Skip to Content

11.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

அண்ணன் - யோகம், துறவறம், இல்லறம், இல்லறத்தில் துறவறம் என்ற பல கருத்துகளில் அன்பருக்குரியது இல்லறத்தில் துறவறம் என்பது. இல்லறத்தில் துறவறம் என்ற கருத்தை உச்சக் கட்டத்தில் யோகத்திற்கு அழைத்துச் செல்வதாகவும் நடத்தலாம். குறைந்த பட்சக் கட்டத்தில் பிரார்த்தனையால் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வாழ்வாகவும் நடத்தலாம். இவற்றிடையே உள்ள நிலையை நான் சில வாக்கியங்களாகக் கருதுகிறேன்.

- உச்சக்கட்டம் உயர்ந்தோர்க்குரியது.

- குறைந்தபட்சம் அனைவர்க்கும் உரியது.

- இடைப்பட்டது ஏன் சிறந்தது எனில் முயற்சி உடையோரை உச்சக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லவல்லது. அதன் சிறப்பம்சங்களை மட்டும் கூறுகிறேன். அவை இன்றைய மனித வாழ்வில் நம் நாட்டில் மட்டுமன்று, எந்த நாட்டிலும் இல்லாதது.

- இலட்சியவாதி அனைவரையும் போலிருக்க முயலக்கூடாது.

- உள்ள திறமைகளைப் பூர்த்தி செய்யவும், புதுத் திறமைகளை உற்பத்தி செய்யவும் முயலவேண்டும்.

- சம்பளக்காரன், தொழிலபதிராக வேண்டும்.

- நம்பிக்கையை அன்னை மீது வைத்தால் வாழ்வு சிறந்து உயர்ந்தபடியிருக்கும்.

- திறமையும், நேர்மையும் தோல்வியுறாவிட்டால், வாழ்வின் உயர்வுக்கு முடிவில்லை.

- வாழ்வில் லட்சத்திலொருவருக்குக் கிடைப்பதை அன்னை எல்லா அன்பருக்கும் வழங்குவதை நாம் புறக்கணிக்கக் கூடாது.

- இதனடிப்படையில் ஏற்படும் வாழ்வு பிறருக்கு அதிகபட்ச அம்சம் அன்பருக்குக் குறைந்தபட்ச அம்சமாக அமையும். நேரு மத்திய மந்திரி சபையில் ரத்தினம், நேருபோல் ஒருவர் கடந்த 50 ஆண்டில் எழவில்லை. வாழ்வில் மந்திரி சபையில் ஒரு நேரு இருப்பார்.

- அன்பருடைய மந்திரி சபையில் கடைசி மந்திரியே நேருபோல் அமைவார்.

100% பாஸ் செய்யும் பள்ளியிலும் மாணவர்கள் 100 முதல் 35% வரை மார்க் வாங்குவார்கள். அன்பர் அப்பள்ளியை நடத்தினால் 100% பாஸ் வரும். கடைசி மார்க் 60% ஆக இருக்கும். ஓர் அன்பர் இந்தச் சோதனையையும் செய்து பார்த்து வெற்றி கண்டார். சராசரி மார்க்கே அவருக்கு 60% ஆயிற்று. To render the maximum minimum is the part of the Mother

வாழ்வின் உச்சகட்டப் பலனை அன்பரின் குறைந்த பட்சப் பலனாக மாற்றுவது அன்னை அருள். லண்டன் பள்ளிகளில் முதல் 5 வகுப்பு நடத்துபவரும் M.A. பெற்றிருப்பார்கள். சிறப்பான பள்ளிகளில் Ph.D பெற்றிருப்பார்கள். நம்மூரில் தற்சமயம் SSLCபடித்தவரும், முன்பு 8 வகுப்பு படித்தவரும், 50 ஆண்டுக்கு முன் 5 வகுப்பு படித்தவரும் முதல் 5 வகுப்பு நடத்தினர்.

