Skip to Content

10. அன்னை இலக்கியம் - காதலரும், காவலரும்

அன்னை இலக்கியம்

காதலரும், காவலரும்

சமர்ப்பணன்

வசந்த் இன்னும் சிறிது நேரத்தில் கீதாவை அவள் அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகத் தொலைபேசியில் கூறி இருந்தான். மூன்று வருடங்களுக்குப் பின் அவள் அவனைப் பார்க்கப் போகிறாள்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தன் அலுவலக மேஜை அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த வசந்த்தின் புகைப்படத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துப் பார்த்தாள். வசந்த் அதில் உயிரோடு நேரிலேயே இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை இலேசாக வருடிக் கொடுத்தாள். அவள் மேனியெல்லாம் சிலிர்த்தது.

மூன்று வருடங்களுக்குமுன் கல்லூரியில் படிக்கும்போது வசந்த்துடன் உண்டான காதல் அப்போது ஒவ்வொரு கணத்தையும் இன்பத்தால் நிரப்பியது. அவர்களின் தேர்வு விடைத்தாள்களை வெற்றிடத்தால் நிரப்பியது. திகட்டாத இன்ப நினைவுகளையும், உணர்வுகளையும் தந்த அந்தக் காதல், "திருமணம் செய்து கொள்ளும் வயதன்று இது. காதலர்களுக்கும் உணவு, உடை, வீடு வேண்டும். குடும்பம் அமைத்தால் செலவுக்குப் பணம் வேண்டும். பணத்தை சம்பாதிக்க வேலை வேண்டும், அதற்குப் படிப்பு முடிய வேண்டும்' என்ற அறிவைமட்டும் தர மறந்துவிட்டது.

அதன் விளைவு? ஒரு நாள் காலையில் பதினொரு மணிக்கு, தாங்களே அமைத்துக் கொள்ளப் போகும் மண வாழ்க்கைக்கு ஆசி கேட்டு ஓர் உருக்கமான கடிதம் எழுதி வீட்டில் வைத்துவிட்டு, இருவரும் எங்கோ கிளம்பிவிட்டனர். எங்கே போய்விட முடியும்? இரயில் மிகவும் தாமதமாக வந்த காரணத்தால் ஊரைவிட்டு ஓடிப் போக முடியாமல், மதியம் ஒரு மணிக்கு இரயில் நிலையத்தில்

கீதாவின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பனிடம் வசமாக மாட்டிக்கொண்டனர்.

முரட்டு மனிதரானாலும் தம் பெண் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் அமைதியாக இருவரையும் தம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றவர், கீதாவை ஒரு வார்த்தையும் திட்டவில்லை. தம் அத்தனை கோபத்தையும் வசந்த் மீது காட்டினார். "அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்' என்ற பழமொழியை போலீஸ்காரரைவிட வேறு யார் அதிகம் நம்பப் போகிறார்கள்?

அவள் கண்ணெதிரே அவனுக்கு விழுந்த அடிகள் அவளுக்கு தாங்கொண்ணா வலியைத் தந்தன. கதறி அழுதாள் கீதா. "வசந்த் எனக்கு வெறும் நண்பன்தான். காதல்என்று தவறாக நினைத்து விட்டோம். எங்களுக்குள் காதல் இல்லை. அவனை விட்டுவிடுங்கள்'' என்று இரண்டு மணி நேரம் அவள் கதறியபின், அவளையும், வசந்த்தையும், அவன் குடும்பத்தினரையும் பலவிதமாக மிரட்டியபின், ஒரு வழியாக வசந்த்தை விட்டனர். உடனே அவன் வேறு கல்லூரிக்குச் சென்றுவிட்டான். பின்னர் படிப்பை முடித்துவிட்டு இருவரும் நல்ல வேலையில் சேர்ந்துவிட்டனர். மீண்டும் அவனை இப்போதுதான் பார்க்கப் போகிறாள்.

வசந்த் தன்னைத் தேடிக்கொண்டு காதலுடன் வர வாய்ப்பில்லைஎன்பது அவள் அறிவுக்குப் புரிந்தாலும், அறிவைக் கடந்த ஏதோ ஒன்று அவளை நம்பிக்கையுடன் காத்திருக்க வைத்தது. அது வீண் போகவில்லை.

