Skip to Content

10.மலரும் மணமும்

"அன்னை இலக்கியம்"

மலரும் மணமும்

மகேஸ்வரி

செல்வ வளம்

ஹாங்! ஹாங்! !

"ஓம் தத் சவித்துர் வரம் ரூபம்
ஜோதிஹ் பரஸ்ய தீமஹி

யந்நக சத்யேன தீபயேத்''

மந்திரத்தின் இனிமையினுள் தன்னை இழந்து காலத்தை மறந்து மிதந்து கொண்டிருந்தார் ராஜாமணி. இசை நின்றவுடன் தான் இருக்கின்ற இடம் நினைவிற்கு வந்தவுடன் மீண்டும் ஹாரனை அழுத்தலாமா என்று யோசித்தார்.

இந்த காயாம்பூவை எங்கே காணோம்? எப்பொழுதுப் பார்த்தாலும் கேட்டில் இருக்கமாட்டான். அவன் மனதில் என்ன தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றானோ? தெரியவில்லை. கேர்டேக்கர் ஆனாலும் எதையும் கேர் செய்வதில்லை. வரவர எல்லோரும் அவனுக்கு கொடுக்கின்ற இடத்தால் பொறுப்பில்லாமல் இருக்கின்றான். அவனை....

சரி, சரி அவனுக்கென்ன 50 ஜோடி கால்களா இருக்கின்றன! மேலும் நினைத்தவுடன்/கூப்பிட்டவுடன் வருவதற்கு அவனென்ன பரமாத்மாவா?

எந்த ஃபிளாட்டில் இருக்கின்றானோ? யார் வேலையைச் செய்து கொண்டிருக்கிறானோ? மனத்திற்குள் சொல்லிக்கொண்டே காரின் கதவைத் திறந்தார்.கேட் திறக்கப்பட,

"என்னப்பா காயாம்பூ, நான் பத்து நிமிடமாக வெளியில் நின்று கொண்டிருக்கிறேன். காலையிலேயே வெயில் உச்சிக்கு வந்துவிட்டது.

நீ என்னடாவென்றால் தூங்கி எழுந்திருக்கின்றாயா?''

"இல்லை சார். நம் 4ஆம் நம்பருக்கு ஒருவர் புதிதாக குடி வரப் போகின்றார். சாமான்கள் எல்லாம் வந்து இருந்தன. அதுதான் மேலே போய் பார்த்து வரப் போனேன். அந்த வீடே ஏதோ பூலோகச் சொர்க்கம் மாதிரி இருக்கின்றது. நேற்று பார்த்த வீடு மாதிரி இல்லை. ஏதோ புதியதாகக் கட்டியதுபோல இருக்கின்றது. முன்பு மரிக்கொழுந்தம்மா இருந்தாங்களே, அதே வீடுதான். அவர்கள்தான் இவர்களுக்கு வீட்டை விற்றுவிட்டுப் பிள்ளையுடன் ஆஸ்திரேலியாவுக்குப் போய் விட்டார்கள்.அப்பொழுது அது வீடு மாதிரியா இருக்கும். 12 நாய், 25 பூனைகள்.கதவைத் தட்டவேண்டும் என்றாலே பயமாக இருக்கும். இப்பொழுது இதே வீட்டில் பக்தி நறுமணம் வீசுகின்றது. நேற்று சாயந்திரம் வீட்டுக்காரர் மட்டும் தான் வந்திருந்தார். என்ன மாயம் செய்தாரோ,காலையில் போய் பார்த்தால், வீடெல்லாம், சுவரெல்லாம் மணக்கிறது.சூரியனுக்கும் இவர்கள் வீட்டிற்கும் ஏதோ நேரடியாக கனெக்ஷன் கொடுத்திருப்பாரோ என்னவோ போங்கள் ராஜாமணி சார், லைட் போடாமலேயே பளிச்சென்று இருக்கின்றது. எனக்கென்னவோ அந்த அம்மா தான் சூரியன் என்று நினைக்கின்றேன். ஆனால் பூலோகச் சூரியனாயிற்றே அதனால் சுளீரென்று இருக்கவில்லை. வெளிச்சம் மட்டும்தான் இருக்கின்றது. நீங்கள் போய் பாருங்கள் சார்''.

"காயாம்பூ, என்னை என்ன உன்னைப்போல் புதிதாக யாராவது வந்தால் போய் பார்த்து, ஹலோ குட்மார்னிங் சார் சொல்வேன் என்று நினைத்தாயா?''

"அப்படியெல்லாம் இல்லை சார். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.உங்கள் வீட்டுக்குப் போகும் வழியில்தானே இருக்கின்றது, நாலாம் நம்பர். உங்கள் கால் தானாக அங்கே நிற்கின்றதா இல்லையா என்பதைப் பாருங்களேன்''.

