Skip to Content

06. வாழ்க்கையை நம் வழிக்கு கொண்டு வரும் இரகசியங்கள்

வாழ்க்கையை நம் வழிக்கு கொண்டு வரும் இரகசியங்கள்

கர்மயோகி

‘வாழ்க்கையை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான மனோபாவங்களும், செயல்பாடுகளும்’

என்ற தலைப்பில் உள்ள 50 கருத்துகளில் சிலவற்றை விளக்கும் கட்டுரையிது.

முன்னுரை: Life Response மனிதனின் தனித்தன்மை, நாம் உருவாக்கிய கருவிகள், தோற்றம், வாழ்வு தரும் சவால்கள், தீர்வில்லாதப் பிரச்சனை, இன்முகம், புதுமுயற்சி, அதிகாரம், இடையறாத முன்னேற்றம், இரகஸ்யம், நேர்த்தியான வேலை, அவசரம், உடனே கிடைக்கும் பலன், உள்ளெழுச்சி, நிகழ்ச்சியில் ஆழ்ந்த உள்ளர்த்தம், அளவோடு தரும் விவரம் போன்ற 50 கருத்துகள் அடங்கிய கட்டுரை அது.

1. வாழ்க்கை தரும் சிரமங்களையும், சவால்களையும் கண்டு மிரளக் கூடாது. தைரியமாக அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். வாழ்க்கை தரும் சவால்களை நாம் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டோம் எனில் பெரிய வெல்ல முடியாத சிரமமாகப்பட்டது நம் கட்டுப்பாட்டிற்குள் வருவதைக் காணலாம்.

நாமறிந்தது நம் சொந்த வாழ்க்கை. சுற்றி உள்ளவர் வாழ்க்கை கண்ணில்படும். மனத்தில் படாது. சவால்கள் மனிதனிடமிருந்து எழும். கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவனை நிறுத்தி அவன் கடிகாரத்தைத் தரும்படி ஒரு போக்கிரி கேட்டது அது போன்றது. வெளிநாட்டுப் பிரயாணத்தில் பாஸ்போர்ட் தொலைவது சந்தர்ப்பம் தரும் சவால். ரிஷிகேசத்தில் தமிழ் மட்டும் தெரியும் பெண் உடனிருந்தவர்களை விட்டுப் பிரிந்து வழி தவறியது ஆபத்தான சவால். முதல் முறை வாழை பயிரிட்டவனுக்கு குலை தள்ளும் தருவாயில் புயல் வரப் போவது இயற்கை தரும் சவால். எந்த இளைஞனை நெடுநாள் காத்திருந்து, பல எதிர்ப்புகளைக் கடந்து உள்ளம் குழைந்து ஊன் உருகி மணந்தாளோ அவன் ‘உன் தகப்பனார் பணத்திற்காக உன்னை மணந்தேன்’ என்பது வெற்று இதயம் அன்பை அபரிமிதமாகக் கருதுபவளுக்குத் தரும் நிரந்தர ஏமாற்றம். சந்தர்ப்பங்களுக்கு பலியாவது சகஜம். தைரியமாக எதிர்கொண்டு நிதானம் மிகுந்த வலிமையால் வெல்பவர்கள் அந்த ஒரு சிரமத்தை மட்டும் கடப்பவர்களில்லை. வாழ்வின் அந்த சிரமம் தரும் அம்சத்தையே வெல்பவர்.

முயற்சிக்குரியவை திறமை தரும். எதிர்பாராத ஏமாற்றம் கிடைத்தற்கரிய ஞானம் தரும். நிதானமிழந்து உடையலாம். பொறுமை இழந்து உள்ளதை இழக்கலாம். ஏதோ ஓர் அளவில் சமாளிக்கலாம். சுமார் 100 ஆண்டிற்குமுன் பருவமழை தவறுவதுண்டு. ஓராண்டு தவறினால் மனிதன் விழித்தெழுந்து உள்ளதைக் கொண்டு பரிமாறிக் கொண்டு சமாளித்து விடுவான். இரண்டாம் ஆண்டும் பருவம் தவறினால் பலர் ஊரை விட்டு வேலைதேடி வெளியேறுவர். 12 ஆண்டுகள் தொடர்ந்தும் பருவம் தவறியபின் ஊரையே காலி செய்து வெளியே போய் பிழைத்து, நிலைமை மாறியபின் திரும்பி வந்து பயிர் செய்த நாட்களுண்டு. அதுபோன்ற ஊர்கள் நெடுநாள் கழித்து நாட்டில் முதன்மை பெற்று, தலைவர்களை உற்பத்தி செய்து, பண்பிற்குறைவிடமாவது வழக்கம்.

