Skip to Content

09. பூரண யோகம் - முதல் வாயில்கள்

பூரண யோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(16) சக்தியினின்று ஜீவியத்திற்கும், ஜீவனுக்கும் செல்லும் பாதை

இந்த தலைப்பில் 140க்கு மேற்பட்ட முறைகளை எழுதுகிறேன். இவை அனைத்தும் ஏற்கனவே எழுதப்பட்டவை என்பதால் இதில் என்ன விசேஷம்எனத் தோன்றும். தலைப்பு ஒன்றேயானாலும் கோணம் வேறு. பரம்பரையாக நாம் பயிரிட்ட நிலம் வழியாக இன்று ரோடு போடப்பட்டது. நிலத்தில் மாறுதலில்லை. பயிரிட்டால் அதே பலன்தான் தரும். ரோடு வந்தபின் நிலைமை மாறுகிறது. விளைநிலம் ரோட்டால், மனை நிலமாகிறது என்பது புதிய விஷயம்.

பார்வை மாறினால் பலன் பெருகும்.

சக்தியினின்று ஜீவியத்திற்குப் போனால், கர்மம் அழிகிறது. நிலைமை மாறுகிறது என அறிவோம். அது நமக்கு நடப்பது அரிது. அப்படி நடந்தால் அதன்வழி யோகம் பலிக்கும் என நாம் அறிவதில்லை. அப்படி அறிவது வெறும்மனிதன் M.P. ஆவது போன்றது. ஒரு கம்பனியின் கிளையில் குமாஸ்தாவாக வேலை செய்பவன் இட்ட வேலையைச் செய்யவேண்டும். அதற்கு மேல் நினைக்க முடியாது. அவரையே தலைமையாபீஸூக்கு குமாஸ்தாவாகவே மாற்றினால் அந்த இடத்திலிருந்து கம்பனி சட்டத்தையே மாற்றும் அதிகாரம் உள்ள இடத்தில் செயல்படுவதால், அந்த அதிகாரம் சற்று அவருக்கும் வரும். அது சக்தியினின்று ஜீவியத்திற்குப் போவதுபோல. ஏதோ காரணத்தால் அக்குமாஸ்தாவை டைரக்டராக்கினால், அவரே சட்டத்தை இயற்றலாம். அது ஜீவனுக்குப் போவதுபோன்றது. நாம் பிரார்த்திக்கும்பொழுது பலன் வருகிறது. சில சமயங்களில் நம் வேலையை அடுத்தவர் எடுத்து அபரிமிதமாகப் பூர்த்தி செய்வதை நாம் காண்கிறோம். இது தானே நடப்பதாக நாம் அறிகிறோம்.

நம் மனம் சக்தியினின்று நம்மையறியாமல் ஜீவியத்திற்கும் போவதால் இந்த மாற்றம் நடக்கிறது என நாம் அறிய வேண்டும்.

தலைமையாபீஸூக்கு மாற்றலானபின் அங்கும் நான் குமாஸ்தா தானேஎன நினைப்பது, இடத்தின் முக்கியத்துவத்தைப் புறக்கணிப்பதாகும். அன்னைக்குப் பிரார்த்தனைசெய்து பலிப்பது, கடையில் நாம் ஒரு பொருள் வாங்குவது போன்றது. 10 ஆண்டிற்கு முன்னால் கிடைக்காத பொருள் இன்று கிடைப்பது பெரிது. நம்மூரில் கிடைக்காத மருந்து சென்னையில் கிடைக்கிறது. அது வசதி. யோகம் செய்வது அப்பொருளை நாமே உற்பத்தி செய்வது போன்றது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். அதனால் இக்கருத்தை ஆழ்ந்து கவனித்துப் பலன் பெறலாம்.

ஆழ்ந்த ஆராய்ச்சி அதிகப் பலன்தரும்.

நான் இளைஞன். வேலைக்கு இன்டர்வுயூக்கு வந்து வரிசையில் காத்திருக்கிறேன். என்முறை 10ஆவது. எனக்கு முன் 9பேர் இருக்கிறார்கள். திடீரென என் பெயர் அழைக்கப்படுகிறது. என்னை விசாரிக்கிறார்கள். வேலை கிடைக்கிறது. இது பெருமாற்றம். காரணம் தெரியவில்லை. என் சர்ட்டிபிகேட்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் பரிசு பெற்றதை ஆபீசர் கவனித்து எனக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்என்று தெரிகிறது. அத்துடன் நான் ஓடிய நேரம் அகில இந்திய ரிகார்ட் என நான் அறியேன். நான் வேலைக்கு வந்தேன். கம்பனி என்னை athlete விளையாடுபவனாகக் கருதுகிறது. இந்த ரிகார்ட்டால் நான் கம்பனிச் சார்பாக அகில இந்தியப் பந்தயத்தில் சேர்ந்தால், வெற்றி பெற்றால் எனக்கு அக்காரணத்தால் கம்பனியில் பிரமோஷன் சீக்கிரம் வரும். விளையாட்டு உலகில் அகில இந்திய ரீதியில் பிரபலமடைவேன்.

