Skip to Content

08. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

4. உன்னைத் தேடி வரும் அன்னை

குழந்தைகளின் உள்ளம் தூய்மையானது. தூய்மையான உள்ளத்தின் பிரார்த்தனையை அன்னை பூரணமாக ஏற்றுக்கொள்கின்றார். தூய்மை முழுமையாக இருந்தால் பூஜைகள், மந்திரங்கள், எதுவும் தேவையில்லை.

ஒரு பெண்மணிக்குக் கடுமையான வயிற்று வலி. அது அவரைப் பன்னிரெண்டு ஆண்டு காலமாகப் படாதபாடு படுத்திக் கொண்டிருந்தது. ஒரு நாள் அவருக்கு வலி அதிகமாகிவிட்டது. மருந்துகளுக்கெல்லாம் அது அசைந்து கொடுக்கவில்லை. நிமிடத்திற்கு நிமிடம் வலி அதிகமாகிக் கொண்டே போயிற்று. அவர் புழுவாய்த் துடித்தார். அதிலிருந்து விடுதலை பெற உயிரை மாய்த்துக் கொள்வது எனத் தீர்மானித்தார்.

அந்தத் தீர்மானத்தை எதிர் மறுத்தது அவருடைய குழந்தைப் பாசம். அவருக்கு மூன்று குழந்தைகள். எல்லோரும் சின்னஞ்சிறுசுகள். அவற்றை ஆதரவு இல்லாத நிலைக்கு ஆளாக்கிவிட்டு நிம்மதியாகக் கண்ணை மூட நினைப்பது என்ன நியாயம்? இந்த நியாயங்களை எல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு வயிற்று வலி அவரை அதிக நேரம் விட்டால்தானே? வயிற்றுக்குள் இடி இடிக்கிறது; கத்தி ஒன்று சுழன்று சுழன்று வருகிறது. இந்தக் கொடுமையில் இருந்து தப்ப வேண்டும் என்றால், தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை. அவர் தீர்மானித்துவிட்டார்; "எல்லோரும் உறங்கிய பிறகு கிணற்றில் விழுந்து உயிரை விட்டுவிட வேண்டும்'.

அவரின் உயிருக்கு உயிரானவர்கள் அவரை விட்டால்தானே? அவருடைய கணவரும், குழந்தைகளும் அவரைச் சூழ்ந்து உட்கார்ந்துகொண்டு, அவர் துடிப்பதைப் பார்த்துத் துயருற்றுக் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தார்கள்.

அவருடைய குடும்பத்தினர் அன்னையின் பக்தர்கள். அவர்கள் அனைவருமே அன்னையைப் பலமுறை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றவர்கள். அவருடைய கணவர் கண்ணீருக்குள் நீந்திச் சென்று அன்னையைப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது "குழந்தைகளின் தூய்மையான பிரார்த்தனையை அன்னை பூரணமாக ஏற்றுக் கொள்வார்' என்று எங்கேயோ படித்தது அவருக்கு ஞாபகம் வந்தது. கண்களைத் திறந்தார். அவருடைய ஏழு வயதுள்ள இரண்டாவது மகன், தன் தாய் துடிப்பதைக் கண்டு தானும் துடித்துக் கதறிக் கொண்டிருந்தான். அவனுக்கு மற்ற குழந்தைகளைவிட அம்மாவின்மேல் அதிகப் பாசம். தந்தை அவன் கண்ணீரைத் துடைத்துவிட்டு, "நீ அன்னையைப் பிரார்த்தனை செய்தால் அம்மாவுக்கு வலி நின்று போய்விடும், செய்கிறாயா?'' என்று கேட்டார்.

"செய்கிறேன்'' என்று உடனே பதில் அளித்த பாலகன், கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனையைத் தொடங்கினான். அவனை நேரில் பலமுறை அன்னை ஆசீர்வதித்திருக்கின்றார். அத்தகைய பேறு பெற்ற அந்தப் பிஞ்சுக் குழந்தை, அன்னையைத் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தான். நிமிடங்கள் கரைந்தன, மணிகள் கரைந்தன, காலத்தைக் கடந்து அவன் அன்னையோடு ஒன்றிப்போனான்.

அந்த நேரத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்தப் பெண்மணியின் வயிற்று வலி, சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வந்தது. அழுதவர் வதனத்தில் புன்னகை அரும்பியது. அவர் கணவருக்கும், மற்றவர்களுக்கும் ஆறுதல் பிறந்தது.