சிரமம் வந்தால் நம் குறை அனைவருக்கும் தெரியும். சிரமம் அதிகமானாலும், தொடர்ந்தாலும், நம் சிரமங்களை நாமே உணர முடியும். உணர்ந்த சிரமம் உயர்ந்த திறமையாகும். எவரும் உதவாத நிலையில் தன்னம்பிக்கை வளரும். எவரும் எவர்க்கும் உதவ முடியாத நிலையில் நட்பிற்காகவும், உறவைப் பாராட்டியும், மனிதாபிமானத்திற்கும் தேடிவந்து உதவும் உத்தமருண்டு என்று காண்பது இதயம் என்றுமில்லாத பெருமையடைய உதவும். உதவாக்கரைப் பொருள்கள் உதவும் வகையை அறியும் நேரம் அவை. நம்மைச் சுற்றியுள்ளவரில் நல்லவர் கெட்டவர் பிரிந்து தோன்றும். நல்லவர் செய்யும் கெட்டதும், கெட்டவர் செய்யும் நல்லதும் திருக்குறளின் பெருமையை உணர்த்தும். சோவியத் யூனியனின் ஒரு சிப்பாய் போருக்குப் போய் பல ஆண்டுகள் கழிந்து உயிருடன் திரும்பினான். மனைவி, மக்களிடையே இருந்த மகத்தான பிரியம் வளர்ந்திருப்பதைக் கண்டு மலர்ந்தான். ரஷ்ய மொழியில் பல இலக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டன. அவனுக்குத் தாய்மொழி ரஷ்ய மொழியினின்று வேறுபட்டது. நளவெண்பாவை ரஷ்ய மொழியில் படித்தவன். தமயந்தியைப் போற்றினான். அவன் மனைவியின் பெருமையை தமயந்தியின் அன்பு எடுத்துக்காட்டியது. உள்ளம் உருகி தன் தாய் மொழியில் நளவெண்பாவை மொழி பெயர்த்து பூரணம் பெற்றான். சவால் ஆத்மா பெறும் அரிய வாழ்வின் சந்தர்ப்பம்.

கடத்தல்காரர்களுடைய கப்பல் சிறையிலிருந்து தப்பிய கைதியைக் காப்பாற்றுகிறது. கைதி கப்பலோட்டும் திறன் மிகுந்தவன். அனைவரும் போற்றுகின்றனர். ஒரு தீவில் இறங்கி சமைத்துச் சாப்பிடும் பொழுது கைதியின் கால் சுளுக்கிக் கொள்கிறது. அரை அங்குலம்கூட பிரள முடியவில்லை. அனைவரும் உதவுவது கைதிக்கு வியப்பாக இருக்கிறது. கடத்தல்காரரிடம் கருணையைக் காண்கிறான். கைதி தன் சொந்தக் காரணத்திற்காகவும், சுளுக்கின் வலிக்காகவும் தீவில் தங்க முடிவு செய்கிறான். அனைவரும் அவனை உடன் வரும்படி அழைத்து முடியாத பொழுது, போதுமான உணவு கொடுத்துவிட்டுப் புறப்படுகின்றனர். ஒருவர் அவன் குணமடையும்வரை அவனுடனேயே தங்க முன் வருகிறார். அவர்கள் செய்யும் தொழில் கடத்தல், திருடு. அவன் மனம் இரக்கத்தாலும், உதவி மனப்பான்மையாலும் நெகிழ்வதைக் கண்டு கைதி கண் கலங்குகிறான். உதவியை மறுத்துவிட்டு தான் தேடிப் போகும் புதையலைக் கண்டு எடுத்து மீண்டும் அவர்களை சந்தித்து அனைவருக்கும் தங்கக்காசு பரிசும், உதவ முன்வந்தவனுக்கு ஒரு அழகான படகும் பரிசளிக்கிறான். வாழ்வின் சவாலை ஏற்கும் நேரம் புது உலகம் புறப்பட்டு உலகம் காணாததை அளிக்கிறது. சவாலை எளிய மனிதர் பலர் ஏற்கிறார்கள். இலட்சியவாதிக்கு சவால் எழுந்தால் அவன் சவாலுக்குரிய இலக்கணத்துடன் அதை ஏற்றால், சிரேஷ்ட புருஷன் எனக் கூறும் உத்தமனாக, உயர்ந்த நிலைகளை இயல்பாக எட்டிப் பிடிக்கும் சாதனைக்குரியவனாக, நாட்டிற்குத் தலைமை தாங்கும் தகுதி பெறுபவனாக, கவியாக, இராஜதந்திரியாக, மாறுகிறான். வாழ்வு மனிதனை உயர்த்தும் முறைகளில் சவால் விடுவது ஒன்று.