"சரி, சரி நேரமாகிறது. இன்றைக்கு ஞாயிற்று கிழமையென்றாலும் தலைக்கு மேலே வேலை இருக்கின்றது. ஆளை விடப்பா'' பேசிக்கொண்டே நகர்ந்த ராஜாமணி இந்த காயாம்பூ சொல்வதைப் பார்த்தால் புதிதாக வந்தவர்கள் மனிதர்கள்தாமா? இந்த காயாம்பூ சொன்னால் சரியாகத் தான் இருக்கும். காயாம்பூ கதை எழுதலாம், அந்த அளவிற்கு அவனுக்குக் கற்பனை வளம் இருக்கின்றது. ஏதோ கேர்டேக்கராக இங்கே இருக்கின்றான். அவனுக்கு இருக்கும் திறமைக்கு இதைவிடப் பெரிய வேலைக்குப் போகலாம். ஏதோ இந்த "ரோஜா அபார்ட்மெண்ட்ஸ்'' பேரில் பிரியம் அதிகம். இவனை எல்லோரும் தங்கள் குடும்பத்தில் ஒருவனாகத் தானே இங்கு இருக்கும் 10 குடும்பங்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றன. எந்த பண்டிகை வந்தாலும் அவனுக்கு ஒரு புது டிரஸ் உண்டே. சில சமயம் பார்த்தால் நம் வீட்டில் இருப்பவர்களை விட இவனுக்கு அதிகம் டிரஸ் கிடைக்கும். பாவம், கள்ளங்கபடு இல்லாதவன். எள் என்றால் எண்ணெயாக இருப்பவன். இராத்திரி 12 மணியானாலும் சரி, "காயாம்பூ' என்று கூப்பிட்டால் எந்த வீட்டிலிருந்து யார் கூப்பிடுகின்றார்கள் என்ப- தைத் தெரிந்து டாணென்று ஆஜராகிவிடுவான். நல்ல பையன். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட பையன் கிடைப்பதற்கு இந்த அபார்ட்மெண்ட்டில் இருப்பவர்கள் எல்லோரும் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இப்பொழுது புதிதாக வந்திருப்பவர்களாவது நன்றாகப் பழக வேண்டும். 10 குடும்பங்- கள் இருந்து ஒரு அசோசியேஷன் மீட்டிங் போட்டால் 2 பேர்கள்கூட வரமாட்டார்கள். எல்லோருமே வீட்டை விலை கொடுத்து வாங்கிவிட்டதால் எல்லாமே தங்களுக்குச் சொந்தம் ஆகிவிட்டதைப்போல் பேசுவார்கள்.

சண்டை சச்சரவு என்று ஒன்றுமில்லை. ஆனால் அடுத்த வீட்டில் இருப்பவரின் பெயர் கீழேயுள்ள போர்டில் இருப்பதால் தெரிந்துகொண்டு இருப்பார்களே தவிர, வீட்டில் உள்ளவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது.

தனித்தனித் தீவைப்போல் தான் வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள். முகம் தெரியாத அன்னிய வாழ்க்கை. அந்தக் காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இங்கு வந்தபொழுது மூலைக்கொருவராய் இருந்தவர்களையெல்லாம் சேர்த்து, ஒன்றாகச் சேர்த்துவிட்டு நம் சுதந்திரத்தைப் பறித்தார்களாம். இங்கிருப்பவர்களை எல்லாம் ஒன்றாக்கக்கூடிய சக்தி ஏதும் இங்கே வந்தால் எப்படியிருக்கும்? ஏதேதோ நினைத்துக்கொண்டே நாலாம் நம்பர்

அருகில் வந்தார். உள்ளிருந்து அலைஅலையாக ஏதோவொன்று அவருக்குள் நுழைவதை உணர்ந்தார். கலைஞனல்லவா, பார்த்துப் புரிந்து கொள்வதைவிட உணர்ந்து தெரிந்துகொள்வதுதான் அதிகம். அதனாலேயே அவருக்கு தம்மையும் அறியாமல் தம்முள்ளே ஒன்று புகுந்ததை நன்றாகவே உணர முடிந்தது. ஆனாலும் கதவைத் தட்ட மனமில்லை.

காலிங்பெல்லருகே சென்ற கை அதைத் தொடாமலேயே நின்றுவிட்டது. நாகரீகம் எத்தனையோ நல்ல விஷயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஆனால் இதைப்போல் ஓரிரு விஷயங்களில் தனக்குரிய நல்லதைக்கூட ஏற்றுக்கொள்ள இயலாத நிலையையும் ஏற்படுத்துகிறது. மற்றவர் வீட்டிற்குள் எப்படித் தானாகவே அறிமுகம் இல்லாமல் செல்வது என்ற

"பழக்கத்தால்'' தம்முடைய உணர்வு அனுபவிக்கின்ற அனுபவத்தை மேலும் அதிகமாக்கக்கூடிய சக்தி அங்கிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், எதையுமே செய்யத் தோன்றாமல் நின்ற ராஜாமணி தன்னையும் அறியாமல் ஏதோ மெஸ்மரிசத்தால் இயக்கப்பட்டவனைப் போல் அடிமேல் அடி வைத்து மேலே ஏறினான். மாயநாதன் என்ற பெயர் மட்டும் அவன் கம்ப்யூட்டருக்குள் நுழைந்துவிட்டது அவன் feed செய்யாமலேயே.

****

"ரோஜா, உன் பெயரும் நம் அபார்ட்மெண்ட் பெயரும் ஒன்றாக இருக்கும் பொருத்தத்தை என்னவென்று சொல்வது? யாருக்குத் தான் தெரியும், இந்த ரோஜாவில் நாம் வீடு வாங்க போகிறோமென்று. உன் முகம் தானே இது. புது வீட்டிற்கு வந்தபிறகு புது முகமும் பிறந்துவிடுமா? சந்தோஷம் பொங்கி வழிகிறாற்போல் இருக்கின்றதே. நான் விஷயத்தைச் சொல்லாமலே உனக்குத் தெரிந்துவிட்டதா? அன்னையின் அறையிலிருந்து வருகின்றாய் அல்லவா, அதனால் அன்னைதான் இதையும் சொல்லியிருக்க வேண்டும். இந்த அதிசயத்தைப் பாரேன்டி. எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. சூழலுக்கு எப்பொழுதுமே சக்தி அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் பாரேன் ஒரு கூடை நிறைய நாகங்கப்பூ கிடைத்திருக்கின்றதே. முன்பு இருந்த வீட்டில் ஒரு பூ வேண்டுமானால் கூட அன்னையிடம் பத்து நாள் பிரார்த்தனை செய்தால் ஒரு பூக்காரி வந்து ஒரு முழம் மலில்கைப்பூ கொண்டு வந்து கொடுத்துவிட்டு 10 ரூபாய் கேட்பாள். அன்னையை ஏற்றுக்கொண்ட பிறகும்கூட எனக்குப் பூ வைத்து வணங்கக்கூடிய பாக்கியமே இல்லையா என்று தினமும் கேட்பேன். இன்று அன்னையே நேரில் வந்து நிற்பதைப் போல் நான் உணர்ந்தேன். ஒவ்வொரு பூவும் எவ்வளவு பெரியதாக இருக்கின்றது.

