Skip to Content

09. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அன்னையே சரணம்!

ஸ்ரீ அன்னை, பகவான், தவத்திரு கர்மயோகி பாதாரவிந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்.

நான் கும்பகோணத்தில் வசிக்கிறேன். என் சகோதரி 2000ஆம் ஆண்டில் ஸ்ரீ அன்னை அரவிந்தர் அவர்களின் பாதாரவிந்தங்களைச் சரணடைந்ததால் அவர்களுக்குக் கிடைத்த அற்புதமான அருளைப் பற்றி எனக்கு எடுத்துரைத்தார்கள். அதன் பிறகு நானும் ஸ்ரீ அன்னை அவர்களை வணங்க ஆரம்பித்தேன்.

கும்பகோணத்தில் உள்ள தியானமையத்திற்குச் சென்று ஸ்ரீ அன்னையைப் பற்றி அறிந்து அவர்களின் வழியில் செல்ல ஆரம்பித்தேன். 2000ஆம் ஆண்டில் நான் கடன் தொல்லையினால் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள். என் கணவர் என் திருமணத்திலிருந்தே என்னுடன் சுமுகமான உறவு முறையில் இல்லை. ஏனெனில் என் மாமியாரின் வற்புறுத்தலால்தான் என்னை மணந்து கொண்டாராம். அதனால் அன்றிலிருந்து இன்றுவரையிலும் என்னுடனோ, என் பிள்ளைகளுடனோ நன்கு பேசவோ, குடும்பத்தில் எந்த ஒட்டுதலோ இல்லாமல்தான் இருக்கிறார்கள். என் மாமியார் மட்டும்தான் என்னை பெண் பார்க்க வந்து என் அப்பாவிடம் பேசி முடித்தார்கள். நான் திருச்சியில் பிறந்தேன். கும்பகோணத்தில் வாழ்க்கைப்பட்டேன்.

1979இல் எனக்கு திருமணம் நடந்தது. அன்னையை வந்தடைவது வரை நான் என் குடும்பத்தை நடத்த மிகவும் கஷ்டப்பட்டேன். நான் தையல் வேலை செய்து, வீட்டு வேலைகள் செய்து என் பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். என் மகள் சுமாராகத்தான் படிப்பாள். அவளை +2 வரை படிக்க வைத்தேன். மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சிபெற்றாள். அதனால் மேலும் தையல் பயிற்சி இரண்டு வருடப் படிப்பு படிக்க வைத்து lower, higher பாஸ் செய்தாள்.

