Skip to Content

09. அன்னை இலக்கியம் - ஞானக் கண்

அன்னை இலக்கியம்

ஞானக் கண்

இல. சுந்தரி

"சரவணா, ரேஷனுக்குப் போய் வந்துவிடுகிறாயா?'' என்று ஒரு பையையும் ரேஷன்கார்டுடன் பணத்தையும் டீப்பாயின் மேல் மென்மையாக வைத்தாள் கீதா.

"மெதுவாக வை. அதற்கு வலிக்கப்போகிறது'' என்று தலை வாரிக்கொண்டே கேலியாகச் சொன்னான்.

"உனக்கு எல்லாமே கேலிதான்'' என்றாள் அவன் அக்கா கீதா.

"ரேஷனுக்குப் போகச் சொல்லிவிட்டாயல்லவா? இனிமேல் கேலி ஏது? கியூவில் நின்று வீடு திரும்புவதற்குள் எனக்கு வயதாகிவிடும். கேலியெல்லாம் பேச முடியாது'' என்று சலிப்பாக சீப்பை டிரஸ்ஸிங் டேபிள் மீது போட்டான்.

பொறுமையாகப் பக்கத்தில் வந்து சீப்பை எடுத்து அதற்குரிய இடத்தில் வைத்துவிட்டு, "அன்னையை அனுப்பிவிட்டுப் போ. சலிப்பில்லாமல் உற்சாகமாய் வருவாய்'' என்றாள்.

"ஆமாம், அன்னையை அனுப்பினால் அன்னை போய் கியூவில் முன்னால் நின்று ஜீனியை வாங்கி வந்து வீட்டில் கொடுத்து விடுவார். நான் வேறு ஏன் போக வேண்டும்?'' என்று மேலும் கேலி பேசினான்.

"அன்னையை அனுப்புவது என்றால் அன்னை சக்தியை அனுப்புவது என்று பொருள்''.

"சரி, இன்று கியூவில் நிற்க வேண்டாம். அன்னையே பார்த்துக் கொள்வார்'' என்று கேலி பேசிவிட்டு, எரிச்சலுடன் கார்டையும் பணத்தையும் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, பையைக் கையில் எடுத்துக் கொண்டு, வேகமாகக் கதவைத் தள்ளித் திறந்துவிட்டு, திறந்த கதவை மூடாமல், செருப்பை அலட்சியமாய்க் காலில் மாட்டியவண்ணம் படியிறங்கினான்.

"அன்னையே, நீர்தாம் இவனுக்குப் பொறுமையைக் கற்றுத் தர வேண்டும்'' என்று மனதில் பிரார்த்தித்தவண்ணம், கதவை மெல்லச் சார்த்தி, தாழிடாமல் வைத்துவிட்டு உள்ளே சென்று வேலையைக் கவனித்தாள். இரண்டு மணி நேரம் கடந்திருக்கும். பட்டென்று கதவை உதைத்துத் திறக்கும் ஓசை கேட்டது.

சரவணன்தான். கதவைக் காலால் உதைத்துத் திறந்து கொண்டு, எரிச்சலுடன் உள்ளே வந்து சோபாவில் பொத்தென்று சாய்ந்து கொண்டு, கையிலிருந்த பையை வெறுப்புடன் விட்டெறிந்தான். "பெரிய அன்னை. அன்னையை அனுப்பினால் சுலபமாய் ரேஷன் வாங்கலாம் என்று சொன்னதைக் கேட்டு போனதுதான் மிச்சம். கியூவில் நின்று கால் வலி கண்டதுதான் பலன். என் முறை வரும்முன் ஜீனி தீர்ந்து நாளைக்கு என்று சொல்லிவிட்டான்''.

கீதா அவன் புலம்பலைக் கேட்டு, அவன் செய்கைகளைப் பார்த்து புன்னகை செய்தாள்.

"என்ன சிரிப்பு? எதற்கெடுத்தாலும் ஒரு மோனாலிசா புன்னகை செய்துவிடுவாய். நீதானே அன்னையை அனுப்பினால் எளிதில் ரேஷன் வாங்கலாம் என்றாய். இப்பொழுது பார். ரேஷனில் நின்றதுதான் மிச்சம். ஜீனியும் வாங்கவில்லை, ஒன்றும் வாங்கவில்லை'' என்று கோபமும் ஏமாற்றமுமாய்ப் பேசினான் சரவணன்.

"அன்னையை அனுப்பியது சரிதான். ஆனால் நீ அவரைச் செயல்பட அனுமதிக்கவில்லையே'' என்றாள் புன்னகை மாறாமல்.

"ஆமாம், அன்னை கியூவில் வந்து நின்றார். நான்தான் அவரைத் தடுத்துவிட்டேன். போ அக்கா. ஏதாவது ஏற்றுக் கொள்வது போல் பேசு'' என்றான்.

"சற்றுக் கோபப்படாமல் இன்றாவது பொறுமையாய் இருந்து விஷயத்தைப் புரிந்து கொள். நீ புறப்பட்டதிலிருந்து உன் மனநிலை எப்படியிருந்தது என்று சொல்'' என்றாள் கீதா.

