Skip to Content

10.அபரிமிதமான செல்வம்

அபரிமிதமான செல்வம்  

       தாழ்த்தப்பட்டவர்கள் இன்று முன்னுக்கு வர முயன்றால் அவர்கட்கு சமூகம் எல்லா வசதிகளையும் வாரி வழங்குவது இன்றைய இந்தியாவில் உள்ள புதிய நிலை. கடலோரம் வெறும் மணல் உதவாது, பயிரிட நினைக்க முடியாத நிலப்பரப்பில் industrial estate வந்தவுடன் ஆயிரம் ரூபாய்க்கு விற்க முடியாத நிலத்திற்கு லட்ச ரூபாய் விலை வருகிறது. அதுவே ஆரம்பம். முடிவை நினைப்பதற்கில்லை. பணத்தைப் பொறுத்தவரை சமூகம் வளர்ந்து பணம் காய்க்கும் மரமாகிவிட்டது. தனிப்பட்ட மனிதனுக்கே அத்திறன் வரும் நேரம் வந்துவிட்டது. எதற்குப் பஞ்சம் வந்தாலும், இனி பணத்திற்குப் பஞ்சமில்லை என்ற கருத்தை விளக்க இந்நூலை எழுதுகிறேன். அதை விளக்கும் வாயிலாகப் பணத்தின் ஆரம்ப வரலாறு, பணம்போல் இதற்குமுன் அபரிமிதமாகப் பெருகியவற்றின் வரலாறு, இதிலுள்ள பொருளாதாரத் தத்துவம், ஸ்ரீ அரவிந்தத்திற்கும் இக்கருத்திற்கும் உள்ள தொடர்பு ஆகியவை நூலில் இடம் பெறுகின்றன.

       மனித மனம் திறம் வாய்ந்தது, அவனுள் ஆயிரம் திறமைகள் மறைந்துள்ளன. அவன் அவற்றை அறிய வேண்டும். தன் திறமைகளை வெளிக்கொணர அறிவுடை முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அளவுகடந்த செல்வத்தை அவனால் அபரிமிதமாக உற்பத்தி செய்ய முடியும். இது ஓர் உண்மை. அறிவுக்குப் புலப்படும். அப்படி விளக்குவது நோக்கம். ஆர்வமுடையவரை அது செயல்படத் தூண்டும். இந்நூலின் சாராம்சத்தை சுருக்கமாகக் கூறினால்,

உடலால் ஜடமாக வாழ்ந்த மனிதன் பல வகைகளில் மனத்தால் இன்று வாழ்கிறான்.

இந்த ஆயிரம் ஆண்டுகளில் வந்த மாறுதலின் உள்ளுறை சிறப்பை நுணுக்கமாக அறிய முனைந்தால் அம்முன்னேற்றத்தை ஆயிரம் மடங்கு, லட்சம் மடங்கு என்று கூறமுடியாது. அடுத்த கொல்லையில் உள்ளவனை குரல் கொடுத்த மனிதன் இன்று வேறு நாட்டிற்குப் போனில் பேசுவதை எப்படி அளவிட முடியும்? அளவில்லாமல் பெருகியுள்ளது.

சமூகம், ஸ்தாபனங்கள், மனத்திண்மை, அறிவு, சமூகத்தின் திறன், சொந்த முயற்சி ஆகியவை அதேபோல் ஏராளமாகப் பெருகியுள்ளன.

இவை ஏராளம் என்றாலும், என்ன செய்ய முடியும் என்பதில் இவை கடுகளவேயாகும். சமூகம் மனிதனுக்கு அளிக்கும் வசதிகளை இதுவரை எந்த மனிதனும் முழுமையாகப் பெற்றதில்லை.

லட்சம் மடங்கு முன்னேற வாய்ப்பிருப்பதால், முழு முயற்சி செய்பவர் எவரும் 100 மடங்கு வெற்றி பெறலாம்.

இந்நூல் பணத்தைப் பற்றியது. ஆனால் இத்தத்துவம் பணத்திற்குப் பொருந்துவதுபோல், திறமை, வசதி, சந்தோஷம், சாதனை ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

இந்நூல் இனி கூறப்போகும் வழிமுறைகளை சுருக்கி 5 அல்லது 6 அம்சங்களாகக் கூறலாம்.