புகைப்படத்தை பழைய இடத்திலேயே கீதா ஒளித்து வைத்த சிறிது நேரத்தில் வசந்த் வந்துவிட்டான். முன்பு போலவே அவன் கண்களுக்கு அவளும், அவள் கண்களுக்கு அவனும் மிகவும் அழகாகத் தோன்றினர்.

காதலர்கள் தினமும் சந்தித்தால் பேச ஆயிரம் விஷயம் இருக்கும். பல காலம் கழித்து சந்தித்தால், மௌனம் மட்டுமே பரிமாறிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மௌனத்தின் பாரத்தைத் தாங்க முடியாதபோது, மூன்று வருடக் கதைகளைப் பேசி முடித்தனர்.

"என் அப்பாவும், மற்ற போலீஸ்காரர்களும் உங்களை எப்படி முரட்டுத்தனமாக அடித்தார்கள்! ரொம்பவும் வலித்ததா?'' மூன்று வருடங்களுக்கு முன் வசந்த் பட்ட அடிகளால் தனக்கு உண்டான வலியை மீண்டும் உணர்ந்தாள் கீதா.

சிரித்தான் வசந்த். "அவர்கள் என்னை அடிக்க அடிக்கத்தான், வாழ்ந்தால் உன்னோடுதான் வாழ வேண்டும்என்ற வேகம் எனக்கு வந்தது. அதனால்தான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன். கீதா, பிறரது அபிப்பிராயத்தைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. நீ என்ன நினைக்கிறாய், உன் முடிவு என்ன என்பதுதான் எனக்கு முக்கியம். என்னோடு சேர்ந்து வாழ நீ ஆசைப்படுகிறாயா? நீ இன்னமும் என்னைக் காதலிக்கிறாயா?'' என்று கேட்டான் வசந்த்.

"காதல் என்ன நீர்க்குமிழியா கரைந்து போவதற்கு? எப்போதும் போல உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், வசந்த், உங்களைக் காதலிக்கவே இல்லைஎன்று அத்தனை பேர் முன்னாலும் பொய் சொல்லி உங்களை அவமானப்படுத்தினேனே, ஒரு வேளை அந்தப் பொய்தான் இதுவரை தடையாக இருந்ததோ என்னவோ! எனக்குக் காதலைப்பற்றிப் பேச என்ன அருகதை இருக்கிறது?'' என்று இலேசாகக் கண் கலங்கினாள் கீதா. தவறு செய்யும்போது தோன்றாத அவமான உணர்வு, அதைப் பற்றி நினைக்கும்போது அவளுக்கு உண்டானது.

"நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அப்படிப் பேசினாய்? அன்று அப்படி நீ சொல்லி இருக்காவிட்டால் நான் உயிர் பிழைத்திருப்பேனாஎன்பது சந்தேகம்தான். நீ அந்தப் பொய்யைச் சொன்னபின்தான் எனக்கு உன் மீது காதல் அதிகமாக வந்தது!'' என்றான் வசந்த்.

"நீங்கள் என்னை விட்டுக்கொடுக்காமல் பேசுவதைக் கேட்கக் கேட்க எனக்கும்தான் காதல் அதிகமாகிறது. அது அதிகமாகி என்ன பயன் வசந்த்? நாம் காதலிக்கிறோம்என்ற விஷயம் தெரிந்தால் மறுபடியும் உங்கள் உயிருக்குத்தான் ஆபத்து. எங்காவது ஓடிப் போனாலும் அப்பா கண்டுபிடித்துவிடுவார். பேசாமல் செத்துப் போய்விடலாம். அடுத்த பிறவியிலாவது ஒன்று சேர்ந்து வாழ்வோம்'' என்று புலம்ப ஆரம்பித்தாள் கீதா.

"உளறாதே கீதா, அடுத்த பிறவியில் நடக்கும்என்று நம்புவதை இந்தப் பிறவியிலேயே நடத்திக் காட்டுவோம்'' என்றான் வசந்த்.

"எப்படி நடத்துவது? உங்களுக்கு மனைவியாக எனக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதை யாரால் என் அப்பாவுக்குப் புரிய வைக்க முடியும்? நீங்கள் எனக்கு தாலி கட்டுவதை அவரே முரட்டுத்தனமாக எதிர்ப்பாரே!'' என்றாள் கீதா.

