Skip to Content

11. அன்னை இலக்கியம் - மனிதனும் மிருகமும்

"அன்னை இலக்கியம்"

மனிதனும் மிருகமும்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

சியாமளா ராவ்

"ஐயோ... என் குழந்தையை வித்துடப் போறார் போலிருக்கே...'' அம்மா... அம்மா... காப்பாத்துங்கோ. எனக்கு இப்ப உன்னைத் தவிர யாருமேயில்லே. நான் என்ன பண்றதுன்னும் புரியலே. பச்சிளம் சிசு, இதைப் போய் விலை பேசியிருக்காரே... அம்மா... வாங்கோ... எனக்குத் துணையாயிருங்கோ... இந்தக் குழந்தையைக் காப்பாத்துங்கோ. என் மனசார உங்க காலடியிலேயே இந்தக் குழந்தையை விட்டுருக்கேன். காப்பாத்துங்கோ... காப்பாத்துங்கோ... அம்மா... அம்மா... அம்மா...''

கண்களிலிருந்து நீர் மணிகள் உருள, ஆடாமல், அசையாமல் அன்னையின் சரணத்தை விடாமல் கூறிக்கொண்டேயிருந்தவளின் கண்களை இமைகள் மூடின. உடல் மட்டும் அங்கிருக்க, அவளின் இதயம், அன்னையைச் சரணடைந்ததில், வேறு எந்தவிதமான எண்ணங்களும், கண்ணீரும், உணர்வுகளும் அற்றுப்போக, அப்படியே தியானித்தபடி, இருந்த நிலையிலேயேயிருந்தாள். எத்தனை நேரமோ அவளுக்கே தெரியாது. பரிபூர்ணமாக அன்னையின் பாதங்களைப் பற்றிச் சரணாகதியடைந்திருந்தாள். அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவளுக்குத் தெரியாத அளவிற்கு, அன்னையின் பாதங்களில் அவளின் அத்தனை உணர்வுகளும் சரணடைந்திருந்தன. ஆனாலும் உடல் அசையாமல், படுத்த நிலையிலேயேயிருந்தாள்.

இவ்வாறு சரணடைவதுஎன்பது எல்லோருக்கும் சாத்தியமேயில்லை. நிச்சயமாய் அலைபாயும் நம் மனம், பல கிளைகளை ஏற்படுத்திக் கொண்டு, ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு நினைவலையை உற்பத்தி செய்து அலைகழிக்கும். இதைத் தவிர்க்க, நம் மனம் முழுவதும் "அன்னையே" சுழன்று கொண்டிருக்க வேண்டும். ஆமாம்... நிச்சயமாய், "அன்னை” என்கிற அந்த மூன்றெழுத்துகளை மனமுழுவதும் உலவ விடவேண்டும். அதுவும் அந்த உலாவுதல், அன்னையின் இச்சைப்படித்தானிருக்க வேண்டுமேதவிர, நம் இச்சைக்கு உகந்தபடி இருக்கவே கூடாது. அடுத்து நமக்கு நடக்கப் போவது என்ன? இந்த கேள்விக் குறிகளோ, அதற்குண்டான மனதின் சுழற்சிகளோ, அறவே நம்மை விட்டு விலகவேண்டும். ஆமாம்...

ஒரு தாயின் வயிற்றில், குழந்தை ஜனிப்பதிலிருந்து, ஒன்பது மாதங்கள் வரை, தன்னுடைய உடலை, அவயவங்களைக் குறுக்கிக் கொண்டு, அதுவும், ஒவ்வோர் அவயவமாக உற்பத்தியாகும் போது, அதன் வளர்ச்சி, அந்த சிசுவே உணரமுடியாமல், அந்த கர்ப்பக்கிரஹத்தில், எந்தவிதமான சஞ்சலமோ, பயமோயின்றி, அந்த இருட்டறையில் மிதந்து, சுழன்று கொண்டிருக்கிறதே... அந்த "அஞ்ஞானி” குழந்தை, அந்த இருட்டறையிலிருந்து வெளியே வந்தவுடன், கை கால்களை அசைக்கத் தெரிந்த அந்த சிசு, வளர, வளர, அந்த சரீரத்தில் மாற்றங்கள் இயற்கையாக அமைய, அந்த "மனம்” என்னும் உணர்வில் மட்டும், ஏன் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான எண்ணங்கள், நல்லதும், அல்லாததுமானதாக வெவ்வேறு விகிதத்தில் ஏற்படுவது எதனால்?

"சூழ்நிலை”. ஆமாம், நம்மைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையேயன்றி, வேறெதுவுமில்லை.

மாசற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர்கள் நம் முன்னோர்கள். அதனால் அந்தக் காலத்தில் இருந்தவர்களிடையேயிருந்தது, சத்தியமும், நேர்மையும், உண்மையும் ததும்பியிருந்தன. அதனால் நீரும், காற்றும், ஏன் "பஞ்ச பூதங்களும்" அவரவரின் வேலையை, அந்தந்த நேரத்திற்குத் தகுந்தபடி தங்கள் வேலையைச் செய்தன எனக் கூறினால் மிகையாகாது.

மிருகங்களும், தங்களுக்கான தேவையைத் தவிர, மற்றபடி எந்த தொந்திரவுமின்றி, சுதந்திரமாய் காட்டில் உலாவின.

விட்டோமா நாம். காடுகளையும் அழிக்கத் தொடங்கிவிட்டோம். மிருகங்களின் வாழும் இடத்தையும், ஆகாரத்திற்காக, அவைகளின் வேட்டைக்கான சுற்றுப்புறங்களையும் தகர்த்து, அழித்தே விட்டோம். அப்போது அந்த மிருகங்கள் வேறு வழியின்றி, ஆகாரத்தின் பொருட்டு, தங்கள் இடத்தைவிட்டு, வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது மனிதர்களாகிய நாம்தான். மிருகங்கள், தத்தமது இயல்புடனேயேதான் இருக்கின்றன இப்போதும். ஆனால், அவைகளையும் தூண்டிவிடுவதுபோல், அவைகளின் சூழ்நிலைகளை அழித்து, நம் இச்சைக்கேற்ப நடந்து கொள்வது, மனிதர்களாகிய நாம்தான். இப்போது புரிகிறதா... மாறியது மனிதர்களா? இல்லை மிருகங்களா?

நம்முள்ளேயே இந்தக் கேள்வியைக் கேட்டால் நாமே தலைகுனிய வேண்டிய நிலைதான்.

ஆம், மனிதர்கள்தாம் மாறி, சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, மிருக குணங்களைத் தங்களுக்குள் அனுமதித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர் என்பது உண்மைதானே. இதில் மனிதனை உயர்த்தியும், மிருகங்களைத் தாழ்த்தியும் நாம் பேசுவது சரியா? தவறா?

இதை அவரவர்களே, தங்களுக்குள் "பட்டிமன்றம்” நடத்திப் பார்த்து, தீர்மானிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

******

ராமனாதன், வந்தவருடன் வெளியே போனது புரிந்தது. பார்வதியின் மனம் இப்போது, தைர்யமாக யோசிப்பதில் ஈடுபட்டது. சட்டென மாமியின் வீட்டிற்கு, குழந்தையை எடுத்துக்கொண்டு சென்றாள்.

"என்னடி பார்வதி... என்ன விஷயம்? சொல்லு...''

நடந்ததைக் கூறினாள் கண்கள் கலங்க. ஆனால் உடனே சுதாரித்து தைர்யமாய் பேசவும் செய்தாள்.

"மாமி... நான் அன்னைகிட்ட சொல்லிட்டேன். கண்டிப்பா இந்த விஷயம் நடக்காது. அன்னை விடமாட்டார். எனக்கு தைர்யம் வந்துடுத்து. நடக்கவே நடக்காது. ஆமா மாமி. என்னோட நியாயமான கோரிக்கைக்கு அன்னை கைவிடமாட்டார். அந்தத் தைர்யம் எனக்கு மனசு ரொம்பயிருக்கு மாமி. பயமேயில்லே. நடக்காது மாமி... நடக்காது...

ம்... ஆமாம்...'' உறுதியுடன் சொல்லும் பார்வதியையே ஆச்சர்யத்துடன் பார்த்தாள் மாமி.

புரிந்துபோனது மாமிக்கு. அன்னையை அவள் தன் மனமார ஏற்றுக்கொண்டுவிட்டாள் என்பது அறிந்ததில், மனம் கொஞ்சம் சமாதானமாகியது. "ம். இனிமேல் பார்வதி, எந்தவிதமான இக்கட்டுகளையும், கஷ்டங்களையும், அன்னையின் துணையோடு, விலக்கிவிடுவாள் என்கிற நம்பிக்கை அவளுள் ஆணித்தரமாக உட்கார்ந்தே விட்டது. அன்னையின் சரணத்தைக் கூறியபடி கண்கள் தளும்ப, மெய்சோர நின்றவளின் தோளில் ஒரு கரம்பட, நினைவிற்குள் வந்தாள்.

"மாமி... இந்த வீடு வாடகை வீடு. அதனால, இதைக் காலி பண்ணிடலாம்னு இருக்கேன் மாமி...''

"என்னடீ சொல்றே... " இதை விட்டா, இதே வாடகைக்கு வேறு வீடு கிடைக்குமா... வீடு சிறுசாயிருந்தாலும், பின்னாடி கொல்லைப்புறமும், செடிகளுமா காத்தோட்டமா தனி வீடு போலவிருக்கு. இப்டி வேறெங்காவது கிடைக்குமாடி பார்வதி. எல்லாத்தையும் விடு. நான் ரொம்ப உன்னைத் தொந்திரவு பண்றேனோ... அதனால என்னைவிட்டு விலகலாம்னு நினைக்கிறாயாடி... சொல்லு...''

