Skip to Content

09. பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி -என்னுடைய நாளை (24 மணி) எப்படி அமைத்துக்கொண்டால் நல்லது எனக் கூறவேண்டும்.

அண்ணன் - எப்படிப் பார்த்தாலும் நாள் முழுவதும் அன்னையுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புள்ளபடி அமைக்கவேண்டும் என்பது சட்டம்.

தம்பி - நடக்காதன எல்லாம் பேசினால், அது பேச்சோடு போய்விடும். என்னால் முடியக்கூடியதாகச் சொன்னால் நல்லது.

அண்ணன் - இது முடியும். அவசியம். இதற்குக் கீழே போனால் அன்னை தரிசனச் சமயங்களில்தான் நினைவு வரும். சாதாரண மனிதன் கோயிலுக்குப் போவதுபோல் முடியும்.அன்னையைச் சற்று நேரம் தீவிரமாகவும், முக்கிய விஷயங்களில் முக்கியமாகவும், பொதுவான விஷயத்தில் பின்னணியாகவும், எதுவும் முடியாத நேரத்தில், "இங்கு எனக்கு அன்னை மறந்துவிட்டது'' எனவும் கொள்ளமுடியும்.

தம்பி - Negative memory மறந்துவிட்டோம் என அறிவதும் அன்னையை நினைவு கூர்வதாகும். சரி சொல்லுங்கள்.

அண்ணன் -

1) First waking thought, விழித்தவுடன் வரும் நினைவு, before sleeping நாள் முடிவில் அன்னையை நினைத்துத் தூங்கப் போவது. இப்படிச் செய்வதால் இரவு முழுவதும் ஏதோ ஓரளவில் நம்முடன் அன்னை நினைவு இருக்கும்.

2)காலையில் வேலைக்குப் போகுமுன் - அரை மணி நேரம் அல்லது 10 நிமிஷம் - அன்றைய எல்லா வேலைகளையும் அன்னையிடம் உணர்வுபூர்வமாகச் சொல்லுதல்.

3)எல்லோருக்கும் மிக முக்கியமான வேலை என இருக்கும். மாணவனுக்குப் பரீட்சை, பெண்ணுக்குத் திருமணம், வியாபாரிக்கு ஆர்டர் என எவருக்கும் மனதில் நிரந்தரமான விஷயம் என்றிருக்கும். அதை 2 அல்லது 3 முறை மனதில் ½ நிமிஷம் கொண்டுவந்து சமர்ப்பணம் செய்வது.

. இதன் பெரும் பலன் வேண்டுமானால் நேரம் குறிக்கப்பட்டு நிமிஷம் தவறாமல் உதாரணமாக காலை 7½ மணி, இரவு 8.15, மத்தியானம் 1.15 எனக் குறிப்பிட்டு அந்த நிமிஷத்தில் செய்வது அவசியம்.

. அது முடியாதவர் 2 அல்லது 3 முறை 1 நாளில் சமர்ப்பணம் செய்யவேண்டும்.

4) அவசரமான வேலை, அவசியமான வேலை, கழுத்துக்குக் கத்தி எனச் சில சமயங்களில் ஒரு வேலை இருப்பதுண்டு. எலக்க்ஷன், தொலைந்துபோன குழந்தை, கோர்ட் கேஸ், வந்த நல்ல வரன் நல்ல முடிவு சொல்வது என விஷயமிருப்பதுண்டு. அதை hourly consecration மணிக்கொருமுறை சமர்ப்பணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். இதையும் மேற்சொன்னதுபோல் குறிப்பிட்ட நிமிஷத்திலாவது, அல்லது மணிக்கு ஒரு முறையாவது செய்ய வேண்டும்.

5) எந்த வேலை செய்தாலும் சமர்ப்பணம் செய்து ஆரம்பிக்கவேண்டும். இல்லையெனில் சமர்ப்பணம் தவறிவிட்டது என்றாவது கவனிக்கவேண்டும்.

