Skip to Content

04. அன்பரும் - நண்பரும்

அன்பரும் - நண்பரும்

அன்பர் - இரவு 1 மணிக்குக் கரண்ட் போய்விட்டது. Fan இல்லாமல் தூங்க முடியவில்லை. தியானத்தில் அமர்ந்து கரண்ட் வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். பொதுவாக அப்படிப் பிரார்த்தனை செய்தால் 5 அல்லது 10 நிமிஷத்தில் வரும். அப்படி வாராவிட்டால், நாள் முழுவதும் வாராது. கரண்ட் வாராத சமயங்களில் எனக்கு மனத்தில் பாரமாகப் பிரச்சினைகளிருப்பதுண்டு. நான் காலையில் ஊருக்குப் போக வேண்டும். தூக்கம் கெட்டுப் போனால், அது தொடர்ந்து வேலையைக் கெடுக்கும். 1½மணி நேர பிரார்த்தனைக்குக் கரண்ட் வரவில்லை. என் பிரார்த்தனைக்குக் கரண்ட் வாராது என நினைத்தேன். உடனே கரண்ட் வந்தது.

நண்பர் - நம்மால் முடியாது என அறிவது ஒரு வகை சரணாகதி (negative surrender).

அன்பர் - கரண்ட் போகும்போது நான் என்ன நினைத்தேன் என எனக்குப் பொதுவாகத் தெரியும். இன்று நான் தூங்கும் பொழுது கரண்ட் போனதால், அது தெரியவில்லை.

நண்பர் - கரண்ட் போகும்பொழுதும், வரும்பொழுதும் மனதில் உள்ள நினைவு எல்லா விஷயங்களையும் தெளிவு படுத்தும். நம் மனத்தைக் கவனிக்க அது சிறந்த வழி.

அன்பர் - என்னால் முடியாது என்று அறிந்தவுடன் கரண்ட் வருகிறது என்றால் என்ன அர்த்தம்? ஏன் போயிற்று?

நண்பர் - சுமார் 7, 8 மாதங்களாகக் கரண்ட் ½மணி நேரமில்லை என்ற பிரச்சினையில்லாமலிருந்தது.

அன்பர் - இந்த 7, 8 மாதமாக 5 நிமிஷம் கரண்ட்டில்லை என்பது கூட இல்லை என்று கூறலாம். 15 நாட்களுக்கு முன் எனக்கு ஜுரம் வந்தது. அன்றிரவு கரண்ட்டில்லை. அதிலிருந்து தினமும் ஒரு முறையாவது½ மணி கரண்ட்டில்லை என்றிருக்கிறது.

நண்பர் - இது போன்று நடப்பதில் பொதுவாக உள்ள காரணங்கள் தெரியும். இம்முறை இது ஆரம்பித்தது ஏன் என நான் அறிவேன். நம்மை விட்டுப் போய் அன்னைக்கு எதிராக செயல்பட்டவர் ஒருவர் வந்த அன்றிருந்து இது ஆரம்பித்தது.

அன்பர் - பொதுவாக உள்ள காரணங்களைக் கூறுவீர்களா?

நண்பர் - 1. நம் உறவில் அன்னையை ஏற்காதவர் மனமில்லாமல் இப்பொழுது ஆதாயத்திற்காக ஏற்றுக் கொண்டு வர ஆரம்பிப்பது.

                2. நம்மவர் மனத்தில் கல்யாணம், திருவிழா உற்சாகம் எழுவது.

                3. அன்னைச் சேவையில் இருந்து கொண்டு எதிராக நடப்பவர் மனம் மாற முயல்வது, முயலும்பொழுது திணறுவது.

               4. நாட்டின் எல்லையில் உள்ள நிலைமையை மனம் கண்டு கலங்குவது.

               5. அதிகமாக அன்னையை ஏற்றவர், மேலும் ஏற்க முயல்வது.

