Skip to Content

07. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(மே 2009 இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

 1. நீ ஒரு திட்டத்தில் நெடுநாளிருந்தால், உன் எண்ணம், நோக்கம், முடிவு ஆகியவற்றை முறைப்படுத்தினால், வெளியிலிருந்து அது போன்ற எண்ணம், நோக்கம், முடிவு உன்னை நோக்கி வருவதைக் காணலாம். அது சூட்சுமமான அமைப்பு. ஆனால் தவறாது செயல்படும். நடைமுறையில் நாடும், உலகமும் உள்ளூரிலுள்ள உன் செயலுக்கும், எண்ணத்திற்கும் பதில் கூறும் வகையில் செயல்படும்.

  எண்ணம் சக்திவாய்ந்தது.
  முடிவு கனமானது.

  இச்செய்தி சம்பந்தமாக அன்னை, பகவான் கூறியவை, சாதகர்கள் அனுபவம், நம் சொந்த அனுபவம், பிரபஞ்சத்திற்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு, பூரணயோக இலட்சியம் ஆகியவற்றைக் கருதுவது நல்லது.

  • உலகில் எந்த நல்லது நடக்க வேண்டும்என்றாலும், முதலில் அது ஆசிரமத்தில் நடக்க வேண்டும். (1973 வரை இது உண்மை. அதன் பிறகு இதற்கு எதிரானது உண்மையென்ற கருத்தில் அன்னை பேசியிருக்கிறார்).
  • "என் எண்ணங்களை உலகம் நிறைவேற்றத் தவறியதில்லை. நாளாகலாம், தவறியதில்லை'' - பகவான் கூறியது.
  • ஆசிரம நிலங்கள் பயிராவதற்கும், இந்திய உணவு உற்பத்திக்கும் உள்ள தொடர்பு, புல் வளர்க்க வாங்கிய 100 ஏக்கர் இந்தியாவில் முதன்மையான பண்ணையானது நாட்டில் உணவு உற்பத்தியை 5 மடங்காக்கிற்று.
  • தவணை விற்பனையை நாடு ஏற்கவேண்டுமென அன்பர் உருகி வேண்டி, பத்திரிகைகளில் பல முறை எழுதியது நாட்டில் தவணை விற்பனை சகஜமாயிற்று.
  • ஆரோவில் உலகப்போரைத் தடுக்க ஏற்பட்ட நகரம். 1968இல் நிர்மாணிக்கப்பட்டது. 1989இல் வல்லரசு போட்டியழிந்தது.
  • பாலைவனம் பயிரிட நீர்வளமிருந்தது, நாட்டில் பிரதிபலித்தது.
  • வறுமையான கிராமம் வளமான கிராமமானதும், நாட்டில் சுபிட்சம் பரவுவது உண்மை.
  • மனிதன் இறைவனை வழிபடுவதைவிட, இறைவனாக முயல்வது பொருத்தம் - அன்னை.
  • 25 ஆண்டில் பாகிஸ்தான் உடையும்என பகவான் கூறியபடி 25ஆம் ஆண்டு பங்களாதேஷ் பாகிஸ்தானிலிருந்து பிரிந்தது.
  • 1916இல் பகவான் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேரும் என்றார். 50 ஆண்டு கழித்து EU ஸ்தாபனமாயிற்று.
  • அன்பர்கள் ஆரம்பித்த வேலைகள் அளவுகடந்து பரவியது.
  • அன்பர்கள் உள்ள இடம், தியான மையச் சுற்றுப்புறங்கள் வளம் கொழிப்பது.
  • ரூ.1 கூலி பெற்றவர் இன்று ரூ.125 கூலி பெறுவது.
  • ஜனத்தொகை நாட்டை பாதிக்கும்என்ற கருத்தை அன்பர்கள் ஏற்க மறுத்தார்கள். உலகம் இன்று ஜனத்தொகை செய்யும் உதவியைப் பற்றிப் பேசுகிறார்கள்.