6) சாவித்திரி தினமும் ½ பக்கம் முதல் 5 பக்கம் வரை ஏதாவது ஒரு நேரம் படிக்கவேண்டும். முடியாவிட்டால் வாரத்தில் 1 நாளாவது மேற்கொள்ளவேண்டும்.

7) அரை நிமிஷம் தாமதிக்காமல் நடந்தால் நல்லது என சில சமயங்களில் பிரச்சினைகளிருக்கும். கேட்ட பெரிய கடன் வருவது, வடக்கே போன மகன் இந்த வாரம் வருவான் என்பது படபடப்பாகிவிட்டது, வேண்டாத விருந்தாளி வந்து 52 நாள் ஆகியும் போகவில்லை (.ம். மாமியார், நாத்தனார், தூரத்து உறவினர்), போன் கனெக்ஷன் வரும் என எதிர்பார்ப்பது போன்றவை "எப்பொழுது முடியும்' என முள் மேல் நிற்பது போலிருக்கும். அதுபோன்ற பிரச்சினை இருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு செய்யலாம். அரை நிமிஷத்தில் மிகத் திருப்தியாக முடியக்கூடிய முறையை a) எனவும் மற்றவற்றை பிறகும் எழுதியுள்ளேன்.

a) பெரு முயற்சி செய்து அப்பிரச்சினை முழுவதையும் மறப்பதே அம்முறை. அது பலித்தால் அடிக்கடி தவறும். தவறும்பொழுது ஒரு க்ஷணம் நிதானித்து மனத்துள் நுழைந்த எண்ணத்தை அப்புறப்படுத்தவேண்டும்.

b) மணிக்கொரு முறை சமர்ப்பணம் செய்தல்.

c) தியானம் ஆரம்பிக்கும்முன் அப்பிரார்த்தனையை மேற்கொள்வது.

d) அப்பிரச்சினையைப் பற்றிப் பேசக்கூடாது என்ற முடிவு.

e) அது விஷயமாக மனதில் குறை எழக்கூடாது என்ற தீர்மானம்.

f) நடக்கிறபொழுது நடக்கட்டும் என தீர்மானமாக விட்டுவிடுதல்.

g) முடிந்ததை முடிந்தபொழுது செய்வது.

h) அந்நினைவு வந்தால் அன்னையை நினைக்க முயல்வது. முடியாவிட்டால் மனத்துள் ஓர்

புன்னகையை வரவழைப்பது.

i) யாராவது அதை எழுப்பினால் react செய்யாமலிருப்பது.

j) ஏதோ நல்ல காரணத்திற்காக தாமதம் ஆவதாகப் புரிந்துகொள்வது.

8) வாழ்க்கைக்கு முக்கியமான நெடுநாளையத் திட்டம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வேறு வேலையில்லாத பொழுது அதைப் பற்றிய விவரங்களைச் சேகரம் செய்வது, சிந்தனை செய்வது, அன்னை வழியில் அதற்கு முக்கியமானது என்ன என்று தேடுவது.

9) வேலையில்லாத நேரத்தில் கடந்த காலக் குறைகளுக்காக வருத்தப்படாமலிருப்பது.

10) முடிந்தால் அவற்றை past consecration கடந்த காலச் சமர்ப்பணத்திற்கு உட்படுத்துவது.

இந்த 10 தலைப்புகளில் ஒருவர் தம்மை உட்படுத்திக்கொண்டால், அவர் எந்த நிலையிலுள்ள அன்பரானாலும், அவருக்கு downfallஅதற்குக் கீழே போகவேண்டிய அவசியமிருக்காது. வாழ்க்கை ஒழுங்காக, நிதானமாக, ஏதோ ஓரளவில் குறையின்றி ஓடிக்கொண்டிருக்கும்.

தம்பி - இப்படியெல்லாமிருந்தால், புதுப் பிரச்சினைகள் எழுவதைத் தடை செய்யுமா?

அண்ணன் - விதிவிலக்கான விஷயங்கள் தவிர, புதுப் பிரச்சினைகள் எழா.