தம்பி - ஷேக்ஸ்பியர், சீனுவாச ராமானுஜம், ஐன்ஸ்டீன் மனித குல மாணிக்கங்கள். அன்னையின் இலட்சியம் உலகில் பூர்த்தியானால் எல்லா மனிதரும் இவர்கள் போலிருப்பார்கள். ஆரம்பத்தில் இம்மேதைகள் பெற்றிருந்த பெருந்திறன் அன்பர் முழு முயற்சியுடன் செய்யும் காரியங்களில் வெளிப்படும் என்று கூறலாமா?

அண்ணன் - அன்பர், அவர் சிறப்பான இடத்தில், உலகில் சிறப்பானவரின் பலன் பெறுவார். நாமே ஐன்ஸ்டீன் ஆவது வேறு. நம் பெரு முயற்சியுள்ள இடத்தில் ஐன்ஸ்டீன் பெற்ற பலன் பெறுவது வேறு.

தம்பி - ஓர் உதாரணம் கூறுகிறேன். சரியா எனச் சொல்லுங்கள். நாட்டுப் பார்லிமெண்டில் பேச MPக்களுக்கு மட்டும் உரிமையுண்டு. வெளிநாட்டுப் பிரதம மந்திரி வந்தால், ஜனாதிபதி வந்தால் அவர்களை பார்லிமெண்டில் பேச அழைப்பார்கள். உலகப் பிரசித்தி பெற்றவர்களையும் அதுபோல் பார்லிமெண்ட்டில் அழைத்துப் பேசச் சொல்வதுண்டு. இது பெருஞ்சிறப்பு. இதனால் பேச்சாளர், பிரதம மந்திரி, ஜனாதிபதியாகி விடமாட்டார். அவர்கட்குள்ள மரியாதையைப் பெறுகிறார்.

அண்ணன் - சரியான உதாரணம்.. அருள் அன்பருக்கு அதிகபட்சம் வழங்குகிறது. அதைப் பெற முயற்சி தேவை. மனிதன் ஏதாவது ஒரு விஷயத்தில் முழு முயற்சி எடுக்கலாம். எல்லா விஷயங்களிலும் எடுப்பதில்லை.

தம்பி - எல்லா விஷயங்களிலும் முழு முயற்சி எடுத்தால், எடுப்பதாக வைத்துக் கொண்டால்?

அண்ணன் - அப்படிப்பட்டவருக்குப் பலன் என ஒன்றில்லை. அவர் மனம் பலனைத் தேடாது. நான் பலனை நாடும் நம் போன்றவரைக் குறிக்கிறேன். அப்படிப்பட்டவர் தேடும் பலனை பகவான் எழுதுகிறார்.

உன் சரணாகதியை அன்னை ஏற்றபின் உனக்கு வேறென்ன வேண்டும்? என்கிறார் பகவான்.

முழு முயற்சியை எல்லாத் துறைகளிலும் எடுப்பவர் அன்பர் நிலையிலிருந்து சாதகராகிவிடுகிறார். அது யோகம் பலிக்கும் நிலை. நான் கூறுவது யோக வாழ்க்கை.

தம்பி - யோக வாழ்க்கை என்பது யோகத்திற்கு மனிதனைத் தயார் செய்கிறதா?

அண்ணன் - ஆம்.

தம்பி - நீங்கள் சொல்லும் சட்டப்படி அன்பர் என்ற பட்டம் பெற அருளைப் பெரிய அளவில் பெறவேண்டும். ஏதாவது ஒரு செயலாவது உச்சகட்டப் பலனைப் பெறாமல் அன்பராக முடியாது என்று கூறுகிறீர்கள்.