என் பையன் நன்றாக படிப்பான். சிறு வயதிலேயே 3ஆம் வகுப்பு படிக்கும்போதே ஹிந்தி வகுப்பு சென்று படித்து, ஹிந்தி பரிட்சை எழுத ஆரம்பித்தான். 9ஆம் வகுப்பு படிக்கும்போது ஹிந்தியில் பிரவீன் பரிட்சை வரை எழுதி ஹிந்தி படிப்பை முழுவதுமாக முடித்தான். 10வது பரிட்சையில் 442 மார்க்கும், +2 தேர்வில் 1042 மார்க்கும் எடுத்தான். டியூசன் எதுவும் இல்லாமல் என் கவனிப்பும் இல்லாமல் தானாகவே படித்து கொண்டான். நான் பாவாடை, நைட்டி தைக்கும் ஒரு ரெடிமேட் கம்பெனியில் கட்டிங் மாஸ்டராக வேலை பார்த்தேன். ஒரு பாவாடை வெட்டினால் 30 பைசா கூலி. அதனால் காலை 7 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 10 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவேன். எத்தனை பாவாடை வெட்டுகிறேனோ அதற்கு தகுந்தாற்போல்தான் கூலி கிடைக்கும். அதனால் காலையிலேயே சமையல் செய்துவிட்டு போனால் இரவுதான் வீட்டிற்கு வருவேன். பிள்ளைகளை கவனிக்கவோ, அவர்களுக்குப் பாடம் சொல்லி கொடுக்கவோ கூட நேரமிருக்காது. நானும் 1975இல் S.S.L.C. (XI) தேர்ச்சி பெற்றிருக்கிறேன். 600க்கு 480 மார்க் வாங்கி தேர்ச்சி பெற்றேன். 2004ஆம் ஆண்டு என் கணவர் வழி உறவிலேயே என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். அவள் திருமணத்திற்குகூட மாப்பிள்ளை வீட்டாரின் வற்புறுத்தலில்தான் என் கணவர் திருமணத்தில் ஏதோ ஒரு உறவினர் போல வந்து கலந்துகொண்டார். 2005ஆம் ஆண்டு அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தாள். 2007ஆம் ஆண்டு அவளுக்கு (என் மகளுக்கு) உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. முதலில் சாதாரண காய்ச்சலாகத்தான் இருந்தது. 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் காய்ச்சலாக படுத்தவள் ஆறு மாத காலமாக படுத்த படுக்கை ஆகிவிட்டாள். பல ஆஸ்பத்திரிகளில் காண்பித்தும், பல டாக்டர்கள் அவளைப் பரிசோதித்து பார்த்தும் அவளுக்கு என்ன வியாதி என்று டாக்டர்களால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 24 வயது பெண் வெறும் 22 கிலோ எடைதான் இருந்தாள். தலைமுடியெல்லாம் கொட்டி வழுக்கைத் தலையாக முகமெல்லாம் வீங்கி பார்க்கவே மிகவும் விகாரமாக இருந்தாள். கடைசியில் மூளை புற்றுநோய் என்று சொல்லி பாண்டிச்சேரிக்குக் கொண்டுபோகச் சொன்னார்கள். ஒவ்வொரு நொடியும் அன்னையிடம் கெஞ்சி அழுதேன். என் மகளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் இந்தக் குழந்தையை எப்படி வளர்ப்பேன் என்று அழுது புலம்பினேன். என் பையன் அப்பொழுது M.Sc. Bio-Chemistry இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தான். என் மகளுக்கு மூளை ஆபரேஷன் செய்ய 1 லட்சம் ரூபாய் ஆகும் என்று சொன்னார்கள்.

ஏற்கனவே நான் 2½ லட்சம் ரூபாய் கடனுக்காக என் இளைய சகோதரியிடம் வீட்டின் ஒரு பகுதியை விற்றுவிட்டேன். அதன் பிறகும் இவளுடைய வைத்தியத்திற்கு 1 லட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கூட கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.

திடீரென்று என் பையன் அவளிடமிருந்து ரத்தம் எடுத்து கொண்டுபோய் தானே Labக்கு சென்று blood test செய்துவிட்டு, இது மூளை புற்றுநோய் கிடையாது. Bloodல் வெள்ளையணுக்கள் மிக மிக குறைவாக உள்ளதால் எதிர்ப்பு சக்தி இல்லாததால் இப்படி இருக்கிறது. நான் net மூலமாக இதற்கு எந்த டாக்டரிடம் எந்த ஆஸ்பத்திரியில் காண்பிக்கலாம் என்று Browsing Centreல் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே சென்றான். 1 மணி நேரத்திற்குள் இந்த வியாதியின் பெயர் S.L.E. நோய் என்பதாம். இந்த வியாதிக்கு treatmentக்கு சென்னை அடையாறில் மலர் ஆஸ்பத்திரியில் Dr.கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் காண்பிக்கலாம் என்று சொன்னான்.

2006 டிசம்பர் 31ம் தேதி அன்று என் மகனும் என் மூத்த சகோதரி அவர்களும் என் மகளை அழைத்து கொண்டு சென்னை சென்றார்கள். 2007 ஜனவரி 1ஆம் தேதி சென்னையில் ஆஸ்பத்திரியில் இருந்து எல்லா வகை பரிசோதனையும் செய்த பிறகு என் மகன் சொன்னது போலவே அந்த டாக்டரும் இவளுக்கு வந்திருப்பது மிகவும் கொடூரமான வியாதி, தொடர்ந்து கவனமாக சிகிச்சை எடுத்து கொண்டால் பிழைக்க வைத்துவிடலாம் என்று சொன்னார்களாம். அவளை உயிர் பிழைக்க வைத்த ஸ்ரீ அன்னைக்கு அநேக கோடி நன்றி சொன்னேன்.