தம்பி - ஏதோ சுலபமாகச் சொல்வீர்கள் என நினைத்தேன்.

அண்ணன் - இதைவிடச் சுலபமாக வேண்டுமானால், அம்முறை கஷ்டம் வருவதை விலக்காது.

தம்பி - அது முக்கியம்.

அண்ணன் - பொதுவாகப் பரபர என இருப்பவர்கள் லாட்டரி எதிர்பார்ப்பார்கள். பெருமுயற்சியை மேற்கொண்டு திணறுவார்கள். நாளுக்கு நாள் ஒரு சொத்து விற்றுக் குடும்பம் நடக்கும். நான் அன்பர்களைப் பற்றிச் சொல்லவில்லை. வாழ்வு இதுபோல் பலவிதத்தின. அவர்களில் ஒரு விதத்தினர், இருப்பதைக் காப்பாற்றினால் போதும் என்பவர்கள். அவர்கள் வாழ்வில் செய்வதை நான் அன்பர்கட்கு - அவர்களுடைய உயர்ந்த நிலைக்குப் பொருந்துமாறு - சொல்லிய விதம் இது.

தம்பி - கைக்கு மெய்யாக இருப்பதைப் பார் என்பது பரவலான எண்ணம்.

அண்ணன் - இருப்பதைவிட்டு, பறப்பதை நாடுவதுபோல் என்பது "விவேகம்'.

தம்பி - அன்னை நேர் எதிராக அல்லவோ கூறுகிறார்கள்? "கைக்கு மெய்யாக இருப்பதே உண்மை'. ஆனால் இன்று வரும் "பலாக்காயைவிட நாளைவரும் களாக்காய் மேல்' என்பதே அன்னையின் சட்டம்.

அண்ணன் - நாளைய பலாக்காய் கூடாது, இன்றைய களாக்காய் வேண்டும் என்பது நம் நடைமுறை.

தம்பி - அன்னை முறையை விளக்க, உதாரணத்துடன் சொல்லுங்கள்.

அண்ணன் - பாக்டரியின் மேனேஜராக வருபவனுக்குக் கால் பங்கு இலாபம் தர வந்த முதலாளியிடம் "கால் பங்கு வேண்டாம். 4, 5 வருஷம் சம்பளம் கொடுங்கள். பிறகு பாக்டரியே எனக்கு வேண்டும்'' என்றவன் இந்த பாக்டரியுமில்லாமல், எந்த வேலையுமில்லாமல், 7 வருஷம் அலைக்கழிந்து முடிவில் சொந்தத் தொழில் டைரக்டரான பொழுது அவன் மேனேஜிங் டைரக்டர், "இந்த பேப்பரில் கையெழுத்து போடு. எல்லாப் பணத்தையும் நான் எடுத்துக்கொள்கிறேன். நீயே பாங்க்கிற்குக் கட்டு'' என்பதைக் கேட்டு தரையில் புரண்டு அழுததை நான் 100 முறை கூறியிருக்கிறேன்.

தம்பி - அதேபோல் மானேஜராக ரூ.450 சம்பளத்தில் 30 வருஷத்திற்கு முன் போனவர் முதலாளிக்கு நிறைய சம்பாதித்துக் கொடுத்தபொழுது 5% இலாபப் பங்கு தருவதாகச் சொன்ன முதலாளி 10% தந்தார். அது அன்று ரூ.40,000. மானேஜர் 5% போதும் என்றார். 2½ வருஷத்தில் மானேஜர், மானேஜிங் டைரக்டரானார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள்.

அண்ணன் - இதைவிடப் பெரிய "பலாக்காய்' வேண்டுமா?

தம்பி - மேலும் உதாரணம் வேண்டும். விளக்கமில்லையா?

அண்ணன் - வேலையில்லாதவனுக்கு அமெரிக்காவில் வேலை வந்தது. அதனால் வீட்டிற்கு மரியாதை வந்தது. வீடு எதைப் பாராட்டுகிறது? அமெரிக்கா வேலையைப் பாராட்டி அமைதியாக இருக்கலாம். இன்றைய "மரியாதை'யைப் பாராட்டி டமாரம் அடித்தது.