இது மாதிரி நான் பார்த்ததேயில்லை. சிவப்பு கலந்த நாகலிங்கப்பூதான் பார்த்திருக்கின்றேன். ஆனால் இது வெள்ளை கலந்த பூவாக இருக்கின்றது. அதுவும் ஒரு பூ இல்லை, ஒரு கூடை நிறைய. மணம் எப்படி வீசுகின்றது பார்த்தாயா?''

கணவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த ரோஜா தான் அறையில் இதுவரை அனுபவித்துக் கொண்டேயிருந்த அன்னையின் சந்தோஷத்தைத் தன் கணவன் முகத்திலும் பார்த்தாள். அவள் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. காஸ் அடைத்த பலூன்போல உயர உயரப் பறந்துகொண்டேயிருந்தாள். ஏதோவோர் அற்புத உலகில் சுகமாகச் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கையில் சட்டென்று ஒரு சொட்டுத் தண்ணீர் விட்டுப் பொங்கி வந்துகொண்டிருந்த பாலைத் தடுப்பதுபோல்,கணவரின் வார்த்தைகள் கீழே கொண்டுவந்தன. மானிடருக்குக் கிடைக்காத சுகத்தை அனுபவித்து கொண்டிருக்கும்பொழுது, "மானிடா,இது உனக்கு சாஸ்வதமா?' என்று கேலியாக ஏதோவொன்று கேட்க,

அவளின் கணவன் ரோஜா என்று அழைக்கவும் சரியாக இருந்தது.வயிறு மட்டும் அல்லாமல் உடம்பு முழுவதையுமே தேனால் நிரப்பிக் கொண்டுவிட்டு மயங்கித் தயங்கி நின்ற வண்டைப்போல் ரோஜா எல்லையில்லா சந்தோஷத்தால் தன்னை நிரப்பிக்கொண்டிருந்தாள்.

கண்ணுக்கு நேராக நீட்டப்பட்ட நாகலிங்கப்பூக் கூடையைப் பார்த்த கண்கள் இமைக்காமல் நிற்க,

"பார்த்தாயா, உன் கண் அப்படியே நின்றுவிட்டதே''.

"எனக்கு உடம்பே வெடித்துவிடும்போல் இருக்கின்றதே. கண் மட்டுமென்ன? அதிலுள்ள ஒன்றுதானே!' ரோஜாவின் மனம் கேட்காத கேள்வியது.

கண்கள் மெதுவாக மேலே எழுந்து,

பூவைப் பார்க்க,

"இதெல்லாம் அன்னைதான் நடத்தி வைக்க முடியும் இல்லையா?

தன்னலமற்ற செல்வவளமாயிற்றே. இந்த இயற்கைக்கு எத்தனை முன்யோசனையிருக்கிறது தெரியுமா? நறுமணத்தை வைத்துதான் இப்பூவினைக் கண்டுபிடிக்க முடியுமாம். சிவனுக்குரிய பூ. ஏன் சிவனே தன் உருவத்தை இதில் வைத்திருக்கின்றான். அவனின் லிங்க வடிவம் தான் இந்த நாகலிங்கப்பூ. சிவனுக்கு அழிக்கும் தொழிலை கொடுத்ததாகப் புராணத்தில் படித்திருக்கின்றேன். ஆனால் அன்னையோ இப்பூவிற்குச் செல்வவளம் என்று பெயரிட்டிருக்கின்றார்கள். எதனை மனதில் கொண்டு இவ்வாறு பெயரிட்டிருக்கின்றார்கள் என்று தெரியவில்லை''.

கணவரின் பேச்சு மீண்டும் ரோஜாவை அவளுடைய உலகுக்கே அழைத்துச் சென்றது. கண்கள் திறந்தபடியிருக்க கையிலுள்ள மலரைக் கைகள் பிடித்துக்கொண்டிருக்க, உடல் சோபாவில் உட்கார்ந்திருக்க,அவள் மனது முழுவதும் ஆனந்தலோகத்தில் வலம்வந்து கொண்டிருந்தது.

"உன்னால் பேசக்கூட முடியவில்லையே. இதுதான் அன்னை. நினைத்துப் பார்க்க இயலாத ஒன்றை இந்த அன்னையால் மட்டும்தான் கொடுக்க முடியும். என்னதான் இருந்தாலும் அன்னை அன்னைதான்.

எவ்வளவோ பணச் சிரமத்திற்கு இடையே இந்த வீட்டை அவர்தானே வாங்கிக் கொடுத்திருக்கின்றார். நான்தான் நினைத்தேனா எனக்கொரு சொந்த வீடு கிடைக்குமென்று. வாங்குகின்ற சம்பளம் கண்ணாமூச்சி போல் ஓடி ஓடி மறைந்துகொண்டேதானே இருக்கின்றது. எனக்கு இந்த musical chair ஞாபகம் ஒவ்வொரு முதல் தேதியன்று வரும். முந்தி கொண்டால் உண்டு. இந்த மாதத்தில் எது எது முந்திகொள்ளப் போகின்றதோ என்று நினைப்பேன். தானாகவே சிரிப்பு வந்துவிடும்''.

****

"ரோஜா, இந்த நேரத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறாய்?''