2. தீர்வு இல்லாத பிரச்சனையில்லை என நமக்குத் தெரிய வேண்டும். மேலும் பெரும்பாலான பிரச்சனைகட்குள்ளே தீர்விருக்கின்றது.

பெண்ணிற்கு வரன் தேடுபவர்கள், இனிமேல்தானா அவன் பிறக்கப் போகிறான் என்பார்கள். பிரச்சனையென ஒன்றிருந்தால், தீர்வு என ஒன்றிருக்கும் என்பது வாழ்க்கைச் சட்டம். தீராத பிரச்சனை என நாம் கேள்விப்படுவது அதைத் தீர்க்கப் பிரியப்படாதவர் கூறுவது. சம்பாதிக்கும் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க விரும்பாத பெற்றோர், வரன் அமையவில்லை என்பார்கள். நிலத்தைப் பயிரிட சோம்பேறியானவர் எனக்குப் பணமில்லை, பயிர் கூடி வரவில்லை, உதவியில்லை என்பார். பரீட்சைக்குப் படிக்கப் பிரியமில்லாத மாணவன் சீட்டாடுவான். பேப்பர் படிப்பான். ஒரு நாளைக்கு 3 சினிமா பார்ப்பான். எனக்கு நேரமில்லை என்பான். கடை நடத்துவது, ஒரு ஸ்தாபனத்தை நிர்வாகம் செய்வது, குடும்பம் செய்வது, வெளிநாட்டுப் பயணம், தேர்தலில் ஜெயிப்பது போன்ற எந்தக் காரியத்திற்கும் உழைப்பு, பொறுப்பு, திறமை, தெம்பு, முயற்சி தேவை. சாதிப்பவர்கள் அனைவரும் அப்படிப்பட்டவர்களே. மாமனார் தொழில் வைத்துக் கொடுத்தால் ஊதாரியான மருமகன் முதலை அழித்துவிட்டு சாக்கு சொல்வது வழக்கம். அவனுடைய பிரச்சனைக்குத் தீர்வில்லை. பெரிய இயக்கங்களைப் பெரியவர்கள் ஏற்படுத்துகிறார்கள். காவிரியில் மேட்டூரில் அணை கட்டியது, பெரும் எதிர்ப்பின் பின்னும் நெய்வேலியை நிர்மாணித்தது, அரசியலில் பதவியை எட்டியது, பல்கலைக்கழகம் சொந்த முயற்சியால் நிறுவுவது, வெளிநாட்டில் தொழில் ஆரம்பிப்பது, போன்றவை சாதனைகள். அமெரிக்காவைக் கண்டுபிடித்து, காட்டை நாடாக்கி, உலகத் தலைமை பெற்றது அரசியல் சாதனை. ஜெர்மனி உலகப் போருக்குப்பின் இரண்டாகப் பிரிந்தது. நான்கு வல்லரசுகளால் ஆளப்பட்டது. ஆனால் இன்று ஐரோப்பாவில் வளம் மிக்க நாடு ஜெர்மனி. பிளவுபட்டது மீண்டும் ஒன்று சேர்ந்து, எழுந்த பிரச்சனைகளைத் தீர்த்து, செல்வம் பெருகியுள்ளது. இந்தியாவிற்கு சுதந்திரம் வந்தது பெரியது. இன்று நாம் காணும் சுபீட்சம் அதைவிடப் பெரியது. முடியாததில்லை. தீர்வில்லாதப் பிரச்சனை இல்லை என்பவர்கள் ஆண்டவனை வாழ்வில் கண்டவர்கள். அவர்கள் எதையும் தீர்ப்பர்.