தம்பி - இங்கே பேசாமலிருக்கப் பொதுவாக முடியாது. டமாரம் அமெரிக்க வேலையை இல்லை என்றாக்கியது தெரியுமே.

அண்ணன் - நாளைய பெரிய நல்ல பலனை எதிர்பார்ப்பது பரந்த மனம். கைக்கு மெய்யாய் ஆர்ப்பாட்டம் செய்வது சின்ன புத்தி. பெரிய மனசுக்குப் பெரியது வருகிறது. சுலபமான விளக்கமாயிற்றே.

தம்பி - பெரிய மனசு வேண்டும் என்பதுதான் விளக்கமா?

அண்ணன் - அடக்கமான மருமகள், பெரிய இடத்து நட்பு, பல்கலைக்கழக பேராசிரியருடைய அடக்கம் எளிமையானவரிடமிருந்தும் அவர் கற்றுக்கொள்ளும் பாங்கு அரிது. அன்பர்கட்கு அது கிடைத்தால் மாமியார் உடனே கொட்டமடிக்கிறார். பெரிய இடத்து நட்பை பெருமையாகப் பேசுவது, அடக்கமானவரை மட்டம் தட்டுவது போன்றவற்றைச் செய்யாத அன்பருக்குப் பெரிய இடமே வந்துவிடும். எளிமையானவருக்குப் பேராசிரியர் பதவியே வரும்.

தம்பி - அந்தப் பொறுமை எப்படி வரும்?

அண்ணன் - அதிர்ஷ்டம் பெற அப்பொறுமை வேண்டும். அவசியம் வேண்டும். எலக்க்ஷனில் அடக்கமானவன் ஜெயிப்பதைக் காண்கிறோம் அல்லவா?

தம்பி - எலக்க்ஷன் நமக்கு அடக்கத்தை உணர்த்தவே வந்தது போலிருக்கிறது. இன்றைய மாமியார் அன்றைய மருமகள்போல் நடத்தப்படுகிறார். தானே மாமியாருக்கு அந்த அடக்கம் வந்தால் மருமகள் அன்றைய மருமகளாகி விடுவாள்.

அண்ணன் - அடக்கம் உண்மையாக வந்தால் அதற்கு அதிர்ஷ்டம் எனப் பெயர். அடக்கம் வந்து, அது உண்மையாக இருந்து, அதிர்ஷ்டம் வாராதவர் ஒருவரைச் சொல்ல முடியுமா?

தம்பி - அது சரி. அதிர்ஷ்டம் நிச்சயம் வருகிறது. உண்மையான அடக்கம் சின்ன மனிதனுக்கு வரும்பொழுது அவனுக்கு அழகாக நடக்கத் தெரியவில்லை. தன்னையே அசிங்கம் செய்துகொள்கிறான். கை கூப்பி வணக்கம் சொல்லவேண்டிய இடத்தில் காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிடுகிறான்.

அண்ணன் - அடக்கம் வந்தது உண்மையானால், அது அழகான உருவம் பெறவே ஒரு தலைமுறையாகும். அடக்கத்துடன் அமைதி வர நாளாகும்.

தம்பி - அன்னை அமைதியை அனைவருக்கும் தருகிறார். நாமே அடக்கத்தைப் பெற்றால், அமைதி அதை அழகான பக்குவமாக்குகிறது. நம்மவர் பயந்துதான் அடங்குவார்கள்.

