Skip to Content

05. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

15. அன்னையும் அன்பர்களும்

அவர் பாரத ஸ்டேட் பாங்கில் குமாஸ்தாவாகப் பணியாற்றி வரும் ஓர் "அமுதசுரபி" வாசகர்; திருமணமாகாத பெண். அந்தக் குடும்பத்தில் அவர் மூன்றாவதாகப் பிறந்தவர். மூத்தவராக ஓர் அண்ணன்; ஓர் அக்காள்; அவருக்குப் பிறகு அந்தப் பெண்; இவருக்குப் பிறகு ஒரு தங்கை. ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்துக்கு உள்ள எல்லாச் சோதனைகளும், வேதனைகளும் அக்குடும்பத்தில் குறைவில்லாமல் நிறைந்திருந்தன.

கல்யாணத்துக்குத் தயாராக நின்ற மூன்று பெண்களுக்கும் தகுந்த வரன் பார்த்து வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முடியாத அவலம், எந்தப் பெற்றோரைத்தான் வாட்டாது? அவர்களுடைய பெற்றோரையும் அது அதிகமாகவே வாட்டியது. ஆனாலும் வசதியற்ற அவர்களுக்கு பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. மூத்த அண்ணன் அவர்களோடு சுர்ந்து பெருமூச்சாவது விட்டிருக்கலாம். அதற்குக்கூட அவர் தயாராக இல்லை. வீட்டு மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத பிறவி அவர்.

அந்த வாசகரின் அக்காள் ஒரு நர்ஸரிப் பள்ளியில் ஆசிரியை; தங்கை ஏதோ ஒரு நிறுவனத்தில் டைப்பிஸ்ட். தம் சகோதரர் என்ன செய்கிறார் என்று அவர் குறிப்பிடவில்லை.

அவருக்குக் குடும்ப நிலை சாதகமாக இருக்கவில்லை என்பதோடு வேறொரு வேதனையாலும் அவர் பாதிக்கப் பட்டிருந்தார். அவருடைய குழந்தைப் பருவத்தில் ஒரு பொல்லாத விரோதியைப்போல வந்த இளம்பிள்ளைவாதம், அவர் கால்களைச் சிறிதே ஊனப்படுத்தி விட்டுச் சென்றிருந்தது. அவரால் கால்களை அழுத்தி ஊன்றி நடக்க முடியாது; பிறர் உதவியின்றி நீண்ட தூரம் நடக்கவும் முடியாது. இத்தனை போதாது என்று மேலும் சோதனை தொடர்ந்தது. பணி உயர்வுக்காக அவர் ஒரு பரீட்சை எழுதினார். அதில் அவர் தேர்வு பெறவில்லை. மீண்டும் அவர் பரீட்சை எழுதியிருக்கிறார்.

இத்தனை விவரங்களையும் எழுதி இருந்த அந்தப் பெண், "இந்த உலகத்துப் பெண்களுக்கு நடப்பதைப்போல எனக்கும் திருமணம் நடைபெற ஏதேனும் வழி பிறக்குமா? எனக்குப் பரீட்சையில் வெற்றி கிடைக்குமா? எனக்கு அன்னையின் அருள் துணைபுரியுமா?" என்றும் உருக்கத்தோடு கேட்டிருந்தார்.

பொல்லாங்கால் பாதிக்கப்பட்டுப் புகலிடம் தேடி வருபவர்களுக்கு, பொன்மயமான ஒரு புலர் பொழுதை விடியவைப்பவர் அல்லவா அருள்மிகு அன்னை? வாசகரின் கேள்வியை வேள்வியாகச் செய்ய நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

நம்மிடமும், நம் பெற்றோர்களிடமும் உள்ள குறைகள் நம் எதிர்காலமாக அமைகின்றன. நம்முடைய நிகழ் காலத்தில் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும் அந்தக் குறைகளே காரணங்களாகும்.

நம்மை வாட்டும் துன்பங்களை விலக்கவும், எதிர்கால வாழ்வைச் சிறப்பாக வகுக்கவும், அந்தக் குறைகளைக் கண்டுபிடித்து, அவற்றை அடியோடு நீக்கிவிட வேண்டும். சில குறைகளை அறிந்து கொள்ள முடியும்; சில குறைகளை அறிந்து கொள்ள முடியாமலே போகலாம். அதைப்போல் சில குறைகளால் வரும் துன்பங்களை நம்மால் அடையாளம் புரிந்து கொள்ள முடியும். பலவற்றுக்குத் துன்பங்கள் மட்டும்தான் புரியும்; ஆனால் அந்தத் துன்பங்களைத் தூண்டி விட்ட முறைகள் என்ன என்பது புரியா.