   அன்பர்கள் செயல் அன்னையின் கருவியாகி அகிலமெல்லாம் அருள் பரவ,

   • அன்பர் எண்ணம் நன்மை பயக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.
   • அவர் எண்ணம் தெளிவின் சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும் (conceptually organised).
   • அது பரநலம் பயக்கும் எண்ணமாக இருக்க வேண்டும்.
   • அது நடைமுறையில் செயலாக மாறவேண்டும்.
   • செயல் பயன்தரும் பக்குவமுடையதாக (organised) இருக்க வேண்டும்.
   • அன்னை ஜீவியத்தைத் தாங்கிவரும் செயலாக அமைய வேண்டும்.
   • நாட்டில் முன்னோடியின் செயலாக இருக்க வேண்டும்.
   • தவறு, குறை, தீமை கலப்பற்றதாக இருக்க வேண்டும்.
   • நேர்மையின் திறன் நேர்த்தியாகப் பயன்பட வேண்டும்.
   • சமர்ப்பணமான செயலாக அமைய வேண்டும்.
   • புதிய கருத்தாக புத்துணர்வு தருவதாக இருக்க வேண்டும்.
   • நாட்டின் ஆழ்ந்த அபிலாஷையைப் பிரதிபலிக்க வேண்டும்.
   • மனிதகுலத்தின் மகிமையை எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும்.
   • செயல் திருவுருமாறும்முறை வெளிப்பட வேண்டும்.
 2. அவ்வமைப்புகள் (organisation) திறமை, எண்ணம், நோக்கம், முடிவு, பண்பு, சூட்சுமத் தெளிவு ஆகியவற்றால் அமைந்தன. அந்தந்த நிலைக்குரியன ஆங்காங்குச் செயல்படும். தேவைப்பட்டவை எல்லாம் நிறைந்தபொழுது அவை பூர்த்தியாகும். அதற்குச் சற்று முன்னும் பலன் தெரியாது.

  கடைசி நிமிஷம்வரை பலன் கண்ணுக்குத் தெரியாது.

  • திறமைக்குப் பலன் உள்ளவரை கிடைக்கும்.
  • பண்பு நிறைந்து, நிலைத்தால் பலன் தெரியும். க்ஷணம் இழந்தால் அனைத்தும் போய்விடும்.
  • பேச்சாளர் திறமைக்குத் தகுந்த கூட்டம் வரும்.
  • எலக்ஷனில் தேவையான மெஜாரிட்டிக்கு 1 ஓட்டு குறைந்தாலும் தோற்கும்.
  • கடைப் பையனுக்குள்ள திறமைக்குச் சம்பளம் கிடைக்கும்.
  • கணக்குப்பிள்ளைக்கு நாணயம் மயிரிழை தவறினாலும் வேலை கிடைக்காது.
  • பாடகியின் திறமைக்குரிய சன்மானம் கிடைக்கும்.
  • கற்புநிலை இழை தவறினாலும் திருமணம் நடக்காது.
  • அளவு (quantity) உள்ளவரை பலன் தரும்.
   தரம் (quality) முழுமையானால் மட்டும் பலன் தரும்.
   10 ஆண்டு தவம் ஒருமுறை எழும் கோபத்தால் அழியும்.
   100 ஆண்டு கர்மம் ஒரு நிமிஷ தரிசனத்தால் கரையும்.
  • சக்தி செயலாகி, செயல் ஆயிரம் முறை மீண்டும்மீண்டும் வந்து, திறமை (skill) உற்பத்தியாகிறது. 100 முறை consecration என்ற ஆங்கிலச் சொல்லைக் கேட்டிருந்தாலும், ஆங்கில அறிவு இல்லாதவருக்குத் திரும்பச் சொல்ல வாராது. 1000 முறை கேட்டால் சொல்லும் தைரியம் வரும். வாய், "கான்சரேஷன்' என்று கூறும். நாள்கணக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டால், "கான்சகிரேஷன்” எனச் சொல்லலாம். இதற்கு திறமை (skill) எனப் பெயர். ஆயிரம் திறமைகளைப் பெற்றவர்க்குப் பொதுவாக எதிலும் திறமை (capacity) வரும். சக்தி ஒரு சொல் வழியாக 1000 முறை சென்றால் உச்சரிக்கும் திறமை (skill) வரும். எனவே (skill) திறமைஎன்பது ஓர் அமைப்பு. (Capacity) பொதுத்திறமை பெரிய அமைப்பு.
  • "இந்த மேஜை விலை 1000 ரூபாய்' என்பது விஷயம் (fact). இதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். "எனக்கு மேஜை தேவை இல்லை” என்பது ஓர் எண்ணம். அதனுள் பல விஷயங்கள் உள்ளன. "நான் எழுதுவதில்லை. மேஜை எழுதுபவர்க்கே தேவை. என் வேலை வீட்டு வேலை. வீட்டு வேலைக்கும் எழுத்திற்கும் சம்பந்தமில்லை. நான் 8 வகுப்பு படித்தேன். அது 15 வருஷத்திற்கு முன். எழுதும் பழக்கம் போய்விட்டது. எழுதும் அவசியம் எனக்குக் குறைவு. அப்படி ஏற்பட்டால் யாராவது எழுதித் தருவார்கள். அதனால் எனக்கு மேஜை தேவையில்லை' - இது ஓர் எண்ணம். இதனுள் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. அவை சேர்ந்து (organised) எண்ணமாகின்றன.