"ஒன்றுமில்லை. இங்கே ஒரு பூக்கூடையை வைத்துக்கொண்டிருக்-கிறேன். இன்றைக்கு நீங்கள் கொண்டுவந்த பூவை இதில் வைக்கப் போகிறேன். ஏதோ எனக்குத் தெரிந்தவகையில் இங்குள்ளவர்களுக்கு அன்னையை அறிமுகம் செய்யலாம் என்ற எண்ணம் திடீரென்று தோன்றியது. எத்தனைப் பேர்களுக்கு அன்னை தம்மருளைக் கொடுப்பதற்குத் தீர்மானம் செய்திருக்கின்றார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அன்னை இந்த ரோஜா அபார்ட்மெண்ட்ஸ்ஸை நிச்சயமாகத் தம்முடைய அபார்ட்மெண்ட்ஸ்ஸாக மாற்றுவார், எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏனென்றால், நாம் முதலில் வந்தவுடன் நமக்குக்கிடைத்திருப்பது நாகலி ங்கப்பூ. செல்வவளத்தை நமக்கு மட்டும் தருவதற்கு வரவில்லை. இங்குள்ள அனைவருக்கும் தருவதற்காகத்தான் தன்னலமற்ற செல்வத்தை உங்கள் மூலமாக இங்கு கொண்டு வந்திருக்கின்றார். நமக்கு மட்டும் தருவதென்றால் இளஞ்சிவப்புள்ள நாகங்கமலரை அன்னை தந்திருக்கலாம். ஆனால் அப்படியில்லாமல் அவரின் விசேஷத்தன்மையைக் கொண்ட வெண்மை கலந்த நாகலிங்க மலரைத் தந்திருப்பதன் மூலமாக நிச்சயமாகத் தம் முத்திரையைப் பதிக்கத் தீர்மானம் செய்துவிட்டார். அதனால்தான் இப்பூவை இங்கு வைத்திருக்கின்றேன். இதைப் பார்ப்- பவர்களுக்கு ஏதோ ஓர் அளவில் செல்வம் கிடைக்கப்போகின்றது. தன்னிலை (conscious) உணர்ந்தவர்களாக இருந்தால், நிச்சயமாக உள்ளே வந்து விசாரிப்பார்கள். அல்லது என்ன பூ இது என்று யோசிப்பார்கள். எப்படியோ ஒரு விதத்தில் அன்னையின் வட்டத்திற்குள் வருவதற்கு பிரியப்படுவார்கள்''.

"உன் யோசனை நன்றாக இருக்கிறதே. நமக்குத் தெரிந்தவர்கள் யாரும் இம்மாதிரி செய்ததில்லையே!''

"யாராவது செய்திருந்தால் மட்டுமே செய்பவர்கள் பிறரைப் பின்பற்றுபவர்கள். தானாக மனதில் உதித்ததை உடனடியாக ஏற்றுச் செய்பவர்கள்

முன்னோடிகள். அன்னை என்றுமே முன்னோடிகளைப் பாராட்டுபவர்.

இதைப் பார்த்து எத்தனை பேர் என்ன செய்யப் போகிறார்கள்? சிலர் ரசிப்பார்கள். ஆனால் எதையும் செய்வதற்கு ஒரு மனநிலை வேண்டும்.

அந்த மனநிலை உடையவர்கள் எப்பொழுதுமே எதையாவது புதிதாகச் செய்து கொண்டிருப்பார்கள். உற்சாகமாக இருப்பார்கள்''.

"கீழே பேரையும் எழுதி வைக்கலாமா?''

"முதலில் பூவை மட்டும் வைப்போம். பின் தானாகவே பூவே தன் பெயரை அறிவித்துவிடும்''.

****

"காலையில் பேப்பர் எடுக்க மூன்று மாடி இறங்கவேண்டும். இந்த ப்ட் வேலை செய்யவில்லை. நல்ல exercise, முன்னாலேயே உடம்பு ஓமக்குச்சியைப்போல் இருக்கிறது. மூன்று மாடி ஏறி இறங்கி பேப்பர், பால் எடுத்து கொண்டு வந்தால் தான் காபி என்றால் பேசாமல் காபி குடிக்காமலே இருந்துவிடலாம். இந்த காயாம்பூவைக் காணோம். அவன் இருந்தால், காலையில் எழுந்தவுடனேயே காபி சாப்பிட்டுவிடலாம்.

இன்றைக்கு எல்லாமும் சேர்ந்துவிட்டது', மனத்திற்குள் நினைத்து கொண்டே கீழிறங்கினான், மூன்றாவது மாடியிருக்கும் மாறன். கம்ப்யூட்டர் இன்ஜீனியர். அப்பா தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டு, கிராமத்தில்தான் இருப்பேன் என்ற பிடிவாதத்தில், விக்கிரமசிங்கபுரத்தில் தம் சொந்த ஊரில், தம் தாத்தா விட்டுச்சென்ற வீட்டில்தான் இருப்பேன் என்று இருக்கிறார். அம்மாவோ, தம் கணவன் இருக்கும் இடம் தான் தமக்கு சொர்க்கம், கலியுக கண்ணகியாகத்தான் இருப்பேன் என்றெல்லாம் கூறி, அவரைவிட்டு வாராமல், பிள்ளை எப்படி கஷ்டப்பட்டாலும் சரியென்று இருப்பதால் மாறன் தானே தன் சொந்தக் கால் நிற்பதுடன், தன் சொந்தக்கையால் இன்ஸ்டன்ட் சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். கவலையில்லாத வாழ்க்கை. கை நிறைய சம்பளம். கேட்பதற்கு ஆளில்லாததால் தன் இஷ்டத்திற்கு வருவான் வேலையிலிருந்து. சில நாட்கள் ஆபீசிலேயே குடியிருந்தும்விடுவான்.தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பவன். தன் சுயசம்பாத்தியத்தில் வேலைக்குச் சேர்ந்தவுடன் வீட்டை வாங்க வேண்டும் என்று