கேட்டபடி மாமி, கண்கள் வழிய, உதடு பிதுங்க, துடித்தபடி கேட்டவளை, அப்படியே குழந்தையைக் கீழே படுக்கவிட்டு, ஓடி வந்து மாமியை கட்டிப்பிடித்துக் கொண்டவள், கண்ணீரைத் துடைத்தபடி கூறினாள்.

"மாமி வீட்டைத்தான் காலி பண்ணணும்னு சொன்னேனே ஒழிய, உங்களை விட்டுப் போறேன்னு சொல்லவேயில்லையே மாமி...''

"அப்போ... என்ன சொல்லவரே...'' இடைமறித்துக் கேட்டாள் மாமி.

"உங்காத்துலேயே குடி வந்துடப் போறேன்னுதான் சொல்ல வந்தேன். ஆமாம் மாமி. நீங்களும் உங்க வீட்டுக்கும், எங்க வீட்டுக்குமா அலைய வேண்டியிருக்கு. பெரியவனோ... உங்காத்துலேயே தான் இருக்கான். எல்லாத்தையும்விட எங்காத்துக்காரரோட, எண்ணங்களிலிருந்து தப்பிக்கணும்னா... உங்க வீட்டோடயிருக்கணும்னு தீர்மானம் பண்ணிட்டேன். அதுவும், இந்த எண்ணத்தை உண்டு பண்ணினதே "அன்னை”தான். ஆமாம் மாமி. எனக்கு அன்னையைக் காட்டிக்கொடுத்தது நீங்கதான். அந்த அன்னையை இந்த வீட்டுல கொண்டு வந்ததும் நீங்கதான். இப்போ, நான் சொன்ன, இந்த யோசனையையும் தந்தது அன்னைதான். எனக்குத் துணையாயிருக்க வேண்டியவரோட துணையே... பிரயோஜனமில்லாதது என "அன்னை”க் காட்டிக் கொடுத்துட்டார். உங்களோடயிருந்தா... இந்த மாதிரியான எண்ணங்களை, ஆரம்பத்துலேயே துண்டிச்சு விட்டுடலாம். நிச்சயமா அவரால எதையும் செய்யவிடாம பண்ணிடலாம் மாமி. என்ன சொல்றேள்...''

"தனிக்கட்டையாயிருக்கிற எனக்கு, நீயும், குழந்தைகளுமா கலகலன்னு இருக்கப் போறதை நினைச்சாலே பொங்கறதுடி மனசு. வந்துடு. ஆனதைப் பார்க்கலாம். நல்லதனமாவே... உன்னோட ஆத்துக்காரரை வழிக்குக் கொண்டு வர, அன்னை உனக்கு இந்த யோசனையைத் தந்துருக்கார். நல்லதாச்சு. சரி... சாமானையெல்லாம் எடுத்து வைக்கட்டா...''

"ம்... ஹும்... வேண்டாம் மாமி... அவர் வரட்டும். வந்த பிற்பாடு, அவரோட அனுமதியோடவே வரேன் மாமி. நாம எல்லாமே அவரோட விருப்பப்படி நடக்கறாப்பலயிருக்கணும். நாமா எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணினது போலவிருந்தா, அவரோட விருப்பத்தைக் கேக்காம, நம்ம இஷ்டப்படி நடக்கிறதுபோல தோணிடுத்துன்னா... அவ்வளவுதான். எல்லாமே வேறேவிதமா மாறிடும். அவர் வரட்டும். கேட்டுண்டே நடக்கலாம்னு இருக்கேன்... சரியா மாமி...''

வியந்தேதான் போனாள் மாமி. ஒண்ணுமே தெரியாதவளாக, எப்போதும் சோகத்தையே முகத்தில் தரித்துக்கொண்டு, பலகீனமானவளாக, கண்களில் ஒளியேயின்றி, சுறுசுறுப்பில்லாமல், "என் தலைவிதியே இப்படித்தான்” என்பதுபோல் சுரத்தில்லாமல் அலைந்து கொண்டிருந்தவளின் முகம் இப்போது... ம்... இப்போது எப்படி ஒரு தெளிவோடு, தெம்போடு இருக்கிறது. கட்டியவனின் அலைக்கழிப்பில் மனம் நொந்து போனவளின் மனதில், எப்படி இத்தனை யோசனைகள்? அதுவும், அந்தக் கணவனின் அனுமதியோடு, அவனைக் கலந்தாலோசித்தே செய்ய வேண்டுமென்ற எண்ணம் வந்ததெப்படி?

அன்னையின் பாதங்களையே, "சரணாகதி” எனப் பற்றிக்கொண்டவளுக்கு, அவளுள்ளேயே புகுந்து, நல்ல தெளிவையும், யோசனைகளையும் அள்ளி, அள்ளித் தருகிறாரென்றால்... காரணம் பார்வதியேதான். ஆமாம், அவளின் சரணாகதியும், "அன்னை" என்றாலே பரவசப்படும் உணர்வுகளும், பிரார்த்தனை என்றாலே, மெய்மறந்துபோகும் நிலையும், அந்தக் கணத்தில் அவளுள் "அன்னை'யைத் தவிற வேறெந்த எண்ணங்களோ, நினைவுகளோ, ஊசி முனையளவுகூட புகுந்துவிடாமல், "அன்னை' என்கிற அந்த சுழற்சியை மட்டுமே, உச்சி முதல் பாதம் வரை பரவச் செய்து, அந்த மூன்றெழுத்திலேயே அவளுடைய மூச்சுக் காற்றும் உலாவுவதால், உலவச் செய்வதால், "அன்னை" நிச்சயம் அவளுக்குத் தன் கடைக்கண் பார்வையை, மகிழ்ச்சியோடு வீசமாட்டாரா என்ன?

"சிறப்பான வாழ்க்கை - அன்னைக்குப் பிடித்த மனநிலைக்கு அடையாளம்"

"சிரமமான வாழ்க்கை - அன்னைக்குப் பிடிக்காத மனநிலைக்கு அடையாளம்"

"அன்னை" என்னும் மகாசக்தியை ஏற்றுக்கொண்ட நம் மனம், ஆரம்பத்தில் எத்தகைய உணர்ச்சிபூர்வமாக, முழுஉணர்வுமாக, உண்மையாக, மனம்பூராவும் மட்டுமின்றி, நம் சரீரம் பூராவும் புளகித்து, மயிர்க்கூச்சம் ஏற்படும் அளவிற்கு, சரீரமே சிலிர்த்துப்போகும் அளவிற்கு, நம் பிரார்த்தனையின் தீவிரம் இருக்கிறது. அந்த, அதே உணர்வுகள் நம்மிடம் எப்போதும் இருக்கிறதா என, நாமே, நம்மை உணர்ந்து அறிந்தோமானால், நாட்பட, நாட்பட, அந்த உணர்வின் தீவிரம், பிரார்த்தனையின் உணர்வுகள், எல்லாமே... எல்லாமே மிகச் சாதாரண நிலைக்கு, முதலிலிருந்த அசாதாரணத்தைவிட்டு வந்துவிடுகிறது. இதயத்திலிருந்து வரும் பரிபூர்ணமான பிரார்த்தனை நம்மிடம் முழுமையாக இருப்பதில்லை.

தினந்தோறும் ஓர் ஊதுபத்தி ஏற்றி, கண்கள் மூடி, தியானிக்கிறோம். அந்த தியானத்தின் முழுமை? ஆம், கேள்விக்குறிதான். தியானம்என்பது நீண்ட நேரம் செய்ய வேண்டுமென்பதேயில்லை. நம் மனதை ஒருங்கிணைத்து சில நிமிடங்கள், ஆமாம்... சில நிமிடங்களே செய்தால் போதுமானது. "அன்னை" நம் மனதை எத்தனை ஆக்ரமிக்கிறாரோ, அத்தனை நமக்குத் தான் நன்மை. அந்த நன்மையை, நம்மை விட்டு அகலாதபடி, ஒரு பிடிப்போடு இருத்திக்கொள்ள வேண்டுமென்றால், நம் மனதுள், இதயத்தினுள் அன்னையின் "ஆவாஹனம்” மிகமிக அவசியம்.

நம் விலையுயர்ந்த நகைகளை, லாக்கரில் வைத்தோ, இல்லை புதுமையான பூட்டுக்கள் கொண்ட மரப்பெட்டியிலோ, இன்னும் வேறு ஏதாவது பாதுகாப்பான இடத்தில் வைத்துப் பத்திரப்படுத்துகிறோம்.

நம் உடைகளை, பட்டுப் புடவைகளை, அழகாக மடித்து, ஒரு நல்ல வெள்ளைத் துணியிலோ, அல்லது டவலில் சுற்றியோ, பூச்சி உருண்டைகளைப் போட்டு, உலர்ந்த வெட்டிவேரைப் போட்டோ, அத்தனை முக்கியத்துவத்துடன் பராமரிக்கிறோம்.

இத்தனையும் செய்யும் நாம், நம் இதயத்தை மட்டும் எந்த விதமான யோசனையுமின்றி, கருத்துமின்றி, அதனிஷ்டப்படி அலைய விட்டுவிடுகிறோமே... இது முறையாகுமா?

இல்லையென்று நன்றாகவே புரியவும்புரிகிறது. ஆனாலும் மாற்றம் என்பதை உணர, கொஞ்சம் சங்கடமாகவேயிருக்கிறதுதானே?