குறைகள் எந்த வகையாக இருந்தாலும் அவற்றை நம்மால் அழிக்க முடியாது; மற்றவர்களாலும் அழிக்க முடியாது. அவற்றை அழிக்கும் ஆற்றல் அன்னையின் அருளுக்குத்தான் உண்டு. நம்பிக்கையோடும், பக்தியோடும் அன்னையின் அருளை நாடி, அந்தக் குறைகளை நீக்கும்படி வேண்டிக் கொண்டால், அன்னை அந்தக் கோரிக்கையை உடனே நிறைவேற்றி வைப்பார். அல்லது நம் குறைகளை எல்லாம் அன்னையின் பாதாரவிந்தங்களில் ஒப்படைத்து விட்டால், அவர் அவற்றை இருந்த சுவடு தெரியாமல் போக்கி அருள்வார். நம் நிகழ்காலமும், எதிர்காலமும், மகிழ்ச்சிகரமாக அமையும்; நம்மை அழுத்தி வந்த பளு நீங்கும்; நடக்காது என்று கைவிடப்பட்டவை நடக்கும்; "வாராது" என்று விட்டு விடப்பட்டது தன்னாலேயே வந்து சுரும். நம்மிடம் உள்ள குறைகளை விலக்கிக் கொள்ளும் முயற்சியை தினமும் முறையாகச் செய்து வந்தால், வாழ்க்கையில் ஏற்பட்டச் சிக்கல்கள் விலகி இன்பம் பெருகும்” என்பதுதான் என் கடிதம். அதற்குப் பிறகு சில நாட்கள் சென்றன. அந்தப் பெண்ணிடமிருந்து எனக்கொரு கடிதம் வந்தது. அவர் அதில், "என் வாழ்க்கையில் கணக்கற்ற பிரச்னைகள் இருந்த போதிலும், அன்னையை உளமார ஒரு சில நிமிடங்கள் நினைத்த மாத்திரத்தில் நான் லேசாகி விடுவதையும், என் மனம் அமைதியில் ஆழ்ந்து போவதையும் உணர்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் எழுதிய கடிதத்தில், தாமும் தம் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஸ்ரீ அன்னை தியான மையத்திற்கு வந்திருந்ததாகவும், ஸ்ரீ அரவிந்தர், அன்னையைத் தரிசித்ததாகவும் குறிப்பிட்டிருந்ததோடு, தம் வாழ்வில் அன்னையின் படம் வந்த நாளிலிருந்து பல முக்கியமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளதாகவும், அவற்றை எனக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் எழுதி விட்டு, அவர் வாழ்வில் நடைபெற்ற அந்த புதிய நிகழ்ச்சிகள் பற்றியும் விளக்கி இருந்தார்.

அந்தப் பெண் கால்களை ஊன்றி நடக்க இயலாமல் மிகவும் துன்புற்று வந்தார் என்பதை நான் முன்னமேயே குறிப்பிட்டிருக்கிறேன். ஒரு மருத்துவமனையில் அந்தக் கால்களுக்கு வைத்தியம் செய்து கொண்ட வகையில் ரூபாய் 3000 செலவாயிற்று. அந்தத் தொகையை அவருடைய வங்கியிலிருந்து பெற்றுக் கொள்வதற்கான ஒரு சலுகை அமலில் இருந்தது. ஆனால் அந்தத் தொகையைச் சென்னையில் உள்ள பொது மேலாளரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அடைய முடியும்.

அந்த ஒப்புதலைப் பெறுவதற்கான மனுவை 30-03-83-க்குள் அனுப்பிவிட வேண்டும். ஆதலால் அந்த மனுவை 20ஆம் தேதியே எழுதி, அதைச் சென்னைக்கு அனுப்ப வேண்டிய ஏற்பாட்டைச் செய்து தபால் பிரிவில் கொடுத்துவிட்டு, அந்தப் பெண் நீண்ட விடுப்பில் சென்று விட்டார்.