Y2K ஏற்பட்டவிதம், தீர்க்க முடியாது என உலகம் கைவிட்டது நாமறிவோம். அது தீர்ந்த விதமும் நாம் அறிவோம். எந்த வழியும் தோன்றாத நிலையில் தீர்ப்பது என முடிவு செய்து, எவையெல்லாம் முடியுமோ அவையெல்லாம் செய்து முடித்தால், அது முடிவதற்குள் நாம் தேடும் வழி தென்படும் என்று ஓர் சட்டம். என் கையால் எந்தத் தவறும் செய்ய மாட்டேன் என்பவர் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடிவு செய்தால், அவருக்குப் புரியாததை அடுத்தவர் கூறுவர். முனைந்தால் முடியாததில்லை என்பதை வெற்றி பெற்றவர் அறிவார். அரசியலில் முன்னுக்கு வர வேண்டும், சினிமாவில் கதாநாயகனாக வேண்டும், பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் எனப் படிப்பறிவில்லாத இளைஞர் முடிவு செய்து தலைமைக் காரியாலயம், ஸ்டுடியோ, பணக்காரக் குடும்பத்தில் அழையாத விருந்தினராக ஆண்டுக்கணக்காக தவமிருப்ப-துண்டு. அவர்களில் சிலர் பெரு வெற்றி பெறுவதுமுண்டு. இது விடாமுயற்சி. அறிவுடை முயற்சிக்கு அதிகப் பலனுண்டு. சூட்சும அறிவு தரும் பெரும்பலன் ஏராளம். உடலுழைப்பைப் போல் மனம் இலட்சியமே குறியானால், தேடிப் போகும் சிறிய வெற்றி, பெரிய வெற்றியாக மாறி நாடியும் வரும். கிராமத்துச் சிறுவன் சிறுவயது முதல் பிரதம மந்திரியாக உருக்கமாக உழைத்து, 60-ஆம் ஆண்டில் இலக்கைப் பெற்றான். இலட்சியவாதிகட்கு மட்டும் தீவிரமில்லை. கள்வன், கடத்தல்காரன், இலஞ்சம் வாங்குபவன், எத்தன், புரோக்கர், ஏமாற்றுப் பேர்வழிகட்கும் இக்குறிக்கோள் உண்டு. அவர்களில் சிலர் பெறும் வெற்றி அவர் துறை பெறுவதில்லை, முயற்சி பெறுவது.

இரவு பகலாக ஒரு விஷயத்தை மனம் நாடும் பொழுது அத்துறையில் உள்ள அனுபவம் வாய்ந்த நிபுணர்கட்கும் புரியாதவைப் புரியும். 40 HP பம்ப்பை பிரித்து எடுத்த அனுபவமுள்ள இன்ஜினீயர் ஒரு கட்டத்தில் மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் ஒரு நாள் வேலையை நிறுத்தினார். அவர் மூன்று ஆண்டிற்குமுன் அங்கு வந்து வேலை செய்த பொழுது அவருக்கு உதவியவர் பம்ப்பைப் பிரித்ததை உன்னிப்புடன் கவனித்த சிறுவன் அதை நினைவு வைத்திருத்திருந்தான். அவன் அதைக் கூறிய பொழுது இன்ஜினீயர் ஆச்சரியப்பட்டு வேலையை முடித்தார். ஆண்டவனின் படைப்பு அர்த்தமற்ற சிறிய காரியங்களில் அற்புதமாக வெளிப்படும் என்பது பகவான் கூற்று. நாம் கண்ணிருந்தும் குருடராவோம் என்கிறார் பகவான். வாழ்வுக்கு ஆயிரம் கண்களுண்டு. ஆயிரமாயிரம் சிந்தனைகளுண்டு. அனந்தகோடி திறமைகளுண்டு. நாம் கண்டதையே காண்கிறோம். மனம் விசாலப்படுவதில்லை. அமெரிக்கத் தாயார், 15 வயது பெண் எதையும் செய்ய மறுக்கிறாள். அவளைத் திருத்த முடியவில்லை என ஒரு Psychiatrist மனோதத்துவ டாக்டரிடம் கொண்டு போனார். டாக்டர் பெண்ணை ஊன்றிக் கவனித்தார். குறை மகளிடமில்லை என்பதைக் கண்டு, தாயாரை அறைக்கு வெளியே அழைத்துப் போனார். பெண் டான்ஸ் ஆட ஆரம்பித்தாள். டாக்டர் அவள் மனநிலையை அறிந்து அவளை அவளிஷ்டப்படி விடச் சொன்னார். பிரசித்திப் பெற்ற டான்சராகினாள் பெண். குழந்தைகளைப் புரிந்து கொள்ளாமல் பிரச்சனையைப் பெற்றோர் உற்பத்தி செய்து தீரவில்லை என்பது இது. காமராஜர் முதன் மந்திரியாக இருந்த பொழுது தீராத பிரச்சனைகளான சிறியது பெரியது என 100-க்கு மேற்பட்டவை அவரால் தீர்க்கப்பட்டன. சமீபத்தில் காமராஜ் ஒரு சகாப்தம் என்று வெளிவந்த நூலில் அவை எழுதப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் நிலமில்லாததால் கடலுக்கு அணைகட்டி தேங்கியுள்ள நீரை காற்றாடிகளால் இறைத்துக் கடலில் செலுத்தி நிலத்தை உற்பத்தி செய்து விவசõயம் செய்து உலகில் விவசõயத்தில் முதன்மையான நாடானார்கள். அந்த நாடு முழுவதும் கடலுள்ளிலிருந்து விடுவிக்கப்பட்டதாகும். மனிதன் படிக்கிறான். சந்திர மண்டலம் போகிறான். கார் ஷெட்டில் ஆரம்பித்த கம்பெனி உலகில் மிகப் பெரிய பணக்காரனை உற்பத்தி செய்தது. 500 ஆண்டுகட்குமுன் உலகைச் சுற்றி வந்தான். எவரெஸ்ட் உச்சியை எட்டினான் மனிதன் எனில் எது தீராத பிரச்சனை? தீர்க்கப் பிரியப்படாத பிரச்சனையே தீராதது.