1. பணம் எப்படி உற்பத்தியாயிற்று, பணம் என்றால் என்ன, சமூகத்திற்கு இதுவரை பணத்தால் ஏற்பட்ட சௌகரியங்கள் எவை, பணத்தின் திறன் என்ன, இதுவரை பணம் எப்படிப் பெருகிவந்தது என்பவற்றை விவரமாக அறிதல் அவசியம். இது ஞானம்.

2. ஞானத்தைப் பொருளாக மாற்ற வேண்டும்.

3. அப்பொருளை அன்னையின் சக்தியால் நிரப்ப வேண்டும்.

4.Token act இவை வெளிப்படும்படியான செயல் (project) ஒன்றைச் செய்வது அவசியம்.

5. பணம் அபரிமிதமாகப் பெருகும் என்ற உண்மையை இத்திட்டத்தில் அனுபவமாகக் காண வேண்டும்.

6. சொந்தமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்து முழுப் பலன் பெறவேண்டும்.

பணம்

       ஆதிநாளில் வேட்டையாடியும், காய் கனியைத் தின்றும் மனிதன் வாழ்ந்தான். அப்பொழுது அவன் தன்னை மட்டுமே அறிவான், தனக்காகச் சுயநலமாக வாழ்ந்தான். ஓர் ஊரின் பகுதியாக அப்பொழுது அவன் வாழவில்லை. தனித்து வாழ்ந்தான். கூட்டமாக வாழவில்லை. பசி, தாகம், தூக்கமே அவனுக்குரிய உணர்வுகள். எண்ணம் என்பது அப்பொழுது தேவைப்படவில்லை. எண்ணமோ, மனமோ அப்பொழுது உற்பத்தியாகவில்லை. ஜடமான மனிதன், உடலுக்குக் கட்டுப்பட்டு, சூழலுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தான். ஊர் என்பது அதுவரை ஏற்படவில்லை. கூட்டமாக சில சமயங்களில் வாழ்ந்தான்.

       நாகரீகத்தின் வளர்ச்சியால் விவசாயம் ஏற்பட்டது. ஓர் ஊரில் தங்கினான். நாடோடி வாழ்க்கையை விட்டொழித்தான். ஊர் என்பது வெறும் கூட்டமன்று. சமூகம் எனப்படும். விவசாயம் என்பது அறிவால் பெறப்பட்டது. அதை ஊரார் அனைவரும் சேர்ந்து செய்தனர். தனி மனிதனுக்குக் குடும்பம் ஏற்பட்டது. தன் பசிக்காக அலைந்த மனிதன் தன் குடும்பத்திற்காக வேலை செய்தான். அது அவனுக்குப் புரியவில்லை என்றாலும், செய்தான். சுயநலம் விரிவடைந்து பரநலமாயிற்று - குடும்பத்தின் பரநலம். விவசாயம் என்பது தொழில் அறிவால் செய்வது. குடும்பத்திற்குத் தன் கடமை மனதால் அறியப்படுவது. மனம் உற்பத்தியாயிற்று. தன் தேவைக்கு மேல் சில சமயங்களில் உற்பத்தி செய்தால், அவனுக்கு அது பயன்படாது. அழியும்.

       பண்டமாற்று வந்தது. இதன் மூலம் மனிதன் சமூகத்தை அறியும் சந்தர்ப்பம் எழுந்தது. இனி உபரி அழிய வேண்டாம். ஒருவருக்குப் பயன்படாத உபரி அடுத்தவர்க்குப் பயன்பட பண்டமாற்று உதவியது. உபரியான சக்தி வேறு வகையாகப் பயன்பட, வேறு பொருளாகப் பயன்பட பண்டமாற்று உதவியது. மனித வாழ்வில் இது முக்கியமான கட்டம். தனித்த மனிதனை ஊருடன் இணைக்க பண்டமாற்று உதவியது. சமூகம் உருவாக ஆரம்பித்தது. இதன் பயனாக,

- ஒருவருக்கு அடுத்தவருடைய உபரி சக்தி, உபரி உற்பத்தி பயன்பட்டது.

- தன் உபரி சக்திக்கு உபயோகம் வந்தது.

- சமூகத்தில் எவரும் பிறர் உபரியைத் தேவைப்பட்டால் பயன்படுத்த முடியும் என்ற நிலை எழுந்தது.

