Skip to Content

06. தீபாவளி - திருவுருமாற்றம்

"அன்பர் உரை"

தீபாவளி - திருவுருமாற்றம்

(நவம்பர் 17, 2002 அன்று கும்பகோணம் தியான மையத்தில் திரு. P.Vசங்கர் நிகழ்த்திய உரை)

நரகாசுரன் அழிந்த நாள் தீபாவளி. தீபாவளி கொண்டாடப் படுவதைப்போல் நம் நாட்டில் எந்தப் பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை. இதை மகாலட்சுமியின் வருகையாகக் கொண்டாடும் சம்பிரதாயமும் உண்டு. அசுரன் அழிந்து அதிர்ஷ்டம் வரும் நாள் தீபாவளி என நாம் கொள்ளலாம்.

தீமையை அழிக்க வேண்டும் என்பது உலகம்.

தீமை என்பது தீமையில்லை, திருவுருமாறும் நன்மை என்பது ஸ்ரீ அரவிந்தம்.

வரலாறு என்பதை அரசர்கள் வரலாறாக எழுதினார்கள். பின் நிகழ்ச்சிநிரலாக எழுதினார்கள், மக்கள் வரலாறாக எழுத முனைந்தார்கள். ஆங்கிலேயர் ஒருவர் வரலாற்றை தத்துவமாக எழுத முயன்றார். இது புது முயற்சி. அவர் முயற்சி வெற்றி பெற்றுப் பூர்த்தியாயிற்று. 10 வால்யூம்கள் வெளியிடப்பட்டன. அதில் அவர் கூறும் தத்துவங்களில் ஒன்று,

மனிதன் நாகரீகம் பெற்றால், வெளியிலி ருந்து அசுரன் வந்து நாகரீகத்தை அழிக்கிறான். அதுபோல் ரோமாபுரி அழிந்தது என்கிறார். இது உலக வரலாற்றின் வழக்கம் என்கிறார். ஸ்ரீ அரவிந்தர் 1919இல் The Life Divineஇன் கடைசி அத்தியாயத்தில் உலகம் புற அசுரனால் அழிக்கப்படும் நிலை மாறினால் அகஅசுரன்  அவ்வேலையை மேற்கொள்வான் என்கிறார். இந்த மேற்கோளைப் படித்த அந்த ஆங்கில வரலாற்றாசிரியர் "அதுவே என்னுடைய கருத்துமாகும்'' என்கிறார்.

அசுரன் அழிந்த தீபாவளி அனைவருக்கும் அளவுகடந்த சந்தோஷம் தரும் நேரம் என்பதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். இது புற அசுரன். உள்ளேயுள்ள அசுரன் அழிவது "சாவித்திரி'யில் எமன் அழிவதாகும். நாம் தீபாவளியைக் கொண்டாடும்பொழுது நரகாசுரனை நினைப்பதில்லை. அவன் அழிந்ததையும் கருதுவதில்லை. நாம் நம் குதூகலத்தைக் கொண்டாடுகிறோம். 1971இல் இந்திரா கட்சியை இரண்டாகப் பிரித்தார். தம் கட்சி சிறுபான்மையாயிற்று, இதரச் சிறு கட்சிகள் உதவியை நாடினார். அன்னையின் அருள் தேடி வந்தார். அமோக வெற்றி பெற்றார். வெளியிலிருந்து வரும் எதிர்ப்பு திறனற்றுப் போயிற்று. எதிர்க்கட்சி வலுவாக உள்ளபொழுது நம் உட்கட்சிப் பூசல்கள் மறையும். எதிர்கட்சிக்கு வலுவில்லாவிட்டால் உட்பூசல் அபரிமிதமாகும். தன்னிஷ்டப்படி நடக்கத் தோன்றும். சஞ்சைகாந்தியின் ஆர்ப்பாட்டம் தலை விரித்தாடியது. 1977இல் அனைத்தும் அழிந்தது. மீண்டும் இந்திராவுக்கு அன்னை அருள் 1980இல் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தது. மீண்டும் உள்ளே கொந்தளிப்பு. இந்திராவைப் பாதுகாக்க வேண்டிய செக்கூரிட்டியே அவரைச் சுட்டுக் கொன்றான். அகத்தின் அசுரனிடமிருந்து இந்திராவுக்கு பாதுகாப்பில்லை. மீண்டும் ராஜீவுக்கு அதைவிடப் பெரிய வெற்றி. இதுவரை புறத்திலிருந்து அழித்த அசுரன், அகத்தில் புகுந்து உயிரை அழித்தான். அடுத்த கட்டத்தில் அவ்வசுரன் நாணயத்தை அழித்தான். அனைத்தும் அழிந்தது. ராஜீவ் தோற்றார், கொல்லப்பட்டார். அன்று வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை.

