Skip to Content

12.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் ய

                                                     (சென்ற இதழின் தொடர்ச்சி....)கர்மயோகி

891) தீமை, தவறு ஆகியவற்றை நாம் பொறுத்துக் கொள்வதுடன் ஜீவன் சிருஷ்டிக்க முயன்றால் தீமையை நன்மையின் பகுதியாக அறிந்து நாமே உற்பத்தி செய்து பின்னர் அதைத் தாண்டி வரவேண்டும். திருடனுக்குப் பணம் கொடுப்பது பாவம். அதைத் திருப்பிப் பெறும் ஆனந்தத்திற்கு இணையில்லை.

தீமையை நன்மையாக அறிவது முடிவற்ற ஆனந்தம்.

. திருடனுக்கு அனுக்கிரஹம் செய்ய காணிக்கையைத் திருடவேண்டும்;

. திருடனுக்கு அருள்புரிய அவனுக்குத் திருடு கிடைக்க உதவ வேண்டும் என்பவை காதில் நாராசமாகப் பாயும். திருடன் கோயிலில் அர்ச்சனை செய்து, திருடப்போய், திருடி தப்பித்துக் கொள்கிறான் என்பது நடைமுறை. ஏன் கடவுள் அவன் திருடும்பொழுது பிடித்துக் கொடுக்கவில்லை?

. டாக்டர் வயிற்றைக் கீறிக் குடலை எடுக்க நாம் பீஸ் கொடுக்கிறோம்.அது நமக்கு நல்லது எனப் புரிந்துகொண்டுள்ளோம்.

. அதேபோல் திருடன் திருடுவது, தப்பித்துக் கொள்வது மனிதகுலத்திற்கு நல்லது என விளங்குவதில்லை.

தத்துவமாகச் சொன்னால் புரியும்.

நடைமுறைக்கு ஏற்பக் கூறினால் எரிச்சல் வரும்.

சர்வம் பிரம்மம் என்றனர் ரிஷிகள்.

அது உண்மையானால் திருடனும் பிரம்மம், திருட்டும் பிரம்மம்.

அழகாக, அலங்காரமாக, இனிமையாக விருந்து சாப்பிட அலங்கோலமான சமையலறை, ஒரே சத்தமான பாத்திரம் தேய்க்குமிடம், அழுக்கில் ஊறிய சமையல்காரன் தேவை என்பதை நாம் ஏற்போம்.திருடன் மனம் மாறி திருட்டைக் கைவிட்டால் அது பெரிய ஆனந்தம்.அது நடக்க அவன் "திருட்டு' என்ற அனுபவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.அது பூர்த்தியாகும்வரை ஆண்டவன் அவனுக்கு திருடு கிடைக்க அருள் புரிவார்.

சேவை ஓர் அனுபவம்போல் தத்துவரீதியாக திருடும் ஓர் அனுபவம். இன்றைய குழந்தை நாளைய மனிதன்.

இன்றைய திருடன் நாளைக்கு நல்லவன்.

அனைவரும் குழந்தையாக இருந்தவரே.

ஆத்மா பூரணம்பெற அனைத்து அனுபவமும் தேவை. பிறப்புடன்

இறப்பும், நல்லதுடன் கெட்டதும், உயர்ந்ததுடன் தாழ்ந்ததும், ஒளியுடன் இருளும் தத்துவப்படி பிரம்மமே; ஒவ்வொரு ஆத்மாவுக்கும் தேவையான,தவிர்க்கமுடியாத அனுபவம்.

. அத்துடன் இருள், அடர்ந்த ஒளி. விஞ்ஞானமும் அதை ஏற்கிறது. கெட்டது, அப்படியானால் உயர்ந்த நல்லதாகும். வியாதியும், உடல்நலனும் ஆத்மாவுக்குத் தேவையான அனுபவங்கள்.டாக்டர் ஆப்பரேஷனை நாம் கொலை எனக் கூறுவதில்லை.அதே போல் திருடனின் திருட்டை நாம் தவறுஎனக் கூறக்கூடாது.ஆத்ம விழிப்பிருந்தால் திருடன் நம்மைப்போல் உலகுக்குச் சேவை செய்கிறான் எனத் தெரியும்.

அது பெரிய சேவை என்கிறார் பகவான்.