   எண்ணம் விஷயங்கள் சேர்ந்த அமைப்பு.
   நோக்கம் உணர்ச்சிகள் சேர்ந்த அமைப்பு.
   முடிவு தீர்மானங்கள் சேர்ந்த அமைப்பு.
   பண்பு நயமான நாகரீகமான செயல்கள் சேர்ந்த அமைப்பு.
   சூட்சுமத் தெளிவு அனுபவங்கள் சேர்ந்த அமைப்பு.

   எண்ணம், நோக்கம், முடிவு, பண்பு, சூட்சுமத்தெளிவு சாப்பிடுவதற்கும், படிப்பதற்கும், உத்தரவிடுவதற்கும் மாறும். சிறிய விஷயங்களுக்கும், பெரிய விஷயங்கட்கும் மாறும்.

   அந்தஅந்த நிலைக்குரியன ஆங்காங்கு, செயல்படும்.

   வாழ்க்கையில் பலன்என்பது பலவிதம். பட்டம் பெறுவது, திருமணம் செய்வது, சொத்து வாங்குவது, பதவி பெறுவது, நல்ல பெயரெடுப்பதுஎனப் பல நிலைகளில் பலவாறான பலன்கள் உண்டு. சொத்து வாங்குவது திறமைக்குரிய பலன். திறமையுள்ள அளவுக்குப் பலிக்கும். நல்ல பெயர் எடுப்பது, நன்றி பெறுவதுஎன்பவை பண்புக்குரிய பலன். அண்ணன் ஆயிரம் நல்ல காரியம் செய்தால், நல்ல பெயர் சில சமயங்களில் தம்பிக்கு வரும். முதலாளி ஏராளமாகப் பணம் செலவுசெய்து பல நல்ல காரியங்கள் செய்தால், நன்றியறிதல் மானேஜருக்குப் போகும், சமயத்தில் எதிரிக்குப் போகும். பழி ஓரிடம், பாவம் ஓரிடம்என்பது பழமொழி. முருகன் உலகைச் சுற்றி வந்தார், விநாயகர் மாம்பழம் பெற்றார்என்பது கதை. சுருக்கமாக,

   பண்ணிய புண்ணியம் பயிரில் தெரியும்

   என்ற பழமொழி இந்நிலையை விளக்குகிறது.

  • பண்பு பலன்பெற பண்புக்குரிய திறமை தேவை.
  • பொறுமை, நிதானம், நல்லெண்ணம், பரநலம், தெய்வ நம்பிக்கை அப்பண்புகளாகும்.

தொடரும்...

******

ஜீவிய மணி
அலையால் அசையாத சுவர் ஆழமான சுவர்

******book | by Dr. Radut