               6. பெரிய அதிர்ஷ்டம் வந்து வெளியே நின்று கொண்டு உள்ளே வர மிரட்டுவது.

அன்பர் - இவற்றையெல்லாம் ஒரே கருத்தாகக் கூறமுடியுமா?

நண்பர் - Receding low consciousness சுயநலம் குறைய மனம் பாடுபடுவது.

அன்பர் - சுயநலம் குறைந்தால் நல்லதுதானே.

நண்பர் - குறைந்தால் நல்லது என்று தெரிந்த பிறகு மனம் சுயநலத்தைவிட முயன்றால், உணர்வு விடமறுத்துப் போராடுகிறது.

அன்பர் - நமக்கு தீயசக்திகள் தாக்குதலால் இது நடக்காதா?

நண்பர் - இரண்டும் ஒன்றுதானே. அப்படிப்பட்ட தாக்குதலுக்குப் பின் முன்னேற்றம் வருகிறதல்லவா?

அன்பர் - எதிர்வீட்டுக்காரர் இந்த மாதம் அன்னைக்குப் பெரிய சேவை செய்தார். கரண்ட் அவருக்கும்தான் போயிற்று. நமக்கு ஒரு சட்டம், அவருக்கு ஒரு சட்டமா?

நண்பர் - அந்த சேவையே அவருக்குக் கரண்ட் போகக் காரணமாயிருக்கும்.

அன்பர் - அது எப்படி?

நண்பர் - அவர்கள் வீட்டில் 3 விதங்களாகச் சண்டை, தகப்பனார் பெண் சண்டை ஒன்று. சேவை இந்தக் குறைகளை எல்லாம் மீறி வியாபாரத்தைத் திடீரெனப் பெருக்கியது. புதிய உயர்ந்த நிலைக்குரிய, அஸ்திவாரம் ஏற்படும் வரை disharmony சுமுகமின்மை ஏற்படுமன்றோ? அதில் கரண்ட் நிற்பது முக்கியமானதாயிற்றே.

அன்பர் - இந்த 15 நாளில் எத்தனை முறை ஊர் முழுவதும் கரண்ட் இல்லாதபொழுது தியான மையத்தில் மட்டும் கரண்ட் இருந்தது? ஒரு நாள் கூட மையத்தில் முழுவதும் கரண்ட் இல்லாமலி ல்லை. ஒரு நாள் எதிர் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லாதபொழுது நான் கரண்ட் வர பிரார்த்தனை செய்தேன். சீக்கிரம் வந்து விட்டது.

நண்பர் - மனிதனைப்போல் பிறர் பாரத்தை ஏற்பது சத்திய ஜீவன் கடமையில்லை என்கிறார் பகவான்.

அன்பர் - நாம் பிறருக்காகப் பிரார்த்தனை செய்யக் கூடாதா?

நண்பர் - எதிர்வீட்டுக்காரருக்காகப் பிரார்த்தனை செய்தபின் நடந்ததைக் கவனித்தீர்களா?

அன்பர் - மறுநாள் முழுவதும் என் வீட்டில் கரண்ட் இல்லை.

நண்பர் - கடமை, பரநலம், நல்லெண்ணம் உள்ள அளவுக்குப் பிறருக்காகப் பிரார்த்தனை செய்வது நல்லது, முறை.

அன்பர் - ரேஷன் கார்ட் வாங்கப் போனேன். ஆபீசில் உள்ளவர்கள் கேலியாகச் சிரிக்கிறார்கள். வழக்கப்படி இல்லாமல் - மாமூல் கொடுத்து - நான் ரேஷன் கார்ட் கேட்டது அவர்களுக்கு அப்படியிருக்கிறது. எனக்குப் பணம் கொடுக்கச் சம்மதமில்லை.