கல்கத்தா காங்கிரஸில் காந்திஜியைக் காணோம். தேடி கக்கூஸில் கண்டனர். அதைச் சுத்தம் செய்ய எவரும் முன்வரவில்லை. காந்திஜி செய்தார். அதனால் அவர் உத்தமர். அதே போல் திருடன் நம் மனக் குறைகளை, செயல் குறைபாடுகளைச் சுத்தம் செய்கிறான். நாம் கவனத்துடனிருக்க வேண்டி அவன் திருடுகிறான்.

. குழந்தையை, அதுவும் சண்டித்தனமான குழந்தையை அடித்து வளர்ப்பது  குழந்தைக்கு நாம் செய்யும் சேவை. கவனக்குறைவானவரைத் திருத்த திருடன் சேவை செய்கிறான்.

****

892) நினைவே ஒரு செயலைத் தீமையாக்குவது; அல்லது தீமையாகக் காண்பிப்பது. செயலில் தீமையில்லை; செயல் வெறும் செயலாகும்.

தீமை செயலில்லை; நினைவிலுள்ளது.

உலகம் மாயை என்ற கொள்கைக்கு அடிப்படை மேலே கூறியது.

நம் நினைவு நம் உலகை உற்பத்தி செய்கிறது. ஒருவரை நல்லவர் என நினைத்தால் அவர் நமக்கு நல்லவர். நாம் நல்லவர் என நினைப்பதாலேயே அவர் நல்லவராகவும் மாற முடியும்.பெர்னாட்ஷா நாடகம் "pygmalion'' பிக்மேலியனில் ஒரு புரொபசர் பூக்காரியைப் பெரிய இடத்துப் பெண் போலப் பேசக் கற்றுக் கொடுக்கிறார். புரொபசரும், ஒரு கர்னலும் சேர்ந்து இதைச் செய்தனர். ஆறு மாதத்தில் பெண் பெரிய duchess இடத்துப் பெண் போலப் பேசுகிறாள். அவளை ஒரு பெரிய பார்ட்டிக்கு அழைத்துப் போகிறார்கள். அவள் அழகும், பேச்சும் அனைவரையும் கவருகின்றன. அவள் யார் என அறிய முற்படுகின்றனர். ஒரு ஐரோப்பிய இராஜகுமாரி என முடிவு செய்கின்றனர். புரொபசர் அற்புதமாகப் பேசக் கற்றுக்கொடுத்தார். ஆனால் பெரிய இடங்களில் பேச்சுமட்டும் போதாது; பழகத் தெரியவேண்டும். அவளுக்கு 6 மாதத்தில் அவ்வுயர்ந்த பழக்கமும் வருகிறது. புரொபசர் "நான் உன்னை உயர்ந்தவளாக்கினேன்'' என்ற பொழுது அவள் மறுக்கிறாள். புரொபசர் திருமணமாகாத பிரம்மச்சாரி. ஆங்கிலேயருக்குண்டான gentlemanly manners உயர்ந்த பழக்கமில்லை. சிறுபிள்ளைபோலிருக்கிறார். திறமை அபாரம். பழக்கம் சூன்யம். கர்னல் உயர்ந்த பழக்கமுடையவர். புரொபசர் அப்பெண்ணை நாய்க்குட்டி போல நடத்துகிறார். அன்பு இருந்தாலும் பழக்கமும், மரியாதையுமில்லை. கர்னல் அவளை லிஸ்ஸா என அழைப்பதில்லை. Miss Doolittle மிஸ் டூட்டில என அழைப்பார். அவள் வந்தால் எழுந்து நிற்பார். அவளிருக்கும் பொழுது ஸாக்ஸைக் கழட்டமாட்டார். எல்லாவகைகளிலும் அவளை Ladyலேடியாக நடத்துகிறார். பெண் புரொபசரிடமிருந்து பேசக் கற்றுக்கொண்டாள். கர்னலிடமிருந்து பழகக் கற்றுக்கொண்டாள்.அவள் கூறுகிறாள்,

"கர்னல், நீங்கள் என்னை லேடியாக நடத்தியதால் நான் லேடியானேன்''.