- மனிதன் இனி தனியனில்லை. சமூகம் உருவாக ஆரம்பித்து விட்டது. இது ஒரு கூட்டம். கூட்டத்தில் எவருடைய உபரியும் பிறர்க்குப் பயன்படும். அதன் வழி ஒவ்வொருவரும் அடுத்தவருடன் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

- ஒருவன் ஊரானான். ஒவ்வொருவருடைய உற்பத்தித்திறன் வளர வழி ஏற்பட்டது. ஊருக்கு அடங்கி, ஒத்துழைக்கும் நிர்ப்பந்தம் எழுந்தது.

பணம் என்பது ஒரு ஸ்தாபனம் :

       நாட்டில் கல்வி என்பது ஒரு ஸ்தாபனம். அவரவர் குழந்தைகட்குப் படிப்பு போதிப்பது முதல் நிலை. பள்ளிக்கூடம் என்ற ஸ்தாபனம் ஏற்பட்டு எவரும் கல்வி பெறலாம் என்பது அடுத்த நிலை. தனி மனிதனுடைய பொறுப்பை ஊரும் சமூகமும் ஏற்கும் நிலையிது. ஏற்பது மட்டுமன்று, அப்பொறுப்பை நடைமுறையில் நிறைவேற்ற அதற்கென கல்வி என்ற ஸ்தாபனம் ஏற்பட்டுள்ளது. நாமே நமக்கு வேண்டிய பொருள்களை உற்பத்தி செய்த நாள் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்தது. இன்று அதை நம்மால் நினைத்தும் பார்க்க முடியாது. நாம் துணி உடுக்கிறோம், அரிசி, பருப்பு, பழம் சாப்பிடுகிறோம். இவற்றை எல்லாம் நாமே உற்பத்தி செய்ய முடியுமா? மேலும் T.V, பேப்பர், மருந்து எல்லாம் நம்மால் எப்படி உற்பத்தி செய்ய முடியும்? இதற்கு முந்தைய நிலை கிட்டத்தட்ட விலங்கு நிலை. விவசாயம் ஏற்பட்டது, உணவுப்பொருள் அனைவருக்கும் உற்பத்தியாயிற்று. வியாபாரம் ஏற்பட்டது. அது அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட்டது. (industry)இவைகள் ஸ்தாபனங்கள். இந்த ஸ்தாபனங்கள் நாகரீகத்தின் சின்னம்.

- விவசாயம் உலகில் முதலில் ஏற்பட்ட ஸ்தாபனம்.

- இராணுவம் முக்கிய ஸ்தாபனம்.

- விவசாயம் உற்பத்தி ஸ்தாபனம், இராணுவம் பாதுகாப்பு ஸ்தாபனம்.

- வியாபாரம் விநியோகம் செய்யும் ஸ்தாபனம்.

- கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம்.

அப்படியானால் பணம் என்பது என்ன? விவசாயம், வியாபாரம், இராணுவம், கல்வி ஆகிய ஸ்தாபனங்கள் ஏற்பட அவசியமானது பணம். பணம் இன்றி விவசாயமோ, தொழிலோ ஏற்பட்டிருக்க முடியாது. கல்வி அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஸ்தாபனம் என்பது போல்,

பணம் ஸ்தாபனங்களை உருவாக்கும் அடிப்படை ஸ்தாபனம்.