3. அன்னையின் கருத்துப்படிப் பார்த்தால் நாம் வாழ்க்கையை இன்முகத்துடன் வரவேற்றால், வாழ்க்கையும் நம்மை இன்முகத்துடன் வரவேற்கும்.

கண்கள் ஆன்மாவின் வாயில். வாய் வயிற்றை எடுத்துக் கூறும். நெற்றி அறிவின் உறைவிடம். முகம் முழு ஜீவனைப் பிரதிபலிக்கும். முகராசி என்பது வழக்கு. கை செயலைக் குறிப்பதால் கைராசி என்ற வழக்கு ஏற்பட்டது. ஆத்மாவைப்பற்றி எவரும் அதிகமாகப் பேசுவதில்லை. ஆன்மா என்ற சொல்லே காதில் படாது. அன்னைக்குரியது ஆன்மா, அதுவும் வளரும் ஆன்மாவான சைத்தியப் புருஷன். மலர்ந்த முகம் வளரும் ஆன்மாவுக்குரியது. நம் வழக்கிலும், மரபிலும் கருதப்படாதது. அன்னையை அறிந்தவர்கள் நினைவில் கொண்டிருப்பது அவர்களுடைய பரந்த விசõலமான புன்சிரிப்பாகும். 80 வயதுவரை அன்னை தூங்கவில்லை. அவர்களுக்குப் படுக்கையென்று ஒன்றில்லை. 80-க்கு மேல் நாற்காலியிலேயே ஒன்றரை மணிநேரம் தூங்கினார்கள். உடலில் தெம்பு கொப்பளித்துப் பரிமளித்தது. நம்மைச் சுற்றியுள்ள 40 அல்லது 50 அல்லது 100 பேரை நினைவுபடுத்தினால் இயல்பாக சிரித்த முகம் உள்ளவர் ஓரிருவர் இருக்கலாம். இல்லை என்று காண்பவர் பலர். புன்முறுவல், சிரித்த முகம், மலர்ந்த இதயம் என்பவை என்ன என்று நாம் அறிந்தால், அது நமக்குண்டா இல்லையா எனத் தெரியும். மலர்ந்த இதயம் சிரித்த முகமானால் மகத்தான சõதனைகளைப் பெறும். சிறு குழவிப் பருவத்தில் எல்லாருக்கும் உரியது. வளர்ந்த பிறகு தவறாமல் தேய்வது. ஆத்மா தேய்மானமற்றது. எடுக்க எடுக்கக் குறையாத அக்ஷய பாத்திரம் ஆத்மா. பாரதி அந்த அம்சத்தை புண்ணியவாளர் தம் புகழினைப்போல் என வர்ணிக்கிறார். எதை அறிவதால் அனைத்தையும் அறிய முடியுமோ அதற்குப் பிரம்மம் என்று பெயர் என உபநிஷதம் கூறுகிறது. எதைப் பெற்றால் அனைத்தையும் பெற்றதாகும் என இன்முகத்தைக் கூறலாம். சிரிப்பைப் பாகுபாடு செய்தால் ஏராளமான நிலைகளைக் கூறலாம். வலிந்து சிரிப்பது, வழக்கமாகச் சிரிப்பது, கேலியாகச் சிரிப்பது, இனிமையாகப் புன்முறுவல் பூப்பது, இயல்பாக சிரிப்பெழுவது எனப் பல்வேறு வகைகளைக் கூறலாம். இயல்பாக இதயம் இனித்து முகம் மலர்வது இன்முகம். “அன்னைபோல் எவரும் சிரிக்க முடியாது” என்று