நாம் எப்படி ஒருவரைக் கருதுகிறோமோ அப்படி அவர் மாறுவார் என்ற தத்துவம் இங்குக் காணப்படுகிறது. செயல் நல்லதா, கெட்டதா என்பதில்லை. அது செயலிலில்லை. செய்பவர் மனத்தில் இருக்கிறது. பையன் விஷம் சாப்பிட நினைக்கும் பொழுது அதைத் திருடுவது புண்ணியம்; பாவமில்லை. அதனால் திருட்டு புண்ணியமாகாது. மனநிலையைப்பொருத்து திருட்டும் புண்ணியம் ஆகும். நமக்குச் சமூகம் முடிவானது; சமூகம் ஏற்பது சரி; சமூகம் ஏற்காதது சரியில்லை. ஓர் ஆங்கில எழுத்தாளரின் மனைவி அவருடைய நண்பருடன் பழகி, நண்பருக்கு 4 பிள்ளைகள் பெற்றாள். உலகம் அதைச் சரி என்று கூறவில்லை. சரி என நடத்தியது. எந்த விசேஷத்திற்கும் அவளை அழைக்கத் தவறுவது இல்லை. அவள் கணவன் அவள் செலவையும், அக்குழந்தைகள் செலவையும் ஏற்று நடத்தினான். அதே சமயம் வேறொரு பெண் தான் விரும்பியவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்தாள். அவள் எழுத்தால் பிரபலமானாள்; பெரும்பணம் சம்பாதித்தாள். விக்டோரியா மகாராணியும் அழைத்து விருந்து செய்தார். என்றாலும்,அடுத்தவனுக்கு 4 பிள்ளை பெற்றவளை ஏற்கும் உலகம், அன்பிற்காக வாழ்ந்தவளை ஏற்கவில்லை.மனிதனுக்கு உலகம் சொல்வதும், செய்வதும் சரி. மனச்சாட்சியை கலக்கும் திறன் மனிதனுக்கில்லை. உலகமோ, மனச்சாட்சியோ அன்னைக்கு முடிவில்லை. மனச்சாட்சியும் பொன்விலங்கு என அன்னை கூறுவார். இறைவனே அன்னைக்கு முடிவு.

கறுப்புப் பணம்: பணம் கறுப்போ, வெள்ளையோ இல்லை. சம்பாதிக்கும் முறை கறுப்பாக இருக்கும். அது மனநிலை. கறுப்புப் பணத்தை சம்பாதித்தவன், அல்லது தகப்பனாரிடமிருந்து பெற்றவன்

மனநிலை வெளுப்பானால், கறுப்பு நாளடைவில் வெளுப்பாகும்.

கடல் சாக்கடை கலந்தால் கடல்நீர் சாக்கடையாவதில்லை. சாக்கடை தன் அழுக்கை இழந்துவிடுகிறது. பெரிய அளவு ஒளியில் இருள் அழிகிறது. அபரிமிதமான நல்லதில் கெட்டது அழிகிறது.ஏசுவின் பிரதம சிஷ்யர் கோர்ட்டில் ஏசுவைத் தெரியாது என அவருக்குத் துரோகம் செய்தார். பிறகு மனம் மாறினார். மனம் மாறுவது திருவுருமாற்றம். மனம் மாறியதால் பிரதம சிஷ்யரானார்.கறுப்பைத் தேடிப் போகவேண்டாம். அது முறையாகாது. சந்தர்ப்பம் கறுப்பான செயலை, மனிதனை, பணத்தை, செல்வத்தைக் கொண்டு வரலாம். அது சந்தர்ப்பத்தின் நிர்ப்பந்தம். அதை மறுப்பது சரியாகாது.நம்மைத் தேடி வருவது நாம் மாற வருவது. உள்ளதை ஏற்று, அந்த அளவுக்கு மனத்தை வெளுப்பாக மாற்றினால் கறுப்பு வெளுப்பாகும்.

தாயாருக்கு திருமணத்திற்கு 5 ஆண்டு முன் பிறந்தவர் 1950இல் பட்ட பாடு பெரியது. அது ஐரோப்பிய நாடு. இது அவர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பம். அன்னையிடம் வந்தபின் அவர் மனம் புழுங்கியது குறைந்து, விலகியது. அப்பிள்ளைக்கு சட்டத்தில் சம உரிமையில்லை.திருவுருமாற்றத்தைத் தீவிரமாக ஏற்றார். 10 ஆண்டுகளாயின. நாட்டில் சட்டம் அவர்கட்கு முழுஉரிமை கொடுத்தது. அதன்பின் எவரும் "யார் உன் தாயார்?'' என்றுதான் கேட்கலாம். "யார் உன் தகப்பனார்?'' என்று கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. நல்லதும் கெட்டதும் செயலிலில்லை; மனத்தில் மட்டும் உண்டு.

தொடரும்....

****
 

ஜீவிய மணி

உடலால் பூர்த்தியாகாதது உயிரில் பூர்த்தியாகாது.


 


 


 



book | by Dr. Radut