வேதம் அசுரர்களைப் பற்றிப் பேசுகிறது. தவம் செய்யும் விஸ்வாமித்திரரை தொந்தரவு செய்ய மேனகை வருகிறாள். அசுரன் காமக்குரோதமாக மனத்துள்ளிருந்து எழுகிறான். சூர்ப்பனகையின் மூக்கை இலக்குவன்அறுக்கலாம். உள்ளிருந்து விஸ்வாமித்திரருக்கு எழும் பொறாமையை அவரே அழிக்க வேண்டும். மேனகை வெளியிலி ருந்து வந்து உள்ளேயுள்ள காமவுணர்வை எழுப்பி அவர் தவத்தை அழிக்கிறாள். அசுரன் எப்படி உள்ளே வந்தான்? அஞ்ஞானம் அசுரனாக உள்ளே கொலுவிருக்கிறது.

நாம் அறிந்த வழிபாட்டு முறைகள் உள்ளேயுள்ள அசுரனை சுபாவம் என அழைக்கிறது. மனிதனால் சுபாவத்தை எதிர்க்க முடியாது, அழிக்க முடியாது. அவன் தன் சுபாவத்தையொட்டியே போக வேண்டும் என நாம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். அன்னை கூறுவது திருவுருமாற்றம். இது உலகுக்குப் புதிய கருத்து. நாட்டு வழக்கில் life-styleஅநேகமாக எல்லாமும் மாறுகிறது. ஆனால் மதவழிபாடு எந்த மதத்திலும் மாறும் அறிகுறிகளில்லை. ஸ்ரீ அரவிந்தம் அதைச் செய்ய முன் வந்தது. அது வழிபாட்டை மாற்ற முயலவில்லை. அதற்குப் பதிலாக ஆன்மீகப் பயிற்சியை ஏற்கும்படிக் கூறுகிறது.

. மதம் தீமையை விட்டு விலகுகிறது.

. ஆன்மீகம் தீமையை திருவுருமாற்றுகிறது.

இவையெல்லாம் தத்துவங்கள். தீபாவளிப் பண்டிகை. நடைமுறைக்கேற்ப தத்துவம் பேசுமா? பேசும்.

வீட்டில் திருமணம் வந்தால் மனஸ்தாபங்கள் விலகி மனம் இணையும். திருமணம் மனஸ்தாபத்திற்கு ஆரம்பமாகவும் இருப்பதுண்டு. பண்டிகை சந்தோஷமான நேரம். சந்தோஷத்தை யார் அனுபவிப்பது என்பதில் மனிதச் சுபாவம் - போட்டி, பொறாமை -வெளிப்பட்டால் பண்டிகையே விகற்பத்திற்கு வித்தாகும். அன்னை மனிதனைத் தெய்வத்தைக் கடந்த இறைவனுக்கும், யோகத்திற்கும் அழைக்கின்றார். மனிதன் அவனுக்கே இயல்பான சுபாவத்தை நாடுகிறான்.

. சுபாவம் திருவுருமாறும் என்பது அன்னை கொள்கை.

. கீதை சுபாவத்தின் பெருமையைக் கூறுகிறது.

. பிறருடைய உயர்ந்த சுபாவத்தைப் பின்பற்றுவதைவிட நம் தாழ்ந்த சுபாவத்தைப் பின்பற்றுதல் பலன் தரும் என்பது கீதை. மனிதனுடைய திறமையைக் கடந்தது சுபாவம் என்று கீதை கொள்கிறது.