"தாலி திருமண உறவைப் பற்றி ஊருக்குப் புரிய வைக்க போட்டுக் கொள்ளும் அடையாளம். நான் இன்னமும் உனக்குத் தாலி கட்டவில்லை என்றாலும் நீ எனக்கு மனைவிதான். இரண்டு இதயங்கள் ஒன்றுபட்டபின், உடல்கள் உலகின் வேறு வேறு மூலைகளில் இருந்தாலும், எத்தனை வருடங்கள் பிரிந்திருந்தாலும், காதலர்களைப் பொறுத்தவரை அது கணவன், மனைவி உறவுதான்'' என்றான் வசந்த்.

"நீங்கள் பேசுவது நியாயமாகத்தான் தோன்றுகிறது. இதயங்கள் ஒன்றுபடாமல், உடல்கள் தினம் தினம் சேர்ந்தாலும், பிள்ளைகள் பெற்றாலும் அது அர்த்தமற்ற உறவுதான். இருந்தாலும் தாலி கட்டிக்கொண்டு ஊரறிய மனைவி ஆவதுதான் நல்லதுஎன்று நினைக்கிறேன். அதை விடுங்கள். நாம் இப்போது என்ன செய்ய முடியும்? உண்மையாகவே காதலித்தோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லையே. யோசித்து பாருங்கள்'' என்றாள் கீதா.

"எத்தனையோ முறை யோசித்துவிட்டேன் கீதா. நாம் அப்போது எடுத்த முடிவில் தவறுகள் இருந்தன. படிப்பில்லாமல், பணமில்லாமல், வேலையில்லாமல், பலமில்லாமல் ஓடிப் போக நினைத்தோம். அதனால் அது நடக்கவில்லை. அந்த வகையில் உன் அப்பா நமக்கு நல்லதுதான் செய்திருக்கிறார்'' என்றான் வசந்த்.

வசந்த் தன் தந்தையைப் பற்றி உயர்வாகப் பேசியது கீதாவிற்கு மிகவும் பிடித்திருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. "எதை வைத்து நாம் இப்போது சேர முடியும்என்று நினைக்கிறீர்கள்? அப்பாவை நினைத்தாலே பயமாக இருக்கிறது'' என்றாள் கீதா.

"நம்மிடம் நல்ல முறையில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த வேண்டிய வயது, உடல் நலம், பணம், காதல், நல்ல மனம் எல்லாமே இப்போது இருக்கின்றன. ஆனால், உன் அப்பா தன் போலீஸ் பதவியைக் கொண்டு நம்மை பிரிக்கப் பார்ப்பார். அவர் தயவை எதிர்பார்த்திருக்கும் பலரும் நமக்கு எதிர்ப்பாக இருப்பார்கள்'' என்றான் வசந்த்.

"அட, அதைத்தானே நானும் அப்போதிருந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன்'' என்று கவலையுடன் சொன்னாள் கீதா.

"அவரது பதவி, அதிகாரம் தரும் பலத்தைவிட நம் ஆன்மா தரும் பலம் பெரியது. ஆன்மீக பலத்தைக்கொண்டு நாம் ஒன்று சேரலாம்'' என்றான் வசந்த்.

"போங்கள் வசந்த், போன தடவை நாம் ஓடிப் போவதற்கு முன்னால் நான் எத்தனை தெய்வங்களுக்கு வேண்டிக் கொண்டேன் தெரியுமா? நீங்கள் அடி வாங்கியதுதான் அதற்குக் கிடைத்த பலன்'' என்று அங்கலாய்த்தாள் கீதா.

"நாம் காதலித்துவிட்டு தெய்வங்களை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? நம் வாழ்க்கை நம் கையில், நம் உறுதியான முடிவில் இருக்கிறது. நாம் காதல்என்று சொல்கிறோமே, அது என்ன? உன் அழகான முகத்தைப் பார்த்ததும் மயங்கினேனே, அதுவா?'' என்று கேட்டான் வசந்த்.

"இருக்கலாம்'' வசந்த் அப்படிப் பேசியது கீதாவிற்கு சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது.

"அப்படி என்றால் உனக்கு வயதானாலோ, உன் அழகு மாறினாலோ என் காதல் மாறிவிடுமா? அப்போது நான் வேறு அழகான முகத்தைப் பார்த்து காதலிக்கலாமா?'' சிரித்தான் வசந்த்.

ஒவ்வோர் ஆணும் ஒரு பெண் மீது மட்டுமா பிரியம் வைத்திருக்- கிறான்? பெண் இனத்தின் மீதே அல்லவா பிரியம் வைத்திருக்- கிறான்!

