Skip to Content

04. பகவானுடைய இதர நூல்கள்

 

"உலகமும், பிரபஞ்சமும்"

தத்துவம் நமக்கு உணர்த்துபவை பல,

* உலகில் உள்ளது ஒரு மனம்.

* உயிர் என்பது உலகத்திற்கே ஒன்று.

* எல்லா உடல்களும் ஒன்றானவை.

 

கடல் ஒன்றே. சென்னை, பாண்டி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் வெவ்வேறாகக் காணப்பட்டாலும் ஒரே கடலை நாம் பல ஊர்களில் காண்பதுபோல், பிரபஞ்சம் முழுவதும் ஓர் உடல் பரவியுள்ளது, அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை, ஒவ்வொரு மனிதனைச் சுற்றியுமுள்ள உடலே தெரிகிறது என்பது ஆன்மீகத் தத்துவம். நம் பரம்பரையில் இக்கருத்தின் உண்மையைக் காட்டும் பல நிகழ்ச்சிகளுண்டு. பரமஹம்சரைப் பற்றிய இது போன்ற நிகழ்ச்சியை நான் அடிக்கடிக் குறிப்பிடுவேன். "மாலை நேர உரையாடல்கள்" என்ற நூல் பகவான் கூறும் வேறு சில நிகழ்ச்சிகளும் உண்டு.

- தைலிங்க சுவாமி என்பவரைத் திருடர்கள் பிடித்து அடித்தனர். திருடன் வீட்டிற்குப் போனபொழுது அவன் மகன் மீது சுவாமிக்குப் பட்ட காயங்கள் இருந்தன.

- இதே நிகழ்ச்சியை நாம் வேறு வகையாகவும் கேள்விப்படுகிறோம். சுவாமி பல நாள் கங்கையில் மூழ்கியிருப்பதுண்டு. அது போன்ற நேரத்தில் அரசனும் ராணியும் நதிக்கரைக்கு வந்து திரையிட்டு ராணி குளித்தாள். சுவாமி நீரிலிருந்து வெளிவந்தவுடன் அரசன் அவரை நையப் புடைத்தான். அரண்மனைக்குப் போனபொழுது ராஜகுமாரனுடைய உடல் காயமாக இருந்தது.

கதையின் உருவம் எதுவானாலும் ஒருவர் மீது பட்ட அடி அடுத்தவர் உடலில் விழுகிறது. இருவர் உடல்கட்கும் தொடர்புள்ளது.

- இரு செம்படவர்கள் சண்டையிட்டனர். பரமஹம்ஸர் நதி தீரத்திலிருந்த சமயம், செம்படவன் எதிரிக்குக் கொடுத்த அடிகள் பரமஹம்ஸர் உடலில் பட்டன என்பது 'ராமகிருஷ்ண கதாமித்ரா' வில் உள்ள செய்தி என சிஷ்யர் பகவானிடம் கூறினார்.

இக்கதைகளைக் கேட்ட பகவான் ஆமாம் இதுபோல் பல கதைகள் உண்டு. எது உண்மை, எது பொய்யென எப்படியறிய முடியும்? Auto suggestion நமக்கு நாமே சொல்பவை உடலில் பலிக்கும். செயின்ட் பிரான்சிஸ் உடலில் சிலுவையிலறைந்த வடுக்கள் இருந்தன. ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தம்மை ஹனுமானாகப் பாவித்தபொழுது ஒரு சிறு வால் வளர்ந்தது என்று கூறியுள்ளார். இவற்றை பகவான் மேற்கோளாகக் காட்டி விளக்கம் அளித்தார்.

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

வெவ்வேறு தன்மையான மனிதர்கள் ஒரே ஸ்தாபனத்தில் வெவ்வேறு பலனுக்காக வேலை செய்தால், ஸ்தாபனம் தன் சக்திக்குக் குறைந்ததைச் சாதிக்கும். இப்படிப்பட்டவர் அதிகபட்ச சாதனை திட்டத்தின் குறைந்தபட்சமாகும்.

 



book | by Dr. Radut