நம் மனச் சங்கடங்களை, நம் நெருங்கிய சிநேகிதியிடமோ, இல்லை உற்றாரிடமோ, பெற்றவரிடமோ சொல்கிறோமேதவிர, முதலில் "அன்னையிடம்" கூறி, "சரணாகதி" அடைவதைக் கடைசியில்தானே செய்கிறோம். இது சரியா? அதைப் பற்றிய யோசனையே... மிக நேரம் கழித்து நம்முள் வருகிறது. இதை நிச்சயம் நம்மால் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நம்முள் முதலில் ஏற்படவேண்டிய தீர்மானம். இதை உணர்ந்தால், நம் வாழ்வை அன்னையின் கரத்தில் ஒப்படைத்து விட்டோமானால், நம் வாழ்க்கையின் தரம் உயர்வது நிச்சயம் நமக்குப் புரியும். ஒவ்வொரு படியையும் சுலபமாகக் கடந்துபோக, அன்னையின் கரம் நம்மை ஆட்கொள்ளும். இது சத்தியமான நிஜம்.

பார்வதி, தன் முழுமனதுடன் அன்னையை ஏற்றுக்கொண்டு விட்டாள். கணவனின், வேண்டாத சேர்க்கைகள், அதனால் எந்த கீழ்த்தரத்துக்கும், தன் குழந்தையை விற்கும் அளவிற்குப் போனாலும், அன்னையின்முன் நின்று, தன் சங்கடத்திற்காகப் பரிகாரம் வேண்டினாலும், அதே சமயம் கணவனையும் நல்வழிப்படுத்த வேண்டுமென்ற உறுதி அவளிடம் இருந்ததால், பெற்ற குழந்தையை விற்கத் துணிந்த கணவனின் எண்ணம் நடவாமலிருக்க, கூடவே ஒரு "கரம்" வேண்டி, மாமியின் வீட்டிற்கே குடிபோகும் யோசனையை, தன் கணவனின் அனுமதியோடுதான் போகவேண்டும்என்கிற தீர்மானம் அவளுள் எழுந்தது எதனால்?

எக்காரணம் கொண்டும் கணவரை இழிவுபடுத்தாமல், அதே சமயம் அவனின் எண்ணம் நடக்கவிடாமல், அன்னையின் துணையோடு, தைர்யமாக, சாதுர்யமாக, அன்பாக, பாசமாக நடந்து வெற்றியடைய வேண்டுமென்பதே அவளின் ஆழ்மன விருப்பம். நிச்சயம் இது நடந்தே தீரும்.

கெட்டுப் போன பதார்த்தங்களைத் தூக்கி எறியலாம். உடைந்து போனவைகளைக் குப்பைத் தொட்டியில் போடலாம். கிழிந்து போனவைகளை அழுக்குத் துடைக்க உபயோகிக்கலாம். கீழே கொட்டிப் போன, திரவ பதார்த்தங்களை அள்ள முடியாமல் கழுவிவிடலாம்.

ஆனால், "கணவன்” என்னும் ஒரு மனிதன், மனதாலும், உடலாலும் கெட்டுப்போனாலும், "கண்-அவன்" என்றே எண்ணிக் கொண்டிருக்கும் நாம், அவரைவிட்டு விலக முடியுமா? இல்லை விலகக்கூடுமா? எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா?

மைசூர்பாகு கிளறி, வில்லையாக வரவில்லையென்றால், அதை உருண்டையாக "லட்டு' போல் பிடித்து ஓர் உருவகப்படுத்துகிறோம் அல்லவா? அப்படியிருக்கக் கட்டிய கணவனை, நம்மால் முடிந்தவரை திருத்தப் பார்க்க வேண்டும். "அன்னை" என்றும் "அற்புதம்", எப்போதுமே நம்மைக் கைக் கொடுத்து உயரத்துக்கு ஏற்றிவிடத் தயாராகயிருக்கும் போது, நாம் ஏன் தயங்க வேண்டும்? கூடாது.

"சிறப்பான வாழ்க்கை - அன்னைக்குப் பிடித்த மனநிலைக்கு அடையாளம்..."

அந்த சிறப்பான வாழ்க்கை அமைய வேண்டுமெனில் நம்மால் முடிந்தஅளவு, அதற்கான எல்லா நல்ல வழிகளையும், அன்னையின் உதவியோடு, அன்னையின் ஆசியோடு, அன்னையின் அருளோடு நம்மால் நிச்சயம் அடைய முடியும்என்பது உறுதியான ஒன்று.

"அருளோவியம்" பெயரே நம்மை ஈர்க்கிறதல்லவா! இன்றும் அதிலுள்ள இருபத்தெட்டு அத்தியாயங்களையும் படித்து, தெளிவடைதல் நமக்கு மிக அவசியம்.

அன்னையை நேரில் பார்த்திராத எத்தனை பேராகிய நாம், அவரைப்பற்றிய புத்தகங்கள், நம் வாழ்விற்குத் தேவையான அடிப்படைத் தத்துவங்கள், சமயத்திற்குத் தகுந்த பிரார்த்தனைகள், நம் மனதை மட்டுமன்று, உடல் நலத்தையும் சீராக்கும் பல விஷயங்கள் ததும்பும், இந்தப் புத்தகங்கள் நமக்கு அரிய, கிடைத்தற்கரிய பொக்கிஷங்கள். அந்தப் பொக்கிஷங்களை நாம் என்றென்றும் படித்து, நம் மனதில் ஈர்த்து, அதை அவ்வப்போது நம் வாழ்வில் செயல்பட்டு உணர்ந்து, நம் தவறுகளை, அறிந்தும், அறியாமலும் செய்த வேண்டாதவைகளுக்காக மனம் வருந்தி, அதை அறவே அகற்றி, செயல்படவேண்டுமென்பதே நம்முள் ஏற்படும் பெரிய மாற்றமாகவிருக்க வேண்டும். ஆமாம். இத்தகைய மாற்றங்கள் நம்மை, எப்படி, எந்தவிதத்தில் உயர்வாகவும், அன்னையின் அருள் கடாட்சத்துக்கு, அன்னையின் அருகிலேயே அழைத்துச் செல்லும்என்பது குறித்து, நம்மாலேயே நன்கு உணரக்கூடிய அளவிற்கு அன்னை செயல்படுவார் என்பது திண்ணம்.

அன்னையின் மேல் நாம் "நம்பிக்கை" என்பதை பூரணமாக உணரவேண்டும். எந்த நிலையிலும், சந்தோஷமானதாகயிருந்தாலும் சரி, நம்மைக் கஷ்டப்படுத்தி, நம்மை பலவிதமாக ஆட்டிப் படைக்கும் நம் எண்ணங்களின் கூட்டங்களையும் சரி, "அன்னை” என்னும் மூன்றெழுத்து தாரக மந்திரத்தை, நம் மனதுள் பிரதிஷ்டை செய்து, நம்மை விட்டு அகலாமல், வெளியேறாமல் பார்த்துக் கொண்டோமானாலே போதுமே. நம் வினைகள், கஷ்டங்கள், வேண்டாதவைகள், நம் "பக்திக்கும்”, "சரணாகதி"க்கும் ஏற்றவாறு, நிச்சயமாக, சத்தியமாகப் "பலன்” கிடைக்கும்என்பது திண்ணம்.

ஒரு சின்ன செடியையோ அல்லது விதைகளையோ, பூமியில் நட்டு, அதற்குத் தண்ணீர் ஊற்றி, உரமிட்டு, சின்ன வேலியைச் சுற்றிப் போட்டு, எந்தவிதத்திலும் அந்தச் சின்ன செடிக்கு, எந்தவிதமான தொந்திரவு வாராமல் பாதுகாக்கிறோமே! அது ஏன்?

"ம்... ஆமாம். நாளை அது வளர்ந்து, பூத்து, காய்த்து, கனிகளைத் தரும்என்கிற எதிர்பார்ப்பும், சந்தோஷமும், நம்முள் அந்தச் செடியோடு வளர்ந்து, அதன் வளர்ச்சியை ஈடுபாட்டோடு ரசித்து, ஒவ்வோர் இலையையும், மொட்டையும், பூவையும், காயையும், ஆவலோடு ரசிக்கிறோம், பிறகு ருசிக்கிறோம்.

நம் கண்கள் முன்னே பார்வையில் படும் அந்தச் சின்ன விதையின் வளர்ச்சியை நாம் அத்தனை உணர்வுபூர்வமாக உணர்ந்து மெய்சிலிர்க்கிறோம். ஒரு சின்ன பிஞ்சு அதில் விளைந்தால் கூட, மனசு புளகிக்கும் ஆரவாரத்துக்கு எல்லையுண்டா என்ன?