"அதெப்படி? உங்கள் கண்களைப் பிடுங்கிவிடமாட்டேனா?'' என்றாள் கீதா.

"கண்களை ஆன்மாவின் ஜன்னல்கள் என்கிறார்கள். அவற்றைப் பிடுங்கிவிட்டால் எப்படிக் காதலிப்பதாம்? நாம் இத்தனை காலம் பார்க்காமல், பேசாமல் இருந்தபோதும், நாம் சந்தோஷமாகச் சேர்ந்து வாழ முடியும்என்ற நம்பிக்கையை அறிவைத் தாண்டிய ஒன்று தந்ததே, அதை ஆன்மாஎன்று சொல்லக்கூடாதா?'' என்றான் வசந்த்.

"தாராளமாகச் சொல்லிக் கொள்ளுங்கள். யார் வேண்டாம் என்றார்கள்?'' என்றாள் கீதா.

"இரண்டு ஆன்மாக்களின் ஈர்ப்புதானே காதல்? நாம் செய்ய வேண்டியதை எல்லாம் சரியாகச் செய்துவிட்டு, அறிவை நம்பாமல் நம்மிடம் இருக்கும் ஆன்மாவை நம்பலாமே! அதன் பலத்தால் எதையும் சாதிக்கலாம்என்று எனக்குத் தோன்றுகிறது'' என்றான் வசந்த்.

"நாம் ஆன்மாவைப் பற்றி என்ன வேண்டுமானாலும் நம்பிக் கொள்ளலாம். ஆனால் அது எப்படி நம் கல்யாணத்தை நடத்தி வைக்கும்? அப்படி ஒரு குறுக்கு வழி இருந்திருந்தால், உலகத்திற்கு தெரியாமலா போய்இருக்கும்? அது தெரிந்திருந்தால் அம்பிகாபதியின் தலையை வெட்டி இருக்கமாட்டார்கள், அனார்கலிக்கு உயிரோடு சமாதி கட்டி இருக்கமாட்டார்கள். வலிமை உள்ளவர்கள்தான் வாழ முடியும். காதலர்களுக்கு வலிமை கிடையாது'' என்றாள் கீதா.

"வலிமை எங்கிருந்து வருகிறதுஎன்பதைப் புரிந்துகொண்டால், அதைப் பெறும் வழியையும் தெரிந்துகொள்ளலாம்'' என்றான் வசந்த்.

"அதிகாரத்தின் பலம்தான் கண் முன்னால் தெரிகிறதே'' என்றாள் கீதா.

"உலகம் தோன்றிய நாள் முதல் இருக்கும் மின்சாரத்தை, ஒருவர் கண்டுபிடிக்கும்வரை யாரும் அதைப் பயன்படுத்தவில்லை. அது கண்ணுக்குத் தெரியவில்லைஎன்றாலும், நாம் அதனால் பயன் பெறுவதில்லையா? "நான் மின்சாரத்தைப் பயன்படுத்தமாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தால் அது யார் தவறு? ஆன்மா மின்சாரம் போலத்தான். கண்ணுக்குத் தெரியவில்லை, என்றாலும் அதற்கு பலம் அதிகம். அதன் பலத்தால் எனக்குக் கண்டிப்பாக சம்சாரம் கிடைக்கும்'' என்றான் வசந்த்.

"அந்த சம்சாரம் கண்டிப்பாக நானாகத்தான் இருப்பேன். நீங்கள் இத்தனை தூரம் சொல்வதால் எனக்கும் கொஞ்சம் நம்பிக்கை வருகிறது'' என்றாள் கீதா.

"அது போதும். அறிவுக்குப் பொருத்தமான எல்லாவற்றையும் செய்துவிட்டோம். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆன்மாவையும், அதன் பலம் உன் அப்பாவின் பலத்தைவிட அதிகமானது என்பதையும் மட்டும் நம்பிக்கொண்டு உன் வீட்டிற்குப் போவோம். உன் அப்பாவைப் பார்த்துப் பேசுவோம், கிளம்பு'' என்றான் வசந்த்.

"அப்படிப் போனால் என்ன நடக்கும்?'' என்று கேட்டாள் கீதா.

