Skip to Content

04. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

என். அசோகன்

 1. ஆண்கள் கெட்டுப் போவதைக் கண்டுகொள்ளாத சமூகம் அதே தவற்றிற்காகப் பெண்களை கடுமையாகத் தண்டிக்கிறது. சமூகம் ஆணாதிக்கம் நிறைந்ததுஎன்பதற்கு இதுவே நல்ல நிருபணமாகும்.
 2. வயதான காலத்தில் தம்பதியரில் இருவரில் யாரேனும் ஒருவர் மறைந்தாலும் அடுத்தவர் நீண்ட காலம் இருப்பதில்லை. வயோதிகத்தில் துணையின்றி இருத்தல் பொறுக்க முடியாமல் இருக்கிறது.
 3. திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாமலிருப்பவர்களைவிட அதிக நாட்கள் உயிரோடு இருக்கிறார்கள். துணையோடு இருப்பது ஆயுளை நீட்டிக்கிறதுஎன்று இதிலிருந்து தெரிகிறது.
 4. இந்தியாவில் வயதான பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களுடைய பிள்ளைகளுக்கு இருக்கிறது. ஆனால் மேலை நாடுகளில் வயதான காலத்தில்கூட பெற்றோர்கள் பிள்ளைகளுடன் இருக்காமல் முதியோர் இல்லங்களைத் தேடிப் போகிறார்கள். அந்நாடுகளில் இளைய தலைமுறையும் மூத்த தலைமுறையும் சேர்ந்திருக்க முடியாத அளவிற்குத் தனி நபர் சுதந்திரம் மற்றும் தனிமை ஆகியவை வளர்ந்து விட்டன.
 5. வயதானவர்கள் இந்தியாவில் ஆசிரம வாழ்க்கையை நாடிப் போகிறார்கள். சாதாரண வாழ்க்கையைவிட ஆன்மாவை தேடிப் போவது மிகவும் கடினமான விஷயம். வயதான காலத்தில் energy level எல்லாம் குறைந்திருக்கும்பொழுது ஆன்மாவை வெல்ல முடியும்என்று நினைப்பது அறிவில்லாத எதிர்ப்பார்ப்பாகும்.
 6. பண்பாடற்ற குடும்பங்களில் தம்முடைய சொத்தை முன்னமே பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் பெற்றோர்கள் பிள்ளைகளால் உதாசீனப்படுத்தப்படலாம். ஆனால் பண்பு நிறைந்த குடும்பங்களில் அப்படி, சொத்தைப் பிரித்துக்கொடுத்தாலும் பிள்ளைகளுடைய கவனமோ, மரியாதையோ குறையாது.
 7. மகளின் வருமானத்தை வைத்துக் குடும்பம் நடத்தும் பெற்றோர்கள் அதன் காரணமாக அவளின் திருமணத்தைத் தாமதிக்க வாய்ப்புண்டு. பண்பாடற்ற குடும்பங்களில் இந்த ஆபத்து அதிகம். பண்பு நிறைந்த குடும்பங்களில் மகளின் வருமானத்தில் வாழ்வதை விட உரிய காலத்தில் அவளின் திருமணத்தை நடத்தவே அவர்கள் விரும்புவார்கள்.
 8. பெண் பார்க்கவரும் வரன்களிடம் ஒன்றன்பின் ஒன்றாக மகளைக் கொண்டு வந்து காட்டுவது சம்மந்தப்பட்ட பெண்ணிற்குச் சங்கடமாக இருக்கலாம். ஆனால் கல்யாணம்தான் எல்லாம்என்று இந்தியப் பெண்களுக்கு போதிக்கப்படுவதால் எந்த அசௌகரியம் மற்றும் சங்கடத்தையும் அவர்கள் எதிர்கொள்ளத் தயாராகிவிடுகிறார்கள்.
 9. உற்றார், உறவினர்கள் கொடுக்கும் நிர்பந்தத்தின் காரணமாகவே பல பெற்றோர்கள் உரிய காலத்தில் பிள்ளைகள் திருமணத்தை நடத்திவிடுகிறார்கள். உற்றார் உறவினர்கள் விசாரிக்காமல் இருந்தால் பல பெற்றோர்கள் பிள்ளைகள் திருமணத்திற்காக நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பார்கள்.
 10. இந்தியாவில் சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் பொறுப்பு சகோதரர்களுக்கு இருக்கிறது. கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் அடையாளம் இது. மேலை நாடுகளில் இத்தகைய எதிர்ப்பார்ப்பு இல்லை. தனிநபர் சுதந்திரம் அங்கு அதிகமாக இருப்பதால் ஆண்பிள்ளைகளைப் போலப் பெண்பிள்ளைகளும் திருமண விஷயத்திலும் சுதந்திரமாகச் செயல்படுகிறார்கள்.