இத்தனை சந்தோஷங்களையும், வியப்பையும், நாம் நம் "அன்னை"யை மனதிலிறுத்தி, நம் மனதையே பூமியாக்கி, அதில் அன்னை என்னும் விதையை பக்தியோடு விதைத்து, நம் பக்தியின் உணர்வுகளையும், பரவசங்களையும், புளகித்தலையும், நீராக ஊற்றி, அந்தச் சின்ன விதை, நம் முன்னே செய்யும் அத்தனை விளைச்சல்களையும், ஒவ்வொரு வினாடியும் நம்மால் உணரமுடியுமே! அதுவும், நம்மிடம் உள்ள வேண்டாத எண்ணங்கள் என்னும் விதைகளை, நம் மனமாகிய பூமியிலிருந்து, நிச்சயமாகக் களைந்து எடுத்து விடுவதை, நம்மால் உணரமுடியும். நம்மால், நம்மிலிருந்து, களையவேண்டியதை உணர முடியாமல் போனாலும், அன்னையும், நாம் உணராமலேயே அதைக் களைந்துவிடுவார். (அந்த எண்ணம் நிறைவேறாமல் தவிர்த்து விடுவார்)

நாம் நினைத்த எண்ணம் ஒன்று, தடைப்பட்டு, நிறைவேறாமல் போனால், நம் மனம் படாதபாடு படுகிறது. ஆனால், அன்னையை தெய்வமாக வணங்கும், நம் எண்ணங்களில் தடைபட்டால், அந்தத் தடை "அவசியம்” என்பதை நாம் உணர்ந்து, நல்ல விதத்தில் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவம் நமக்கு வேண்டும். அந்த மனப் பக்குவத்தையும் நாம் "அன்னை'யிடமே வேண்டிப் பெறலாம். எந்த ஒரு விஷயத்திற்கும், எண்ணங்களுக்கும், நம்மால் ஈடு கொடுக்க முடியாது போனாலோ, வழி தோன்றாமல் போனாலோ... நம்முள் ஏற்படும் சஞ்சலத்தையும், இயலாமையையும், ஏமாற்றங்களையும், நமக்குள்ளேயே வைத்துப் புழுங்குவது நமது இயல்பு. அந்த இயல்பை, நம்முள்ளிருந்து எடுத்து எறிந்துவிட்டால், அந்த அத்தனை தேவையற்றதும் நம்மிடமிருந்து விடுபட்டு ஓடியே போய்விடும். அது உறுதி.

உதாரணமாக, பிறப்பு என்றால் சந்தோμக்கும் நம் மனம், இறப்பு என்பதை, உடனடியாக வேண்டாம், கொஞ்ச நாட்களுக்காகவாவது மறக்க முயல்கிறோமா? ம்... ஹும்... அதுவும் தவறு. மறக்க வேண்டவே வேண்டாம். பிறப்பு... என்பது எப்படி இயற்கையும், இயல்புமானதோ, அதேபோல்தான் இறப்பும் இயற்கையானது என்பதை நம்மால் சுலபமாக ஏற்றுக்கொள்ள முடிகிறதில்லையே. அந்தப் பக்குவம் நமக்கு வரவேண்டுமெனில், எத்தனையோ நிலைகளைக் கடக்கவேண்டிய அளவில்தான் உள்ளோம். நாட்பட, நாட்பட, நம்முள்ளிருக்கும் அந்த எண்ணங்களின் வேகம் குறைந்து, அழுகை அடங்குகிறதே தவிர, அந்தத் துக்கம் "ஒரு கறுப்புப் பொட்டாக" நம்முள் உறைந்து போய்விடுகிறது. இதுதானே நடக்கும் உண்மை.

"ஜனனம், மரணம்'' இந்த இரண்டையுமே ஒன்று போல் ஏற்றுக் கொள்ள, நம் மனத்தின் பக்குவத்தை அடைய, அன்னையின் கோட்பாடுகளில் சில... ஆமாம் சிலவற்றைக் கடைப்பிடித்தாலே போதும், நம்மால் முடியும். நிச்சயம் முடியும்.

"ம்... எவ்வளவு சுலபமாக எழுதிவிட்டீர்கள். இதெல்லாம் நடைமுறைக்கு ஒவ்வாதது. எழுத்தில் எதைவேண்டுமானாலும் எழுதி விடலாம். அது மிகமிக சுலபம். அனுபவிப்பவர்களுக்கல்லவா அந்த துக்கமும், கஷ்டமும்என்று நீங்கள் கூறுவது என் காதில் நன்றாகவே விழுகிறது. தவறே அன்று. நீங்கள் கூறுவதும், இப்படிக் கேட்பதும் தவறே அன்று. அதே போல், நான் அப்படிக் கூறுவதும் தவறே அன்று.

என்ன, என் இந்தப் பேச்சு முற்றிலும் முரணாகத் தோன்றுகிறதா? தோன்றட்டும். தவறில்லை. ஆனால், எந்த நிலையிலும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் பாதங்களை நாம் பற்றிச் சரணடைந்தால், நீயே சரணாகதிஎன்கிற முழு மனதுடன் சரணடைந்தால்,... ம்... என்ன... அதற்கு மேல் அவரவர் அனுபவிப்பு, அவரவர்களுக்கே தெரியும், புரியும்.

"இதைச் சொல்ல உனக்கு என்ன தகுதியிருக்கிறது?''

இந்தக் கேள்வியை நீங்கள் கேட்பது தவறேயல்ல. அது மனித மனதின் இயல்பு. பதில் கூற வேண்டியதும் என் கடமைதான்... இதோ... அடுத்தடுத்து இழந்த மூன்று இழப்பிற்கும் என்னால் தாள முடியவில்லைதான். என் கணவர், ஒரு புத்தகத்தில் அன்னையைப் பற்றி சொசைட்டி வெளியிட்ட கட்டுரையைப் படித்துவிட்டு, முதலில் அவர் மட்டுமே பாண்டி சென்றார். பார்த்தார். வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களைக் கொண்டுவந்து பூஜையறையில் வைத்தார். மற்ற அத்தனைப் படங்களையும் அகற்றி, பிறருக்குக் கொடுத்துவிட்டார். இது சத்தியம். ஆனால், எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எதுவும் கேட்கவுமில்லை. என்னையும், என் மகனையும் அழைத்து, அவருடன் உட்கார்ந்து தியானம் செய்யச் சொன்னார். அதற்குமுன் கொண்டு வந்த பூக்களைத் தட்டுக்களில் அடுக்கி, நீர் தெளித்து வைத்தார். ஊதுபத்தி ஏற்றினார்.

நானும், என் மகனும், அவருடன் சேர்ந்து, இதுவரை அறிந்திராத தியானத்தை செய்தோம். அவரவருக்கு எப்போது எழ வேண்டுமெனத் தோன்றியதோ, அப்போது எழுந்தோம். ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பேசிக்கொள்ளவில்லை என்பதைவிட, பேசஇயலாமல், எங்கள் மூவரையும் ஓர் அமைதியும், என்னவென்று சொல்லத் தெரியாத ஒரு நல்ல உணர்வும் எங்களைப் பிணைத்திருந்ததே உண்மை. அதை அன்று எங்களுக்கு உணர்ந்து கொள்ளத் தெரியாவிட்டாலும், படிப்படியாய் அன்னையைப் பற்றிய, எத்தனையோ அனுபவங்களை உணரத் தொடங்கினோம். இன்று வரை எங்களின் தெய்வங்கள் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்தான். எங்கள் மனதிலிருந்து துக்கத்தை எடுத்து வெளியே வீசிய என் "அன்னை"யை என்றும் மறக்க இயலாது, முடியாது, முடியவே முடியாது என்பது சத்தியம்.

இதனால் என்னை ஏசியவர்களும் உண்டு, பேசியவர்களும் உண்டு. என்னைப் பற்றிய அவர்களின் அபிப்ராயத்துக்கு, அன்றும், என்றும் நான் மறுத்துப் பேசியதில்லை. ஆனால் அன்னையைவிட்டு எங்கள் குடும்பத்தால் விலக இயலாதுஎன்பதைமட்டும், தெரிவிக்க வேண்டிய விதத்தில் தெரிவித்துவிட்டோம். இப்போது அனைவர் வீட்டிலும் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் குடியேறியிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. "அன்னையே சரணம"என்பதுதான் சத்தியம் என்பது நிஜமாகியது.

******

அதே போலத்தான் பார்வதியின் அதீதமான பக்தி உணர்வும், ஆழ்ந்த நம்பிக்கையும், அவள் வாழ்க்கையில் எத்தனை வித மாற்றங்களை, நல்லவைகளை உள்ளே புகுத்தியது என்பதைப் பார்ப்போமா... அதற்கு முன் இன்னொன்றைக் கூறியே ஆகவேண்டும்.

மனிதரின் மனமாகிய நம்முடைய இயல்பு என்ன தெரியுமா? "கையில காசு, வாயிலே தோசை''. எதையுமே உடனுக்குடனேயே அடைய வேண்டும்என்கிற எண்ணம்தான் முன்னின்று செயல்படுகிறது. கையில காசு. ஆமாம். அந்தக் காசை சம்பாதித்துத்தானே ஆகவேண்டும். அந்த சம்பாதனைக்காக நாம் உழைத்துத்தானே ஆகவேண்டும். அதே போல் தோசை சாப்பிட வேண்டுமெனில் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு ஹோட்டலில் ஒரு நாள் சாப்பிடலாம். எப்போதாவதுதான் சாப்பிட முடியும். ஆனால் வீட்டிலேயே தோசை மாவு அரைத்தால், நம் வயிறார உண்ணலாம். வயிற்றுக்கும் கேடு வாராது. இல்லையா? அதாவது எது ஒன்றுக்கும், நாம் முனைந்து செயல்படுவது மிகவும் நல்லது என்பதைத்தான் சொல்ல வந்தது.

அதே போல்தான், நாம் வணங்கும் அன்னையை, நம் வீட்டிற்கு அழைத்து வந்து, பூக்கள் வைத்து, ஆராதிக்கிறோம். நம் மனதின் விருப்பப்படி அன்னையை நம் வீட்டில் ஆராதித்து, எப்போது வேண்டுமானாலும் வணங்கலாம். நம் மனதிலுள்ளதை அன்னையிடம் கூறலாம். ஆனால், நாம் உடனுக்குடன் பலனை எதிர்பார்த்து, "பூக்களை வைத்தோமே, இன்னும் பலன் கிடைக்கவில்லையே'' என எண்ணுகிறோமே, அந்த எண்ணம்தான் நமக்கும், அன்னைக்கு- மிடையேயுள்ள பாலத்தின் தூரத்தை அதிகப்படுத்துகிறது என்பதுதான் உண்மை.