நண்பர் - எந்த இடத்திலும் சுத்தமாக இருந்தால், இங்குப் பணம் கொடுக்கக் கூடாது, பல இடங்களிலும் நமக்குச் சௌகரியமாக நடந்து கொண்டு எங்கோ ஓரிடத்தில் சுத்தமாக நடந்தால் அது நடிப்பாக முடியும்.

அன்பர் - நான் வீம்பிற்காகச் செய்யவில்லை. எனக்குத் தெளிவில்லை. ரேஷன் கார்டு விஷயத்தை யோசனை செய்ய நினைத்தேன். அதே சமயம் ஆபீஸில் அதிக வேலை வந்ததால், ரேஷன் கார்ட் மறந்து போயிற்று. இன்று காலையில் அந்த ஆபீஸில் வேலை செய்பவர் கார்டு சாங்ஷன் செய்து எடுத்துக் கொண்டு வந்து வீட்டில் எனக்குக் கொடுத்தார். எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவர் என் நண்பர். இந்த ஆபீசிற்குச் சென்ற மாதம் மாற்றலாகி வந்திருக்கிறார். என்னைப் பார்த்திருக்கிறார். நான் அவரைப் பார்க்கவில்லை. அவர் செய்த வேலை கார்டு வந்தது.

நண்பர் - வேலையை மறந்தால், வேலை நடக்கும் என்பது சட்டம். சந்தர்ப்பம் மறக்கச் செய்தது. நாமே முனைந்து மறப்பது யோகம். எப்பொழுதும் ரேஷன் கார்டை நினைத்துக் கவலைப்படாமலிருப்பது நாம் செய்ய வேண்டியது. எனக்கும் ஓர் அனுபவம் உண்டு.

அன்பர் - முனைந்து மறந்தீர்களா?

நண்பர் - முனைந்து நினைவு வைத்திருந்த காரியம் 3 வருஷம் முடியாமற் போயிற்று.

அன்பர் - ஏன் மறக்க முடியவில்லையா?

நண்பர் - அது என் thesis. நல்லபடியாக எழுதி முடித்தேன். எங்கள் டிபார்ட்மெண்ட்டில் thesis.கொடுத்து 6 மாதத்தில் டிகிரி பெற்றவரும் உண்டு. 5 வருஷங்களாக அப்படியே இருப்பதும் ஒருவர் அனுபவம். எனக்கு thesis.கொடுக்கும்பொழுது அன்னையை நினைத்துக் கொடுத்தேன். அன்னையை மீறி டிபார்ட்மெண்ட் பழக்கம் நினைவு வருகிறது. Thesisஐ நினைத்தால் அன்னை தவிர மற்ற எல்லா நினைவுகளும் வருகின்றன. 3 நாள் பிரார்த்தனையை மேற்கொண்டேன். பிரார்த்தனை நல்லபடியாக முடிந்து மனம் அமைதியாய்விட்டது. இனி டிகிரி வாராவிட்டாலும் அமைதி போகாது என நினைத்தேன். ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது என்று கவலையாயிற்று.

அன்பர் - 3 நாள் பிரார்த்தனை தவறாது.

நண்பர் - 3 நாளும் நான் thesisஐயே நினைத்துக் கொண்டிருந்தேன். எப்படிப் பலிக்கும்?

1 வருஷமானபின் மணிக்கு, மணிக்கு அன்னையை நினைக்க முயன்றேன் hourly consecration. அது மறந்தே போயிற்று. ஆரம்பிக்க முடியவில்லை. 3½ வருஷம்முடிந்தது. 3 வருஷமானபின் thesisஐயே மறந்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டேன். அது மட்டும்தான் நினைவில் இருக்கிறது.

அன்பர் - எப்படி மறந்தீர்கள்?

நண்பர் - சரணாகதியைப் பற்றிய கட்டுரை ஒன்றில் சரணாகதியைப் புரிந்து கொள்ள சரணாகதியே சிறந்த முறை என்று படித்தேன்.