       சமூகம் பக்குவப்பட்டு அறிவால் வளராவிட்டால், அங்குப் பணம் உற்பத்தியாக முடியாது. பணத்தை ஒரு சமூகம் உற்பத்தி செய்ய அதற்கு உற்பத்தித் திறன், பல்வேறு உற்பத்திகளையும் இணைக்கும் திறன், மனவளர்ச்சி வேண்டும். ஒரு சமூகத்தில் பணம் ஏற்பட்டால் அதன் நாகரீக நிலைமையை பணம் எடுத்துக் காட்டும். ஊர் திறமையாகும், வலுவாகும். பணமில்லாமல் இராணுவமில்லை. பணம் நாட்டை விரிவுபடுத்தப் பயன்பட்டது. இராணுவம் அடுத்த நாட்டை வெல்லப் பயன்பட்டதுபோல் பணம் பிறநாட்டு வாணிகத்தை வெல்லப் பயன்பட்டது. பணம் சமூகத்தின் கருவி. பண்டமாற்று வந்தபின் ஒருவருடைய உபரி நெல் அடுத்தவர்க்குப் பயன்பட்டது. அதனால் உபரி நெல்லுள்ளவர் பிறர் உற்பத்தி செய்யும் பருப்பு, பழம் போன்ற பொருள்களை பண்டமாற்றில் பெறலாம். பண்டமாற்றுக்கு அளவுண்டு. பொருள்கள் அழியாமலிருக்கும்வரை பண்டமாற்று பயன்படும். பழம் சில நாட்களுக்குப் பின் அழுகும். நெல் சில மாதங்களுக்குப் பின் பயன்படாது. பணம் அழுகாத, அழுகமுடியாத பண்டம். பணத்தை நெடுநாள் வைத்திருக்கலாம். அதனால் காலத்தை வெல்லும் திறன் பணத்திற்கு ஏற்பட்டது. இளம் வயதில் சேர்த்த பணம், வயோதிகத்தில் பயன்படும். பணம் நம்மைக் காப்பாற்றும் வாரிசு. காலத்தை வெல்வதுபோல், பணம் வயோதிகத்தை வெல்லும். நாளாவட்டத்தில் பணம் மனிதனுடைய குறைகளை, பலஹீனங்களை வெல்லும் கருவியாக மாறிவிட்டது. மனிதன் தன் ஆட்சியை வளர்க்கும் கருவியாகப் பணம் மாறிவிட்டது. பணத்தால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டது. மனிதன் உடன் பிறந்தவன், பெற்றெடுத்தவன், உடன் உறைபவன் என்ற உறவுகளோடு வாழ்ந்தவன். உற்பத்தியால் மனிதனுக்குப் பணம் உறவை ஏற்படுத்தியது. பணம் மனித உறவைப் பல மடங்கு உயர்த்திப் பக்குவப்படுத்தியது. ஒருவருடைய பயிர் ஒரு வருஷம் அழிந்து போனால், அடுத்த ஆண்டுவரை அவன் குடும்பம் உயிரோடு இருக்காது. பணம் வந்தபின் சமூகம் தனிக் குடும்பம் அழிவதைத் தடுக்க வழியேற்பட்டது. பணம் நாணயமாக ஆரம்பித்தது. இது சமூகம் முதிர்ச்சியடைந்ததின் அடையாளம். காலத்தை வென்றதின் கட்டம். உபரியைப் பயன்படுத்தும் முறை. தனிமனிதனுக்குச் சமூகம் தரும் ஆதரவு. நமக்குப் பணம் பயன்படும் கருவி. ஆனால் பணம் என்பது,

- சமூகம் வளர உதவும் அமைப்பு, ஸ்தாபனம்.

- இராணுவம் எல்லையை விரிவுபடுத்துவதுபோல், பணம் நாட்டின் வாணிபத்தை விரிவுபடுத்துகிறது.

- பண்டமாற்று பண்டத்தால் செய்ததை, பணம் அடுத்த கட்டத்தில் நிறைவேற்றியது.

- காலத்தை வெல்லும் கருவி பணம்.

- குறைகளைக் குறைத்து மனிதனுக்கு நிறைவுகளை நிரப்பும் கருவி பணம்.

- உடலால் வாழ்ந்த மனிதனை உறவாலும், உணர்வாலும், ஊருடன் இணைத்தது பணம்.

- மனிதன் அழிவதை மற்றவர்கள் தடுக்கும் கருவியாயிற்று பணம்.

- நாணயம் மனிதனுக்கு நாணயத்தை ஏற்படுத்தியது.

அடிப்படையில் பணம் இன்றுவரை இப்படியேயிருக்கிறது. புதிய அம்சங்கள் அதிகமாக ஏற்படவில்லை. ஆனால் நடைமுறை வழக்கங்கள் (usage) ஆயிரமாயிரம் உற்பத்தியாகிவிட்டன.

தொடரும்...

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

சில சமயங்களில் அன்னை ஆத்மாவின் பலனுக்காக அதன் குறைகள் மூலமே செயல்பட முடிகிறது.

குறை மூலம் நிறைவு தருவதும் அன்னை செயல்.

 

 

 

 



book | by Dr. Radut