வீட்டை வாங்கிவிட்டான். ஆனால் பெண்ணென்றால் அலர்ஜி. அதனால் கல்யாணம் செய்துகொள்ளாமல், இரட்டை படுக்கையறை கொண்ட வீட்டில் ஒற்றைப் படுக்கையில் காலந்தள்ளிகொண்டிருப்பவன். அம்மா வந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையிலேயே நிறைய விஷயங்கள் அனுபவித்துக் கொண்டு, நிஜவாழ்க்கையில் அது எப்படி நடக்கும் என்பதற்கு வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான். அவனவன் அப்பா, அம்மாவை எந்த ஹோமில் சேர்க்கலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கையில் இவன்மட்டும் சற்று வித்தியாசமாக, அவர்கள் இருவரும் தன்னுடன் வந்து சேர்ந்திருக்க யார் வழிகாட்டுவார்கள் என்று வழிமேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

வாழ்க்கையில் எல்லாமும் கிடைத்திருக்க இதுமட்டும் ஏன் நடக்கவில்லை என்ற கேள்வியைத் தினமும் கேட்டுக்கொண்டு, என் கையால் எத்தனை நாட்களுக்குதான் சாப்பிடவேண்டிய தலையெழுத்து எனக்கிருக்கிறதோ என்று புலம்பிகொண்டே கீழிறங்கினான். தூக்கக்கலக்கம், முதல் மாடியில் காலை வைத்தவுடன் ஏதோ நறுமணம் ஒன்று அவனைத் தட்டி எழுப்பியது. இருந்தாலும் அதைப் புறக்கணித்துவிட்டு இறங்க ஆரம்பிக்கையில், காயாம்பூ, "என்ன சார், நானே எடுத்துக்கொண்டு வர மாட்டேனா? ஏன் இந்த நேரத்திலே நீங்கள் வந்தீர்கள்? நேற்று விடியற்காலை 4 மணிவரை உங்கள் வீட்டில் ட்யூப்லைட் எரிந்து கொண்டிருந்தது. சரி காலையில் லேட்டாக எழுந்திருப்பீர்களோஎன நினைத்தேன். ஆனால் நீங்கள் வழக்கம்போல் ஆறரை மணிக்கு எழுந்துவிட்டீர்கள் போலிருக்கிறதே''.

"ஆமாம், பிரிட்ஜில் வேறு பாலில்லை. இன்றைக்குப் பார்த்து காபி சாப்பிடவேண்டும் என்று தோன்றியது. அதனால்தான் நானே கீழிறங்கி வந்தேன்''.

"ஆமாம் காயாம்பூ, நேற்று முழுக்க உன்னைப் பார்க்கவே முடியவில்லையே, என்னவாயிற்று? லீவு எடுத்துக்கொண்டுவிட்டாயோ என்று நினைத்தேன். என்னப்பா இங்கே புதுவாசனை வருகிறது?'' "சார், அது வாசனையில்லை, நறுமணம்''. "ஏதாவது பெர்ப்யூம் கம்பெனியில் வேலைக்கு சேரலாம் என்று பார்க்கிறாயா? வாசனை என்று சொன்னால் நறுமணம் என்று சொல்கிறாயே!'' "இல்லை சார், இங்கு ஒருவர் புதிதாக வீடு வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். அந்த வீட்டம்மாதான் ஏதோ சுவரில் பூக்கூடை வைத்து பூவை வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து தான் நல்ல வாசனை வருகிறது. அதைத்தான் நறுமணம் என்று சொன்னேன்''.

"இந்தப் பக்கம் வந்தாலே வயிறெல்லாம் குமட்டும். இப்பொழுதென்னடாவென்றால் நறுமணம் வீசுகிறது. இதன் இரகஸ்யம் என்னப்பா? சரிப்பா,என் பால் பாக்கெட்டை கொடு. உன் கதையை அப்புறம் கேட்டுக் கொள்கிறேன். மேலே வா, காபி சாப்பிட்டுப் போகலாம்''. "இருக்கட்டும்

இப்பொழுதுதான் முல்லையம்மா வீட்டில் காபி சாப்பிட்டேன்''. "சரி,பிளாஸ்கில் ஊற்றி வைக்கின்றேன், வந்து எடுத்துகொண்டு போ''. "ரொம்ப தேங்க்ஸ் சார். என் அண்ணன்கூட இப்படியெல்லாம் சொன்னதில்லை.

இங்கே வந்ததிருந்து நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்''. "நீ வந்து 3 வருடமாகிவிட்டதல்லவா?'' "ஆமாம் சார்''. "முன்பெல்லாம் துபாய்க்கு போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாயே? இப்பொழுது அந்த பேச்சையே காணோமே, என்னாயிற்று உன் துபாய் கனவு?'' "சார், துபாயில் பணம் வேண்டுமானால் சம்பாதிக்கலாம். இங்கே பணத்துடன் என்னை எல்லோரும் சொந்தக்காரனாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்களே, இந்த சந்தோஷம் அங்கே கிடைக்குமா? அதனால்தான் சார், அந்த ஆசையை விட்டுவிட்டேன்''. "நீ வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும். இங்கேயே சந்தோஷம்என்று இருந்துவிடாதே, முன்னேற பாருப்பா. எனக்கென்னவோ நீ சீக்கிரமே பெரிய ஆளாகிவிடுவாய் என்று தோன்றுகிறது. இந்த நறுமணத்தை இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்துவிட்டு, மேலே வந்து எனக்கும் சொல்'' என்று நகர்ந்தான் மாறன்.