இப்பொழுது ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரை சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்பொழுது அவள் குழந்தைக்கு நல்ல தாயாகவும் குடும்பத்திலும் எல்லோரும் சந்தோஷப்படும்படியாக நன்றாக இருக்கிறாள்.

நம் ஸ்ரீ அன்னை அந்த நொடியில் என் பையனுக்கு அந்த அளவுக்கு அறிவை கொடுத்து ஆப்ரேஷனிலிருந்து அவளை விடுவித்து உயிர்பிச்சை கொடுத்தார்கள். இதற்காக இன்று நாங்கள் அனைவரும் ஸ்ரீ அன்னைக்கு ஒவ்வொரு நொடியும் நன்றி சொல்கிறோம். அவளுடைய குழந்தை நல்ல புத்திசாலியாக இருக்கிறாள். அவளுடைய மாமியாரும் என் மகளை தன் மகள் போல அன்பாக வைத்துக் கொள்கிறார்கள். அவள் குடும்பத்தார் அனைவரும் அவளிடம் அன்பாக இருக்கிறார்கள். அவளுக்கு இவ்வளவு சந்தோஷமான குடும்பச் சூழ்நிலையை அமைத்துக் கொடுத்த ஸ்ரீ பகவான் ஸ்ரீ அன்னை அவர்களுக்குக் கோடானு கோடி நன்றியுடன் நமஸ்கரிக்கிறேன்.

மேலும் இந்த இக்கட்டான வறுமையான சூழ்நிலையிலும் என் மகன் நன்றாகப் படிக்கிறான். B.Sc., M.Sc. Bio-Chemistry Major எடுத்து சாஸ்திரா Universityயில் 2008ல் M.Sc. முடித்தான். அடுத்து வேலைக்காக அலைந்தான். வேலையே கிடைக்கவில்லை. சாஸ்திரா யுனிவர்சிடியிலேயே Ph.D. படிப்பதற்காக stipend கிடைக்கும் என்று நம்பி ஒரு கைடிடம் இரண்டு வருடங்கள் Labல் Ph.D. படித்து வந்தான். ஆனால் Registerஆகவும் இல்லை, stipendம் கிடைக்கவில்லை. Payment Scholarஆக இருந்தால் Register செய்கிறேன் என்று சொல்லிவிட்டார்கள். எனக்கோ கடன் கொடுத்தவர்களிடம் வட்டிக்கு வாங்கி வட்டி கொடுக்கும் சூழ்நிலை. இவன் வேலைக்கும் போகாமல், படிக்கவும் முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல அலைந்தான். அவனைப் பார்க்கவே எனக்கு வேதனையாக இருந்தது. அறிவும் திறமையும் இருந்தும் அவன் இப்படிக் கஷ்டப்படுகிறானே என்று மிகவும் கவலையாக இருந்தேன். தினமும் தியானமையத்திற்குச் சென்று அன்னையிடம் முறையிட்டு அழுதேன். 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருச்சி பாரதிதாசன் யுனிவர்சிட்டியில் Ph.D.க்கு Bio-Medical Science Departmentஇல் இடம் கிடைத்தது. மாதம் 3000 ரூபாய் stipend கொடுப்பதாக சொல்லி Register செய்து சேர்ந்தான்.

இவனுக்குக் கைடும் மிகவும் நல்ல மனித நேயமுள்ளவராக கிடைத்தார். இதுவும் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் அருளாசிதான் என ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தருக்கு நன்றி கூறினேன்.

2011 நவம்பர் மாதம் லக்னோவில் இன்டர்நேஷனல் Scientist Conference நடந்தது. என் பையனுடைய கைடு இவனை மிகவும் ஊக்கப்படுத்தி இந்த Conferenceல் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஒரு வாரம் நடந்த Conferenceல் என் பையன் செய்து கொண்டிருக்கும் Projectஐ Paper Presentation செய்ய அனுமதித்தார்கள். அதில் என் பையன் செய்த Projectஐ First and Best Project என்று First Prize கொடுத்து Indian Scientist Councilல் Membership ஆக்கி Certificate கொடுத்திருக்கிறார்கள்.