அவர் அக்டோபர் மாதம் விடுப்பு முடிந்து வேலைக்கு வந்தார். தம்முடைய ஆசனத்திற்குச் சென்று அவர் அமர்ந்த பொழுது, சென்னைக்குப் போயிருக்க வேண்டிய தம்முடைய மனு தம் மேஜையின் மீது வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தார். தபால் பிரிவில் சுர்க்கப்பட்ட அந்த மனு எப்படியோ அவர் மேஜைக்குத் திரும்பி விட்டிருந்தது. ஏன்? எதனால்? அவருக்குப் புரியவில்லை.

உடனே அவர் ஒரு கடிதத்தை எழுதி நடந்ததைக் குறிப்பிட்டு அந்த மனுவை ஏற்று ஒப்புதல் அளிக்க வேண்டும் எனக் கேட்டு, பொது மேலாளர் அலுவலகத்துக்கு அதை அனுப்பி வைத்தார். "காலம் கடந்து அனுப்பப்படும் அந்த மனுவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என்றாலும் ஒரு கடைசி முயற்சியைச் செய்து பார்க்கலாமே?" என்ற எண்ணத்தில்தான் அவ்வாறு செய்தார். மேலும் அவர் நம்பிக்கையை அடியோடு குலைக்கும் வண்ணம், அவர் கோரிய தொகை மிக அதிகம் என்றும், அதனால் அந்தத் தொகை அவருக்குக் கிடைக்காது என்றும் சென்னையில் உள்ள சிலர் மூலம் செய்தி கிடைத்தது.

அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அந்தப் பெண் வீட்டுக்குச் சென்று அன்னையை நினைத்து, "எனக்கு வந்துள்ள சோதனைகளைப் பார்த்தீர்களா?" என்று கதறி அழுதார். அதற்குப் பிறகு அவர் ஒவ்வொரு நாளும் அலுவலகத்திலிருந்து திரும்பியவுடன் அந்தச் சிக்கலை அன்னையிடம் சமர்ப்பித்து விட்டுக் கண்ணீர் சொரிவார்.

இந்த இடத்தில் - — அவர் இதற்கு முன்னால் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றைப் பற்றி நான் சொல்லியாக வேண்டும். "வணங்குவதற்கு அன்னையின் திருவுருவப்படம் ஒன்று வேண்டும்" என்று அவர் கடிதத்தில் கோரியிருந்தார். நான் உடனே அன்னையின் படம் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்தேன். அந்தப் படம் அவருக்குக் கிடைத்த தேதி: 27-11-83. அன்று மாலையே அவர் அதற்குச் சட்டம் போட்டு வீட்டில் மாட்டிவிட்டார். அன்னையின் அந்தப் படத்தின் எதிரே அமர்ந்துதான், நான் மேலே குறிப்பிட்டிருந்தபடி, பிரார்த்தனை செய்து வந்தார் அவர்.

ஒரு வாரம் சென்றது. எதிர்பாராதவிதமாக அவருக்குத் தபாலில் ஒரு செக் வந்திருந்தது. அதில் அவர் வைத்தியச் செலவுக்காகக் கேட்டிருந்த ரூபாய் மூவாயிரத்தையும் சென்னை அலுவலகம் அனுப்பி வைத்திருந்தது.

காலம் கடந்து அனுப்பிய மனுவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்? கோரிய தொகை வரம்பை மீறியிருந்தாலும், அதைக் குறைக்காமல் எப்படி வழங்கினார்கள்? சாத்தியமே இல்லாத ஒரு பிரச்சனை எப்படிச் சாதனையாக மாறியது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்: அன்னையின் அருள்!

அந்தப் பெண் இப்படித்தான் உள்ளம் உருகி எனக்கு எழுதியிருந்தார்.

அந்தப் பெண் பணிபுரியும் வங்கியிலேயே பணிபுரிந்து வருபவர் இன்னொரு பெண்மணி, அவர் திருமணமானவர். அவருடைய கணவருக்கு மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வேலை. அந்தப் பெண்மணியின் பிறந்த வீட்டுக்காரர்களால் அவருக்கும், அவர் கணவருக்கும் மனத் தாங்கல். அதனால் தினசரி சண்டை சச்சரவு, அடி-உதை, குடும்பமே குழப்பமாகவும், கூச்சலாகவும் நிர்த்தூளிப்பட்டது.

அந்தப் பெண்மணி இந்தச் சோகக் கதையை அன்னையின் அன்பராகிய தோழியிடம் கூறி வருந்தினார்.