அன்பர் - என்ன சொல்கிறீர்கள், விளங்கவில்லையே.

நண்பர் - எனக்குப் படித்தவுடன் மனத்தில்பட்டது. என்ன பட்டது என்று புரியவில்லை. கட்டுரை முழுவதும் படித்தேன். இக்கருத்தைக் கூறியவர் அதை விளக்கவில்லை.

அன்பர் - சரணாகதியைப் புரிந்து கொள்ளவா அல்லது சரணாகதியைச் செய்யவா?

நண்பர் - நான் புரிந்து கொள்ள சரணாகதி பயன்படும் என்பதைக் கருதினேன். இரண்டொரு நாள் இதே யோசனையாக இருந்தபிறகு பளிச்செனப் புரிந்தது.

அன்பர் - என்ன புரிந்தது?

நண்பர் - புரிந்து கொள்ள நாம் அறிவை நம்புகிறோம்.

அன்பர் - சரி.

நண்பர் - புரிந்து கொள்ள சரணாகதியைப் பயன்படுத்த வேண்டும் எனப் புரிந்தது.

அன்பர் - அதாவது, புரிந்து கொள்ள முயலக் கூடாது.

நண்பர் - ஆம். அது புரிந்தவுடன் மனப்பாரம், occupation விட்டுப் போயிற்று. மறுநாள் காலையில் எழுந்தபொழுது உலகமே புதியதாகத் தோன்றியது.

அன்பர் - அப்படியிருந்தால் காரியம் முடியும்.

நண்பர் - எனக்கு 3½ வருஷத்தில் அன்றுதான் thesisமறந்து போயிற்று. என் பேராசிரியருக்கு பெரிய உத்தியோகம் வந்துவிட்டது, போகிறார் என்ற செய்தி அன்றே கிடைத்தது. Reader பேராசிரியர் இடத்திற்கு தற்காலிகமாக incharge ஆக வந்தார். Thesis வந்து காத்திருப்பது அவருக்குப் பிடிக்காத விஷயம். உடனே விஷயம் நகர ஆரம்பித்தது. சீக்கிரம் முடிந்தது.

அன்பர் - நாமே முனைந்து விஷயத்தை மறக்க முடியாதா?

நண்பர் - அதற்கு அதிக நம்பிக்கை வேண்டும்.

அன்பர் - வேறு வழியில்லையா?

நண்பர் - வேலையை விட நாம் பெரியவராக இருந்தால் நினைவு பாதிக்காது.

அன்பர் - நாம் சிறியவராக இருப்பதால்தானே பிரச்சினை வருகிறது.

நண்பர் - அன்பர் பெரியவர் என்பதை மனம் நம்ப வேண்டும். எனக்கு 3½ வருஷத்தில் கிடைத்த ஞானம் இவை.

அன்பர் - அன்பர் பெரியவர் என்றால் எப்படி?

நண்பர் - ஒரு பெரிய குடும்பம், பெரிய இடத்து உத்தியோகம், உயர்ந்த படிப்பு, உயர்ந்த ஜாதி ஆகியவை ஒருவரைப் பெரியவராக்குவதுபோல், அன்னை அன்பர் என்பதால் அவர் பெரியவர்.

நண்பர் - அது தவறாகாதோ?

அன்பர் - உத்தியோகம், பணம், அந்தஸ்து தருவது உண்மை. அதை நாம் புரிந்து கொள்ளாவிட்டால் தவறு. அகந்தை ஏற்றுக் கொள்வது தவறு.

நண்பர் - Thesisஐ விட நான் பெரியவன் என்றால் thesis என்னை உலுக்காது. அன்றாடக் காரியங்களைவிட நாம் பெரியவர் என்பதால் அவை நம்மை உலுக்கவில்லை. அதுபோல் நான் அன்னை அன்பன் என்பதால் thesis எனக்குச் சிறியது.