"யாருக்குத் தெரியும்? அது ஆன்மாவின் பிரச்சினை. தேனிலவுக்கு எங்கு போவது என்பதுதான் நம் பிரச்சினை'' என்றான் வசந்த். வெட்கப்பட்டாள் கீதா. வசந்த்தின் தைரியம் அவளையும் தொற்றிக் கொண்டது. காதலனோடு திருமணம் நடக்கக்கூடும்என்ற எண்ணம் அவளுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.

இருவரும் ஓர் ஆட்டோவில் ஏறி கீதாவின் வீட்டிற்குச் சென்றனர். வசந்த்தின் தோள்களில் கீதா சாய்ந்து கொண்டு வந்தாள். அவனோ உரிமையுடன் அவள் தோள்களைச் சுற்றி தன் இடக் கையைப் போட்டுக் கொண்டான். என்ன இன்பம், என்ன இன்பம்! ஆட்டோ டிரைவர் இவர்களின் இன்ப உரசல்களைக் கண்டு கொள்ளவில்லை. பாவம், அவர் குடும்பக் கவலை அவருக்கு. ஆட்டோ நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று இருவருக்குமே தோன்றியது. ஆனாலும் கீதாவின் வீடு வந்துவிட்டது.

கீதாவின் வீடு ஒரே களேபரமாக இருந்தது. வயதான போலீஸ்காரர் அவர்கள் இருவரும் வீட்டிற்குள் நுழையுமுன்பே கீதாவின் அருகே வந்து ஒரு சல்யூட் போட்டு, "சின்னம்மா, கமிஷனர் அய்யா நம் வீட்டிற்கு விருந்திற்கு வந்திருக்கிறார்'' என்ற தகவலை சொல்லி சந்தோஷப்பட்டார். கீதாவுடன் சென்றதால் சந்தடிசாக்கில் வசந்திற்கும் ஒரு சல்யூட் கிடைத்தது.

இந்தச் சமயத்தில் வீட்டிற்குள் போவதா என்று ஒரு வினாடி கீதா தயங்க, வசந்த் சிறிதும் தயங்காமல் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டின் வரவேற்பறையில் கமிஷனர் தன் பதவி தந்த தெம்பில் கம்பீரமாக அமர்ந்து, உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்தார். கீதாவின் அப்பா இன்ஸ்பெக்டர் மாரியப்பனும், இன்னும் சில அதிகாரிகளும் அவரைச் சுற்றி பவ்யமாக அமர்ந்திருந்தனர்.

வசந்த்தையும் கீதாவையும் அருகருகே தன் வீட்டிற்குள்ளேயே பார்த்த மாரியப்பனுக்கு முகம் கறுத்து சிறுத்தது. என்ன செய்யலாம் என்று அவர் யோசிக்குமுன், கமிஷனர் ஆர்ப்பாட்டமான குரலில் கீதாவை வரவேற்றார், "வாம்மா கீதா, எப்படி இருக்கிறாய்? தம்பி யார்?'' என்று பிரியத்துடன் விசாரித்தார்.

அவள் பதில் சொல்லுமுன், "தம்பி, உனக்கு எந்த ஊர்?'' என்று வசந்த்தை உற்றுப் பார்த்துக் கேட்டார். "மதுரை சார்'' என்று பணிவுடன் வசந்த் சொன்னான்.

கமிஷனர் குரலில் பரபரப்புடன், "உனக்கு தல்லாகுளத்தில் சீனிவாசன் என்று யாரையாவது தெரியுமா?'' என்று கேட்டார். "என் அப்பா பெயர் சீனிவாசன். தல்லாகுளத்தில் முன்பு சீனி சில்க்ஸ் என்ற பெயரில் துணிக்கடை வைத்திருந்தார்'' என்றான் வசந்த்.

"அதுதானே பார்த்தேன். அப்படியே உன் அப்பாவை உரித்து வைத்திருக்கிறாயே! உன் வயதில் சீனிவாசன் உன்னைப் போலவேதான் இருப்பான். இப்படி வந்து என் பக்கமாக உட்கார்'' என்ற கமிஷனர் தம் பழைய நினைவுகளில் மூழ்கினார். "நானும், அவனும் பள்ளிக்கூட சிநேகிதர்கள். அவன் என் அண்ணன் மாதிரி. நான் வசதி குறைவானவன். அவன்தான் என் படிப்புச் செலவைப் பார்த்துக் கொண்டான். என் கமிஷனர் பதவி அவன் போட்ட பிச்சை. இருபது வருடங்களுக்கு முன்னால் நான் டெல்லியில் இருந்தபோது உன் அப்பா இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேன். அப்புறம் எந்தத் தொடர்பும் இல்லை'' என்றார். வசந்த்தைப் பற்றி மேலும் மேலும் கமிஷனர் உற்சாகமாக விசாரிக்க, இன்ஸ்பெக்டர் மாரியப்பனுக்கு விஷயம் தம் கைகளை மீறிப் போய்க்கொண்டிருப்பது புரியத் தொடங்கியது.