"ஆமாம், என்ன மனநிலை வேண்டிக் கிடக்கிறது. அதுதான் அன்னையை அனுப்பிவிட்டோமே என்று ஹாய்யாகச் சென்றேன். கியூவே இராது. நான்தான் முதலாவதாக இருப்பேன். நான் போனதும் என்னை வரவேற்று, ஜீனி கொடுத்தனுப்புவான். வியர்வையில் நனைய வேண்டாம், அடுத்தவர் புகைக்கும் புகை நாற்றத்தைச் சுவாசிக்க வேண்டாம், யார் மீதும் இடித்துக் கொள்ள வேண்டாம் என்று ஏக கற்பனையுடன் போனேன். எல்லாம் வெறும் ஏமாற்றத்தில் முடிந்தது'' என்று மீண்டும் சலித்துக் கொண்டான்.

"அன்னை என்பது ஒரு சக்தி என்று சொன்னேன். அது செயல்பட ஏற்றக் கருவியாய் நாம் நடந்து கொள்ள வேண்டாமா? பழுதான பல்பில் மின்சாரம் எப்படிப் புகுந்து ஒளி தர முடியும்?'' என்றாள் கீதா.

"புரியும்படிச் சொல். ஏதேனும் புதிர் போடாதே''.

"அன்னை சக்தி செயல்பட்டு, நம் முயற்சி இன்றியே பலன் தரக்கூடியது. நாம் அதற்கேற்ற மனப்பக்குவம் பெற வேண்டாமா? எதிர்பார்ப்பு இருந்தால் சக்தி செயல்படுவது தடையாகும். அவசரம், எரிச்சல், அவநம்பிக்கை இதெல்லாம் அன்னையை விலக்கும்.

நம்பிக்கையும், பொறுமையும் அன்னை சக்தி செயல்பட ஏற்ற சூழ்நிலை. அதை விட்டு அழைத்த குரலுக்கு ஓடிவரும் அன்னையை செயல்படவிடாமல் உன் எதிர்பார்ப்பினாலும், வீண் கற்பனைகளாலும் தடுத்துவிட்டாய்'' என்று நிதானமாக எடுத்துச் சொன்னாள் கீதா.

"நான் வேறு என்னதான் செய்திருக்க முடியும்?'' என்றான் சரவணன்.

"அன்னையிடம் ஒப்படைத்துவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் நீ உன் கடமையை அதாவது ரேஷனுக்குப் போவதைச் செய்திருக்க வேண்டும். அலாவுதீனின் அற்புத பூதம் என்று அன்னையை நினைப்பது அன்னை செயல்பட உதவாது. திரும்பி வரும்போது என்ன செய்தாய்? கதவைக் காலால் உதைத்தாய். பையைப் பொத்தென்று கீழே போட்டாய்'' என்றாள்.

"ஆமாம். கதவும், பையும் ஜடம்தானே, அதற்கென்ன மரியாதை?''

"நான் பல முறை உனக்குச் சொல்லிவிட்டேன். ஒவ்வொரு பொருளுக்கும் ஜீவனுண்டு. அதை மதிக்கத் தெரிந்தாலே போதும். எரிச்சல்படுவது, சோம்பல்படுவது, பொருட்களை அலட்சியப்- படுத்துவது இவையெல்லாம் நாமே முயன்று அன்னையை விலக்குவது''.

"பிறகு எப்படித்தான் உன் அன்னை செயல்படுவார்?'' என்றான் பொறுமையிழந்து.

"நம் பிழைகளை கண்டறிவது, யாரேனும் கண்டுபிடித்துச் சொன்னாலும் மனப்பூர்வமாய் அதை ஏற்று மனம் மாற முன்வந்தால் உடனே அன்னை செயலில் வெளிப்பட்டுவிடுவார். எத்தனை முறை என் அனுபவத்தில் அன்னையை உணர்ந்திருப்பேன்'' என்று சொல்லும்போதே உடல் சிலிர்த்தாள்.

ஏதோ புரிவது போலிருந்தது. மிகவும் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கீழே போட்ட பையை மெல்ல எடுத்தான். மன்னிப்பு வேண்டும் மனப்பான்மையுடன் அதை மெதுவாக டீப்பாய் மேல் வைத்தான்.

"கீதா, என் தவறு எனக்குப் புரிகிறது. ஒப்புக்கொள்கிறேன். அன்னையின் அருளால் கிடைக்கும் என்ற பணிவான உணர்வில்லை எனக்கு. அன்னையை வைத்து நடத்திக் கொள்ளலாம் என்பது போல் அகங்காரமாய்ச் செயல்பட்டேன். கியூவில் பொறுமையிழந்து அவசரப்பட்டேன். கியூவே இருக்கக் கூடாது, நான் மட்டுமே ரேஷன் வாங்க வேண்டும் என்ற நிலையை அன்னை ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் போனேன். என் அகங்காரத்திற்கு ஏமாற்றம் சரியான பரிசுதான். நான் மாறிக் கொள்ள முயற்சி செய்கிறேன் கீதா'' என்று முதன்முறையாக பணிவாய்ப் பேசினான். இதுவும் அன்னையின் அருளே.