அன்பர் - நான் வேறு, என்னில் அன்பர் வேறு என்று கருத வேண்டும்.

நண்பர் - நான் என்பது அகந்தை. அன்பர் என்பது அந்தஸ்து. அந்தஸ்து செல்வாக்குத் தரவேண்டும். அகந்தையை வலுப்படுத்தக் கூடாது.

அன்பர் - நாம் முக்கியம் என்ற எண்ணமில்லாமல், நம்முள் உள்ள அன்பர் முக்கியம் என மனம் உணர்ந்தால், எந்தக் காரியமும் மனத்தை உலுக்காது என்று கூறுகிறீர்களா?

நண்பர் - அந்தத் தெளிவு எனக்கு முன்பேயிருந்திருந்தால் thesis என்னை ஆட்டிப்படைத்திருக்காது.

அன்பர் - அது பல பேருக்கு நடக்கிறது. நாங்கள் குடி இருக்கும் இடத்தில் 50 flats உண்டு. பொதுவான maintenance ஏற்பாடுண்டு. என் பக்கத்து வீட்டு அன்பர் மாலை 8 மணிக்கு வெளி பல்ப் எரியவில்லை என்று கண்டார். அது ஒன்றும் அவசியமில்லை. அவர் சிறப்பான அன்பர். உடனே புது பல்ப் போடுபவர். மணி 8 ஆகிவிட்டது. மறு நாள் முதல் வேலையாக அதைச் செய்ய முடிவு செய்தார். இரவு 10 மணிக்கு வெளியே வந்தவர் maintenanceஆள் பல்ப் போடுவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு விசாரித்தார். அவன் மறுநாள் லீவு என்பதால் முதல் நாளே முடிந்தவரை உள்ள வேலைகளை முடிக்க நினைத்து, இந்த பல்பைப் பார்த்து புதுப்பித்தேன் என்றான். இது silent will. நடக்கிறது.

நண்பர் - பல்ப்க்கு நடப்பது விசேஷம். Thesisக்கு நடந்தால் பெரிய விசேஷம்.

அன்பர் - ஏன் அங்கு நடப்பதில்லை?

நண்பர் - நமக்குப் பல்ப் சிறியது, thesis பெரியது. அன்பருக்கு இரண்டும் ஒன்று என்ற தெளிவு வரவில்லை.

அன்பர் - நீங்கள் சொல்வதில் 3 விஷயங்கள் உள்ளன.

1. விபரம் தெரியாதது.

2. தெரிந்தாலும், நேரம் வரும்பொழுது விபரம் தெரியாதது போலவே நடக்கிறோம்.

3. விபரம் தெரிந்தாலும், மனம் கட்டுப்படுவதில்லை.

நண்பர் - அன்னை மீது அதிக நம்பிக்கை வேண்டும் என நான் முதலி ல் சொன்னது அதுவே. நாம் எவ்வளவு படித்தாலும், அன்னையை சிவன், விஷ்ணு போன்ற தெய்வமாகவே எடுத்துக் கொள்கிறோம்.

அன்பர் - நமக்குச் சிவனும் புரிவதில்லை, விஷ்ணுவும் புரிவதில்லை, அன்னை புரிவதே இல்லை. எல்லாம் தெய்வம். பிரார்த்தனை பலி த்தால் சக்தி வாய்ந்த தெய்வம். இல்லாவிட்டால், இல்லை.Life Divine படித்தால் தெம்பாக இருக்கும் என்று தெரியும். என்னுடைய தம்பிக்கு இரண்டு நாளாக நல்ல ஜுரம். மாத்திரை சாப்பிட சண்டி செய்கிறான். தானே போகும் என்றும் கூறுகிறான். மூன்றாம் நாள் ஜுரம் மேலும் 1° அதிகமாயிற்று. சும்மாயில்லாமல் Life Divineசொற்பொழிவுக்கு வந்து அங்குச் சில உதவி செய்தான். இரவு ஜுரம் போய்விட்டது. பிறகு வரவேயில்லை.