அண்ணன் - அன்னையை வணங்குபவர்கள் அனைவரும் அன்பர் என்கிறோம். நீ கூறுவதே அன்பருக்கு இலட்சணமாகும். அந்த இலட்சணத்தின் பகுதிகள்,

  • பிரச்சினை இருக்கக் கூடாது.
  • வாய்ப்பை நழுவ விடக்கூடாது.
  • உச்சக்கட்டப் பலனை ஒரு விஷயத்திலாவது பெற வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தரின் இலட்சியம்:

தம்பி - ஸ்ரீ அரவிந்தர் இலட்சியம் சத்திய ஜீவன் supramental being பிறப்பது. மனிதன் சத்திய ஜீவனானால், 30,000 ஆண்டுகளைக் கடந்து செல்வான். அவனுக்கு மரணமில்லை. நோய், வலி, துன்பமில்லை. அவனது பரிணாம வளர்ச்சி அறியாமையிலிருந்து அறிவுக்குப் போவதற்குப் பதிலாக அறிவிலிருந்து, பேரறிவுக்குப் போகும். ஏசு சொன்ன Kingdom of God இறைவனின் ஆட்சி எழும். இப்பொழுது அது இல்லை. அதற்கு 12 ஸ்ரீ அரவிந்தர்கள் தேவை. அதற்கடுத்தபடி நாம் செய்யக் கூடியது இல்லையா? செய்யக் கூடியதில்லை என்றாலும் கருதக் கூடியதில்லையா?

அண்ணன் - சத்திய ஜீவனுக்கு அடுத்தபடியாக இலட்சிய மனிதனைச் சொல்லலாம். இன்று உலகில் அதைச் சாதிக்க எல்லா வசதிகளும் உள்ளன. மனித குலம் இக்கருத்தை ஏற்றால் உடனே அது நடக்கும்.

தம்பி - Universal Man என ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைச் சொல்கிறீர்களா?

அண்ணன் - அதுவும் ஆன்மீக லட்சியம். நான் சொல்வது மிக எளியது. Rational man அறிவுடைய மனிதன் எனக் கூறலாம். Mental man, a humane human being மனிதத் தன்மையுள்ள மனிதன் எனலாம். விலங்கு போல் வாழும் மனிதன், மனிதனாக வாழ முயல்வது மிகச் சிறிய லட்சியம், நடக்கக் கூடியது.

தம்பி - அது நடந்தால் உலகம் எப்படியிருக்கும்?

அண்ணன் - ஆசிய நாடுகளில் வறுமையும், அமெரிக்கா, ஐரோப்பாவில் வன்முறையும், உலகில் போரும், ரஷ்யாவில் களேபரமும், எந்த நாட்டிலும் வேலையில்லாத் திண்டாட்டமும் இருக்கா.

தம்பி - இவ்வளவும் முடியுமா?

அண்ணன் - பையன் கெட்டிக்காரன். படிப்பதில்லை. பள்ளிக்குப் போவதில்லை. படித்தால் முதல் மார்க் வாங்குவான். பாஸ் செய்வது சுலபம். உடல் வளைந்து படிப்பதில்லை என்பதே பிரச்சினை போன்றது உலகத்துப் பிரச்சினை.

இல்லாதவன் பட்டினியாக இருப்பது பிரச்சினை. இருப்பவன் பட்டினியிருப்பதைப் பிரச்சினை எனக் கூற முடியுமா?

தம்பி - பாஸ் செய்யக் கூடிய பையன் அலட்சியமாகப் பெயிலாவதுபோல்தான் இன்றைய உலகத்துப் பிரச்சினைகளிருக்கின்றன எனக் கூறுகிறீர்களா?

அண்ணன் - தீர்க்க வழி தெரியவில்லை என்பதைப் பிரச்சினை எனலாம். தீர்க்க வழியுள்ளபொழுது, அதைத் தீர்க்காமலிருந்தால் அது எப்படிப் பிரச்சினையாகும்?