"சொத்து வழக்குகளில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது. அதற்கப்புறம் நானும், அம்மாவும் சென்னை வந்துவிட்டோம் சார்'' என்றான் வசந்த்.

"சார் என்ன சார், செவிட்டிலேயே அறைந்துவிடுவேன். சித்தப்பா என்று கூப்பிடு'' என்று அதிகாரமாக அன்பைக் கொட்டிய கமிஷனர், "ஆமாம், உள்ளே நுழையும்போது நீயும், கீதாவும் கைகளைக் கோத்துக்கொண்டு வந்ததைப் பார்த்தேன். போலீஸ்காரன் கண்ணிலிருந்து எதுவும் தப்பிக்க முடியாது. காதலா?'' என்று கேட்டு சிரித்தார்.

"ஆமாம், சித்தப்பா'' பளிச்சென்று பதில் சொன்னான் வசந்த்.

"பாரையா தைரியத்தை! போலீஸ்காரனுக்கு மாப்பிள்ளையாக வர உனக்கு தகுதி இருக்கிறது'' என்ற கமிஷனர், கீதாவைப் பார்த்து, "என்னம்மா கீதா, உனக்கு சம்மதம்தானே?'' என்றார்.

"என்ன மாமா, அவரைக் கட்டிக்கொள்ள எந்தப் பெண்ணுக்- காவது கசக்குமா?'' என்று மெல்லச் சொன்னாள் கீதா.

"அப்படிப் போடு அருவாளை'' என்று சிரித்த கமிஷனர், யாரோ பெற்ற பெண்ணுக்கும் பையனுக்கும் தான் திருமணம் பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டு, "என்னய்யா மாரியப்பன், உன் பெண்ணுக்கும், என் பையனுக்கும் முடித்துவிடலாமில்லையா?'' என்று இன்ஸ்பெக்டர் மாரியப்பனைப் பார்த்து உரத்த குரலில் கேட்டார்.

"சார், பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய வேண்டிய வயதுதான். ஆனால், பையனைப் பற்றி விசாரிக்க வேண்டுமே'' என்று தயக்கத்துடன் பணிவாகச் சொன்னார் இன்ஸ்பெக்டர் மாரியப்பன்.

"அட போய்யா, நீயும் உன் விசாரணையும். அவனைப் பற்றி என்னிடம் விசாரி. வசந்த் என் பையனைப் போல, தெரிகிறதா? அவன் குடும்பம் எப்பேர்ப்பட்ட குடும்பம்! ஜாதி, ஜாதகத்தை எல்லாம் விட்டுத்தள்ளு. பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை தானாக வரும்போது எதையாவது சொல்லி நாமே அதைக் கெடுக்கக்கூடாது'' என்றார் கமிஷனர்.

அதற்கு மேல் அவரை மறுத்துப் பேச துணிவில்லாத இன்ஸ்பெக்டர் மாரியப்பன், "ஆகட்டும் சார், நீங்கள் இத்தனை தூரம் சொல்லும்போது அப்படியே செய்துவிடலாம்'' என்றார். அதிகாரத்தால் முரட்டுத்தனத்தை மாற்ற முடியாவிட்டாலும், அடக்க முடியாதா என்ன!

திடீரென்று பூத்த நாணத்தால் கீதா தன் தலையை சிறிது கவிழ்த்துக் கொண்டு ஓரக் கண்ணால் ஏதோ இரகசியச் செய்தியை வசந்த்திற்கு அவசரமாக அனுப்ப, அதைப் பெற்றுக் கொண்ட வசந்த் பதில் செய்தியை தன் கண்களால் உடனே மறுதபாலில் அனுப்பி வைத்தான்.

காதலர்களின் கண்கள் பேசும் சங்கேத மொழி அவர்களுக்கு மட்டும்தான் புரியும். நமக்கெங்கே புரியப்போகிறது!

முற்றும்.

*******



book | by Dr. Radut