நண்பர் - Life Divine சொற்பொழிவு கேட்பவர் அனைவருக்கும் தெம்பு வரும்.

அன்பர் - அன்னை எழுதிய எந்தப் புத்தகம் படித்தாலும் தெம்பு வரும் என்பது என் அனுபவம். அவர் சம்பந்தமான எந்த வேலையும் தெம்பு அதிகரிக்கும். இதுவரை என் சுபாவம் எனக்கே பிடிக்கவில்லை. இனி நான் அன்னைக்கு உகந்தவராக மாறிக் கொள்ள விருப்பப்படுகிறேன்.

நண்பர் - மாற விருப்பப்படுகிறேன் என்பதை விட உயர்ந்த மனப்பான்மையில்லை. அப்படிப்பட்டவர் முயன்றால் வாழ்வில் அவரால் சாதிக்க முடியாததில்லை.

அன்பர் - நான் எப்படியெல்லாம் மாறவேண்டும் எனக் கூறுவீர்களா?

நண்பர் - ஒரு சட்டம் முக்கியம்.

                 1. உங்களுக்குத் தெரிந்த குறைகளை மற்றவர் சொல்லக் கூடாது. அவற்றை      எல்லாம் நீங்கள் மாற்றியபின் பிறர் உங்களுக்குத் தெரியாததைச் சொல்லலாம்.

                 2. எல்லோருக்கும் நம்மைப் பற்றிய குறை தெரிந்திருந்தும் நமக்கு அவை தெரியாதிருக்கும். அவற்றைச் சொன்னால் தான் புரியும். சொன்னாலும் புரியாதவையுண்டு.

அன்பர் - முதல் பட்டியலை ஆரம்பிக்கு முன் இரண்டாம் பட்டியலை அறிய விரும்புகிறேன்.

நண்பர் - அந்த மனப்பான்மை "எதுவும் செய்ய இஷ்டமில்லை'' என அறிவிக்கும் மனப்பான்மை.

அன்பர் - நான் எங்கு ஆரம்பிக்கலாம் என்றாவது கூறுவீர்களா?

நண்பர் - எது உங்கள் வாழ்வில் அதிகத் தொந்தரவாக இருக்கிறதோ அங்கு ஆரம்பிப்பது நன்று.

அன்பர் - புரிவதற்குச் சரணாகதியைப் பயன்படுத்தலாம் என்றீர்களே அதையாவது விளக்கக்கூடாதா?

நண்பர் - "நாம் முயன்று புரிந்துகொள்ள முடியாது'' என்ற நிதானம் சரணாகதி போன்றது. அது இருப்பதில் அதிகக் கடினமானது. உங்களுக்கு இன்று பிரச்சினையாக இல்லாதது.

அன்பர் - எதையும் பிறர் கோணத்தில் அறிவது என்பதைப் பயிலலாமா?

நண்பர் - அது சத்தியஜீவிய நோக்கம். மிக உயர்ந்தது. சிறப்பானது.

அன்பர் - என் மனைவி எப்பொழுதும் குறை சொல்வாள். அவள் சொல்வது அனைத்தும் அவள் பார்வையில் சரி எனக் கொண்டு செயல்படலாமா?

நண்பர் - மிக உயர்ந்த discipline. தாங்குமா? செய்தால் பெரும் வெற்றியுண்டு. உங்கள் உலகமே தலைகீழே மாறிவிடும். அடையாளமே தெரியாது.

அன்பர் - அப்படி என்ன பெரிய விஷயம் அது?

நண்பர் - மனைவி வாழ்வு மையம். அது மாறினால் வாழ்வு பலமடங்கு உயரும். ஈஸ்வரன் சக்தியிடம் பயின்றது. சிருஷ்டிக்கே சிறப்பாக உரியது.

****


 book | by Dr. Radut