தம்பி - ஆசிய வறுமை தீர்க்கக் கூடியதா? ஐரோப்பாவில் வேலையில்லை என்பது தீருமா? அமெரிக்கா வன்முறை அடங்க வழியுண்டா? ரஷ்யாவில் அராஜகம் அடங்குமா? நம்ப முடியவில்லையே. உலகத் தலைவர்களுக்குத் தெரியாதா?

அண்ணன் - ஆசியாவிலுள்ள நிலத்தில் ஐரோப்பா போல் ¼ பங்குதான் உற்பத்தியாகிறது. 4 மடங்கு உபரி உற்பத்தி ஆனால் வறுமையிருக்குமா? பலரும் செய்ததைப் பார்த்து செய்ய முடியவில்லை என்றால் அது பிரச்சினையாகுமா?

பருத்தி பயிரிட நாம் கலிபோர்னியாவைப்போல் 35 மடங்கு தண்ணீர் செலவு செய்துவிட்டு, தண்ணீர் பஞ்சம் என்று பேசலாமா?

100 ஆண்டுகளுக்கு முன் வழி தெரியவில்லை. பிளேக் காலரா, அம்மை, நம்மை வாட்டின. உலகம் இன்று சாதித்ததை நாம் பார்த்துச் செய்ய முடியவில்லை என்றால் அது பிரச்சினை என ஏற்க முடியாது.

தம்பி - வேலையில்லாத் திண்டாட்டம்?

அண்ணன் - புது மெஷின் வந்தால் 100 பேர் வேலையை 1 ஆள் செய்கிறான். 100 பேருக்கு வேலை போகிறது. அதனால் வேலையில்லை என்பதை எப்படி ஏற்பது?

தம்பி - அதுதானே உண்மை?

அண்ணன் - விஷயமே இங்கு தானேயிருக்கிறது. மனிதன் என்றால் என்ன? Physical man உடலால் வாழும் மனிதன் என்ன செய்கிறான்?

தம்பி - உடலுக்கு ஊறு வாராமல் பாதுகாக்கிறான்.

அண்ணன் - வலுவானவன் பலமில்லாதவர்களை விரட்டிவிட்டு அல்லது கொன்றுவிட்டுத் தன் உடலுக்குப் பாதுகாப்புத் தேடிக் கொள்ளலாமல்லவா?

தம்பி - அது எப்படி? மனிதத் தன்மையில்லையா? எல்லா மக்களும் பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா?

அண்ணன் - புது மெஷின் வந்து 100 பேர் வேலையை ஒருவர் செய்யலாம் என்றால், 99 பேரை வேலை நீக்கம் செய்வதா? அல்லது அத்தனைப் பேருக்கும் 1/100 வேலையைக் கொடுப்பதா?

தம்பி - வந்த டெக்னாலஜியை ஒருவனே அனுபவித்தால் வேலையில்லை. அனைவரும் அதன் பலனைப் பெற்றால் அனைவருக்கும் வேலைப் பளு குறையும். மக்கள் முன்னேறுவார்கள். சம்பளம் உயரும். அதுதானே மனிதத்தன்மை என்று கூறுகிறீர்களா?

அண்ணன் - ஏன் ஜனநாயகத்தில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தார்கள்? மனிதன் உயிரோடு இருந்தால்தானே வாக்குரிமைக்கு அர்த்தம். வேலை செய்ய மனிதனுக்கு உரிமை வேண்டும்.  Guaranteed employment சர்க்கார் சட்டம் போட்டு அனைவருக்கும் வேலை செய்யும் உரிமை வழங்கவேண்டும்.

தம்பி - வேலையில்லாமல் மனிதத்தன்மை வருமா? ஆமாம், அது அடிப்படை உரிமைதான். அது நமக்குத் தெரிவதில்லை. இருக்கும் வேலையை எல்லோரும் செய்யவேண்டும். அதுவும் பணக்கார நாட்டில் ஏன் வேலையில்லை என்ற பிரச்சினை? ஹாலந்திலும், அமெரிக்காவிலும் எந்தச் சட்டமும் போடாமல் வேலையில்லை என்ற நிலைமை மாறிவிட்டதே. அமெரிக்காவில் வன்முறை ஒழியுமா?