அதைக் கவனமாகக் கேட்ட அந்த அன்பர் அன்னையைப் பற்றியும், அன்னையிடம் செய்து கொள்ளும் பிரார்த்தனையால் ஏற்படும் நற்பலன்கள் பற்றியும் துன்பத்தில் வாடும் தன் தோழிக்கு எடுத்துரைத்தார். தம் பிரச்சனை தீர வேண்டும் என வேண்டிக்கொண்டு அன்னைக்கு ஒரு சிறு காணிக்கையை அனுப்பி வைக்குமாறு ஆலோசனை கூறி, தம்மிடம் இருந்த அன்னையின் பிரசாதத்தையும் அவருக்கு அளித்தார்.

ஆறு வாரங்கள் சென்றன. ஒரு நாள் அந்தப் பெண்மணி தம் தோழியிடம், தம் வீட்டுப் பிரச்னை நல்ல முறையில் தீர்ந்து விட்டதாகவும், தாமும் தம் கணவரும் சுமுகமாக இருப்பதாகவும் கூறினார்.

அதைக் கேட்ட அன்னையின் அன்பருக்குப் பெரு வியப்பு. "அன்னையின் அருள் கணவன் மனைவி சிக்கலை இத்தனை விரைவாகத் தீர்த்து விட்டதே!" என்று மகிழ்ந்தார். அது பற்றி எனக்கும் எழுதினார்.

அன்னையின் அருள் மின்சாரத்தைப் போன்று விரைந்து செயல்பட வல்லது. "பிரார்த்தனை என்னும் ஸ்விட்சைப் போட்டதும் அன்னையின் அருளொளி அக்கணமே பரவிப் படர்கிறது".

அதே பெண்ணின் தங்கை கரூரில் உள்ள P&T அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். அந்த வேலைக்காகத் தம் குடும்பத்தை விட்டு அங்கு போய்த் தனியாக வசித்து வந்தார் அவர். தனிமையும், பெண்மையும் தொல்லை தரக் கூடியவை. அவருக்கும் அந்த மாதிரியான தொல்லைகள். அவர் அந்தத் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி, சொந்த ஊருக்கு மாற்றலாகிப் போவதுதான். அவர் அதற்கு முயன்று பார்த்தார். மாற்றல் அத்தனை சுலபமாகக் கிடைக்கும்போல் தெரியவில்லை. அதனால் மனம் நொந்துபோன அவர், தம் அக்காளிடம் வேலையை விட்டுவிடப் போவதாகக் கூறினார். வேலை கிடைப்பது அரிதாக உள்ள இந்த நாளில், தம் தங்கை வேலையைக் "கை கழுவி" விடுவது அக்காளுக்குக் கொஞ்சம்கூட உடன்பாடாக இல்லை. "கரூரிலிருந்து சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்க வேண்டும் என்று அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கொள்" என்று கூறி அன்னையின் அருளால் தம் வாழ்வில் கிடைத்த நன்மைகளை விவரித்து, தங்கையிடமிருந்து ஒரு சிறு தொகையைக் காணிக்கையாகப் பெற்று அனுப்பி வைத்தார் அவர்.

அதற்குப் பிறகு மிக விரைவில் மற்றவர் அதிசயிக்கும் வண்ணம் அவருடைய தங்கைக்கு மாற்றல் கிடைத்தது. இப்போது அக்காளும், தங்கையும் சொந்த ஊரிலேயே வேலைப் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

பம்பாயைச் சுர்ந்தவர் அந்த "அமுதசுரபி" வாசகர். அன்னையின் மகிமையைப்பற்றி தாங்கள் எழுதி வரும் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருத்தி. அதற்கு முன் அன்னையைப் பற்றி ஏதும் அறியாதவள் நான். அன்னையின் அருளால் பலருடைய சங்கடங்கள் தீர்ந்து நன்மைகள் பெருகுவதைப்பற்றித் தங்களின் கட்டுரைகள் மூலம் அறிந்த நான், என்னுடைய வாழ்க்கையிலும் பிடித்திருக்கிற கஷ்டங்கள் நீங்கி நன்மைகளைப் பெற வேண்டும் என்ற உந்துதலோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று தொடங்கி, எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார் அவர். அதை ஏப்ரல் 83இல் எழுதியிருந்தார்.