மேலும் இதற்காக 2012 March 26, 27, 28 ஆகிய மூன்று நாட்களும் ஆஸ்திரேலியா அரசாங்கம் என் பையனுக்கு Award கொடுப்பதற்காக அவர்கள் செலவிலேயே என் பையனை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து இருந்தார்கள். என் பையனை இந்த அளவுக்கு உயர்த்திய ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் பாதங்களை என் கண்ணீரால் கழுவி என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

இதற்கிடையில் என் பையனுக்கு வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் இல்லை. பாஸ்போர்ட்டுக்கு Application கொடுத்திருந்தான். Referenceக்காக என் பக்கத்து வீட்டு பெண்ணின் மொபைல் நம்பர் அவனுக்கு தெரிந்திருந்ததால் அவர்களுடைய சம்மதத்துடன் அவர்களுடைய ரேஷன்கார்டு செராக்ஸையும் மொபைல் நம்பரையும் கொடுத்திருந்தோம். Police விசாரணைக்கு வரும்போது என் பக்கத்து வீட்டுப் பெண்ணை போலீஸ் ஸ்டேஷனில் நேரில் வந்து கையெழுத்து போடச் சொன்னார்கள்.

அந்தப் பெண் நான் போலீஸ் ஸ்டேஷனில் வந்து கையெழுத்து போடமாட்டேன். என் வீட்டில் இதை ஒத்துகொள்ளமாட்டார்கள். போலீஸ்காரர் இங்கு வந்து உங்களை பற்றி விசாரித்தால் இந்தப் பையன் நல்லவன் என்று சொல்வேனே தவிர கையெழுத்து போடமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆஸ்திரேலியாவிலிருந்து என் பையனுக்கு வரச் சொல்லி ஆர்டர் வந்து இந்தப் பெண்ணிடம் இந்த ஆர்டரையும் காண்பித்து எவ்வளவோ கெஞ்சியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். போலீஸ்காரரோ அந்த பெண் வந்து இங்கு கையெழுத்து போடாவிட்டால் நான் இந்த பாஸ்போர்ட் அப்ளிகேஷனை கேன்சல் செய்துவிடுவேன் என்று சொல்லிவிட்டார். சரி, இப்பொழுது கொடுத்துள்ள அப்ளிகேஷனை கேன்சல் செய்துவிட்டால் தத்கலில் மறுபடியும் விண்ணப்பித்தால் ஒரு மாதத்திற்குள் வாங்கிவிடலாம். Referenceக்கு வேறு யாரையாவது ஆண்களிடம் கேட்டு கையெழுத்து போடச் சொல்லலாம் என்றால், இந்த விண்ணப்பத்தைப் போலீஸ் ஸ்டேஷனில் கேன்சல் செய்யவும் மிகவும் நாளைக் கடத்தி கொண்டிருக்கிறார்கள்.

  திருச்சியில் சென்று புதிதாக தத்கலில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால், பழைய விண்ணப்பத்தைக் கும்பகோணம், மற்றும் தஞ்சாவூரில் கேன்சல் செய்து, அந்தப் பழைய விண்ணப்பம் திருச்சிக்கு வந்தால்தான் புதிதாக விண்ணப்பிக்க முடியும் என்று மிகவும் கடுமையாக சொல்லிவிட்டார்கள். 2012 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் இதற்காக திருச்சிக்கும், தஞ்சாவூருக்கும், கும்பகோணத்திற்குமாக தினமும் காலேஜில் லீவு போட்டுவிட்டு மிகவும் அலைந்தான். அதற்கான அதிகாரிகளோ மிகவும் அலட்சியமாக பதில் கூறி திருப்பி அனுப்பினார்கள். ஒரு மாதமாகியும் யாரும் எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.

நான் கும்பகோணத்தில் உள்ள தியானமையத்திற்குச் சென்று மிகவும் அழுதேன், புலம்பினேன். வீட்டிலும் அன்னையின் படம் முன் உட்கார்ந்து நம் தாயிடம் பேசுவது போல மிகவும் அழுது மன்றாடினேன்.