"கடமையைச் செய். பலனை எதிர்பாராதே"

எத்தனை உண்மையான வரிகள். ஆனால் நாம் கடமையைச் செய்கிறோமோயில்லையோ... எந்த இடத்திலும் பலனை மிகவும் எதிர்பார்க்கிறோம்என்பதுதானே நிஜம். ஏன், பலனைப்பற்றி நினைக்காமல், நம்மால் ஆனதைச் செய்யலாமே...

ஒரு நாளைப்போல் வயிறார சாப்பிட, அரிசி, பருப்பிலிருந்து, காற்கறிபோன்ற வியஞ்சனங்கள் வரை, எத்தனை சாமான்களை வாங்கி, அதை வேகவைத்து, கறிகாய் நறுக்கி, ஒன்றுக்கொன்று தோதாகயிருக்கும்படி, யோசித்து, யோசித்து, உப்பு, காரம், எண்ணெய், எல்லாம் சரிவிகிதத்தில் போட்டு, சுசி, ருசியாய் செய்து சாப்பிட, சலித்தே போகாமல், தினமும் வகை, வகையாக சாப்பிடுகிறோம். எத்தனை நேரமானாலும் மெனக்கெட்டு, மிகுந்த ஈடுபாட்டோடு செய்கிறோம். அதற்கான நேரத்தைப் பற்றி நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இது வருடக்கணக்கில் தினந்தோறும் நடக்கிறது.

அதுவே, அன்னையிடம் நாம் நம் மனதிலுள்ள எல்லாவற்றையுமே கொட்டுகிறோமோ எனில் "இல்லை' என்பது நமக்குள்ளேயே பதில் இருக்கிறது. நம் தேவைக்கேற்ப அன்னையிடம் நாம் வேண்டுவது நம் இஷ்டப்படிதான். ஆனால், அன்னை நினைப்பதோ? எதையும் உண்மையுடன், சத்தியத்துடன் இருக்க வேண்டும். எதையும் முழுமையாகச் செய்யவேண்டும். சஞ்சலமின்றி செய்ய வேண்டும். நம் மனதின் விருப்பத்தைவிட, அன்னையின் கோட்பாடுகளின்படி நடக்கவேண்டும்என்பதில் நாம் உறுதியோடு இருந்து செயல்பட்டால், நம் வாழ்க்கையின் உச்சம், எல்லாவிதத்திலும் திரண்டு எழும்என்பதில் ஐயமேயில்லை.

******

பார்வதி, கணவனின் வரவிற்காகக் காத்திருந்தாள். எப்படிப் பேசவேண்டும், அவனுடைய மனம் பாதிக்காமல், ஒத்துக்கொள்ளும்படிச் செய்யவேண்டும். நிச்சயம் அன்னை, என்னை வழிநடத்துவார். அந்த நம்பிக்கை எனக்கு, பரிபூரணமாகயிருக்கிறது. நடக்கும்.

இமைகள் மூடி, மனதில் அன்னையை நிறுத்தி பிரார்த்தித்தாள். "பாரு... பாரு... பார்வதி...'' லேசான குழறலோடு கூப்பிட்ட வண்ணம், தள்ளாடிய வண்ணம் வந்தான் ராமனாதன்.

"ம்... இதுவும் நல்லதுக்கே...'' என நினைத்தாள் பார்வதி. அன்னையை மனதிலிறுத்தி, அவனெதிரில் நின்றாள்.

"பாரு, பசிக்கிறது... சாப்பாடு போடறியா...'' குழறல்தான்.

"இதோ போடறேனே... உங்களோட பேசணும்னு நானும் காத்துண்டு வாசலையே பாத்துண்டுதானே நிக்கிறேன். வாங்கோ மொதல்ல சாப்பிடுங்கோ. கை கால் அலம்பிண்டு வாங்கோ. ம்...''

தள்ளாடியபடியே, கை, கால் அலம்பினேன் பேர்வழி என வேஷ்டியை நனைத்துக் கொண்டு வந்தான். பார்க்கப் பார்க்க அழுகை முட்டிக்கொண்டு வந்ததை அடக்கினாள்.

தட்டுவைத்து, சாதத்தை, சாம்பாருடன் கலந்தே வைத்தாள். கீழேயும், மேலேயும் போட்டபடி சாப்பிட்டான்.

"நாம இந்த வீட்டைக் காலி பண்ணிடலாம்னு நினைக்கறேன். என்ன சொல்றேள்?''

சட்டென ஏதோ அதிர்வு ஏற்பட்டதுபோல் திரும்பினான் அவளை நோக்கி.

"பயமே வேண்டாம். இந்த வீட்டுக்கு வாடகைக் கொடுக்கணும். அதனாலே... மாமி ஆத்துக்கே குடி போயிடலாம்னு...''

இப்போது ராமனாதனுக்கு, இது என்ன திடீர் குழப்பம்னு தோன்ற, பார்வதியையே வெறித்துப் பார்த்தான்.

"ம்... ஹும்... உங்களுக்கு இஷ்டமில்லேன்னா வேண்டாம். மாமிதான் சொன்னா. ஏண்டி பாரு, வீணா வாடகைக் கொடுத்துண்டிருக்கே. எங்காத்தோடவே வந்துடு. வாடகைன்னு ஒண்ணும் தர வேண்டாம்னா. எனக்கும் ரெண்டு குழந்தைகளையும் சமாளிக்க தெம்பு வேண்டாமா? நீங்களும் எப்பப் பாரு வெளியிலேயே, பிஸினஸ், பிஸினஸ்னு அலையறேள். ஒண்டியா... என்னாலயும் முடியலே... அதா...ன்... அதா...ன்... வேண்டாம்னா சொல்லிடுங்கோ... மாமிகிட்டேயும் சொல்லிடறேன். அவாளும் வேறே யாருக்காவது வாடகைக்கு விடுவா. நமக்குன்னா வாடகை வேண்டாம்னு சொல்லிட்டா... சரி... மொதல்ல தட்டைப் பார்த்து சாப்பிடுங்கோ... ரசம்... இன்னும் கொஞ்சம் விடட்டுமா...''

ஒரு வெளிச்சக் கோடு, ஒரு வினாடிக்கும் குறைவாக "பளிச்”சென மின்னல் போல் தோன்றி மறைந்தது. போதை கொஞ்சம் குறைந்திருந்தது. தெளிவு ஏற்பட்டது.

"வாடகை தர வேண்டாம்'' என்பது அவன் மனதில் ஒரு வெளிச்சத்தைத் தந்தது. தட்டிலிருந்ததை அள்ளி, அள்ளி சாப்பிட்டான். தட்டிலேயே கையை அலம்பினான்.

"பாரு... நிஜமாத்தான் சொல்றியா? அப்புறமா, மாமி காலி பண்ணுன்னு சொன்னா... இந்த வீடு கிடைக்காதேடி... அப்புறம் நடுத்தெருவுலதானே நிக்கணும்...''

"ம்... ஹும்... அப்டில்லாம் மாமி சொல்லமாட்டா? ஏன்னா... மாமிக்கும் வயசாயிடுத்து. தனியாயிருக்கணுமேன்னு பயப்படறா. நம்ம, ரெண்டு குழந்தைகள் மேலேயும் உசுராயிருக்கா. நானும் ஏதாவது தெரிஞ்ச வேலையைச் செய்யலாமோன்னோ...''

இப்போது அவன் மனது கணக்குப் போட்டது.

"ம்... இதுவும் நல்லதுக்குத்தான்... நம்ம கை... கடிக்காது. இஷ்டப்படியிருக்கலாம்...''

ஆனால்... அன்னையின் இருப்பிடமாக விளங்கும் அந்த வீட்டிற்குப் போனாலல்லவா எது... எப்படி... யாரிஷ்டப்படி நடக்கப் போகிறது என்பது தெரியும்?...

"என்னமோ சொல்றே? ஆனா... அப்புறமா சரிப்படலே... மாமி படுத்தறான்னோ... இல்லே எனக்கு இடைஞ்சலாவோ நடந்தா... என்னைத் தப்பு சொல்லக் கூடாது... புரிஞ்சுண்டியா...''

"சரி” என்பதுபோல் அமைதியாகத் தலையாட்டினாள் பார்வதி. உடனே அன்னையை மனதில் நிறுத்தி மனதார பிரார்த்தித்தாள் அமைதியுடன்.

******

சாமான்களையெல்லாம் பக்கத்து வீட்டிற்குக் கொண்டு போய் வைத்தாயிற்று. நல்ல நாள் பார்த்து சமையலும் செய்தாயிற்று. கணவனுக்காகக் காத்திருந்தாள். அன்று அவன் வரவேயில்லை.

நேரே அன்னையினருகில் சென்று நின்றாள்.

