Skip to Content

07.லைப் டிவைன்- கருத்து

 “லைப் டிவைன் - கருத்து”

P. 74. பிரம்மத்தின் அனந்தம் காலத்தின் அனந்தத்தையும் கடந்த சுத்த அனந்தம்

       நல்லவன் என்று நாம் பேசினால் அவன் கெட்டவனில்லை என்றும் பொருள் கொள்கிறோம். உலகில் நல்லவனும், கெட்டவனும் கலந்துள்ளபொழுது நல்லவனைக் கெட்டவனிலிருந்து பிரித்து நல்லவன் என்கிறோம். சுவர்க்கத்தில் அப்பாகுபாடில்லை. ஏனெனில் அங்குக் கெட்டவனில்லை. நல்லவர்கள் மட்டும் இருக்கிறார்கள். அதை ஆங்கிலத்தில் self-existing goodness என்கிறார்கள். பெரிய எழுத்து ஆங்கிலத்திலிருப்பதால் Good என்கிறார்கள். தமிழில் அதை சுத்த சிவம் என்று கூறுவதுபோல் - சுத்தமான நல்லவன் - எனலாம். அதேபோல Self-existing light, Self-existing knowledge என எல்லா 12 அம்சங்கட்கும் - Infinity, Eternity, Silence, Peace, Truth, Good, Knowledge, Force, Bliss, Beauty, Love, Joy கூறலாம். காலத்திற்குள்ளது Infinity. இது finiteக்கு எதிரானது. பிரம்மத்திற்குள்ள Infinity, Self-existing Infinity. அதை சுத்த அனந்தம் எனலாம்.

வாழ்வில் உதாரணம் :

      பண்டிட் ஜவஹர்லால் நேருவை பார்லிமெண்டில் ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் மறுத்துப் பேசி “உங்களுக்கு எங்கள் மீது பொறாமை” என்றார். அடுத்த நிமிஷம் ஒரே ஆரவாரம். பலரும், எதிர்க்கட்சியினர் உள்பட அவர் கூற்றை மறுத்துப் பேசினர். ஒருவர் மட்டும், “நேருஜீக்குப் பொறாமையைக் கற்றுக் கொடுத்தாலும் வாராது” என்றார். ஒரே கைதட்டல். அத்துடன் விவாதம் முடிந்து விட்டது. நேருவை சுத்தமான ஆரியன் என்றார் ஸ்ரீ அரவிந்தர்.

       நமக்கெல்லாம் பொறாமை எழுகிறது. பலர் வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர் வெளிப்படுத்துவதில்லை. நேருவுக்கு பொறாமை உணர்ச்சி எழுவதில்லை. அதை Self-existing Goodness என்கிறோம். அன்னையை நெருங்க இது ஓர் உபாயம். எந்தக் கெட்ட குணமும் வெளிப்படக் கூடாது என்பதைவிட எந்தக் கெட்ட குணமும் மனதில் எழக்கூடாது என முயல்வது யோகப் பயிற்சி.

       நமக்குப் பணத்தின் மீது நம்பிக்கையிருக்கிறது. முடியாத காரியங்களைப் பணம் சாதிக்கும் என்று நினைக்கிறோம், நம்புகிறோம். இது பணம் வர, உபரியாகப் பெருகத் தடை. பணத்தை நம்புவதால் பணத்திற்கு நம்மைவிட அதிக சக்தியிருப்பதாக நம்புகிறோம். நாமே நம்மைவிடப் பணத்திற்கு அதிக சக்தியைக் கொடுக்கிறோம். அதிக சக்தியுள்ளது நம்மைத் தேடி வாராது. பணம் உபரியாக நம்மைத் தேடி வர வேண்டுமானால்,

நமக்குப் பணத்தைவிட அதிக சக்தி உண்டு எனப் புரிய வேண்டும், நம்ப வேண்டும்.

நடைமுறையில் அதைச் சோதனை செய்ய வேண்டும்.

பணத்தைவிட நமக்கும், அன்னைக்கும் சக்தியுண்டு என்று உணர ஆரம்பித்தவுடன் பணவரவு பெருகும்.

       பணத்தால் முடியாத காரியங்கள் பல. எந்த டாக்டருக்கும் பிடிபடாத தலைவலி, சீசனில்லாத பொழுது தேவைப்படும் மலர், பழம், எவர் பேச்சுக்கும் கட்டுப்படாத மகன், நம்மை அழிக்க நினைக்கும் பணக்கார எதிரி போன்றவர்கள் பணத்திற்குக் கட்டுப்பட மாட்டார்கள். அங்கு பிரார்த்தனை பலித்தால், அன்னை பணத்தை விட சக்தி வாய்ந்தவர்கள் என மனம் நம்ப வேண்டும். அன்னை பணத்தைவிட சக்தி வாய்ந்தவர் என்பதை நம் மனம் ஏற்றால், நம் மனத்திற்குப் பணத்தை விட பலம் அதிகம். பணவரவு உபரியாகும் அதிகப்படும்.. பணத்தால் பெறமுடியாத அட்மிஷன், கோர்ட் தீர்ப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றை அன்னையால் பெற்றவர், அதை நம்பினால் பணம் அவருக்குக் கட்டுப்படும். அதிர்ஷ்டம் பெறத் தேவையான நிபந்தனைகளில் ஒன்று நமக்கு பணத்தை விட அதிக சக்தியுள்ளது என நம்ப வேண்டும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருளின் அறிவை அதிகப்படுத்துவது என்ற முறையை அன்னை பின்பற்றினார். மாற விருப்பப்படாதவரின் பிரச்சினையைத் தீர்க்க அப்படிச் செய்தார். அவருக்கு அம்முறை பலித்தது.

வளரும் அருள்.

 



book | by Dr. Radut