மார்ச் 6ஆம் தேதி அன்று திருச்சியில் ஒரு ஹோட்டலில் Scientist Conference நடக்க இருந்தது. அந்த functionக்கான முழு organisationம் என் மகன் பொறுப்பில் இவனுடைய கைடு விட்டுவிட்டாராம். மார்ச் 6ஆம் தேதி நடந்த functionல் Chief Guestஆக வந்திருந்தவர் திருச்சி Passport Officerதான். இந்த விபரம் என் பையனுக்குத் தெரியவில்லை. இந்த functionல் வரவேற்புரையிலிருந்து, விருந்து உபசரிப்பிலிருந்து, நன்றியுரை வரை இவன் நின்று செய்ததைக் கவனித்த அந்த Officer இவனை தானாகவே கூப்பிட்டு இங்கு என்ன படிக்கிறாய் என்று கேட்டாராம். அப்பொழுது இவன் தன் படிப்பு விபரத்தைப் பற்றியும், இன்று தான் பாஸ்போர்ட்டுக்காக அலைந்து கொண்டிருப்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறான்.

அப்பொழுது அந்த ஆபீசர் படிப்பு விஷயமாகப் போகும் உங்களுக்குப் போலீஸ் விசாரணை தேவையில்லை. என்னுடைய பொறுப்பில் உங்களுக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து தருகிறேன்.

நீங்கள் இன்று மாலை 6 மணிக்குத் திருச்சி பாஸ்போர்ட் Officeக்கு வந்து என்னைப் பாருங்கள் என்று சொன்னாராம். பிறகு என்னிடம் போனில் சொன்னான். அப்பொழுது நான் ஸ்ரீ அன்னை தான் அந்த பாஸ்போர்ட் ஆபீசர் உருவில் வந்துள்ளார். உடனே அன்னைக்கு நன்றி சொல் என்று சொன்னேன். பிறகு அவனும் பாஸ்போர்ட் ஆபீசுக்குப் போய் அவரைப் பார்த்ததும், நாளை காலை 10 மணிக்கு மேல் நான் பாஸ்போர்ட்டுக்குக் கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். 10ஆம் தேதி நீங்கள் உங்கள் வீட்டு விலாசத்திற்கு சென்று பாஸ்போர்ட்டை தபால்காரரிடம் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னாராம். அவர் சொன்னபடியே மார்ச் 10ஆம் தேதி பாஸ்போர்ட் கைக்குக் கிடைத்தது. பிறகு 12ஆம் தேதி விசாவுக்கு விண்ணப்பிக்கச் சென்னை சென்றான். மார்ச் 16ஆம் தேதி விசாவும் கிடைத்துவிட்டது.

என் பையனுக்குப் பாஸ்போர்ட்டும் விசாவும் கைக்குக் கிடைத்தது ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் அருளும், ஆசியும், அன்பும் தான் காரணம் என்பதை என் மகன் முற்றிலும் உணர்ந்தான்.

என் பையனிடம் நீ என்னிடம் கேட்பதைவிட அன்னையிடம் உரிமையோடு அன்போடு ஆசையோடு பேசினால் உனக்கு அருகிலேயே இருந்து, உன் உள்ளுணர்வில் கலந்து, உன் வேலையை முழுமையாக்கி வெற்றி பெற்று தருவார்கள். ஒவ்வொரு செயலுக்கும் அவர்களை அழைத்துக் கொள் என்று சொல்வேன். மார்ச் 25ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு நடந்த விழாவில் இவன் செய்த Projectஐ பற்றி Paper Presentation செய்ததில் என் பையனுக்கு India Winner K.Prabhakaran Kumar என்று Certificate கொடுத்துள்ளார்கள். தற்போது Ph.D. முடித்தால் Doctorate பட்டம் தருவார்களாம். இதையடுத்து இவன் ஆஸ்திரேலியாவுக்குக் கிளம்பிய பொழுதே அன்னையிடம் நான் வேண்டிக் கொண்டேன். நீங்களிருவரும் என் பையனுடன் சென்று   அவன் செய்யும் செயல், பேசும் வார்த்தைகள், எண்ணும் எண்ணங்கள், யாவுமே தங்களின் நியதிப்படியும், தங்கள் சங்கல்பத்தின்படியுமே இருக்க வேண்டும். ஒரு நொடிப்பொழுதுகூட அவன் உங்களை விட்டு அகலாதிருக்க வேண்டும். தெரியாத ஊருக்குச் செல்கிறான். நல்லோர்கள் துணையை அவன் நாட வேண்டும். எல்லாருடைய வடிவிலும் தாங்களே இருந்து வழிநடத்த வேண்டும். அவன் ஏற்றுகொண்ட வாய்ப்பை வெற்றி பெற உங்கள் துணையும் ஆசியும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.