. ஸ்ரீ அரவிந்தம் மனிதன் சுபாவத்தைவிட உயர்ந்தவன் எனக் கொள்கிறது.

. தான் எங்கிருக்க வேண்டும் என மனிதனால் நிர்ணயிக்க முடியும் என்று அன்னை கூறுகிறார். அதனால் திருவுரு மாறும்.

. "நாங்கள் எளிய மனிதர். எங்களுக்குப் புரியும்படி ஸ்ரீ அரவிந்தத்தைக் கூற முடியுமா?'' என்பது அன்பர்கள் நிலை. முடியும் என்பது அன்னை பதில். அது முடிந்தால் புற அசுரனும், அக அசுரனும் அழிந்து தீபாவளி தினமும் கொண்டாடி, நாமும் உலகமும் தீமையிலிருந்து விடுபடுவோம்.

ஒரு சோதனை :

நமக்குப் பிரச்சினைகட்குக் குறைவில்லை. நம் அனுபவத்தில் நடக்காத விஷயங்கள் பல. "நான் உழைக்கப் பிறந்தவன். பிறர் எளிதாகச் சாதிப்பதை நான் பல தோல்விகள், சங்கடங்களுக்குப் பின் பெருமுயற்சியால் சாதிப்பது என் இராசி'' என்பது ஒருவர் அனுபவம். அவரை இச்சோதனை செய்யும்படி அன்பர் ஒருவர் கூறினார். "உங்கள் இராசி உண்மை. ஆனால் அதைவிடப் பெரிய சக்தி 1956இல் புவியில் வந்துள்ளது. அதற்கு இராசியை மாற்ற முடியும், கர்மத்தைக் கரைக்க முடியும். சுபாவத்தை அழிக்க முடியும்'' என்பதை அவர் ஏற்பதுபோல் பேசினார், "நான் எப்படி அந்த சக்தியைப் பெற முடியும்?'' எனக் கேட்டார்.

நம்புவது பெறுவதாகும்.

அவருக்கு கொஞ்சம் நிலம் உண்டு. ஆற்றுப் பாசனமுள்ள இடம். ஒரு போகம் பயிராகும். அடுத்த போகம் செய்ய கிணற்றுப் பாசனம் வேண்டும். அப்பகுதியில் நீரூற்று கொஞ்சம். ஒரு போர் கிணறு இறக்கவேண்டுமானால், பல இடங்களில் தோண்டிப் பார்க்கவேண்டும். இவர் கேட்பது, "என் பக்கத்து நிலத்துக்காரர் தொட்டனவெல்லாம் கூடிவரும். அவர் 11 இடங்களில் தோண்டினார். 11ஆம் இடத்தில் ஊற்று கிடைத்தது. என் இராசிக்கு என்ன வரும் எனத் தெரியவில்லை'' என்றார். அன்பர் கூறியதை ஏற்று இவரும் போர் தோண்டினார். முதலிடத்தில் ஊற்று கிடைத்தது! நமது இராசி என்பது நம் சுபாவம் வெளிப்படும் இடம். தோல்வி என்பது இருளான கெட்ட சுபாவம். கோபம் கெட்டது. எவ்வளவு முயன்றாலும் கட்டுப்படாது. கோபத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி உலகில்லை. ஆனால் புதிய சக்தி உலகில் 1956இல் வந்துள்ளது. இது அன்னை சக்தி. அதை நம்பினால் செயல்படும். நம் கோபத்தை அது கட்டுப்படுத்தும். இந்த விவசாயியின் இராசியை அன்னை சக்தி மாற்றியது அவர் அனுபவம்.

. நம்மால் கட்டுப்படுத்த முடியாத சுபாவத்தை அன்னை கட்டுப்படுத்துவார். அவர் அதைச் செய்ய நாம் அன்னையை நம்பவேண்டும்.

. மனிதன் அன்னையை நம்புவதுதான் சரணாகதி என்கிறார் பகவான்.

