிக் கொடுக்க வேண்டும், நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் என பிரார்த்தனை செய்தேன். மலைபோல பல விஷயங்கள் தொடர்ந்து வந்த போது, இத்தனை விஷயங்களா என மலைத்துப் போனேன்.

எப்படி அத்தனையும் விலக்குவது என யோசித்த போது, சரி இதையும் அன்னையிடமே பிரார்த்தனையாக வைப்பது என

முடிவு செய்து, மதர் என்னால் மாற முடியவில்லை நீங்கள்தான் மாற்றித் தர வேண்டும், உங்கள் அருளை பெறுவதற்கு எனக்குள் தடையாக இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் விலக்கி அருளுங்கள் என தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்தேன்.

இந்த நேரத்தில் டாக்டரிடம் பரிசோதனை செய்தபோது குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு மிகக்குறைவு எனக் கூறினார்கள். கலங்கிப் போனோம்.

மனைவியிடம், டாக்டர் கூறுவது, Test Report எதையும் நம்பாதே, அன்னையை மட்டும் நம்பு என அவளுக்குக் கூறினேன். மனதுக்குள் எனக்கும் நானே கூறிக் கொண்டேன்.

தொடர்ந்து அன்னையிடம் எனக்குள் உங்கள் அருளைப் பெறுவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களை விலக்கி அருள் புரியுங்கள் எனப் பிரார்த்தனை செய்து வந்தேன்.

தொடர்ந்து டாக்டரிடம் சிகிச்சை பெற்று வந்தோம். இந்த வருடம் அன்னை பிறந்தநாள் தின அதிகாலை பிரார்த்தனையில் கலந்து கொண்டேன். பிரார்த்தனை மனதை நிரப்பியதால் மையத்தை விட்டு என்னால் வரமுடியவில்லை. தொடர்ந்து குழந்தை வேண்டி பிரார்த்தனை செய்தேன்.

மாலை தியான மையத்திலிருந்து வரும் போது, மூன்று நாள் பிரார்த்தனை தவறியது இல்லை என எனக்குள் நீங்கள் கூறியது ஒலித்தது.

அப்போது அன்னை அன்பர் ஒருவர் குழந்தை வேண்டி பிரார்த்தனைக்கான நகல் கொடுத்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றார். அன்னையே கொடுத்ததாகவே பெற்றுக்கொண்டேன். தொடர்ந்து பிரார்த்தனையை மூன்று நாட்கள் செய்தேன்.

முடிவில் எனக்குள் அன்னையை அழைக்காமலே கண்கள் திறந்திருக்கும் போதே அன்னை சிரித்த முகம் தெரிந்து கொண்டே இருந்தது. இந்த உணர்வு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

ஒருநாள் என் மனைவி என்னிடம் இப்பொழுது எல்லாம் அன்னை முகம் தெளிவாக எனக்குள் தெரிகிறது, தியான மையத்தின் திருவுருவப்படங்கள் எல்லாம் தெரிகிறது என்று கூறினாள். அன்னைக்கு நன்றி கூறினேன்.

இந்த நேரத்தில் டாக்டரிடம் treatment எடுத்துக் கொண்டதின் Results வந்தது. அதை தியான மையத்தில் அன்னை பாதத்தில் வைத்து வணங்கி பிரித்து பார்த்த போது என் மனைவி கருவுற்றிருந்தாள் என வந்தது.

நன்றி கூற வார்த்தை இல்லை. அன்னையிடம் தொடர்ந்து நன்றி கூறி வந்தேன்.

நேற்று நவம்பர் ஒன்றாம் தேதி எங்களுக்கு அன்னையின் அருளால் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

பிறந்தது அன்னையின் அருளே.

எங்களுக்கு தியான மையம் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற வழி வகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்கள் பொற்பாதத்தில் விழுந்து வணங்குகிறோம்.

 

*********

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
உள்ளே போய், தன்னையிழந்து,
இழந்த நிலையினின்று தெளிவு பெற்று,
பெற்ற நிலை செறிந்து
நிறைந்த நேரம் எழும் சொல்
நமக்குரிய மந்திரம்
 

******



book | by Dr. Radut