****

"அம்மா, அம்மா, நான்தான் செந்தாமரை. இந்த அபார்ட்மெண்ட்ஸ் வீடுகளிலெல்லாம் வேலை செய்பவள். உங்கள் வீட்டிற்கும் வேலை செய்ய வேண்டுமா? என்னென்ன வேலை, எத்தனை மணிக்கு என்று சொல்லுங்கள், கரெக்டாக வந்துவிடுவேன். ஆமா, இங்கென்னமா வைத்திருக்கிறீர்கள்? இந்த மாதிரி பூவை நான் பார்த்ததே கிடையாதே. என்ன பேரு? குடை பிடிக்கிறாபோல இருக்கே, நல்லா வாசனை வேற வருதே''.

"அதுவா, அதற்கு பேர் நாகலிங்கப்பூ. சிவலிங்கமும் அதற்கு மேலே குடையும் வைத்தாற்போல் இருக்கும். இந்த பூ வைத்திருக்கின்ற இடத்தில் பணம் குவியுமாம். அதனால் இந்தப் பூவுக்கு செல்வவளமுன்னு பேர் வச்சிருக்காங்க''. "ஏம்மா, நிஜமா இந்தப் பூவை வச்சா பணம் வருமா?''

"நிச்சயமா வரும். ஆனால் வைக்கிற இடம் சுத்தமாக இருக்கணும். இந்தப் பூ இருக்கிற வீடும் சுத்தமாக இருக்கணும். அப்படியிருந்தா நிச்சயமாகப் பணம் வரும்''. "அப்படியாம்மா, ஏம்மா எனக்கும் இரண்டு

பூ கொடேன், நானும் வைக்கிறேன். என் அக்காவிற்குக் கண்ணாலம் கட்டணும், இன்னும் ஆறு மாசத்திலே. கையிலே காசில்லையேன்னு எங்க ஆத்தா புலம்பிகிட்டேயிருக்கு. நானும் கீழ்வீட்டு முல்லையம்மாகிட்டே கடன் கேட்டிருக்கிறேன். அவங்கதான் பேங்கிலே வேலை பார்க்கிறாங்க. கத்தைகத்தையா பணம் எண்ணுவாங்களாம். அவங்க கொடுத்தாலும் கடனாகத்தான் கேட்கமுடியும். ஆனால் இந்தப் பூவை வச்சா பணம் வருமுன்னு சொல்றீங்களே, எப்படி வரும்?'' "இங்க பாரு, உனக்கு நம்பிக்கையிருந்தா வை. நம்பிக்கையோடு எதுவும் செய்யணும், தெரியுதா?''

"அது சரிம்மா. ஏம்மா, அதென்ன ரூமுக்கு ரூம் ஏதோ போட்டோ மாட்டி வச்சிருக்கே? நல்லா இருக்காங்கம்மா. எனக்கும் ஒண்ணு கொடேன்.

நானும் மாட்டி வச்சி, உன்னைப்போல பூ வக்கிறேனே. இங்க பாரும்மா,நான் வேலையிலே ரொம்ப கரீக்டா இருப்பேன். நீ சம்பளத்திலே கரீக்டா இரு. உன் வேலை எல்லாத்தையும் மினிட்லே முடிச்சிகொடுத்துடறேன்''பேசிக்கொண்டே தாமரை வீட்டை பெருக்கி, துடைத்து, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு, பாத்திரங்களை கழுவி, கிரைண்டரில் மாவை போட்டு ஆட்டி, இந்தப் பக்கம் துணிகளைக் காயப் போட்டுவிட்டு,

"இந்தாங்கம்மா, மாவை எடுத்துவிட்டேன். பால் எத்தனை மணிக்கு வேணும், எத்தனை பாக்கெட் வேணும், நீ சொல்ட்டா, மேலே கொண்டுவந்து தரேன். அதற்குத் தனியா காசு கொடுத்துடணும்.இல்லைனா நான் கீழயே வச்சிடுவேன், நீ வந்து எடுத்துக்கோ. எப்படி வேணும் சொல்லு''. அரை மணி நேரத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, சேலையை ஒழுங்கு செய்துகொண்டு, "அம்மா, அந்த போட்டோவை மறந்துடாதே. ஏம்மா, ஏதும் துட்டு கொடுக்கணுமா, என்

சம்பளத்திலே கழிச்சுக்க. பூவையும் சேர்த்து கொடு'' என்று மறக்காமல் வாங்கிக்கொண்டு, "வரேன்மா'' என்று மேலே போனாள்.

****

இரண்டாவது மாடியிலிருந்து லிப்டில் நுழையச் சென்ற மோகன், ஒரு நிமிடம் டாக்டர் சொன்னதை நினைவுபடுத்தி மாடிபடிகளில் இறங்கி செல்வதற்கு ஆரம்பித்தான். "இனி ஒவ்வொரு நாளுமே காலையில் லிப்டை உபயோகப்படுத்தாமல் படிகளில் இறங்கியே செல்லலாம். அவ்வளவு ஒன்றும் சிரமமாக இல்லை. நல்லதொரு உடற்பயிற்சி' என்று

தனக்குள் சொல்லிக்கொண்டே இறங்கியவன், முதல்மாடிக்கு வந்தவுடன்,நல்லதொரு வாசனை வருகின்றதை நுகர்ந்து, என்னவென்று சுற்றுமுற்றும் பார்த்தான். முதல்மாடியில் நேற்றுப் புதிதாக வந்தவர்கள் என காயாம்பூ சொன்ன வீட்டிலிருந்துதான் வருகின்றதைப் பார்த்தவுடன்,

நெருங்கிச் சென்று பார்க்கலாம் என்று திரும்பினான். அங்கே சுவரில் வைக்கப்பட்டிருந்த ஓர் அழகான ஜாடியில் இதுவரை அவன் பார்த்திராத,அழகான மலரொன்றைக் கண்டான். ஒரு நிமிடம் நின்று அம்மலரை ரசித்தான். "நன்றாக இருக்கின்றதே, இதற்கு என்ன பெயரென்று கேட்கலாமா' என்று யோசித்தவனுக்கு காலை நேரத்தில் எதற்குத் தொந்தரவு செய்வது, மாலையில் வரும்பொழுது இதைப் பற்றி விசாரிக்கலாம் என்று சென்றுவிட்டான்.

