Skip to Content

13. யோக வாழ்க்கை விளக்கம் VI

யோக வாழ்க்கை விளக்கம் VI

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

II/38) ஒரு இலட்சியம் வெற்றி பெற ஒரே வழி அதற்கெதிரான முறையைக் கையாள்வது. இலட்சியம் அக வாழ்வுக்குப் போய் வலிமை பெற்று புற வாழ்வை தன்னுட் கொண்டால், வெற்றி பெறும். வலிமையே வெற்றி பெறும் என்ற லௌகீகச் சட்டமே அப்பொழுதும் நிலைக்கிறது.

 • வலிமைக்கு மட்டுமே வெற்றி.
 • உலகில் உள்ளது வலிமை மட்டுமே.
 • வலிமையற்றது தோற்றம்.
 • குழந்தையுடன் விளையாடும்பொழுது நாம் தோற்பது தோற்றம்.
 • நாம் அத்தோற்றத்தை ஏற்றுச் செயல்படுகிறோம்.
 • அது உண்மையில்லை.
 • உண்மையில் நமக்கு வலிமையுண்டு, வலிமையில்லாமலில்லை. நமக்கு அது தெரியும்.
 • அதே போல் வலிமையும் ஒரு தோற்றமே.
 • குழந்தையுடன் விளையாடும் பொழுது வலிமையற்றவராய் தோன்றினாலும், நமக்கு வலிமையுண்டு என நாம் அறிவோம்.
 • நாம் பிரம்மம் என்பது ஆன்மீக உண்மை.
 • நாம் பிரம்மம் என்பதைப் பிறவி எடுத்தவுடன் மறந்து விட்டோம்.
 • பிரம்மம் வலிமையும், வலிமையற்ற நிலையையும் கடந்தது.
 • பிரம்மம் வலிமையற்ற நிலையை ஏற்கலாம்.
 • இரண்டையும் ஒரே சமயத்திலும் பிரம்மத்தால் ஏற்க முடியும்.
 • இலட்சியம் உலகுக்குண்டு, பிரபஞ்சத்திற்குண்டு, பிரம்மத்திற்குண்டு.
 • இந்த மூன்று நிலைகளிலும் இலட்சியம் பூர்த்தியாகும்.
 • துஷ்டனை அழித்துச் சிஷ்யனைப் பரிபாலனம் செய்வது ஒரு நிலை.
 • துஷ்டனை மாற்றி, உலகில் இனி துஷ்டத்தனமில்லை என்பது இலட்சியம் பூரணமாகப் பூர்த்தியாவது.
 • அதைச் செய்ய சிஷ்யனுடைய துஷ்டத்தனத்தையும் அழிக்க வேண்டும்.
 • அது திருவுருமாற்றம்.
 • அதைச் செய்ய நாம் பிரம்மம் என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
 • அதற்கு நாம் கையாளும் முறைக்கு எதிரான முறையைக் கையாள வேண்டும்.
 • அகிம்சையை நிலைநிறுத்த ஹிம்சையைப் பயன்படுத்துவலி தாகும்.
 • குழந்தையிடம் அன்பு செலுத்த கண்டிப்பு வேண்டும்.
 • உடல் நலம் பெற, நோயுற்ற நேரம், விஷம் சாப்பிட வேண்டும்.
 • சிந்தனை புரிய, சிந்தனையைக் கையாள்வதுடன், சிந்தனையைக் கைவிட வேண்டும்.
 • டார்சி தன்னை விரும்பி மணக்க அவனை கடூரமாகத் திட்ட வேண்டும் எனத் தன்னையறியாமல் எலிசபெத் அறிந்திருந்- தாள்.
 • பிங்லியை மணக்க, அவனை விரும்பியது ஒரு வழி. நேரம் சரியில்லாத பொழுது பிங்லியை மறந்தால், பிங்லியை மணக்க முடியும் என்பது அதற்கெதிரான வழி. ஜேனும், எலிசபெத்தும் அப்படி நடந்தது, அவர்களை அறியாமல் நடந்ததாகும். அன்பன் கண்மூடியாகச் செயல்படுவதைவிட விழிப்புடன் செயல்பட வேண்டும். எளிய மனிதர் நிர்ப்பந்தத்தால் செய்வதை அன்பன் தெரிந்தும், உணர்ந்தும், விழிப்போடு செயல்பட வேண்டும்.
  அது நிறைவேற நேரம் வரும்பொழுது எதிரான முறையைக் கையாள வேண்டும்.