அந்த வாசகர் தம் கடிதத்தில் இரண்டு முக்கியமான பிரச்சனைகளைப்பற்றி எழுதியிருந்தார். 1. அவருக்கு வசதியான இடத்தில் திருமணமாகி இருந்தாலும், அவருடைய பெற்றோர் வறுமையால் வாடிக் கொண்டிருப்பது அவருக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவரின் தந்தைக்கு ஒரு நிரந்தரமான வேலை கிடைத்தால் பிறந்த வீட்டில் ஓரளவு வறுமையின் பிடி குறையும். 2. புகுந்த வீட்டில் இவருக்கு ஓர் "இமேஜ்" கிடைத்தாக வேண்டும். அது அவர் வேலை பார்த்துச் சம்பாதிக்கத் தொடங்கினால் மட்டுமே கிடைக்கும். அவர் சம்பாதித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் அந்தக் குடும்பமும் இல்லை என்றாலும், அவர் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், அவரை மனது நோக நடத்தும் மாமியாரும் மற்றவர்களும் மதிப்பதற்கு, அவர் எதிர் நோக்கும் வேலை மிகவும் உதவும். அதற்காகப் பரீட்சை எழுதினார். பாஸாகவில்லை. மீண்டும் பரீட்சை எழுதவேண்டும்.

பிறகு அதில் பாஸாக வேண்டும். தந்தைக்கு ஒரு வேலை வேண்டும். அவருடைய மொத்த பிரச்சனைகளுக்கும் விதைகள் இவை தாம்.

"அன்னையிடம் உண்மையான நம்பிக்கையும், பக்தியும் கொண்டு நம்முடைய மனக்குறைகளை எடுத்துக் கூறி, அவற்றை விலக்கி அருள வேண்டும் என்று தினமும் கேட்டுக் கொண்டால், அன்னை அவற்றை விலக்கி நல்ல வழியைக் காட்டுவார். "உண்மையான நம்பிக்கை" என்பது, "அன்னையின் அருள்" எத்தகைய துன்பங்களையும் விலக்கும். கேட்டவற்றை வரையில்லாது வழங்கும்" என்று நம்புவது. உண்மையான பக்தி என்பது, நம்மையும், நம் அறிவையும், நம் சக்தியையும் சாராது, அன்னையையும், அன்னையின் அருளையும், அன்னையின் சக்தியையும் சார்ந்திருப்பது. உங்களுடைய கோரிக்கைகளை அன்னை பூர்த்தி செய்ய வேண்டுமானால், மேற்கூறியபடி அன்னையை வணங்க வேண்டும்" என்று நான் விளக்கமாக அவருக்குப் பதில் எழுதினேன்.

நவம்பர் 83இல் அவர் எனக்கு மீண்டும் கடிதம் எழுதி இருந்தார். தம்முடைய இரண்டு கோரிக்கைகளையும் அன்னை பூர்த்தி செய்து விட்டார் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கடிதத்தில் இவர் இப்படி எழுதி இருந்தார். "அன்னையின் அருளால் கடந்த ஜூலை மாதம் பி.எட்., தேர்வு எழுதக் கல்லூரியிலிருந்து விண்ணப்பத்தாள் வந்தது. நான் அன்னையை வேண்டிக் கொண்டு அதை அனுப்பி வைத்தேன். பிறகு தேர்வு எழுதினேன். பத்து நாள்களுக்கு முன்னால் நான் தேர்வில் வெற்றி பெற்ற செய்தி கிடைத்தது".

"அந்தச் செய்தியைக் கேட்டதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி எனக்கு வேலை காத்திருக்கிறது. இதுவரை நிலையாக ஒரு வேலை இல்லாமல் இருந்து வந்த என் தந்தைக்கும் தற்போது நிலையான வேலை கிடைத்துள்ளது. அதன் மூலம் என் தாய்க்கும், தந்தைக்கும் இரண்டு வேளைகளாவது உண்ணும் அளவுக்கு ஊதியம் கிடைக்கும். அன்னையின் அருள் என் பெற்றோரின் வாழ்க்கையில் மேலும் மேலும் நன்மைகள் பெருகவும், அவர்கள் இருவரும் இங்கு வந்து சுரவும் துணை புரியவேண்டும் என்பதே என் பிரார்த்தனை".

ஆழமான பிரார்த்தனைக்கு அன்னையின் அருள் பூரணமாகக் கிடைப்பது உறுதி.

 

******book | by Dr. Radut