****

"காயாம்பூ, காயாம்பூ, எனக்கு ஸ்டோரிலிருந்து கொஞ்சம் வெல்லம் வாங்கி கொண்டுவந்து தர முடியுமா?''

"அதற்கென்னமா, தாமரை கையில் சொல்லியிருந்தால் அது வாங்கிக் கொண்டுவந்து தந்துவிடுமே. சரி கொடுங்கம்மா'' என்று சொன்ன காயாம்பூ, "ஏம்மா, இந்த பூவுக்கு என்ன பேர்? குடை வைத்த பூவா? நல்லா வாசனை வருது. இதுவரை இந்த மாதிரி பூவை நான் பார்த்ததே இல்லை. உங்களுக்கு எங்கிருந்து இந்தப் பூ கிடைத்தது?பூக்காரம்மா இந்த நேரத்திலே வரமாட்டாங்களே, சாயந்திரம்தான் வரும்''.

"இந்தப் பூவுக்குப் பேரு நாகலிங்கப்பூ. இது இருக்கிற இடத்தில் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. இதுக்கு பேரே செல்வவளம் ஆகும்''.

"அப்ப, இந்தப் பூவை வச்சிக்கிட்டா நம்மகிட்டே பணம் வந்துடும் அப்படின்னு சொல்றீங்களா?'' "ஆமா, நம்பிக்கையோடு வச்சா சீக்கிரமா வரும். இல்லைன்னாக்கூட நீ வச்சா, அதற்கு ஒரு பலன் இருக்கும்.

இன்னைக்கு கிடைக்கலைன்னாக்கூட நிச்சயமா ஒரு நாளைக்கு உனக்குக் கிடைக்கும்''. "அம்மா, எனக்கும் ஒரு பூ கொடுங்க. நம் "பி'பிளாக்கில் ராமபத்ரன் சாருக்குத்தான் கொஞ்சம் கடன் ஜாஸ்தியா இருக்கு. பாவம், பொண்ணு கல்யாணத்திற்கு வாங்கினது. அவர்கிட்ட கொடுத்து, வைக்கச் சொல்றேன்''.

"ஏம்ப்பா, உனக்கு வேண்டாமா?''

"அம்மா, எல்லாருக்கும் பணம் வேணும். ஆனா எனக்கு இப்ப கிடைக்கிறது தாராளமா இருக்கு. என் கல்யாணத்திற்குப் பணம் சேர்த்துகிட்டு இருக்கேன். செந்தாமரைக்கும் எனக்கும் மனசு ஒத்து போச்சு. சீக்கிரமா கல்யாணம் செய்துகிறதா முடிவு பண்ணிட்டோம்.

கோயில்லே செய்யிறதாவும் பேசிக்கிட்டோம். இருந்தாலும் கொஞ்ச செலவு இருக்கே. எல்லாமும் நானே செய்யலாமுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கேன். எங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும். ஆனா,என்னைவிட ராமபத்ரன் சாருக்கு உடனடியா பணம் கிடைக்கணும்.அவர் வட்டி கட்டியே சம்பளம் முழுசும் தீர்ந்துபோகுது. இன்னும் இரண்டு பசங்க படிச்சிக்கிட்டு இருக்காங்க. முதல் பெண்ணுக்குக் கடனை வாங்கிக் கல்யாணம் பண்ணுனா, இன்னும் இருக்கிற பொண்ணுங்களுக்கு என்ன பண்ணுவார்? ஏம்மா இந்தப் பூவை வச்சா லாட்டரியில் பணம் கிடைக்குமா?''

"அப்படிக் கிடைக்காதுப்பா. ஆனா, நமக்குச் சேரவேண்டியது, நமக்கு உரியது எங்கிருந்தாவது நல்லபடியா வந்துசேரும்'', கூறிக்கொண்டே உள்ளிருந்து இரண்டு நாகலிங்கப்பூவை ரோஜா கொண்டுவந்து கொடுத்தாள். "உன் நல்ல மனசுக்கு உனக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கும்''. "உன் வாக்கு பலிக்கணும் அம்மா. நான் வரேன்மா. வெல்லத்தை வாங்கி தாமரை கையில் கொடுத்தனுப்பறேன்''.

****

"மோகன், உங்களுக்கு ஒரு சந்தோஷச் செய்தி. உங்களை சீனியர் சூப்பர்வைசராக பதவியுயர்வு கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கென கார் அலாட்மெண்ட்டும் செய்திருக்கிறார்கள். மாதம் 6000 ரூபாய்போல்

சம்பளம் அதிகரிக்கும். மேலும் O.T.யும் உண்டு. எப்படியும் ஒரு பத்தாயிரம் ரூபாய்போல் அதிகரிக்க வாய்ப்புண்டு. என்ன சந்தோஷம்தானே?''

"நிச்சயமா சார்''.

"கங்கிராஜுலேஷன் மோகன். வேலைக்கு வந்து சேர்ந்த இரண்டு வருடங்களில் இரண்டு இன்கிரிமென்ட், பதவி உயர்வு''.

"இன்னைக்கு சார் நரி முகத்தில் முழித்திருப்பார் என நினைக்கிறேன்''.

தன் இருக்கையில் வந்து அமர்ந்த மோகன், காலையில் ஆபீசுக்கு புறப்பட்டபொழுது என்ன நடந்தது என்று யோசித்தவன் முன்னால் முதல்மாடி பூ நினைவிற்கு வந்தது. சாயந்திரம் துளசியையும் அழைத்துக்கொண்டு 4ஆம் நம்பர் வீட்டிற்குச் செல்லவேண்டும் என்று தீர்மானித்தவன், அந்தப் பூவிற்கு என்ன பெயர் இருக்கும் என்று யோசித்தான்.