"அன்னையே... என் கணவர் திருந்தி, நல்லபடியாக வருவது உன் பொறுப்பு. கண்டிப்பாய், நிச்சயமாய் எனக்கு நீ உதவுவாய் என்கிற எண்ணம், என் சரீரம் பூராவுமாக ஓடுகிறது. என் நம்பிக்கை வீண் போகாது. நீ... எனக்காக எல்லாம் செய்யும் போது, நான் ஏன் கவலைப்பட வேண்டும்? ஆனால் வேண்டுவது, அதுவும் உன்னை வேண்டுவது என் வேலை. என் மனப்பூர்வமான, உன் மேல் முழு நம்பிக்கையோடு நான் செய்யும் பிரார்த்தனையும் வேண்டுதலும் மட்டும்தான் என் வேலை. அதில் எதைச் சரிசெய்ய வேண்டுமோ... அதை நீ, நிச்சயம் செய்வாய் அம்மா. அந்த நம்பிக்கையும், அந்த நம்பிக்கையினால் ஏற்படும் தைர்யமும் என்னுள் ததும்பியிருக்கிறது. என் மனக்கிலேசம், சஞ்சலம் எல்லாமே உன்னிடம் கொடுத்துவிட்டேனே... அப்புறம், நான் ஏன் கவலையோ, யோசனையோ படவேண்டும். மாட்டேன். உன்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன். அதன்பிறகு எனக்குள் எந்த கவலையுமின்றி நிச்சிந்தையாகயிருக்கிறேன். இதுதான் உண்மை. எது நடந்தாலும், என்னை அது பாதிக்காது. ஆமாம், நடப்பது உன்னிச்சைப்படிதானே! அப்படியிருக்க நான் எந்த யோசனையோ, எண்ணங்களின் கூட்டங்களையோ என்னுள் நுழைய அனுமதிக்கமாட்டேன் அன்னையே... அன்னையே சரணம். அன்னையே சரணம். அன்னையே சரணமம்மா.

இரு கரம் கூப்பி, கண் மூடியவளின் தியானம், நின்றபடியே தொடர்ந்தது.

"தடார்” என ஒரு சப்தம், அவளருகிலிருந்து கேட்க, கலைந்தாள். தள்ளாடி வந்தபடி நின்ற ராமனாதன்தான் அங்கிருந்த ஒரு பாத்திரத்தை இடறிவிட்டு கிழே விழுந்திருந்தான். அன்னையைப் பார்த்தாள். கீழே அன்னையின் காலடியில் விழுந்திருந்த கணவனையும் பார்த்தாள். சிரிப்பு வந்தது. மலர்ச்சியுடன் சந்தோஷம் பொங்கியது.

"ம்... இப்போதிலிருந்தே உன் வேலையை ஆரம்பித்துவிட்டாயே அம்மா... நீ... என்ன செய்தாலும் மனதார ஏற்றுக்கொள்ள எப்பவும் தயாராகயிருக்கிறேன். நன்றியுடன் எப்போதும் உன்னையன்றி வேறே யாரையும் நினைக்கக்கூட மனது இணங்கவில்லையம்மா... உன்னிடத்தில் என்னையே அர்ப்பணித்துவிட்டேன். இனி நடப்பதெல்லாம் உன் செயலே...''

பிரார்த்தித்தபின், கீழே விழுந்திருந்த கணவனின் முகத்தில் "ஜில்”லென்ற நீரைத் தெளித்தாள். அவனும் அதிர்ந்தவனாய், தன் போதையிலிருந்து தெளிந்து எழுந்தான்.

******

வந்த புதிதில், என்னதான் குடித்திருந்தாலும், இரவு பதினொரு மணிக்குள் வந்து விடுவான் ராமனாதன். வந்ததும் சாப்பிட்டு, சந்தடியில்லாமல் படுத்து விடுவான்.

பார்வதிக்கும் கொஞ்சம் நிம்மதியாகயிருந்தது.

ஆனால் இப்போது வர, வர, நேரம் கெட்ட நேரத்தில் வந்து கதவை தட்டுவதும், தள்ளாடித் தள்ளாடி, வேஷ்டியைக் கையில் பிடித்தபடி வருவதும் அவனது வழக்கமாகயிருக்க, மாமி, மறுநாள் காலைக்காகக் காத்திருந்தாள். காலை அன்னையின் முன் நின்று பிரார்த்தித்து வேண்டிய பின்பே அவன்முன் நிற்கக் காத்திருந்தாள். விடிந்தது. காபி ஆனது. ராமனாதன் கூடத்தில் வந்து நின்றபோது மாமி ஆரம்பித்தாள்.

"ராமனாதா... சித்த இங்கே வாயேன். உங்கிட்டே நான் பேசணுமே... வா...''

உள்ளுக்குள் ஒரு சின்ன அதிர்வும், பயமும் ஏற்பட்டது உண்மை தான். ஆனாலும் விரைப்பாகவே நின்றான்.

"இதோ பாரு. எனக்கோ வயசாச்சு. ராத்திரியில தூக்கம் கெட்டா சரீரம் ஆடிப்போறதுப்பா. கண்ணல்லாம் எரியறது, உடம்பு தள்றது. அதனாலத்தான் சொல்றேன். ராத்திரியில லேட்டா வராதேப்பா. பத்து, பத்தரைக்குள்ள வந்துடு. சரியா... ம்... சாப்டியோ... போய் சாப்டு படு. பாருவும், பாவம் ரெண்டு குழந்தைகளோட திண்டாடறா. சீக்கிரமா அவளும் படுத்துக்க வேண்டாமா? போப்பா...''

சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போனாள் மாமி.

உள்ளுக்குள் ஒரு கோபம் கிளர்ந்தெழுந்தாலும், போதையின் குறைவு உணர்வில் அது உடனே அடங்கிவிட்டது. வாடகையில்லாத வீட்டை தந்திருக்கும் மாமியை இப்போது பகைத்துக் கொண்டால், நஷ்டம் நமக்குத்தான் என யோசித்தவனின் மனம், கொஞ்சம் மெதுவாக, மிக மெதுவாக அசைந்தது.

சாப்பிடும் போது, பேச்சேயில்லாமல் சாப்பிட்டான்.

கண்கள் நிறைய தூக்கத்துடன், களைப்பானவளாக பரிமாறும் மனைவியைப் பார்க்கப் பார்க்க... மனதுள் ஒரு நெகிழ்வு அவனையறியாமலேயே ஏற்பட்டது.

"சாப்பிட்டியா பாரு... குழந்தைகளுக்கும் ஆகாரம் குடுத்தாச்சாம்மா பாரு...''

கேட்ட கணவனின் பரிவு, அவளுள் ஒரு மகிழ்ச்சியான பேரலையை ஏற்படுத்தியது. கண்கள் அவனையே பார்த்தாலும் இதயம் அன்னையை நினைத்தது. "ம்... எல்லாரும் சாப்டாச்சு... இன்னும் கொஞ்சம் கூட்டு போடட்டுமா...''

தன்னை எதையும் கேட்காமல், கோபிக்காமல், பரிந்துணர்வுடன் "இன்னும் வேண்டுமா” எனக் கேட்கும் மனைவியின் பரிவில், உபசரிப்பில், தனக்குள் தானே ஒடுங்கி சிறுத்துப் போனான். கண்கள் தளும்பின.

"அய்யய்யோ... மொளகாவைக் கடிச்சு மென்னுட்டேளா. இந்தாங்கோ தண்ணி. மொதல்ல குடியுங்கோ... சர்க்கரை வேணுமான்னா கொண்டுவரட்டுமா... பார்த்து சாப்பிட மாட்டேளா... நான் ஒரு மக்கு. மொதல்லேயே மொளகாவை எடுத்துட்டுப் பரிமாறியிருக்கணும்... ம்...''

இப்போது கேவலும் அவனையறியாமலேயே வெளிப்பட்டது. "ஏன்னா... ஏன்? ஏன் அழறேள்... எனக்கு பயமாயிருக்கே... மாமியை எழுப்பட்டுமா... இருங்கோ வரேன்...''

எழுந்தவளை, எழுந்திருக்க விடாமல் அப்படியே அமர்த்தினான்.

"பாரு... எனக்கு... எனக்கு அவமானமாயிருக்குடி... உன்னையும், குழந்தைகளையும் கவனிக்காம... சே...'' அழுதபடியே சாப்பிட்டு முடித்த கணவரையும், அங்கே சுவற்றில் மாட்டியிருந்த அன்னையின் படத்தையுமே பார்த்தவளின் கண்களிலும் நீர் நிரம்பியது.

தள்ளாடியபடியே எழுந்து போன கணவரையும், அன்னையையும் மாறி, மாறி பார்த்தாள்.

"ம்... அம்மா... உன் பாதங்களையே பற்றிக்கொண்டு, உன்னையே நினைக்கும் எனக்கும், உன் பரிவும், பாசமும், என்றென்றும் கிடைக்க அருள்வாய் அம்மா... நிச்சயமாய், உன்னால் என் கணவர் திருந்துவார். அந்த நம்பிக்கை எனக்குப் பூரணமாகயிருக்கிறது. இன்றிலிருந்தே எனக்குள் ஒரு "இங்கிதமான'' எண்ணங்கள் ஏற்படுகிறதேம்மா... நிச்சயம் என் கணவரை அன்னையே... துரிதத்திலேயே சரியாக்கிவிடுவாய். ஆமாமம்மா. உன்னையன்றி எந்த தெய்வத்தையும் நானறியேன். சரணமம்மா... சரணம்...''

"பாரு... என்னாச்சு? ஏன் இப்டி திக்பிரமையா உக்காந்திருக்கே... என்னாச்சும்மா...''

பரிவுடன் கேட்டபடி, தள்ளாடியபடியே வரும் கணவனை, சட்டென எழுந்து பிடித்தபடி, படுக்கையில் படுக்க வைத்தாள். மீதி வேலைகளையும் முடித்து, அன்னையை நினைத்தபடியே படுத்தவளின் தூக்கத்தில் அருமையான கனவுகள், மகிழ்ச்சியை நிரப்பின.

*******

இரு குழந்தைகளும், கணவனுடனும் நடந்து போகிறாள் பார்வதி. வழியெல்லாம் பூக்களின் மணம். காற்றில் அசைந்தாடும் அந்தச் செடிகளின் ஒவ்வொரு முனையிலும் எத்தனை எத்தனை வண்ணங்கள் நிறைந்த பூக்கள். எல்லாவற்றின் வாசனையும் கலந்து, சுகந்தம் அவர்களை சுகமாக அணைத்தது.