ஸ்ரீ அன்னையும் இந்த விண்ணப்பத்தை ஏற்று அவனுடனேயே இருந்து வழிநடத்தி வெற்றி வாய்ப்பைப் பெற்று தந்தார்கள்.

அதன்படி என் பையனை இன்னும் மேல்படிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இன்டர்வியூ செய்து PDF (Post Doctorate Fellowship) படிப்புக்குத் தேர்வு செய்துள்ளனர். படிப்பு செலவு, தங்கும் வசதி, எல்லாமே ஆஸ்திரேலிய அரசாங்கமே ஏற்று கொள்வார்களாம். மேலும் stipend தொகையாக ஒரு வருடத்திற்கு ரூ.35,00,000 தருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாய்ப்பு என் பையன் மீது ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்கள் வைத்துள்ள மிக அபரிமிதமான அன்பும் அருளாசியும் என்பதை ஒவ்வொரு க்ஷணமும் உணர்கிறேன். அவனை அவர்களிடம் சமர்ப்பணம் செய்துவிட்டேன். அவனை நாங்கள் எதிர்பாராத அளவுக்கு உயர்த்தி, வழிநடத்திய ஸ்ரீ அன்னைக்கு என் ஆயுள் முழுவதும் ஒவ்வொரு நொடியும் நன்றியும் விசுவாசமும் உள்ளவளாக இருப்பேன்.

என் மகளுக்கும் அவளுக்கு வந்துள்ள வியாதி பூரண குணமடைந்து மருந்தில்லா ஒரு வாழ்வை அவள் ஏற்க வேண்டும். ஸ்ரீ அன்னை அவர்களின் அருளாசியினாலும் அன்பாலும் அவளுடைய பூர்வீக இடத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு, அந்த பணத்தில் மீதி உள்ள இடத்தில் தங்களுக்குத் தேவையான அளவுக்கு ஒரு வீடு கட்டி கொண்டார்கள். அந்த வீடு கட்டியதால் 3 இலட்சம் ரூபாய் கடனுடன் இருக்கிறாள். வட்டிகூட கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறாள். அவளுக்கும் ஸ்ரீ அன்னை அவர்கள் ஒரு வழியை காட்டி கடனை அடைத்து அமைதியாக ஆரோக்கியமாக வாழ வழிகாட்ட ஸ்ரீ அன்னையைப் பிரார்த்திக்கிறேன்.

என் வறுமையாலும் என் கணவரின் போக்கினாலும் என்னை மிகவும் கேவலமாக நினைத்தவர்கள் இன்று பிள்ளைகளின் முன்னேற்றத்தைக் கண்டு என்னை மதிக்கத் துவங்கியுள்ளார்கள்.

ஸ்ரீ அன்னையை ஏற்றுக் கொண்டு ஸ்ரீ அன்னையின் வழியே நடந்து கொண்டால் நாம் கேட்பதை விட அதிகமாகவும், அதையும் தக்க தருணத்திலும் நடத்தித் தருவார்கள் என்பதற்கு என் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியுமே நல்ல சாட்சி. நாம் நம் வாழ்வில் அன்னையிடம் வருவதற்கு முன் நம் அறியாமையாலும் அவசரத்தாலும் என்ன தவறுகள் செய்திருந்தாலும் அதை மன்னித்து திரும்பவும் தவறு செய்யவிடாமல் தடுத்து நல்வழிப்படுத்துவார்கள் என்பதை நான் ஆதாரபூர்வமாக உணர்கிறேன்.

ஓம் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் அவர்களின் மலர் பாதங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.

-- நன்றியுணர்வுடன் K. Uma, கும்பகோணம்.

*********

 

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
திரும்பி வந்தால் தீவிரம் உண்டு.
 

*******



book | by Dr. Radut