"அப்பா மோகன், கொஞ்சம் இந்த உலகத்திற்கு வருகின்றாயா?

இன்றைக்கு எல்லோருக்கும் lunch அல்லது SKQயா?'' "சார், நிச்சயமாக இரண்டும் வாங்கிக்கொடுப்பார். இன்றைக்கு ராம்பிரசாத் சாப்பாடுதான்

நம் எல்லாருக்கும். இப்பொழுதே போன் செய்து கொண்டுவரச் சொல்லி விடலாமா?'' என்ற குரல் மோகனை ஆபீஸுக்கு அழைத்துகொண்டு

வந்தது. மனம் சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்தது. பூவின் நினைவும் கூடவே வந்துகொண்டிருந்தது.

****

"ஹலோ, மிஸ்டர் ராமபத்ரன் இருக்கிறாரா?''

"ஆமாம், நான்தான்''.

"நான் சேஷாத்திரி பேசுகிறேன். உங்கள் அப்பாவின் ஆக்ஸிடெண்ட் கேஸ் இன்றைக்கு சுமுகமாக முடிவடையும்போல் இருக்கிறது. முடியுமானால் இன்றைக்கு சாயந்திரம் என் ஆபீசுக்கு வந்தால் இன்ஷுரன்ஸ் கம்பெனி ஆபீசர்களை வரச் சொல்கிறேன். விஷயத்தைப் பேசி முடிவு செய்துவிடலாம். அனேகமாக நாம் கேட்ட எட்டு இலட்சத்திற்கு ஒத்துகொள்வார்கள் போல் தெரிகிறது''.பதில் சொல்லமுடியாமல் திகைத்த ராமபத்ரன், சரி என்று சொன்னோமா, இல்லையா என்று பத்து நிமிடத்திற்கு பின்பும் யோசனை செய்தாலும் எதுவும் நினைவிற்கு வரவில்லை. அப்பா லாரியில் அடிபட்டு இறந்து 10 வருடங்களுக்கு மேலாகிறது. நஷ்டஈட்டிற்காகப் பெரிதும் முயன்றும் எதுவும் கிடைக்காமல் இழுபறியாகவே இருந்துவந்தது.அம்மாவும், அப்பா இறந்துபோன இரண்டு வருடங்களுக்குபின் இறந்துபோக, அதற்குப்பின் சுத்தமாக மறந்தேபோனார். வக்கீல் தம் பால்யநண்பன் என்பதால் கிடைத்தால் வாங்கிக்கொள்வோம், இனி கேட்கவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டு, எப்பொழுதாவது நண்பனைச் சந்திக்கும்போது அவனாகவே "உன் கேஸைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன்' என்று சொல்லும்பொழுது, அப்படியா என்று கேட்டுவிட்டு, "ஏதோ மரியாதைக்காகச் சொல்கிறான்' என்று இவரும் அதுபற்றி மேலும் விசாரிக்காமல் விட்டுவிடுவார். ஆனால் ஏதோ மந்திரத்தில் மாங்காய் விழுந்தாற்போல் இருக்கிறதே. என்ன நடக்கிறது,

ஒன்றுமே புரியவில்லையே. இந்த உலகத்தில் நடப்பவற்றிற்கெல்லாம் காரணம் இருக்குமாமே. அப்படியென்றால் இன்றைக்குப் பணம் கிடைக்கப் போவதற்குக் காரணம் என்ன? தன் மனைவியின் ஞாபகம் வர உடனடியாக வீட்டிற்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார்.

"காயாம்பூ, நீ அதிர்ஷ்டக்காரனப்பா. உன் கல்யாணத்தை என்றைக்கு வைத்துக் கொள்ளலாம் சொல்லு. எல்லாச் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நம் அபார்ட்மெண்டிலேயே வைத்துகொண்டு விடலாம். துணி, சாப்பாடு எல்லாம் first class. என்ன சந்தோஷம்தானே''என்றாள் மனோரஞ்சிதம், ராமபத்ரனின் மனைவி.

"ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. ஆனால் தாமரையோட அக்கா- வுக்கு முதல்ல கல்யாணம் நடக்கணும். அவங்க வீட்ல எல்லாமே தடையா இருக்கு. ஒரே சண்டை. சரி, நான் 4ஆம் நம்பர் வீட்டு அம்மாகிட்ட இதுக்கு ஏதாவது பூ இருக்கா அப்படின்னு கேட்கிறேன்''.

"மாமா, நானும் அந்த ரோஜாம்மா கொடுத்த பூவை எங்க வீட்ல கொண்டு போய் வச்சேன். இப்ப பாரேன், நம்ம கல்யாணத்தை சிறப்பா,நமக்கு ஒரு பைசா செலவில்லாம நடத்திடலாம்னு பேசுறாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மாமா. நீயும் வா, அந்த ரோஜாம்மா வீட்லயே போய் முதல்ல விஷயத்தை சொல்லலாம்'', என்றாள் தாமரை.

தொடரும்....

****


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பரம்பொருள் நம்மைத் தீண்டாமல் நமக்குப் பரம்பொருள் சித்திக்காது. அவனால் முடியாததைச் சாதிக்க சமூகம் உதவாமல் மனிதனால் சாதிக்க முடியாது. தனிமனிதனுடைய ஆர்வமே வளர்ந்து சமூகத்தின்மூலம் அவனிடம் மீண்டும் வருகிறது.மனிதனே ஆரம்பம்.

பரம்பொருளால் சித்திக்கும் பரம்பொருள்.


 


 


 


 


 


 


 


 



book | by Dr. Radut