ராமனாதன், குழந்தைகளை ஓடவிட்டு, அவனும் ஓடுகிறான். கலகலவென குழந்தைகளின் சிரிப்போடு, அவனுடைய கம்பீரமான ஆண் குரலின் சிரிப்பும் சேர்ந்து அந்த இடத்தையே கலகலக்க வைத்தது. பாருவால் சிரித்து, சிரித்து, முடியாமல் அப்படியே ஒரு பெரிய மகிழமரத்தினடியில் அமர்ந்தேவிட்டாள். பூக்களின் சுகந்தம் அவளைக் கண்களை மூடி அனுபவிக்க வைத்தது. அந்தப் பெரிய மரத்தினடியில், அப்படியே சாய்ந்து கண்களை மூடியவளை...

யார் உலுக்கி எழுப்புகிறார்கள். சட்டென விழிகள் விரிந்தன. சுற்றுமுற்றும் பார்த்தாள். தோட்டமோ, பூக்களோ இப்போது காணோம்.

அவள் சரிந்து அமர்ந்திருந்தது மகிழ மரத்தின் அடியிலல்ல. வீட்டுத் தூணில்தான் என்பது புரிந்தது.

ஆனாலும், அந்தத் தோட்டமும், பூக்களும், செம்மண் பாதையில் கணவனோடும், குழந்தைகளோடும் கலகலவென சிரித்தபடி நடந்தது அவ்வளவும் கனவா...?

"ஆம்” என்றது நிதர்சனம். ஆனாலும் அவள் மனதில் மகிழ்ச்சிப் பொங்குவது, நிற்கவேயில்லையே...

நேராக அன்னையிடம் சென்று நின்றாள்.

"அம்மா... என்னை நீ முழுமையாக ஏற்றுக்கொண்டு விட்டாயா? அதனால்தான் எனக்கு இப்படி ஒரு, சௌலப்யமான கனவைத் தந்தாயா? நிச்சயம் என் வாழ்க்கையில், நல்ல பூக்கள் மலரும் என்கிற உத்தரவாதம் தந்துவிட்டாயா அன்னையே, அன்னையே, இனிமேலும் உன்னையன்றி வேறு யாரையுமே என்னால் நினைக்கக் கூட முடியவில்லையே. அப்டி என்னை ஆட்கொண்டு விட்டாயே அம்மா... அம்மா... அம்மா...''

உணர்வு மீறலில் அப்படியே மயங்கிச் சரிந்தவளை, அப்படியே சரிய விடாமல் பிடித்தது...

மாமியேதான். பதறியபடி தன் வயதையும் மீறி ஓடி வந்து அவளைக் கீழே விழாமல் பிடித்துக் கொண்டது.

அதே சமயம், பதறியபடியே ஓடி வந்த மற்றொரு ஜீவன்... சாட்சாத் அவள் கணவன் ராமனாதனே தான்.

இருவரையும், மாறி மாறிப் பார்த்தவளின் கண்களில் சுரந்தது, கண்ணீரா? ஆனந்த பாஷ்பமா?

*******

ஒரு வாரம் அமைதியாகச் சென்றது. வீட்டிற்கும் சரியான நேரத்திற்கு வந்தான். மிக ஒழுங்காக நடந்து கொண்டான். மாமி உட்பட, பார்வதியின் மனதிலும் வெளிச்சம், பிரகாசமாக மாறியிருந்தது.

அன்று மாலை இரு குழந்தைகளையும், பார்வதியையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றான் ராமனாதன். பார்வதியின் சந்தோஷம் அதிகமானாலும், சட்டெனத் திரும்பி அன்னையையே பார்த்தாள். மனதுள் பல எண்ணங்களின் கோர்வை கோர்த்தபடியிருக்க, அன்னையின் கண்கள் ஒரு கணம் அவள் மேல் ஆழமானப் பார்வையை வீசுவது போலிருந்தது. சட்டென மறைந்தும் போனது. அதற்கு என்ன அர்த்தம்?

அந்தக் கண்களின் தீட்சண்யத்தை மட்டும் அவளால் உணர முடிந்தது. ஆனால் காரணகாரியத்தைத் தெரிந்து கொள்ள முடியவில்லையே. மனதில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்கிற உணர்வு, உள்ளுக்குள்ளிருந்து கிளர்ந்தெழுந்தது. அது நல்லதுக்கா இல்லை... ம்... ஹும்... மீண்டும், மீண்டும், அன்னையின் தீட்சண்யமான பார்வையையே தன்முன் கொண்டு வந்து பார்த்தாள். அதில் ஒரு எச்சரிக்கையும் தெரிவது போலிருக்க... சட்டென விதிர்த்துப் போனாள்.

ஆம்... ராமனாதனின் இந்த, திடீர் பாசம், கடையில் விற்கும் "திடீர்” சாமான்களைப் போலவா? அவ்வளவுதானா... எச்சரிக்கையாகயிருக்கவேண்டும். அன்னையை என் இதயத்தில் சுமந்து செல்ல வேண்டும். நாவில் "அன்னையின் சரணம்" மட்டுமே புரளவேண்டும். என் இரு கண்களிலும் அன்னையின் தீட்சண்யப் பார்வையை ஏற்றிக் கொள்ள வேண்டும். அன்னையே என்னுள் நீயே புகுந்து, என்னை எச்சரிக்க வேண்டுமம்மா. நான் உன் குழந்தை. இந்தக் குழந்தையின், குழந்தைகளையும் நீதானம்மா எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல், நடக்கவிடாமல் காப்பாற்ற வேண்டும். கண்டிப்பாய், நிச்சயமாய், நீ என்னுடன் வருவாய் அம்மா... அம்மா... அம்மா...

நடந்தபடியே ஒரு வினாடிக்கும் குறைவாகக் கண்ணிமைகளை மூடி பிரார்த்தித்துப் பின், தன் கண்களை நாலாபுறமும் சுழலவிட்டபடியே நடந்தாள்.

"பாரு... இங்கேயே நில்லு, பெரியவன் கையைக் கெட்டியாப் புடிச்சுக்கோ. அஞ்சே நிமிஷம்... இதோ வந்துடறேன்...''

சின்னவனை கையில் ஏந்திக்கொண்டவனாய் நடந்த கணவனின் கண்களில் தெரிவது... ம்... ஹும்... புரியவில்லை.

சட்டென பெரியவனையும் அழைத்துக் கொண்டு, கணவனின் பின்னால், சில அடிகள் தூரத்தில் தொடர்ந்தாள். ஜன நடமாட்டம் அதிகமிருந்த வீதியானதால், கணவனைப் பின் தொடர்வது சுலபமாகயிருந்தாலும், அவன் கண்களில் படாமல் பின் தொடர்வது மிகக் கடினமாகயிருந்தது.

அன்னையை மனதில் மட்டுமல்ல, சரீரம் முழுவதும் சுமந்து சென்றதால், ஒரு அசாதாரண தைர்யம் அவளுள் ஏற்பட்டிருந்தது. இரு விழிகளும் கணவனின் நடவடிக்கையையறியப் பின் தொடர்ந்தாலும், மனம் மட்டும் அன்னையுடனேயே ஒன்றிப்போய், அன்னையையே சுமந்திருந்தது. வேறு எந்தவிதமான சலனமும் அந்த இதயத்தில், அதன் துடிப்பில் இல்லவேயில்லை.

திடீரென கண்களிலிருந்து அவள் கணவன் விடுபட்டே போனான். மனது துடித்தது. அதே சமயம் சட்டென அன்னையின் முகம், விஸ்வரூபம் போல் தீர்க்கமான, தீட்சண்யமான கண்களுடன் அவள் கண்களுக்குத் தெரிந்தார். மனதின் துடிப்புத் தானாகவே அடங்கியது. எது நடந்தாலும், அது நன்மைக்கே என்கிற அழுத்தமான நம்பிக்கைத் தானாகவே உருவானது. நிம்மதியோடு கண்களை நான்குபுறமும் சுழற்றினாள்.

என்ன ஆச்சரியம்? அவள் கணவன் குழந்தையுடன், இடதுபுறம் பதினைந்து வீடுகள் தள்ளி, குழந்தையோடு நிற்பது தெரிந்தது. புரிந்தும் போனது. விரைவாக நடந்தாள், பெரியவனை முடியாமல் இடுப்பில் சுமந்தபடி. மூச்சு வாங்கியது. வியர்த்தது. அப்படியும்... எதையும் உணராமல் கணவரருகில் போய் சடாரென்று நின்றாள் எதிரே. இடுப்பில் இருந்த பெரியவனைக் கீழே இறக்கினாள். பிரமித்து நிற்கும் கணவரின் கையிலிருந்த சிறியவனைத் தன் இடுப்பில் இறுக்கிக் கட்டிப் பிடித்தாள். பெரியவனையும் இழுத்துக்கொண்டு, கிடுகிடென திரும்பிப் பார்க்காமல் நடந்தாள்.

பிரமித்துப் போனான் ராமனாதன், நிதரிசனத்திற்கு வந்தபோது, பார்வதி, இரு குழந்தைகளுடன் விடுவிடுவென நடந்ததில் வெகுதூரம் வந்துவிட்டிருந்தாள். மூச்சு வாங்க நடந்தவளின் இதயம் வேகமாகத் துடித்தாலும், அந்தத் துடிப்பில் அன்னையின் சரணமாகத்தான் துடித்தது.