அண்ணன் - சிங்கப்பூரிலும், ஐரோப்பாவிலும் ரோட்டில் காரைத் தாறுமாறாக ஓட்ட முடியாது. உடனே போலீஸ் பிடிக்கும். நம் நாட்டிலும் அதே சட்டம்தான்.

தம்பி - ஆனால், அமுல்படுத்துவதில்லை.

அண்ணன் - அமெரிக்காவில் உள்ள சட்டத்தை டிராபிக் போலீஸ் அமுல்படுத்துவதுபோல் கண்டிப்பாக அமுல்படுத்தினால், வன்முறையிருக்காது. அங்கு 16 வயதுவரை கட்டாயக் கல்வி. கட்டாயக் கல்வி நிலையைப் பட்டப்படிப்பு ஆக்கினால், வன்முறையிருக்காது. 10 வருஷமாகப் படிப்பு உலகெங்கும் பரவுகிறது. இராணுவச் செலவு 1/3 பாகம் குறைந்தது. அனைவரும் குறைந்தபட்சம் பட்டம் பெற வேண்டுமெனச் சட்டம் போட்டால், படிப்பு உயரும். வன்முறை படிக்காதவனால் தானே வருகிறது? படிப்புக்கு எல்லா வசதிகளும், பணமும் உள்ளபொழுது ஏன் கட்டாயமாகப் படிக்கச் சொல்லக் கூடாது? உணவுப் பிரச்சினையைப் போல்தான் இது. 10 வருஷத்திற்கு முன் உணவு பஞ்சத்தால் உலகம் அழியப்போகிறது என்றார்கள். உற்பத்தியை இருமடங்காக்க வேண்டும் என்று பேசவே மறுத்தார்கள். இப்பொழுது அதைப் பற்றிப் பேசவேயில்லை. போதுமான உணவிருக்கிறது என்கிறார்கள். உலகம் ஜனத்தொகை 7 மடங்கு பெருகினாலும் உணவை உற்பத்தி செய்ய முடியும் என்று கருதுகிறது.

சைனாவில் 1 நகரம் ஏற்றுமதி செய்வது இந்தியாவின் மொத்த ஏற்றுமதிக்குச் சமம். ஏற்றுமதி செய்ய ஏராளமான இடம் உள்ளது. முடியும் என்பதைச் செய்யாமல் பிரச்சினை எனப் பேசுவது சரியா?

தம்பி - புதிய டெக்னாலஜி ஏராளமான வசதியைக் கொண்டு வந்துள்ளது.

தொடரும்...

****

சொசைட்டியின் வெளியீடுகள்

 

கர்மயோகியின் நூல்கள் :

 

1. பிரார்த்தனையும் சமர்ப்பணமும்

ரூ. 20

2. மனம் - ஜீவனின் முக்கிய கரணம்

ரூ. 20

3. சமூகம் அதிர்ஷ்ட சாகரம்

ரூ. 20

4. சிறியதும் பெரியதும்

ரூ. 20

5. கணவன் மனைவி

ரூ. 20

6. இரத்தினச் சுருக்கம்

ரூ. 20

7. ஸ்ரீ அரவிந்தம் - தத்துவம்

ரூ. 40

8. ஸ்ரீ அன்னை பராசக்தியின் அவதாரம்

ரூ.100

9. அதிர்ஷ்டம்

ரூ.100

10. பேரொளியாகும் உள்ளொளி

ரூ.100

 

 

 

 

தபாலில் பெற புத்தக விலையுடன் பதிவு தபால் கட்டணம் ரூ. 15/-சேர்த்து M.O செய்யவும்.

 

 

****



book | by Dr. Radut