கூறியவர்கள் ஏராளம். சிரிப்பு மனோதத்துவ செல்வம். மனம் நிறைந்து திரண்டு உருண்டு திண்மை பெற்ற நிலையைக் கூறுவது மலர்ந்த முகம். அந்நிலையில் முகத்தின் எல்லாப் பகுதிகளும் சிரிக்கும். Smiling features என்பார்கள். ஒரு முக்கிய மகாநாடு நடத்தினால் கொஞ்சநாள்வரை அந்த சூழல் அந்த ஸ்தாபனத்திலிருக்கும். மலர்ந்த ஜீவனுள்ளவர் ஓரிடம் வந்தால் அனைவரின் முகமும் பலநாள் மலர்ந்திருக்கும். அவரைப்பற்றிப் பேசினால் மனம் இதமாக இருக்கும். அவர் நினைவு நம்மையறியாமல் புன்முறுவலை வரவழைக்கும். தியானம் பூரண யோகத்திற்குரியது அல்ல. இதற்குரியது சமர்ப்பணம். சமர்ப்பணம் பூரணமான நிலையில் தியானம் உடலெல்லாம் இயல்பாகப் பரவி நிரம்பினால், உடலெல்லாம் புன்முறுவல் எழும். முறுவல் வளர்ச்சி மலர்ச்சியாகும் நேரம் எழுவது. ஜீவன் விரிவடைவதால் நிகழும் நிகழ்ச்சியது. ஜீவன் விரிவடைவதால் அதைச் சந்திக்கும் வாழ்வும் மலரும். பொதுவாக வாழ்வு புரட்சியில் மலரும். புரட்சி நூறாண்டுகளில் எழுவதால் அந்த ஆண்டு நிறைவுகளில் அதன் சுவட்டைக் காண்கிறோம். மனிதனுக்குப் பருவமிருப்பதுபோல் சமூகத்திற்கும் பருவமுண்டு. பருவம் முதிர்ந்த நேரம் சமூகம் முழுவதும் மலர்ச்சியைக் காணலாம். கிராமம் நகரமானால், நகரம் பல்கலைக்கழக நகரமானால், புதிய துறைமுகம் கட்டினால், பெரும் தொழில் நிறுவப்பட்டால், அர்த்தமற்ற தலைவர்களை விலக்கி இலட்சிய புருஷர் பதவிக்கு வந்தால், 100 ரூபாய் நோட்டை சர்க்கார் எடுத்துக் கொண்டு 1000 ரூபாய் நோட்டு கொடுத்ததுபோல் வாழ்வு சுறுசுறுப்புப் பெறும். இளைஞன் புதியதாக சொந்தமாக மோட்டார் பைக் பெற்ற நிறைவை அந்த நேரம் சமூகம் பெற்று அனைவர் முகத்தையும் இன்முகமாக்கும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சிகளே கடந்த 300 ஆண்டுகளாக உலகம் கண்டது. ஒவ்வொரு 10 ஆண்டிலும் சமூகம் புரட்சிக்குரியதாகும் நிலை வளரும் நிலை.

(தொடரும்…)

*******

ஜீவிய மணி
 
ஆபத்து நமக்கில்லை
தொடர்ந்த அரிய வாய்ப்பு நம் பிறப்புரிமை
தீராத பிரச்சனையில்லை. தீர்க்காதவையுண்டு.
வராத வாய்ப்பில்லை. பெறாதவை ஏராளம்
அன்னையை அறிவது பாக்கியம்
பெறுவது பேரருள்.
 

******book | by Dr. Radut