* சர்க்காருக்குக் கடிதம் எழுதி பதில் பெறுபவரில்லை. ஒருவர் மனையை சர்க்கார் தம் காரியத்திற்காக எடுத்துக்கொண்டு உத்தரவு பிறப்பித்தபின், அவர் அன்னையை நம்பி, சர்க்காருக்குக் கடிதம் எழுதினார். நல்ல பதில் 4ஆம் நாள் தந்தியாக வந்தது. எவரும் நம்பமுடியாதது!

* இதுபோன்ற பெரிய பிரச்சினைகள், சிறிய பிரச்சினைகள் நம் வாழ்வில் பல உள்ளன. அவற்றுள் ஒன்றை இந்த சக்தியை நம்பி செய்தால் மேற்சொன்ன பலன் கிடைக்கும். அது சொந்த அனுபவம். அந்த அனுபவமில்லாமல் கீழ்க்கண்டவை புரியும். அனுபவம் முழுவதும் புரிய உதவும்.

. உலகில் அசுர சக்திகள் உலவுகின்றன.

. அயல்நாட்டு எதிரியை அழிக்க இராணுவம் உதவும்.

. உள்நாட்டு அராஜகத்திலிருந்து போலீஸூம், கோர்ட்டும் காப்பாற்றும்.

. கணவனின் கொடுமையிலிருந்து தப்பிக்க இதுவரை வழியில்லை.

. கணவனும் புற அசுரனாவான்.

. நம் கோபம், பொறாமையிலிருந்து நம்மை யார் காப்பாற்றுவார்?

. நரகாசுரன் புற அசுரன்.

. பொறாமை அகத்தீமை.

. அகத்தீமை அனைத்தையும் அழிக்கவல்லது.

. அகம் தூய்மையானால் அதிர்ஷ்டம்.

. அகம் ஆழ்ந்து தூய்மையானால் அருள்.

. புறத்தைத் தன்னுள்ளே கொண்ட அகம் தூய்மையாவது பேரருள்.

. அகத்தின் ஆழ்ந்த தூய்மை துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம்.

. அகத்தூய்மை சத்தியம்.

. சத்தியம் சத் என்ற அகத்தின் புறம்.

. சத்தியம் ஆன்மாவின் அலங்காரம்.

. தீபாவளி புறவிடுதலை தருவது.

. அகவிடுதலை தரும் தீபாவளிக்கு நாம் செய்யவேண்டியது என்ன?

. நமது கெட்ட சுபாவங்களைப் பாராட்டாமல், அவை சரி என நினைக்காமல், அவற்றை அழிக்க முடிவு செய்து, முடிவை அன்னைக்குச் சமர்ப்பணம் செய்தால், சமர்ப்பணம் செய்த

அளவுக்கு அவை நமக்கு விடுதலையளிக்கும்.

. சமர்ப்பணம், சரணாகதியானால், விடுதலை நிரந்தரமாகும்.

தீபாவளி புறத்திலிருந்து அகத்திற்கு வந்து தினமும் கொண்டாடப்படும்.

சூழல் :

வரப்போகும் மழை கருமேகக் கூட்டமாக இருண்டு வரும். இது மழை வரும் அறிகுறி. நாம் அதையறியாவிட்டாலும் எறும்பும், ஈசலும் அதை அறிவிக்கும். மேடைப் பிரசங்கமும், சுவரொட்டியும் எலக்ஷன் வருவதையும், வந்துவிட்டதையும் காட்டும். பட்டாசு வெடித்து