  • வேலைக்குச் சம்பளம் கிடைக்கும்.
  • என் விளையாட்டுத் திறமைக்குக் கிடைப்பது பெரியது.
  • அதனால் இந்த 140 முறைகளில் ஏதேனும் நம் வாழ்வில் எழுந்திருந்தால், அது நம்மை அடுத்த கட்டம், முடிவான கட்டமான யோகத்திற்கு அழைத்துப் போகும்.

சக்தியிலிருந்து ஜீவியத்திற்குப் போவது பிரார்த்தனையிலிருந்து யோகத்திற்குப் போவதாகும்.

 

(17) அகம் புறத்தை ஆள்வது

பிரார்த்தனை பலித்தால் அல்லது தியானம் நிலைத்தால் அல்லது இந்த 140 முறைகளில் எது ஓரளவு பலித்தாலும், மற்ற அத்தனையும் ஓரளவு முன்னேறும். அத்தனையும் முன்னேறாமல், ஒன்று பலிக்காது.

  • நமக்குத் தெரிவது ஒன்று.
  • பலிப்பது அனைத்துமாகும்.
  • நம் ஆராய்ச்சி, நமக்குத் தெரிந்த கோணத்திலிருந்து மட்டும் தொடரும்.

பிரார்த்தனை பலிப்பது என்பதே புறத்திற்குள்ள முறைகளைத் தவிர்த்து அகத்தில் முயல்வதாகும். நம் செயலைத் தவிர்த்து அன்னையை நம்புவது சமர்ப்பணம். எனவே சமர்ப்பணம் அகத்திற்குரியது. மௌனம், புறமான பேச்சிலிருந்து அகமான பேச்சற்ற நிலைக்குப் போவது. நமது ஜீவியம் உலகம்என்ற புறத்தினுடையது. பிரபஞ்சஜீவியம் புறத்திலில்லை, அகத்திற்கே சொந்தமானது. பக்கம் 1039 - The Life Divineஇல் பகவான் பிரம்மாண்ட ஞானோதயத்தைப் பற்றிப் பேசுகிறார். அது ஆன்மா ஜடத்தை ஆள்வதாகும். அதுவும் அகத்திற்குரிய சித்தியே.

  • நமக்கு தியானம் பலிக்கிறது, பிரார்த்தனை பலிக்கிறது என்ற பார்வை அதைக் கடந்து யோகம் பலிக்கிறதுஎன உணரும் கட்டத்தில் நம் பார்வையில் எந்த வாயில் மூலம் ஞானம் உதயமாகிறது, யோக வாயில் திறக்கிறது எனக் காண்பது அப்பாதையைப் பின்பற்ற உதவும்.
  • இதை எப்படிப் பின்பற்றுவது?

வழிகளை இரண்டாகப் பிரிக்கலாம்.

  1. திறந்த வாயிலை அடுத்தஅடுத்த கட்டங்களுக்கு எடுத்துப் போகலாம். எந்த சித்திக்கும் பல நூறு கட்டங்களிருப்பதால் அதை அறிவது எளிது. செய்வது அவ்வளவு எளிதன்று.

    அகம் என்பதில் முதல்நிலை மனம். மனத்தில் அடுத்த நிலைகள் சூட்சுமம், காரணம்.

    இரண்டாம் மூன்றாம் நிலைகள் உணர்வு, உடல்.

    அவற்றுள்ளும் அடுத்த கட்டங்கள் மனத்தைப் போலவேயுண்டு.

  2. இரண்டாம் முறை:

    புறம் நகர்ந்து அகத்தை அடைந்தால், இப்பட்டியலில் உள்ள 140 முறைகளில் அடுத்த சிலவற்றைப் பின்பற்றலாம்.

    உதாரணமாக மௌனத்தையும், பிரபஞ்சஜீவியத்தையும், அடிமனம் திறப்பதையும் முயலலாம்.

முதன் முறை தொடர்ந்து உயருவது. இரண்டாம் முறை horizontal பக்கவாட்டில் எல்லாத் திசைகளிலும் உள்ள வாயில்களைத் திறப்பது. உயரே போகும் பொழுது பக்கவாட்டில் உள்ள முன்னேற்றம் வரைக்குமே உயர முடியும். அஸ்திவாரம் அகலாமல், உச்சி நகராது. எனவே ஒன்று மற்றதைப் பொருத்தது. நாம் எதையும் பின்பற்றலாம்.

  • யோகத்தை நாடுபவர்க்கே உரிய முறைகள் இவைஎன்பதால், இது தீவிரமான அன்பர்கள் முழுமுயற்சியை மேற்கொள்ளும்பொழுது மட்டும் இவை பலிக்கும்.
  • யோகம் பலித்தால் இலட்சியம் பூர்த்தியாகும். யோகம் பலிக்காவிட்டால் வாழ்வு அபரிமிதமாகப் பரிமளிக்கும். (140 முறைகளாக இக்கருத்து விளக்கப்படுகிறது).

 

தொடரும்.....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
உடலுக்கு இறைவன் பணிவாக வெளிப்படுகிறான்.

******



book | by Dr. Radut