அந்தக் கணமே வாசலில் வேலுவின் குரல் "சரவணா'' என்று இவனை அழைத்தது.

கையில் ஏதோ சாமான் வாங்கிய பையுடன் வெளியே நின்றிருந்தான் வேலு. வேலு இவனையொத்த வயதுடைய இளைஞன். அதிகப் படிப்பில்லாத ஏழை. அந்தக் காலனி முழுதிற்கும் அறிமுகமானவன். அடுத்தவர்க்கு உதவி செய்து அதில் வரும் பொருளைக் கொண்டு பிழைப்பவன். டெலிபோன் பில், எலக்ட்ரிக் பில், யாவும் கட்டிக் கொடுப்பான். மளிகையோ, மருந்தோ யார் எது கேட்டாலும் வாங்கித் தருவான். உணவு கொடுத்தாலும், பணம் கொடுத்தாலும், பழைய பேண்ட், ஷர்ட் எது கொடுத்தாலும் பெற்றுக் கொள்வான்.

"வா வேலு. என்ன விஷயம்?'' என்று கேட்டவண்ணம் சரவணன் வெளியே வந்தான்.

அதற்குள் கீதா, "சரவணா அவனை உள்ளே கூப்பிடு'' என்று கூறி, இருவருக்கும் டீ கொண்டு வந்தாள்.

நன்றியுடன் உள்ளே வந்தான் வேலு. கீதா எப்பொழுதும் அவனை சரவணனைப் போலவே அன்பாக நடத்துவாள்.

"வந்ததைச் சொல்லிவிடுகிறேன். சரவணா, நீ இன்று ரேஷனுக்கு வந்து கியூவில் நின்று ரேஷன் வாங்காமல் திரும்பியதைப் பார்த்தேன். நான் நம் கேசவன் வீட்டிற்கு ஜீனி வாங்க ரேஷன் கடைக்கு வந்தேன். சீக்கிரம் வந்ததால் முதலிலேயே வாங்கிவிட்டேன். எதிர் கடையில் டீ குடித்துவிட்டு நியூஸ் பேப்பர் படித்தபோது நீ வெறும் பையுடன் சென்றதைக் கவனித்தேன். கேசவன் வீட்டில் பணத்தையும் கார்டையும் என்னிடம் நான்கு நாட்கள் முன்பே கொடுத்துவிட்டார்கள். ஜீனி போடும்போது வாங்கித் தரச் சொல்லியிருந்தார்கள். இன்றுதான் ஜீனி போட்டதால் இன்றுதான் வாங்க முடிந்தது. அவர்கள் வீட்டிற்குப் போனால் கதவு பூட்டியிருந்தது. பக்கத்தில் விசாரித்ததில் எதிர்பாராமல் அவசர வேலையாய் வெளியூர் போயிருக்கிறார்களாம். வர நான்கு நாட்கள் ஆகுமாம். அதுதான் உங்கள் வீட்டிற்குப் பயன்படுமே என்று கொண்டு வந்தேன். உன் கார்டையும் பணத்தையும் என்னிடம் கொடு. நீ படிக்கும் பையன். நீ கடையில் நின்று நேரத்தை இழக்க வேண்டாம். இது எனக்குப் பழகிய வேலை. நான் வாங்கி கேசவன் வீட்டினர் வந்ததும் கொடுத்துக் கொள்வேன்'' என்றான்.

கீதா தீவிர அன்னை பக்தை. அன்னையின் கோட்பாடுகளில் அவளுக்கு முழு நம்பிக்கையுண்டு. சிறியது, பெரியது என்ற வேறுபாடே இல்லாமல் ஒவ்வொன்றிலும் அன்னை முறையைப் பின்பற்றும் குணம் அவளுக்கு. எது நடக்கவில்லையென்றாலும் தான் அது குறித்து என்ன பிழை செய்தோம் என்றுதான் ஆராய்வாளே தவிர யாரையும் குறை கூறமாட்டாள். அன்னையிடம், மனமாற்றம் என்பது பெருஞ்சாதனை புரியவல்லது என்பதை அவள் அறிவாள்.

எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசும் சரவணனுக்கு இன்று அன்னை ஞானக் கண் திறக்க முடிவு செய்திருக்கிறார் போலும். தன் அகங்காரத்திற்குப் பரிசாய் ஏமாற்றமும், மனம் மாற முன்வந்தவுடன் வீடு தேடி வந்த ஜீனியும் அவனுக்கு அன்னையை உணர்த்தின.

"மனம் மாற முன்வந்ததும் என்ன நிகழ்ந்தது பார்த்தாயா?' என்று கேட்பது போல் கீதா அவனைப் பார்த்தாள்.

"இரு வேலு, இதோ வருகிறேன்'' என்று உள்ளே போன சரவணனைக் கவனித்த கீதா, அவன் உள்ளே அன்னைக்கு நமஸ்கரித்து நன்றி சொன்னதைப் பார்த்துப் பரவசப்பட்டாள்.

முற்றும்.

*******book | by Dr. Radut