******

II/39) இலட்சியத்தின் கனவுலகத்தைவிட லௌகீகத்தின் யதார்த்தம் அஸ்திவாரமாகும்.

 • உடலும் ஜடமும் உயர்வுக்கு உயிரானவை.
 • இலக்கியம் இலட்சியத்தின் கனவுலகம்.
 • உலகப் பேரிலக்கியங்கள் கவியின் கனவுலக சிருஷ்டியாகும்.
 • கற்பனை வளமானவர்க்கு கற்பனையில் பலிப்பது காவியமாக, கதையாக உருவம் பெற்று வாசகரிடையே பிரபலமடைவார்.
 • அனுபவசாலிகள் அதிகம் சாதித்தவரானால், அவர்கட்குக் கற்பனைத் திறன் இராது.
 • இலட்சியவாதிகள் சாதிக்கும் கற்பனையை நாடுவர்.
 • சாதனையின் கூறுகளை உலக அனுபவம் உணர்த்தியதும் கற்பனையைக் கைவிடுவர்.
 • நேரு அது போல் கனவுலக சஞ்சாரி.
 • அவர் கனவு கண்ட சுதந்தரம் பலித்தது, சுபிட்சம் அவர் வாழ்நாளில் பலிக்கவில்லை.
 • இலட்சியவாதி கனவிலும் கருத மறுப்பது, ஆழ்மன உத்தரவு பெறுவதால் அவர் காலத்திற்குப் பிறகு பலிக்கும்.
 • இந்திராவுக்கு மந்திரி சபையிலோ, லோக் சபாவிலோ இடம் தர மறுத்தார் நேரு. அது இலட்சியத்தின் சிகரம்.
 • பற்றற்ற அந்தப் பொறுமையான நிதானம் இந்திராவுக்கு நீண்ட நாள் - நேரு ஆண்ட காலம் - பிரதமர் பதவியை வலிய பெற்றுத் தந்தது.
 • லௌகீகம் என்றால் குடும்ப வாழ்வு.
 • குடும்ப வாழ்வுக்கு நடைமுறையில் தேவைப்படுவது வீடு, நிலம், சொத்து, வருமானம்.
 • இலட்சியவாதிகள் கனவு காண்பதால்தான் உலகம் இயங்குகிறது என்பது ஆன்மீக உண்மை.
 • ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர் பலர் வாழும் ஊர் என்னூர் என்கிறார் சங்கப் புலவர்.
 • அவரிருப்பதால்தான் என் தலை நரைக்காமலிருக்கிறது எனவும் கூறுகிறார்.
 • இல்லறம் அவசியம், துறவறம் தூய்மைக்கு உறைவிடம்.
 • இல்லறத்தைத் துறவறத்தின் தூய்மையோடு நடத்தியவருக்குக் கற்பனை சிருஷ்டியின் அரங்கம்.
 • அவருக்கு ஓர் எண்ணம் கற்பனையில் பலித்தால், அது ஒரு நாள் நடைமுறைக்கு வரும்.
 • கற்பனைக்கு அச்சிறப்புண்டு.
 • சிறப்பும் நீடிக்க அஸ்திவாரம் தேவை.
 • அந்த அஸ்திவாரம் குடும்ப வாழ்வின் நடைமுறைத் தேவைகள்.
 • இருக்குமிடம் தேடி என் பசிக்கு அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் என்பது தவத்திற்கு அந்தச் சக்தியுண்டு என்கிறது.
 • தவம் பலித்த நிலையில் வாழ்வின் தேவை அபரிமிதமாக இருக்கும்.
 • உலகெங்கும் கோயில்கள், சர்ச்சுகள் பெரும் செல்வம் பெற்றுள்ளனர்.
 • வறுமைக்கும் தவத்திற்கும் தொடர்பில்லை.
 • எளிமையை வறுமையாகக் கருதக்கூடாது.
 • எளிமை ஆன்மீக வளம் நிறைந்து வறுமையின் தோற்ற- முடையது.
 • எளிமையுள்ள இடத்தில் வறுமை வர முடியாது.
 • எளிமை வறண்டிருந்தாலும், போலியானாலும் வறுமை எழும்.

*****

II/40) சரியான குறிக்கோளைத் தவறான யுக்தியால் இலட்சியம் பின்பற்றுகிறது.