தன் கடமை முடிந்த களைப்பில் குழந்தை தாயின் மேல் படுத்து உறங்கிப் போனான். வலி குறைந்த நிம்மதியில் தாயும் உறங்கலானார். அந்தக் காட்சியை நோக்கிய கணவரின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கின.

மறுநாள் பொழுது விடிந்தது. அந்தப் பெண்மணியின் கணவர் எழுந்திருக்கச் சிறிது நேரமாயிற்று. எழுந்ததும் படுத்திருந்த அவருடைய மனைவியைக் காணவில்லை. பதற்றத்துடன் அவரைத் தேட ஆரம்பித்தார். அவர் சமையற்கட்டில் காப்பி போட்டுக்கொண்டு இருந்தார்.

அவரை நெருங்கி, "வயிற்று வலி எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார் கணவர்.

"இப்பொழுது எவ்வளவோ தேவலை'' என்றார் மனைவி.

"நம் இரண்டாவது பையன் அன்னைக்குச் செய்துகொண்ட பிரார்த்தனையால்தான் உனக்கு வயிற்று வலி குறைந்தது'' என்றார் கணவர்.

"அன்னைக்குப் பிரார்த்தனை செய்துகொண்டால் எவ்வளவு பெரிய நிவாரணம் கிடைக்கிறது!' என்பதை அப்பொழுதுதான் தெரிந்து கொண்டார் அந்தப் பெண்மணி. அவர் அதுவரை அன்னையைத் தரிசித்ததும், வணங்கியதும், பொதுவாகக் கோயிலுக்குப் போய்வரும், சம்பிரதாய அடிப்படையில் ஏற்பட்டவைதாம். "அதற்கும் அப்பால் சென்று அன்னையை உணர்ந்து, நெகிழ்ந்து, கரைந்து பிரார்த்தனை செய்துகொண்டால், தொல்லை கொடுக்கும் வல்வினைகள் யாவும் மறைந்து, அதிசயப்படத்தக்க அளவில் பல நலம் பெருகும்' என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது அவர் அவருடைய இரண்டாவது மகன் மூலமாக அதை அறிந்துகொண்டதும், அன்னையை "சிக்'கெனப் பிடித்துக்கொண்டார். தம் வயிற்று வலி முழுவதுமாக நீங்க வேண்டுமென அன்னையிடம் அல்லும்பகலும் வேண்டினார்.

சில நாட்கள் சென்றன. ஜன்மாந்தரப் பழியாய் வந்து அவரைப் பற்றி, வதைத்துக் கொண்டிருந்த வயிற்று வலி அவரைப் பூரணமாக விடுதலை செய்துவிட்டு மறைந்தது.

நாட்டுக்கோட்டைச் செட்டியார் ஒருவர் சென்னையில் திரைப்பட விநியோகத் தொழில் செய்துவந்தார். மைசூரில் அவருக்குச் சிறிய எஸ்டேட் ஒன்றிருந்தது. அந்த நிலையில் ஓர் அன்னை பக்தரிடமிருந்து ஒரு பெரிய காப்பி எஸ்டேட் வாங்கினார். அதற்குப் பிறகு அவர் தம்முடைய சிறிய காப்பி எஸ்டேட்டை விற்றுவிடத் தீர்மானித்தார். ஆனால் அவர் அதை விலை கூறி விற்கவோ அல்லது குறைந்த விலைக்கு விற்கவோ தயாராக இல்லை. தம் அந்தஸ்தை நிலைநாட்டும் அளவில் அந்தப் பேரம் அமைய வேண்டும் என்று விரும்பினார். அரசல்புரசலாக அந்தச் செய்தியை தம்முடைய வட்டாரத்தில் தெரிவித்துவிட்டு, "எனக்கு அதை விற்க வேண்டிய அவசியம் இல்லையாக்கும்!' என்ற பாவனையோடு இருந்தார் செட்டியார்.

அந்தக் காப்பி எஸ்டேட் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒன்றேகால் இலட்சம் ரூபாய் பெறும். அதை வாங்குவதற்குப் பல பெரிய புள்ளிகள் வட்டமிட்டனர். அப்பொழுதெல்லாம் அவர் தம் எஸ்டேட்டின் சிறப்பை மணிக்கணக்கில் விவரித்துவிட்டு, "எஸ்டேட்டை விற்க வேண்டிய அவசியமோ அல்லது நெருக்கடியோ எனக்கில்லை. ஆனால் நண்பரான நீங்கள் கேட்கிறீர்கள், கொடுக்கிறேன். இரண்டு இலட்சம் விலை கொடுக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

ஆர்வத்துடன் அதை விலைக்கு வாங்க வந்தவர்கள், அவர் கூறிய விலையைக் கேட்டதும் பின்வாங்கிச் சென்றுவிடுவார்கள்.