தீபாவளியை அறிவுறுத்துகிறது. ஆழ்ந்த மன அமைதியும், இதுவரை அனுபவிக்காத சந்தோஷமும் அன்னை சூழலுக்குரியன. பாண்டிச்சேரியை 7½ மைல் அளவுக்கு அவை சூழ்ந்துள்ளன என்பதை அன்பர்கள் அறிவார்கள். அன்னை கூறியுள்ளார். அன்னையின் திருவுருவப்படம் உள்ள இடங்களில் இச்சூழல் உண்டு. ஒரு முதலாளி பொதுமக்களிடமிருந்து சட்டப்படி பலகோடிகள் டெப்பாசிட்டாகப் பெற்றார். பெற்ற பணத்தை முதலீடு செய்தார்.முதலீட்டுக்காகப் பெறப்பட்டது டெப்பாசிட். பொதுமக்கள் நம்பிக்கையால் செயல்படுபவர்கள். சட்டம் அவர்கட்கு இரண்டாம்பட்சம். எவனோ ஒருவன் புரளியைக் கிளப்பிவிட்டான். அனைவரும் ஒரே நேரத்தில் டெப்பாசிட்டைத் திரும்பக் கேட்கின்றனர்.சட்டம் அவருக்குச் சாதகமாக இருந்தாலும், நிலைமை மோசமாகிறது.சிம்மசொப்பனமாகிவிட்டது. அவர் நண்பர் ஓர் அன்னை படம் அனுப்பினார். ஆர்ப்பாட்டம் ஓய்ந்து அமைதியாயிற்று. அசுரச் சூறாவளியின் அட்டகாசமும் அன்னைப்படத்தின் சூழலின்முன் தலை வணங்குகிறது. அன்னையை நெடுநாளாக அறிந்த அன்பர்கள் ஜாதகம் பார்க்கமாட்டார்கள். ஆனால் வீட்டிலுள்ளவர்கள் அவர்கள் ஜாதகத்தைப் பார்க்க நேரிடும். அதில் வெளிவருவது இரண்டு,

1) அன்பர் வாழ்வில் ஜாதகத்தில்லாத நல்லது நடந்துள்ளது.

2) ஜாதகப்படி நடக்கவேண்டிய கெட்டது நடக்கவில்லை.

1994இல் ஓர் அன்பர், "எனக்கு அன்னையைச் சில வருஷங்களாகத் தெரியும். பலிக்காத பிரார்த்தனையில்லை. இப்பொழுது பிரச்சினைகளைக் காணோம். வாழ்க்கையில் பிரச்சினைகளேயில்லையோ எனத் தோன்றுகிறது'' என்றார். 1980இல், 4, 5 குடும்பங்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருந்த நேரம், முக்கியமாகப் பேசுபவை,

1) வீட்டில் சண்டையும், சச்சரவுமாகயிருக்கிறது.

2) ஏன் வீட்டிற்குப் போகவேண்டும் எனத் தோன்றுகிறது.

3) சம்பாதிப்பனவெல்லாம் டாக்டருக்குப் போகிறது.

4) காலையில் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதும், கணவர் ஆபீசுக்குப் போவதும் அமர்க்களம்.

5) இந்தக் காலத்தில் படிக்காமல் என்ன செய்வது? பிள்ளைகள் படிப்பதைத் தவிர மற்றனவெல்லாம் செய்கிறார்கள்.T.V.வந்தாலும் வந்தது, புத்தகம் மறந்துபோய்விட்டது.

அங்கு ஓர் அன்பரிருந்தார். அவர் அதற்குமுன் 10 ஆண்டுகளாக அன்னையை அறிந்தவர், நம்பிக்கையில்லை. அன்னை கணவருக்கு, எனக்கில்லை என்ற கொள்கையுடையவர். மற்றவர்கள் பேசும்பொழுது தன் குடும்பத்தை நினைத்துப் பார்த்தார். சண்டை என்பது எப்பொழுது வந்தது என நினைவுபடுத்திப் பார்க்கவேண்டும் எனத் தோன்றியது. சந்தோஷமிருக்கிறதா என்பது தெரியவில்லை. சண்டை, சச்சரவுக்கு வேலையில்லை என மனம் கூறிற்று. ஆனால் ஏற்க மறுத்தது. டாக்டர் விஷயமும், படிப்பும் தெளிவாக மனதில் தென்பட்டன. டாக்டரிடம் போகும் வழக்கமிருந்தாலும் எப்பொழுது கடைசியாகப் போனோம் என நினைக்கவேண்டியிருந்தது. பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் தனக்கோ, கணவருக்கோ பிரச்சினையிருந்ததாக நினைவில்லை. இருக்கவில்லை என மனம் கூறியதை அவரும் ஏற்றுக்கொண்டார். இவை அன்னையை வணங்குவதால் என அவருக்குப் புலப்படவில்லை, அவர் வணங்கவில்லையே.