 • தவறும் சரியும் இணையாது.
 • காரியம் கூடிவந்தால் கடைப்பிடித்தது சரி என்பான்.
 • உரம் போட்டு அதிக மகசூல் எடுத்தால் உரம் சரி.
 • உருப்போட்டு பாஸ் செய்தால் உருப்போடுவது சரி.
 • சம்பாதிக்க ஆரம்பித்தபின் குடும்பத்தை கவனிக்காவிட்டால் வாழ்க்கை சுலபமாவதால், தனிக்குடும்பம் சரி.
 • முடிவு ஆதாயமானால் முறை சரி என்பது மனம்.
 • யார் வீட்டு விசேஷத்திற்கும் போகாவிட்டால் செலவு மிச்சம்.
  20 ஆண்டிற்குப் பின் உன் வீட்டு விசேஷத்திற்கு எவரும் வரமாட்டார் என்பது ஆரம்பத்தில் தெரியாது.
 • இன்று முடியும், ஆதாயம் என்று வாழ்பவன், இந்த உலகில் மரியாதையுடன் வாழ முடியாது.
 • சத்தியாக்கிரஹமும், ஹர்த்தாலும், அகிம்சாவாதமும் 30 ஆண்டு தொடர்ந்து பலன் கொடுத்ததால் சுதந்தரம் வன்முறையின்றி வரும் என்று கூற முடியாது.
 • முடிவு பலன் உடன் தந்தாலும், மூலத்தைக் கருதி செயல்படுவது அவசியம் என மகாத்மா அறிந்து 1947இல் பேசினார்.
 • ஓர் ஸ்தாபனத்தில் கோள் சொல்லி நெடுநாள் அதிகாரம் செலுத்தினாலும், நேரம் வரும்பொழுது பதவி அவனுக்குப் போகாது. பதவி பறிபோனபின் தொடர்ந்து கோள் சொல்லலாம்.

  உடனடி பலன் கை மேல் கிடைத்தால், முடி முடிவில் பறி போகும்.

 • கோபம் செல்கிறது எனச் செலுத்தினால், நாள் கழித்து கோபம் வயிற்று வலியாகும். எந்த மருந்துக்கும் குணமாகாது.
 • குறிக்கோள் சரியாக இருப்பதைப் போல், அதைப் பெறும் யுக்தியும் சரியாக இருக்க வேண்டும்.
 • கேட்பாரில்லை என சௌகரியத்தைப் பாராட்டலாம்.
  அதிகாரம் உள்ளது என செலுத்தலாம்.
  விட்டுக் கொடுக்கும் நிர்ப்பந்தமில்லையென விட்டுக் கொடுக்க மறுக்கலாம்.
  சொல்லும் பொய்யைத் தட்டிக் கேட்க மனிதரில்லையென, தொடர்ந்து பொய் சொல்லலாம்.

  முடிவில்

  சௌகரியமே இல்லாத நிலையான சந்தர்ப்பம் எழும்.
  அதிகாரமே அடிப்படையோடு அழிந்துவிடும்.
  விட்டுக் கொடுக்க ஒன்றுமில்லையென்றாகும்.
  சொல்லும் பொய்யைக் கேட்க ஒருவரிலர் என்பது உறுதிப்படும்.

 • இவை யுக தர்மங்கள்.
  திரௌபதியை,
  ஐந்து கணவராலும் பாதுகாக்க முடியாமற் போயிற்று.
  அரியாசனம் அர்த்தமற்றதாகிவிட்டது அவளுக்கு.
  பிதாமகன் பிரயோஜனமில்லாத மகனாகிவிட்டான்.
  ஆச்சாரியார், குருமார்கள் அவல நிலையை அடைந்தனர்.
  நேர்மைக்கே உரிய விதுரனும் ஆறுதலும் கூற முடியவில்லை.
  அனைவரும் கைவிட்டாலும், ஆண்டவன் கைவிடமாட்டான்.
  அவள் கூறிய சபதம் நிறைவேறி அவையினர் அனைவரையும் முடிவில் அழித்தது.
  குறிக்கோள் நெடுநாளையது, இன்றோடு போவதல்ல.
  சரியான குறிக்கோளைச் சரியான யுக்தியால் எட்ட வேண்டும்.

  சரியும் தவறும் இணைந்து செயல்படா.

தொடரும்....

******

ஜீவிய மணி
 
வாழ்வை ஏற்கும் அன்னைக்கு மனித வாழ்வு புறம்பாகும்.
 

******book | by Dr. Radut