அண்ணன் - பயந்து அடங்கினாலும், அடக்கத்திற்குப் பலனுண்டு. பயந்த மாமியார். ஆர்ப்பாட்டமான மருமகள் வந்தாள். பையன் பெண்டாட்டிப் பேச்சைக் கேட்பவன். மாமியார் பயந்தவர், அன்பர். மருமகள் திட்டுவாள், அதிகாரம் செய்தாள், மாமியாரைப் பட்டினிப் போட்டாள், பலர் எதிரே கேலி செய்தாள், கொடுமை செய்தாள். மாமியாருக்கு வசதி அதிகம். மகனுடைய வசதியே மாமியாருடையதுதான். ஒரு வார்த்தை அவள் பேசினால் மருமகள் கொட்டம் அடங்கிவிடும். மாமியாருக்கு மாதம் 70,000 வருமானம். மகனுக்கு ரூ.3200 சம்பளம். "நீ தனிக்குடித்தனம் போ'' என மாமியார் மகனிடம் சொன்னால் எரிவதை இழுத்ததைப் போலாகும். மாமியார் அதைச் செய்யாமல் கேலிக்கும், அதிகாரத்திற்கும் ஆளானார். மருமகள் எது செய்தாலும் "மதர், மதர்.....'' என்பாள்.

தம்பி - என்ன ஆயிற்று?

அண்ணன்-பெண்ணின் தகப்பனாருக்கு "மரியாதை'' முக்கியமாயிற்று. பெண்ணைத் தனிக்குடித்தனம் வைக்கச் சொன்னார். பெண் அவரை மீறமுடியவில்லை. அவர் வசதியற்ற பெரிய குடும்பக்காரர் - பெரிய குடும்பம் என்றால் 11 பேருள்ள குடும்பம் - 6000 ரூபாயில் வாழ்பவர். அத்துடன் "மாமியாரிடம் ஒரு பைசா வாங்கக்கூடாது. உங்கள் வீட்டுப் பக்கம் மாமியார் காலடி எடுத்து வைக்கக்கூடாது'' என உத்தரவு போட்டுவிட்டார்.

தம்பி - ஆச்சரியமாக இருக்கிறதே. பெரிய விடுதலையாயிற்றே?

அண்ணன் - மாமியார் பக்தி பலித்தது. அவர் தம் பயத்தை தைரியமாக மாற்றியிருந்தால், பெண் தம்போல் அடக்கமாகியிருப்பாள்.

தம்பி - எப்படி மாற்றுவது?

அண்ணன் - மருமகள் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்து அடங்குவதற்குப் பதிலாக உண்மையாகவே மனம் அடக்கத்தை மேற்கொண்டால் பயம் மாறி தைரியமாகும். அத்தோடு, பயம் தரித்திரம், தைரியம் அதிர்ஷ்டம். அப்படிச் செய்திருந்தால் வருமானம் பெருகும்.

தம்பி - என்ன இலட்ச ரூபாயாகியிருக்குமோ?

அண்ணன் - 70,000 ரூபாய் சம்பாதித்த பயந்தாங்கொள்ளி, அதுபோல் மாறியதால் 20 லட்சமானது உனக்குத் தெரியுமா?

தம்பி - பயத்திற்கும் பணத்திற்கும் என்ன சம்பந்தம்?

அண்ணன் - தைரியத்திற்குத் தைரியலக்ஷ்மி எனப் பேராயிற்றே.

தம்பி - ஆமாம். தைரியலக்ஷ்மியிருந்தால் மற்ற ஏழு லட்சுமியும் வரும் என்று ஒரு கதையுண்டு.

அண்ணன் - தைரியமாக இருக்க பொய் சொல்லக் கூடாது. உண்மை பேசத் தைரியம் வேண்டும்.

தம்பி - அதை யாரிடமும் சொல்ல முடியாது.

அண்ணன் - அந்தப் பரீட்சை பாஸாகாதவர்க்கு இரண்டாம் கட்டம் இல்லவேயில்லை.

தம்பி - மறைத்தால் தான் பிழைக்கலாம். எப்படி உள்ளதை வெளியில் சொல்வது?

அண்ணன் - மறைக்கக்கூடாததை, சொல்லவேண்டிய தைரியம் அவசியம். அது இல்லாதவனைப் பற்றிப் பேச்சில்லை.


 

தொடரும்.....


 

****


 


 


 



book | by Dr. Radut