செட்டியார் அந்தப் பேரத்தை, தம் அந்தஸ்தை நிலைநாட்டும் பிடிவாதத்துடன் நடத்திக்கொண்டு இருந்ததால், எஸ்டேட்டை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

  அந்நிலையில் ஒரு நாள் செட்டியார் தம் நண்பர் ஒருவருடன் வந்து அன்னையைத் தரிசித்தார். நெஞ்ச நெகிழ்வுடன் வணங்கினார். "நமக்கு இனி என்ன தேவை? வாழ்க்கைக்குத் தேவையான எல்லாம் இருக்கின்றன. எதுவும் தேவை இல்லை. அன்னையின் ஆசீர்வாதம் மட்டும் இருந்தால் போதும்'' என்று கூறிவிட்டுப் போனார்.

அடுத்த வாரம் அவருடைய எஸ்டேட்டை ஒருவர் மூன்று இலட்சத்திற்குக் கேட்டார். மறுபேச்சு இல்லாமல் செட்டியார் உடனே விற்றுவிட்டார்.

அன்னை கேட்காமலேயே கொடுப்பவர்; கேட்டதற்கு அதிகமாகவும் கொடுப்பவர். செட்டியார் கேட்கவில்லை. ஆனாலும் ஒன்றேகால் இலட்சமே பெறுமானம் உள்ள அவருடைய எஸ்டேட்டுக்கு மூன்று இலட்சம் கிடைக்கச் செய்தார் அன்னை.

வாழ்க்கை ஒரு போர்க்களம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான போராட்டம். இறைவன் ஒரு பக்தனை ஆட்கொள்ளும்பொழுது அவனுக்குப் பலவிதமான சோதனைகளைக் கொடுத்து, அவனைப் புடம்போடுவது வழக்கம். குடும்பத்தில் திடீர் மரணம், திடீர் வீழ்ச்சி போன்றவை வந்தால், "கடவுள் சோதனை செய்கிறார்' என்கின்றோம். ஒரு பக்தனை இறைவன் அழைத்துக் கொள்ள முன்வரும்பொழுது அவனுக்குப் பல சோதனைகள் ஏற்படும். மனைவி, மக்கள், வீடு, சொத்து போன்றவற்றை அவனிடமிருந்து அப்புறப்படுத்தி, நிலையாமையைச் சுட்டிக்காட்டி, சோதனைச் சூறாவளியை எழுப்புவான் இறைவன்.

அன்னையின் வழி அதுவன்று. அன்னையின் யோகத்தில் அத்தகைய சோதனைகள் இல்லை. பொருள் நஷ்டம், மனக் கஷ்டம் போன்றவற்றைத் தரக்கூடிய சோதனைகளை அன்னை கொடுப்பதில்லை. பொருள் மீதுள்ள பற்றையும், மற்றவர் மீதுள்ள பாசத்தையும் விலக்கவே அன்னை தம் பக்தனுக்குச் சந்தர்ப்பம் அளிக்கின்றார்.

மலர்ந்த ஜீவியம் யர்ப். ஒஒ ஒள்ள்ன்ங் 5 ஆன்ஞ்ன்ள்ற் 2012 38 அன்னை இந்த யோக மார்க்கத்தை "ள்ன்ய்ப்ண்ற் ல்ஹற்ட்' (ஒளிமயமான பாதை) என்றார். தொடக்கத்திலேயே ஆன்மாவின் பாதையை ஏற்றுக்கொள்ளச் சொல்லுகின்றார். பொய்தான் கவலைகளுக்கு அஸ்திவாரம். பொய்யை விட்டு, மெய்யைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றார். அப்படிச் செய்தால் சோதனைகள் இல்லை. யோக மார்க்கம் ஒளிமயமான சத்திய மார்க்கமாக அமைந்துவரும். அதன் வழியே அன்னை, பக்தனை நடத்திச் செல்கின்றார். அச்சமயங்களில் ஸ்ரீ அரவிந்தரும், அன்னையும் பக்தர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து காட்சி தருவார்கள்.

தொடரும்....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையின் ஸ்பர்சம் ஆனந்தத்தின் ஸ்பர்சம்.
 
 
*******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்பை அன்பிற்குரியவர் பெற முடியும்.
 
 
******
 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அன்னையை அடைய ஆர்வம் போதாது; அமைதி தேவை.
ஆர்வம் அமைதியாவது அன்னை.
 
 
*******

 



book | by Dr. Radut