"எனக்கு டாக்டர் செலவில்லை, படிப்பு விஷயத்தில் ஆண்டவன் எனக்குப் பாரம் தரவில்லை,'' என்றார். அன்னையை ஒருவர் வீட்டில் வணங்கினால், பிறர் கண்டுகொள்வதில்லை. அப்படிப்பட்ட வீடுகளில் அன்னையைப் பற்றிப் பேச்சு எழாது. ஒருவர் அன்னையை வணங்குவதை மற்றவர் கருதமாட்டார்கள்.

. அன்னையை முதலில் அறிந்த சிறு குடும்பம். பாசத்தால் இணைக்கப்பட்டது. அனைவரும் ஒருவரை அறியாமல் அடுத்தவர் எதுவும் செய்யமாட்டார்கள். எந்தச் செய்தியும் உடனே அனைவருக்கும் வரும். அந்த வீட்டிற்கு அன்னை வந்தார். அவர் வந்த கடந்த 12 ஆண்டுகளாக அன்னையைப் பற்றிப் பேசுவதைத் தவிர, வீட்டில் வேறு பேச்சில்லை. கல்லூரிக்குப் போவதுமுதல் கடைக்குப் போவதுவரை எல்லாச் செயல்களையும் அன்னை மூலமாகக் காணும் கண்ணோட்டம் எழுந்தது. பெரிய வசதியில்லை, சிரமமில்லை. எப்படி அன்னை அனைவர் உள்ளங்களையும் ஆக்ரமித்தார் எனத் தெரியவில்லை. கோயில்,குளம் போவது நின்றது. பண்டிகை கொண்டாடுவதில்லை. தரிசனம் பண்டிகையாயிற்று. சந்தோஷம் உள்ளிருந்து ஊற்றாகப் பொங்கி எழுகிறது. "என்ன இப்படிப் பூரிக்கின்றீர்கள்? என்ன விசேஷம்'' எனக் கேட்கிறார்கள்.

. பெண்கள் தியானத்திலிருந்து வந்து கல்லூரிக்குப் போனால் beauty parlourக்குப் போய் வருவதாகக் கூறுகிறார்கள்.

. ஒரு சிரமம் வந்தால், ஏற்கனவே அது மனம் சங்கடப்படும் நேரம். இப்பொழுது அது சமர்ப்பணத்திற்கான நேரம். அந்தச் சமர்ப்பணம் பலித்த வகை அடுத்த 10 நாளைக்குரிய topic.

. "நான் வீட்டைவிட்டுப் போவதில்லை. போகும் வயதோ, வசதியோ இல்லை. எனக்கு எங்கே தரிசனம்" என்று சோர்ந்தவர் T.V.யைப் போட்டால் அன்னை தரிசனம் தருகிறார்.

. முகம் தெரியாத புரோக்கரிடம் கொடுத்த பெருந்தொகை தகராறில்லாமல் வருவது அன்னையின் அளப்பரிய சக்தி.

. "நானும் என் மனைவியும் சமாதானமாக வாழமுடியும் என்ற நினைவை நான் ஆரம்பத்திலேயே இழந்தேன். அதுவும் முடியும் என அன்னை நிரூபித்தபின் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது" என்பது ஓர் அனுபவம்.

. ஏன் ஆசிரமம் போகவேண்டும்? கேட்டவுடன் கிடைக்கும் பொழுது எங்கேதான் போகவேண்டும் என்பது ஒரு கிராமவாசியின் கணக்கு.

. 2 வயதுக் குழந்தை தானே தியானத்திலிருப்பது கேள்விப்படாதது. அதுவும் அன்னை வாழ்விலுண்டு.

. அன்னையை அறிவது அதிர்ஷ்டம், வழிபடுவது யோகம்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஒரு புது விஷயத்தை - நமக்கு ஏற்கனவே தெரிந்ததைக் கொண்டு - புரிந்து கொள்வதை அறிவு என்கிறோம். புது விஷயத்தை அதன் கோணத்தில் புரிந்து கொள்வது சிந்தனையாகும்.

உள்ளதை உள்ளபடி அறிவது சிந்தனை.


 


 


 


 


 


 



book | by Dr. Radut