 11. அன்னையைப் பொருத்தவரையில் ஓர் ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்குத் திருமணம்என்ற சடங்கு தேவை இல்லை. ஆனால் அன்னைக்கு சரியான விஷயம் முறைகளையும், சம்பிரதாயத்தையும் வலியுறுத்தும் சமூகத்திற்கு அது ஒத்து வாராமல் இருக்கிறது.
 12. திருமணவாழ்க்கை கசந்தால் மேலை நாடுகளில் விவாகரத்து பண்ணிக்கொள்கிறார்கள். இங்கே - இந்தியாவில் - மனம் கசந்து விட்டதுஎன்றாலும் வெளிப்படையாகப் பலபேர் விவாகரத்து செய்து கொள்வதில்லை. ஊர் உலகத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் சேர்ந்தே இருக்கிறார்கள். இப்படி இருக்கும்பொழுது திருமணத்தின் சாரம்போய் தோற்றம் மட்டும் மிஞ்சுகிறது.
 13. ஊர் உலகத்திற்காக இல்லாமல் குழந்தைகளுக்காவது சேர்ந்திருக்கின்ற தம்பதியர்கள் அந்த அளவிற்கு உயர்ந்தவர்களா- கிறார்கள்.
 14. கணவனோ அல்லது மனைவியோ அடுத்தவரை திருப்திபடுத்த முயல்வதுஎன்பது ஓர் அறிவில்லாத வேலையாகும். மனிதனுடைய ஆசைக்கு அளவில்லைஎன்பதால் அவை தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்குமேதவிர ஆசைகள் நிறைவு பெறுவதில்லை.
 15. வயதில் சிறிய பெண்களை கல்யாணம் செய்து கொண்டால் அடங்கி இருப்பார்கள்என்று எண்ணிப் பல ஆண்கள் இப்படித் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் ஆண்மகன் மன உறுதி அற்றவனாக இருந்தால் வயதில் இளைய மனைவியும் அதிகாரம் செய்வாள்.
 16. கணவனுக்கு உண்மையாக இருக்கின்ற மனைவி கணவன் வசதியாக இருந்தாலும், வசதி குறைந்தாலும் கணவன்கூடவே இருப்பாள். கணவனுடைய வருமானம் குறைவதால் அவரைவிட்டு விலகுபவர் மனைவியாக நடந்துகொள்ளாமல் விலைமாதுபோல் நடந்து கொள்கிறாள்.
 17. வருமானம் உயரும்போது பல ஆண்கள் மனைவி போக இன்னொரு துணையும் தேடுவதுண்டு. கையில் நிறைய பணம் இருந்தாலும் அம்மாதிரி தவறான பாதையில் போகாமல் இருப்பதற்கு நிறைய கட்டுப்பாடு தேவை.
 18. பல இந்திய மனைவிமார்கள் வெளியில், பொதுஇடங்களில் கணவன்மார்களுக்கு அடங்கி இருப்பதுபோல் நடந்து கொள்வார்கள். ஆனால் தனியாக வீட்டில் இருக்கும்பொழுது இவர்கள்தான் அவர்களை அடக்கி ஆள்கிறார்கள்.
 19. இந்தியப் பெண்கள் திருமணம் ஆகும்பொழுது திருமணம்என்ற ஸ்தாபனத்திற்கே தம்மை அர்ப்பணித்துக்கொள்வதால் திருமண வாழ்க்கை கசந்து போகும்பொழுது மேலைநாட்டுப் பெண்களைப் போல அவர்களால் வெளியே வர முடியவில்லை.
 20. தம் நிலையை மீறிய இடத்தில் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் அந்த உயர்ந்த நிலைக்கு ஏற்றாற்போல் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி அவர்கள் தம்மை உயர்த்திக் கொள்ளவில்லைஎன்றால் அந்த உயர்ந்த சூழ்நிலையில் அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது.
 21. இந்தியப் பெண்களைப் பொருத்தவரை காதல் திருமணம்என்பது ஆபத்து நிறைந்ததாகும். நன்றாக யோசித்துச் சரியானவரைத் தேர்ந்தெடுத்துப் பழக வேண்டும். அந்த நேரத்தில் வருகின்ற காதல் வேகத்தின் காரணமாகச் செயல்பட்டிருந்தால் விஷயம் கோணலாகி சிக்கலில்போய் முடிவதற்கு வாய்ப்புண்டு.

முற்றும்.

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஆன்மாவைப் பொறுத்தவரை, தவறு என்பதில்லை. மனச்சாட்சி தீமையைக் கண்டதும் விலகுகிறது. சமூகம் பொது இடத்தில் தவறு நடக்க அனுமதிப்பதில்லை.
 • ஆன்மாவுக்கு அனைத்தும் சரி.
 • மனச்சாட்சி தவற்றை அனுமதிக்காது.
 • சமூகம் தவறான நடத்தையை அனுமதிக்காது.

******book | by Dr. Radut