வீட்டிற்குள் நுழைந்தவளிடம் வேகமிருந்தது. அதே வேகத்துடன் அன்னையின் பாதாரவிந்தங்களில் இரு குழந்தைகளையும் நிறுத்தினாள். அன்னைக்கு நன்றி கூறினாள். வேண்டினாள் மனமாற.

"இனி என் குழந்தைகளுக்காக, நான் கடுமையாக உழைப்பேன். அதற்கான சக்தியையும், வழியையும் காட்டு அம்மா... அவரை ஒரு பேச்சும் கேட்கமாட்டேன். அவர் திருந்தி வரவேண்டும். என் குழந்தைகளுக்குத் தகுந்த, உண்மையுள்ள தந்தையாக மாறி வர வேண்டும். அது உன்னால் முடியும். உன்னால் மட்டுமே முடியும். நிச்சயமாய் நடக்கும். அம்மா... அம்மா...''

கண்கள் துளிர்க்க வேண்டியவளின் மனம் அமைதியடைந்தது.

*******

"மாமி... உங்ககிட்டே நிறைய யோசனை கேக்கணுமே... மாமி''

"என்னடி பாரு... திடீர்னு எங்கேயோ போனேள். வந்துருக்கறது திரும்ப நீயும், குழந்தைகளும்தான். அவன் எங்கே போனான்? என்னாச்சு? சொல்லு, சொல்லும்மா...''

கண்களில் துளிர்த்ததை அப்படியே அடக்கினாள்.

"மாமி... இனிமே அவரை நம்ப மாட்டேன். நம்பவே மாட்டேன். சின்னதை எடுத்துண்டு, என்னையும் பெரியவனையும் ஓரிடத்துல நிறுத்திட்டு ஓராத்து வாசல்ல நிக்கிறார் மாமி. புரிஞ்சு போச்சு. அதுதான் ஒரு மார்வாடி வீடுன்னு தெரியும். அவாளுக்கு குழந்தையே பொறக்காதுன்னு டாக்டர் சொன்னதும் எனக்குத் தெரியும்.

"எப்டிடி உனக்குத் தெரியும்... எங்கிட்ட கூட சொல்லலியே...''

"மாமி, என் கஷ்டங்களையேத்தான் உங்ககிட்டே சொல்றேன். இப்போ ஒரு நல்ல சேதி சொல்றேன் கேட்டுக்கோங்கோ. நான் சின்னவனை எடுத்துண்டு ஆஸ்பத்திரிக்குப் போனபோதே... அவ குழந்தையை கேட்டுண்டு டாக்டர்கிட்ட பேசினா. டாக்டரும் யாராவது சரின்னா சொல்லியனுப்பறேன்னா... அப்ப அவளையும், அவாத்துக்காரரையும் பார்த்தது. அப்புறமா ஒரு தடவை அந்தப் பக்கம் போனபோது அந்தப் பொண்ணு அந்த வீட்டுல நிக்கிறதையும் பார்த்தேன். அது மட்டுமில்லே மாமி, அவாத்துக்காரரோட, எங்காத்துக்காரரும் நின்னு பேசினதையும் ஒரு தடவை பார்த்தேன். அதான் இவர் சின்னவனை எடுத்துண்டு, அங்கே நிக்கறதைப் பார்த்ததும், எப்டி அவ்வளவு ஒரு வேகம் வந்ததுன்னு தெரியலே. ஆனா, அன்னையோட "கண்கள்' மட்டும் எனக்கு போகறதுக்கு முன்னாடியே... ஜாக்கிரதையாயிருன்னு சொல்றாப்பலயிருந்துது. அதான் பறந்து போய் என் குழந்தையை அவரிட்டேயிருந்து எடுத்துண்டு வந்துட்டேன். மாமி, இனிமே அவரை ஆத்துக்குள்ளே விடப்டாது. நான் உழைச்சு என் ரெண்டு குழந்தைகளையும் காப்பாத்தணும். வந்தா... கதவைத் திறக்கவேண்டாம். நீங்க பேசவும் வேண்டாம். நானே பேசியனுப்பிடறேன். அன்னை மேலே எனக்கு நம்பிக்கையிருக்கு. அவர் நிச்சயமா திரும்பி வருவார்னா வருவார்தான். அதுவரைக்கும் எனக்கு, குழந்தைகளோட சாப்பாட்டுக்கு, படிப்புக்குன்னு, உடம்புல தெம்புருக்கறப்பவே சம்பாதிக்கணும் மாமி. ஏற்பாடு பண்றேளா...''

தழுதழுத்த குரலில் கேட்கும் பார்வதியைத் தன்னோடு சேர்த்து, அணைத்து, அவளுடைய கண்ணீரைத் துடைத்தாள் மாமி.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. மாமியிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு, கதவைத் திறக்காமலேயே பேசினாள் பார்வதி.

பேசும்முன் அன்னையை இதயத்தினுள் மட்டுமின்றி உச்சி முதல் பாதம் வரை, அன்னையின் விஸ்வரூபத்தைப் பிரதிஷ்டை செய்தாள். இதயம் "லப்டப்”பிற்கு பதிலாக "அன்னையே சரணம்” என்றே துடித்தது. கண்களைத் திறந்தாள் பார்வதி.

உடனே பின் வாங்கினான் ராமனாதன். "என்னாயிற்று எனக்கு? ஏன் இப்படி பின் வாங்குகிறேன். கூடாது... எதிர்க்க வேண்டும். பெண்ணிடம் அடங்குவது அசிங்கமில்லையா...'' மீண்டும் கதவருகில் செல்ல முயன்றான். பார்வதியின் தீர்க்கமான பார்வை அவனை, அவளைப் பார்க்கவிடாமல் தடுத்தது.

"கதவைத் தொற. சீக்கிரமா... சீக்கிரமா வாயேன்...''

வாய் திறந்து பதிலே சொல்லாமல், அப்படியே அவனை உறுத்துப் பார்த்தாள். பார்வையின் தீட்சண்யம், ராமனாதனால் தாங்க முடியவில்லை. தலை குனிந்தான். குரலில் இப்போது தொய்வு. அவனைப் பார்க்கவே பரிதாபமாகயிருந்தது. அப்படியே நின்றான். எத்தனை நேரம்... தெரியவில்லை.

"பாரு... கதவைத் தொற... எத்தனை நேரம் நிக்கறது? பார்வதி...

சீக்கிரமா கதவைத் தொற...'' கோபம் தெறித்தது வார்த்தையில்.

மாமி வந்து நின்றாள். இப்போது, அவள் முகத்தில் ஒரு கோபம்.

"ராமனாதா... இதோ பாரு... எங்காத்துக்கு வந்தாச்சு. உனக்கும் சரியான சம்பாத்தியமில்லே... அதனால இந்தாத்துக்கு வரச் சொன்னேன். ஆனா... உன்னோட குழந்தையையே நீ... ஒரு மார்வாடிக்குக் கொடுக்கத் துணிஞ்சுட்டே... தப்பு... இனிமே அப்படியெல்லாம் பண்ணமாட்டேன்னு சத்தியம்... இதோ... நான் வணங்கற அன்னை, ஸ்ரீ அரவிந்தர் எதிர்க்கால பண்ணணும். அப்பத்தான் இந்த வீட்டுக்குள்ள நுழைய அனுமதி. புரிஞ்சுதா... சொல்லு... சொல்லுப்பா...''

பேசாமல் திரும்பிப் போகும் ராமனாதனையே வெறித்தாள் மாமி.

"பாரு... என்னடி திரும்பிப் போறான்... வருவானா... கூப்பிடட்டுமா பாரு...''

"ம்... ஹும், வேண்டாம் மாமி... நிச்சயமா வருவார். வரட்டும்.

ஆனா... மாமி... குழந்தைக்கு நீங்கதான் பொறுப்பு. ஏன்னா, எனக்கு ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ. என் சரீரத்துல தெம்புயிருக்கிறவரை உழைக்கணும்... என் குழந்தைகளுக்காக நான் உழைக்கணும். மாமி...'' தொண்டையடைக்கக் கூறினாள் பார்வதி.

"சொல்லிட்டியோன்னோ... இனிமே குழந்தைகளுக்கு மட்டுமில்லேடி... உனக்கும் சேர்த்துத்தான் நான் பொறுப்பேத்துக்கறேன், அன்னையோட அனுமதியோடத்தாண்டி. பாரு, பயப்படாதே. எல்லாமே நல்லதாவே நடக்கும்மா... வா...''

நேரே மாமியின் அறைக்குள் சென்று, அன்னையின் எதிரில் கண்களை மூடி அமர்ந்துவிட்டாள் பார்வதி.

புரிந்து கொண்ட மாமி, குழந்தைகளை உள்ளே அழைத்துப் போய் பெரியவனுக்கு சாதத்தை ஊட்டி, சின்னவனுக்குப் பாலையும் குடிக்க வைத்தாள். வயிறு ரொம்பியதில் இரண்டும் தூங்கின. சத்தமின்றி பார்வதியினருகில் நின்றாள். பார்வதி அசைவேயின்றி, ஆழ்ந்த தியானத்திலிருந்தாள்.

அன்னையிடமே, மனதுள்ளிருந்ததை மாமி கொட்டினாள்.

"அம்மா தாயே! உன்னையே நம்பியிருக்கும் இந்தப் பெண்ணிற்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவது உன் பொறுப்பு. அம்மா... உன்னையே நம்பி, உன்னையே சரணடைந்திருக்கும் எங்களுக்கு நீதாம்மா வழிகாட்டணும். அம்மா... அம்மா...''

மாமியும் அப்படியே வார்த்தைகளை மறந்து, இமைகளை மூடி, பார்வதியோடு அமர்ந்துவிட்டாள்.

தொடரும்.....

*******



book | by Dr. Radut